Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கடவுளிடம் நெருங்கிவர

நீங்கள் கடவுளிடம் நெருங்கிவர

நீங்கள் கடவுளிடம் நெருங்கிவர

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என யாக்கோபு 4:8 சொல்கிறது. கடவுள் தம்முடைய குமாரனையே நமக்காக கொடுத்தார். இது எதை காட்டுகிறது? மனிதகுலம் தம்மோடு நெருங்கிய உறவு வைத்திருப்பதை கடவுள் எவ்வளவாய் விரும்புகிறார் என்பதையே அல்லவா?

அன்பு காட்ட அவர் முதற்படி எடுத்ததை அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “அவர் [கடவுள்] முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” (1 யோவான் 4:19) ஆனால் தனிப்பட்ட விதமாக நாம் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு நம்முடைய பங்கில் சில காரியங்களை செய்ய வேண்டும். முந்தைய கட்டுரையில் பார்த்தபடியே, சகமனிதரிடம் நெருங்கி வருவதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய அந்த நான்கு அம்சங்களைப் போலவே தான் இவையும். இப்பொழுது நாம் இவற்றை ஆராயலாம்.

கடவுளுடைய சிறந்த குணங்களை உற்று நோக்குங்கள்

கடவுளிடம் அநேக சிறந்த குணங்கள் இருக்கின்றன; அவற்றில் மிக முக்கியமானவை அன்பு, ஞானம், நீதி, வல்லமை. பால் மண்டலத்திலிருந்து சின்னஞ்சிறு அணுக்கள் வரை, அவருடைய ஞானத்தையும் வல்லமையையும் நம்மை சுற்றியுள்ள உலகமும் பிரபஞ்சமும் பறைசாற்றுகிறது. சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”​—சங்கீதம் 19:1; ரோமர் 1:⁠20.

படைப்பு கடவுளுடைய அன்பையும் அறிவிக்கிறது. உதாரணமாக, வாழ்வை அனுபவித்து மகிழ வேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார் என்பதை நாம் படைக்கப்பட்ட விதம் காட்டுகிறது. வண்ண வண்ண நிறங்களை காணவும், நறுமணங்களை முகரவும், இசையை கேட்டு இன்புறவும், சிரித்து மகிழவும், அழகை ரசிக்கவும் முடிகிறது. அதோடு, உயிர்வாழ்வதற்கு அவசியமில்லாத இன்னும் பல பல திறமைகளையும் தனிச்சிறப்பு மிக்க பண்புகளையும் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆம், கடவுள் உண்மையிலேயே தாராள குணமுடையவர், தயவானவர், அன்பானவர். இவை ‘நித்தியானந்த தேவனாக’ இருப்பதற்கு பங்களிக்கும் குணங்கள் என்பதில் சந்தேகமேயில்லை.​—1 தீமோத்தேயு 1:11; அப்போஸ்தலர் 20:⁠35.

யெகோவா தம்முடைய அரசதிகாரத்தை பயன்படுத்துவதும் புத்திகூர்மைமிக்க அவருடைய சிருஷ்டிகள் அதை ஆதரிப்பதும் முக்கியமாக அன்பின் அடிப்படையிலேயே என்பதை குறித்து அவர் பெருமிதத்தோடு களிகூருகிறார். (1 யோவான் 4:8) யெகோவாவே சர்வலோக பேரரசர் என்பது உண்மைதான், ஆனால் மனிதர்களை, முக்கியமாக தம்முடைய உண்மை ஊழியர்களை, ஓர் அன்பான தகப்பன் தன் பிள்ளைகளை நடத்துவது போலவே நடத்துகிறார். (மத்தேயு 5:45) அவர்களுடைய நன்மைக்கானதை ஒருபோதும் தராமல் வைத்துக்கொள்வதில்லை. (ரோமர் 8:38, 39) மேலே குறிப்பிட்டபடி, அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனுடைய ஜீவனையே நமக்காக கொடுத்தார். ஆம், நாம் ஜீவிப்பதற்கும் நித்திய ஜீவ நம்பிக்கையை கொண்டிருப்பதற்கும் கடவுளுடைய அன்பே காரணம்.​—யோவான் 3:⁠16.

கடவுளுடைய ஆள்தன்மையை புரிந்துகொள்வதற்கு இயேசு உதவியளித்தார், ஏனெனில் அவர் தம்முடைய பிதாவை அப்படியே அச்சுபிசகாமல் பின்பற்றினார். (யோவான் 14:9-11) அவரிடம் துளிகூட சுயநலமில்லை, கரிசனைமிக்கவராகவும் பிறருடைய நிலையை எண்ணிப்பார்ப்பவராகவும் இருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில், செவிடாகவும் ஊமையாகவும் இருந்த ஒருவன் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டான். திரளான ஜனங்கள் முன்பு அந்த மனிதனுக்கு கூச்சமாகவும் சங்கடமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், இயேசு அந்த மனிதனை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அவனை குணப்படுத்தினார். (மாற்கு 7:32-35) உங்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்கிறவர்களை, உங்களுடைய கண்ணியத்தை மதிக்கிறவர்களை நீங்கள் போற்றுகிறீர்களா? அப்படியானால், யெகோவாவையும் இயேசுவையும் பற்றி நிறைய கற்றுக்கொள்ளும்போது நிச்சயமாகவே நீங்கள் அவர்களிடம் நெருங்கி வருவீர்கள்.

கடவுளுடைய பண்புகளை சிந்தியுங்கள்

சிலரிடம் சிறந்த குணங்கள் இருக்கலாம், ஆனால் நாம் அவர்களிடம் நெருங்கி பழகுவதற்குமுன் அவருடைய குணாதிசயங்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுவே யெகோவாவுடைய விஷயத்திலும் பொருந்துகிறது. அவரிடம் நெருங்கி வருவதற்கு அவருடைய குணங்களைப் பற்றி தியானிப்பது இன்றியமையாதது. உண்மையிலேயே யெகோவாவை நேசித்த, அவருடைய ‘இதயத்துக்கு ஏற்றவனாக’ இருந்த தாவீது ராஜா இவ்வாறு சொன்னார்: “பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.”​—அப்போஸ்தலர் 13:22; சங்கீதம் 143:⁠5.

படைப்பின் அதிசயத்தைப் பார்க்கையில், அல்லது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசிக்கையில், தாவீதைப் போலவே நீங்கள் பார்ப்பதையும் வாசிப்பதையும் தியானிக்கிறீர்களா? மிகவும் பாசமுள்ள தகப்பனிடமிருந்து அப்பொழுதுதான் ஒரு மகனுக்கு கடிதம் கிடைத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கடிதத்தை அவர் எவ்வாறு நோக்குவார்? வெறுமனே அதிலுள்ளதை மேலோட்டமாக பார்த்துவிட்டு அப்படியே அதை மேஜைக்குள் போட்டுவிடுவாரா? நிச்சயமாகவே அப்படி செய்ய மாட்டார். மாறாக, அதை படித்துப் பார்ப்பார், அதிலுள்ள நுணுக்கமான எல்லா விவரங்களையும் நன்கு புரிந்துகொள்வார். அதைப் போலவே, கடவுளுடைய வார்த்தை நமக்கு மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும், சங்கீதக்காரனுக்கும் அப்படியே இருந்தது, அவர் பாடினார்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”​—சங்கீதம் 119:⁠97.

எப்போதும் நல்ல பேச்சுத்தொடர்பு

நல்ல பேச்சுத்தொடர்பே எந்த உறவுக்கும் ஜீவநாடி. அது பேசுவதையும் செவிகொடுத்து கேட்பதையும் உட்படுத்துகிறது. இது, வெறுமனே மனதளவில் மட்டுமல்ல, இதயப்பூர்வமாக செவிகொடுத்து கேட்பதை உட்படுத்துகிறது. ஜெபத்தின் மூலம் படைப்பாளரிடம் நாம் பேசுகிறோம், அதுவே கடவுளிடம் பேசுவதற்கு மிகச் சிறந்த வழி. அவரிடம் அன்புகூர்ந்து அவரை நேசித்து சேவிக்கிறவர்களுடைய, இயேசு கிறிஸ்துவை அவருடைய பிரதான பிரதிநிதியாக ஏற்றுக்கொள்கிறவர்களுடைய ஜெபங்களில் யெகோவா களிகூருகிறார்.​—சங்கீதம் 65:2; யோவான் 14:6, 14.

கடந்த காலத்தில், மனிதர்களிடம் பல்வேறு வழிகளில்​—⁠அதாவது, தரிசனங்கள், சொப்பனங்கள், தேவதூதர்கள் வாயிலாக​—⁠கடவுள் பேசினார். ஆனால், நம்முடைய காலங்களில் தம்முடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளின் வாயிலாக பேசுகிறார். (2 தீமோத்தேயு 3:16) எழுதப்பட்ட அந்த வார்த்தையினால் அநேக அனுகூலங்கள் இருக்கின்றன. அதை எந்த சமயத்திலும் எடுத்துப் பார்க்க முடியும். ஒரு கடிதத்தைப் போலவே, அதை மறுபடியும் மறுபடியும் படித்து மகிழ முடியும். வாய்வழி முறையால் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைக்கு, அதாவது திரித்துக் கூறும் பிரச்சினைக்கு இது இடமளிப்பதில்லை. பைபிளை உங்களுடைய அன்பார்ந்த பரம தகப்பனிடமிருந்து வந்த கடிதங்களின் ஒரு பெரும் தொகுப்பாக கருதுங்கள். அதை தினந்தோறும் வாசிப்பதன் மூலம் அவரை உங்களிடம் பேச அனுமதியுங்கள்.​—மத்தேயு 4:⁠4.

உதாரணமாக, எது சரி எது தவறு என்பதைக் குறித்ததில் யெகோவாவின் நோக்குநிலையை பைபிள் தெரிவிக்கிறது. மனிதகுலத்திற்கும் இந்த பூமிக்குமான அவருடைய நோக்கத்தை விளக்குகிறது. உண்மைமாறா வணக்கத்தார் முதல் கடும் விரோதிகள் வரை, பல வித்தியாசப்பட்ட ஜனங்களிடமும் தேசத்தாரிடமும் அவர் கொண்டிருந்த செயல்தொடர்புகளை அது வெளிப்படுத்துகிறது. மனிதருடன் அவர் கொண்டிருந்த பரஸ்பர தொடர்புகளை இப்படி எழுத்தில் வடித்து வைத்திருப்பதன் மூலம், யெகோவா தம்முடைய ஆள்தன்மையை பற்றி தனித்தன்மைமிக்க முறையில் விளக்கமாக சித்தரித்து காண்பித்திருக்கிறார். தம்முடைய அன்பை, சந்தோஷத்தை, துக்கத்தை, ஏமாற்றத்தை, கோபத்தை, இரக்கத்தை, அக்கறையை​—⁠ஆம், அவருடைய சிந்தைகளையும் உணர்ச்சிகளையும் அவற்றிற்கான முக்கிய காரணங்களையும்​—⁠மனிதர் சட்டென்று புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் மிக அழகாக வெளிப்படுத்துகிறார்.​—சங்கீதம் 78:3-7.

நீங்கள் கடவுளுடைய வார்த்தையில் ஒரு சிறுபகுதியை வாசித்தப்பின், உங்களுடைய வாசிப்பிலிருந்து நீங்கள் எப்படி பயனடையலாம்? முக்கியமாக, நீங்கள் எப்படி கடவுளிடம் நெருங்கி வரலாம்? முதலாவதாக, ஒரு நபராக கடவுளைப் பற்றி நீங்கள் வாசித்ததையும் கற்றுக்கொண்டதையும் சிந்தித்துப் பாருங்கள். கற்றுக்கொண்ட குறிப்புகளை உங்களுடைய இதயத்தில் நன்கு பதிய வையுங்கள். அதற்குப் பிறகு, நீங்கள் சிந்தித்த விஷயத்தையும் அதிலிருந்து பயனடைய எப்படி முயற்சி செய்வீர்கள் என்பதையும் பற்றிய உங்களுடைய யோசனைகளையும் ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் யெகோவாவிடம் ஜெபத்தில் ஊற்றுங்கள். அதுவே பேச்சுத் தொடர்பு. உங்களுடைய மனதிலுள்ள மற்ற விஷயங்களையும் உங்களுடைய ஜெபத்தில் சொல்லலாம்.

காரியங்களை கடவுளோடு சேர்ந்து செய்யுங்கள்

கடவுளோடு சேர்ந்து நடந்த உண்மை ஊழியர்கள் சிலரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:9; 1 இராஜாக்கள் 8:25) அதன் அர்த்தமென்ன? முக்கியமாக கடவுள் தங்கள் மத்தியில் இருந்ததைப் போலவே ஒவ்வொரு நாளும் வாழ்ந்தார்கள். அவர்கள் பாவிகள் என்பது உண்மைதான், ஆனாலும் அவர்கள் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் நேசித்து, கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக வாழ்ந்தார்கள். யெகோவா இப்படிப்பட்டவர்களிடம் நெருங்கி வருகிறார், அவர்களை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார். அதைத்தான் சங்கீதம் 32:8 காட்டுகிறது: “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.”

நீங்களும் யெகோவாவை உங்களுடைய உற்ற நண்பராக​—⁠உங்களோடு சேர்ந்து நடப்பவராக, உங்களை கவனித்துக் கொள்பவராக, தகப்பனைப் போன்று புத்திமதி கொடுப்பவராக​—⁠கொண்டிருக்க முடியும். “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவ”ன் என யெகோவாவை ஏசாயா தீர்க்கதரிசி விவரிக்கிறார். (ஏசாயா 48:17) இந்த நன்மைகளை நாம் அனுபவிக்கையில், தாவீதைப் போலவே, ‘நம்முடைய வலதுபாரிசத்தில்’ யெகோவாவின் பிரசன்னத்தை நாம் உணருகிறோம்.​—சங்கீதம் 16:⁠8.

கடவுளுடைய பெயர்​—⁠அவருடைய பண்புகளை பிரதிபலிக்கிறது

பல மதங்களும் அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளும் கடவுளுடைய தனிப்பட்ட பெயரை பயன்படுத்தவோ பறைசாற்றவோ தவறுகின்றன. (சங்கீதம் 83:17) ஆனால், மூல எபிரெய வாக்கியத்தில் யெகோவா என்ற அந்தப் பெயர் சுமார் 7,000 தடவை வருகிறது! (பெரும்பாலான பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தெய்வீக பெயரை நீக்கிவிட்டார்கள். அதேசமயத்தில் பொய் கடவுட்களின் பெயர்களாகிய பாகால், பேல், மெரொதாக், சாத்தான் போன்றவற்றை நீக்காமல் அப்படியே வைத்திருக்கின்றனர்! என்னே முரண்பாடு!)

கடவுளுடைய பெயரை நீக்கியதை பெரும்பாலானோர் ஓர் அற்ப விஷயமாக கருதுகின்றனர். ஆனால் இதை சிந்தித்துப் பாருங்கள்: பெயரற்ற ஒரு நபரிடம் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வது கடினமா சுலபமா? (பொய் கடவுட்களுக்கும் உபயோகிக்கப்படும்) கடவுள் மற்றும் கர்த்தர் போன்ற பட்டப் பெயர்கள் கடவுளுடைய வல்லமை, அதிகாரம் அல்லது ஸ்தானத்திற்கு கவனத்தைக் கொடுக்கலாம், ஆனால் அவருடைய தனிப்பட்ட பெயர் மாத்திரமே அவரை தெளிவாக அடையாளம் காட்டுகிறது. (யாத்திராகமம் 3:15; 1 கொரிந்தியர் 8:5) மெய் தேவனுடைய தனிப்பட்ட பெயர் அவருடைய பண்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் கவனத்தை ஈர்க்கிறது. இறையியல் வல்லுநர் உவால்டர் லாவ்ரி குறிப்பிட்டது பொருத்தமாக இருக்கிறது: “கடவுளை பெயரால் அறியாத ஒரு மனிதன் உண்மையில் அவரை ஒரு நபராக அறியவில்லை.”

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பயபக்திமிக்க கத்தோலிக்க பெண் மரியாவின் உதாரணத்தை கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகள் அவரை முதன்முதல் சந்தித்தபோது, பைபிளில் கடவுளுடைய பெயரை காண்பிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளை அனுமதித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “பைபிளில் கடவுளுடைய பெயரை முதன் முதலில் பார்த்தபோது, நான் கண்ணீர்விட்டு அழுதேன். கடவுளுடைய தனிப்பட்ட பெயரை உண்மையில் அறிந்துகொள்ளவும் அதைப் பயன்படுத்தவும் முடியும் என்பதை அறிந்துகொண்டது என்னை மிகவும் உந்துவித்தது.” மரியா தொடர்ந்து பைபிளை படித்தார், அவருடைய வாழ்க்கையில் முதல் முறையாக, யெகோவாவை ஒரு நபராக அறிந்துகொண்டார், என்றும் தொடரும் ஓர் நெருங்கிய உறவையும் அவரோடு வளர்த்துக்கொள்ள முடிந்தது.

ஆம், நம்முடைய கண்களால் கடவுளை பார்க்க முடியாதபோதிலும் ‘அவரிடம் நெருங்கிவர முடியும்.’ அவருடைய அருமையான ஆள்தன்மையை நம்முடைய மனதிலும் இருதயத்திலும் “பார்க்க” முடியும், அதனால் அவர்மீது நாமும் அன்பை வளர்த்துக்கொள்வோம், அவரும் நம்மிடம் அன்புகூருவார். இத்தகைய அன்பே ‘பூரணசற்குணத்தின் கட்டு.’​—கொலோசெயர் 3:14.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

யெகோவா மீது வைத்திருக்கும் அன்பிற்கு அவர் பிரதிபலிக்கிறார்

உறவுகள் இருவழி பாதைகள். நாம் கடவுளிடம் நெருங்கி வருகையில், அவரும் நம்மிடம் நெருங்கி வருகிறார். வயதான சிமியோன் மற்றும் அன்னாளிடம் அவருக்கிருந்த உணர்ச்சிகளை கவனியுங்கள். இவர்கள் இருவருமே பைபிளில் முக்கிய இடம் பெற்றிருக்கிறார்கள். மேசியாவின் வருகைக்காக காத்திருந்த “உண்மையும் தேவபக்தியும்” நிறைந்தவர் என சிமியோனைப் பற்றி சுவிசேஷ எழுத்தாளர் லூக்கா சொல்கிறார். சிமியோனிடம் இந்த சிறந்த குணங்களை யெகோவா கண்டார், “கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய்” என்ற வாக்குறுதி கொடுப்பதன் மூலம் நேசத்திற்குரிய இந்த முதியவரிடம் தம்முடைய அன்பை காண்பித்தார். யெகோவா தம்முடைய வாக்கு தவறாமல் அதை நிறைவேற்றி, எருசலேமிலுள்ள தேவாலயத்திற்கு பெற்றோர்கள் கொண்டுவந்த குழந்தை இயேசுவினிடம் சிமியோனை வழிநடத்தினார். மெய் சிலிர்த்துப்போய் போற்றுதலோடு சிமியோன் அந்தக் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு இவ்வாறு ஜெபித்தார்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; . . . உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.”​—லூக்கா 2:25-35.

“அந்நேரத்திலே” 84-வயது அன்னாளை இயேசுவிடம் வழிநடத்துவதன் மூலம் யெகோவா தம்முடைய அன்பை காண்பித்தார். பைபிள் குறிப்பிடுகிற அந்த அருமையான விதவை எப்பொழுதும் ஆலயத்தில் இருந்து, யெகோவாவுக்கு ‘பரிசுத்த சேவை’ (NW) செய்துகொண்டிருந்தார். பொங்கி வழியும் போற்றுதலோடு, சிமியோனைப் போலவே, யெகோவா காண்பித்த கிருபைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அதன் பின்பு, “எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும்” அந்தக் குழந்தையைக் குறித்து பேசினார்.​—லூக்கா 2:36-38.

ஆம், சிமியோனும் அன்னாளும் யெகோவா மீது ஆழ்ந்த அன்புகொண்டு அவருக்கு பயந்து நடந்ததையும் அவருடைய நோக்கம் நிறைவேறுவதில் அவர்கள் காண்பித்த மிகுந்த அக்கறையையும் அவர் கவனித்தார். இத்தகைய பைபிள் பதிவுகள் யெகோவாவிடம் நெருங்கி வர உங்களுக்கு உதவி செய்கிறதல்லவா?

இயேசுவும் தம்முடைய பிதாவைப் போலவே, ஒரு நபர் உள்ளத்தில் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை பகுத்துணர்ந்தார். ஆலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஓர் “ஏழை விதவை” காணிக்கையாக “இரண்டு காசு போடுகிறதை” கவனித்தார். மற்றவர்களுக்கு அவளுடைய காணிக்கை அற்பமாக இருந்திருக்கும், ஆனால் இயேசுவுக்கு அப்படியல்ல. அவர் இந்தப் பெண்மணியை பாராட்டினார், ஏனெனில் அவள் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டாள். (லூக்கா 21:1-4) ஆகவே, நம்முடைய நன்கொடை பெரியதாக இருந்தாலும்சரி சிறியதாக இருந்தாலும்சரி, நம்முடைய மிகச் சிறந்ததை கொடுத்தோமென்றால், யெகோவாவும் இயேசுவும் அதை போற்றுகிறார்கள் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.

தம்மை நேசிப்பவர்களில் கடவுள் களிகூருகிறார், அதேசமயத்தில் மனிதர்கள் அவரை விட்டுவிலகி தவறான பாதையிலே செல்லும்போது வருத்தப்படுகிறார். நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்திற்கு முன்பு மனிதவர்க்கத்தினர் பொல்லாப்பானதை செய்ததால், யெகோவாவின் ‘இருதயம் விசனப்பட்டதாக’ ஆதியாகமம் 6:6 சொல்கிறது. பிற்பாடு, கீழ்ப்படியாத இஸ்ரவேலர் திரும்பத் திரும்ப “கடவுளை பரீட்சை பார்த்து, இஸ்ரவேலரின் பரிசுத்தரையே வேதனைப்படுத்தினார்கள்” என சங்கீதம் 78:41 (NW) சொல்கிறது. ஆம், கடவுள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் தொலைவில் இருக்கும் “முதல் காரணர்” அல்ல. நம்மை போல, உணர்ச்சியில் சமநிலை இழந்தவராகவோ அபூரணத்தால் மழுங்கிக் கிடப்பவராகவோ இல்லை, அவர் உண்மையிலேயே ஒரு நபர்.

[பக்கம் 7-ன் படங்கள்]

யெகோவாவிடம் நெருங்கிவர ஒரு வழி அவருடைய படைப்பை சிந்தித்துப் பார்ப்பது