Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெரு நாட்டின் ஆல்டிபிளானோவில் ராஜ்யத்தைப் பிரசங்கித்தல்

பெரு நாட்டின் ஆல்டிபிளானோவில் ராஜ்யத்தைப் பிரசங்கித்தல்

நாங்கள் விசுவாசமுடையவர்கள்

பெரு நாட்டின் ஆல்டிபிளானோவில் ராஜ்யத்தைப் பிரசங்கித்தல்

ஆண்டிஸ் மலையின் கிழக்குத் தொடருக்கும் மேற்கு தொடருக்கும் இடையே​—⁠பொலிவியாவும் பெருவும் சந்திக்குமிடத்தில்​—⁠அமைந்துள்ளது ஆல்டிபிளானோ. இப்பெயரின் பொருள் “மேட்டு நிலம்” அல்லது “பீடபூமி.” அதன் பெரும்பகுதி பொலிவியாவில் உள்ளது.

ஆல்டிபிளானோவின் அகலம் 100 கிலோமீட்டர், நீளம் 1,000-⁠க்கும் அதிக கிலோமீட்டர். இது, கடல் மட்டத்துக்கு மேல் சராசரியாக 3,700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பெருவின் கரையோரத்திலுள்ள தலைநகரான லிமாவிலிருந்து விமானத்தில் இவ்விடத்துக்கு நீங்கள் பறக்கையில் பனிமூடிய எல் மிஸ்டியை கடந்து செல்வீர்கள். இது 5,822 மீட்டர் உயரத்துக்கு மேலே மேகத்தைத் தொடும் ஒரு எரிமலை. 6,000 மீட்டருக்கும் மேற்பட்ட உயரத்தில், பனிமூடிய குன்றுகளான நவாடோ அம்பேட்டோவும் நவாடோ கோரப்பூனாவும் தூரத்தில் தெரியும். திடீரென்று கண்ணில் படுவது இந்தப் பரந்த பீடபூமி​—⁠பெருவின் தெற்குப் பகுதியிலுள்ள ஆல்டிபிளானோ.

பெருவியன் ஆல்டிபிளானோவின் தலைநகரம் பூனோ. இது உலகின் மிகவும் உயரமான, மிகப் பெரிய படகுகளும் செல்லும் டிடிகாகா ஏரியின் வடமேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி மூன்று கிலோமீட்டர் உயரத்திற்கும் மேலாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்குள்ள அடர்த்தி குறைந்த காற்றுக்கு ‘அட்ஜஸ்ட்’ ஆவதற்கு கொஞ்சம் நேரமாகிறது. டிடிகாகா ஏரிக்கு அருகே கொச்சுவா இந்தியர்களும் ஐமாரா இந்தியர்களும் குடியிருக்கிறார்கள். இவர்கள் சிவப்பு, பச்சை அல்லது நீல நிறத்தில் வண்ண வண்ண ஆடைகள் அணிந்து அவர்களுடைய சக்ராஸ் அல்லது சிறிய பண்ணையில் வேலை செய்வதைப் பார்க்கலாம். பெருவில் ஸ்பானிய மொழி ஆட்சி மொழியாக இருக்கிறபோதிலும் கொச்சுவா, ஐமாரா மொழிகளும் இங்கே பேசப்படுகின்றன.

பிரசங்க வேலையை முன்நின்று செய்தல்

கொச்சுவா, ஐமாரா மொழிகளைப் பேசுகிறவர்களில் மனத்தாழ்மையுள்ள, கடின உழைப்பாளிகளான பலர் பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவை சமீபத்தில் பெற்றுக்கொண்டார்கள். விசேஷித்த பயனியர்களாக வேலை செய்யும் முழுநேர ராஜ்ய அறிவிப்பாளர்கள் வைராக்கியத்தோடு எடுத்திருக்கும் முயற்சிகளை யெகோவா நிறைவாக ஆசீர்வதித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

உதாரணத்துக்கு, விசேஷித்த பயனியர்கள் ஹோஸேயும் சில்வியாவும் டிடிகாகா ஏரியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் புட்டினாவில் ஊழியம் செய்ய நியமிப்பைப் பெற்றார்கள். இரண்டே மாதங்களில் பார்த்தால், சில்வியா 16 வீட்டு பைபிள் படிப்புகளையும் ஹோஸே 14 வீட்டு பைபிள் படிப்புகளையும் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆறே மாதங்களில் சபை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 23 முதல் 41 வரை உயர்ந்தது. கூட்டங்களில் ஆஜராகிறவர்களின் எண்ணிக்கை 48 முதல் 132 என்ற உச்ச எண்ணிக்கைக்கு உயர்ந்தது.

“இந்த ஒதுக்குப்புற இடங்களில், சபை கூட்டங்களை முதன்முதலாக தொடங்கும்போது பொது கூட்டத்தையும் சபை புத்தகப் படிப்பையும் நடத்த ஆரம்பிப்பது பயனுள்ளதாக இருக்கிறது. இப்படிச் செய்யும்போது புதிதாக அக்கறை காட்டுகிறவர்கள் கூட்டங்களுக்கு வர ஆரம்பிப்பது சுலபமாக இருக்கிறது” என்று ஹோஸே கூறுகிறார்.

இரண்டு சகோதரிகள்​—⁠அதில் ஒருவர் பயனியர்​—⁠புட்டினாவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்துகொண்டிருந்த முன்யானி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நற்செய்தியை எடுத்துச் சொன்னார்கள். அங்கே அவர்கள் லுசியோ என்ற பார்வையற்ற ஒருவரோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தனர். a இவர் தன்னுடைய தம்பி மிகுயேலை படிப்புக்கு அழைத்தார். இவர் அருகிலிருந்த ஓர் இடத்தில் பாமர வர்க்கத்தைச் சேர்ந்த கத்தோலிக்க மிஷனரியாகவும் கம்யூனிட்டி தலைவராகவும் இருந்தார். மிகுயேல் ஏன் ஒவ்வொரு வாரமும் முன்யானிக்கு செல்கிறார் என்று அவருடைய நண்பர் ஒருநாள் கேட்டார். அதற்கு அவர் யெகோவாவைப் பற்றியும் அவருடைய வார்த்தையைப் பற்றியும் கற்றுக்கொள்ள செல்வதாக பதிலளித்தார். அப்போது இந்தக் கேள்வி எழுந்தது: “நாம் ஏன் இங்கேயே பைபிளை படிக்கக்கூடாது?” மிகுயேல் சமூகத்திலுள்ளவர்கள் அக்கறை காட்டியதால் சாட்சிகள் அங்கே கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

மிகுயேல் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார். ஆனால் கத்தோலிக்க மிஷனரியாகவும் உதவி கவர்னராகவும் அவர் வகித்துவந்த பதவியை என்ன செய்வது? கம்யூனிட்டி ஹாலில் நடந்த ஒரு கூட்டத்தில் கத்தோலிக்க மிஷனரி பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வேறு ஒருவர் இப்போது நியமிக்கப்படுவாரா? கூட்டத்திலிருந்த ஒருவர், “நாம்தான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோமே, நமக்கு ஏன் மற்றொரு மிஷனரி?” என்று குரல் கொடுத்தார். ஆம், யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுத்த காரியங்களைத்தான் இவர் இப்படிச் சொன்னார். உடனே மற்றொரு நபர், “நீங்கள் மட்டும் ராஜினாமா செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏன் நாமெல்லாருமே சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிடக் கூடாது?” என்றார். அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமனதாக “நாங்கள் எல்லாரும் ராஜினாமா செய்கிறோம்!” என்று உரத்தக் குரலில் கூறினார்கள்.

அதற்குப்பின் விக்கிரகங்கள், சிலுவைகள் ஆகியவற்றை பற்றி கம்யூனிட்டி கூட்டத்தில் கலந்துபேசினார்கள். அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் உபாகமம் 7:25-ஐ வாசித்துப் பார்க்கும்படி ஒருவர் யோசனை கூறினார். அது இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.”

விக்கிரகங்களையெல்லாம் அக்கினியில் சுட்டெரித்துவிடலாம் என்பதை ஆதரிக்கிறவர்கள் கைகளை உயர்த்தும்படி அவர் கேட்டார். உடனடியாக அனைவரும் கைகளை உயர்த்தி விட்டார்கள். (அப்போஸ்தலர் 19:19, 20) இப்போது அந்தச் சமூகத்திலுள்ள 25 குடும்பங்களில் 23 குடும்பங்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கின்றன. இரண்டு பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக சேவை செய்து வருகிறார்கள், ஐந்து தம்பதிகள் யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான நிலைநிற்கையைக் கொண்டிருக்கும் பொருட்டு தங்கள் திருமணங்களை சட்டப்படி பதிவுசெய்வதற்காக முயன்று வருகிறார்கள்.​—தீத்து 3:1; எபிரெயர் 13:⁠4.

ஆடியோ வீடியோ உதவியோடு கற்பித்தல்

ஆல்டிபிளானோவில் படித்தவர்கள் குறைவாக இருப்பதால், உள்ளூர் மொழிகளில் கிடைக்கும் உவாட்ச் டவர் ஆடியோ வீடியோ கேசட்டுகள் பெரும் உதவியாக இருக்கின்றன, வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் அவை உதவியாக இருக்கின்றன. டோரா என்ற பெயருள்ள ஒரு விசேஷப் பயனியர் ஆடியோ கேசட்டின் உதவியால் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டில் படிப்புகளை நடத்துகிறார். ஒரு பாராவை கேட்கும்படி போட்டுவிட்டு, பின்னர் அவர்கள் காதால் கேட்ட பாராவிற்குரிய கேள்வியை பைபிள் மாணாக்கரிடம் கேட்கிறார்.

உள்ளூர் வானொலி நிலையம், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் ஒரு சில பகுதிகளை கொச்சுவா மொழியில் தவறாமல் ஒலிபரப்பி வருகிறது. ஸ்பானிய மொழியில் வெளியாகும் விழித்தெழு! பத்திரிகையின் சில பகுதிகளையும் அது ஒலிபரப்புகிறது. ஆகவே அநேகர் ராஜ்ய செய்தியை அடையாளம் கண்டுகொள்கின்றனர், யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வீடுகளைச் சந்திக்கும்போது இன்னும் அதிகமாக அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

பொதுவாக உலகத்தின் கண்களில் ஆல்டிபிளானோ கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் கடவுளின் கண்களில் அப்படி இல்லை. யெகோவா மனிதகுலத்தின் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக, ஆண்டிஸ் மலைத் தொடரிலுள்ள ஆல்டிபிளானோவில் வாழும் அநேக ஆட்கள் உண்மை வணக்கத்தின் கம்பீரமான வீட்டை மகிமைப்படுத்தும் திரளான கூட்டத்தின் பாகமாக ஆகிவருகிறார்கள்.​—ஆகாய் 2:⁠7.

[அடிக்குறிப்பு]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.