Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘விட்டுக்கொடுக்காத என் விசுவாசம்!’

‘விட்டுக்கொடுக்காத என் விசுவாசம்!’

வாழ்க்கை சரிதை

‘விட்டுக்கொடுக்காத என் விசுவாசம்!’

ஹெர்பர்ட் முல்லர் சொன்னபடி

ஹிட்லரின் படை நெதர்லாந்தை ஆக்கிரமித்த சில மாதங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடை செய்யப்பட்டது. நாசிக்கள் தீவிரமாக தேடிய ஆட்களின் பட்டியலில் என் பெயரும் இருந்தது; மிருகத்தைப் போல என்னை வேட்டையாடினர்.

அவர்களிடம் அகப்பட்டாலும் பரவாயில்லை என ஒருமுறை என் மனைவியிடம் சொல்லுமளவுக்கு தலைமறைவாக வாழும் வாழ்க்கையில் கசப்புற்றேன். அப்போது, “விரோதிகள் தாக்கினாலும் எதிலும் விட்டுக்கொடுக்காத என் விசுவாசமே” என்ற ஒரு பாட்டின் வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தன. a அந்தப் பாட்டை மனதில் அசைபோடுகையில் எனக்குள் புதுத் தெம்பு பிறந்தது. ஜெர்மனியில் இருந்த என் பெற்றோரின் நினைவும், அந்த நாளில் எனக்குப் பிரியாவிடை தருகையில் என் நண்பர்கள் இந்தப் பாடலை பாடியதும் என் மனத்திரையில் ஓடியது. அந்த பசுமை நிறைந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ளட்டுமா?

என் பெற்றோரின் முன்மாதிரி

ஜெர்மனியின் கோப்பிட்ஸ் நகரில் 1913-⁠ல் பிறந்தேன்; அப்போது என் பெற்றோர் எவாஞ்சலிக்கல் சர்ச்சின் அங்கத்தினர்கள். b ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1920-⁠ல் என் அப்பா அந்தச் சர்ச்சிலிருந்து விலகினார். ஏப்ரல் 6-⁠ல் அவர், கிர்ச்செனௌஸ்டிரிட்ஸ்பெஷ்கீனிகங்க் (சர்ச்சிலிருந்து விலகியதைத் தெரிவிக்கும் சான்றிதழை) கேட்டார். அந்த டவுன் சிவில் ரெஜிஸ்ட்ரேஷன் அதிகாரி அதை கொடுத்தார். எனினும், ஒரு வாரத்திற்குப் பின்பு, மீண்டும் அப்பா அந்த அலுவலகத்திற்குச் சென்று அதில் என் தங்கையின் பெயர் விடுபட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். சர்ச்சிலிருந்து விலகியவர்களின் பெயர் பட்டியலில் மார்த்தா மார்கரெத்தா முல்லரின் பெயரையும் சேர்த்து இரண்டாவது சான்றிதழை அந்த அதிகாரி அப்பாவிடம் கொடுத்தார். அப்போது என் தங்கை மார்கரெத்தாவுக்கு ஒன்றரை வயது. யெகோவாவைச் சேவிக்கும் விஷயத்தில் என் அப்பா அரைகுறை மனதுள்ளவரல்ல!

அதே ஆண்டில், பைபிள் மாணாக்கர்களால், அதாவது யெகோவாவின் சாட்சிகளால் என் பெற்றோர் முழுக்காட்டப்பட்டனர். எங்களை அப்பா கண்டிப்புடன் வளர்த்தார்; ஆனால் யெகோவாவிடம் அவருக்கிருந்த உண்மைத் தன்மையால் அவருக்குக் கீழ்ப்படிவது எங்களுக்கு கஷ்டமாகவே இருக்கவில்லை. அந்த உண்மைத் தன்மையே வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்யவும் என் பெற்றோரை தூண்டியது. உதாரணமாக, ஒரு காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட எங்களை அனுமதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் 1925-⁠ல் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று உலாவப் போகிறோம் என எங்கள் பெற்றோர் சொன்னார்கள். கையோடு சில நொறுக்குத் தீனிகளை எடுத்துச் சென்று சந்தோஷமாக நேரத்தைக் கழித்தோம். நாள் முழுக்க வீட்டிலேயே அடைந்து கிடப்பதிலிருந்து எத்தகைய மாற்றம் அது! ஏனெனில் என் அப்பா சமீபத்தில் ஒரு மாநாட்டில் சில குறிப்புகளை கற்றிருந்தார்; அதனால் ஞாயிற்றுக்கிழமைகளைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக்கொண்டதாக சொன்னார். எல்லா சமயத்திலும் எந்த மாற்றம் செய்வதற்கும் அவர் தயாராக இருந்தார்.

என் பெற்றோர் நல்ல உடல் ஆரோக்கியமுள்ளவர்கள் அல்ல; இருந்தாலும் பிரசங்க ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். உதாரணமாக, எக்லீஸியாஸ்டிக் இன்டிக்டட் [மதகுருத்துவம் குற்றஞ்சாட்டப்பட்டது] என்ற துண்டுப்பிரதியை விநியோகிப்பதற்கு சபையாரோடு ட்ரெஸ்டனிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ரேகன்ஸ்பர்குக்கு ஒரு சாயங்காலம் ரயிலில் சென்றோம். மறுநாள் அந்தப் பட்டணம் முழுவதிலும் அந்தத் துண்டுப்பிரதியை விநியோகித்தோம். பின்னர் ரயிலில் வீடு திரும்பினோம். இதற்குள் 24 மணிநேரம் கடந்துவிட்டது.

வீட்டைவிட்டு பயணம்

எங்கள் சபையிலிருந்த ஜுகன்ட்க்ரூப்-⁠பில் (இளைஞர் தொகுதியில்) நானும் ஒருவன்; அந்தத் தொகுதியில் உறுப்பினனாயிருந்தது என் ஆன்மீக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. வாரா வாரம் 14 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், சபையின் சில முதிர்ந்த சகோதரர்களுடன் கூடிவந்தனர். நாங்கள் ஒன்றாக சேர்ந்து விளையாடினோம், இசைக் கருவிகளை இசைத்தோம், பைபிள் படித்தோம், படைப்பையும் அறிவியலையும் குறித்து பேசிமகிழ்ந்தோம். எனினும், 1932-⁠ல் எனது 19 வயதுவரை இந்தக் கூட்டுறவை அனுபவித்துக் கழித்தேன்.

அந்த ஆண்டு ஏப்ரலில், மாக்டிபர்கிலிருந்த உவாட்ச் டவர் சொஸைட்டியிலிருந்து என் அப்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது. கார் ஓட்டத் தெரிந்த, பயனியர் ஊழியத்தில் ஆர்வமுள்ள ஒருவர் தேவை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் பயனியராவதே என் பெற்றோரின் விருப்பம், ஆனால் அது முடியாத காரியம் என்று எனக்குத் தெரியும். ஏழ்மையில் வாடும் என் பெற்றோருக்கு உதவ 14 வயதிலேயே சைக்கிள்கள், தையல் மெஷின்கள், டைப்ரைட்டர்கள், இன்னும் சில அலுவலக இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் வேலையை ஆரம்பித்திருந்தேன். இந்நிலையில் என் குடும்பத்தை நிராதரவாக விட்டுவிட்டுப் போக எப்படி மனம் வரும்? என் ஆதரவு அவர்களுக்குத் தேவைப்பட்டதே. அதுமட்டுமல்லாமல் அப்போது நான் இன்னும் முழுக்காட்டப்படவுமில்லை. முழுக்காட்டுதலின் அர்த்தத்தை சரிவர புரிந்துகொண்டிருக்கிறேனா என்பதை அறிய அப்பா என்னை அருகில் அமர்த்தி சில கேள்விகளைக் கேட்டார். முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு போதிய முன்னேற்றம் செய்திருப்பதை என் பதில்கள் மூலம் அறிந்தார். அவருக்கு நம்பிக்கை பிறந்தது; “இந்த வேலையை நீ மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என என்னிடம் சொன்னார். நானும் அவர் ஆசையை பூர்த்தி செய்தேன்.

ஒரு வாரத்திற்குப் பின், மாக்டிபர்குக்கு வரும்படி அழைப்பு வந்தது. இளைஞர் தொகுதியிலிருந்த என் நண்பர்களிடம் இதைச் சொன்னேன்; அவர்கள் என்னை உற்சாகப்படுத்தும் விதத்தில் ஒரு பாட்டைப் பாடி வழியனுப்ப ஆசைப்பட்டனர். ஒரு பாட்டை தேர்ந்தெடுக்க சொன்னபோது நான் தேர்ந்தெடுத்த பாட்டை கண்டு ஆச்சரியமடைந்தனர். அதில் வெறும் உற்சாகத்தைத் தரும் வார்த்தைகள் இல்லாமல் சிந்தனையைத் தூண்டும் வார்த்தைகள் இருந்ததே அவர்கள் ஆச்சரியத்திற்குக் காரணம். இருப்பினும், சிலர் தங்கள் வயலின்களையும், மான்டொலின்களையும், கிட்டார்களையும் எடுத்து, ‘விரோதிகள் தாக்கினாலும் எதிலும் விட்டுக்கொடுக்காத என் விசுவாசமே​—⁠இவ்வுலகமே சாய்ந்தாலும் சாய்வதில்லை என் விசுவாசமே’ என இசையுடன் பாடினர். வரவிருந்த ஆண்டுகளில் அந்த வார்த்தைகள் என்னை எந்தளவுக்கு பலப்படுத்தவிருந்தன என்பதை அப்போது நான் முழுமையாய் உணரவில்லை.

கொந்தளிப்பான தொடக்கம்

மாக்டிபர்கிலிருந்த சகோதரர்கள் எனக்கு நன்கு கார் ஓட்ட தெரியுமா என்பதை சோதித்தறிந்த பின்பு, நானும் வேறு நான்கு பயனியர்களும் உபயோகிக்க ஒரு காரைக் கொடுத்தனர். பெல்ஜியத்திற்கு அருகிலிருக்கும் ஷ்நைஃபல் என்ற இடத்தில் நாங்கள் ஊழியம் செய்கையில் சீக்கிரத்திலேயே அந்தக் கார் எங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிந்துகொண்டோம். நாங்கள் அங்கு பிரசங்கிப்பது கத்தோலிக்கர்களுக்கு பிடிக்கவில்லை. பாதிரிகளால் தூண்டப்பட்ட அந்தக் கிராமத்தார் அடிக்கடி எங்களைத் துரத்த தயாராக இருந்தனர். அவர்கள் எங்களை மண்வெட்டிகளாலும் வைக்கோல்வாரிகளாலும் தாக்கவிருந்த பல சந்தர்ப்பங்களில் அவர்களிடமிருந்து தப்ப எங்களுக்கு உதவியது இந்தக் கார்தான்.

1933-⁠ல் நினைவு ஆசரிப்புக்குப் பின், ரீஜனல் கண்காணியாகிய பால் க்ரோஸ்மென், ஜெர்மனியில் ஊழியம் தடை செய்யப்பட்டிருப்பதை எங்களிடம் தெரிவித்தார். அதன் பின் சீக்கிரத்தில் காருடன் மாக்டிபர்குக்கு வரும்படியும், அங்கிருந்த புத்தகங்களை மாக்டிபர்கிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திலிருந்த சாக்ஸனி மாகாணத்திற்கு எடுத்துச் செல்லும்படியும் கிளை அலுவலகத்திலிருந்து செய்தி கிடைத்தது. எனினும் நான் மாக்டிபர்க்கை அடையும் முன்பே கெஸ்டப்போ (நாசி இரகசிய போலீஸார்), சொஸைட்டியின் அலுவலகத்தை மூடி சீல்வைத்துவிட்டனர். எனவே நான் காரை லீப்ஸிக்கிலிருந்த ஒரு சகோதரனிடம் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்; ஆனாலும் வீட்டில் அதிக நாட்கள் தங்கவில்லை.

நெதர்லாந்தில் பயனியர் ஊழியத்தைத் தொடங்க சொல்லி ஸ்விட்ஸர்லாந்தின் கிளை அலுவலகத்திலிருந்து செய்தி வந்தது. ஓரிரண்டு வாரத்திற்குள் செல்ல தீர்மானித்தேன். ஆனால், என் அப்பாவோ உடனடியாக போக சொன்னார். அவருடைய அறிவுரைப்படி சில மணிநேரத்தில் வீட்டை விட்டு புறப்பட்டேன். மறுநாள், தப்பி ஓடிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் என்னைக் கைதுசெய்ய என் அப்பாவின் வீட்டைத் தேடி போலீஸார் வந்தனர். என்னை கைதுசெய்ய அவர்களால் முடியவில்லை.

நெதர்லாந்தில் தொடங்குவது

1933, ஆகஸ்ட் 15-⁠ல், ஹேம்ஸ்டேடில் இருந்த ஒரு பயனியரின் வீட்டை அடைந்தேன். அந்த டவுன் ஆம்ஸ்டர்டாமுக்கு 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. டச்சு மொழியில் ஒரு வார்த்தைகூட பேசத் தெரியாமல் மறுநாள் ஊழியத்திற்குச் சென்றேன். அச்சிடப்பட்ட பிரசங்க அட்டையை வைத்துக்கொண்டு ஊழியத்தைத் தொடங்கினேன். ரெக்கன்ஸிலியேஷன் என்ற புத்தகத்தை கத்தோலிக்க பெண் ஒருத்தி ஏற்றுக்கொண்டபோது கரைகாணா சந்தோஷமடைந்தேன்! அந்த ஒரே நாளில் 27 சிறிய புத்தகங்களையும் அளித்தேன். மறுபடியும் தடையின்றி பிரசங்கிக்க முடிந்ததில் கிடைத்த பரம திருப்தி முதல் நாள் ஊழியத்தை முடிக்கையில் எனக்கிருந்தது.

அக்காலத்தில் பயனியர்களுக்கு, புத்தகங்களை அளிக்கையில் கிடைத்த பணத்தைத் தவிர வேறு எந்த விதத்திலும் பண உதவி கிடைக்கவில்லை. அந்தப் பணமே உணவுக்கும் மற்ற அவசரத் தேவைகளுக்கும் கைகொடுத்து உதவியது. மாத முடிவில் ஏதேனும் பணம் மீதமிருந்தால், அதை சொந்த தேவைகளுக்காக பயனியர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். பொருளாதார விஷயத்தில் நாங்கள் அந்தளவுக்கு வசதியாய் இல்லாவிட்டாலும் யெகோவா எங்களுக்கு பெருமளவு உதவியதால், 1934-⁠ல் ஸ்விட்ஸர்லாந்தில் நடந்த ஒரு மாநாட்டுக்கு என்னால் போக முடிந்தது.

உண்மையுள்ள துணைவி

அந்த மாநாட்டில் 18 வயது ஏரிக்கா ஃபிங்க்கியை சந்தித்தேன். என் சொந்த ஊரிலிருக்கையிலேயே எனக்கு அவளைத் தெரியும். அவள் என் தங்கை மார்கரெத்தாவின் சிநேகிதி. சத்தியத்திடம் ஏரிக்கா காட்டிய உறுதி எப்போதும் என்னை கவர்ந்தது. 1932-⁠ல் ஏரிக்கா முழுக்காட்டுதல் பெற்ற சிறிது நாளைக்குள்ளேயே, இந்த சம்பவம் நிகழ்ந்தது. “ஹேல் ஹிட்லர்!” என சொல்ல அவள் மறுத்ததை யாரோ கெஸ்டப்போ போலீஸாரிடம் சொல்லிவிட்டனர். எனவே இந்த போலீஸார் அவள் மறுத்ததற்கான காரணத்தைக் கேட்டு மிரட்டினர். அதற்கு ஏரிக்கா, போலீஸ் அதிகாரிக்கு அப்போஸ்தலர் 17:3-ஐ வாசித்துக் காட்டி, கடவுள் ஒரே ஒரு மனிதனை, இயேசு கிறிஸ்துவை மட்டுமே இரட்சகராக நியமித்திருக்கிறார் என விளக்கினாள். “உன்னைப் போலவே நம்புவோர் யார் யார் இருக்கின்றனர், சொல்?” என கேட்டு அந்த அதிகாரி வற்புறுத்தினார். யாருடைய பெயரையும் அவள் சொல்லவில்லை. சிறையில் தள்ளப்படுவாள் என ஏரிக்காவை பயமுறுத்தியபோது, பெயர்களைக் கொடுப்பதைவிட தான் சாகத் தயார் என்றாள். அவர் அவளை முறைத்துப் பார்த்து, “இங்கிருந்து போ. வீட்டுக்குப் போய்த் தொலை. ஹேல் ஹிட்லர்!” என கத்தினார்.

மாநாட்டுக்குப் பின், நெதர்லாந்துக்குத் திரும்பினேன், ஏரிக்காவோ ஸ்விட்ஸர்லாந்திலேயே தங்கிவிட்டாள். எனினும் எங்கள் நட்பு வேர்விட்டு வலுவடைவதை இருவருமே உணர்ந்தோம். தன்னுடைய சொந்த ஊரில் இரகசிய போலீஸார் தன்னை தீவிரமாய் தேடி வருவதை ஸ்விட்ஸர்லாந்தில் இருக்கையில் ஏரிக்கா கேள்விப்பட்டாள். அவள் ஸ்விட்ஸர்லாந்தில் தங்கி பயனியர் ஊழியத்தைத் தொடர தீர்மானித்தாள். சில மாதங்களுக்குப் பின், ஸ்பெய்னுக்குப் போகும்படி சொஸைட்டியிடமிருந்து அவளுக்குக் கடிதம் வந்தது. மாட்ரிட்டிலும், பில்பாவோவிலும், பின்பு சான் சபாஸ்டியனிலும் அவள் பயனியர் ஊழியத்தைத் தொடர்ந்தாள். அங்கு மதகுருமார்கள் தூண்டிவிட்டதால் துன்புறுத்துதலைச் சந்திக்க நேர்ந்தது; முடிவில் அவளும் அவளுடைய தோழியும் சிறைப்படுத்தப்பட்டனர். எனவே 1935-⁠ல் ஸ்பெய்னை விட்டு உடனடியாக வெளியேறும்படி கட்டளையிடப்பட்டனர். ஏரிக்கா நெதர்லாந்துக்கு வந்தாள்; அதே ஆண்டில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

சீக்கிரத்தில் துவங்க இருந்த போர்

இருவரும் ஹேம்ஸ்டீடில் பயனியர் ஊழியம் செய்தோம்; அதன் பின் ராட்டர்டாம் பட்டணத்திற்கு மாறிச்சென்றோம். அங்கு, 1937-⁠ல் எங்கள் மகன் உல்ஃப்காங் பிறந்தான். ஓர் ஆண்டுக்குப் பின்பு நெதர்லாந்திற்கு வடக்கேயுள்ள க்ரோனிங்கன் நகருக்கு குடிமாறினோம். அங்கு ஜெர்மன் பயனியர்களாகிய ஃபெர்டினான்டும் ஹெல்கா ஹோல்ட்டோர்ஃபும் தங்கள் மகளுடன் வசித்துவந்தனர்; அந்த வீட்டிலேயே ஒரு போர்ஷனில் தங்கிக் கொண்டோம். ஜூலை 1938-⁠ல், ஜெர்மானியர் பிரசங்கிக்க இனிமேலும் அனுமதியில்லை என்ற டச்சு அரசாங்கத்தின் அறிக்கையை சொஸைட்டி மூலம் அறிந்துகொண்டோம். ஏறக்குறைய அதே சமயத்தில், நான் மண்டலக் கண்காணியாக (வட்டாரக் கண்காணியாக) நியமிக்கப்பட்டேன். நெதர்லாந்தின் வடக்குப் பகுதியில் ஊழியம் செய்து வந்த பயனியர்களின் வீடான லிக்ட்டிரேகருக்கு (ஒளி தாங்கிசெல்வோன்) என்ற சொஸைட்டியின் படகுதான் எங்கள் குடும்பத்தாருக்கும் தஞ்சமளித்தது. பெரும்பாலும் என் குடும்பத்தாரிடமிருந்து விலகியே இருந்தேன்; ஏனெனில் ஊழியத்தை வைராக்கியத்துடன் தொடர சகோதரர்களை ஊக்குவிப்பதற்கு சைக்கிளில் சபை சபையாக செல்ல வேண்டியிருந்தது. சொன்னதை சகோதரர்களும் அப்படியே அச்சுப்பிசகாமல் செய்தனர். இதனால் சிலர் ஊழியத்தில் அதிக ஈடுபாடு காட்டினர். விம் கெட்டலேரே இதற்கு நல்ல முன்மாதிரி.

நான் விம்மை சந்திக்கையில் அவர் ஏற்கெனவே சத்தியத்தை அறிந்திருந்த வாலிபர்; அவர் கூலிவேலையாக விவசாயம் செய்து வந்ததால் வேறு எதை செய்யவும் அவருக்கு நேரமில்லாதிருந்தது. அப்போது அவரிடம், “யெகோவாவைச் சேவிக்க உங்களுக்கு நேரம் வேண்டுமானால், முதலில் வேறொரு வேலையைத் தேடுங்கள்” என அறிவுரை கூறினேன். அவரும் அவ்வாறே செய்தார். பல நாட்களுக்குப்பின் நாங்கள் மீண்டும் சந்திக்கையில் பயனியர் ஊழியம் செய்ய அவரை ஊக்குவித்தேன். “ஆனால், என் வயிற்றுப்பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டுமே” என்றார். “நீங்கள் நிச்சயம் பட்டினி கிடக்க மாட்டீர்கள், யெகோவா உங்களைக் கவனித்துக்கொள்வார்” என உறுதியளித்தேன். விம் பயனியர் ஊழியத்தில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் இரண்டாம் உலகப் போரின்போது பயணக் கண்காணியாக அவர் சேவித்தார். இன்னமும், 80 வயதுக்கு மேலும், ஆர்வமுள்ள சாட்சியாக அவர் இருக்கிறார். நிச்சயமாகவே யெகோவா அவரைக் கவனித்துக்கொள்கிறார்.

தடையுத்தரவும் வலைவீச்சும்

எங்கள் இரண்டாவது குழந்தை ரீனா பிறந்து ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின் மே 1940-⁠ல் டச்சு படையினர் சரணடைந்தனர். நாசிக்கள் நெதர்லாந்தைக் கைப்பற்றினர். ஜூலையில் சொஸைட்டியின் அலுவலகத்தையும் அச்சாலையையும் கெஸ்டப்போவினர் கைப்பற்றினர். அதன் பின் சாட்சிகள் ஒருவர் பின் ஒருவராக கைதுசெய்யப்பட்டனர். நானும் பிடிபட்டேன். நான் சாட்சி என்பதால் மட்டுமல்ல, ராணுவத்தில் சேவை செய்யும் வயதில் இருந்ததாலும் நான் ஒரு ஜெர்மானியனாக இருந்ததாலும் கெஸ்டப்போ போலீஸார் என்ன செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரிந்ததுதான். என் குடும்பத்தாரை இனி பார்க்கவே முடியாது என்ற எண்ணமே மனதை முழுமையாய் ஆக்கிரமித்திருந்தது.

பின்பு மே 1941-⁠ல் கெஸ்டப்போ போலீஸார் என்னை விடுதலை செய்தனர்; கையோடு ராணுவ சேவையில் சேரும்படி கட்டளையிட்டனர். என்னால் நம்பவே முடியவில்லை. அன்றே நான் தலைமறைவானேன்; அதே மாதத்தில் மீண்டும் வட்டார ஊழியத்தைத் தொடங்கினேன். ஆனால், கெஸ்டப்போ போலீஸார் மும்முரமாக தேடிவருவோரின் பட்டியலில் என் பெயரும் இருந்தது.

என் குடும்பத்தின் நிலை

என் மனைவியும் பிள்ளைகளும் அந்நாட்டின் கிழக்குப் பாகத்திலுள்ள ஃபோர்டன் கிராமத்திற்கு குடிமாறியிருந்தனர். எனினும், அவர்களுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே என்பதற்காக வீட்டுக்கு அடிக்கடி செல்வதை வலுக்கட்டாயமாக குறைத்துக் கொண்டேன். (மத்தேயு 10:16) பாதுகாப்புக்கு வேண்டி சகோதரர்கள் என் பெயரைச் சொல்லாமல் டியூட்ஸி யான் (ஜெர்மன் ஜான்) என்ற புனைப் பெயரை சொல்லியே என்னை அழைத்தனர். ‘அப்பாவைப்’ பற்றி பேச என் நான்கு வயது மகன் உல்ஃப்காங்கையும் அனுமதிக்கவில்லை; அதற்கு பதிலாக, “ஓமி யான்” (ஜான் மாமா) பற்றி அவன் பேசினான். இது உணர்ச்சிப்பூர்வமாய் அவனை பெரிதும் பாதித்தது.

கெஸ்டப்போ போலீஸாரின் கண்ணில் படாமல் பயண ஊழியத்தில் ஈடுபட்டு வருகையில், ஏரிக்கா பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு, பிரசங்க ஊழியத்தையும் தொடர்ந்து செய்து வந்தாள். கிராமங்களில் பிரசங்கிக்க செல்கையில், இரண்டு வயது ரீனாவை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து ஏரிக்கா அழைத்துச் செல்வாள். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோதிலும் ஏரிக்கா ஒருபோதும் குடும்பத்தைப் பட்டினியால் வாட விடவில்லை. (மத்தேயு 6:33) முன்னொரு சமயம் தையல் மெஷின் ஒன்றை கத்தோலிக்க விவசாயி ஒருவருக்கு பழுதுபார்த்துக் கொடுத்திருந்தேன்; அவர் ஏரிக்காவுக்கு உருளைக்கிழங்குகளைக் கொடுத்து உதவினார். மேலும், எனக்கும் என் மனைவிக்கும் இடையே செய்திகளை கொண்டு செல்லும் “தூதுவராக” அவர் செயல்பட்டார். ஒருமுறை அவள் மருந்துக் கடையில் ஏதோ மருந்து வாங்கிவிட்டு, (நெதர்லாந்து கரன்ஸியில்) ஒரு குல்டன் நாணயத்தை கொடுத்தாள். அவள் மறைந்து வாழ்வதையும், ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் திண்டாடுவதையும் அறிந்த அந்தக் கடைக்காரர், அவள் கேட்ட பொருட்களைக் கொடுத்ததோடு அவளுக்கு இரண்டு குல்டன்களையும் “அன்பளிப்பாக” கொடுத்தார். இவ்வாறு மற்றவர்கள் அவள்மீது காட்டிய இரக்கம், உயிரோடிருக்க அவளுக்கு உதவியது.​—எபிரெயர் 13:⁠5.

தைரியமுள்ள சகோதரரோடு ஊழியம் செய்தல்

நானோ தொடர்ந்து சபைகளைச் சந்தித்து வந்தேன். சபைகளில் பொறுப்பான ஸ்தானத்திலிருந்த சகோதரர்களை மாத்திரமே சந்திக்க முடிந்தது; எனினும் பயண ஊழியத்தைத் தொடர்ந்தேன். கெஸ்டப்போ போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்ததால், சில மணிநேரத்திற்கு மேல் என்னால் ஓர் இடத்தில் தங்க முடியவில்லை. என்னைச் சந்திப்பதற்கு பெரும்பாலான சகோதர சகோதரிகளை அனுமதிக்கவில்லை. தங்கள் சிறிய பைபிள் படிப்பு தொகுதியில் இருந்தவர்களை மாத்திரமே அவர்களுக்கு தெரியும். போர் காலத்தின்போது ஒரே நகரத்தில் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த அக்கா தங்கைகள் இருவர் சாட்சிகளாயினர்; ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்புதான் இருவருக்குமே தெரியவந்தது.

சொஸைட்டியின் புத்தகங்களை மறைத்து வைப்பதற்கு ஏற்ற இடங்களைக் கண்டுபிடிப்பதும் என் வேலையாக இருந்தது. தேவைப்பட்டால் உவாட்ச்டவர் பத்திரிகையை பிரதிகள் எடுப்பதற்கு தேவையான காகிதம், ஸ்டென்ஸில் மெஷின்கள், டைப்ரைட்டர்கள் ஆகியவற்றையும் ஒளித்து வைத்தோம். சில சமயங்களில், சொஸைட்டியின் பிரசுரங்களை ஒரு மறைவிடத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்ற வேண்டியிருந்தது. ஒரு சமயம், புத்தகங்கள் நிறைந்த 30 கார்ட்டன்களை யாருக்கும் தெரியாமல் வேறொரு இடத்திற்கு மாற்றியது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அது ரொம்ப ஆபத்தான வேலை!

மேலும், தடையுத்தரவின் போது, நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியில் இருந்த பண்ணைகளிலிருந்து மேற்கே இருந்த நகரங்களுக்கு உணவுப்பொருட்களைக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்தோம். குதிரை வண்டியில் உணவை ஏற்றிக் கொண்டு மேற்குப் பகுதிக்குச் செல்கையில், நதியைக் கடக்க எந்தப் பாலங்களையும் நாங்கள் பயன்படுத்த முடியாது; ஏனெனில் எல்லா இடத்திலும் பலத்த காவல் இருந்தது. எனவே வண்டியில் கொண்டுவந்த சரக்கை சிறிய படகுகளில் ஏற்றி வேறு பாதையில் நதியைக் கடப்போம். பின்னர் அந்தச் சரக்கை மீண்டும் வேறொரு வண்டியில் ஏற்றி செல்வோம். நாங்கள் நகரத்தை அடைந்ததும் இருட்டும் வரை காத்திருப்போம். சத்தம் ஏற்படாமலிருக்க குதிரைகளின் குளம்புகளில் காலுறைகளை மாட்டிவிட்டு, சபையின் இரகசிய உணவு சேமிப்பு கிடங்கிற்கு உணவுப்பொருட்களைக் கொண்டு செல்வோம். அங்கிருந்து, தேவைப்பட்ட சகோதரர்களுக்கு உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஜெர்மானிய படையினர் இத்தகைய சேமிப்பு கிடங்கை கண்டுபிடித்தால், உயிருக்கே ஆபத்துதான். எனினும் சகோதரர்கள் பலர் உதவ முந்திக்கொண்டனர். உதாரணத்திற்கு அமர்ஸ்ஃபூர்ட் நகரிலிருந்த புலூமிங்க் குடும்பத்தாரை எடுத்துக்கொள்ளுங்கள்; இவர்கள் வீடு ஜெர்மன் காவற்படை தளத்திற்கு கல்லெறி தூரத்தில்தான் இருந்தது. எனினும் தங்கள் ஹாலை உணவு கிடங்காக பயன்படுத்த அனுமதித்தனர்! இவர்களைப் போன்ற தைரியமுள்ள சாட்சிகள், தங்கள் சகோதரருக்காக தங்கள் உயிரையே பணயம் வைத்தனர்.

தடையுத்தரவின்கீழ் இருந்த காலம் முழுவதும் உண்மையோடு நிலைத்திருக்க யெகோவா எனக்கும் என் மனைவிக்கும் உதவினார். மே 1945-⁠ல் ஜெர்மானிய படை படுதோல்வி அடைந்தது. தலைமறைவாய் வாழ்ந்துவந்த என் வாழ்க்கைக்குக் கடைசியாக முடிவு வந்தது. வேறொரு சகோதரர் பொறுப்பேற்கும் வரையில், பயணக் கண்காணியாக தொடரும்படி சொஸைட்டி எனக்குக் கூறியது. 1947-⁠ல் பெர்ட்டுவஸ் ஃபான் டர் பேல் என் பொறுப்பை ஏற்றார். c அதற்குள் எங்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது; நாங்கள் அந்த நாட்டின் கிழக்குப் பாகத்தில் குடியேறினோம்.

துக்கமும் மகிழ்ச்சியும்

நான் நெதர்லாந்துக்குச் சென்ற ஓர் ஆண்டுக்குப் பின், என் அப்பா கைதுசெய்யப்பட்டது போருக்குப் பின் எனக்குத் தெரிய வந்தது. உடல்நலக் குறைவினால் அவர் இருமுறை விடுதலை செய்யப்பட்டார்; ஆனால் அந்த இருமுறையும் மீண்டும் கைது செய்யப்பட்டார். 1938-⁠ன் பிப்ரவரியில் அவர் புக்கன்வால்டு சித்திரவதை முகாமுக்கும் பின்னர் டாக்காவுக்கும் அனுப்பப்பட்டார். அங்கே 1942, மே 14-⁠ல் அவர் இறந்துபோனார். கடைசி வரை அவர் உண்மையோடும் உறுதியோடும் இருந்தார்.

என் அம்மாவும் டாக்காவ் சித்திரவதை முகாமில் கஷ்டப்பட்டார்கள். 1945-⁠ல் விடுதலை செய்யப்படும் வரை அங்கிருந்தார்கள். என் அப்பா அம்மா இருவரின் சிறந்த முன்மாதிரியால்தான் நான் ஆன்மீக ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடிந்தது. எனவே 1954-⁠ல் அம்மா எங்கள் குடும்பத்தோடு தங்க வந்தது என் பாக்கியமே. 1945 வரை கம்யூனிஸ கிழக்கு ஜெர்மனியில் பயனியர் ஊழியம் செய்துவந்த என் தங்கை மார்கரெத்தாவும் அம்மாவுடன் வந்தாள். அம்மாவுக்கு நல்ல ஆரோக்கியம் கிடையாது, டச்சு மொழியும் பேச தெரியாது; எனினும் அக்டோபர் 1957-⁠ல், உண்மையுடன் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும் வரை வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொண்டார்கள்.

1955-⁠ல் ஜெர்மனி, நூரெம்பர்கில் நடத்தப்பட்ட மாநாடு விசேஷித்த ஒன்று. நாங்கள் அங்கிருக்கையில் ட்ரெஸ்டனிலிருந்து வந்த சகோதரர்கள் ஏரிக்காவிடம், அவளுடைய அம்மா அந்த மாநாட்டிற்கு வந்திருப்பதாக சொன்னார்கள். ட்ரெஸ்டன் அப்போது கிழக்கு ஜெர்மனியின் பாகமாக இருந்ததால், ஏரிக்கா தன் அம்மாவை 21 ஆண்டுகள் பார்க்கவே இல்லை. அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தாயும் மகளும் ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். என்னே அற்புதமான சந்திப்பு!

காலப்போக்கில், எங்களுக்கு எட்டு பிள்ளைகள் ஆகிவிட்டனர். ஒரு மகனை கார் விபத்தில் இழந்தபோது துக்கத்தில் ஆழ்ந்தோம். எனினும், எங்கள் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவை சேவிப்பதைக் காண்பது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. உல்ஃப்காங்கும் அவனுடைய மனைவியும் வட்டார ஊழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்; அவர்களுடைய மகனும் வட்டாரக் கண்காணியாக ஊழியம் செய்வது எங்கள் சந்தோஷத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.

நெதர்லாந்தில் யெகோவாவின் ஊழியம் வெற்றி நடை போடுவதைக் காணும் பாக்கியத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். 1933-⁠ல் பயனியர் ஊழியத்தை தொடங்குகையில் ஏறக்குறைய நூறு சாட்சிகள் இருந்தனர். இன்று, 30,000-⁠த்திற்கு அதிகமானோர் உள்ளனர். ஏரிக்காவுக்கும் எனக்கும் முன்பு போல் உடலில் வலுவில்லை; இருப்பினும் நாங்கள், “விட்டுக்கொடுக்காத என் விசுவாசமே” என வெகு நாட்களுக்கு முன்பு பாடிய அந்த வார்த்தைகளுக்கு இசைவாக வாழ இன்னும் தீர்மானமாய் இருக்கிறோம்.

[அடிக்குறிப்புகள்]

a பாட்டு எண் 194​—⁠யெகோவாவுக்குத் துதிப்பாடல்கள், 1928-⁠ல் வெளிவந்த ஆங்கில புத்தகம்.

b கோப்பிட்ஸ் நகரின் இன்றைய பெயர் பிர்னா. இது எல்ப் நதியருகே, ட்ரெஸ்டன் நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

c சகோதரர் ஃபான் டர் பேலின் வாழ்க்கை சரிதையை, காவற்கோபுரம், 1998, ஜனவரி 1-⁠ல் வெளிவந்த “சத்தியத்தைவிட சிறந்தது எதுவுமில்லை” என்ற கட்டுரையில் பாருங்கள்.

[பக்கம் 23-ன் படம்]

வெளி ஊழியத்தை முடித்தபிறகு “ஜுகன்ட்க்ரூப்”

[பக்கம் 24-ன் படம்]

20 வயதில். மற்ற பயனியர்களும் நானும் ஊழியத்தில் ஷ்நைஃபல் பகுதியை முடித்தோம்

[பக்கம் 25-ன் படம்]

1940-⁠ல் உல்ஃப்காங், ஏரிக்காவுடன்

[பக்கம் 26-ன் படம்]

இடமிருந்து வலம்: என் பேரன் ஜோனத்தான், அவன் மனைவி, மீரியாம், ஏரிக்கா, நான், உல்ஃப்காங், அவன் மனைவி, ஜூலியா

[பக்கம் 26-ன் படம்]

அப்பாவுடன் சிறையிலிருந்த ஒரு சகோதரர் 1941-⁠ல் வரைந்த படம்