Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒழுக்க சுத்தம் — கடவுளின் கண்ணோட்டத்தில்

ஒழுக்க சுத்தம் — கடவுளின் கண்ணோட்டத்தில்

ஒழுக்க சுத்தம் — கடவுளின் கண்ணோட்டத்தில்

“பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.”​—ஏசாயா 48:⁠17.

1, 2. (அ) பாலுறவு ஒழுக்கத்தைப் பற்றி மக்களின் பொதுவான கருத்து என்ன? (ஆ) பாலுறவு ஒழுக்கத்தைப் பற்றி கிறிஸ்தவர்களின் நோக்குநிலை என்ன?

 இன்று, பூமியின் பல பாகங்களில் ஒழுக்கம் என்பது ஒருவரின் சொந்த விஷயமாகக் கருதப்படுகிறது. பாலுறவு என்பது, தோணும்போதெல்லாம் பாசத்தை வெளிக்காட்டும் இயல்பான உணர்வு என்றும் திருமணமானவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டிய உறவாக வரையறுக்கப்பட வேண்டியதில்லை என்றும் மக்கள் கருதுகின்றனர். யாரையும் பாதிக்காதவரையில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம், அதில் எந்த தவறுமில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒழுக்க சம்பந்தப்பட்ட விஷயங்களில், குறிப்பாக பாலுறவைப் பற்றியதில், தங்களுடைய தீர்மானத்தில் எவரும் தலையிட அவசியமில்லை என்பதே அவர்களுடைய கருத்து.

2 யெகோவாவை அறிந்திருக்கிறவர்களின் நோக்குநிலையோ வித்தியாசப்பட்டது. வேதவார்த்தைகளில் உள்ள அறிவுரைகளை அவர்கள் சந்தோஷமாகப் பின்பற்றுகிறார்கள்; ஏனென்றால் அவர்கள் யெகோவாவை நேசிக்கிறார்கள், அவரை சந்தோஷப்படுத்த விரும்புகிறார்கள். யெகோவா அவர்களை நேசிக்கிறார் என்றும் அவர்களுடைய நன்மைக்காக, பயனும் மகிழ்ச்சியும் தரும் வழிநடத்துதலைக் கொடுக்கிறார் என்றும் உணர்கிறார்கள். (ஏசாயா 48:17) ஜீவனின் ஊற்றாக கடவுள் இருப்பதால், தங்கள் உடல்களை எப்படி பயன்படுத்துவது என்பதைக் குறித்ததில் வழிநடத்துதலுக்காக அவரை நோக்கி இருப்பதே நியாயமானதாக இருக்கும்; அதுவும் ஜீவனைக் கடத்தும் இந்த விஷயத்தில் முக்கியமாக அவரையே சார்ந்திருக்க வேண்டும்.

அன்பான சிருஷ்டிகரிடமிருந்து ஒரு பரிசு

3. பாலுறவைப் பற்றி கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பலருக்கு என்ன போதனை கிடைத்திருக்கிறது, இது பைபிள் போதனைகளுடன் ஒத்திருக்கிறதா?

3 இன்றைய உலகின் பொதுவான கருத்துக்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலர் போதித்திருக்கின்றனர். பாலுறவு என்பது வெட்கக் கேடான பாவச்செயல் என்றும் ஆதாமுக்கு ஏவாளால் ஏற்பட்ட பால்சம்பந்தமான கவர்ச்சிதான் ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த ‘முதல் பாவம்’ என்றும் போதித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நோக்குநிலை கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட வேதவார்த்தைகள் சொல்வதற்கு முரணானது. முதல் மனித தம்பதியை ‘ஆதாமும் அவன் மனைவியும்’ என்பதாக பைபிள் பதிவு குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 2:25) பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி கடவுள் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.’ (ஆதியாகமம் 1:28) ஆதாம் ஏவாளிடம் பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி கடவுள் கட்டளையிட்டுவிட்டு, பின்னர் அதன்படி நடந்ததற்காக அவர்களை தண்டித்தார் என்றால் அது அர்த்தமற்றதாக இருக்குமே.​—சங்கீதம் 19:⁠8.

4. பாலுணர்வுத் திறனை கடவுள் ஏன் மனிதருக்குக் கொடுத்தார்?

4 முதலில் நம் முதல் பெற்றோருக்கும், பின்னர் நோவாவுக்கும் அவருடைய மகன்களுக்கும் மீண்டும் கொடுக்கப்பட்ட கட்டளையில் பாலுறவுக்கான முக்கிய நோக்கம் இதுவே: பிள்ளைகளைப் பிறப்பிப்பதே. (ஆதியாகமம் 9:1) என்றாலும், திருமணமான கடவுளுடைய ஊழியர்கள் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்காக மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்லவில்லை. அப்படிப்பட்ட உறவுகள் கணவன் மனைவியின் உணர்ச்சி மற்றும் உடல் சம்பந்தமான தேவைகளையும் சரியான வகையில் பூர்த்தி செய்து இன்பத்தையும் அளிக்கும். ஒருவருக்கொருவர் ஆழ்ந்த பாசத்தைக் காண்பிப்பதற்கு இது ஒரு வழியாகும்.​—ஆதியாகமம் 26:8, 9; நீதிமொழிகள் 5:18, 19; 1 கொரிந்தியர் 7:3-5.

கடவுள் போட்ட கட்டுப்பாடுகள்

5. மனிதரின் பாலியல் வாழ்க்கையில் கடவுள் என்னென்ன தடைகளை விதித்திருக்கிறார்?

5 பாலுணர்வு கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு பரிசாக இருந்தாலும் அதில் கட்டுப்பாடு அவசியம். திருமண ஏற்பாட்டிற்குள்ளும் இந்த நியமமே பொருந்துகிறது. (எபேசியர் 5:28-30; 1 பேதுரு 3:1, 7) திருமண பந்தத்திற்கு வெளியே, பாலுறவுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக சொல்கிறது. கடவுள் இஸ்ரவேலருக்கு அளித்த நியாயப்பிரமாண சட்டத்தில் இப்படி சொல்லப்பட்டது: “விபசாரம் செய்யாதிருப்பாயாக.” (யாத்திராகமம் 20:14) பின்னர் இயேசு, இருதயத்திலிருந்து வந்து ஒருவரைக் கறைபடுத்தும் ‘பொல்லாத சிந்தனைகளில், விபசாரங்களையும் வேசித்தனங்களையும்’ உட்படுத்தினார். (மாற்கு 7:21, 22) கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரிக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தூண்டப்பட்டார்: “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்.” (1 கொரிந்தியர் 6:18) மேலும் எபிரெயருக்கு பவுல் இப்படி எழுதினார்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”​—⁠எபிரெயர் 13:⁠4.

6. பைபிளில், “வேசித்தனம்” என்ற வார்த்தை எதையெல்லாம் அர்த்தப்படுத்துகிறது?

6 “வேசித்தனம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? இது போர்னியா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. திருமணமாகாதவர்கள் பாலுறவில் ஈடுபடுவதை குறிக்க இது சிலவேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. (1 கொரிந்தியர் 6:9) மத்தேயு 5:32, மத்தேயு 19:9 போன்ற வசனங்களில் உள்ளதுபோல வேறு சந்தர்ப்பங்களில் இந்த பதத்திற்கு விரிவான அர்த்தம் இருக்கிறது; இது விபசாரம், முறைதகாப் புணர்ச்சி, மிருகப் புணர்ச்சி ஆகியவற்றையும் குறிக்கிறது. திருமணமாகாதவர்களுக்கு இடையே ஏற்படும் வாய்வழி புணர்ச்சி, ஆசனவழி புணர்ச்சி, இன்னொருவரின் இனப்பெருக்க உறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்தல் போன்ற பாலுறவு சம்பந்தப்பட்ட மற்ற பழக்கங்களையும் போர்னியா என்பதாக அழைக்கலாம். இப்பேர்ப்பட்ட எல்லா பழக்கங்களையும் கடவுளுடைய வார்த்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டனம் செய்கிறது.​—லேவியராகமம் 20:10, 13, 15, 16; ரோமர் 1:24, 26, 27, 32. a

கடவுளின் ஒழுக்க சட்டங்களிலிருந்து பயனடைதல்

7. ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்வதால் நாம் என்னென்ன விதங்களில் பயனடைவோம்?

7 பாலியல் விஷயத்தில் யெகோவாவின் கட்டளைக்கு கீழ்ப்படிவது அபூரண மனிதருக்கு ஒரு சவாலாக இருக்கலாம். 12-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த மைமானடிஸ் என்ற யூத தத்துவஞானி இவ்வாறு எழுதினார்: “ஒழுக்க வரம்புகளை மீறும் முறைகேடான பாலுறவு சம்பந்தமான சட்டங்களே டோராவில் [நியாயப்பிரமாணத்தில்] தடை விதிக்கப்பட்டிருக்கும் சட்டங்களில் பின்பற்றுவதற்கு கடினமானவை.” என்றாலும், கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் நாம் அதிகமாக பயனடைவோம். (ஏசாயா 48:18) இவ்வாறு நாம் அடையும் பயன்களில் ஒன்று, எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாமல் உயிரைப் பறிக்கும் பாலியல் நோய்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பு. b மற்றொன்று, திருமணமாகாமலே கர்ப்பமாவதிலிருந்து பாதுகாப்பு. அதுமட்டுமின்றி, தெய்வீக ஞானத்தைப் பின்பற்றுவதால் இருக்கும் சுத்தமான மனசாட்சி. அவ்வாறு கீழ்ப்படிவது, சுய மரியாதையை வளர்ப்பதோடு, நம் உறவினர்கள், நம்முடைய துணை, நம் பிள்ளைகள், நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் ஆகியோர் மத்தியிலும் நமக்கு மரியாதையைத் தேடி தரும். அத்துடன், திருமணத்தில் நமக்கு மகிழ்ச்சியை தரத்தக்க விதத்தில் பாலுறவைப்பற்றிய ஆரோக்கியமான, சரியான மனநிலையை நம்மில் வளர்க்கும். “கடவுளின் வார்த்தையிலுள்ள சத்தியமே மிகச் சிறந்த பாதுகாப்பு. நான் திருமணத்திற்காக காத்திருக்கிறேன். எனக்கு கல்யாணமாகும் போது என்னை மணம் செய்யும் கிறிஸ்தவரிடம் நான் கற்புள்ளவள் என்று என்னால் பெருமையாக சொல்ல முடியும்” என்று ஒரு கிறிஸ்தவ பெண் எழுதினாள்.

8. நம் கற்புள்ள நடத்தை என்ன வழிகளில் சுத்தமான வணக்கத்தை முன்னேற்றுவிக்கும்?

8 கற்புள்ள நடத்தையைக் காத்துக்கொள்வதன்மூலம், உண்மை வணக்கத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை முறியடித்து நாம் வணங்கும் கடவுளிடமாக மக்களின் கவனத்தை ஈர்க்கலாம். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (1 பேதுரு 2:12) யெகோவாவை சேவிக்காதவர்கள் நம்முடைய கற்புள்ள நடத்தையை ஏற்றுக்கொள்ளவோ அங்கீகரிக்கவோ தவறினாலும், நம்முடைய பரலோக தந்தையாகிய யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்ற நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் பார்க்கிறார், அங்கீகரிக்கிறார், சந்தோஷமும் அடைகிறார் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்.​—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 4:⁠13.

9. எல்லா காரணங்களையும் புரிந்துகொள்ள முடியாதபோதிலும் கடவுளுடைய வழிநடத்துதலில் நாம் ஏன் நம்பிக்கை வைக்க வேண்டும்? உதாரணத்துடன் விளக்கவும்.

9 கடவுளிடம் விசுவாசம் என்பது, கடவுள் ஏன் நம்மை குறிப்பிட்ட வழியில் வழிநடத்துகிறார் என்பதற்கான எல்லா காரணங்களும் நமக்கு முழுமையாக புரியாவிட்டாலும் நமக்கு எது நல்லது என்று அவர் அறிந்திருக்கிறார் என அவரில் நம்பிக்கை வைப்பதைக் குறிக்கும். நியாயப்பிரமாணத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படையினர் கூடாரங்களில் தங்கும்போது அவர்கள் தங்கும் இடத்திற்கு வெளியே மண்ணைத் தோண்டி மலம் கழித்து அதை மூடிவிட வேண்டும் என்று ஒரு கட்டளை இருந்தது. (உபாகமம் 23:13, 14) அப்படி ஒரு கட்டளையை ஏன் தரவேண்டும் என்று இஸ்ரவேலர் ஒருவேளை யோசித்திருக்கலாம்; சிலர் அது தேவையற்றது என்று நினைத்திருக்கலாம். ஆனாலும் பின்னர், மருத்துவ அறிவியல் இந்த சட்டத்தின் காரணத்தை கண்டுணர ஆரம்பித்தது; தண்ணீரின் ஊற்றுமூலங்களை மாசடையாமல் காக்கவும் புழு பூச்சிகளால் கடத்தப்படும் அநேக நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அந்த கட்டளை உதவியது. அதேவிதமாகவே, பாலுறவு திருமண பந்தத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கடவுள் மட்டுப்படுத்தி வைப்பதற்கு ஆவிக்குரிய, சமூக, உணர்ச்சிப்பூர்வமான, உடல்பூர்வமான, மனம் சம்பந்தமான காரணங்கள் இருக்கின்றன. ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொண்ட ஒருசில பைபிள் உதாரணங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

யோசேப்பு​—⁠ஒழுக்கமான நடத்தைக்காக ஆசீர்வதிக்கப்பட்டார்

10. யோசேப்பை வசப்படுத்த முயன்றது யார், அவன் எப்படி பதிலளித்தான்?

10 யாக்கோபின் மகனாகிய யோசேப்பின் பைபிள் உதாரணம் உங்களுக்கு நன்கு தெரிந்ததே. எகிப்தில் பார்வோனின் மெய்க்காப்பாளர்களுக்கு தலைவனாக இருந்த போத்திபாரிடம் அடிமையாக இருந்தபோது அவனுக்கு வயது 17. யெகோவா யோசேப்பை ஆசீர்வதித்தார். காலப்போக்கில் அவன் போத்திபாரின் வீட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரன் ஆக்கப்பட்டான். தன் 20-களில் யோசேப்பு “அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.” போத்திபாரின் மனைவி அவனுடைய அழகில் மயங்கினாள். வசீகரத்தால் அவனை வசப்படுத்த முயன்றாள். யோசேப்பு தன் நிலையை தெளிவாகச் சொன்னான்; அவளுக்கு இணங்கிப்போவது தன் எஜமானுக்கு மட்டுமல்ல ‘தேவனுக்கு விரோதமான பாவமும்’கூட என்று எடுத்துக் கூறினான். யோசேப்பு அப்படி சிந்தித்தது ஏன்?​—ஆதியாகமம் 39:1-9.

11, 12. வேசித்தனத்தையும் விபசாரத்தையும் தடைசெய்யும் தெய்வீக கட்டளை எதுவும் எழுத்து வடிவில் இல்லாத போதும், யோசேப்பு ஏன் அந்த விதமாக காரியங்களை சீர்தூக்கிப் பார்த்திருப்பான்?

11 மற்ற மனிதர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயத்தால் யோசேப்பு அப்படி தீர்மானிக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. யோசேப்பின் குடும்பத்தினர் தொலைதூரத்தில் வாழ்ந்தனர்; அவன் தந்தை அவன் செத்துபோய்விட்டதாக நினைத்தார். யோசேப்பு பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டால் அவனுடைய குடும்பத்துக்கு அதைப் பற்றியே தெரிய வராது. இங்கோ, போத்திபாரும் அவனது வேலைக்காரர்களும் வீட்டில் இராத சந்தர்ப்பங்களும் இருந்ததால், அவர்களுக்கும் தெரியாமல் விஷயத்தை மூடிமறைத்துவிடலாம். (ஆதியாகமம் 39:11) என்றாலும், அப்படிப்பட்ட நடத்தையை கடவுளுடைய பார்வையிலிருந்து மறைக்க முடியாது என்பது யோசேப்புக்குத் தெரியும்.

12 யெகோவாவைப் பற்றி தனக்கு தெரிந்தவற்றை யோசேப்பு சீர்தூக்கி பார்த்திருப்பான். ஏதேன் தோட்டத்தில் யெகோவா அறிவித்திருந்தது அவனுக்கு தெரியும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) மேலும், யோசேப்பின் கொள்ளுப்பாட்டியாகிய சாராளை வசப்படுத்துவதிலேயே குறியாக இருந்த பெலிஸ்த அரசனிடம் யெகோவா என்ன சொன்னார் என்பதும் யோசேப்புக்கு தெரிந்திருக்கலாம். யெகோவா அந்த அரசனிடம் இப்படி சொன்னார்: ‘நீ அழைப்பித்த ஸ்திரீயின் நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். . . . நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.’ (ஆதியாகமம் 20:3, 6) யெகோவா அதுவரையிலுமாக எழுத்து வடிவில் சட்டத்தைக் கொடுக்கவில்லை என்றாலும், திருமணத்தைப் பற்றிய அவருடைய எண்ணங்கள் தெளிவாக இருந்தன. யோசேப்புக்கு இருந்த ஒழுக்க உணர்வும் யெகோவாவை மகிழ்விக்க வேண்டும் என்ற விருப்பமும் சேர்ந்து, ஒழுக்கக்கேட்டை வெறுத்துத்தள்ள உதவியது.

13. யோசேப்பால் போத்திபாரின் மனைவியை ஏன் தவிர்க்க முடியாமல் இருந்திருக்கலாம்?

13 ஆனாலும் போத்திபாரின் மனைவி விடாப்பிடியாக இருந்தாள்; அவளுடன் பாலுறவு கொள்ளும்படி “நித்தம் நித்தம்” அவனை கெஞ்சினாள். யோசேப்பு ஏன் அவளை முற்றிலுமாக தவிர்க்க இயலவில்லை? ஒரு அடிமையாக, அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை அவன் செய்துதான் ஆகவேண்டும். அந்த சூழ்நிலைமையை மாற்ற அவனால் ஒன்றும் செய்திருக்க முடியாது. எகிப்திலுள்ள வீடுகளில் பொருட்களை சேமித்து வைக்கும் அறைகளுக்குச் செல்வதற்கு வீட்டிலுள்ள முக்கிய பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதாக தொல்பொருள் ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. எனவே யோசேப்புக்கு போத்திபாரின் மனைவியை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமாக இருந்திருக்காது.​—ஆதியாகமம் 39:⁠10.

14. (அ) போத்திபாரின் மனைவியிடமிருந்து தப்பி ஓடிய பின்னர் யோசேப்புக்கு என்ன நடந்தது? (ஆ) யோசேப்பு உண்மையாய் இருந்ததற்கு யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?

14 அவர்கள் வீட்டில் தனியாக இருந்த நேரம் வந்தது. போத்திபாரின் மனைவி அவனை பிடித்து இழுத்து “என்னோடு படு” (பொ.மொ.) என்றாள். அவன் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டான். அதனால் அவமானப்பட்டவளாய், அவன் தன்னை கற்பழிக்க வந்ததாய் குற்றம் சாட்டினாள். அதன் விளைவு? அவனுடைய உத்தம போக்கிற்காக யெகோவா அவனுக்கு உடனடியாக பதில் அளித்தாரா? இல்லை. யோசேப்பை சிறையிலிட்டு விலங்கு போட்டார்கள். (ஆதியாகமம் 39:12-20; சங்கீதம் 105:18) யெகோவா அந்த அநியாயத்தைப் பார்த்தார். காலப்போக்கில் யோசேப்பை சிறையிலிருந்து அரண்மனைக்கு உயர்த்தினார். எகிப்திலேயே இரண்டாவது முக்கிய நபரானான். மனைவியையும் மக்களையும் ஆசீர்வாதமாக பெற்றான். (ஆதியாகமம் 41:14, 15, 39-45, 50-52) கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவியாக இருக்கத்தக்கதாக யோசேப்பின் உத்தம வாழ்க்கை வரலாறு 3,500 வருடங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது. கடவுளுடைய நீதியான சட்டங்களுக்கு இசைவாக நடப்பதால் எவ்வளவு அருமையான ஆசீர்வாதங்கள்! அதேவிதமாக, இன்றும் ஒழுக்கத்தில் உத்தமமாக நடந்துகொள்வதால் சிலசமயங்களில் உடனடியாக பலன் கிடைக்காமல் போகலாம்; ஆனால் யெகோவா பார்க்கிறார் என்றும் தக்க சமயத்தில் பலன் அளிப்பார் என்றும் நிச்சயமாய் இருக்கலாம்.​—2 நாளாகமம் 16:⁠9.

யோபு ‘தன் கண்களோடு பண்ணின உடன்படிக்கை’

15. யோபு ‘தன் கண்களோடு பண்ணின உடன்படிக்கை’ என்ன?

15 உத்தமத்தைக் காத்துக்கொண்ட இன்னொருவர் யோபு. பிசாசு யோபுக்கு சோதனைகளைக் கொண்டுவந்தபோது, யோபு தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்த்தார். மற்ற விஷயங்களோடுகூட, பாலியல் ஒழுக்கத்திலும் யெகோவாவின் தராதரத்தை அவர் மீறியிருந்தால் கடுமையான தண்டனையை அனுபவிக்க தயாராக இருப்பதாக கூறினார். யோபு சொன்னதாவது: “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) இதன் மூலமாக யோபு சொன்னது என்னவென்றால், கடவுளிடம் உத்தமமாக இருக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்ததால், அவர் ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும் என உறுதி பூண்டிருந்தார் என்பதையே. அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை சந்தித்திருப்பார்; அவர்களில் தேவையிலிருப்பவர்களுக்கு உதவியும் செய்திருப்பார். ஆனால் காம உணர்ச்சிகளை வளர்த்துக்கொள்ள அவர் இடம் கொடுக்கவில்லை. அவருக்கு சோதனைகள் வருவதற்குமுன், அவர் பெருஞ்செல்வந்தராக ‘கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவராக’ இருந்தார். (யோபு 1:3) என்றாலும் பல பெண்களைக் கவருவதற்காக தன் பொருட்செல்வத்தைப் பயன்படுத்தவில்லை. இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் எண்ணம் அவருக்கு இல்லவே இல்லை.

16. (அ) திருமணமான கிறிஸ்தவர்களுக்கு யோபு ஏன் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்? (ஆ) மல்கியாவின் நாட்களில் இருந்த ஆண்களின் நடத்தை யோபின் நடத்தையிலிருந்து எப்படி மிக வித்தியாசமாக இருந்தது, இன்றைய நிலை என்ன?

16 இவ்வாறாக யோபு நன்றாக வாழ்ந்த காலத்திலும் கஷ்டப்பட்ட காலத்திலும் ஒழுக்கத்தில் உத்தமமாக இருந்தார். யெகோவா இதைக் கவனித்தார்; நிறைய ஆசீர்வதித்தார். (யோபு 1:10; 42:12) திருமணமான கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்கும், யோபு எவ்வளவு நல்ல முன்மாதிரி! யெகோவாவும் அவரை நேசித்ததில் ஆச்சரியமே இல்லை! மாறாக, இன்றிருக்கும் பலரின் நடத்தை மல்கியாவின் காலத்தில் நடந்ததைப் போல இருக்கிறது. அநேக கணவன்மார் இளம் பெண்களை மணப்பதற்காக தங்கள் சொந்த துணைகளை கைவிட்டதை அந்த தீர்க்கதரிசி கண்டித்துப் பேசினார். கைவிடப்பட்ட மனைவிகளின் கண்ணீரால் யெகோவாவின் பீடம் நிரம்பியது. தங்கள் துணைகளுக்கு ‘துரோகம் பண்ணினவர்களை’ கடவுள் கண்டனம் செய்தார்.​—மல்கியா 2:13-16.

கற்புள்ள இளம் பெண்

17. சூலேமிய பெண் எப்படி ஓர் ‘அடைக்கப்பட்ட தோட்டம்’ போல் இருந்தாள்?

17 உத்தமத்தைக் காத்தவர்களில் மூன்றாம் முன்மாதிரி சூலேமிய பெண். இளமையும் அழகுமுள்ள அவள், ஒரு இளம் மேய்ப்பனின் உள்ளத்தை மட்டுமல்ல செல்வச் சிறப்பு பெற்ற சாலொமோன் அரசனுடைய உள்ளத்தையும் கவர்ந்தாள். உன்னதப்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் அழகிய கதை முழுவதும், சூலேமிய பெண் கற்புள்ளவளாக இருந்து, தன்னைச் சுற்றியிருந்தவர்களின் மதிப்பைச் சம்பாதித்ததாகவே பேசப்படுகிறாள். சாலொமோனை அவள் ஏற்க மறுத்த போதிலும், அவளுடைய கதையை பதிவு செய்யும்படி அவர் கடவுளால் ஏவப்பட்டார். அவள் நேசித்த மேய்ப்பனும் அவளுடைய கற்புள்ள நடத்தையை மதித்தான். சூலேமிய பெண் ‘அடைக்கப்பட்ட தோட்டம்’ போல இருந்ததாகக்கூட ஒருமுறை நயமாக கூறினான். (உன்னதப்பாட்டு 4:12) பண்டைய இஸ்ரவேலில், அழகிய தோட்டங்களில் பல்வகையான சுவையூட்டும் காய்கறிகளும், நறுமணம் வீசும் மலர்களும், கம்பீரமாக காட்சியளிக்கும் மரங்களும் நிறைந்து காணப்பட்டன. அப்படிப்பட்ட தோட்டங்களைச் சுற்றி வேலி அல்லது சுவர் அமைக்கப்பட்டிருக்கும். பூட்டி வைக்கப்படும் ஒரு வாயில் வழியாகவே அதனுள் செல்ல முடியும். (ஏசாயா 5:5) அந்த மேய்ப்பனின் பார்வையில் அந்த சூலேமிய பெண்ணின் ஒழுக்க தூய்மையும் நளினமும் அப்பேர்ப்பட்ட எழில் கொஞ்சும் அரியதோர் தோட்டத்தைப் போன்றதே. அவள் கற்பில் சிறந்து விளங்கினாள். அவளது மென்மையான பாச உணர்ச்சிகள் அவளுடைய வருங்கால கணவனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.

18. யோசேப்பு, யோபு, சூலேமிய பெண் ஆகியோரைப் பற்றிய பதிவுகள் நமக்கு எதை நினைவுபடுத்துகின்றன?

18 ஒழுக்கத்தில் உத்தமத்தைக் காத்துக்கொள்வதில், சூலேமிய பெண் இன்றைய கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறாள். சூலேமிய பெண்ணின் நற்குணத்தைக் கண்டு யெகோவா போற்றினார். யோசேப்பையும் யோபையும் ஆசீர்வதித்தது போலவே இவளையும் ஆசீர்வதித்தார். நமக்கு வழிகாட்டும் வகையில், அவர்களுடைய உத்தம செயல்கள் கடவுளுடைய வார்த்தையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்காலத்தில் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் பைபிளில் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய முயலும் அனைவருக்காகவும் அவர் ஒரு “ஞாபகப் புஸ்தகம்” வைத்திருக்கிறார். யெகோவா ‘கவனிக்கிறார்,’ ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ள நாம் உண்மையாக முயற்சி எடுப்பதைக் கண்டு பூரிக்கிறார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.​—மல்கியா 3:⁠16.

19. (அ) ஒழுக்க சுத்தத்தில் எப்படிப்பட்ட நோக்குநிலை நமக்கு வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?

19 விசுவாசம் இல்லாதவர்கள் கேலி செய்யக்கூடும்; நமக்கோ நம் அன்பான சிருஷ்டிகருக்கு கீழ்ப்படிவது சந்தோஷமாக இருக்கிறது. ஒழுக்கத்தில் உயர்ந்த தராதரம் நம்முடையது; அது கடவுளுடைய ஒழுக்க தராதரம். நாம் பெருமைப்படத்தக்க ஒன்று அது. பொத்திக் காக்க வேண்டிய பொக்கிஷம் அது. ஒழுக்கத்தில் சுத்தமான நிலையை காத்துக்கொள்ளும்போது, கடவுளுடைய ஆசீர்வாதத்தால் மகிழ்வுறலாம்; வருங்காலத்தில் நித்திய ஆசீர்வாதங்களை பெறும் நம்பிக்கையை தெளிவாக வைத்திருக்கலாம். ஒழுக்கத்தில் சுத்தத்தைக் காத்துக்கொள்ள நடைமுறையில் நாம் என்ன செய்யலாம்? இந்த முக்கியமான கேள்வி அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.

[அடிக்குறிப்புகள்]

a ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 15, 1983, பக்கங்கள் 29-31-ஐப் பார்க்கவும்.

b கடவுளுடைய கட்டளையைப் பின்பற்றாத, விசுவாசத்தில் இல்லாத துணையிடமிருந்து, தவறுசெய்யாத கிறிஸ்தவருக்கு பாலியல் நோய் தொற்றுவது வருந்தத்தக்கது.

உங்களால் விளக்க முடியுமா?

• பாலுறவு பற்றி பைபிள் என்ன போதிக்கிறது?

• பைபிளில் “வேசித்தனம்” என்ற வார்த்தை எதையெல்லாம் உட்படுத்துகிறது?

• ஒழுக்கத்தில் சுத்தமாக இருப்பதால் நமக்கு என்ன பயன்?

• யோசேப்பு, யோபு, சூலேமிய பெண் ஆகியோர் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு ஏன் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

யோசேப்பு ஒழுக்கங்கெட்ட சூழலைவிட்டு ஓட்டம் பிடித்தான்

[பக்கம் 10-ன் படம்]

சூலேமிய பெண் ஓர் ‘அடைக்கப்பட்ட தோட்டம்’ போன்றவள்

[பக்கம் 11-ன் படம்]

யோபு ‘தன் கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருந்தார்’