Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா தம்முடைய மக்களுக்கு இளைப்பாறுதலை தருகிறார்

யெகோவா தம்முடைய மக்களுக்கு இளைப்பாறுதலை தருகிறார்

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

யெகோவா தம்முடைய மக்களுக்கு இளைப்பாறுதலை தருகிறார்

ஒரு மலைப்பாதையில் களைப்போடு போய்க்கொண்டிருக்கும் பயணிக்கு இளைப்பாற நிழல் தரும் இதமான ஓர் இடம் கிடைத்தால், ஆ! அவர் எவ்வளவு நன்றியோடிருப்பார். நேபாளத்தில் இளைப்பாறுவதற்கு இருக்கும் இந்த இடங்களை சௌட்டாரா என்று அழைக்கிறார்கள். உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்கு வசதியாக, செழிப்பாக வளர்ந்த ஓர் ஆலமரத்தின் அருகே இது அமைந்திருக்கலாம். இப்படி ஒரு சௌட்டாராவை அமைப்பது கருணை செயல், இதை அமைப்பவர்கள் யாரென்று பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை.

இந்தப் பொல்லாத உலகில் பயணம் செய்து களைத்துவிட்ட “பயணிகள்” பலர் எவ்வாறு யெகோவா தேவனிடமிருந்து சந்தோஷத்தையும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை நேபாளத்திலிருந்து வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.​—சங்கீதம் 23:⁠2, தி.மொ.

போக்காரா என்ற அழகிய நகரில் வாழ்ந்துவருகிறார் லில் குமாரி. அந்நகரிலிருந்து பார்த்தால் பனிபடர்ந்த இமயத்தின் அற்புத காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்ததால் லில் குமாரிக்கு வாழ்க்கையில் செழிப்பை காணும் நம்பிக்கை இல்லை. யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவரை வந்து சந்தித்தபோது, பைபிள் கொடுக்கும் நம்பிக்கையான செய்தி அவரை மிகவும் கவர்ந்தது, உடனடியாக தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

லில் குமாரி மிகவும் மகிழ்ச்சியோடு பைபிள் படித்துவந்தார், ஆனால் குடும்பத்திலிருந்து அதற்கு பலமான எதிர்ப்பு வந்தபோது தொடர்ந்து படிப்பது எளிதாக இல்லை. ஆனால் அவர் அதை விட்டுவிடவில்லை. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் போய்வந்தார், படித்த விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தார். முக்கியமாக, மனைவிக்குரிய கீழ்ப்படிதலை காண்பிப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இதனால், அவர் பைபிளைப் படிப்பது முழு குடும்பத்துக்கும் பிரயோஜனமாக இருக்கிறது என்பதை அவரது தாயும் கணவனும் உணர ஆரம்பித்தார்கள்.

அவரது கணவனும் உறவினர்கள் பலரும் இப்போது கடவுளுடைய வார்த்தையை படித்துக்கொண்டிருக்கிறார்கள். போக்காராவில் சமீபத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது, லில் குமாரி தன்னுடைய 15 உறவினர்களோடு வந்து அதை அனுபவித்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய குடும்பம் இப்போது இளைப்பாறும் இடமாக இருக்கிறது, ஏனென்றால் எங்கள் குடும்பம் உண்மை வணக்கத்தில் இப்போது ஐக்கியப்பட்டிருக்கிறது, எனக்கும் உண்மையான மன சமாதானம் கிடைத்திருக்கிறது.”

நேபாளத்தில் ஜாதி வித்தியாசம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும். ஆனாலும் மக்களின் வாழ்க்கையில் இது இன்னும் அதிக செல்வாக்கு செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதனால் சமத்துவத்தையும் பாரபட்சமற்ற தன்மையையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்வதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்பதை கற்றுக்கொண்டபோது சூரிய மாயாவையும் அவரது குடும்பத்தின் வாழ்க்கையையும் அது முற்றிலும் மாற்றிவிட்டது.​—அப்போஸ்தலர் 10:⁠34.

ஜாதி வித்தியாசத்தால் இழைக்கப்படும் அநீதியைக் கண்டு மனவேதனையில் குமுறிக் கொண்டிருந்தார் சூரிய மாயா. ஆழமாக வேரூன்றிவிட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அவருக்கு சுமையாக இருந்தன. மதப்பற்றுள்ள இந்தப் பெண் பல வருடங்களாக விக்கிரக தெய்வங்களிடம் உதவி கேட்டுவந்தார். ஆனால் அவருடைய பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கவே இல்லை. ஒருநாள் அவர் உதவிக்காக வாய்விட்டு கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஆறு வயதுள்ள அவரது பேத்தி பபித்தா அவரிடம் வந்து “ஒண்ணுமே செய்ய முடியாத இந்த விக்கிரகங்க முன்னாலே ஏன் உதவி கேட்டு அழறீங்க?” என்று கேட்டாள்.

இதற்கு காரணம் பபித்தாவின் அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்ததே. கிறிஸ்தவ கூட்டத்திற்கு வருமாறு தன் பாட்டியம்மாவை பபித்தா மிகவும் ஆர்வத்தோடு அழைத்தாள். சூரிய மாயாவும் தட்டாமல் அவளுடன் சென்றபோது, எந்த ஒரு வெறுப்புமின்றி பல ஜாதியைச் சேர்ந்த அனைவரும் ஒருவரோடொருவர் சந்தோஷமாக பேசி மகிழ்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். உடனடியாக தனக்கு ஒரு பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரை தள்ளிவைத்து விட்டார்கள். ஆனால் அவர் சோர்ந்துவிடவில்லை. அதிக படிப்பறிவு இல்லாதபோதிலும் ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கு அது தடையாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை.

எட்டு வருடங்கள் கடந்துவிட்டன, அவரது கணவன், மூன்று ஆண்பிள்ளைகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் யெகோவாவின் சாட்சிகளாக மாறிவிட்டனர். சூரிய மாயா இப்போது முழுநேர ஊழியர், அதாவது ஓர் ஒழுங்கான பயனியர். யெகோவா மாத்திரமே தங்களது பாரமான சுமைகளை தாங்கி உண்மையான இளைப்பாறுதல் அளிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு அவர் உதவிசெய்து வருகிறார்.