Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்ற மதங்களை ஆராய்ந்து பார்க்கலாமா?

மற்ற மதங்களை ஆராய்ந்து பார்க்கலாமா?

மற்ற மதங்களை ஆராய்ந்து பார்க்கலாமா?

“கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நான் போய்கொண்டிருந்தேன். சந்தோஷமாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டும் இருந்தேன். ஆனால் அதுக்கப்புறம் ரேடியோவில் மதசம்பந்தமான நிகழ்ச்சிகளை கேட்கவும் மத பிரசங்கிகளின் பேச்சுகளை டிவியில் கவனிக்கவும் தொடங்கினேன். அந்த மாதிரி நிகழ்ச்சிகளைக் கவனித்தால் மற்ற மதங்களைச் சேர்ந்த மக்களை புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும் என்று நான் நினைத்தேன். அவற்றின் போதனைகள் பைபிளுக்கு இசைவாக இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் அவை என்னதான் சொல்லுகின்றன என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன்,” என்கிறார் மிகேல். இவர் இப்போது தென் அமெரிக்காவில் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார்.

அதே நாட்டில், ஹார்ஹே என்பவர் உண்மை வணக்கத்தைப்பற்றி மற்றவர்களுக்குப் போதிப்பதில் வைராக்கியமாக இருந்தார். இவரும் ஒரு சமயம், மதசம்பந்தமான ரேடியோ டிவி நிகழ்ச்சிகளைக் கேட்க ஆரம்பித்தார். “மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிய வேண்டும்,” என்று அவர் சொல்லி வந்தார். பொய்மத போதகங்களை அவ்வாறு கேட்பது ஆபத்தாக இருக்குமே என்று அவரிடம் கேட்டால் அவர் சொல்லுவார்: “பைபிள் சத்தியத்தை தெரிந்திருக்கிற ஒருவருடைய விசுவாசத்தை எதுவுமே அசைக்க முடியாது.” இந்த அனுபவங்களைக் கேட்கும்போது, ஒரு முக்கியமான கேள்வி எழும்புகிறது. மற்றவர்கள் எதை நம்புகிறார்கள் என்பதை கேட்டறிவது ஞானமான காரியமா?

உண்மை கிறிஸ்தவத்தைக் கண்டறிதல்

அப்போஸ்தலர்கள் இறந்தபின், போலி கிறிஸ்தவம் பல வகைகளில் உருவெடுத்து வரத் தொடங்கியது. இது உண்மை வணக்கத்தை கறைபடுத்தியது. இதை முன்னறிந்தவராக இயேசு, உண்மை கிறிஸ்தவத்தையும் கிறிஸ்தவத்தின் போலி வகைகளையும் வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவியாக ஒரு வழியை எடுத்துச் சொன்னார். முதலாவதாக, அவர் எச்சரித்தார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” அவர் தொடர்ந்து சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.” (மத்தேயு 7:15-23) இயேசுவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் அவர் போதித்தபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டுகிறார்கள். அவர்களுடைய நல்ல கனிகளால் அவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது. இயேசு செய்ததுபோல, வேதவார்த்தைகளிலிருந்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி விளக்குவதற்காக மக்களைச் சந்திக்கின்றனர். இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி, உலகின் அரசியலிலிருந்தும் சமூக சர்ச்சைகளிலிருந்தும் விலகி நிற்கிறார்கள். பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டு, அதுவே சத்தியம் என மதித்துணர்கிறார்கள். கடவுளுடைய பெயரை அறிவிக்கிறார்கள். கடவுள் போதிக்கும் அன்பை நடைமுறையில் காண்பிக்க முயலுவதால், அவர்கள் போர்களில் பங்கெடுப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒருவரையொருவர் சகோதரராக நடத்துகிறார்கள்.​—லூக்கா 4:43; 10:1-9; யோவான் 13:34, 35; 17:16, 17, 26.

வேதவசனங்களின்படி, ‘நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை காண’ முடியும். (மல்கியா 3:18) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி இருந்தார்களோ அதை போலவே இன்றும் உண்மை வணக்கத்தார் சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபட்டிருக்கிறார்கள். (எபேசியர் 4:4,-6) இப்படிப்பட்ட உண்மை கிறிஸ்தவ தொகுதியை அடையாளம் கண்டுகொண்ட பிறகும், என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் மற்றவர்களுடைய நம்பிக்கைகளை ஆராய்வது அவசியம்தானா?

பொய் போதகர்கள் ஜாக்கிரதை

பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட பின்னரும் பொய்மத போதகங்களால் ஆவிக்குரிய விதத்தில் கறைபட முடியும் என்று பைபிள் ஒத்துக்கொள்கிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு [“இரையாகப் பிடித்துக்கொண்டு போகாதபடிக்கு,” NW] எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோசெயர் 2:8) எப்பேர்ப்பட்ட சித்தரிப்பு! மிருகங்கள் உங்களைப் பிடித்துச்சென்று விழுங்க வருவதைப்போலவே, பொய் போதகர்களால் ஆபத்து வரும்.

மற்றவர்கள் எதை நம்பினார்கள் என்பதை பவுல் கவனத்தில் எடுத்துக்கொண்டார் என்பது உண்மைதான். ஒருமுறை பேச்சை ஆரம்பிக்கையில் அவர் இப்படி சொன்னார்: “அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதா பக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்.” (அப்போஸ்தலர் 17:22, 23) ஆனாலும், கிரேக்க மேடைப்பேச்சாளர்களின் தத்துவங்களால் பவுல் தொடர்ந்து தன் மனதை நிரப்பிக்கொள்ளவில்லை.

பொய் மதங்களின் தொடக்கத்தையும் நம்பிக்கைகளையும் பற்றி விவரங்களை அறிந்திருப்பதற்கும் தொடர்ந்து அவற்றை மனதில் நிரப்பிக்கொண்டே இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. * தம்முடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு போதனை அளிப்பதற்காக ‘உண்மையும் விவேகமுமான ஊழியக்காரனை’ யெகோவா நியமித்திருக்கிறார். (மத்தேயு 4:4; 24:45) பவுல் தாமே இவ்வாறு எழுதினார்: “நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா?”​—1 கொரிந்தியர் 10:20-22.

பொய் போதனையாளர்களில் சிலர் முன்பு உண்மை கிறிஸ்தவர்களாய் இருந்திருப்பார்கள். ஆனால் ஏதோ ஒரு சமயம் சத்தியத்தை விட்டுவிலகி வஞ்சகமான பாதைக்கு சென்றுவிட்டனர். (யூதா 4, 11) இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ தொகுதியாகிய ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையைப்பற்றி’ பேசின பிறகு, ‘பொல்லாத ஊழியக்காரனைப்பற்றி’ இயேசு பேசினார். “என் ஆண்டவன் வர நாள் செல்லும்” என்று குறைசொல்லி தன் உடன் வேலைக்காரரை அடிக்கத் தொடங்கும் ஒரு தொகுதி இது. (மத்தேயு 24:48, 49) பெரும்பாலும், இந்த தொகுதியிலுள்ளவர்களுக்கும் இவர்களைப் பின்பற்றுகிறவர்களுக்கும் சொந்தமாக தெளிவான போதனைகள் எதுவும் இல்லை. மற்றவர்களுடைய விசுவாசத்தை அழிப்பதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.”​—2 யோவான் 10; 2 கொரிந்தியர் 11:3, 4, 13-15.

சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கும் நேர்மையான மக்கள் வெவ்வேறு மதங்கள் சொல்பவற்றைக் கவனமாக சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது. சத்தியத்தைத் தேடும் நேர்மை இருதயமுள்ளவர்களை கடவுள் ஆசீர்வதிப்பார். கடவுளால் வரும் ஞானத்தைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது . . . தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.” (நீதிமொழிகள் 2:4, 5) பைபிள் மூலமாகவும் கிறிஸ்தவ சபையின் மூலமாகவும் கடவுளைப்பற்றிய அறிவைக் கண்டடைந்தபின்னும், அந்த அறிவால் வழிநடத்தப்படுகிறவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதைக் கண்டறிந்தபின்னும், பொய் மத போதனைகளை உண்மை கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆராய்வதில்லை.​—2 தீமோத்தேயு 3:⁠14.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 10 உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட கடவுளைத் தேடி (ஆங்கிலம்) என்ற புத்தகம், உலகிலுள்ள பல மதங்களின் பின்னணியையும் போதனைகளையும் பற்றி அடிப்படை தகவலை அளிக்கிறது.