Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

நீங்கள் ஏன் பிரார்த்தனை செய்ய வேண்டும்?

“நீங்கள் தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். . . . தேவனிடத்தில் சேருங்கள்; அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:3, 8) இயேசுவின் சீஷனாகிய யாக்கோபு சொன்ன இந்த வார்த்தைகள் நாம் ஏன் ஜெபம் செய்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்ப்பதற்கு நம்மை தூண்டுகின்றன.

ஜெபம் என்பது நமக்கு என்ன வேண்டும் என்பதை கடவுளிடம் தெரிவிப்பதற்கான வழி மட்டுமே அல்ல. பிரசித்திபெற்ற அவருடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” ஆனாலும், “தொடர்ந்து கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 6:8; 7:7, NW) ஆகவே, நமக்கு என்ன தேவை என்று நாம் நினைக்கிறோமோ அதை அவரிடம் சொல்ல வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். ஆனால் ஜெபம் என்பதில் அதைவிட அதிகம் இருக்கிறது.

உயிர் நண்பர்களாக இருப்பவர்கள் தங்களுக்கு ஏதாவது வேண்டும் என்றால் மட்டுமே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கிடையாது. ஒருவர் மேல் ஒருவர் அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள், அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது அவர்களுடைய நட்பும் வளருகிறது. அதே போலத்தான் ஜெபமும். ஜெபம் என்பது தேவைப்படும் காரியங்களைக் கேட்பதற்காக மட்டும் இல்லை. அதற்கு உன்னதமான ஒரு நோக்கமிருக்கிறது. நம்முடைய இருதயப்பூர்வமான பக்தியை யெகோவாவிடம் வெளிப்படுத்தி அவரோடு நம்முடைய உறவை பலப்படுத்திக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது.

ஆம், தம்மிடம் நெருங்கி வருவதற்காகவே ஜெபம் செய்யும் பாக்கியத்தை கடவுள் நமக்கு அருளியிருக்கிறார். நம்முடைய சொந்த உணர்ச்சிகளை கடவுளிடம் கொட்டும்போதுதான் இது சாத்தியமாகும். மனப்பாடம் செய்த ஜெபங்களை திரும்பத் திரும்ப சொன்னால் இது நடக்காது. ஜெபத்தில் யெகோவாவோடு பேசுவது என்னே ஆனந்தமான ஒரு விஷயம்! அது மட்டுமல்ல, ஒரு பைபிள் நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.”​—நீதிமொழிகள் 15:⁠8.

“எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்று சங்கீதக்காரன் ஆசாப் பாடினார். (சங்கீதம் 73:28) ஆனால் யெகோவாவிடம் அண்டிக்கொண்டிருப்பதற்கு வெறும் ஜெபம் செய்வது மட்டும் போதாது. பின்வரும் பதிவு இதை எவ்வாறு காண்பிக்கிறது என்பதை கவனியுங்கள்:

“அவருடைய [இயேசுவின்] சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, ஜெபம்பண்ண எங்களுக்குப் போதிக்க வேண்டும்” என்று கேட்டான். “அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று சொல்லச் சொன்னார். (லூக்கா 11:1, 2) முதலாவதாக, கடவுளுடைய பெயர் என்ன, அது எவ்வாறு பரிசுத்தப்படுத்தப்படும் என்பதை தெரிந்துகொள்ளாமலே நாம் இப்படி ஜெபித்தால் அது அர்த்தமுள்ளதாக இருக்குமா? மேலும், கடவுளுடைய ராஜ்யம் என்பது என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளாவிட்டால் இயேசுவின் இந்த வார்த்தைகளுக்கு இசைவாக நாம் ஜெபிக்க முடியுமா? பைபிளை நாம் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நமக்கு விடை கிடைக்கும். இந்த அறிவை நாம் பெற்றுக்கொண்டால் கடவுளையும் அவருடைய வழிகளையும் பற்றி நாம் நன்றாக அறிந்துகொள்வோம். மேலுமாக யெகோவா தேவனை நன்றாக அறிந்துகொண்டால் அவரிடம் நாம் மிக நெருக்கமாக உணருவோம். அவர் மீது நம் பக்தியும் அதிகமாகும். அப்போது இன்னும் மனந்திறந்து அவரிடம் நம்மால் பேசமுடியும்.

ஜெபத்தால் பிரச்சினைகள் தீரும்

யெகோவாவோடு நெருக்கமான உறவை நாம் வளர்த்துக்கொண்டால், அது பிரச்சினைகளைத் தீர்க்க நமக்கு உதவி செய்யும். பின்வரும் சூழ்நிலை ஒவ்வொன்றிலும் இது எவ்வாறு உண்மையாக இருந்தது என்பதை கவனியுங்கள். ஜெபம் செய்கிறவர்களால் யெகோவாவோடு தங்களுடைய உறவை பலப்படுத்திக்கொள்ள முடிந்தது என்பதை அவை காண்பிக்கின்றன.

பிரேஸில் நாட்டில், மரியா என்ற பெண் உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தாள். சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தராதரங்களை எதிர்த்து கலகம் செய்ய அவள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தாள். சமுதாயத்தில் அவள் பார்த்த பாசாங்குத்தனமே ஓரளவு இதற்கு காரணம். மரியா தன் கணவனையும் பிள்ளைகளையும் துறந்து, வீட்டை விட்டே வெளியேறினாள். போதை வஸ்துக்களை பயன்படுத்த ஆரம்பித்தாள். இதெல்லாம் செய்தும் அவளுக்கு மகிழ்ச்சி கிட்டாமல் போனபோது கடவுளிடம் தன் மனதிலுள்ளதைக் கொட்டி தனக்கு உதவுமாறு ஜெபம் செய்தாள்.

விரைவில், இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்தித்து பேசினார்கள். கடவுளுடைய வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வதால் என்ன நன்மை என்பதைப் பற்றிய விஷயங்கள் அடங்கிய ஒரு காவற்கோபுரம் பத்திரிகையை அவளுக்கு கொடுத்தார்கள். அது அவள் நெஞ்சைத் தொட்டது, அன்றே அவள் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தாள். இது கடைசியாக தன் குடும்பத்தோடு ஒன்றுசேர அவளுக்கு உதவியது. யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டபோது அவர் மீது தான் வைத்த அன்பை வெளிப்படுத்த விரும்பினாள். “என் நடத்தையை நான் மாற்றிக்கொண்டேன். முதலில் நான் பைபிளை படிக்க ஆரம்பித்தபோது என்னுடைய கணவரும் குடும்பத்தினரும் அதை எதிர்த்தார்கள். ஆனால் நான் செய்த மாற்றங்களை அவர்கள் கவனித்தபோது, அவர்களே என்னை ஊக்கப்படுத்த ஆரம்பித்தார்கள்” என்று மரியா சொன்னாள். அதன்பின்பு, மரியா ஜெபத்தைக் கேட்கிறவரை சேவிப்பதற்காக தன் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்தாள்.

ஹோஸேக்கு அழகான மனைவி இருந்தாள், பொலிவியாவில் லாபகரமான ‘பிஸினஸ்’ செய்துவந்தார். ஆனால் அவருக்கு மகிழ்ச்சி இல்லை. அவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மனைவி அவரை விட்டு போய்விட்டாள். ஹோஸே அளவுக்கு அதிகமாக குடித்தார், தான் எதற்கும் லாயக்கற்றவன் என்று உணர ஆரம்பித்தார். அவர் சொல்வதை கேளுங்கள்: “நான் என் இதயத்தைத் திறந்து ஜெபம் செய்ய ஆரம்பித்தேன், கடவுளைப் பிரியப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஜெபத்தில் கேட்டேன். விரைவில் யெகோவாவின் சாட்சிகள் என்னுடைய கடைக்கு வந்து, தாங்கள் இலவசமாக பைபிள் படிப்புகளை நடத்துவதாக சொன்னார்கள். வேண்டாம் என்று சொல்லி, நான் அவர்களை அனுப்பிவிட்டேன். மூன்று தடவை இப்படியே நடந்தது. நான் உதவிக்காக ஜெபம் செய்த ஒவ்வொரு சமயமும் யெகோவாவின் சாட்சிகள் வந்துவிடுவார்கள். கடைசியாக, அடுத்த முறை வந்தால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். நான் பைபிளை முழுவதுமாக படித்திருந்தேன், அதில் அநேக சந்தேகங்கள் எனக்கு இருந்தன. நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திருப்தியளிக்கும் விதத்தில் பதில் சொன்னார்கள். யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்டபோது என் வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் கிடைத்ததாக நான் உணர்ந்தேன். எனக்கு நண்பர்களாக கிடைத்த சாட்சிகள் மிகவும் சிறந்த உதாரணங்களாக இருந்தார்கள்! நான் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணை விட்டுப் பிரிந்தேன், குடிப் பழக்கமுள்ள நண்பர்களுக்கும் ‘டாட்டா’ சொல்லிவிட்டேன். விரைவில் என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் சேர்ந்துகொண்டேன். 1999-⁠ன் ஆரம்பத்தில் முழுக்காட்டுதல் பெற்றேன்.”

இத்தாலியில் தாமாரா என்ற பெண்ணின் இல்லற வாழ்க்கை என்ற கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது, ஆகவே ஞானமாக நடந்துகொள்வதற்காக அவள் ஜெபம் செய்தாள். அவள் 14 வயதாக இருந்தபோது அடித்து வீட்டைவிட்டு துரத்திவிடப்பட்டதால் முரட்டுத்தனமான சுபாவம் அவளுக்குள் குடிகொண்டது. அவள் இவ்வாறு கூறுகிறாள்: “எனக்கு ஒரு பைபிள் கிடைத்தது, அதை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் மாலை, ‘ஞானத்தைக் கண்டடைவது மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பது போல’ என்பதை நான் வாசித்தேன். அந்த ஞானம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஜெபம் செய்தேன். (நீதிமொழிகள் 2:1-6) அடுத்த நாள் காலை பார்த்தால் யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வந்தார்கள். நான் அவர்களோடு பைபிளை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் கற்றுக்கொண்டபடி செய்வதற்கு கொஞ்ச காலம் எடுத்தது. கடைசியாக, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானித்து முழுக்காட்டுதல் பெற்றேன். இப்போது என்னுடைய கணவனோடு சேர்ந்து, கடவுளுடைய ஞானத்திலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு நானும் உதவிசெய்து வருகிறேன்.”

பியாட்ரிஸ், வெனிசுவேலாவில் காரகாஸ் என்ற நகரில் வசிக்கும் மேல் மட்ட வகுப்பைச் சேர்ந்தவள். ஆனால் அவள் விவாகரத்து செய்யப்பட்டிருந்ததால் மனமுடைந்து போயிருந்தாள். மனமுறிந்துபோன சமயத்தில் அவள் ஒருநாள் மணிக்கணக்கில் ஜெபம் செய்தாள். அடுத்த நாள் காலை யாரோ கதவை தட்டினார்கள். எரிச்சலடைந்தவளாய் கதவு துவாரத்தின் வழியாக பார்த்தாள். கையில் பிரீஃப்கேஸோடு இரண்டு பேர் வாசலில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். தான் வீட்டில் இருப்பதை அவள் காட்டிக்கொள்ளவே இல்லை. எனவே, வீட்டில் யாருமில்லை என்று நினைத்து ஒரு கைப்பிரதியை கதவு இடுக்கின் வழியாக உள்ளே போட்டுவிட்டு அந்தத் தம்பதியினர் சென்று விட்டார்கள். அதை எடுத்துப் பார்த்தால், “உங்கள் பைபிளை அறிந்துகொள்ளுங்கள்” என்ற தலைப்பு! முந்தின இரவு இவள் செய்த ஜெபத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? அவர்களை திரும்பவும் வரும்படி அவள் அழைத்தாள். பைபிளை படிக்க ஆரம்பித்தாள், பின்னர் முழுக்காட்டப்பட்டாள். கடைசியாக மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை கண்டுபிடித்துவிட்ட பியாட்ரிஸ் இப்போது மகிழ்ச்சியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறாள்.

வயிற்றுப்பாட்டுக்கே வழியில்லாத தன் வறுமையைக் குறித்து கடவுளிடம் ஜெபம் செய்தாள் கார்மன். கணவனோ ஒரு குடிகாரன்! ரஃபேல் என்ற பெயருடையவன். அவளுக்கு பத்து பிள்ளைகள். “துணிகளை துவைத்து நான் பணம் சம்பாதித்தேன்” என்று அவள் கூறுகிறாள். ஆனால் ரஃபேலின் குடிப்பழக்கம் இன்னும் அதிகரித்தது. “யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தப் பின்புதான் என்னுடைய கணவன் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தார். யெகோவா சீக்கிரத்தில் இந்த உலகத்திலிருந்து வறுமையையும் ஒடுக்குதலையும் ஒழித்துவிடுவார் என்ற ராஜ்ய வாக்குறுதியைப் பற்றி நாங்கள் கற்றுக்கொண்டோம். கடவுளிடம் நான் செய்த ஜெபத்திற்கு கடைசியாக பலன் கிடைத்தது!” யெகோவாவின் வழிகளைப் பற்றி கற்றுக்கொண்டபோது ரஃபேல் குடிப்பதை நிறுத்திவிட்டார். ஒரு ‘புதிய மனுஷனாக’ மாறினார். (எபேசியர் 4:24) இதனால் இவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. ரஃபேல் சொல்கிறார்: “நாங்கள் பணக்காரராக இல்லாமல் இருக்கலாம், எங்களுக்கென்று சொந்தமாக வீடில்லாமல் இருக்கலாம், ஆனால் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பொறுத்தமட்டில் எங்களுக்கு எந்தக் குறைவும் இல்லை, நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.”

எல்லா ஜெபங்களுக்கும் பலன் கிட்டும் நேரம்

ஜெபம் செய்ததால் இவர்களுக்கெல்லாம் பலன் கிட்டியதா? சந்தேகமே இல்லை! பெரும்பாலும் இவர்களின் விஷயத்தில் கிறிஸ்தவ சபையிலுள்ள ஒருவர் பைபிளை அவர்களோடு படிப்பதன் மூலம் யெகோவா தேவனிடம் நெருங்கிவருவதற்கு உதவி செய்த பிறகே, அவர்களுடைய ஜெபங்களுக்கு பலன் கிட்டியதை நீங்கள் கவனித்தீர்களா?​—அப்போஸ்தலர் 9:⁠11.

அப்படியென்றால் ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரிகிறது. கடவுளுடைய ராஜ்யம் வருவதற்கும் அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்கும் ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு விடை சீக்கிரத்தில் கிடைத்துவிடும். (மத்தேயு 6:10) கடவுள் தம்மை எதிர்க்கிற அனைவரையும் நீக்கி பூமியை சுத்தம் செய்தப்பின், ‘பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.’ (ஏசாயா 11:9) அப்போது யெகோவாவை நேசிக்கும் அனைவரும் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவித்து மகிழுவார்கள், அவர்களுடைய ஜெபங்களுக்கு பலன் கிடைக்கும்.​—ரோமர் 8:18-21.

[பக்கம் 7-ன் படம்]

நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?