Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாராளம் ததும்புகையில் பொங்கும் சந்தோஷம்

தாராளம் ததும்புகையில் பொங்கும் சந்தோஷம்

தாராளம் ததும்புகையில் பொங்கும் சந்தோஷம்

அன்பான ஒரு கிறிஸ்தவ கண்காணியாக, அப்போஸ்தலன் பவுல் தன் உடன் விசுவாசிகளில் உண்மையான அக்கறை காண்பித்தார். (2 கொரிந்தியர் 11:28) எனவே, பொது சகாப்தம் முதல் நூற்றாண்டின் 50-களின் மத்திபத்தில், யூதேயாவில் தேவையிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பணம் திரட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். தாராள குணத்தைப் பற்றி ஒரு நல்ல பாடத்தைக் கற்பிக்கும்படி இந்த சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்தினார். உற்சாகமாய் கொடுப்பதை யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை பவுல் அழுத்திக் காண்பித்தார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”​—2 கொரிந்தியர் 9:⁠7.

வறுமையிலும் தாராளம்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் சமுதாயத்தில் பிரபலமாக இருக்கவில்லை. அவர்களில் “வல்லவர்கள் அநேகரில்லை” என்று பவுல் குறிப்பிட்டார். அவர்கள் ‘உலகத்தில் பலவீனமானவைகளாக,’ ‘உலகத்தின் இழிவானவைகளாக’ இருந்தனர். (1 கொரிந்தியர் 1:26-28) உதாரணமாக, மக்கெதோனியாவில் வாழ்ந்துவந்த கிறிஸ்தவர்கள் ‘கொடிய தரித்திரத்திலும் மிகுந்த உபத்திரவத்திலும்’ இருந்தனர். இருந்தபோதிலும், ‘பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்திற்கு’ பொருளுதவி அளிக்கும் சிலாக்கியத்தை தாங்கள் பெற வேண்டுமென்று மக்கெதோனியாவிலுள்ள மனத்தாழ்மையான அந்த விசுவாசிகள் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்; அவர்கள் கொடுத்தது ‘தங்கள் திராணிக்கு மிஞ்சியது’ என்று பவுலே சாட்சி அளித்தார்!​—2 கொரிந்தியர் 8:1-4.

தாராளமாய் கொடுப்பது என்பது கொடுக்கப்படும் அளவை வைத்து நிர்ணயிக்கப்படவில்லை. கொடுப்பதன் உள்நோக்கம், மனமுவந்து பகிர்ந்துகொள்ளுதல், இருதயத்தின் நிலை ஆகியவையே முக்கியம். நன்கொடைகள் அளிப்பதில் மனமும் இருதயமும் உட்பட்டிருக்கிறதாக கொரிந்து கிறிஸ்தவர்களிடம் பவுல் குறிப்பிட்டார். அவர் சொன்னார்:உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; . . . நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.” அவர்கள் தாராளமாய் கொடுக்கும்படி ‘தங்கள் மனதில் [“இருதயத்தில்,” NW] நியமித்து’ கொண்டார்கள்.​—2 கொரிந்தியர் 9:2, 7.

‘அவர்கள் உள்ளூர தூண்டப்பட்டனர்’

தாராளமாய் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கெனவே நடந்த ஒரு சம்பவத்தை அப்போஸ்தலன் பவுல் நினைவில் வைத்திருக்கலாம். அவர் வாழ்ந்த காலத்திற்கு சுமார் 15 நூற்றாண்டுகளுக்கு முன் வனாந்தரத்தில் சம்பவித்த நிகழ்ச்சி அது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இப்போது அவர்கள் சீனாய் மலை அடிவாரத்தில் இருந்தனர். வணக்கத்திற்காக ஒரு கூடாரத்தைக் கட்டி வணக்கத்துக்குரிய பொருட்களையெல்லாம் அங்கு வைக்கும்படி யெகோவா கட்டளையிட்டார். இதைச் செய்வதற்கு நிறைய பொருள் தேவைப்படும் என்பதால் நன்கொடை அளிக்கும்படி அந்த தேசத்தாரிடம் கேட்கப்பட்டது.

இஸ்ரவேலர் எப்படி பிரதிபலித்தார்கள்? “எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, [“எவர்கள் உள்ளூர தூண்டப்பட்டார்களோ,” NW] அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கு . . . ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.” (யாத்திராகமம் 35:21) அவர்கள் தாராளமாய் நன்கொடை அளித்தார்களா? நிச்சயமாகவே அளித்தார்கள்! மோசேயிடம் இவ்விதமாய் அறிக்கை செய்யப்பட்டது: “கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள்.”​—⁠யாத்திராகமம் 36:⁠5.

அந்த சமயத்தில் இஸ்ரவேலரின் பொருளாதார நிலைமை எப்படி இருந்தது? கொஞ்ச காலத்திற்கு முன்புதான் அவர்கள் வருந்தத்தக்க அடிமைகளாக ‘சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கப்பட்டு,’ ‘கசப்பான’ வாழ்க்கையை வாழ்ந்தார்கள்; ‘உபத்திரவம்’ நிறைந்த வாழ்க்கையாக இருந்தது. (யாத்திராகமம் 1:11, 14; 3:7; 5:10-18) இவ்விதமான நிலையில், அவர்கள் செல்வசெழிப்புடன் வாழவில்லை என்பது தெரிகிறது. அடிமைப்பட்டிருந்த தேசத்திலிருந்து இஸ்ரவேலர் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தது உண்மைதான். (யாத்திராகமம் 12:32) ஆனாலும் அவ்வளவு அதிகமாக ஒன்றும் அவர்களிடம் இருந்திருக்காது. ஏனென்றால், எகிப்தை விட்டுவந்து கொஞ்ச காலத்திலேயே, சாப்பிடுவதற்கு அப்பமோ இறைச்சியோ இல்லை என்று அவர்கள் குறைசொன்னார்கள்.​—யாத்திராகமம் 16:⁠3.

அப்படியானால், கூடாரத்தைக் கட்டுவதற்காக இஸ்ரவேலர் அளித்த விலைமதிப்புள்ள நன்கொடைகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தன? தங்களுடைய முந்தின எஜமான்களாகிய எகிப்தியரிடமிருந்துதான். பைபிள் சொல்கிறது: “இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். . . . கேட்டதை அவர்களுக்குக் [எகிப்தியர்கள்] கொடுத்தார்கள்.” எகிப்தியர்கள் இப்படி தாராளமாய் கொடுத்தது யெகோவாவிடமிருந்து இஸ்ரவேலருக்குக் கிடைத்த ஆசீர்வாதம், பார்வோனிடமிருந்து அல்ல. கடவுளால் ஏவப்பட்ட பதிவு சொல்கிறது: “கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்.”​—யாத்திராகமம் 12:35, 36.

இஸ்ரவேலர் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். கசப்பான அடிமைத்தனத்தையும் இழப்பையும் பல தலைமுறைகளாக அனுபவித்திருந்தார்கள். இப்போது அவர்கள் விடுதலை பெற்று பொருளாதார உடைமைகளை பேரளவில் பெற்றிருந்தார்கள். இந்த உடைமைகளில் கொஞ்சத்தைக் கொடுத்துவிட வேண்டுமென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? அவற்றை அவர்கள் சம்பாதித்ததாகவும் அவற்றை வைத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்றும் நினைத்திருக்கலாம். என்றாலும், உண்மை வணக்கத்துக்காக நன்கொடை அளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது அவர்கள் கட்டாயத்தினாலோ கஞ்சத்தனமாகவோ அல்ல ஆனால் மனமுவந்து கொடுத்தார்கள். இந்த பொருளாதார சம்பத்து அனைத்தும் யெகோவாவால்தான் கிடைத்தது என்பதை அவர்கள் மறக்கவில்லை. ஆகவே அவர்கள் தங்களிடமிருந்த வெள்ளியையும் பொன்னையும் ஆடுமாடுகளையும் தாராளமாகக் கொடுத்தார்கள். கொடுக்கும் ‘மனமுள்ளவர்களாய்’ இருந்தார்கள். அவர்களுடைய ‘இருதயம் அவர்களை எழுப்பியது.’ ‘அவர்கள் உள்ளூர தூண்டப்பட்டனர்.’ அது உண்மையிலேயே ‘யெகோவாவுக்குக் கொடுக்கப்பட்ட மனப்பூர்வமான காணிக்கையாக’ இருந்தது.​—யாத்திராகமம் 25:1-9; 35:4-9, 20-29, NW; 36:3-7.

கொடுப்பதற்கு தயாராக

கொடுக்கப்பட்ட நன்கொடையின் அளவை வைத்து கொடுப்பவரின் தாராள குணத்தை சரியாக அளவிட முடியாது. தேவாலயத்தின் காணிக்கைப்பெட்டியிலே மக்கள் காணிக்கை போடுவதை இயேசு ஒருமுறை பார்த்தார். பணக்காரர்கள் பல காசுகளைப் போட்டார்கள். ஆனால் ஒரு ஏழை விதவை மிகவும் குறைந்த மதிப்புள்ள இரண்டு சிறிய காசுகளை போட்டது இயேசுவின் மனதில் பதிந்தது. அவர் சொன்னார்: “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் . . . இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”​—லூக்கா 21:1-4; மாற்கு 12:41-44.

இயேசு நினைத்ததற்கு இசைவாகவே கொரிந்தியரிடம் பவுல் சொன்ன குறிப்புகளும் இருந்தன. தேவையிலிருக்கும் உடன் விசுவாசிகளுக்கு உதவும்படி நன்கொடைகள் கொடுப்பது சம்பந்தமாக பவுல் இவ்விதமாக குறிப்பிட்டார்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” (2 கொரிந்தியர் 8:12) நன்கொடைகள் கொடுப்பது மற்றவர்களோடு போட்டியிடும் அல்லது ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு விஷயமல்ல. ஒருவன் தனக்கு எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொருத்து கொடுக்கிறான்; கணக்குப்பார்க்காமல் கொடுக்கும் மனநிலையை யெகோவா விரும்புகிறார்.

யெகோவாவை எவரும் செல்வந்தராக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் எல்லாமே அவருடையது. அவ்வாறு இருக்கையில், நன்கொடை அளிப்பது, கடவுளுடைய வணக்கத்தார் அவருக்கு தங்கள் அன்பை வெளிக்காட்ட வாய்ப்பளிக்கும் ஒரு சிலாக்கியம். (1 நாளாகமம் 29:14-17) மற்றவர்கள் பார்ப்பதற்காக அல்லது தன்னல நோக்கங்களுக்காக இல்லாமல் சரியான மனநிலையுடனும் உண்மை வணக்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் கொடுக்கப்பட்ட நன்கொடைகள் சந்தோஷத்தையும் கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் தரும். (மத்தேயு 6:1-4) இயேசு சொன்னார்: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” (அப்போஸ்தலர் 20:35) நம்முடைய பலத்தை யெகோவாவின் சேவையில் பயன்படுத்துவதன் மூலமும் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்காகவும் உதவி பெற தகுதிபெற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவும் நம்முடைய பொருளாதார சம்பத்திலிருந்து எதையாவது ஒதுக்கி வைப்பதன் மூலமும் நாமும் அந்த மகிழ்ச்சியில் பங்கு பெறலாம்.​—1 கொரிந்தியர் 16:1, 2.

தற்காலத்தில் கொடுப்பதற்கு தயாராக

தற்காலத்தில், “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” பிரசங்கிக்கப்படுவதில் உலகெங்கும் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்டு யெகோவாவின் சாட்சிகள் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். (மத்தேயு 24:14) 20-⁠ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டில், 30,00,000-⁠க்கும் அதிகம் பேர் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக முழுக்காட்டப்பட்டனர். சுமார் 30,000 புதிய சபைகளும் உருவாயின. இன்றிருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் சபைகளில் மூன்றிலொரு பங்கு கடந்த பத்து வருடங்களில் உருவானவையே! மற்றவர்களை சந்தித்து யெகோவாவின் நோக்கங்களை அவர்களுக்கு சொல்வதற்காக உண்மை மனதுள்ள கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் தங்கள் நேரத்தையும் சக்தியையும் கொடுத்து கடினமாக உழைப்பதன் விளைவாக இத்தனை அதிகரிப்பு. ராஜ்ய பிரசங்க வேலையில் உதவி செய்வதற்காக தங்கள் வீடுகளை விட்டுவிட்டு தூர இடங்களுக்குச் சென்றிருக்கும் மிஷனரிகளின் வேலையின் காரணமாகவும் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பின் காரணமாக புதிய வட்டாரங்கள் உருவாகின்றன. இதனால் புதிய வட்டாரக் கண்காணிகளையும் நியமிக்க வேண்டியிருக்கிறது. மேலும், பிரசங்க வேலையிலும் தனிப்பட்ட படிப்பிலும் பயன்படுத்துவதற்கு அதிக பைபிள்களும் தேவை. அதிக பிரசுரங்களும் தேவை. பல நாடுகளில் கிளை அலுவலக கட்டடங்களை பெரிதாக்க அல்லது பெரிய இடத்தில் மாற்றியமைக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. கூடுதலான இந்த எல்லா தேவைகளும் யெகோவாவின் மக்களிடமிருந்து வரும் மனமுவந்த நன்கொடைகளாலேயே பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ராஜ்ய மன்றங்களுக்கான தேவை

யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை அதிகரிப்பதனால் ராஜ்ய மன்றங்களுக்கான தேவையே முக்கியமானதாக இருக்கிறது. பொருளாதாரம் குறைவாக இருக்கும் நாடுகளில், வருடம் 2000-⁠த்தின் தொடக்கத்தில் கணக்கெடுத்தபோது 11,000-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுவதாக தெரிய வந்தது. அங்கோலாவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு வருடக்கணக்காக உள்நாட்டு போர் நடந்தபோதிலும், ராஜ்ய பிரஸ்தாபிகளின் வருடாந்தர சராசரி அதிகரிப்பு 10 சதவீதமாக இருக்கிறது. என்றபோதிலும், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்த பெரிய நாட்டிலுள்ள 675 சபைகளில் பெரும்பாலான சபைகள் திறந்தவெளியில்தான் கூடுகின்றன. இந்நாட்டில் 22 ராஜ்ய மன்றங்கள் மட்டுமே உள்ளன. இவற்றிலும் 12 மன்றங்களுக்கு மட்டுமே ஏதாவது ஒரு வகையான கூரை இருக்கிறது.

காங்கோ குடியரசிலும் இதுபோன்ற நிலைமைதான். தலைநகராகிய கின்ஷாசாவில் ஏறக்குறைய 300 சபைகள் இருந்தாலும், அங்கு பத்து ராஜ்ய மன்றங்கள் மட்டுமே உள்ளன. அந்நாட்டில் 1,500-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் உடனடியாக தேவை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிர அதிகரிப்பு இருப்பதால், ரஷ்யாவிலும் உக்ரேனிலும் சேர்த்து நூற்றுக்கணக்கான ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுவதாக அந்நாடுகள் அறிக்கை செய்கின்றன. லத்தீன் அமெரிக்காவில் ஏற்படும் விரைவான அதிகரிப்பை பிரேஸிலின் அறிக்கை சிறப்பித்துக் காட்டுகிறது. அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சாட்சிகள் இருப்பதால் கூடுதலான ராஜ்ய மன்றங்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நாடுகளின் தேவைகளை சமாளிக்க ராஜ்ய மன்றங்கள் கட்டும் வேலையை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தை யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்கிறார்கள். உலகெங்குமுள்ள சகோதரர்கள் தாராளமாய் கொடுக்கும் நன்கொடைகளால் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி கிடைக்கிறது. இதனால் மிக ஏழ்மையான சபைகளுக்குக்கூட வணக்கத்திற்கு ஏற்ற ஒரு இடம் இருக்கும்.

பண்டைய இஸ்ரவேலர் காலத்தில் இருந்ததுபோலவே, உண்மை கிறிஸ்தவர்கள் ‘தங்கள் பொருளால் யெகோவாவைக் கனம்பண்ணுவதால்’ அதிகத்தைச் செய்யலாம். (நீதிமொழிகள் 3:9, 10) மனமுவந்து கொடுக்கும்படி தங்கள் இருதயத்தால் தூண்டப்பட்ட அனைவருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழு ஆழ்ந்த நன்றியை தெரிவிக்கிறது. விரிவடைந்துகொண்டே வரும் ராஜ்ய வேலையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக யெகோவாவின் ஆவி தொடர்ந்து அவருடைய மக்களின் இருதயங்களை உந்துவிக்கும் என்று நாம் நம்பிக்கையாய் இருக்கலாம்.

உலகளாவிய விதத்தில் வேலை விரிவடைந்து வருகையில், நம்முடைய சக்தியை, நம்முடைய நேரத்தை, நம்முடைய பொருள்வளங்களை உற்சாகமாகவும் மனமுவந்தும் கொடுப்பதற்கான வாய்ப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போமாக. கொடுப்பதால் வரும் உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்போமாக.

[பக்கம் 29-ன் பெட்டி]

“விவேகமாக பயன்படுத்தவும்!”

“எனக்கு பத்து வயது. பேப்பரையோ புத்தகங்கள் தயாரிக்க தேவையான வேறு எதையாவதோ வாங்க இந்த பணத்தை நான் அனுப்புகிறேன்.”​—⁠ஸின்டி.

“இன்னும் நிறைய புத்தகங்களை எங்களுக்காக தயாரிக்கும்படி இந்த பணத்தை அனுப்ப விரும்புகிறேன். அப்பாவுக்கு உதவிசெய்து இந்த பணத்தை சேர்த்தேன். ஆகையால் விவேகமாக பயன்படுத்தவும்!”​—⁠பேம், ஏழு வயது.

“புயல் தாக்கியது கேட்டு வருத்தப்பட்டேன். நீங்கள் பத்திரமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய உண்டியலில் இருப்பதெல்லாம் இந்த பணமே [2 அமெரிக்க டாலர்].​—⁠அலிஸன், நான்கு வயது.

“என் பெயர் ரூடி. எனக்கு 11 வயது. என் தம்பி ரால்ஃப்க்கு ஆறு வயது. என் தங்கை ஜூடித்துக்கு இரண்டரை வயது. [போர் நடக்கும் பகுதிகளில்] உள்ள நம் சகோதரருக்கு உதவும்படி மூன்று மாதங்களாக எங்களுக்கு கிடைத்த பணத்திலிருந்து சேமித்து வைத்தோம். எங்களால் சேமிக்க முடிந்த 20 டாலரை இப்போது அனுப்பி வைக்கிறோம்.”

“[புயலால் பாதிக்கப்பட்ட] சகோதரர்களுக்காக வருந்துகிறேன். அப்பாவுடன் சேர்ந்து வேலைசெய்து 17 டாலர் சம்பாதித்தேன். இன்னதுக்குதான் செலவிட வேண்டுமென்று நினைத்து நான் இதை அனுப்பவில்லை. நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.”​—⁠மக்ளீன், எட்டு வயது.

[பக்கம் 31-ன் பெட்டி]

இதோ! சிலர் கொடுக்க விரும்பும் வழிகள்

உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்

நன்கொடை பெட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகையை போடுவதற்காக அநேகர் திட்டமிட்டு அதற்காக பணம் ஒதுக்குகின்றனர். அதை “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்​—மத்தேயு 24:14” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுகின்றனர். இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் சொஸைட்டிக்கு அனுப்பி வைக்கின்றன.

மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடை பணத்தை நேரடியாக The Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Maharashtra என்ற விலாசத்திற்கு அல்லது உங்கள் நாட்டிலுள்ள சொஸைட்டியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கலாம். நகைகளையோ அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களையோ நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்ட அன்பளிப்பு என்பதைக் குறிப்பிட்டு சுருக்கமான கடிதத்தோடு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

திட்டமிட்ட நன்கொடை

நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற முறைகளும் இருக்கின்றன. அவை:

இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.

வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் உவாட்ச் டவர் சொஸைட்டி டிரஸ்டில் வைக்கலாம், அல்லது மரணத்திற்கு பிறகு அதற்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதிவைக்கலாம்.

பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.

நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரம் எழுதுவதற்குமுன் அவர் சங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.

உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதிவைக்கலாம் அல்லது டிரஸ்டின்மூலம் சங்கத்தை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம். சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிட்டு ஒரு உயில் எழுதும்போது, இந்திய வாரிசுரிமை சட்டம், 1925-⁠ன் பிரிவு 118 சொல்வதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். அது சொல்வதாவது: “ஒருவருக்கு அவரது உடன்பிறந்தாரின் மகனோ மகளோ அல்லது நெருங்கின உறவினர் யாராவது இருந்தால், அவர் தன்னுடைய எந்த சொத்தையும் மத அல்லது அறநிலைய உபயோகத்துக்காக கொடுக்கவோ உயில் எழுதி ­வைக்கவோ உரிமை கிடையாது; தன்னுடைய மரணத்துக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த உயிலை எழுதியிருந்தால், உயிரோடிருப்பவர்களின் உயில்களை காப்பில் வைக்க அதிகாரம் பெற்ற இடங்களின் பாதுகாப்பில் ஆறு மாதங்களுக்குள் அதை வைத்துவிட்டால் மட்டுமே அந்த உயில் செல்லுபடியாகும்.”