Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சோர்ந்துபோகிறவனை யெகோவா பலப்படுத்துகிறார்

சோர்ந்துபோகிறவனை யெகோவா பலப்படுத்துகிறார்

சோர்ந்துபோகிறவனை யெகோவா பலப்படுத்துகிறார்

“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் [யெகோவா] பலம் கொடுக்கிறார், சக்தியில்லாதவனுக்கு வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார்.”​—ஏசாயா 40:29, திருத்திய மொழிபெயர்ப்பு.

1. கடவுளின் படைப்பில் காணப்படும் ஆற்றலை விளக்குங்கள்.

 யெகோவா பலத்தில் ஈடிணையற்றவர். அவருடைய படைப்புகளில்தான் எப்பேர்ப்பட்ட வல்லமை! நுண்ணிய அணுக்களின் கூட்டமைப்பினால் உருவானவையே அனைத்துப் பொருட்களும். ஒரு சொட்டு தண்ணீரில் மட்டுமே பத்துலட்சம் கோடி கோடி அணுக்கள் இருக்கிறதென்றால் அந்த ஒவ்வொரு அணுவும் எவ்வளவு சிறியதாக இருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும். a பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரும் சூரியனின் அணு ஆற்றலை சார்ந்திருக்கிறது. பூமியில் ஜீவராசிகள் வாழ சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றல் எந்தளவுக்குத் தேவைப்படுகிறது? சூரிய ஒளி பிறப்பிக்கும் ஆற்றலில் சிறு துளியே பூமியை வந்தடைகிறது. இச்சிறு துளி ஆற்றலும், உலகத்திலுள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மொத்த ஆற்றலைக் காட்டிலும் மிக மிக அதிக ஆற்றலாகும்.

2. யெகோவாவின் பலத்தைப் பற்றி ஏசாயா 40:26 என்ன சொல்கிறது?

2 அணுவைப் பற்றியோ மிகப் பரந்த அண்டத்தைப் பற்றியோ யோசிக்கையில் யெகோவாவின் ஒப்பற்ற பலத்தில் நம் மனம் ஆழ்ந்துவிடுகிறது. அவர் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை: “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:26) யெகோவா ‘மகா பலமுள்ளவர்,’ இந்த சர்வலோகத்தையும் படைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ‘மகா வல்லமைக்கு’ அவரே ஊற்றுமூலம்.

இயல்புக்கு அதிகமான பலம் தேவை

3, 4. (அ) நமக்கு சோர்வுண்டாக்கும் சில காரியங்கள் யாவை? (ஆ) என்ன கேள்வியை சிந்திப்பது அவசியம்?

3 கடவுள் பலத்தில் ஈடிணையற்றவர், மனிதரோ சோர்ந்து போகிறவர்கள். நாம் எங்கு சென்றாலும் சோர்வடையும் ஜனங்களைத்தான் காண்கிறோம். கண் விழிக்கையிலும் சோர்வு, பள்ளிக்கோ வேலைக்கோ செல்கையிலும் சோர்வு, வீடு திரும்புகையிலும் சோர்வு, படுக்கைக்குச் செல்கையிலும் சோர்வு. சிலர் எங்காவது போய் நன்கு இளைப்பாற விரும்புகிறார்கள். யெகோவாவின் ஊழியர்களாகிய நாமும் சோர்வடைகிறோம், ஏனெனில் நம்முடைய தேவபக்தியுள்ள வாழ்க்கையில் மும்முரமாக செயல்பட வேண்டியுள்ளது. (மாற்கு 6:​30, 31; லூக்கா 13:24; 1 தீமோத்தேயு 4:8) மற்ற அநேக காரியங்களும் நம்முடைய பலத்தை சக்கையாய் பிழிந்தெடுக்கின்றன.

4 நாம் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், பொதுவாக எல்லாரும் அனுபவிக்கும் பிரச்சினைகளை நாமும் அனுபவிக்கிறோம். (யோபு 14:1) நோயோ பணக் கஷ்டமோ அல்லது வேறு கஷ்டங்களோ மனச்சோர்வை உண்டாக்குகையில் நாம் ஊக்கமிழந்து போகலாம். இந்த சவால்களோடுகூட நீதியினிமித்தம் வரும் துன்புறுத்துதல்களையும் சோதனைகளையும் எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:​12; 1 பேதுரு 3:​14) உலகத்திலிருந்து வரும் அன்றாட தொல்லைகளாலும் ராஜ்ய செய்தியை பிரசங்கிக்கும் நம்முடைய ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகளாலும் நம்மில் சிலர் அந்தளவுக்கு சோர்வுற்றிருப்பதால், யெகோவாவின் சேவையில் சற்று தளரலாம். மேலும், பிசாசாகிய சாத்தான் நம்முடைய உத்தமத்தை முறிப்பதற்கு தன்னால் இயன்ற எல்லா வழிவகைகளையும் உபயோகிக்கிறான். அப்படியானால், சோர்ந்து விலகிவிடாதபடி நம்மை காத்துக்கொள்வதற்கு தேவைப்படும் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு பெறலாம்?

5. நம்முடைய கிறிஸ்தவ ஊழியத்தை நிறைவேற்ற ஏன் மனித பலத்தைவிட அதிகம் தேவைப்படுகிறது?

5 ஆவிக்குரிய பலத்திற்காக சர்வவல்லமையுள்ள படைப்பாளராகிய யெகோவாவில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். கிறிஸ்தவ ஊழியத்தை செய்வதற்கு, அபூரண மனிதரின் இயல்பான பலம் மட்டுமே போதாது; அதைவிட அதிகமான பலம் தேவை என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “இந்த மகத்துவமுள்ள [“இயல்புக்கு அப்பாற்பட்ட,” NW] வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த “ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை” பூமிக்குரிய நம்பிக்கையுடைய தங்கள் தோழர்களின் உதவியோடு நிறைவேற்றுகிறார்கள். (2 கொரிந்தியர் 5:​18; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9) அபூரண மனிதராகிய நாம் துன்புறுத்தலின் மத்தியிலும் கடவுளுடைய ஊழியத்தைச் செய்வதால், அதை நம் சொந்த பலத்தில் மட்டுமே செய்ய முடியாது. யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் நமக்கு உதவி செய்கிறார். இவ்வாறு நம்முடைய பலவீனம் அவருடைய பலத்தை மிகைப்படுத்திக் காட்டுகிறது. “நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்” என்ற உறுதிமொழி நமக்கு எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது!​—சங்கீதம் 37:⁠17.

‘யெகோவாவே நம் புதுப்பலம்’

6. யெகோவாவே நம் பலத்திற்கு மூலகாரணர் என்று வேதவசனங்கள் எவ்வாறு நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன?

6 நம்முடைய பரம தகப்பன் ‘மகா வல்லமையுள்ளவர்,’ எனவே நம்மை ஊக்குவிப்பது அவருக்கு வெகு சுலபம். சொல்லப்போனால் பைபிள் இவ்வாறு உற்சாகமளிக்கிறது: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் [யெகோவா] பலம் கொடுக்கிறார், சக்தியில்லாதவனுக்கு வல்லமையைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் விழுவார்களே. யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” (ஏசாயா 40:29-31, தி.மொ.) ஓடுகிறவன் களைத்துப்போய் இனிமேலும் ஓட முடியாதென உணருவது போலவே, தொல்லைகள் அதிகரிக்கும்போது நாமும் சில சமயங்களில் களைப்படையலாம். ஆனால், ஜீவனை பெறுவதற்கான ஓட்டத்தில் எல்லைக்கோடு நம் எதிரிலேயே இருப்பதால் நாம் தளர்ந்து நின்றுவிடக்கூடாது. (2 நாளாகமம் 29:11) நம்முடைய எதிராளியாகிய பிசாசானவன் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்” சுற்றித்திரிகிறான். எப்படியாவது நம்மை நிறுத்திவிடும்படி விரும்புகிறான். (1 பேதுரு 5:8) ‘யெகோவா நம் பலம், நம் கேடகம்,’ ‘சோர்ந்துபோகிறவனுக்கு பலம் கொடுப்பதற்கு’ ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைப்போமாக.​—சங்கீதம் 28:⁠7, தி.மொ.

7, 8. தாவீதையும் ஆபகூக்கையும் பவுலையும் யெகோவா பலப்படுத்தினார் என்பதற்கு என்ன சான்று இருக்கிறது?

7 பெரும் இடையூறுகளை எதிர்ப்படுகையில் சோர்வுறாமல் செயல்படுவதற்குத் தேவையான பலத்தை தாவீதுக்கு யெகோவா கொடுத்தார். யெகோவாவில் முழு விசுவாசமும் உறுதியான நம்பிக்கையும் வைத்திருந்த தாவீது இவ்வாறு எழுதினார்: “கடவுளிடமிருந்தே புதுப்பலத்தைப் பெறுவோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.” (சங்கீதம் 60:12, NW) தீர்க்கதரிசியாக தனக்கு நியமிக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கு ஆபகூக்கையும் யெகோவா பலப்படுத்தினார். ஆபகூக் 3:19-⁠ல் (தி.மொ.) இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது: “ஆண்டவராகிய யெகோவா என் பலம், அவர் என் கால்களை பெண்மான் கால்களைப்போலாக்கி என் உயர்மேடுகள்மேல் என்னைச் செல்லச் செய்வார்.” மேலும், பவுலின் முன்மாதிரியும் கவனிக்கத்தக்கது, அவர் எழுதினார்: “என்னைப் பெலப்படுத்துகிறவருக்குள் [கடவுளுக்குள்] எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு வல்லமையுண்டு.”​—⁠பிலிப்பியர் 4:⁠13, தி.மொ.

8 தாவீதையும் ஆபகூக்கையும் பவுலையும் போல், நம்மையும் பலப்படுத்த கடவுளுக்கு திறமை இருக்கிறது, காப்பாற்றுவதற்கான வல்லமை இருக்கிறது என்பதில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். உன்னத பேரரசரான கர்த்தராகிய யெகோவா நம்முடைய ‘புதுப்பலத்திற்கு’ மூலகாரணர் என்பதை மனதில்கொண்டு, கடவுள் செய்திருக்கும் ஏராளமான ஏற்பாடுகளிலிருந்து ஆவிக்குரிய பலத்தை பெறும் சில வழிகளை நாம் இப்போது சிந்திக்கலாம்.

நம்மை உயிர்ப்பூட்டுவதற்கு ஆவிக்குரிய ஏற்பாடுகள்

9. நம்மை போஷிப்பதில் கிறிஸ்தவ பிரசுரங்கள் என்ன பாகத்தை வகிக்கின்றன?

9 வேதவசனங்களை கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியுடன் ஊக்கந்தளராமல் படிப்பது நம்மை உயிர்ப்பித்து தாங்கி வழிநடத்த முடியும். சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:1-3) உடல் பலத்தை காத்துவருவதற்கு நாம் உணவு உட்கொள்வது அவசியம். அதேபோல நம்முடைய ஆவிக்குரிய பலத்தைக் காத்துவருவதற்கு, கடவுள் தம்முடைய வார்த்தையின் மூலமும் கிறிஸ்தவ பிரசுரங்களின் மூலமும் அருளும் ஆவிக்குரிய உணவை நாம் உட்கொள்வது அவசியம். ஆகையால் அர்த்தமுள்ள படிப்பும் தியானிப்பும் மிக முக்கியமானவை.

10. படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நாம் எப்போது நேரத்தை ஒதுக்கலாம்?

10 ‘தேவனுடைய ஆழமான’ காரியங்களை தியானிப்பது, நிச்சயமாகவே பலனளிக்கிறது. (1 கொரிந்தியர் 2:​10) ஆனால், தியானிப்பதற்கு நாம் எப்போது நேரத்தை ஒதுக்கலாம்? ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கு “சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்[தான்.]” (ஆதியாகமம் 24:63-67) சங்கீதக்காரனாகிய தாவீது, “இராச்சாமங்களில் உம்மைத் [கடவுளை] தியானிக்கிறேன்” என்றார். (சங்கீதம் 63:6) நாம் காலையிலோ மாலையிலோ இரவிலோ எந்த நேரத்திலாகிலும் கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதை தியானிக்கலாம். அத்தகைய படிப்பும் தியானமும், ஆவிக்குரிய பிரகாரமாக பலப்படுத்தும் யெகோவாவின் மற்றொரு ஏற்பாடாகிய ஜெபத்திற்கு வழிநடத்துகிறது.

11. தவறாமல் ஜெபிப்பதற்கு நாம் ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

11 தவறாமல் கடவுளிடம் ஜெபிப்பது, நம்மை உயிர்ப்பூட்டுகிறது. ஆகையால் நாம் ‘ஜெபத்தில் உறுதியாக தரித்திருப்போமாக.’ (ரோமர் 12:12) சில சமயங்களில் ஒரு சோதனையைச் சமாளிப்பதற்கு தேவையான ஞானத்திற்காகவும் பலத்திற்காகவும் திட்டவட்டமாக வேண்டுதல் செய்யலாம். (யாக்கோபு 1:​5-8) மேலும், கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதை கவனிக்கையிலும் அவருடைய சேவையில் தொடர்ந்திருக்க நம்மை அவர் பலப்படுத்தியிருப்பதைக் காண்கையிலும், நாம் கடவுளுக்கு நன்றியும் துதியும் செலுத்துவோமாக. (பிலிப்பியர் 4:​6, 7) ஜெபத்தில் நாம் யெகோவாவிடம் எப்போதும் நெருங்கியிருந்தால், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். “இதோ, தேவன் எனக்குச் சகாயர்” என்று தாவீது பாடினார்.​—சங்கீதம் 54:⁠4.

12. பரிசுத்த ஆவிக்காக நாம் ஏன் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்?

12 நம்முடைய பரம தகப்பன் பரிசுத்த ஆவியால், அதாவது செயல்படும் சக்தியால் நம்மை ஊக்குவித்து பலப்படுத்துகிறார். பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் . . . பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், . . . அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.” (எபேசியர் 3:14-16, 19) யெகோவா தம்முடைய ஆவியை அருளி நம்மை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன், நாம் பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்க வேண்டும். இயேசு இவ்வாறு நியாயங்காட்டி பேசினார்: ஒரு பிள்ளை மீனைக் கேட்டால், அன்புள்ள தகப்பன் அவனுக்கு ஒரு பாம்பைக் கொடுப்பாரா? நிச்சயமாகவே கொடுக்க மாட்டார். ஆகவே அவர் இவ்வாறு சொல்லி முடித்தார்: “[பாவிகளும் ஏறக்குறைய] பொல்லாதவர்க[ளுமாகிய] நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” (லூக்கா 11:11-13) இத்தகைய நம்பிக்கையுடன் நாம் ஜெபிப்போமாக. கடவுள் தம்முடைய ஆவியால் உண்மையுள்ள ஊழியர்களுக்கு ‘வல்லமை தந்து பலப்படுத்த’ முடியும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைப்போமாக.

சபை தரும் பக்கபலம்

13. கிறிஸ்தவக் கூட்டங்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?

13 கிறிஸ்தவ சபை கூட்டங்களின் மூலமாய் யெகோவா நம்மை ஊக்கப்படுத்துகிறார். இயேசு சொன்னார்: “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” (மத்தேயு 18:20) இயேசு இந்த வாக்குறுதியைக் கொடுத்தபோது, சபையை முன்நின்று நடத்துவோர் கவனம் செலுத்த வேண்டிய காரியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். (மத்தேயு 18:15-​19) எனினும், இந்த நியமமே நம்முடைய எல்லா கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் மாநாடுகளுக்கும் பொருந்துவதால், இவை அவர் மூலமாக செய்யப்படும் ஜெபத்துடன் தொடங்கப்பட்டு முடிக்கப்படுகின்றன. (யோவான் 14:14) ஆகையால், அத்தகைய கூட்டங்களுக்கு சிலரே வந்திருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தாலும், நாம் அவற்றிற்குச் செல்வது ஒரு சிலாக்கியம். ஆகையால், நம்மை ஆவிக்குரிய பிரகாரமாக பலப்படுத்தவும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவவும் திட்டமிடப்பட்ட இந்த ஏற்பாடுகளுக்கு நன்றியறிதலைக் காட்டுவோமாக.​—எபிரெயர் 10:24, 25.

14. கிறிஸ்தவ மூப்பர்களின் முயற்சியால் நாம் என்ன நன்மையடைகிறோம்?

14 கிறிஸ்தவ மூப்பர்கள் ஆவிக்குரிய உதவியும் ஊக்குவிப்பும் அளிக்கிறார்கள். (1 பேதுரு 5:​2, 3) இன்று பயணக் கண்காணிகள் செய்வதுபோல், பவுல் தான் சேவை செய்த சபைகளுக்கு உதவியளித்து ஊக்குவித்தார். உண்மையில், பரஸ்பர உற்சாகத்தால் ஊக்கமடைய உடன் விசுவாசிகளின் கூட்டுறவுக்காக ஏங்கினார். (அப்போஸ்தலர் 14:19-​22; ரோமர் 1:​10, 11) ஆவிக்குரிய பிரகாரமாய் நம்மை பலப்படுத்துவதில் பெரும்பாகம் வகிக்கும் நமது சபை மூப்பர்களுக்கும், மற்ற கிறிஸ்தவ கண்காணிகளுக்கும் எப்போதும் போற்றுதல் காட்டுவோமாக.

15. சபையிலுள்ள உடன்விசுவாசிகள் நமக்கு எவ்வாறு ‘பக்கபலமாக’ இருக்கிறார்கள்?

15 சபையிலுள்ள உடன்விசுவாசிகள் நமக்கு ‘பக்கபலமாக’ இருக்க முடியும். (கொலோசெயர் 4:​10, 11, NW) ‘உண்மையான தோழர்களாக’ இக்கட்டான காலங்களில் அவர்கள் நமக்கு உதவி செய்யலாம். (நீதிமொழிகள் 17:17, NW) உதாரணமாக, 1945-⁠ல், நாஸி கட்டுப்பாட்டில் சாக்சன்ஹாவ்சன் சித்திரவதை முகாமிலிருந்து கொண்டு போகப்பட்ட கைதிகளில் 220 பேர் கடவுளின் ஊழியர்கள். இவர்கள் 200 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியதாக இருந்தது. அவர்கள் ஒரு தொகுதியாக பயணப்பட்டார்கள். பலமுள்ளவர்கள் மிக பலவீனமாக இருந்தவர்களை சிறிய கட்டை வண்டிகளில் ஏற்றி இழுத்துச் சென்றார்கள். அதன் முடிவு? அந்தச் சித்திரவதை முகாம் கைதிகளில் 10,000-⁠க்கும் மேற்பட்டவர்கள் இந்த மரண அணிவகுப்பிலேயே மாண்டார்கள். ஆனால் அந்தக் கைதிகளில் யெகோவாவின் சாட்சிகளாக இருந்த ஒருவரும் சாகவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தர புத்தகம், யெகோவாவின் சாட்சிகள்​—⁠கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்கள் போன்ற ஆங்கில உவாட்ச் டவர் பிரசுரங்களில் இத்தகைய அறிக்கைகள் காணப்படுகின்றன. கடவுள் தம்முடைய ஜனங்களைப் பலப்படுத்துவதால் அவர்கள் மனம் தளர்ந்துவிடுவதில்லை என்பதை இவை நிரூபிக்கின்றன.​—கலாத்தியர் 6:9. b

வெளி ஊழியத்தால் பலப்படுத்தப்படுதல்

16. ஊழியத்தில் தவறாமல் ஈடுபடுவது ஆவிக்குரிய விதத்தில் நம்மை எவ்வாறு பலப்படுத்துகிறது?

16 ராஜ்யத்தை பிரசங்கிப்பதில் தவறாமல் பங்குகொள்வது, ஆவிக்குரிய பிரகாரமாய் நம்மை பலப்படுத்துகிறது. இது கடவுளுடைய ராஜ்யத்தின்மீது நம் கவனத்தை ஊன்ற வைக்கிறது. மேலும் நித்தியத்துவத்தையும் அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் மனதில் வைத்திருக்க நமக்கு உதவி செய்கிறது. (யூதா 20, 21) வேதப்பூர்வமான வாக்குறுதிகளை ஊழியத்தில் நாம் பேசும்போது அவை நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதோடு, தீர்க்கதரிசியாகிய மீகாவைப்போல், “நாங்களும் எங்கள் கடவுளாகிய யெகோவாவின் நாமத்திலே என்றென்றுமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்” என்று திடத்தீர்மானத்துடன் இருக்கவும் உதவி செய்கின்றன.​—மீகா 4:⁠5, தி.மொ.

17. வீட்டு பைபிள் படிப்பு சம்பந்தமாக என்ன ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன?

17 மற்றவர்களுக்குப் போதிக்கும்போது நிறைய வேதவசனங்களை பயன்படுத்துவதால் யெகோவாவிடம் நம்முடைய சொந்த உறவு பலப்படுகிறது. உதாரணமாக, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்திலிருந்து பைபிள் படிப்புகளை நடத்துகையில், இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள பல வேதவசனங்களை வாசித்து சிந்திப்பது ஞானமானது. இது, அந்த மாணாக்கருக்கும் உதவி செய்கிறது, நம் சொந்த புரிந்துகொள்ளுதலையும் கூர்மையாக்குகிறது. ஏதாவதொரு பைபிள் கருத்தையோ உதாரணத்தையோ மாணாக்கரால் புரிந்துகொள்ள முடியாவிட்டால், அவற்றை முதலில் தெளிவுபடுத்தலாம். அறிவு புத்தகத்திலுள்ள ஓர் அதிகாரத்தை அன்றே படித்து முடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கடவுளிடம் நெருங்கிவர மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக, நன்றாய் தயாரிப்பதிலும் கூடுதலான முயற்சி எடுப்பதிலும் நாம் எவ்வளவாய் மகிழ்ச்சி அடைகிறோம்!

18. அறிவு புத்தகம் பலன்தரும் வகையில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை கூறுங்கள்.

18 ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரக்கணக்கானோர்​—⁠பைபிளைப் பற்றி தெரிந்தவர்களும் அதைப் பற்றி கொஞ்சம்கூட தெரியாதவர்களும்​—⁠யெகோவாவின் ஒப்புக்கொடுத்த ஊழியராவதற்கு இந்த அறிவு புத்தகம் பலன்தரும் முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, பரதீஸைப் பற்றி யெகோவாவின் சாட்சி ஒருவர் பேசியதை இலங்கையில் ஒரு சிறுவன் கேட்டான். சில ஆண்டுகளுக்குப் பின்பு, அந்தப் பெண்மணியை சந்தித்தான்; சீக்கிரத்தில் அந்தப் பெண்மணியின் கணவர் அவனுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். சொல்லப்போனால், இந்த இளைஞன் படிப்புக்காக தினந்தோறும் வந்தான். எனவே அறிவு புத்தகம் சீக்கிரத்தில் படித்து முடிக்கப்பட்டது. அவன் எல்லா கூட்டங்களுக்கும் வரத் தொடங்கினான். இந்து மதத்தை விட்டு விலகி ஒரு ராஜ்ய பிரஸ்தாபியானான். அவன் முழுக்காட்டப்படுகையில், தனக்கு அறிமுகமான ஒருவருக்கு ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்தான்.

19. ராஜ்யத்தை நாம் முதலாவதாக தேடுகையில் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?

19 ராஜ்யத்தை முதலாவதாக தேடுவது நமக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. (மத்தேயு 6:​33) நமக்கு பல்வேறு சோதனைகள் வந்தாலும் மகிழ்ச்சியோடும் பக்தி வைராக்கியத்தோடும் நற்செய்தியை தொடர்ந்து அறிவிக்கிறோம். (தீத்து 2:​14) நம்மில் பலர் முழுநேர பயனியர் சேவை செய்கிறோம். சிலரோ சுவிசேஷகர்கள் அதிகமாக தேவைப்படும் இடங்களில் சேவிக்கிறோம். இந்த விதமாகவோ அல்லது வேறு விதமாகவோ ராஜ்ய அக்கறைகளை நாம் சந்தோஷமாய் முன்னேற்றுவிக்கையில், யெகோவா நம்முடைய கிரியையையும் தமது நாமத்திற்காக காண்பிக்கிற அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடமாட்டார் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.​—எபிரெயர் 6:10-12.

யெகோவாவின் பலத்தில் தொடர்ந்து செயல்படுங்கள்

20. பலத்திற்காக யெகோவாவை சார்ந்திருக்கிறோம் என்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?

20 நாம் யெகோவாவை நம்புகிறோம், பலத்திற்காக அவரையே சார்ந்திருக்கிறோம் என்பதை மனப்பூர்வமாயும் முழு இருதயத்தோடும் காட்டுவோமாக. ‘உண்மையுள்ள அடிமையின்’ வாயிலாக அவர் அருளும் ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இதை காண்பிக்கலாம். (மத்தேயு 24:45, NW) கிறிஸ்தவ பிரசுரங்களின் உதவியோடு தனிப்பட்ட விதமாகவும் சபையிலும் கடவுளுடைய வார்த்தையை படிப்பது, இருதயப்பூர்வமான ஜெபம், மூப்பர்களின் ஆவிக்குரிய உதவி, உண்மையுள்ள உடன்விசுவாசிகளின் சிறந்த முன்மாதிரிகள், ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது ஆகியவை யெகோவாவுடன் நம் உறவைப் பலப்படுத்தி தொடர்ந்து பரிசுத்த சேவை செய்ய நமக்கு உதவும் சில வழிவகைகள்.

21. கடவுள் அருளும் பலத்தின் அவசியத்தை அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும் எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்?

21 நாம் பலவீனராக இருந்தாலும் உதவிக்காக யெகோவாவில் நம்பிக்கை வைத்திருந்தால், தம்முடைய சித்தத்தைச் செய்ய யெகோவா நம்மை பலப்படுத்துவார். அத்தகைய உதவி தேவை என்பதை உணர்ந்து, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “ஒருவன் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்.” (1 பேதுரு 4:​11) மேலும் பவுல், “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்” என்று சொன்னபோது, கடவுள் அருளும் பலத்தின்மீது தனக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். (2 கொரிந்தியர் 12:10) இதே போன்ற உறுதியை நாமும் காட்டி, சோர்ந்துபோகிறவனைப் பலப்படுத்தும் ஈடற்ற உன்னத பேரரசரான கர்த்தராகிய யெகோவாவுக்கு மகிமை சேர்ப்போமாக.​—ஏசாயா 12:⁠2.

[அடிக்குறிப்புகள்]

a அமெரிக்காவில் இந்த எண்ணிக்கையைக் குறிப்பிட 1-⁠க்குப் பின் 20 பூஜ்யங்களை சேர்க்கின்றனர்.

b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டவை.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

• யெகோவாவின் ஜனங்களுக்கு ஏன் இயல்புக்கு அப்பாற்பட்ட பலம் தேவை?

• கடவுள் தம்முடைய ஊழியரைப் பலப்படுத்துகிறார் என்பதற்கு வேதப்பூர்வமான என்ன நிரூபணம் இருக்கிறது?

• நம்மை பலப்படுத்துவதற்கு யெகோவா செய்திருக்கும் ஆவிக்குரிய ஏற்பாடுகள் சில யாவை?

• பலத்திற்காக நாம் கடவுளை சார்ந்திருக்கிறோம் என்று எவ்வாறு காட்டலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 12-ன் படம்]

மற்றவர்களுக்குப் போதிக்க பைபிளை நாம் பயன்படுத்துகையில், யெகோவாவுடன் நம்முடைய உறவு பலப்படுகிறது