Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்களா?

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்களா?

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்களா?

“என் ஆத்துமா உம்முடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டிருக்கிறது, நான் அவற்றை மிகவும் நேசிக்கிறேன்.”​—சங்கீதம் 119:167, NW.

1. கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் திரும்பத் திரும்ப குறிப்பிடப்படுவதை எங்கு நாம் முக்கியமாக காண்கிறோம்?

 யெகோவா தம்முடைய ஜனங்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார். ஆனால் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க நாம் கடவுளுடைய சட்டதிட்டங்களின்படி நடக்க வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவும் வேண்டும். இதற்காக நமக்கு நினைப்பூட்டுதல்களை கொடுக்கிறார். இவற்றை வேதவசனங்கள் திரும்பத் திரும்ப குறிப்பிடுகின்றன, முக்கியமாய் சங்கீதம் 119-⁠ல் காணலாம். இதை பெரும்பாலும் யூதாவின் இளவரசன் எசேக்கியா இயற்றியிருக்கலாம். இந்த அழகிய பாடல் இவ்வாறு ஆரம்பிக்கிறது: “தங்கள் வழியில் குற்றமற்றவர்களாய், யெகோவாவின் சட்டத்தின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள், அவருடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தொடர்ந்து தேடுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.”​—சங்கீதம் 119:​1, 2, NW.

2. எவ்வாறு கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் சந்தோஷத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன?

2 கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவை பெற்று, அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் ‘யெகோவாவின் சட்டத்தின்படி நடக்கிறோம்.’ எனினும் நாம் அபூரணராக இருப்பதால் நமக்கு நினைப்பூட்டுதல்கள் தேவை. ‘நினைப்பூட்டுதல்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெயச் சொல், கடவுள் தம்முடைய பிரமாணம், கட்டளைகள், நியமங்கள், கற்பனைகள், சட்டங்கள் ஆகியவற்றை நம்முடைய நினைவுக்குத் திரும்பக் கொண்டுவருகிறார் என்பதைக் குறிப்பிடுகிறது. (மத்தேயு 10:18-​20) இத்தகைய நினைப்பூட்டுதல்களை நாம் தொடர்ந்து கைக்கொண்டு வந்தால் மாத்திரமே சந்தோஷமாய் நிலைத்திருப்போம். ஏனெனில், பெரும் இக்கட்டிலும் துயரத்திலும் கொண்டுபோய் விடும் ஆவிக்குரிய படுகுழிகளில் விழுவதைத் தவிர்க்க அவை நமக்கு உதவி செய்கின்றன.

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை விடாது பற்றியிருங்கள்

3. சங்கீதம் 119:60, 61-⁠ன் அடிப்படையில் என்ன நம்பிக்கை நமக்கு இருக்கிறது?

3 பின்வருமாறு பாடிய சங்கீதக்காரனுக்கு கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் அருமையானவையாக இருந்தன: “உம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நான் விரைகின்றேன்; காலம் தாழ்த்தவில்லை. தீயோரின் கட்டுகள் என்னை இறுக்குகின்றன; ஆயினும், உம் திருச்சட்டத்தை நான் மறவேன்.” (சங்கீதம் 119:60, 61, பொ.மொ.) யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் துன்புறுத்துதலைச் சகிக்க நமக்கு உதவி செய்கின்றன. ஏனென்றால், சத்துருக்கள் நம்மை இறுக்கி கட்டும் கயிறுகளை நம்முடைய பரலோகத் தகப்பன் அறுத்து எறிந்துவிடுவார் என்ற திடநம்பிக்கை நமக்கு இருக்கிறது. ராஜ்ய பிரசங்க ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு அத்தகைய இடையூறுகளிலிருந்து ஏற்ற காலத்தில் நம்மை அவர் விடுதலை செய்கிறார்.​—மாற்கு 13:⁠10.

4. கடவுளின் நினைப்பூட்டுதல்களுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

4 சில சமயங்களில், யெகோவாவின் நினைப்பூட்டுதல்களால் நாம் திருத்தப்படுகிறோம். சங்கீதக்காரன் செய்தது போலவே, அத்தகைய திருத்தத்தை நாம் எப்போதும் நன்றியோடு மதிப்போமாக. அவர் ஜெப சிந்தையுடன் கடவுளிடம் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய நினைப்பூட்டுதல்கள் எனக்குப் பிரியமானவை. . . . உம்முடைய நினைப்பூட்டுதல்களை நேசிக்கிறேன்.” (சங்கீதம் 119:24, 119, NW) சங்கீதக்காரனுக்கு கிடைத்ததைவிட அதிகமான நினைப்பூட்டுதல்களை கடவுள் நமக்கு தந்திருக்கிறார். எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்து கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்படும் நூற்றுக்கணக்கான மேற்கோள்கள், நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளை மட்டுமல்லாமல், கிறிஸ்தவ சபையை பற்றிய அவருடைய நோக்கங்களையும் நமக்கு நினைப்பூட்டுகின்றன. கடவுள் தம்முடைய சட்டங்கள் சம்பந்தமான விஷயங்களை நம் நன்மைக்காக நினைப்பூட்டுகிறார். இந்த வழிநடத்துதலுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ‘யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை விடாது பற்றியிருப்பதன்’ மூலம், நம்முடைய சிருஷ்டிகருக்கும் வெறுப்புண்டாக்கி நம்முடைய சந்தோஷத்தையும் கெடுக்கும் பாவங்களைத் தவிர்ப்போம்.​—சங்கீதம் 119:⁠31, NW.

5. எவ்வாறு நாம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை மிகவும் நேசிப்போராகலாம்?

5 யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நாம் எந்தளவு நேசிக்க வேண்டும்? “என் ஆத்துமா உம்முடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டிருக்கிறது, நான் அவற்றை மிகவும் நேசிக்கிறேன்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 119:167, NW) நம்மீது உண்மையான அக்கறை வைத்திருக்கும் ஒரு தகப்பனின் அறிவுரையாக அவற்றை நாம் ஏற்றுக்கொண்டால் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை மிகவும் நேசிக்கிறவர்களாக இருப்போம். (1 பேதுரு 5:​6, 7) அவருடைய நினைப்பூட்டுதல்கள் நமக்குத் தேவை; அவை நமக்கு எப்படி பயன் தருகின்றன என்பதைப் பார்க்க பார்க்க அவற்றை நாம் அதிகமதிகமாய் நேசிப்போம்.

கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் நமக்கு ஏன் தேவை

6. யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நமக்கு ஏன் தேவை என்பதற்கு ஒரு காரணம் என்ன, அவற்றை நினைவுபடுத்திக்கொள்ள எது நமக்கு உதவி செய்யும்?

6 நாம் எதையும் சீக்கிரத்தில் மறந்துவிடும் இயல்புடையவர்கள். யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நமக்கு தேவை என்பதற்கு இது ஒரு காரணம். த உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “காலம் செல்லச் செல்ல மக்களுக்கு பொதுவாக அதிக மறதி ஏற்படுகிறது. . . . உங்கள் நுனி நாக்கில் இருக்கும் அளவுக்கு நன்றாக தெரிந்த பெயரையோ வேறு ஏதாவதொரு தகவலையோ நினைவுக்குக் கொண்டுவர முடியாமல்போன அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். . . . அடிக்கடி ஏற்படும் இத்தகைய தற்காலிக நினைவிழப்பு, ‘ரெட்ரீவல் ஃபெய்லியர்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பொருட்கள் தாறுமாறாக சிதறி கிடக்கும் ஓர் அறையில் எங்கோ தெரியாமல் வைத்துவிட்ட பொருளை தேடி கண்டுபிடிக்க முயல்வதற்கு இதை அறிவியலாளர்கள் ஒப்பிடுகிறார்கள். . . . ஒரு தகவல் நன்கு மனதில் பதிந்துவிட்டது என்று நீங்கள் நினைத்தாலும், அதை தொடர்ந்து படிப்பதே அதை மறக்காமல் நினைவில் வைப்பதற்கு நல்ல வழி.” ஊக்கமாக படிப்பதும் மீண்டும் மீண்டும் படிப்பதும், கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைத் திரும்ப நினைவுக்கு கொண்டுவரவும், நம்முடைய சொந்த நன்மைக்காக அவற்றின்படி செய்யவும் நமக்கு உதவி செய்யும்.

7. எப்பொழுதையும்விட இன்று கடவுளின் நினைப்பூட்டுதல்கள் ஏன் அதிகம் தேவை?

7 எப்பொழுதையும்விட இன்று யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நமக்கு அதிகம் தேவை. ஏனெனில் மனித சரித்திரத்திலேயே என்றும் இல்லாத அளவுக்கு பொல்லாப்பு மிகவும் அதிகரித்துவிட்டது. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்கு நாம் கவனம் செலுத்தினால், உலகத்தின் பொல்லாத வழிகளுக்குள் வஞ்சகமாக கவர்ந்திழுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான உட்பார்வையை பெறுவோம். சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய சாட்சிகள் [“நினைப்பூட்டுதல்கள்,” NW] என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.” (சங்கீதம் 119:99-101) கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை கைக்கொள்வதன்மூலம், “சகல பொல்லாத வழிகளுக்கும்” நாம் விலகியிருப்போம். மனிதரில் பெரும்பாலானோர் “மனதில் அந்தகாரப்பட்டு . . . கடவுளுக்குரிய ஜீவனுக்கு அந்நியராகி” இருக்கிறார்கள். நாம் அவர்களைப் போலாவதைத் தவிர்ப்போமாக.​—எபேசியர் 4:​17-​19, NW.

8. விசுவாச பரீட்சைகளை வெற்றிகரமாய் எதிர்ப்படுவதற்கு நாம் எப்படி இன்னும் திறம்பட்டவர்களாக முடியும்?

8 இந்த ‘முடிவுகாலத்தில்’ பல இக்கட்டுகளைச் சகிக்க கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் நம்மை பலப்படுத்துவதாலும் அவை நமக்குத் தேவை. (தானியேல் 12:4) அத்தகைய நினைப்பூட்டுதல்கள் இல்லாவிட்டால், நாம் ‘கேட்கிறதை மறக்கிறவர்களாவோம்.’ (யாக்கோபு 1:​25) ஆனால், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பாரிடமிருந்து வரும் பிரசுரங்களின் உதவியால், தனிப்பட்ட விதத்திலும் சபையிலும் வேதவசனங்களை ஊக்கந்தளராமல் படிப்பது விசுவாச பரீட்சைகளை வெற்றிகரமாய் மேற்கொள்ள நமக்கு உதவி செய்யும். (மத்தேயு 24:45-47, NW) கடும் சோதனைகளை எதிர்ப்படுகையில் யெகோவாவைப் பிரியப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண இத்தகைய ஆவிக்குரிய ஏற்பாடுகள் நமக்கு உதவி செய்கின்றன.

நம்முடைய கூட்டங்கள் வகிக்கும் முக்கியமான பாகம்

9. ‘மனித வடிவிலான வரங்கள்’ யாவர்? உடன்விசுவாசிகளுக்கு இவர்கள் எவ்வாறு உதவி செய்கிறார்கள்?

9 கிறிஸ்தவ கூட்டங்கள், கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்கான தேவையை ஓரளவு பூர்த்தி செய்கின்றன. இங்கு நியமிக்கப்பட்ட சகோதரரால் போதனை அளிக்கப்படுகிறது. இயேசு “உன்னதத்திற்கு ஏறினபோது சிறைப்பட்டவர்களைக் கொண்டுசென்றார்; மனிதரில் [“மனித வடிவிலான,” NW] வரங்களை அருளினார்” என்று பவுல் எழுதினார். பவுல் மேலும் இவ்வாறு சொன்னார்: “பரிசுத்தவான்களை சீர்திருத்துவதற்காகவும் போதக ஊழியத்திற்காகவும் கிறிஸ்துவின் சரீரமானோரைக் கட்டியெழுப்புவதற்காகவும், [கிறிஸ்து] சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் அளித்தார்.” (எபேசியர் 4:​8, 11, 12, NW) வணக்கத்திற்காக நாம் ஒன்றுகூடுகையில், ‘மனிதரில் வரங்களான’ நியமிக்கப்பட்ட மூப்பர்கள், நம்முடைய கவனத்தை யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்குத் திருப்புவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளோராக இருக்கலாம்!

10. எபிரெயர் 10:24, 25-⁠ன் முக்கியக் குறிப்பு என்ன?

10 கடவுளுடைய ஏற்பாடுகளுக்கு நன்றி உணர்வுள்ளவர்களாய் இருந்தால் ஒவ்வொரு வாரமும் ஐந்து சபை கூட்டங்களுக்கும் ஆஜராவோம். தவறாமல் ஒன்றுகூடுவதற்கான தேவையை பவுல் அறிவுறுத்தினார். அவர் எழுதினார்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”​—⁠எபிரெயர் 10:24, 25.

11. நம்முடைய வாராந்தர கூட்டங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு நமக்கு பயனளிக்கின்றன?

11 கூட்டங்களின் பயனை நீங்கள் மதிக்கிறீர்களா? வாராந்தர காவற்கோபுர படிப்பு நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது, யெகோவாவின் நினைப்பூட்டுதல்களின்படி நடக்க நமக்கு உதவி செய்கிறது, மேலும் ‘உலகத்தின் ஆவிக்கு’ எதிராக நம்மை வலுப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 2:​12; அப்போஸ்தலர் 15:31) பொதுப் பேச்சை கொடுப்பவர்கள், கடவுளுடைய வார்த்தையிலிருந்து போதனையை அளிக்கிறார்கள். இதில், யெகோவாவின் நினைப்பூட்டுதல்களும், இயேசுவின் அதிசயமான ‘நித்தியஜீவ வசனங்களும்’ அடங்கும். (யோவான் 6:​68; 7:​46; மத்தேயு 5:1–​7:​29) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நம்முடைய போதிக்கும் திறமைகள் கூர்மையாக்கப்படுகின்றன. ஊழியக் கூட்டங்கள், நற்செய்தியை வீடுவீடாக அறிவிப்பதிலும், மறுசந்திப்புகளிலும், வீட்டு பைபிள் படிப்புகளிலும், ஊழியத்தின் மற்ற அம்சங்களிலும் முன்னேற நமக்கு உதவிசெய்வதில் அளவற்ற மதிப்பு வாய்ந்ததாக உள்ளன. சபை புத்தகப் படிப்பிலுள்ள சிறிய தொகுதி கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை உட்படுத்தும் குறிப்புகளை அடிக்கடி சொல்வதற்கு மேலுமதிக வாய்ப்பை நமக்கு அளிக்கிறது.

12, 13. ஆசிய நாடு ஒன்றில் கடவுளுடைய ஜனங்கள், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கான மதித்துணர்வை எவ்வாறு காட்டியிருக்கின்றனர்?

12 சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் வருவது கடவுளுடைய கட்டளைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது. போர், பொருளாதார கஷ்டங்கள், இன்னும் அநேக விசுவாச பரீட்சைகளின் மத்தியிலும் நாம் ஆவிக்குரிய முறையில் உறுதியாய் நிலைத்திருக்க உதவுகிறது. ஆசிய நாடு ஒன்றில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, ஏறக்குறைய 70 கிறிஸ்தவர்கள் வேறுவழியில்லாமல் அடர்ந்த காட்டுக்குள் வாழ வேண்டியிருந்தது. அவர்கள் கூட்டங்களின் முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்தார்கள். தவறாமல் ஒன்றுகூட வேண்டும் என்று தீர்மானித்து, போரால் சின்னாபின்னமான தங்கள் பட்டணத்திற்குத் திரும்பிச் சென்று ராஜ்ய மன்றத்தில் மீந்திருந்தவற்றைப் பெயர்த்தெடுத்துவந்து, காட்டில் அதை திரும்பக் கட்டினார்கள்.

13 அதே நாட்டின் மற்றொரு பகுதியில், பல ஆண்டுகளாக போர் நடவடிக்கைகளைச் சகித்த பின்பும் யெகோவாவின் ஜனங்கள் ஆர்வத்துடன் இன்னும் சேவை செய்கிறார்கள். அந்தப் பகுதியிலிருக்கும் மூப்பர் ஒருவரிடம் இவ்வாறு கேட்கப்பட்டது: “சகோதரரை ஒருமித்திருக்கும்படி வைப்பதில் எது மிக அதிக உதவியாயிருந்தது?” அவருடைய பதில்? “இந்த 19 ஆண்டுகளில், கூட்டங்களை நாங்கள் ஒருபோதும் நிறுத்தினதில்லை. சில சமயங்களில் குண்டுவீச்சினாலோ மற்ற இடையூறுகளினாலோ சகோதரரில் சிலர், கூட்டம்கூடும் இடத்திற்கு வரமுடியாமல் போயிற்று, எனினும் கூட்டத்தை நாங்கள் ஒருபோதும் நிறுத்தினதில்லை.” “சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல்” இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த அருமையான சகோதர சகோதரிகளும் நிச்சயமாகவே மதித்துணருகிறார்கள்.

14. முதிர்வயதான அன்னாளின் வழக்கத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 84 வயது விதவையான அன்னாள் “தேவாலயத்தைவிட்டு நீங்காமல்” இருந்தார். இதன் பலனாக, சில நாள் குழந்தையாகிய இயேசு தேவாலயத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது அவர் அங்கு இருந்தார். (லூக்கா 2:​36-​38) கூட்டத்திற்குச் செல்வதை தவறவிடக் கூடாதென்று நீங்கள் திடமாய்த் தீர்மானித்திருக்கிறீர்களா? நம்முடைய அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் ஒரு பகுதியையும் தவறவிடாமல் அங்கிருக்கும்படி உங்களாலான எல்லா முயற்சியையும் எடுத்து வருகிறீர்களா? இந்தக் கூட்டங்களில் பெறும் ஆவிக்குரிய நன்மை பயக்கும் போதனை, நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய ஜனங்கள்மீது அக்கறையுடையவராக இருக்கிறார் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை அளிக்கிறது. (ஏசாயா 40:11) இத்தகைய சந்தர்ப்பங்கள் சந்தோஷத்தையும் பெருகச் செய்கின்றன. நாம் அங்கிருப்பது, யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்கு நம்முடைய நன்றியுணர்வைத் தெரிவிக்கிறது.​—நெகேமியா 8:​5-8, 12.

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களின் மூலம் பிரித்து வைக்கப்படுதல்

15, 16. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது நம்முடைய நடத்தையை எவ்வாறு பாதிக்கிறது?

15 கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது, இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து நம்மை வேறுபட்டவர்களாய் வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. உதாரணமாக, கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்குச் செவிகொடுப்பது, பாலுறவு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதிலிருந்து நம்மைத் தடுக்கிறது. (உபாகமம் 5:​18; நீதிமொழிகள் 6:​29-​35; எபிரெயர் 13:4) கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்கு இணங்கி செல்லும்போது, பொய் சொல்லவோ திருடவோ அநியாயம் செய்யவோ தூண்டும் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொள்ளலாம். (யாத்திராகமம் 20:15, 16; லேவியராகமம் 19:11; நீதிமொழிகள் 30:​7-9; எபேசியர் 4:​25, 28; எபிரெயர் 13:18) யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது, பழிவாங்குதல், வன்மத்தை மனதில் வைத்தல், எவரையாவது பழிதூற்றுதல் போன்றவற்றிலிருந்தும் நம்மைத் தடுத்து வைக்கிறது.​—லேவியராகமம் 19:16, 18; சங்கீதம் 15:​1, 3.

16 கடவுளுடைய நினைப்பூட்டுதல்களுக்குச் செவிகொடுப்பதால், நாம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாக, அல்லது அவருடைய ஊழியத்திற்காக பிரித்து வைக்கப்பட்டவர்களாக நிலைத்திருக்கிறோம். இவ்வுலகத்திலிருந்து விலகியிருப்பது எவ்வளவு முக்கியமானது! தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில், இயேசு தம்மைப் பின்பற்றினோருக்காக இந்த வேண்டுதல் செய்தார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயோனினின்று,” NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல், அவர்களும் உலகத்தாரல்ல. உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:14-17) கடவுளுடைய பரிசுத்த ஊழியத்திற்காக நம்மைத் தனிப்படுத்தி வைக்கிற கடவுளுடைய வார்த்தையில், நாம் தொடர்ந்து பற்றுதலாயிருப்போமாக.

17. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை நாம் பொருட்படுத்தாமல் இருந்தால் என்ன ஏற்படக்கூடும், ஆகையால் நாம் என்ன செய்ய வேண்டும்?

17 யெகோவாவின் ஊழியர்களாக, அவருடைய ஊழியத்திற்கு ஏற்கத்தகுந்தவர்களாய் நிலைத்திருக்க நாம் விரும்புகிறோம். எனினும், கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை நாம் பொருட்படுத்தாமல் விட்டால், இந்த உலகத்தின் பேச்சிலும், புத்தகங்களிலும், பொழுதுபோக்குகளிலும், நடத்தையிலும் சிறப்பித்துக் காட்டப்படுகிற இந்த உலகத்தின் ஆவியால் நாம் மேற்கொள்ளப்படக்கூடும். மேலும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருக்கும்படி நாம் நிச்சயமாகவே விரும்புகிறதில்லை. இவை கடவுளைவிட்டு விலகியிருப்போரால் காட்டப்படும் குணங்களில் ஒருசில மட்டுமே. (2 தீமோத்தேயு 3:​1-5) இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையினுடைய கடைசி நாட்களின் முடிவில் நாம் வாழ்வதால், தொடர்ந்து யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டு, ‘அவருடைய வசனத்தின்படி நம்மைக் காத்துக்கொள்வதற்கு’ கடவுளுடைய உதவிக்காக விடாமல் ஜெபிப்போமாக.​—சங்கீதம் 119:⁠9.

18. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது, நம் பங்கில் என்ன நடவடிக்கைகளை எடுக்கும்படி நம்மைச் செய்விக்கும்?

18 யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள், நாம் செய்யக்கூடாத காரியங்களைப் பற்றி எச்சரிப்பதோடு இன்னும் அநேக பலன்களை தருகின்றன. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வது நம் பங்கில் செய்ய வேண்டியதை செய்ய வைக்கும். யெகோவாவில் முழுமையாய் நம்பிக்கை வைக்கவும், நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும் அவரில் அன்புகூரவும் நம்மை உந்துவிக்கும். (உபாகமம் 6:5; சங்கீதம் 4:5; நீதிமொழிகள் 3:​5, 6; மத்தேயு 22:37; மாற்கு 12:30) நம்முடைய அயலாரில் அன்புகூரவும் கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் நமக்குத் தூண்டுதல் அளிக்கின்றன. (லேவியராகமம் 19:18; மத்தேயு 22:39) முக்கியமாய், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலமும், ‘தேவனை அறியும் அறிவாகிய’ ஜீவனளிக்கும் அறிவை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலமும் நாம் கடவுளுக்கும் அயலாருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறோம்.​—நீதிமொழிகள் 2:​1-5.

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கைக்கொண்டால் ஜீவன்!

19. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்குக் கவனம் செலுத்துவது நடைமுறையானதும் நன்மை பயக்குவதுமாக இருக்கிறதென்பதை நாம் எவ்வாறு மற்றவர்களுக்குக் காட்டலாம்?

19 யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நாம் கைக்கொண்டு, மற்றவர்களும் அவ்வாறு செய்யும்படி அவர்களுக்கு உதவி செய்தால், நம்மையும் நமக்குச் செவிகொடுத்துக் கேட்போரையும் இரட்சித்துக்கொள்வோம். (1 தீமோத்தேயு 4:​16) யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் கவனத்தில் ஏற்பது, உண்மையில் நடைமுறைக்குரியதும் நன்மை பயக்குவதுமாக இருக்கிறதென்று, நாம் எவ்வாறு மற்றவர்களுக்குக் காட்டலாம்? நம் சொந்த வாழ்க்கையில் பைபிள் நியமங்களை கடைப்பிடிப்பதன் மூலமே. இவ்வாறு செய்தால், கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கும் போக்கே, ஒருவர் பின்தொடருவதற்குச் சரியான போக்கு என்பதை ‘நித்திய ஜீவனிடமாக நேர்மையாய் மனஞ்சாய்வோருக்கு’ நிரூபித்துக் காட்டுவோம். (அப்போஸ்தலர் 13:48, NW) மேலும், ‘கடவுள் மெய்யாகவே நம் மத்தியில் இருக்கிறார்’ என்பதைக் கண்டு, ஈடற்ற பேரரசரான கர்த்தராகிய யெகோவாவின் வணக்கத்தில் நம்மைச் சேர்ந்துகொள்ளும்படி தூண்டுவிக்கப்படுவார்கள்.​—1 கொரிந்தியர் 14:24, 25, தி.மொ.

20, 21. கடவுளுடைய நினைப்பூட்டுதல்களும் அவருடைய ஆவியும் என்ன செய்யும்படி நமக்கு உதவும்?

20 வேதவசனங்களைத் தொடர்ந்து படித்தும், நாம் கற்பதை கடைப்பிடித்தும், யெகோவாவின் ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுமையாய் அனுகூலப்படுத்தியும் வருவதன்மூலம் நாம் அவருடைய நினைப்பூட்டுதல்களை மிகவும் நேசிப்பவர்கள் ஆவோம். இந்த நினைப்பூட்டுதல்களுக்குச் செவிகொடுத்தால், “மெய்யான நீதியிலும் பக்தியிலும் கடவுளுக்கிசைய சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை” தரித்துக்கொள்ள இவை நமக்கு உதவிசெய்யும். (எபேசியர் 4:​20-​24, தி.மொ.) சாத்தானின் அதிகாரத்திற்குள் கிடக்கிற இந்த உலகத்தின் பண்புகளுக்கு முற்றிலும் நேர்மாறான பண்புகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் போன்றவற்றைக் காட்டும்படி யெகோவாவின் நினைப்பூட்டுதல்களும் அவருடைய பரிசுத்த ஆவியும் நமக்கு உதவிசெய்யும். (கலாத்தியர் 5:​22, 23; 1 யோவான் 5:​19) ஆகையால், நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பு, நியமிக்கப்பட்ட மூப்பர்கள், நம்முடைய கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் ஆகியவற்றின் வாயிலாக யெகோவாவின் கட்டளைகள் நமக்கு நினைப்பூட்டப்படுகையில் நாம் நன்றியுள்ளோராக இருக்கலாம்.

21 யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நாம் கைக்கொள்வதால், நீதியினிமித்தம் துன்பப்படும்போதும் நாம் களிகூர முடியும். (லூக்கா 6:​22, 23) மிக அச்சுறுத்தும் சூழ்நிலைமைகளிலும் நம்மைக் காக்கும்படி கடவுளைச் சார்ந்திருக்கலாம். சகல தேசத்தாரும் அர்மகெதோன் எனும் இடத்தில் ‘தேவனுடைய மகா நாளில் நடக்கவிருக்கும் யுத்தத்திற்குக்’ கூட்டிச்சேர்க்கப்படும் இக்காலத்தில் இது மிக முக்கியமாயிருக்கிறது.​—வெளிப்படுத்துதல் 16:14-​16.

22. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களைக் குறித்ததில் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

22 நித்திய ஜீவன் என்ற பரிசை பெற நாம் தகுதியற்றவர்களாய் இருக்கிறோம். அதைப் பெற வேண்டுமானால் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை நாம் மிகவும் நேசிக்கவும், அவற்றை முழு இருதயத்துடன் கைக்கொள்ளவும் வேண்டும். ஆகையால் இவ்வாறு பாடின சங்கீதக்காரனின் ஆவியை உடையோராக நாம் இருப்போமாக: “உம்முடைய சாட்சிகளின் [“நினைப்பூட்டுதல்களின்,” NW] நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.” (சங்கீதம் 119:144) சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளில் தெளிவாக தெரிகிற மன உறுதியை நாம் காட்டுவோமாக: “[யெகோவா] உம்மை நோக்கிக் கூப்பிட்டேன். கடவுளே, என்னை இரட்சித்தருளும்! உம்முடைய நினைப்பூட்டுதல்களைக் கைக்கொள்வேன்.” (சங்கீதம் 119:146, NW) ஆம், நாம் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை உண்மையில் மிகவும் நேசிக்கிறோம் என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபிப்போமாக.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

• யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை சங்கீதக்காரன் எவ்வாறு கருதினார்?

• கடவுளின் நினைப்பூட்டுதல்கள் நமக்கு ஏன் தேவை?

• கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் சம்பந்தமாக நம்முடைய கூட்டங்கள் என்ன பாகத்தை வகிக்கின்றன?

• எவ்வாறு யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்மை இந்த உலகத்திலிருந்து வேறுபட்டவர்களாக வைக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படங்கள்]

சங்கீதக்காரர் யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை மிகவும் நேசித்தார்

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

அன்னாளின் முன்மாதிரியைப் பின்பற்றி, கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதை உங்கள் குறிக்கோளாக வைத்திருக்கிறீர்களா?

[பக்கம் 18-ன் படங்கள்]

யெகோவாவின் நினைப்பூட்டுதல்களுக்குச் செவிகொடுப்பது, அவருடைய சேவைக்கு நம்மை சுத்தமாகவும் ஏற்கத்தகுந்தவர்களாகவும் பிரித்து வைக்கிறது