Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் மதிக்கவும்படுகிறது மிதிக்கவும்படுகிறது

பைபிள் மதிக்கவும்படுகிறது மிதிக்கவும்படுகிறது

பைபிள் மதிக்கவும்படுகிறது மிதிக்கவும்படுகிறது

“பரிசுத்த புத்தகங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும் என்பதே என் ஆசை” என 16-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சு நாட்டு அறிஞர் டெசிடீரியஸ் இராஸ்மஸ் எழுதினார்.

எல்லா மக்களும் வேதாகமத்தைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இராஸ்மஸின் அளவிலா ஆசை. ஆனால் பைபிளின் எதிரிகளோ இந்த யோசனையை கடுமையாக எதிர்த்தனர். சொல்லப்போனால், பைபிளில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை அறிய கடுகளவு ஆர்வம் காட்டினால்கூட ஐரோப்பாவில் அந்தச் சமயத்தில் அது பேராபத்து! இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் இவ்வாறு கட்டளை பிறப்பித்தது: “வேதாகமத்தை ஆங்கிலத்தில் படிப்பவர் எவரும் நிலத்தையும், அசையும் சொத்துக்களையும், உடைமைகளையும், உயிரையும் இழக்க வேண்டும் . . . அதை பிடிவாதமாக தொடர்ந்து வாசித்தால் அல்லது மன்னித்து விடப்பட்டவர் மீண்டும் அதை வாசித்தால், ராஜதுரோக குற்றத்திற்காக முதலில் கழுமரத்தில் தொங்கவிடப்படுவார், பின்னர் கடவுளுக்கு விரோதமான சமய பேதத்திற்காக எரிக்கப்படுவார்.”

ஐரோப்பாவின் பெருநிலப்பகுதியில், கத்தோலிக்க நீதிமன்றம் (Catholic Inquisition) “திருச்சபைக்கு எதிரான கொள்கையுடைய” பிரிவினரை தேடிப்பிடித்து ஈவிரக்கமின்றி துன்புறுத்தியது. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வால்டென்ஸஸ்கள் இப்படி துன்புறுத்தப்பட்டனர். “சுவிசேஷங்கள், நிருபங்கள், மற்ற வேதவாக்கியங்களை” பிரசங்கம் செய்ததே இதற்கு காரணம். “ஏனென்றால் பாமர மக்கள் பிரசங்கிப்பதும் பரிசுத்த வேத எழுத்துக்களை விளக்குவதும் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது.” பைபிளை நேசித்த காரணத்தால் எண்ணிலடங்கா ஆண்களும் பெண்களும் வேதனையான சித்திரவதையையும் மரணத்தையும் அனுபவித்திருக்கின்றனர். இவர்கள் ஆண்டவருடைய ஜெபத்தை அல்லது பத்து கற்பனைகளை சொல்வதற்காகவும் தங்கள் பிள்ளைகளுக்கு அதை கற்றுக்கொடுப்பதற்காகவும் தங்கள் உயிரையே பணயம் வைத்தனர்.

வட அமெரிக்காவில் குடியேறுவதற்கு கப்பலேறிய ஆங்கிலேய நாட்டவரின் மனதில் கடவுளுடைய வார்த்தையின் மீதிருந்த பக்தி கொழுந்துவிட்டெறிந்தது. ஆரம்ப காலங்களில் அமெரிக்காவில், “மதமும் வாசிப்பும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருந்தன, பைபிளில் பரிச்சயமாயிருப்பதையே அடிப்படையாக கொண்ட ஒரு கலாச்சாரம் அங்கே நிலவியது” என்று எ ஹிஸ்டரி ஆஃப் பிரைவேட் லைஃப்​—⁠பாஷன்ஸ் ஆஃப் த ரெனைசான்ஸ் என்ற புத்தகம் கூறுகிறது. அது மட்டுமா, பாஸ்டனில் 1767-⁠ல் பிரசுரிக்கப்பட்ட ஒரு பிரசங்கம் இவ்வாறு பரிந்துரை செய்தது: “பரிசுத்த வேதாகமத்தை ஊக்கமாக வாசியுங்கள். ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் உங்கள் பைபிளில் ஒரு அதிகாரத்தை வாசிக்க வேண்டும்.”

அமெரிக்காவிலுள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் சராசரியாக மூன்று பைபிள்களை வைத்திருக்கின்றனர் என கலிபோர்னியாவில் வென்ச்சூராவிலுள்ள பர்னா ஆய்வுக் குழு தெரிவித்தது. பைபிளுக்கு அங்கு அதிக மதிப்பு இருந்தாலும், “அதை வாசிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்வது, அதைப் படித்துப் பின்பற்றுவது என்பதெல்லாம் . . . மலையேறிவிட்டது” என்பதை சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு காட்டுகிறது. அநேகர் மேலோட்டமாகவே அறிந்திருக்கின்றனர். செய்தித்தாள் எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “தற்போதுள்ள பிரச்சினைகளுக்கும் கவலைகளுக்கும்கூட [பைபிளில்] விடையிருக்கும் என்ற எண்ணம் அபூர்வமாகவே உள்ளது.”

ஆன்மீகமற்ற சிந்தை எனும் அலை

மனிதன் பகுத்தறிவோடு செயல்பட்டு ஒற்றுமையாக வாழ்ந்தாலே போதும், வாழ்வில் வெற்றிக்கொடியை பறக்கவிடலாம் என்பது பலருடைய நம்பிக்கை. பைபிள் உண்மை சம்பவங்களும் சத்தியமும் அடங்கிய ஒரு புத்தகமாக கருதப்படுவதில்லை. அது சமய கருத்துக்களும் தனிப்பட்டவர்களுடைய அனுபவங்களும் கொண்ட பல புத்தகங்களில் ஒன்று என்றே கருதப்படுகிறது.

ஆகவே நாளுக்கு நாள் சிக்கலாகவும் அதிக வேதனையாகவும் ஆகிவரும் விஷயங்களை பெரும்பாலான மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? அவர்கள் தார்மீக மற்றும் மத ரீதியிலான எந்த உறுதியான வழிநடத்துதலும் அறிவுரைகளும் இல்லாமல் ஆன்மீக சூன்யத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுக்கான் இல்லாத கப்பலைப் போல “மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்க”ளாய் இருக்கிறார்கள்.​—எபேசியர் 4:⁠14.

அப்படியென்றால் பைபிள் வெறுமனே மற்றொரு மத புத்தகம் தானா? அல்லது அது உண்மையில் கடவுளுடைய வார்த்தையா, அதில் வாழ்க்கைக்கு பிரயோஜனமான, அத்தியாவசியமான தகவல் இருக்கிறதா? (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில் பயனுண்டா? என்றெல்லாம் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அடுத்தக் கட்டுரை இவற்றை கலந்தாலோசிக்கும்.

[பக்கம் 3-ன் படம்]

டெசிடீரியஸ் இராஸ்மஸ்

[படத்திற்கான நன்றி]

Deutsche Kulturgeschichte என்ற நூலிலிருந்து

[பக்கம் 4-ன் படம்]

வால்டென்ஸஸ்கள் வேதாகமத்திலிருந்து பிரசங்கித்ததற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

[படத்திற்கான நன்றி]

Stichting Atlas van Stolk, Rotterdam