Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் அதை நம்ப வேண்டுமா?

நீங்கள் அதை நம்ப வேண்டுமா?

நீங்கள் அதை நம்ப வேண்டுமா?

அந்த 12 வயது மாணவனுக்கு அல்ஜிப்ரா சுத்தமாக புரியவே இல்லை. அதை கஷ்டப்பட்டு புரிந்துகொள்ள அவன் முயற்சிசெய்து கொண்டிருந்தான். அவனுடைய ஆசிரியர் குழப்பமில்லாதது போல தோன்றிய அல்ஜிப்ரா கணக்கு ஒன்றைப் போட்டார்.

“x=y என்று வைத்துக்கொள்வோம், இரண்டின் மதிப்பும் 1 என்று கொள்வோம்” என்று ஆரம்பித்தார்.

‘இதுவரை நல்லா புரியுது’ என்று அந்த மாணவன் யோசித்தான்.

நியாயமாக தோன்றிய நாலு வரிகளுக்குப் பிறகு மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விடையை ஆசிரியர் எழுதினார்: “ஆகவே, 2=1!”

“இது தவறென்று யாராவது காட்டுங்கள் பார்க்கலாம்” என்று அவர் முழித்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் சவால்விட்டார்.

அல்ஜிப்ராவைப் பற்றி அதிகம் அறிந்திராத அந்த மாணவனால் அதை எவ்வாறு தவறென்று காட்டுவது என தெரியவில்லை. ஏனெனில் கணக்கில் ஒவ்வொரு வரியும் சரியாகவே தோன்றியது. என்ன இருந்தாலும் அவனுடைய ஆசிரியருக்குத்தானே கணக்கில் இவனைவிட அறிவும் அனுபவமும் அதிகம். அப்படியென்றால் இந்த அபத்தமான முடிவை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? நிச்சயமாகவே அவன் ஏற்றுக்கொள்ளக்கூடாது! ‘இதை நான் தவறென்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று தனக்குள் அவன் எண்ணிக்கொண்டான். ‘பகுத்தறிவு இது தவறு என்று எனக்குச் சொல்கிறது.’ (நீதிமொழிகள் 14:15, 18, NW) அவனுடைய ஆசிரியரோ அவனுடைய சகமாணவரோ ஒரு டாலர் கொடுத்தால் அதற்குப் பதிலாக இரண்டு டாலர் கொடுக்கப் போவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான்!

கணக்கில் எந்த இடத்தில் தவறு இருந்தது என்பதை காலப்போக்கில் அந்த மாணவன் கண்டுபிடித்துவிட்டான். அதே சமயத்தில் இந்த அனுபவத்திலிருந்து அவன் ஒரு மதிப்புள்ள பாடத்தைக் கற்றுக்கொண்டான். அதிக அறிவாளியாக இருக்கும் ஒருவர் மிகவும் கவனமாக வார்த்தை ஜாலங்களோடு, மறுக்க முடியாதது போல தோன்றும் ஒரு வாதத்தை எடுத்துரைத்தாலும் அதைக் கேட்பவர் அந்தச் சமயத்தில் அதை தவறென நிரூபிக்க முடியவில்லை என்பதற்காக அந்த முட்டாள்தனமான ஒரு முடிவை நம்ப வேண்டிய அவசியமில்லை. அந்த மாணவர் உண்மையில் 1 யோவான் 4:1-⁠ல் உள்ள நடைமுறையான பைபிள் நியமத்தின்படி தான் செய்துகொண்டிருந்தார்​—⁠அதிகாரப்பூர்வமான ஊற்றுமூலத்திலிருந்து வருவதுபோல தோன்றினாலும் நீங்கள் காதால் கேட்கும் எல்லாவற்றையும் உடனடியாக நம்ப வேண்டாம்.

அப்படியென்றால் நீங்கள் ஏற்கெனவே மனதில் வகுத்துக்கொண்டிருக்கும் சில அபிப்பிராயங்களை பிடிவாதமாக பற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. தவறான கருத்துக்களை சரிசெய்யக்கூடிய தகவலை அசட்டை செய்வது குற்றமாகும். ஆனால் அதே சமயம், அதிக அறிவும் அதிகாரமும் தனக்கிருப்பதாக சொல்லிக்கொள்ளும் ஒருவர் தொல்லைகளைக் கொண்டுவரும்போது “உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும்” இருக்க வேண்டும். (2 தெசலோனிக்கேயர் 2:2) அந்த ஆசிரியர் உண்மையில் விளையாட்டுக்காகத்தான் அப்படி செய்து கொண்டிருந்தார். சில சமயங்களில் இது விளையாட்டாக இருப்பதில்லை. மக்கள் மிதமிஞ்சி ‘சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவாக தந்திரமுமுள்ளவர்களாய்’ இருக்கலாம்.​—எபேசியர் 4:14; 2 தீமோத்தேயு 2:14, 23, 24.

வல்லுநர்கள் சொல்வது எப்போதுமே சரியாக இருக்குமா?

எந்த ஒரு துறையிலும் வல்லுநர்களாக இருப்பவர்கள் எவ்வளவுதான் விஷயமறிந்தவர்களாக இருந்தாலும், முன்னுக்குப்பின் முரணாக கருத்து சொல்லலாம். அல்லது கருத்தை மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்துக்கு ஒரு விஷயம். நோய்க்கான காரணம் பற்றி மருத்துவ விஞ்ஞானத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் சர்ச்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள். “நோய்க்கான காரணம் என்ன, அது தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறதா அல்லது சுற்றுச்சூழலும் சமுதாய சூழலும் அதற்கு காரணமா என்பதை அறிவியல் அறிஞர்கள் இன்றும் விவாதித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்” என்று ஹார்வர்டு பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் எழுதுகிறார். எதுவுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை என்று உறுதியாக நம்புகிறவர்கள், பல்வேறு நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கு நம்முடைய ஜீன்கள்தான் காரணம் என்று ஆணித்தரமாக நம்புகின்றனர். ஆனால் மற்றவர்களோ மனிதருக்கு வரும் நோயை சுற்றுச்சூழலும் வாழ்க்கை முறையுமே அதிகமாக பாதிக்கின்றன என்பர். இரு சாராருமே தங்கள் கருத்தை நிரூபிக்க உதாரணங்களையும் புள்ளிவிவரங்களையும் உடனடியாக எடுத்துக்காட்டிவிடுவர். இருந்தாலும் விவாதம் தொடர்ந்து இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மிகப் பெரிய மேதாவிகள் ஒரு சமயம் கருத்துவேறுபாட்டுக்கே இடமில்லை என்று கற்பித்த சில காரியங்கள் திரும்ப திரும்ப தவறென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பெர்டிரான்ட் ரஸல் என்ற தத்துவஞானி, அரிஸ்டாட்டிலை “தத்துவஞானிகளில் தலைசிறந்தவர்” என்று வருணித்தார். ஆனால் அதே ரஸல், அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகள் பல “முற்றிலும் தவறு” என்று சுட்டிக்காண்பித்தார். “நவீன காலம் முழுவதிலும், அறிவியலில், தர்க்க சாஸ்திரத்தில் அல்லது தத்துவஞானத்தில் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அரிஸ்டாட்டிலின் சீடர்களின் எதிர்ப்பை சமாளித்துக் கொண்டுதான் செய்ய வேண்டியிருந்தது” என்பதாக அவர் எழுதினார்.​—⁠ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் ஃபில்லாஸபி.

‘பொய்யாய் பேர்பெற்றிருக்கிற அறிவு’

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் புகழ்பெற்ற கிரேக்க தத்துவஞானிகளாகிய சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்களின் சீடர்கள் பலரை சந்தித்திருக்க வேண்டும். அந்நாளில் கல்வி கற்றிருந்தவர்கள் பெரும்பாலான கிறிஸ்தவர்களைவிட தாங்கள் அறிவில் சிறந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். இயேசுவின் சீஷர்களில் பலர் ‘மாம்சத்தின்படி ஞானிகளாக’ இருக்கவில்லை. (1 கொரிந்தியர் 1:26) உண்மையைச் சொல்லப்போனால், அந்நாளில் தத்துவ பள்ளிகளில் படித்தவர்கள் கிறிஸ்தவர்கள் நம்பிய காரியங்களை ‘பைத்தியமாக’ அல்லது “வெறும் மடமையாக,” எண்ணினார்கள்.​—1 கொரிந்தியர் 1:⁠23; ஃபிலிப்ஸ் வர்ஷன்.

நீங்கள் அந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களில் ஒருவராக இருந்திருந்தால், அந்நாளில் வாழ்ந்துவந்த மேதாவிகளின் விவாதங்களில் மயங்கிவிட்டிருப்பீர்களா அல்லது அவர்களுடைய ஞானத்தைப் பார்த்து மலைத்துப்போய் இருப்பீர்களா? (கொலோசெயர் 2:4) அதற்கு காரணமே இருந்திருக்காது என்பதை அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டினார். யெகோவா “ஞானிகளுடைய ஞானத்தை”யும் “புத்திசாலிகளுடைய புத்தியை”யும் பைத்தியமாக கருதுகிறார் என்பதை கிறிஸ்தவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். (1 கொரிந்தியர் 1:19) “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்க சாஸ்திரி எங்கே?” என்று அவர் கேட்டார். (1 கொரிந்தியர் 1:20) பவுலின் நாட்களில் இருந்த ஞானிகள், வேதபாரகர்கள், தர்க்க சாஸ்திரிகள் அறிவில் சிறந்து விளங்கியபோதிலும், மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு பரிகாரத்தை சொல்ல முடியவில்லை.

ஆகவே கிறிஸ்தவர்கள் “ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கை”களை தவிர்க்க கற்றுக்கொண்டார்கள். (1 தீமோத்தேயு 6:20) பவுல் அந்த ஞானத்தை ‘பொய்’ என்று குறிப்பிட்டதற்கு காரணம், மிக முக்கியமான ஒரு விஷயம் அதில் குறைவுபட்டிருந்தது​—⁠அவர்களுடைய கொள்கைகளை சோதித்துப் பார்ப்பதற்கு கடவுளிடமிருந்து கிடைத்ததற்கான ஒரு குறிப்பு அதில் இல்லை. (யோபு 28:12; நீதிமொழிகள் 1:7) இதன் காரணமாகவும், பிரதான வஞ்சகனாகிய சாத்தானால் குருடாக்கப்பட்டிருப்பதாலும் இந்த அறிவை பற்றிக்கொண்டிருப்பவர்களால் உண்மையை ஒருபோதும் கண்டுபிடிக்கவே முடியாது.​—1 கொரிந்தியர் 2:6-8, 14; 3:18-20; 2 கொரிந்தியர் 4:4; 11:14; வெளிப்படுத்துதல் 12:9.

பைபிள்​—⁠ஏவப்பட்டெழுதப்பட்ட ஒரு கையேடு

எழுத்து வடிவில் இருக்கும் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில், கடவுள் தமது சித்தம், நோக்கம், கொள்கைகள் ஆகியவற்றை தெரியப்படுத்தியிருப்பதை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. (2 தீமோத்தேயு 3:16, 17) அது ‘மனுஷரின் பாரம்பரியத்தின்படி லெளகிக ஞானத்தினாலும் மாயமான தந்திரத்தினாலும் ஒருவரும் அவர்களைக் கொள்ளைகொண்டு போகாதபடி’ பாதுகாப்பாயிருந்தது. (கொலோசெயர் 2:8) இன்றும் நிலைமை இதுவே. மனிதரின் குழப்பமான, முரண்படுகிற கருத்துக்களுக்கு நேர் எதிர்மாறாக, கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை நம்முடைய நம்பிக்கைகளுக்கு உறுதியான ஆதாரத்தை அளிக்கிறது. (யோவான் 17:17; 1 தெசலோனிக்கேயர் 2:13; 2 பேதுரு 1:21) அது இல்லையென்றால், மனிதரின் கொள்கைகள், தத்துவங்கள் என்ற மணற்குன்றுகளில் உறுதியாக எதையோ கட்ட முயலுவதற்கு சமமாக இருக்கும்.​—மத்தேயு 7:24-27.

‘ஆனால் சற்றுப் பொறுங்கள், அறிவியல் உண்மைகள் பைபிளை பிழையுள்ளதாக காட்டியிருக்கிறதே, அப்படியென்றால் மாறிக்கொண்டே இருக்கும் மனித தத்துவங்களைப் போலத்தானே பைபிளும் உள்ளது. அதை எப்படி நம்புவது?’ என்று யாராவது ஒருவர் கேட்கலாம். “பூமி அண்டத்தின் நடுவில் இல்லை என்ற கருத்தை நிலைநிறுத்துவதற்கு கோப்பர்நிக்கஸும் கெப்ளரும் கலிலியோவும் அரிஸ்டாட்டிலை மட்டுமல்ல பைபிளையும் சமாளிக்க வேண்டியிருந்தது” என்று பெர்டிரன்டு ரஸல் கூறினார். (நேரெழுத்து எங்களுடையது.) உதாரணமாக, 24-மணி நேரங்களைக் கொண்ட ஆறு நாட்களில் பூமி படைக்கப்பட்டது என்று பைபிள் போதிப்பதாக படைப்பை ஆதரிப்பவர்கள் இன்று அடித்துக் கூறுகின்றனர், ஆனால் பூமி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது என்பதை அல்லவா எல்லா உண்மைகளும் காட்டுகின்றன?

உண்மையில், பூமி அண்டத்தின் நடுவில் இருப்பதாக பைபிள் சொல்வது கிடையாது. கடவுளுடைய வார்த்தையின்படி போதிக்காத சர்ச் தலைவர்களின் போதனை அது. படைப்பைப் பற்றிய ஆதியாகம பதிவு, பூமி கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்திருப்பதைக் காட்டுகிறது, ஒவ்வொரு படைப்பு நாளும் 24 மணிநேரங்கள் அடங்கியது என்று அது சொல்வது கிடையாது. (ஆதியாகமம் 1:1, 5, 8, 13, 19, 23, 31; 2:3, 4) பைபிளை திறந்த மனதோடு மதிப்பிடும்போது, அது ஒரு அறிவியல் பாடபுத்தகமாக இல்லாவிட்டாலும் அது “வெறும் மடமை” இல்லை என்பது நிச்சயம். உண்மையில் நிரூபிக்கப்பட்டிருக்கும் அறிவியலோடு அது முழுமையாக ஒத்திசைவாய் இருக்கிறது. a

‘பகுத்தறியும் திறன்’

இயேசுவின் சீஷர்களில் பலர் எளிய குடும்பத்தில் பிறந்தவர்களாக, ஓரளவே கல்வி கற்றவர்களாக இருந்தபோதிலும், கடவுள் கொடுத்திருந்த மற்றொரு வரம் அவர்களிடம் இருந்தது. அவர்களுடைய பின்னணி என்னவாக இருந்தபோதிலும் அவர்களுக்கு பகுத்தறியும் திறமையும் சிந்திக்கும் திறமையும் அருளப்பட்டிருந்தது. “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று” தங்களுக்குத் தாங்களே நிரூபித்துக்கொள்ள ‘பகுத்தறியும் திறமையை’ (NW) முழுமையாக பயன்படுத்துமாறு அப்போஸ்தலன் பவுல் தன் உடன் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.​—ரோமர் 12:1, 2.

கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக இல்லாத எந்த தத்துவமும் போதனையும் பிரயோஜனமற்றதே என்பதை கடவுள் கொடுத்த ‘பகுத்தறியும் திறமையினால்’ ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தெளிவாக புரிந்துகொண்டார்கள். அவர்களுடைய நாளில் இருந்த ஞானிகள் ‘சத்தியத்தை அடக்கி’ வைத்து, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு அவர்களைச் சுற்றியிருந்த அத்தாட்சியை அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்கார[ராக]” இருக்கிறார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய உண்மையை அவர்கள் தள்ளிவிட்டதால், “தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.”​—ரோமர் 1:18-22; எரேமியா 8:8, 9.

தங்களை ஞானிகளென்று சொல்லிக்கொள்பவர்கள் “கடவுள் இல்லை” அல்லது “பைபிளை நம்ப முடியாது” அல்லது “இதுவல்ல ‘கடைசி நாட்கள்’” என்பது போன்ற கருத்துக்களை அடிக்கடி எடுத்துரைக்கிறார்கள். இந்த கருத்துக்கள் “2=1” என்று சொல்வதைப் போன்று கடவுளுடைய பார்வையில் அத்தனை முட்டாள்தனமாக உள்ளது. (1 கொரிந்தியர் 3:19) சிலர் தங்களை எவ்வளவு பெரிய மேதாவிகள் என்று சொல்லிக்கொண்டாலும், அவர்கள் கடவுளை எதிர்த்து, அவருடைய வார்த்தையை அசட்டை செய்து, பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்றை சொன்னால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில், ‘கடவுளே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யன் என்றும் தீர்மானிப்பதே’ ஞானமான செயலாகும்.​—ரோமர் 3:⁠4.

[அடிக்குறிப்பு]

a விவரங்களுக்கு, ஆங்கிலத்தில் உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ள பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா?, உங்கள்மீது அக்கறையுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகங்களைக் காண்க.

[பக்கம் 31-ன் படங்கள்]

மனிதர்களின் மாறுபடுகிற கருத்துக்களுக்கு நேர்மாறாக, பைபிள் நம்பிக்கைக்கு உறுதியான ஆதாரமளிக்கிறது

[படங்களுக்கான நன்றி]

இடது, எப்பிக்கூரஸ்: Photograph taken by courtesy of the British Museum; மேலே நடுவில், பிளேட்டோ: National Archaeological Museum, Athens, Greece; வலது, சாக்ரட்டீஸ்: Roma, Musei Capitolini