Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரார்த்தனை செய்வதில் ஏதாவது பலனுண்டா?

பிரார்த்தனை செய்வதில் ஏதாவது பலனுண்டா?

பிரார்த்தனை செய்வதில் ஏதாவது பலனுண்டா?

பிரார்த்தனை செய்வது அவசியம் என்பதை வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் ஏறக்குறைய எல்லாருமே உணருகின்றனர். சொல்லப்போனால், எல்லா மதத்தவருமே ஊக்கமாக பிரார்த்தனை செய்கின்றனர். உதாரணமாக, புத்த சமயத்தை சேர்ந்த ஒருவர், “நான் அமிதா புத்தரையே நம்பி இருக்கிறேன்” என்ற பிரார்த்தனையை ஒரு நாளில் ஆயிரக்கணக்கான தடவை திரும்பத் திரும்ப சொல்கிறார்.

உலகம் முழுவதிலும் தொடர்கதை போல் தொடரும் பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கையில், பிரார்த்தனையினால் எதை சாதிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்? இந்த எல்லா பிரார்த்தனைகளாலும் ஏதாவது பலனுண்டா? என்று கேட்பது நியாயம்தான்.

மக்கள் ஏன் பிரார்த்தனை செய்கிறார்கள்?

கிழக்கத்திய தேசங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முன்னோர்களிடமும் ஷின்டோ அல்லது தாவோ கடவுட்களிடமும் பிரார்த்தனை செய்கிறார்கள். பள்ளியில் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு, அமோக விளைச்சலைப் பெறுவதற்கு அல்லது நோய்களை விரட்டி அடிப்பதற்கு பிரார்த்தனை செய்கிறார்கள். புத்த மதத்தினர் ஞானோதயம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பிரார்த்தனை செய்கிறார்கள். அறிவையும் செல்வத்தையும் பாதுகாப்பையும் வேண்டி இந்துக்கள் தங்கள் இஷ்ட தேவர்களிடமும் தேவியர்களிடமும் பக்தி பரவசத்தோடு பிரார்த்தனை செய்கிறார்கள்.

கத்தோலிக்கர்கள் சிலர் துறவி மடங்களில் அல்லது கான்வென்டுகளில் வாழ்ந்துகொண்டு இடைவிடாமல் ஜெபம் செய்வதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்; இவ்வாறு மனித சமுதாயத்துக்கு சேவை செய்ய நினைக்கிறார்கள். லட்சக்கணக்கான கத்தோலிக்கர்கள் ஜெபமாலையை உருட்டிக்கொண்டே, மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபங்களை சொல்லி மரியாளின் ஆசியைப் பெற முயலுகிறார்கள். கிழக்கத்திய நாடுகளில் அநேகர் பிரார்த்தனை சக்கரத்தைப் பயன்படுத்துகிறார்கள். புராட்டஸ்டன்டு மதப் பிரிவினர் சொந்தமாக சொல்லும் ஜெபத்தோடுகூட கர்த்தருடைய ஜெபத்தையும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். யூதர்களில் பலர் எருசலேமிலுள்ள புலம்பல் சுவருக்குச் சென்று பிரார்த்தனை செய்ய வெகு தூரம் பயணம் செய்கிறார்கள். ஆலயம் திரும்பக் கட்டப்படுவதற்காகவும் செழுமையும் அமைதியும் தவழும் ஒரு புதிய யுகம் உதயமாவதற்காகவும் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

கோடிக்கணக்கான பக்தர்கள் ஊக்கமாக பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாலும் வறுமை, போதைப் பொருளுக்கும் மதுவுக்கும் அடிமையாதல், பிளவுபட்ட குடும்பங்கள், குற்றச்செயல், போர் என்று பல பிரச்சினைகள் மனித சமுதாயத்தை மேலும் மேலும் வாட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் எல்லாரும் சரியான முறையில் பிரார்த்தனை செய்யாதிருப்பது இதற்கு ஒருவேளை காரணமாக இருக்குமா? சொல்லப்போனால், உண்மையில் பிரார்த்தனையை கேட்கிறவர் எவராவது இருக்கிறாரா?

பிரார்த்தனைகளை கேட்கிற எவராவது இருக்கிறாரா?

பிரார்த்தனை கேட்கப்படவில்லையென்றால் அதனால் எந்தப் பலனும் இல்லை. ஒருவர் பிரார்த்தனை செய்யும்போது கண்ணுக்குப் புலப்படாத ஆவி மண்டலத்தில் யாரோ ஒருவர் அதைக் கேட்கிறார் என்ற நம்பிக்கையில்தான் செய்கிறார். ஆனால் பிரார்த்தனைகள் வெறும் ஒலி அலைகளால் இங்கிருந்து மேலே செல்வதில்லை. யாரோ ஒருவர் பிரார்த்தனை செய்பவரின் எண்ணங்களைக்கூட அறிந்துகொள்ள முடியும் என்பது அநேகருடைய நம்பிக்கை. அது யாராக இருக்கலாம்?

நம்முடைய மூளையில், பெருமூளையின் மீதுள்ள சாம்பல் நிறப்பகுதியை உண்டுபண்ணும் கோடிக்கணக்கான நியூரான்களில் எண்ணங்கள் எவ்வாறு தொடங்குகின்றன அல்லது உருவாகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. ஆனால் மூளையை வடிவமைத்தவரால் அதன் எண்ணங்களை அறிந்துகொள்ள முடியும். அவர் நம்முடைய படைப்பாளராகிய யெகோவா தேவனைத் தவிர வேறு யாருமில்லை. (சங்கீதம் 83:17; வெளிப்படுத்துதல் 4:11) அவரிடமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட எல்லா பிரார்த்தனைகளையும் யெகோவா செவிகொடுத்து கேட்கிறாரா?

எல்லா பிரார்த்தனைகளும் கேட்கப்படுகின்றனவா?

பண்டைய இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீது அரசன் எப்போதும் ஜெபம் செய்துவந்தார். கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரனாக இருந்த அவர் இவ்வாறு பாடினார்: “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.” (சங்கீதம் 65:2) இன்று ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. ஆனால் அவற்றில் எந்த மொழியில் பிரார்த்தனை செய்தாலும் யெகோவா புரிந்துகொள்கிறார். ஆயிரக்கணக்கானோர் சொல்லும் விஷயங்களை எல்லாம் ஒரேசமயத்தில் கேட்டு புரிந்துகொள்ளும் சக்தி மனித மூளைக்கு அப்பாற்பட்டதுதான். அதற்காக கடவுளாலும் இயலாது என்ற முடிவுக்கு வரமுடியாது.

ஆனால் எப்போதும் ஜெபம் செய்துவந்த இயேசு கிறிஸ்துவும்கூட எல்லா ஜெபங்களும் கடவுளுக்கு பிரியமாயில்லை என்று சொன்னார். அவர் வாழ்ந்த காலத்தில், மனப்பாடம் செய்து ஜெபத்தை திரும்பத் திரும்ப கூறும் பழக்கம் பிரபலமாக இருந்தது, அதைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். கத்தோலிக்க பைபிள் பிரகாரம் அவர் இவ்வாறு கூறினார்: “செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப் போல நீங்கள் பிதற்ற வேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” (மத்தேயு 6:7) நம்முடைய உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ஜெபங்களுக்கு யெகோவா செவிகொடுப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

சில ஜெபங்கள் கடவுளுக்கு ஏன் பிரியமாய் இருப்பதில்லை என்பதை ஒரு பைபிள் நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.” (நீதிமொழிகள் 28:9) மற்றொரு நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: “துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.” (நீதிமொழிகள் 15:29) பண்டைய யூதாவின் தலைவர்கள் மிகுதியாக இரத்தப் பழியைச் சுமந்துகொண்டிருந்த சமயத்தில் யெகோவா அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.”​—ஏசாயா 1:1, 15.

வேறு ஒரு காரணத்துக்காகவும் ஜெபங்களை கடவுள் கேளாமல் இருக்கலாம். இதைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அந்தப்படி, புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) இந்தப் புத்திமதியை அசட்டை செய்கிற மனுஷனுடைய ஜெபம் அவன் வீட்டுக் கூரையைக்கூட தாண்டிச் செல்லாது!

பிரார்த்தனைகள் கேட்கப்படுவதற்கென சில நிபந்தனைகள் இருப்பது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஆனால் பிரார்த்தனை செய்யும் அனேகர், கடவுள் தங்களிடம் என்ன செய்யும்படி கேட்கிறார் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்வதே கிடையாது. அதனால்தான் மிகவும் ஊக்கமாக பிரார்த்தனைகள் செய்தால்கூட இந்த உலகத்தை மேம்பட்ட ஒரு உலகமாக மாற்ற முடியவில்லை.

சரி, நம்முடைய பிரார்த்தனைகள் கேட்கப்படுவதற்கு கடவுள் நம்மிடம் எதைக் கேட்கிறார்? இதற்கான பதில், நாம் எதற்காக பிரார்த்தனை செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பிரார்த்தனைக்கு பலனுண்டா என்று நாம் தெரிந்துகொள்ள விரும்பினால், அதை எதற்காக செய்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யெகோவா ஏன் தம்மிடம் பேசும் வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்?

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

G.P.O., Jerusalem