Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒழுக்க சுத்தம் — உங்களால் முடியும்

ஒழுக்க சுத்தம் — உங்களால் முடியும்

ஒழுக்க சுத்தம் — உங்களால் முடியும்

“நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்.”1 யோவான் 5:⁠3.

1. இன்று மக்களின் நடத்தையில் என்ன வித்தியாசத்தைக் காணலாம்?

 கடவுளுடைய மக்களின் நடத்தைக்கும் கடவுளைச் சேவிக்காதவர்களின் நடத்தைக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படும்; இப்படிப்பட்ட ஒரு காலத்தை முன்னறிவிக்கும்படி மல்கியா தீர்க்கதரிசி வெகு காலத்திற்கு முன் கடவுளால் ஏவப்பட்டார். அந்தத் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.” (மல்கியா 3:18) அந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது. ஒழுக்க சுத்தத்தையும் உட்படுத்தும் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வது வாழ்க்கையில் ஞானமான, சரியான போக்காக இருக்கிறது. இருந்தாலும், அது எப்போதுமே எளிதானதல்ல. கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படுவதற்கு மும்முரமாக பிரயாசப்பட வேண்டும் என்று இயேசு நல்ல காரணத்துடன்தான் சொன்னார்.​—லூக்கா 13:23, 24.

2. வெளியிலிருந்து வரும் என்ன அழுத்தங்கள் ஒருவர் ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதைக் கடினமாக்குகின்றன?

2 ஒழுக்க ரீதியில் தூய்மையைக் காத்துக்கொள்வது ஏன் கடினமாக இருக்கிறது? ஒரு காரணம், வெளியிலிருந்து வரும் பல அழுத்தங்கள். பொழுதுபோக்கு துறை, முறைதகாத பாலுறவை கவர்ச்சிமிக்கதாக, இன்பகரமானதாக, வயது வந்தவர்களுக்குரிய ஒன்றாக சித்தரிக்கிறது; அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளையோ பொருட்படுத்துவதே இல்லை. (எபேசியர் 4:17-19) அதில் காண்பிக்கப்படும் நெருக்கமான உறவுகள் பெரும்பாலும் திருமணம் செய்யாத தம்பதிகள் மத்தியிலேயே. வெள்ளித்திரையும் சின்னத்திரையும் பொறுப்போ அக்கறையோ இல்லாத உறவுகளிலும் பாலுறவை நுழைத்துவிடுகின்றன. பொதுவாக, பாச உணர்ச்சிகளும் பரஸ்பர மதிப்பும் இருப்பதில்லை. இப்படிப்பட்டவையே அநேகருடைய மனதில் சிறுவயது முதற்கொண்டு பதிந்திருக்கிறது. இதோடுகூட, எதையும் அனுமதிக்கும் இன்றைய ஒழுக்க சூழலுக்கு ஒத்திணங்கி போவதற்காக சகாக்களின் அழுத்தமும் பலமாக இருக்கிறது; அவ்வாறு ஒத்துப்போகாதவர்கள் சில சமயங்களில் கேலி செய்யப்பட்டு பழித்து பேசப்படுகிறார்கள்.​—1 பேதுரு 4:⁠4.

3. உலகிலுள்ள அநேகர் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கு சில காரணங்கள் யாவை?

3 ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதை ஒருவருக்குள்ளிருந்தே வரும் அழுத்தமும் கடினமாக்குகிறது. பாலுறவுக்கான விருப்பங்களுடன் மனிதரை யெகோவா படைத்தார்; அந்த இச்சைகள் பலமாக இருக்கலாம். இச்சை என்பது நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோம் என்பதை அதிகமாக சார்ந்திருக்கிறது; யெகோவாவின் சிந்தனையோடு ஒத்துப்போகாத எல்லா சிந்தனையும் ஒழுக்கக்கேடுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. (யாக்கோபு 1:14, 15) உதாரணமாக, பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்-⁠லில் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, முதன்முதலாக பாலுறவு கொண்ட அநேகர், அது எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளவே அதில் ஈடுபட்டதாக கூறினர். இன்னும் சிலர் தங்கள் வயதில் இருக்கும் மற்றவர்கள் பாலுறவில் ஈடுபட்டிருப்பதால் தாங்களும் சளைத்தவர்களல்ல என்பதைக் காட்ட விரும்பினார்கள். வேறு சிலர், தங்கள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டதாக அல்லது “அந்த நேரத்தில் கொஞ்சம் குடிபோதையில்” இருந்ததாக சொன்னார்கள். நாம் கடவுளை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால், காரியங்களை வித்தியாசமாக சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ள எப்படிப்பட்ட சிந்தனை நமக்கு உதவும்?

திடமாக தீர்மானியுங்கள்

4. ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும்?

4 ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதற்கு, அப்படிப்பட்ட சுத்தமான வாழ்க்கை பாணியைப் பின்பற்றுவது பயனுள்ளது என்பதை நாம் மதித்துணர வேண்டும். ரோமிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதியதற்கு இசைவாக இது இருக்கிறது: “கடவுளுடைய நன்மையும் உகந்ததும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:2, NW) ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பது பயனுள்ளது என்பதை மதித்துணருவதற்கு ஒழுக்கக்கேட்டை பைபிள் கண்டனம் செய்கிறது என்பதை அறிந்திருந்தால் மட்டுமே போதாது. ஒழுக்கக்கேடு ஏன் கண்டனம் செய்யப்படுகிறது, அதை தவிர்ப்பதால் நாம் எப்படி பயன் பெறுகிறோம் என்பதன் காரணங்களை புரிந்திருப்பதையும் அது உட்படுத்துகிறது. இதில் சில காரணங்கள் முந்தின கட்டுரையில் சிந்திக்கப்பட்டன.

5. கிறிஸ்தவர்கள் ஒழுக்க ரீதியில் ஏன் தூய்மையாக இருக்க வேண்டும்?

5 உண்மையில், கிறிஸ்தவர்கள் பாலியல் ஒழுக்கக்கேட்டை தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் கடவுளோடுள்ள உறவோடு சம்பந்தப்பட்டவை. நமக்கு எது நல்லது என்பதை அவர் அறிந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். அவர்மேல் நாம் வைத்திருக்கும் அன்பு தீமையை வெறுக்க நமக்கு உதவி செய்யும். (சங்கீதம் 97:10) ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ கொடுப்பவர் கடவுள். (யாக்கோபு 1:17) அவர் நம்மை நேசிக்கிறார். நாம் அவருக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக, அவரை நேசிக்கிறோம் என்றும் அவர் நமக்கு செய்திருக்கும் எல்லாவற்றையும் போற்றுகிறோம் என்றும் காண்பிக்கிறோம். (1 யோவான் 5:3) யெகோவாவுடைய நீதியான கட்டளைகளை மீறுவதன்மூலம் நாம் ஒருபோதும் அவரை ஏமாற்றவோ புண்படுத்தவோ கூடாது. (சங்கீதம் 78:41) பரிசுத்தமும் நீதியானதுமான அவருடைய வணக்கம் இழிவாக பேசப்படும் வகையில் நடந்துகொள்ள நாம் ஒருபோதும் விரும்பமாட்டோம். (தீத்து 2:4, 5; 2 பேதுரு 2:2) ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதன்மூலம் நாம் உன்னதமானவரை சந்தோஷப்படுத்துகிறோம்.​—நீதிமொழிகள் 27:⁠11.

6. நம்முடைய ஒழுக்க தராதரங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது எப்படி உதவியாக இருக்கும்?

6 ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருக்க தீர்மானித்துவிட்ட பிறகு, இந்த உறுதியை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தரும். நீங்கள் யெகோவா தேவனுடைய ஊழியர் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப் பண்ணுங்கள். அவருடைய உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்ள தீர்மானமாயிருக்கிறீர்கள் என்பதையும் மற்றவர்களுக்கு தெரிய வையுங்கள். இது உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய உடல், உங்களுடைய தெரிவு. ஆபத்தில் இருப்பது எது? உங்கள் பரலோக தகப்பனுடன் இருக்கும் உங்கள் அருமையான உறவு. எனவே ஒழுக்க ரீதியில் உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வது சம்பந்தமாக வேறெந்த பேச்சு வார்த்தைக்கும் இடமே இல்லை என்பதை தெளிவாக்கிவிடுங்கள். கடவுளுடைய நியமங்களுக்கு ஆதரவளித்து அவரைப் பிரதிநிதித்துவம் செய்வதில் பெருமை பாராட்டிக் கொள்ளுங்கள். (சங்கீதம் 64:10) ஒழுக்க சம்பந்தமாக நீங்கள் எடுத்திருக்கும் உறுதியான தீர்மானங்களைப் பற்றி மற்றவர்களோடு கலந்துபேச ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். தைரியமாக நம் எண்ணங்களை எடுத்துரைப்பது உங்களைப் பலப்படுத்தும், உங்களைப் பாதுகாக்கும்; மற்றவர்கள் உங்கள் உதாரணத்தைப் பின்பற்றவும் உதவி செய்யும்.​—1 தீமோத்தேயு 4:⁠12.

7. ஒழுக்க ரீதியில் தூய்மையாக இருப்பதற்கான நம் தீர்மானத்தை காத்துக்கொள்வது எப்படி?

7 உயர்ந்த ஒழுக்க தராதரத்தை காத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு, நம் நிலைநிற்கையை மற்றவர்களுக்கும் தெரிய வைத்த பின்னர், நம் தீர்மானத்தில் நிலைத்திருப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதைச் செய்வதற்கு ஒரு வழி, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருத்தல். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. உங்களைப் போன்ற ஒழுக்க தராதரங்கள் உள்ளவர்களுடன் பழகுங்கள்; அவர்கள் உங்களைப் பலப்படுத்துவார்கள். இந்த வசனம் மேலும் இப்படி சொல்லுகிறது: “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” (நீதிமொழிகள் 13:20) முடிந்தவரைக்கும், உங்கள் தீர்மானத்தை தளரவைக்கும் எவருடனும் பழகுவதைத் தவிருங்கள்.​—1 கொரிந்தியர் 15:⁠33.

8. (அ) நல்ல விஷயங்களால் ஏன் மனதை நிரப்ப வேண்டும்? (ஆ) நாம் எதைத் தவிர்க்க வேண்டும்?

8 மேலுமாக, உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள, புண்ணியமான, புகழப்படும் காரியங்களால் நம் மனதை நிரப்பிக் கொண்டிருக்க வேண்டும். (பிலிப்பியர் 4:8) அப்படி செய்வதற்கு நாம் பார்க்கிற, வாசிக்கிற விஷயங்களையும் கேட்கிற இசையையும் கவனமாய் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒழுக்கங்கெட்ட பிரசுரங்கள் நம்மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்வது, ஒழுக்கத்தில் தரமான பிரசுரங்கள் நம்மீது எந்த செல்வாக்கையும் செலுத்தாது என்று சொல்வதைப் போன்றதே. அபூரண மனிதர்கள் ஒழுக்கக்கேட்டில் எளிதில் விழுந்துபோவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால், பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் புத்தகங்களும், பத்திரிகைகளும், திரைப்படங்களும், இசையும் தவறான ஆசைகளுக்கு வழிநடத்தும்; இவை முடிவில் பாவத்துக்கு வழிநடத்தும். ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ள, நம் மனதை தெய்வீக ஞானத்தால் நிரப்ப வேண்டும்.​—யாக்கோபு 3:⁠17.

ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தும் படிகள்

9-11. சாலொமோனால் விவரிக்கப்பட்டபடி, படிப்படியாக என்னென்ன படிகள் ஒரு வாலிபனை ஒழுக்கக்கேட்டுக்கு வழிநடத்தின?

9 பெரும்பாலும், ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தும் படிகளை நம்மால் கண்டறிந்துகொள்ள முடியும். நாம் எந்தளவுக்கு ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறோமோ அந்தளவுக்கு திரும்பி வருவது கடினம். நீதிமொழிகள் 7:6-23-⁠ல் இது எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். “ஒரு புத்தியீன வாலிபனை, [“இருதயத்தில் குறைவுபட்டவனை,” NW]” அல்லது நல்ல உள்நோக்கம் இல்லாதவனை சாலொமோன் காண்கிறார். அந்த வாலிபன் ‘மாலைமயங்கும் அஸ்தமன நேரத்தில் அவள் [ஒரு வேசி] இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான்.’ அதுதான் அவன் செய்த முதல் தவறு. மாலைமயங்கும் அஸ்தமன நேரத்தில், அவனுடைய ‘இருதயம்’ அவனை ஏதோவொரு தெரு பக்கமாக அல்ல, ஆனால் எங்கு ஒரு வேசியை பொதுவாக காண முடியுமோ அந்த தெருவிடமாக வழிநடத்தியது.

10 அடுத்ததாக நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள்.” இப்போது அவன் அவளை பார்க்கிறான்! அவன் திரும்பி வீட்டிற்கு போயிருக்கலாம்; ஆனால் அவன் ஒழுக்கத்தில் பலவீனமுள்ளவனாக இருப்பதால், திரும்பிப் போவது முன்பைவிட இப்போது கடினம். அவள் அவனைப் பிடித்து முத்தமிடுகிறாள். முத்தத்தைப் பெற்றுக்கொண்ட அவன், இப்போது அவளுடைய வசீகரிக்கும் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கிறான்: “சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது” என்கிறாள் அவள். “இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.” இறைச்சி, மாவு, எண்ணெய், திராட்சரசம் ஆகியவை சமாதான பலிகளில் உட்பட்டன. (லேவியராகமம் 19:5, 6; 22:21; எண்ணாகமம் 15:8-10) அவள் ஆவிக்குரிய விஷயங்களில் குறைந்தவளல்ல என்பதை உணர்த்துவதற்காக ஒருவேளை இவற்றைச் சொல்லியிருக்கலாம். சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் அவளுடைய வீட்டில் ஏராளமான நல்ல பொருட்கள் இருந்தன என்பதைத் தெரியப்படுத்துவதற்காகவும் சொல்லியிருக்கலாம். “வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்” என்று அவனிடம் கெஞ்சுகிறாள்.

11 இதன் விளைவு என்னவாக இருந்திருக்கும் என்று கணிப்பதில் எவ்வித கஷ்டமுமில்லை. ‘தன் இனிய சொற்களால் அவனை வசப்படுத்துகிறாள்.’ “ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும்,” ‘ஒரு குருவி கண்ணியில் விழத்தீவிரிக்கிறதுபோலும்’ அவள் வீட்டிற்கு அவள் பின்னாலே போனான். சிந்திக்க வைக்கும் இந்த வார்த்தைகளைச் சொல்லி சாலொமோன் முடிக்கிறார்: ‘தன் பிராணனை வாங்கும் என்று அறியாமல் போனான்.’ அவனுடைய பிராணன், அல்லது உயிர் அதில் உட்பட்டிருக்கிறது. ஏனென்றால், “வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு அர்த்தமுள்ள ஒரு பாடம்! கடவுளுடைய வெறுப்பை சம்பாதிப்பதற்கு வழிநடத்தும் ஆரம்ப படிகளையே நாம் தவிர்க்க வேண்டும்.

12. (அ) ‘இருதயத்தில் குறைவுபட்டவன்’ என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன? (ஆ) ஒழுக்கத்தில் நாம் எவ்வாறு பலமுள்ளவர்களாக இருக்க முடியும்?

12 இந்தப் பதிவில் சொல்லப்பட்ட வாலிபன் ‘இருதயத்தில் குறைவுபட்டவன்’ என்பதைக் கவனியுங்கள். வாழ்க்கையில் அவனுடைய சிந்தனைகள், ஆசைகள், பாசங்கள், உணர்ச்சிகள், நோக்கங்கள் அனைத்துமே கடவுள் ஏற்றுக்கொள்கிற காரியங்களுக்கு இசைவாக இருக்கவில்லை என்பதை இந்த சொற்றொடர் தெரியப்படுத்துகிறது. ஒழுக்கத்தில் அவனுக்கிருந்த பலவீனத்தால் வருத்தகரமான விளைவுகள் ஏற்பட்டன. இக்கொடிய “கடைசிநாட்களில்” ஒழுக்கத்தில் பலமாக இருக்க முயற்சி தேவை. (2 தீமோத்தேயு 3:1) நமக்கு உதவ கடவுள் ஏற்பாடு செய்கிறார். சரியான பாதையில் நம்மை வழிநடத்தவும் நம்மைப் போன்ற அதே இலக்கை உடையவர்களுடன் தொடர்பு கொள்ள வைக்கவும் கிறிஸ்தவ சபையின் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். (எபிரெயர் 10:24, 25) நம்மை மேய்ப்பதற்கும் நீதியின் வழிகளைப் போதிப்பதற்கும் சபை மூப்பர்கள் இருக்கிறார்கள். (எபேசியர் 4:11, 12) நமக்கு அறிவுரை கொடுக்கவும் வழிநடத்தவும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) எல்லா சமயங்களிலும் நமக்கு உதவி செய்யும்படி கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.​—மத்தேயு 26:⁠41.

தாவீதின் பாவங்களிலிருந்து கற்றுக்கொள்ளுதல்

13, 14. படுமோசமான பாவத்தில் எப்படி தாவீது அரசன் ஈடுபட்டார்?

13 வருத்தமான விஷயம் என்னவென்றால், கடவுளின் மிகச் சிறந்த ஊழியர்கள் என்று பெயரெடுத்தவர்கள்கூட பாலின ஒழுக்கக்கேட்டில் வீழ்ந்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக யெகோவாவை விசுவாசத்துடன் சேவித்த தாவீது அரசன் அப்படிப்பட்ட ஒருவர். அவர் கடவுளை மிகவும் நேசித்தார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இருந்தாலும், பாவமான போக்கில் அவர் மூழ்கிவிட்டார். சாலொமோன் விவரித்த வாலிபனுக்கு ஏற்பட்டது போலவே, தாவீதை பாவத்துக்கு வழிநடத்தி பிரச்சினையை இன்னும் பெரிதாக்கியதற்கு பல படிகள் இருந்தன.

14 தாவீது நடுத்தர வயதில், தன்னுடைய 50-களின் தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும். தன்னுடைய உப்பரிகையிலிருந்து செளந்தரவதியாகிய பத்சேபாள் குளிப்பதைப் பார்த்தார். அவள் யார் என்பதை விசாரித்து அறிந்துகொண்டார். அம்மோனிய பட்டணமாகிய ரப்பாவை முற்றுகையிடச் சென்ற படையில் இருக்கும் உரியாவே அவள் கணவன் என்பதைக் கண்டுபிடித்தார். தாவீது அவளை தன் அரண்மனைக்கு கொண்டுவரச்சொல்லி, அவளுடன் பாலுறவு கொண்டார். பின்னர், நிலைமை இன்னும் சிக்கலானது; தாவீது செய்த காரியத்தால் அவள் கர்ப்பமானாள். உரியா தன் மனைவியுடன் இரவை செலவிடுவான் என்ற எண்ணத்துடன் தாவீது அவனை போரிலிருந்து வரவழைத்தார். இப்படி செய்தால், உரியாதான் பத்சேபாளின் குழந்தைக்கு தந்தை என தோன்றியிருக்கும். உரியாவோ தன் வீட்டுக்கு போகவில்லை. எப்படியாவது தன் பாவத்தை மூடிமறைக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், தாவீது உரியாவை மீண்டும் ரப்பாவுக்கு ஒரு கடிதத்துடன் அனுப்பினார். அதில், மும்முரமாய் நடக்கிற போரில் கொல்லப்படத்தக்க இடத்தில் உரியாவை நிறுத்தும்படி படைத்தலைவனுக்கு எழுதியிருந்தார். இப்படியாக உரியா உயிரிழந்தான். அந்த விதவை கர்ப்பமாக இருப்பதை ஊரறியும் முன் தாவீது அவளை மணம் செய்துகொண்டார்.​—2 சாமுவேல் 11:1-27.

15. (அ) தாவீதின் பாவம் எப்படி வெளியரங்கமானது? (ஆ) நாத்தானின் திறம்பட்ட சிட்சைக்கு தாவீது எப்படி பிரதிபலித்தார்?

15 பாவத்தை மூடிமறைக்க தாவீதின் திட்டம் பலித்தது போல தோன்றலாம். மாதங்களும் கடந்தன. குழந்தை​—⁠ஒரு மகன்​—⁠பிறந்தான். சங்கீதம் 32-ஐ எழுதும்போது ஒருவேளை தாவீதின் மனதில் இந்த சம்பவம்தான் இருந்தது என்றால், அவருடைய மனசாட்சி எவ்வளவு குத்தியது என்பது தெளிவாக தெரிகிறது. (சங்கீதம் 32:3-5) என்றாலும், அந்தப் பாவம் கடவுளுக்கு மறைவாக இருக்கவில்லை. பைபிள் சொல்லுகிறது: “தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.” (2 சாமுவேல் 11:27) தீர்க்கதரிசியாகிய நாத்தானை யெகோவா தாவீதிடம் அனுப்பினார். தாவீது செய்த காரியத்தைப் பற்றி அவர் திறம்பட்ட விதத்தில் எடுத்துப்பேசினார். தாவீது உடனடியாக தவறை ஒப்புக்கொண்டு யெகோவாவிடம் மன்னிப்புக்காக கெஞ்சினார். அவர் உண்மையாக மனந்திருந்தியதால் கடவுளுடன் ஒப்புரவானார். (2 சாமுவேல் 12:1-13) தாவீது சிட்சிக்கப்படும்போது கோபப்படவில்லை. மாறாக, சங்கீதம் 141:5-லுள்ள மனநிலையைக் காண்பித்தார்: “நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்து கொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.”​—சங்கீதம் 141:⁠5.

16. பாவங்கள் சம்பந்தமாக என்ன எச்சரிப்பையும் அறிவுரையையும் சாலொமோன் அளிக்கிறார்?

16 தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இரண்டாம் மகனாகிய சாலொமோன், தன் தகப்பனின் வாழ்க்கையிலுள்ள இந்த சோகமான அனுபவத்தைப் பற்றி யோசித்துப் பார்த்திருப்பார். பின்னர் அவர் இப்படி எழுதினார்: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.” (நீதிமொழிகள் 28:13) பயங்கரமான பாவத்தை நாம் செய்துவிட்டால், கடவுளால் ஏவப்பட்ட இந்த அறிவுரைக்கு செவிசாய்க்க வேண்டும். இது ஓர் எச்சரிப்பாகவும் இருக்கிறது, ஆலோசனையாகவும் இருக்கிறது. நாம் யெகோவாவிடம் குற்றத்தை ஒத்துக்கொண்டு, உதவிக்காக சபை மூப்பர்களை நாட வேண்டும். தவறில் விழுந்துபோனவர்களை சரிப்படுத்துதல்கள் செய்ய உதவுவது மூப்பர்களின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும்.​—யாக்கோபு 5:14, 15.

பாவத்தின் விளைவுகளை சகித்திருத்தல்

17. யெகோவா பாவங்களை மன்னிக்கிறபோதிலும், எதிலிருந்து அவர் நம்மை பாதுகாப்பதில்லை?

17 யெகோவா தாவீதை மன்னித்தார். ஏன்? ஏனென்றால் தாவீது உத்தமமானவர்; அவர் மற்றவர்களுக்கு இரக்கத்தைக் காண்பித்தார்; அவருடைய மனந்திரும்புதல் உண்மையானது. என்றபோதிலும், அவருடைய பாவத்தைப் பின்தொடர்ந்த துக்கமான விளைவுகளிலிருந்து தாவீது பாதுகாக்கப்படவில்லை. (2 சாமுவேல் 12:9-14) இன்றும் இதுவே உண்மை. மனந்திரும்புகிறவர்களுக்கு யெகோவா தீமை செய்வதில்லை; என்றாலும் தங்கள் தவறான செயல்களின் இயல்பான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பதிலிருந்து அவர் அவர்களைப் பாதுகாப்பதில்லை. (கலாத்தியர் 6:7) விவாகரத்து, தேவையின்றி கர்ப்பமாவது, பாலுறவால் கடத்தப்பட்ட நோய்கள், நம்பிக்கையையும் மரியாதையும் இழத்தல் இவையனைத்தும் பாலியல் ஒழுக்கக்கேட்டின் விளைவுகளில் அடங்கும்.

18. (அ) பயங்கரமான பாலியல் தவறிழைத்த ஒருவனை எப்படி கையாளும்படி பவுல் கொரிந்து சபையிடம் சொன்னார்? (ஆ) பாவிகளிடமாக யெகோவா எப்படி அன்பையும் இரக்கத்தையும் காட்டுகிறார்?

18 நாம் தனிப்பட்டவர்களாக பெருந்தவறை செய்திருந்தால், நம் தவறுகளின் விளைவுகளால் கஷ்டப்படும்போது சோர்ந்துபோவது எளிது. ஆனாலும், மனந்திரும்பி கடவுளுடன் ஒப்புரவாவதிலிருந்து எதுவும் நம்மை தடுத்து நிறுத்தும்படி விடக்கூடாது. முதல் நூற்றாண்டில், முறைதகாத விபசாரத்தில் ஈடுபட்டுவந்த ஒருவனை சபையிலிருந்து தள்ளும்படி பவுல் கொரிந்தியருக்கு எழுதினார். (1 கொரிந்தியர் 5:1, 13) அவன் உண்மையிலேயே மனந்திரும்பியபின், பவுல் சபைக்கு இந்த அறிவுரையைக் கொடுத்தார்: ‘நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்ய வேண்டும். உங்கள் அன்பை அவனுக்குக் காண்பியுங்கள்.’ (2 கொரிந்தியர் 2:5-8) கடவுளால் ஏவப்பட்ட இந்த அறிவுரையில், மனந்திரும்பும் பாவிகளிடம் யெகோவா காட்டும் அன்பையும் இரக்கத்தையும் நாம் காண்கிறோம். ஒரு பாவி மனந்திரும்பும்போது பரலோகத்திலுள்ள தூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.​—லூக்கா 15:⁠10.

19. ஒரு தவறான போக்கின் காரணமாக நியாயமாக வருத்தப்படுவது என்ன பயன்களுக்கு வழிநடத்தக்கூடும்?

19 ஒரு தவறான போக்கினால் வருத்தப்பட்டாலும், நம்முடைய வருத்தம் ‘அக்கிரமத்துக்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிருக்க’ உதவி செய்யும். (யோபு 36:21) செய்த தவறை மீண்டும் செய்யாதபடி பாவத்தின் கசப்பான விளைவுகள் நம்மை தடுக்க வேண்டும். தாவீது தன் பாவமுள்ள நடத்தையிலிருந்து கிடைத்த வருத்தமான அனுபவத்தை வைத்து மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அவர் சொன்னார்: “அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.”​—சங்கீதம் 51:⁠13.

யெகோவாவை சேவிப்பதினால் மகிழ்ச்சி கிடைக்கிறது

20. கடவுளின் நீதியான தராதரங்களுக்கு கீழ்ப்படிவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

20 “தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 11:28) கடவுளின் நீதியான தராதரங்களுக்கு கீழ்ப்படிவது இப்போதைக்கும் முடிவில்லா எதிர்காலத்துக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஒழுக்க ரீதியில் சுத்தமாக நாம் இருந்தால், யெகோவா நமக்கு உதவி செய்வதற்காக வைத்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் பயன்படுத்தி தொடர்ந்து அவ்வாறு நிலைத்திருப்போமாக. நாம் ஒழுக்கக்கேட்டில் விழுந்துபோயிருந்தால், உண்மையிலே மனந்திரும்புகிறவர்களை யெகோவா மன்னிக்க மனமுள்ளவராக இருக்கிறார் என்று அறிவதிலிருந்து ஆறுதலடைவோமாக; மீண்டும் அந்த தவறை ஒருபோதும் செய்யாதபடி தீர்மானமாக இருப்போமாக.​—ஏசாயா 55:⁠7.

21. அப்போஸ்தலன் பேதுருவின் எந்த எச்சரிப்பை பின்பற்றுவது ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும்?

21 இந்த அநீதியான உலகம், அதன் ஒழுக்கக்கேடான மனநிலைகளோடும் பழக்கங்களோடும் சேர்ந்து விரைவில் இல்லாமற்போகும். ஒழுக்கத்தில் தூய்மையைக் காத்துக்கொள்வதன்மூலம், இன்றும் என்றும் நாம் பயன் பெறுவோம். அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: ‘ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.’​—2 பேதுரு 3:14, 17.

உங்களால் விளக்க முடியுமா?

• ஒழுக்கத்தில் சுத்தத்தைக் காத்துக்கொள்வது ஏன் கடினம்?

• உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பின்பற்றுவதற்கான நம் தீர்மானத்தை ஆதரிக்க சில வழிகள் யாவை?

• சாலொமோன் குறிப்பிட்ட வாலிபனின் பாவங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

• மனந்திரும்புதலைப் பற்றி தாவீதின் முன்மாதிரி நமக்கு எதைக் கற்பிக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 13-ன் படம்]

ஒழுக்க விஷயங்களில் உங்கள் நிலைநிற்கையை மற்றவர்களுக்கு தெரிய வைப்பது பாதுகாப்பைத் தரும்

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

தாவீது உண்மையிலேயே மனந்திரும்பியதால் யெகோவா அவரை மன்னித்தார்