Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று கடவுளுடைய ஊழியர்கள் யார்?

இன்று கடவுளுடைய ஊழியர்கள் யார்?

இன்று கடவுளுடைய ஊழியர்கள் யார்?

“எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது, புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்.”​—2 கொரிந்தியர் 3:5, 6.

1, 2. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனைவரும் என்ன பொறுப்பை நிறைவேற்றி வந்தார்கள், ஆனால் நிலைமை எப்படி மாறிவிட்டது?

 நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில், எல்லா கிறிஸ்தவர்களும் முக்கியமான ஒரு பொறுப்பை​—⁠நற்செய்தியைப் பிரசங்கிக்கும் கடமையை⁠—⁠நிறைவேற்றி வந்தார்கள். அவர்கள் அனைவரும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள், புதிய உடன்படிக்கையின் ஊழியர்கள். சிலருக்கு கூடுதலான பொறுப்புகள் இருந்தன, உதாரணமாக சிலருக்கு சபையில் போதிக்கும் பொறுப்பு இருந்தது. (1 கொரிந்தியர் 12:27-29; எபேசியர் 4:13) பெற்றோருக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் இருந்தன. (கொலோசெயர் 3:18-21) ஆனால் இவர்கள் அனைவருமே மிகவும் முக்கியமான அடிப்படை பொறுப்பாகிய பிரசங்க வேலையில் பங்குகொண்டனர். கிறிஸ்தவ வேதாகமத்தின் மூல கிரேக்குவில், இந்தப் பொறுப்பு டையகோனையா (di·a·ko·niʹa), அதாவது ஒரு சேவை அல்லது ஊழியம் என அழைக்கப்பட்டது.​—கொலோசெயர் 4:⁠17.

2 காலம் சென்றபோது இது மாறிவிட்டது. குருவர்க்கம் என்ற ஒரு வகுப்பு உருவானது, இவர்கள் பிரசங்கிக்கும் பாக்கியத்தை தங்களுக்கென்று ஒதுக்கி வைத்துக்கொண்டனர். (அப்போஸ்தலர் 20:30) குருவர்க்கம், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் மத்தியில் சிறுபான்மையினராக இருந்தனர். பெரும்பான்மையானவர்கள் பாமரர் என்று அறியப்பட்டார்கள். குருவர்க்கத்தின் நலனுக்காக பாமர மக்கள் நன்கொடைகளை அளிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு சில பொறுப்புகள் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டதேயன்றி, பிரசங்கிக்காமல் அவர்கள் எப்போதும் வெறுமனே கேட்கிறவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

3, 4. (அ) கிறிஸ்தவமண்டலத்தில் ஒருவர் எவ்வாறு மினிஸ்டராகிறார்? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தில் மினிஸ்டர் என்பவர் யார், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் இது ஏன் வித்தியாசமாக உள்ளது?

3 குருமார் தங்களை மினிஸ்டர்கள் (மினிஸ்டர் என்ற வார்த்தையிலிருந்து இது பெறப்பட்டது; இது ஊழியன் என்று பொருள்படும் டியகோனாஸ் என்ற வார்த்தையின் லத்தீன் மொழிபெயர்ப்பு) என்று சொல்லிக்கொள்கிறார்கள். a மினிஸ்டர்களாவதற்கு அவர்கள் இறையியல் கல்லூரிகளில் அல்லது செமினரிகளில் கற்று பட்டம் பெற்று சமயப்பணியில் நியமிக்கப்படுகிறார்கள். தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “சமயப்பணியில் ‘நியமிப்பு’ அல்லது ‘பதவி அளிப்பு’ என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட சடங்குகளின் மூலமாக மினிஸ்டர்களுக்கு அல்லது குருக்களுக்கு வழங்கப்படும் விசேஷித்த அந்தஸ்தை பொதுவாக குறிக்கிறது. இவர்கள் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்க அல்லது புனித விருந்து போன்ற மத சடங்குகளைச் செய்ய அல்லது இரண்டையுமே செய்ய அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார்கள்.” மினிஸ்டர்களை நியமிப்பது யார்? தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “வரலாற்று சிறப்புமிக்க மேற்றிராணியார் பதவியை இன்னும் தக்கவைத்திருக்கும் சர்ச்சுகளில் பிஷப்பே நியமிப்பை செய்யும் மினிஸ்டர் ஆவார். பிரிஸ்பிட்டேரியன் சர்ச்சுகளில் இந்த நியமிப்பை பிரிஸ்பிட்டரி மினிஸ்டர்களே செய்கிறார்கள்.”

4 ஆகவே கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் மினிஸ்டராக இருக்கும் பாக்கியம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் இது இப்படி இல்லை. ஏன் இல்லை? ஏனென்றால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் அவ்விதமாக இருக்கவில்லை.

உண்மையில் கடவுளுடைய ஊழியர்கள் யார்?

5. பைபிள் பிரகாரம், யாரெல்லாம் ஊழியர்கள்?

5 பைபிள் பிரகாரம், யெகோவாவின் வணக்கத்தார் அனைவரும்​—⁠பரலோகத்தில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும்​—⁠ஊழியர்களே. தேவதூதர்கள் இயேசுவுக்கு ஊழியஞ் செய்தார்கள். (மத்தேயு 4:11; 26:53; லூக்கா 22:43) தேவதூதர்கள் “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக[வும்கூட] ஊழியஞ்செய்”கிறார்கள். (எபிரெயர் 1:14; மத்தேயு 18:10) இயேசு ஒரு ஊழியராக இருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்ய”வே வந்தார். (மத்தேயு 20:28; ரோமர் 15:8) இயேசுவை பின்பற்றுகிறவர்கள் ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்ற’ வேண்டுமாதலால் அவர்களும்கூட ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.​—1 பேதுரு 2:⁠21.

6. இயேசு தம்முடைய சீஷர்கள் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதை எப்படிக் காட்டினார்?

6 பரலோகத்துக்குப் போவதற்கு சற்று முன்பாக இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இயேசுவின் சீஷர்கள், சீஷர்களை உண்டுபண்ணுகிறவர்களாக, ஊழியர்களாக இருக்க வேண்டும். அவர்கள் உண்டுபண்ணும் புதிய சீஷர்கள் இயேசு கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ள கற்றுக்கொள்வார்கள், புறப்பட்டுபோய் சீஷராக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வார்கள். இயேசு கிறிஸ்துவின் உண்மையான ஒரு சீஷன், ஆணோ, பெண்ணோ, பெரியவரோ அல்லது பிள்ளையோ, யாராக இருந்தாலும் அவர் ஊழியம் செய்பவர்.​—யோவேல் 2:28, 29.

7, 8. (அ) எல்லா உண்மை கிறிஸ்தவர்களும் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்பதை எந்த வேதவசனங்கள் காட்டுகின்றன? (ஆ) நியமிப்பு சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன?

7 இதற்கு இசைவாகவே, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று, அங்கு கூடியிருந்த ஆண்கள், பெண்கள் ஆகிய இயேசுவின் சீஷர்கள் அனைவருமே “தேவனுடைய மகத்துவங்களை பேசி”னார்கள். (அப்போஸ்தலர் 2:1-11) மேலும் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.” (ரோமர் 10:10) பவுல் இந்த வார்த்தைகளை குருவர்க்கத்திற்கு மட்டுமே சொல்லாமல், ‘ரோமாபுரியிலுள்ள தேவபிரியர் அனைவருக்கும்’ சொல்கிறார். (ரோமர் 1:1, 2, 7) அதே போலத்தான், “எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்க[ள்]” “சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாய்” இருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். (எபேசியர் 1:1; 6:15) மேலும் எபிரெயர்களுக்கு முகவரியிட்டு எழுதப்பட்ட கடிதம் வாசிக்கப்படுவதைக் கேட்ட அனைவருமே “நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க” வேண்டும்.​—எபிரெயர் 10:⁠23.

8 ஆனால் ஒரு நபர் எப்பொழுது ஊழியராகிறார்? வேறு வார்த்தையில் சொன்னால் அவர் எப்போது நியமிப்பை பெறுகிறார்? அவரை நியமிப்பது யார்?

ஊழியராக நியமிப்பு​—⁠எப்போது?

9. இயேசு எப்போது நியமிக்கப்பட்டார், அவரை நியமித்தது யார்?

9 ஒருவர் எப்போது, யாரால் நியமிக்கப்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள, இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு ஊழியர் என்பதை நிரூபிக்க செமினரியின் நியமிப்பு சான்றிதழோ அல்லது பட்டமோ அவருக்கு இல்லை, மேலும் எந்த மனுஷனாலும் அவர் நியமிப்பை பெறவில்லை. அப்படியென்றால் அவர் ஒரு ஊழியர் என்று நாம் எவ்வாறு சொல்ல முடியும்? ஏனென்றால் ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஏசாயாவின் வார்த்தைகள் அவரில் நிறைவேறின: ‘கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவியானவர் என் மேலிருக்கிறார்; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்.’ (லூக்கா 4:17-19; ஏசாயா 61:1) இயேசுவுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது என்பது இந்த வார்த்தைகளிலிருந்து தெளிவாக உள்ளது. யாரால் பொறுப்பளிக்கப்பட்டிருந்தார்? யெகோவாவின் ஆவி அவரை இந்த வேலைக்காக அபிஷேகம் செய்தபடியால் இயேசு யெகோவா தேவனால் நியமிக்கப்பட்டார் என்பது தெளிவாக இருக்கிறது. இது எப்போது சம்பவித்தது? இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது யெகோவாவின் ஆவி உண்மையில் அவர்மேல் வந்திறங்கியது. (லூக்கா 3:21, 22) ஆகவே, முழுக்காட்டுதலின் சமயத்தில்தான் அவர் நியமிக்கப்பட்டார்.

10. ஒரு கிறிஸ்தவ ஊழியர் யாரால் ‘தகுதியுள்ளவராகிறார்’?

10 இயேசுவை முதல் நூற்றாண்டில் பின்பற்றியவர்களைப் பற்றி என்ன? ஊழியர்கள் என்ற அவர்களுடைய அந்தஸ்தும்கூட யெகோவாவிடமிருந்தே வந்தது. பவுல் இவ்வாறு சொன்னார்: “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது; புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்.” (2 கொரிந்தியர் 3:5, 6) யெகோவா எவ்வாறு தம்முடைய வணக்கத்தாரை ஊழியர்களாக தகுதிபெற செய்கிறார்? உதாரணத்துக்கு தீமோத்தேயுவை எடுத்துக்கொள்ளுங்கள். பவுல் இவரை ‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் தேவ ஊழியக்காரன்’ என அழைத்தார்.​—1 தெசலோனிக்கேயர் 3:⁠2.

11, 12. தீமோத்தேயு எவ்விதமாக முன்னேற்றம் செய்து ஒரு ஊழியரானார்?

11 தீமோத்தேயுவிடம் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் அவர் எவ்விதமாக ஒரு ஊழியரானார் என்பதை புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறது: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.” (2 தீமோத்தேயு 3:14, 15) வேதாகம அறிவு தீமோத்தேயுவின் விசுவாசத்துக்கு அஸ்திவாரமாக இருந்து, அறிக்கை செய்யும்படி அவரை உந்துவித்தது. இதற்கு தனிப்பட்ட முறையில் வேதாகமத்தை வாசித்துக்கொள்வது போதுமானதாக இருந்ததா? இல்லை. தீமோத்தேயுவுக்கு, திருத்தமான அறிவை பெற்றுக்கொள்ளவும் அவர் வாசித்தவற்றின் ஆன்மீக கருத்தைப் புரிந்துகொள்ளவும் உதவி தேவைப்பட்டது. (கொலோசெயர் 1:9) இவ்விதமாக தீமோத்தேயு “நம்பும்படி அறிவுறுத்தி உந்துவிக்கப்பட்டார்.” “சிறுவயதுமுதல்” வேதவாக்கியங்களை அறிந்திருந்தார் என்று சொல்லப்படுவதால் அவருக்கு முதன்முதலில் போதித்தவர்கள் அவருடைய அம்மாவும் பாட்டியுமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவருடைய அப்பா விசுவாசியாக இல்லை.​—2 தீமோத்தேயு 1:⁠5.

12 ஆனால் தீமோத்தேயு ஒரு ஊழியராய் ஆவதற்கு வேறு விஷயங்களும் உதவின. ஒரு காரியமானது, அருகிலிருந்த சபைகளிலுள்ள கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொண்டதால் அவருடைய விசுவாசம் பலப்பட்டிருந்தது. இது நமக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் பவுல் முதல் முறையாக தீமோத்தேயுவை சந்தித்தபோது இந்த இளம் மனிதன் “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.” (அப்போஸ்தலர் 16:2) மேலுமாக அவர்களை பலப்படுத்துவதற்காக அந்த நாட்களில் ஒரு சில சகோதரர்கள் சபைகளுக்கு கடிதங்கள் எழுதினர். அவர்களை உற்சாகப்படுத்த கண்காணிகள் அவர்களை வந்து சந்தித்தார்கள். இப்படிப்பட்ட ஏற்பாடுகள் தீமோத்தேயு போன்ற கிறிஸ்தவர்களுக்கு ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு உதவிசெய்தது.​—அப்போஸ்தலர் 15:22-32; 1 பேதுரு 1:⁠1.

13. தீமோத்தேயு எப்போது ஒரு ஊழியனாக நியமிப்பை பெற்றார், அவருடைய ஆன்மீக முன்னேற்றம் அதோடு நின்றுவிடவில்லை என்று ஏன் சொல்வீர்கள்?

13 மத்தேயு 28:19, 20-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் கட்டளையை எண்ணிப்பார்க்கையில், ஏதோ ஒரு கட்டத்தில் தீமோத்தேயுவும் விசுவாசத்தால் தூண்டப்பட்டு இயேசுவைப் பின்பற்றி முழுக்காட்டுதல் பெற்றிருப்பார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். (மத்தேயு 3:15-17; எபிரெயர் 10:5-9) இது தீமோத்தேயு முழு ஆத்துமாவோடு கடவுளுக்குச் செய்த ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக இருந்தது. முழுக்காட்டுதலின்போது அவர் ஒரு ஊழியரானார். அப்போது முதற்கொண்டு, அவருடைய வாழ்க்கை, அவருடைய பலம், எல்லாமே கடவுளுக்கே சொந்தமாகிவிட்டது. இது அவருடைய வணக்கத்தின், ‘பரிசுத்த சேவையின்’ இன்றியமையாத ஒரு பாகமாக இருந்தது. ஆனால் ஊழியராக இருக்கும் அந்த கெளரவம் தனக்கு அளிக்கப்பட்டதை குறித்து திருப்தியடைந்து அப்படியே இருந்துவிடவில்லை. அவர் தொடர்ந்து ஆன்மீகத்தில் வளர்ந்து முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ ஊழியரானார். பவுல் போன்ற முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களோடு அவர் வைத்திருந்த சகவாசம், அவருடைய தனிப்பட்ட படிப்பு, அவருடைய வைராக்கியமான பிரசங்க வேலை ஆகியவையே இதற்கு காரணமாயிருந்தது.​—1 தீமோத்தேயு 4:14; 2 தீமோத்தேயு 2:2; எபிரெயர் 6:⁠1.

14. இன்று ‘நித்திய ஜீவனுக்கு சரியான மனச்சாய்வுள்ள’ ஒருவர் எவ்வாறு ஊழியராக ஆவதற்கு முன்னேறுகிறார்?

14 இன்றும் கிறிஸ்தவ ஊழியத்துக்கு ஒருவர் இப்படித்தான் நியமிப்பை பெறுகிறார். ‘நித்திய ஜீவனுக்கு சரியான மனச்சாய்வுள்ள’ ஒருவருக்கு பைபிள் படிப்பின் மூலமாக கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி கற்றுக்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது. (அப்போஸ்தலர் 13:48, NW) அந்த நபர் பைபிள் நியமங்களைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவும் அர்த்தத்தோடு ஜெபிக்கவும் கற்றுக்கொள்கிறார். (சங்கீதம் 1:1-3; நீதிமொழிகள் 2:1-9; 1 தெசலோனிக்கேயர் 5:17, 18) அவர் மற்ற விசுவாசிகளோடு கூட்டுறவுகொண்டு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ செய்யும் ஏற்பாடுகளை பிரயோஜனப்படுத்திக் கொள்கிறார். (மத்தேயு 24:45-47, NW; நீதிமொழிகள் 13:20; எபிரெயர் 10:23-25) இவ்விதமாக முறைப்படி கல்வி கற்று முன்னேறுகிறார்.

15. ஒரு நபர் முழுக்காட்டப்படும் போது என்ன நடக்கிறது? (அடிக்குறிப்பையும் காண்க.)

15 கடைசியாக, யெகோவா தேவன் மீது அன்பையும் கிரய பலியில் பலமான விசுவாசத்தையும் வளர்த்திருக்கும் பைபிள் மாணாக்கர் தன்னுடைய பரலோக தகப்பனுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்புகிறார். (யோவான் 14:1) அவர் தனிப்பட்ட ஜெபத்தில் இந்த ஒப்புக்கொடுத்தலை செய்துவிட்டு, அதன் பிறகு தனிமையில் செய்யப்பட்ட அந்தச் செயலுக்கு பகிரங்கமான அடையாளமாக முழுக்காட்டுதல் பெறுகிறார். அந்நாளே அவர் ஊழிய நியமிப்பை பெறும் நாள், ஏனென்றால் அப்போதுதான் அவர் ஒரு டியகோனாஸாக, முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு ஊழியராக கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இனி அவர் உலகிலிருந்து தன்னை பிரித்து வைத்திருக்க வேண்டும். (யோவான் 17:16; யாக்கோபு 4:4) அவர் தன்னை முழுமையாக எந்தவித நிபந்தனைகளுமின்றி ‘பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக’ தன்னை அளித்திருக்கிறார். (ரோமர் 12:1) b அவர் கிறிஸ்துவைப் பின்பற்றும் கடவுளுடைய ஊழியராயிருக்கிறார்.

கிறிஸ்தவ ஊழியம் என்பது என்ன?

16. ஒரு ஊழியராக தீமோத்தேயுவுக்கு இருந்த சில பொறுப்புகள் யாவை?

16 தீமோத்தேயுவின் ஊழியத்தில் என்ன உட்பட்டிருந்தது? அவருக்கு பவுலின் பயணத் தோழனாய் இருக்கும் விசேஷித்த கடமைகள் இருந்தன. அவர் ஒரு மூப்பரான போது உடன் கிறிஸ்தவர்களுக்குப் போதிப்பதற்காகவும் அவர்களைப் பலப்படுத்துவதற்காகவும் அவர் கடினமாக உழைத்தார். அதேசமயம் இயேசுவையும் பவுலையும் போல நற்செய்தியை பிரசங்கித்து சீஷர்களை உண்டுபண்ணுவதே அவர் ஊழியத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. (மத்தேயு 4:23; 1 கொரிந்தியர் 3:5) பவுல் தீமோத்தேயுவிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு; தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.’​—2 தீமோத்தேயு 4:⁠5.

17, 18. (அ) எந்த ஊழியத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர்? (ஆ) ஒரு கிறிஸ்தவ ஊழியருக்கு பிரசங்க வேலை எவ்வளவு முக்கியமானது?

17 இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் இதுவே பொருந்துகிறது. அவர்கள் ஒரு பொது ஊழியத்தில், சுவிசேஷ வேலையில் ஈடுபட்டு, இயேசுவின் பலியின் அடிப்படையில் இரட்சிப்புக்கான வழியைச் சுட்டிக்காட்டி யெகோவாவின் பெயரில் கூப்பிட மனத்தாழ்மையுள்ள ஆட்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 2:21; 4:10-12; ரோமர் 10:13) துன்பத்திலிருக்கும் மனிதகுலத்துக்கு ராஜ்யம் மட்டுமே ஒரே நம்பிக்கை என்பதை அவர்கள் பைபிளிலிருந்து நிரூபித்து, இப்போதேகூட நாம் பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும் என்பதை காண்பிக்கிறார்கள். (சங்கீதம் 15:1-5; மாற்கு 13:10) ஆனால் மனிதகுலம் எதிர்ப்படும் பிரச்சினைகள் மனித முயற்சியால் தீர்க்கப்படும் என ஒரு கிறிஸ்தவ ஊழியர் பிரசங்கிப்பது இல்லை. மாறாக, ‘தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளது’ என்று அவர் போதிக்கிறார்.​—1 தீமோத்தேயு 4:⁠8.

18 உண்மைதான், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இன்னும் கூடுதலான வழிகளில் சேவை செய்கிறார்கள். இது கிறிஸ்தவருக்கு கிறிஸ்தவர் வித்தியாசப்படலாம். அநேகருக்கு குடும்ப பொறுப்புகள் இருக்கின்றன. (எபேசியர் 5:21–6:4) மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் சபையில் கடமைகள் இருக்கின்றன. (1 தீமோத்தேயு 3:1, 12, 13; தீத்து 1:5; எபிரெயர் 13:7) அநேக கிறிஸ்தவர்கள் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவிசெய்கின்றனர். சிலருக்கு உவாட்ச் டவர் சொஸைட்டியின் பெத்தேல் வீடுகள் ஒன்றில் வாலன்டியராக வேலை செய்யும் மகத்தான பாக்கியம் இருக்கிறது. ஆனால் எல்லா கிறிஸ்தவ ஊழியர்களுமே நற்செய்தியை பிரசங்கிப்பதில் பங்குகொள்கிறார்கள். யாரும் இதற்கு விதிவிலக்கானவர்கள் இல்லை. இந்த வேலையில் பங்குகொள்வதுதான் உண்மையான கிறிஸ்தவ ஊழியர் என்று ஒருவரை பகிரங்கமாக அடையாளம் காட்டுகிறது.

ஒரு கிறிஸ்தவ ஊழியரின் மனப்பான்மை

19, 20. கிறிஸ்தவ ஊழியர்கள் என்ன மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

19 பெரும்பாலான கிறிஸ்தவமண்டல ஊழியர்கள் விசேஷமான மரியாதை அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், “ரெவரன்ட்,” “குரு” என்று பட்டப்பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையான ஒரு கிறிஸ்தவ ஊழியருக்குத் தெரியும், யெகோவா மாத்திரமே பயபக்தி கலந்த மரியாதை செலுத்தப்பட பாத்திரமானவர் என்பது. (1 தீமோத்தேயு 2:9, 10) எந்த ஒரு கிறிஸ்தவ ஊழியனும் உயர்ந்த மரியாதையை கேட்டு பெறுவதோ அல்லது விசேஷமான பதவி பெயர்களுக்கு ஆசைப்படுவதோ இல்லை. (மத்தேயு 23:8-12) டியக்கோனையா என்பதற்கு அடிப்படை அர்த்தம் “சேவை” என்பது அவருக்குத் தெரியும். இதனுடைய வினை வடிவம் சிலசமயங்களில் ஒருவரை மேசையில் அமர்த்தி அவருக்கு பணிவிடை செய்வது போன்ற தனிப்பட்ட சேவைகளின் சம்பந்தமாக பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (லூக்கா 4:39; 17:8; யோவான் 2:5) கிறிஸ்தவ ஊழியத்தில் இது அதிக உயர்வாக பயன்படுத்தப்பட்டாலும், டியாக்கோனாஸ் என்பது ஒரு வேலைக்காரனைத்தான் குறிக்கிறது.

20 ஆகவே எந்த ஒரு கிறிஸ்தவ ஊழியனும் தான் அதிக முக்கியமானவன் என்று நினைப்பதற்கு எந்தக் காரணமுமில்லை. உண்மையான கிறிஸ்தவ ஊழியர்கள்​—⁠சபையில் விசேஷித்த பொறுப்புள்ளவர்கள் உட்பட​—⁠மனத்தாழ்மையுள்ள அடிமைகள். இயேசு சொன்னார்: “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 20:26, 27) சீஷர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய சரியான மனநிலையை வலியுறுத்திக் காட்டுவதற்காக இயேசு அவர்களுடைய பாதங்களைக் கழுவி ஒரு அடிமைசெய்யும் தாழ்ந்த வேலையை செய்தார். (யோவான் 13:1-15) என்னே தாழ்மையான ஒரு சேவை! ஆகவே கிறிஸ்தவ ஊழியர்கள் மனத்தாழ்மையோடு யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் சேவிக்கிறார்கள். (2 கொரிந்தியர் 6:4; 11:23) அவர்கள் ஒருவருக்கொருவர் தாழ்மையான சிந்தையோடு பணிவிடை செய்கிறார்கள். நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அவர்கள் தன்னலம் பாராமல் அவிசுவாசிகளான தங்கள் அயலகத்தாருக்கு சேவை செய்கிறார்கள்.​—ரோமர் 1:14, 15; எபேசியர் 3:1-7.

ஊழியத்தில் சகித்திருங்கள்

21. ஊழியத்தில் சகித்திருந்ததற்காக பவுலுக்கு என்ன வெகுமதி கிடைத்தது?

21 ஊழியனாக இருப்பதற்கு பவுலுக்கு சகிப்புத்தன்மை தேவைப்பட்டது. நற்செய்தியை கொலோசெயர்களுக்கு பிரசங்கிக்க தான் அதிக பாடுபட்டதாக அவர்களிடம் சொன்னார். (கொலோசெயர் 1:24, 25) ஆனால் அவர் சகித்திருந்ததால், அநேகர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு ஊழியர்களானார்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர்களாகவும் இயேசு கிறிஸ்துவின் சகோதரர்களாகவும் பிறப்பிக்கப்பட்டார்கள், பரலோகத்தில் அவர் பக்கத்திலிருக்கும் ஆவி சிருஷ்டிகளாக ஆகும் எதிர்பார்ப்பைப் பெற்றார்கள். சகிப்புத்தன்மைக்கு கிடைத்த என்னே மகத்தான ஓர் வெகுமதி!

22, 23. (அ) இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கு ஏன் சகிப்புத்தன்மை தேவை? (ஆ) கிறிஸ்தவ சகிப்புத்தன்மையால் என்ன அருமையான பலன்கள் கிடைக்கின்றன?

22 உண்மையில் இன்று கடவுளுடைய ஊழியர்களாக இருப்பவர்களுக்கு சகிப்புத்தன்மை அவசியமாகும். அநேகர் இன்று வியாதியோடும் வயோதிபத்தால் ஏற்படும் வலிகளோடும் தினந்தோறும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்​—⁠அவர்களில் பலர் கணவரோ மனைவியோ இல்லாமல்​—⁠தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக கடினமாக வேலை செய்கிறார்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் தைரியமாக தங்களைச் சுற்றியுள்ள தவறான செல்வாக்குகளை எதிர்த்து போராடுகிறார்கள். அனேக கிறிஸ்தவர்கள் கடுமையான பொருளாதார பிரச்சினைகளில் திண்டாடுகிறார்கள். மேலும், ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலத்தின்’ காரணமாக துன்புறுத்தலையும் கஷ்டங்களையும் இன்று அனுபவிக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, NW) ஆம், யெகோவாவின் அறுபது லட்ச ஊழியர்கள் இன்று பவுல் அப்போஸ்தலனோடு சேர்ந்து இவ்வாறு சொல்லலாம்: ‘மிகுந்த சகிப்புத்தன்மையினால் நாங்கள் எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.’ (2 கொரிந்தியர் 6:4, NW) கிறிஸ்தவ ஊழியர்கள் சோர்ந்துவிடுவது கிடையாது. அவர்களுடைய சகிப்புத்தன்மைக்காக அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.

23 பவுலின் விஷயத்தில் இருந்தது போலவே, சகித்திருந்தால் அருமையான பலன்களை நாம் பெறலாம். சகித்திருப்பதன் மூலம் நாம் யெகோவாவோடு நமக்கிருக்கும் உறவை பாதுகாத்துக்கொள்கிறோம், அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம். (நீதிமொழிகள் 27:11) தனிப்பட்ட வகையில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொண்டு சீஷர்களை உண்டுபண்ணுகிறோம், கிறிஸ்தவ சகோதரத்துவம் விரிவடைகிறது. (1 தீமோத்தேயு 4:16) யெகோவா இந்தக் கடைசி நாட்களில் அவருடைய ஊழியர்களைத் தாங்கிவந்திருக்கிறார், அவர்களுடைய ஊழியத்தை ஆசீர்வதித்திருக்கிறார். இதன் விளைவாக, 1,44,000 பேரில் கடைசியானவர்கள் கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள், இன்னும் லட்சக்கணக்கானோர் ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழும் உறுதியான நம்பிக்கையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். (லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 14:1) உண்மையில், கிறிஸ்தவ ஊழியம் யெகோவாவுடைய இரக்கத்தின் வெளிக்காட்டுதான். (2 கொரிந்தியர் 4:1) நாமனைவரும் அதைப் பொக்கிஷமாக போற்றி அதனால் வரும் நிரந்தர பலனுக்காக நன்றியுள்ளவர்களாக இருப்போமாக.​—1 யோவான் 2:⁠17.

[அடிக்குறிப்புகள்]

a சர்ச்சில் உதவி குரு “டீக்கன்” (deacon) என அழைக்கப்படுகிறார். இதற்கான மூல கிரேக்க வார்த்தை டியகோனாஸ் ஆகும். உதவி குருவாக ஒரு பெண் பணியாற்றுகையில் அவர் டீக்கனஸ் (deaconess) என்று அழைக்கப்படுகிறார்.

b ரோமர் 12:1 குறிப்பாக அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவர்களுக்கே பொருந்துகிறதென்றாலும் இந்த நியமம் “வேறே ஆடு”களுக்கும்கூட பொருந்துகிறது. (யோவான் 10:16) இவர்கள் ‘[யெகோவாவை] சேவிக்கவும், அவருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும்’ அவர்களைச் சேர்ந்துகொள்கிறார்கள்.​—⁠ஏசாயா 56:⁠6.

உங்களால் விளக்க முடியுமா?

• முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என்ன பொறுப்பு இருந்தது?

• கிறிஸ்தவ ஊழியர் எப்போது, யாரால் நியமிக்கப்படுகிறார்?

• என்ன மனநிலையை ஒரு கிறிஸ்தவன் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

• ஒரு கிறிஸ்தவ ஊழியன் ஏன் கஷ்டங்களின் மத்தியிலும் சகித்திருக்க வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

தீமோத்தேயுவுக்கு சிறு வயதுமுதல் கடவுளுடைய வார்த்தை போதிக்கப்பட்டது. அவர் முழுக்காட்டப்பட்ட போது ஊழியராக நியமிக்கப்பட்டார்

[பக்கம் 18-ன் படம்]

முழுக்காட்டுதல் கடவுளுக்கு செய்திருக்கும் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக உள்ளது, இது ஊழியராக நியமிக்கப்படுவதைக் குறிக்கிறது

[பக்கம் 20-ன் படம்]

கிறிஸ்தவ ஊழியர்கள் ஊழியம் செய்ய மனமுள்ளவர்கள்