Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள்?

நீங்கள் வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள்?

நீங்கள் வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள்?

வெற்றி என்பது “ஆஸ்தி, அங்கீகாரம், அந்தஸ்து ஆகியவற்றை பெறுவது” என ஒரு அகராதி விளக்குகிறது. அது முழு விளக்கம்தானா? ஆஸ்தி, அங்கீகாரம், அல்லது அந்தஸ்து​—⁠இவற்றை அடைந்துவிட்டால் ஒருவருக்கு வெற்றி கிடைத்துவிட்டதாக அர்த்தமாகுமா? பதில் சொல்லுமுன், இதை சிந்தித்துப் பாருங்கள்: இயேசு கிறிஸ்து தம் வாழ்நாள் காலத்தில் எவ்வித பொருள் செல்வத்தையும் சேர்க்கவில்லை. அநேகருடைய அங்கீகாரத்தையும் பெறவில்லை; அக்காலத்தின் வாழ்க்கை பாணியை வகுத்தவர்கள் அவரை உயர்வாகக் கருதவுமில்லை. இருந்தபோதிலும், அவர் வெற்றிகரமான ஒரு மனிதராக இருந்தார். ஏன்?

பூமியிலிருந்தபோது இயேசு ‘தேவனிடத்தில் ஐசுவரியவானாய்’ இருந்தார். (லூக்கா 12:21) உயிர்த்தெழுந்தபின் கடவுள் அவரை “மகிமையினாலும் கனத்தினாலும்” முடிசூட்டுவதன்மூலம் பலனளித்தார். யெகோவா தம்முடைய மகனை ‘எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.’ (எபிரெயர் 2:9; பிலிப்பியர் 2:9, 11) இயேசுவின் வாழ்க்கைப் போக்கு யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தியது. (நீதிமொழிகள் 27:11) அவர் எந்த நோக்கத்திற்கு பூமிக்கு வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறியதால் அவரது பூமிக்குரிய வாழ்க்கை வெற்றிகரமானது. இயேசு, கடவுளுடைய சித்தத்தைச் செய்து கடவுளுடைய பெயருக்கு கனத்தைக் கொண்டுவருவதே அந்த நோக்கம். கைமாறாக, எந்தவொரு அறிஞனோ அரசியல்வாதியோ விளையாட்டு வீரனோ ஒருக்காலும் அனுபவிக்க முடியாத ஆஸ்தியையும் அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் கடவுள் இயேசுவுக்கு அளித்து கனப்படுத்தினார். இதுவரை பூமியில் வாழ்ந்த எவரிலும், மாபெரும் வெற்றி பெற்றவர் இயேசுவே.

இயேசு, தேவனிடத்தில் ஐசுவரியவானாக இருந்ததுபோல, இளைஞர் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் இப்போது செழுமையான ஆசீர்வாதங்களையும் வரப்போகும் காரிய ஒழுங்குமுறையில் எண்ணிப்பார்க்க முடியாத பலன்களையும் அனுபவிப்பார்கள் என்பதை பெற்றோர் அறிந்திருக்கின்றனர். இயேசு செய்த வேலையைச் செய்வதைவிட வேறு எந்த வகையிலும் ஓர் இளைஞன் இயேசுவின் அடிச்சுவடுகளை சிறந்த முறையில் பின்பற்ற முடியாது. முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதுதான் அந்த வேலை. சூழ்நிலை அனுமதிக்குமளவுக்கு அதில் ஈடுபடுவதே சிறந்தது.

இருந்தாலும், சில சமுதாயங்களில், இளைஞர் முழுநேர ஊழியம் செய்யும் பழக்கமே இல்லை. ஓர் இளைஞன் பள்ளி படிப்பை முடித்ததும், முழுநேர வேலை தேடி, திருமணம் செய்து, வழக்கம்போல் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சில சமயங்களில், அப்படிப்பட்ட பின்னணிகளை உடைய இளைஞர் முழுநேர ஊழியத்தில் அடியெடுத்து வைக்க தயங்குகின்றனர். (நீதிமொழிகள் 3:27) ஏன்? அழுத்தத்தின் காரணமாக, சமுதாயத்தில் நிலவும் வழக்கத்துக்கு கட்டுப்பட்டுவிடுகின்றனர். இதுதான் ராபர்ட்டுக்கும் சம்பவித்தது. a

சமுதாயமும் மனசாட்சியும் மோதும்போது

ராபர்ட் ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்டார். அவருடைய பருவ வயதில், அவருடைய நடத்தையும் நண்பர்களும் அவ்வளவு சரியில்லை. அவருடைய தாய்க்கு அவரைப் பற்றி கவலை. எனவே அவர்கள் யெகோவாவின் சாட்சிகளில் முழுநேர ஊழியம் செய்யும் ஒரு பயனியரை அவருக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்குப்பின் என்ன நடந்தது என்பதை ராபர்ட் சொல்ல கேளுங்கள்.

“அந்த பயனியர் சகோதரர் என்னில் அக்கறை காண்பித்தது எனக்கு உண்மையிலேயே பிடித்தது. பள்ளி படிப்பை முடித்ததும் நானும் பயனியர் ஊழியத்தையே செய்ய வேண்டும் என்று அவருடைய நல்ல முன்மாதிரி என்னை தூண்டியது. அப்போதுதான் என் அம்மாவுக்கு மீண்டும் கவலை; ஆனால் இப்போது வேறொரு காரணத்துக்காக. எங்களுடைய சமுதாயத்தில் பள்ளி படிப்பு முடிந்ததும் ஒரு பெண் பிள்ளை பயனியராகப் போனால் பிரச்சினை இல்லை. ஆனால் பையன் என்றால் முதலில் பணம் சம்பாதித்து பொருளாதார பாதுகாப்பை தேட வேண்டும்; அதற்கு பிறகு வேண்டுமென்றால் பயனியர் செய்வதைப் பற்றி யோசிக்கலாம்.

“ஒரு தொழிலை கற்று என் சொந்த பிஸினஸை தொடங்கினேன். சீக்கிரத்தில் என் தொழிலில் மூழ்கிவிட்டேன். கூட்டங்களுக்குச் செல்வதையும் பிரசங்க வேலையையும் ஈடுபாடின்றி கடமைக்கென்று செய்துவந்தேன். மனசாட்சி என்னை குத்த ஆரம்பித்தது. என்னால் யெகோவாவை இன்னும் முழுமையான விதத்தில் சேவிக்க முடியும் என்று தெரிந்தது. என்றாலும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை பொருட்படுத்தாமல் அந்த வட்டத்திலிருந்து வெளியே வருவது பெரும் போராட்டமாகவே இருந்தது. அப்படி செய்தது எவ்வளவு நல்லதாகிவிட்டது! இப்போது எனக்கு திருமணமாகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக நானும் என் மனைவியும் பயனியர்களாக இருக்கிறோம். சமீபத்தில், சபையில் என்னை ஓர் உதவி ஊழியராக நியமித்திருக்கிறார்கள். இப்போது என்னால் இயன்றவரை முழுமையாக, என் முழு இருதயத்துடன் யெகோவாவை சேவிக்கும் உண்மையான திருப்தியை அனுபவிக்கிறேன் என்று நிஜமாக சொல்ல முடியும்.”

கூடுமானவரை பள்ளியில் இருக்கும்போதே ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளும்படி அல்லது சில பயனுள்ள தகுதிகளைப் பெறும்படி இந்த பத்திரிகை மீண்டும்மீண்டும் இளைஞரை உற்சாகப்படுத்தியிருக்கிறது. என்ன நோக்கத்திற்காக? செல்வந்தராவதற்காகவா? இல்லை. முக்கியமாக, அவர்கள் வளர்ந்ததும், தங்கள் சொந்த காலில் நின்று முடிந்தவரை யெகோவாவை முழுமையாக சேவிப்பதற்கு, அதுவும் குறிப்பாக முழுநேர ஊழியம் செய்வதற்காகவே அவ்வாறு உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், இளம் ஆண்களும் பெண்களும் ஒரு உலகப்பிரகாரமான வேலையைத் தேடும் படலத்திலேயே மூழ்கிவிட்டதால், ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியிருக்கின்றனர். சிலர் முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. ஏன் சிந்திப்பதில்லை?

ராபர்ட்டின் குறிப்புகளிலிருந்து ஓரளவு விஷயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தொழிலைக் கற்றதும் சொந்த தொழிலை ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? விரைவில், அவர் ஒரு டிரெட்மில்லில், அதாவது, நகர்ந்து செல்லாத மிதி இயந்திரத்தில் ஓடுவதுபோல சலிப்பூட்டும் வாழ்க்கைமுறையில் சிக்கிக்கொண்டார். பொருளாதார பாதுகாப்பை பெற வேண்டும் என்பதே அவருடைய இலக்கு. கிறிஸ்தவ சபைக்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி, எவராவது அந்த இலக்கை எப்போதாவது அடைந்திருக்கிறார்களா? கிறிஸ்தவர்கள் பொருள் சம்பந்தமாக பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்ளவேண்டும்; தங்கள் பொருள் சம்பந்தமான கடமைகளை கவனமாக நிறைவேற்ற வேண்டும்; இந்த நிலையற்ற காலத்தில் பொருள் சம்பந்தமாக பாதுகாப்பான நிலையை எவருமே அடைவதில்லை. அதனால்தான் மத்தேயு 6:33-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வாக்குறுதி கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவோ ஆறுதல் அளிக்கிறது.

சமுதாயம் போகிற போக்கிலேயே தானும் போகாமல் தன் இருதயத்தின் விருப்பங்களைப் பின்பற்ற தீர்மானித்ததற்காக ராபர்ட் மகிழ்ச்சியாக இருக்கிறார். இன்று அவர் முழுநேர ஊழியத்தை தன் வாழ்க்கை முறையாக அனுபவித்து மகிழ்கிறார். ஆம், முழுநேர ஊழியம் கனம்பொருந்திய வாழ்க்கை போக்கு. ராபர்ட்டின் சொந்த வார்த்தைகளின்படி, ‘தன்னால் இயன்றவரை முழுமையாக’ யெகோவாவை சேவிப்பதால் அவர் மனசமாதானத்துடன் இருக்கிறார்.

உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்துங்கள்

யெகோவாவின் சாட்சிகளுக்குள் திறமைமிக்க பலர் இருக்கின்றனர். சிலர் சிறந்த அறிவுத்திறம் படைத்தவர்கள்; சிலர் உடலை வளைத்து வேலை செய்வதில் திறம்பெற்றவர்கள். இந்த திறமைகள் அனைத்தும் யெகோவாவிடமிருந்து வந்தவை; “எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” கொடுக்கிறவர் அவரே. (அப்போஸ்தலர் 17:25) ஜீவன் இல்லை என்றால், இந்த திறமைகளால் பயன் ஏதுமில்லை.

அப்படியானால், நம் ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையை யெகோவாவின் சேவையில் பயன்படுத்துவது சரியானதே. திறம்பட்ட ஒரு இளைஞன் அதைத்தான் செய்ய தீர்மானித்தார். அவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பிரபலமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்; சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சு பட்டணத்தில் தன் இளமை பருவத்தை செலவிட்டவர். பிறப்பில் யூதனாக இருந்தாலும், தன் தந்தையிடமிருந்து ரோம குடியுரிமை பெற்றார். இதன் காரணமாக அநேக உரிமைகளும் சலுகைகளும் அவருக்குக் கிடைத்தன. அவர் வளர்ந்தபோது அக்காலத்தின் “பேராசிரியர்களில்” பிரபலமான கமாலியேல் என்பவரிடம் வேதப்பிரமாணத்தை கற்றார். ‘ஆஸ்தி, அங்கீகாரம், அந்தஸ்து’ ஆகிய அனைத்தும் விரைவில் அவரை வந்து சேரும் எனத் தோன்றியது.​—அப்போஸ்தலர் 21:39; 22:3, 27, 28.

இந்த இளம் மனிதர் யார்? அவருடைய பெயர் சவுல். ஆனால் சவுல் ஒரு கிறிஸ்தவனாகி, காலப்போக்கில் அப்போஸ்தலன் பவுல் ஆனார். அவர் தான் அடைய நினைத்திருந்த லட்சியங்களையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, தன் முழு வாழ்க்கையையும் ஒரு கிறிஸ்தவனாக யெகோவாவின் சேவைக்கென்று அர்ப்பணித்தார். புகழ்பெற்ற வழக்கறிஞராக அல்ல, ஆனால் நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பவராகவே பவுல் அறியப்பட்டார். சுமார் 30 வருடங்களை மிஷனரியாக செலவிட்ட பிறகு, பிலிப்பியிலுள்ள நண்பர்களுக்கு பவுல் கடிதம் எழுதினார். கிறிஸ்தவனாவதற்குமுன் அவருடைய கடந்தகால சாதனைகள் சிலவற்றை நினைவுகூர்ந்து இவ்வாறு கூறினார்: “நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு . . . [இயேசு கிறிஸ்துவுக்காக] எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” (பிலிப்பியர் 3:9, 11) பவுல் இவ்விதமாக தன் வாழ்க்கையை பயன்படுத்திய விதத்தைப் பற்றி கொஞ்சமும் வருந்தவில்லை.

கமாலியேலிடமிருந்து பவுலுக்கு கிடைத்த பயிற்சி என்னவாயிற்று? அது எப்போதாவது பயன்பட்டதா? ஆம், நிச்சயமாக! அந்தப் பயிற்சியினால்தான், பல சந்தர்ப்பங்களில் “நற்செய்திக்காக வாதாடி அதை சட்டப்பூர்வமாய் நிலைநாட்ட” அவர் உதவியாக இருந்தார். ஆனால் நற்செய்தியை பிரசங்கிப்பதே அவருடைய முக்கியமான வேலையாக இருந்தது. அவருடைய முந்தைய காலத்து படிப்பு ஒருபோதும் கற்றுக்கொடுக்க முடியாத ஒன்றாக இது இருந்தது.​—பிலிப்பியர் 1:7, NW; அப்போஸ்தலர் 26:24, 25.

இதேவிதமாகவே, இன்றும் சிலர் தங்கள் திறமைகளையும் தங்கள் கல்வி அறிவையும்கூட ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக பயன்படுத்தியிருக்கின்றனர். உதாரணமாக, ஏமி என்ற பெண் இரண்டு பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றவர். ஒன்று வணிகத்தில், மற்றொன்று சட்டவியலில். வழக்கறிஞர் அலுவலகம் ஒன்றில் லாபகரமான நல்ல வேலை அவருக்கு இருந்தது. இப்போதோ அவர் உவாட்ச்டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகங்கள் ஒன்றில் ஊதியம் பெறாத வாலண்டியராக ஊழியம் செய்கிறார். இப்போது ஏமி தன் வாழ்க்கையை இப்படி விவரிக்கிறார்: “என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தெரிவை நான் செய்திருப்பதாக எண்ணுகிறேன். . . . பல்கலைக்கழகத்தில் என்னுடன் படித்த சகாக்களைப் போல இருக்க எனக்கு விருப்பமில்லை. என்னுடைய தெரிவைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். எனக்குத் தேவையான, எனக்கு விருப்பமான எல்லாமே எனக்கு கிடைத்திருக்கிறது. திருப்தியளிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை; மனநிறைவை தரும் நல்ல வேலை!”

மனசமாதானத்தையும், திருப்தியையும் யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் அளிக்கும் ஒரு வாழ்க்கை முறையை ஏமி தேர்ந்தெடுத்தாள். கிறிஸ்தவ பெற்றோர் இதைத்தவிர வேறு எதை தங்கள் பிள்ளைகளுக்காக தேடுவார்கள்!

கிறிஸ்தவ ஊழியத்தில் வெற்றி

கிறிஸ்தவ ஊழியத்திலும் வெற்றியைப் பற்றி சரியான நோக்குநிலையை வைத்திருப்பது அவசியம். பைபிள் பிரசுரங்களை அளித்து அல்லது உற்சாகமளிக்கும் பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருந்து வெளி ஊழியத்தை நன்கு அனுபவிக்கும்போது வெற்றிகரமாக உணருவது கடினமொன்றுமில்லை. ஆனால் அத்தி பூத்தாற்போல் அபூர்வமாகவே எவராவது நாம் சொல்லும் செய்தியை கேட்கையில், நேரத்தை வீணாக்குகிறோம் என்று முடிவு செய்ய தோன்றும். வெற்றிக்கு ஒரு விளக்கம், ‘அங்கீகாரம் பெறுவது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் யாருடைய அங்கீகாரத்தை பெற விரும்புகிறோம்? நிச்சயமாகவே, யெகோவாவின் அங்கீகாரத்தையே. நாம் சொல்லும் செய்தியை மக்கள் கேட்டாலும் சரி கேட்காவிட்டாலும் சரி, இதை நாம் பெறலாம். இதன் சம்பந்தமாக, இயேசு தம்முடைய சீஷர்களுக்கு நல்ல ஒரு பாடத்தைக் கற்பித்தார்.

இயேசு ‘தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே’ 70 ராஜ்ய பிரசங்கிப்பாளர்களை அனுப்பினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். (லூக்கா 10:1) இயேசு அவர்களுடன் செல்லவில்லை. அவர்கள் பட்டணங்களிலும் கிராமங்களிலும் தாங்களாகவே பிரசங்கிக்க வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவம். எனவே அவர்களை அனுப்புமுன் இயேசு அவர்களுக்கு விவரமான அறிவுரைகளைக் கொடுத்தார். “சமாதான பாத்திரன்” ஒருவனை அவர்கள் சந்தித்தால் ராஜ்யத்தைப் பற்றி முழுமையான சாட்சி கொடுக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளாவிட்டாலோ, அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தங்கள் வேலையைத் தொடர வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க மறுப்பவர்கள் உண்மையில் யெகோவாவையே ஏற்க மறுக்கிறார்கள் என்பதாக இயேசு விவரித்தார்.​—லூக்கா 10:4-7, 16.

அந்த 70 பேரும் தங்கள் பிரசங்க வேலையை செய்து முடித்ததும், இயேசுவிடம் “சந்தோஷத்தோடே திரும்பி வந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.” (லூக்கா 10:17) வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டிகளை விரட்டுவது அந்த அபூரண மனிதர்களுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கும்! ஆனாலும் உணர்ச்சி பொங்கிய அந்த சீஷர்களை இயேசு எச்சரித்தார்: ‘ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்.’ (லூக்கா 10:20) அந்த 70 பேருக்கும் எப்போதுமே பேய்களை விரட்டும் வல்லமை இருக்காது; ஊழியத்தில் எப்போதுமே சாதகமான பலன்களும் கிடைக்காது. ஆனால் அவர்கள் உண்மையாக இருந்தால், எப்போதுமே யெகோவாவின் அங்கீகாரம் கிடைக்கும்.

முழுநேர ஊழியர்களை மதித்துணருகிறீர்களா?

ஓர் இளைஞன் ஒருமுறை கிறிஸ்தவ மூப்பர் ஒருவரிடம் இவ்வாறு சொன்னான்: “நான் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்ததும் ஒரு வேலையைத் தேடுவேன். வேலை கிடைக்கவில்லையென்றால் ஏதாவது ஒருவகையான முழுநேர ஊழியம் செய்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.” ஆனால் பயனியர் ஊழியத்தைச் செய்யும் அநேகருக்கு அந்தவிதமான நோக்குநிலை கிடையாது. பயனியர் செய்வதற்காக சிலர் லாபகரமான நல்ல வேலைகளை விட்டுவிட்டிருக்கிறார்கள். சிலர் சிறந்த கல்வி வாய்ப்புகளை ஏற்க மறுத்திருக்கிறார்கள். அப்போஸ்தலன் பவுலைப்போல, தியாகங்களைச் செய்திருக்கின்றனர்; பவுல், ராபர்ட், ஏமி ஆகியோரைப் போலவே, தங்கள் தெரிவுகளைக் குறித்து அவர்கள் வருந்தவுமில்லை. நம்மால் கொடுக்க முடிந்த அனைத்தையும் பெற தகுதிபெற்றவரான யெகோவாவின் துதிக்காக தங்கள் திறமைகளைப் பயன்படுத்தும் சிலாக்கியத்தை உயர்வாய் மதிக்கிறார்கள்.

பல காரணங்களுக்காக, உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் பயனியர் செய்யத்தக்க சூழ்நிலையில் இல்லை. நிறைவேற்ற வேண்டிய வேதப்பூர்வ கடமைகள் ஒருவேளை இருக்கலாம். இருந்தாலும், அவர்கள் முழு ‘இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும்’ கடவுளைச் சேவித்தால், யெகோவா அதில் சந்தோஷப்படுகிறார். (மத்தேயு 22:37) தங்களால் பயனியர் செய்ய முடியவில்லை என்றாலும், பயனியர் சேவையைத் தெரிந்துகொண்டவர்கள் நல்ல வேலையைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.

அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் தரிக்கவேண்டாம்.’ (ரோமர் 12:2) இந்த அறிவுரைக்கு இசைவாக, சமுதாய அல்லது இந்த உலக தராதரங்கள் எதுவும் நம் சிந்தனைகளை அவற்றிற்கு இசைவாக வளைக்க அனுமதிக்கக் கூடாது. நீங்கள் பயனியராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, யெகோவாவின் சேவையை உங்கள் வாழ்க்கையின் மையமாக வையுங்கள். யெகோவாவின் அங்கீகாரம் இருக்கும் வரையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

[பக்கம் 19-ன் படம்]

வாழ்க்கையில் இதுபோன்ற டிரெட்மில்லில் சிக்கிக்கொள்ளாதீர்