நீங்கள் கண்டடையலாமே நண்பர்களை
நீங்கள் கண்டடையலாமே நண்பர்களை
“வாழ்நாள் முழுவதிலும் ஒரு நண்பன் கிடைத்தாலே போதுமானது; இரண்டு நண்பர்கள் கிடைப்பது அதிகம்; மூன்று நண்பர்கள் கிடைப்பது அரிது.”—ஹென்றி புரூக்ஸ் ஆடம்ஸ்.
உண்மை நண்பர்கள் கிடைப்பது அரிது என்பதையே இப்படிப்பட்ட குறிப்புகள் காட்டுகின்றன. “எனக்கு யாருமே இல்லை,” “நான் யாரையும் நம்ப முடியாது,” அல்லது “என்னுடைய நாய்தான் எனக்கு பெஸ்ட் ஃபிரண்ட்.” இப்படி பலர் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். இவர்கள் நட்புக்காக ஏங்கித் தவிக்கும், தனிமையில் வாடும் மக்கள்.
நிலையான நண்பர்களை சம்பாதித்து அவர்களை இழந்துவிடாமல் இருப்பது ஒரு சவாலாக உள்ளது. “ஐக்கிய மாகாணங்களில் பெரியவர்களில் 25 சதவீதத்தினர் ‘தீராத தனிமையை’ அனுபவிக்கிறார்கள், . . . பிரான்ஸில் மக்கள் தொகையில் பாதிபேர் கடும் தனிமையுணர்ச்சியில் வாடுகிறார்கள்” என்பதை நுகர்வோர் மத்தியில் செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. டேட்டிங் கிளப்புகளும், கம்ப்யூட்டர் அரட்டை அறைகளும், செய்தித்தாள்களில் துணையை தேடுகிறவர்கள் தரும் விளம்பரங்களும், எண்ணிக்கையில் பெருகிக்கொண்டு வருவது மனிதரோடு தொடர்புவைத்துக்கொள்ள மக்களுக்கிருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.
தனிமை ஒரு நபரின் மனநிலையை பாதிப்பதோடு அவருடைய உடல் நிலையையும் பாதிக்கிறது என்கிறார் நரம்பியல் மனோதத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் வீக்ஸ். “என்னிடம் வரும் நிறைய நோயாளிகள் கவலை பீதியோடும் (anxiety phobia) மனச்சோர்வுடனும்தான் வருகிறார்கள், இவர்களை தனிமை மிகவும் பாதிக்கிறது. மனச்சோர்வு எத்தனை கடுமையாக இருக்கிறதென்பது ஒருவர் எத்தனை தனிமையாக இருக்கிறார் என்பதைப் பொருத்திருக்கிறது.”
விவாகரத்தினாலும் குடும்ப வாழ்க்கை சீர்குலைவினாலும் நிறைய பேர் தனிமையில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், பிரிட்டனில் 30 சதவீதமான ஆட்கள் தங்கள் வீட்டில் தனிமரமாகத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று அங்கு நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
“கடைசி நாட்களில்” தன்னலமான ஒரு மனப்பான்மை எங்கும் ஓங்கியிருக்கும் என ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமம் முன்னறிவித்துள்ளது. (2 தீமோத்தேயு 3:1-5) அநேகர் இன்று மற்ற மனிதர்களோடு உறவுகளை வளர்த்துக்கொள்வதைவிட வீடு அல்லது கார் போன்ற பொருளுடைமைகளில் அல்லது தங்கள் வேலைகளில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆசிரியர் அந்தோணி ஸ்டார் இவ்வாறு கூறுகிறார்: “அவர்களுடைய வாழ்க்கை, மனைவி மக்களை மையமாக கொண்டில்லாமல், அலுவலகத்தையே மையமாக கொண்டிருக்கிறது.”
உண்மை நண்பர்கள் மாணிக்கங்கள்
உங்கள் வாழ்க்கையின் தரம் உங்கள் நட்பின் தரத்தைப் பொருத்து இருக்கும். தங்களுக்காகவே வாழும் ஆட்களுக்கு மகிழ்ச்சியே இருக்காது, ஏனென்றால் அவர்களுடைய பொருட்களை அல்லது அவர்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு யாரும் இருக்கமாட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை: ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதிலே அதிக மகிழ்ச்சியுண்டு.’ (அப்போஸ்தலர் 20:35) இந்த உண்மையை பிரதிபலிக்கும் வண்ணமாக ஆங்கில கவி ஜார்ஜ் பைரன் இவ்வாறு எழுதினார்: “சந்தோஷத்தைப் பெறும் அனைவரும் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.”
நண்பர் என்பவர் யார்? ஒருவரிடம் “பாசத்தினால் அல்லது மதிப்பினால் ஒட்டிக்கொள்பவர்” என ஓர் அகராதி விளக்குகிறது. நல்ல காரியங்கள் மீது உங்கள் எண்ணங்களை ஊன்ற வைக்கும்படி ஓர் உண்மையான நண்பரால் செய்ய முடியும். கஷ்டத்திலிருக்கும்போது அவர் உங்களை உற்சாகப்படுத்தி தூக்கிவிடுவார். உங்கள் துக்கத்திலும் பங்குகொள்வார். சாலொமோன் ராஜா இவ்வாறு சொன்னார்: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) காலம் செல்ல செல்ல செல்வத்தின் மதிப்பு குறைந்துபோகலாம், ஆனால் காலம் செல்ல செல்ல உண்மையான நட்போ மலர்ந்து மணம்வீசுகிறது.
வேதாகமம் கிறிஸ்தவர்களை பாசத்தில் ‘விரிவடையும்படி’ உற்சாகப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:13, NW) மற்றவர்களிடம் நேசக்கரம் நீட்டுவது ஞானமான காரியமாகும். பிரசங்கி 11:1, 2-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.” நட்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் பல பேரோடு நட்பை வளர்த்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு கஷ்டங்கள் வரும்போது அவர்களில் சிலராவது உங்களுக்கு கைக்கொடுத்து உதவலாம்.
உண்மை நண்பர்கள் உங்களுக்கு மற்றொரு விதத்திலும் பாதுகாப்பாக இருக்கின்றனர். “சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவை” என்று நீதிமொழிகள் 27:6 கூறுகிறது. எத்தனை பேர் வேண்டுமானாலும் உங்களை புகழ்ந்து பேசலாம், ஆனால் நீங்கள் பெரிய தவறு ஏதாவது செய்துவிட்டால் அதை சுட்டிக்காட்டி அன்பான முறையில் ஆக்கப்பூர்வமான ஆலோசனையை உங்களுக்கு உண்மை நண்பர்கள்தான் கொடுப்பர், அவர்களுக்குத் தான் உங்கள்மீது உண்மையான அக்கறை.—நீதிமொழிகள் 28:23.
நெருங்கிப் பழகும் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிதான ஒரு வரம் என்று தான் சொல்லவேண்டும். அவர்கள் உங்கள் மீது நல்ல செல்வாக்கை செலுத்துவர். அப்போஸ்தலர் 10-ஆம் அதிகாரத்தில், ரோம படை அதிகாரி கொர்நேலியு செய்த ஜெபம் கேட்கப்பட்டது என்பதை ஒரு தேவதூதன் அவரிடம் அறிவிப்பதைப் பற்றி நாம் வாசிக்கிறோம். அப்போஸ்தலன் பேதுருவின் வருகையை எதிர்பார்த்து, கொர்நேலியு “தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடிவரவழைத்[தார்].” கொர்நேலியுவுக்கு நெருங்கிய நண்பர்களாயிருந்த அவர்கள் முதல் முதலாக நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விருத்தசேதனம் பண்ணப்படாத புறஜாதியாராவர்; அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றதால், கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யும் எதிர்பார்ப்பும் கிடைத்தது. கொர்நேலியுவின் நெருங்கிய நண்பர்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை எண்ணிப்பாருங்கள்!—அப்போஸ்தலர் 10:24, 44.
ஆனால் நண்பர்களை எப்படி உண்டுபண்ணலாம்? நட்பைப் பற்றி அதிகம் பேசும் பைபிள்,
நடைமுறையான ஆலோசனைகளைத் தருகிறது. (கீழேயுள்ள பெட்டியைக் காண்க.)உண்மை நண்பர்களை நீங்கள் எங்கே கண்டடையலாம்
உண்மை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டுமா, அதற்கு சிறந்த இடம் கிறிஸ்தவ சபையே. முதலாவது உங்கள் படைப்பாளரும் பரம தந்தையுமாகிய யெகோவாவையும் உங்கள் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையும் நண்பர்களாக்கிக் கொள்வதற்கு சபை தரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” என்று சொன்ன இயேசுவே தம்முடைய நண்பராயிருக்கும்படி உங்களை அழைக்கிறார். (யோவான் 15:13, 15) யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் நண்பர்களாக்கிக் கொண்டுவிட்டால், அவர்கள் உங்களை ‘நித்தியமான வீடுகளில் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று நிச்சயமாயிருக்கலாம். ஆம், யெகோவாவோடும் இயேசுவோடும் நட்பு உங்களுக்கு நித்திய ஜீவனைக் குறிக்கும்.—லூக்கா 16:9; யோவான் 17:3.
அவர்களுடைய கனிவான நட்பை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்? யெகோவாவின் கூடாரத்தில் அவருடைய நண்பர்களில் ஒருவராக இருப்பதற்கு என்ன தேவை என்பது சங்கீதம் 15-ஆம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பைபிளைத் திறந்து அந்த சங்கீதத்தில் முதல் ஐந்து வசனங்களை வாசித்துப் பாருங்கள். மேலுமாக இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.”—யோவான் 15:14.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள அறிவுரைகளை ஊக்கமாக படித்து அதன்படி நடப்பதன் மூலம், நீங்கள் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நண்பர்களாக இருக்க விரும்புவதைக் காட்டுகிறீர்கள். இவர்களை நண்பர்களாக பெறுவதற்கு யெகோவாவைப் பற்றி கற்பிக்கப்படும்
இடமாகிய கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் நீங்கள் தவறாமல் செல்ல வேண்டும். யெகோவாவுக்கு செவிகொடுக்க நீங்கள் உண்மையாக பாடுபட்டால் அவரிடமும் அவருடைய மகனிடமும் நீங்கள் நெருங்கி வருவீர்கள்.கூட்டங்களில் யெகோவாவை நேசித்து தங்கள் வாழ்க்கையில் ஆவியின் கனிகளை—அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்ற குணங்களை—பிறப்பிக்கும் ஆட்களோடு நீங்கள் பழக முடியும். (கலாத்தியர் 5:22, 23) உங்களுக்கு உண்மையிலேயே நண்பர்களை உண்டுபண்ணுவதிலும் தனிமையை விரட்டி அடிப்பதிலும் அக்கறை இருந்தால், ஒவ்வொரு வாரமும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்லுங்கள். அப்படி செய்வதே கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்ற ஜனத்தோடு நிலையான நட்பை வளர்த்துக்கொள்வதற்கு சரியான இடம், சரியான தருணம்.
என்றென்றும் நண்பர்கள்
உண்மையான நட்பு யெகோவா தேவனிடமிருந்து வரும் மகத்தான பரிசு. அது அவருடைய சொந்த ஆளுமையிலிருந்தும் பண்பிலிருந்தும் தோன்றுகிறது. அவருடைய அன்பான, தாராள குணத்தின் காரணமாகவே பூமியை அவர் புத்திக்கூர்மையுள்ள படைப்புகளால் நிரப்பியிருக்கிறார். அதனால்தான் உங்களால் அவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ள முடிகிறது. உடன் கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள். அவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊழியத்தில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள். அவர்களோடும் அவர்களுக்காகவும் தவறாமல் ஜெபியுங்கள். அப்போது நீங்கள் யெகோவாவையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள்.
நட்பு என்பது அனைவரும் கொடுக்கவும் பெற்றுக்கொள்ளவும் முடிகிற ஒரு பரிசு. சமீப எதிர்காலத்தில், உங்கள் நண்பர்களின் வட்டத்தை நீங்கள் பெரிதாக்குவதற்கு சந்தர்ப்பங்களை பெறுவீர்கள். இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லட்சக்கணக்கானவர்களையும், கடந்த காலங்களில் வாழ்ந்து, மரணத்தில் உறங்கிக்கொண்டு, ‘இனி மரணமுமில்லை’ என்று நாம் சொல்லும் அந்தக் காலத்தில் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக காத்துக்கொண்டிருக்கும் மற்றவர்களையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளலாம். (வெளிப்படுத்துதல் 21:4; யோவான் 5:28, 29) இன்முகத்தோடு பழக முயலுங்கள், யெகோவாவை நேசிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தைக்கு செவிகொடுப்பதன் மூலம் யெகோவா தேவனோடும் இயேசு கிறிஸ்துவோடும் தொடர்ந்து நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்தால் எப்போதுமே தனிமையின் தவிப்பு உங்களுக்கு இருக்காது.
[பக்கம் 22, 23-ன் பெட்டி/படங்கள்]
அழியா நட்புக்கு ஆறு படிகள்
1. நல்ல நண்பராயிருங்கள். அசைக்க முடியாத விசுவாசம் ஆபிரகாமுக்கு இருந்தபடியால் அவர் ‘யெகோவாவின் நண்பர்’ என்னப்பட்டார். (யாக்கோபு 2:23, NW) ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கடவுளிடம் தனக்கிருந்த பாசத்தை ஆபிரகாம் வெளிப்படுத்தினார் என்று பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 20:7, NW) அவராக முன்வந்து தன்னுடைய உணர்ச்சிகளை கடவுளிடம் வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 18:20-33) ஆம், உங்கள் நட்பை நிரூபிக்க நீங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். இயேசு இவ்வாறு சொன்னார்: “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்.” (லூக்கா 6:38) உற்சாகமான ஒரு வார்த்தை சொல்வதால் அல்லது ஏதோ ஒரு சிறிய உதவி செய்வதால் நட்பு வளர்ந்து ஆலமரம்போல தழைக்கலாம். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கட்டுரையாளர் ரால்ஃப் வால்டோ எமர்ஸன் ஒருசமயம் இவ்வாறு சொன்னார்: “உங்களுக்கு ஒரு நண்பர் வேண்டுமா, அதற்கு ஒரே வழி நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருப்பதே.”
2. நட்பை வளர்த்துக்கொள்ள நேரமெடுத்துக் கொள்ளுங்கள். நிறைய பேர் நட்பினால் வரும் நன்மைகளை அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு தேவையான நேரத்தை அவர்களால் முதலீடு செய்ய முடியவில்லை, அவர்கள் மிகவும் வேலையாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியையும் வெற்றியையும் துக்கங்களையும் ஏமாற்றங்களையும் பகிர்ந்துகொள்ளும்படி ரோமர் 12:15, 16 நம்மை உற்சாகப்படுத்துகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்.” எப்போதும் அதிக வேலையாயிருந்த இயேசு கிறிஸ்துகூட நண்பர்களுக்காக நேரத்தை ஒதுக்கினார். (மாற்கு 6:31-34) நட்பு என்பது பூ பூக்கும் ஒரு செடியைப் போன்றது, அது பூக்க வேண்டுமானால் அதற்கு தண்ணீர் ஊற்றி அதை கவனித்து வளர்க்க வேண்டும், அதற்கு நேரமெடுக்கும்.
3. அடுத்தவர் பேசும்போது கவனமாக கேளுங்கள். நன்றாக, கவனமாக செவிகொடுத்து கேட்பவர்களுக்கு நண்பர்கள் சுலபமாக கிடைத்துவிடுவார்கள். “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்க வேண்டும் என்று சீஷனாகிய யாக்கோபு சொல்கிறார். (யாக்கோபு 1:19) மற்றவர்களோடு பேசும்போது அவர்களுடைய உணர்ச்சிகளில் தனிப்பட்ட அக்கறை உங்களுக்கு இருப்பதைக் காட்டுங்கள். தங்களைப் பற்றி பேசும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். அவர்களை கனம்பண்ணுவதில் முந்திக்கொள்ளுங்கள். (ரோமர் 12:10) அப்போதுதான் அவர்கள் உங்களோடிருக்க விரும்புவார்கள். அதற்கு பதிலாக, ஓர் உரையாடலின்போது, மற்றவரை பேசவிடாமல் எப்போதும் நீங்களே பேசிக்கொண்டிருந்தால் அல்லது நீங்களே எல்லாருடைய கவனத்தையும் பெற வேண்டுமென்று நினைத்தால் நீங்கள் பேசுவதை கேட்க தயாராக இருக்கும் ஒருவரை அல்லது உங்கள் உணர்ச்சிகளையோ தேவைகளையோ குறித்து அக்கறையுள்ள ஒருவரை கண்டுபிடிப்பது உங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.
4. மன்னிக்கிறவராக இருங்கள். இயேசு ஒரு சமயம் பேதுருவிடம் ‘ஏழெழுபதுதரம்’ மன்னிக்க தயாராக இருக்கும்படி சொன்னார். (மத்தேயு 18:21, 22) உண்மை நண்பர் சிறிய தவறுகளை பொருட்படுத்தவே மாட்டார். இதை விளக்க: சீத்தாப்பழத்தில் கொட்டைகள் இருப்பதால் சிலருக்கு அதை சாப்பிட பிடிக்காது. ஆனால் அந்தப் பழத்தை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதன் விதைகளைப் பொருட்படுத்துவது கிடையாது. உண்மை நண்பர்கள் அவர்களுக்கிருக்கும் நேர்த்தியான குணங்களுக்காக நேசிக்கப்படுகிறார்கள்; அவர்களுடைய சிறிய குறைபாடுகளை பொருட்படுத்துவதே இல்லை. பவுல் இவ்வாறு நமக்கு அறிவுரை கூறினார்: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13) மன்னிக்க கற்றுக்கொள்கிறவர்கள் தங்கள் நண்பர்களை இழந்துவிடுவதில்லை.
5. மற்றவர்களின் தனிமைக்கு மதிப்புக்கொடுங்கள். அனைவருமே சில சமயங்களில் தனிமையில் இருக்க விரும்புகிறோம். அந்த விருப்பம் உங்கள் நண்பர்களுக்கும் இருக்கும். நீதிமொழிகள் 25:17 ஞானமாக இவ்வாறு சொல்கிறது: “உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே.” ஆகவே எவ்வளவு அடிக்கடி நண்பர்களை பார்க்க செல்கிறீர்கள் எவ்வளவு நேரம் அங்கே இருக்கிறீர்கள் என்ற விஷயங்களில் நியாயத்தன்மையோடிருங்கள். உங்கள் நண்பர் உங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தை தவிருங்கள், இல்லாவிட்டால் இது பொறாமைகொள்ள வழிநடத்தலாம். காரியங்களின்பேரில் தனிப்பட்ட உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் கூறும்போது விவேகமாக நடந்துகொள்ளுங்கள். இதனால் நட்பு புத்துயிரளிப்பதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்கும்.
6. தாராளமாக இருங்கள். தாராள குணத்தின் மூலமாகத்தான் நட்பு உருவாகிறது. “தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களு”மாயிருங்கள் என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். (1 தீமோத்தேயு 6:18) உதாரணமாக, மற்றவர்களிடம் உற்சாகமான வார்த்தைகளைப் பேசுங்கள். (நீதிமொழிகள் 11:25) பஞ்சமில்லாமல் பாராட்டுங்கள், கட்டியெழுப்பும் விதமாக பேசுங்கள். மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறையை நீங்கள் காட்டும்போது அவர்கள் உங்களிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள். அவர்கள் உங்களுக்கு என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி யோசியுங்கள்.