Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஊழியத்திற்கு ஊக்குவிக்கப்படுதல்

ஊழியத்திற்கு ஊக்குவிக்கப்படுதல்

ஊழியத்திற்கு ஊக்குவிக்கப்படுதல்

இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், பலமுமிக்க 24 தம்பதியினர் அயல்நாடுகளுக்கு செல்ல தயாராயினர். தங்கள் உற்றார் உறவினர்களையும் பழக்கப்பட்ட இடத்தையும் விட்டு வேறு ஊருக்கு போகும்படி இவர்களை தூண்டியது எது? பாப்புவா நியூ கினீ, தைவான், ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களுக்கு செல்வதில் அவர்களுக்கு அளவுகடந்த சந்தோஷம். ஏன்? அங்கு ஏதாவது துணிச்சலான சாதனைகளில் ஈடுபடுவதற்காகவா? இல்லை. கடவுளிடமும் அயலாரிடமும் அவர்களுக்கு இருந்த தூய அன்பே அவர்களை அங்கு செல்ல தூண்டியது.​—⁠மத்தேயு 22:37-39.

அங்கு செல்ல இப்படி தயாரானவர்கள் யார்? உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியின் 109-வது வகுப்பு பட்டதாரிகள்தான். 2000, செப்டம்பர் 9-⁠ம் தேதி சனிக்கிழமை அன்று நியூ யார்க், பேட்டர்ஸனில் அமைந்துள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் இவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இவர்கள் வெற்றிகரமாய் தங்கள் மிஷனரி ஊழியத்தைத் தொடர உதவும் அன்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதைக் கேட்பதற்காக பாட்டர்ஸனிலும் சாட்டிலைட் மூலம் இணைக்கப்பட்டிருந்த மற்ற இடங்களிலும் மொத்தம் 5,198 பேர் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிநிரலுக்கு சேர்மன் ஸ்டீவன் லெட். இவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் போதனா குழுவினுடைய அங்கத்தினர். “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்” என்ற மத்தேயு 5:13-லுள்ள குறிப்பை மையமாக வைத்து இவர் தன் பேச்சை ஆரம்பித்தார். பட்டம் பெறவிருக்கும் மாணவர்களுக்கு இயேசுவின் இவ்வார்த்தைகள் வெகு பொருத்தமானவை என சகோதரர் லெட் விளக்கினார். உதாரணமாக, உணவுக்கு சுவையூட்டும் தன்மை உப்புக்கு உண்டு. அவ்வாறே, திறம்பட பிரசங்க ஊழியத்தில் ஈடுபடுகையில் மிஷனரிகளும் ஒருவிதத்தில் அந்த உப்பைப்போல் இருக்கின்றனர்.

பிரியும் வேளையில் உற்சாக வார்த்தைகள்

நீண்ட காலமாக யெகோவாவை சேவிக்கும் சிலரை சகோதரர் லெட் அறிமுகப்படுத்தினார்; இவர்கள் ரத்தின சுருக்கமாக ஆவிக்குரிய அறிவுரைகளை கொடுத்தனர். அவர்களில் முதலில் பேசியவர், ரைட்டிங் டிபார்ட்மென்டில் பணிபுரியும் ஜான் விஸ்சக். இவர், “மிகச் சிறிய சங்கீதம் மிஷனரி மனப்பான்மையை ஊக்குவிக்கிறது” என்ற தலைப்பில் சங்கீதம் 117-⁠ன் (NW) அடிப்படையில் பேசினார். இன்று, யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி உலகளாவிய விதத்தில் எல்லா ‘தேசத்தாருக்கும்’ ‘மக்களுக்கும்’ சாட்சி கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. மற்றவர்களும் ‘யாவைத் துதிப்பதற்கு’ ஊக்குவிக்குமாறு சங்கீதம் 117 சொல்கிறது; அதை நிறைவேற்றும்படி மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

அடுத்ததாக, ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினரான கை பையர்ஸை சேர்மன் அறிமுகப்படுத்தினார். “வளைந்து கொடுங்கள் ஆனாலும் உறுதியாய் இருங்கள்” என்ற தலைப்பில் அவர் பேசினார். கடவுளுடைய வார்த்தை உறுதி வாய்ந்தது. உபாகமம் 32:4-⁠ல் யெகோவா கன்மலை என அழைக்கப்படுகிறார்; இருந்தாலும் அவருடைய வார்த்தை, எல்லா மொழியினருக்கும் பண்பாட்டினருக்கும் பொருந்துமாறு, அனைவருக்காகவும் எழுதப்பட்டிருப்பதால் வளைந்து கொடுக்கும் தன்மை படைத்தது. மக்களின் இதயத்தையும் மனசாட்சியையும் தொடும் விதத்தில் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும்படி மாணவர்களுக்குப் புத்திமதி கூறப்பட்டது. (2 கொரிந்தியர் 4:2) “சரியான நியமங்களைப் பின்பற்றுவதில் உறுதியாய் இருந்தாலும் வளைந்து கொடுங்கள். உங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்திலுள்ளவர்களின் கலாச்சாரம் வித்தியாசமானதாய் இருப்பதால் அவர்களை தாழ்வாக எண்ணாதீர்கள்” என சகோதரர் பையர்ஸ் அறிவுரை கூறினார்.

கிலியட் பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவர் கார்ல் ஆடம்ஸ். இவர் கிட்டத்தட்ட 53 வருடங்களாக தலைமை அலுவலகத்தில் சேவை செய்து வருகிறார். அவர் “இங்கிருந்து எங்கு செல்ல போகிறீர்கள்?” என்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்பில் பேசினார். விழாவின் முடிவில், அந்த 24 தம்பதியினரும் 20 நாடுகளுக்கு மிஷனரி ஊழிய நியமிப்பைப் பெற்றனர். ஆனால், புதிய நாட்டிற்குச் சென்ற பின்பு அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. எப்போதும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். புதிய புதிய இடங்களுக்கு செல்லவும் தங்களுக்குப் பிடித்தமான புதிய புதிய காரியங்களைச் செய்யவும் மக்கள் பொதுவாக விரும்புகின்றனர். ஆனால் இந்த மாணவர்களோ தங்களுக்கு பிடித்தமான இடத்திற்கு செல்வதற்கு பதிலாக யெகோவா நியமித்த இடத்திற்கு சென்றனர். யெகோவாவின் விருப்பத்திற்கு ஏற்ற இடத்தில் அவருடைய ‘ஆடுகளை’ தன்னலம் கருதாமல் பராமரிப்பதற்கு நியமிப்பைப் பெற்றனர். மனிதகுலம் முழுவதும் பூர்வ இஸ்ரவேலரின் மூலம் ஆசீர்வதிக்கப்பட வாய்ப்பு இருந்தது; ஆனால் அதை தவறவிட்டனர். அதற்கு அவர்களுடைய தன்னல ஆசைதான் காரணம். கடவுள் சொன்னபடி நடக்க அவர்கள் தயாராக இல்லாததால் எவ்வளவு பெரிய இழப்பு. அவர்களுடைய முன்மாதிரியை மிஷனரிகள் பின்பற்றாமல் இயேசு கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டும். தன்னலம் கருதாமல் எப்போதும் தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்தவர் அவர்; ஒவ்வொரு சூழ்நிலையிலும் கீழ்ப்படிதலைக் காட்டியவர் அவர்.​—⁠யோவான் 8:29; 10:16.

“கடவுளுடைய ஆழ்ந்த எண்ணங்களைப் பொக்கிஷமாய் போற்றுங்கள்” என்பதே கிலியட் பள்ளியின் பதிவாளரான வாலஸ் லிவ்ரன்ஸின் பேச்சினுடைய தலைப்பு. கடவுளுடைய வார்த்தையை, பொக்கிஷம், விலையுயர்ந்த கற்கள், மதிப்புமிக்க பொன், அடைய துடிக்கும் விலையுயர்ந்த பிற பொருட்கள் ஆகியவற்றுடன் பைபிள் அடிக்கடி ஒப்பிடுகிறது. “தேவனை அறியும் அறிவை,” ‘புதையல்களைப்’ போல் தேட வேண்டும் என நீதிமொழிகள் 2:1-5 காட்டுகிறது. தங்கள் புதிய இடங்களில் ஊழியம் செய்கையில், கடவுளுடைய ஆழ்ந்த எண்ணங்களைத் தொடர்ந்து தோண்டிக்கொண்டே இருக்க பேச்சாளர் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். “இது முடியாத காரியம் அல்ல. இது யெகோவாவில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் இன்னும் அதிகரிக்கும். உங்கள் நியமிப்பில் தொடர்ந்து நிலைத்திருக்கும்படியான உங்கள் தீர்மானத்தை பலப்படுத்தும். மற்றவர்களிடம் உறுதியுடன் பேசவும், அதிக திறம்பட்ட போதகராய் கடவுளுடைய நோக்கங்களை விவரிக்கவும் அது உங்களுக்கு உதவும்” என சகோதரர் லிவ்ரன்ஸ் படிப்படியாய் விளக்கினார்.

அடுத்து பேசியவர் கிலியட் பள்ளியின் மற்றொரு ஆசிரியரான லாரன்ஸ் போவன். இவர், கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மாணவர்களின் வெளி ஊழியத்தை யெகோவா எந்தளவுக்கு ஆசீர்வதித்தார் என்பதை வகுப்பறையில் மறுபார்வை செய்வதுபோல் மேடையில் செய்து காட்டினார். பவுல், எபேசுவில் தன்னுடைய ஊழியத்தைப் பற்றி சொன்ன வார்த்தைகளை அப்போஸ்தலர் 20:20-லிருந்து அவர் குறிப்பிட்டார்; சாட்சி கொடுப்பதற்கு தனக்கிருந்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் பவுல் பயன்படுத்திக் கொண்டதை அவர் வலியுறுத்தினார். அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே, கடவுளின்மீதும் அயலார்மீதும் உண்மையான அன்பு உள்ளவர்கள், இன்று சத்தியத்தைப் பற்றி எப்போதும் பேசுவார்கள்; கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் சக்தியை அறிந்து செயல்பட மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்பதை இந்த மாணவர்களுடைய அனுபவங்கள் காட்டின. இது கடவுளுடைய அபரிமிதமான ஆசீர்வாதத்திற்கு வழியைத் திறந்திருக்கிறது.

அனுபவசாலிகளின் அறிவுரை

இந்த கிலியட் பள்ளி மாணவர்களால் 23 நாடுகளிலிருந்து வந்திருந்த கிளை அலுவலக குழு அங்கத்தினர்களுடன் கூட்டுறவு கொண்டு அநேக பயனுள்ள விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அங்கத்தினர்களும் பாட்டர்ஸன் கல்வி மையத்தில் விசேஷ பயிற்சி பெற வந்தவர்கள். பல்வேறு கிளை அலுவலக குழு அங்கத்தினர்களை, சர்வீஸ் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த லீயான் வீவர் மற்றும் மார்ட்டன் கேம்ப்பெல் பேட்டி கண்டனர்; அவர்களில் சிலரும் கிலியட் பட்டதாரிகளாவர். இந்த அனுபவசாலிகளின் பேச்சு மாணவர்களுக்கும், அவர்களுடைய உற்றார் உறவினர்களுக்கும் பெரும் நம்பிக்கை சுடரை இதயத்தில் ஏற்றி வைத்தது.

அயல்நாட்டு நியமிப்புகளில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவும் அறிவுரைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் சில: “எதையும் நல்லதுக்கென்றே எடுத்துக்கொள்ளுங்கள். அந்த புதிய இடத்தில் உங்களுக்கு பழக்கமில்லாத சூழ்நிலைகளை எதிர்ப்படலாம் அல்லது அவற்றை நீங்கள் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கலாம், ஆனாலும் மனம் தளராதீர்கள். முழுக்க முழுக்க யெகோவாவை சார்ந்திருங்கள்”; “உள்ளதைக் கொண்டு திருப்தியாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் யெகோவா தருவார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள்.” தங்களுடைய நியமிப்பில் சந்தோஷத்தை இழந்துவிடாமலிருக்க உதவும் குறிப்புகளும் மாணவர்களுக்கு சொல்லப்பட்டன. அவற்றில் சில: “உங்களுக்கு நியமிக்கப்பட்ட ஊரை உங்கள் சொந்த ஊரோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்”; “உள்ளூர் மொழியைக் கற்றுக்கொண்டு, அதை சரிவர பேசவும் பழகிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் மக்களோடு உரையாட முடியும்”; “அந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்ளுங்கள், இது உங்கள் ஊழிய நியமிப்பில் தொடர உங்களுக்கு கைகொடுக்கும்.” இந்த மணிமணியான குறிப்புகள் ஒவ்வொன்றும் அந்தப் புதிய மிஷனரிகளை பெரிதும் ஊக்கமூட்டின.

பேட்டிகளுக்குப் பிறகு, முன்னாள் மிஷனரியும் 42-வது கிலியட் வகுப்பு பட்டதாரியும் தற்போது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினருமான டேவிட் ஸ்பிலேன் உரையாற்றினார். “நீங்கள் பயிலும் மாணவர்களா படித்து முடித்த பட்டதாரிகளா?” என்ற ஆர்வத்தையூட்டும் முக்கிய பேச்சை அளித்தார். “புதிய மிஷனரி நியமிப்புக்குச் செல்கையில் உங்களை நீங்கள் எப்படி கருதுவீர்கள்? நீங்கள் மிஷனரி ஊழியத்தைப் பற்றி முற்றும் அறிந்தவர்களாகவா அல்லது இன்னும் கற்க வேண்டிய மாணவராகவா?” என பட்டம் பெறவிருந்தவர்களைப் பார்த்து கேட்டார். புத்திசாலியான பட்டதாரி தன்னை மாணவராகவே கருதுவார் என சகோதரர் ஸ்பிலேன் குறிப்பிட்டார். மிஷனரி ஊழியத்தில் யாரை சந்தித்தாலும் அவர்களிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ளலாம் என்ற மனப்பான்மையுடன் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார். (பிலிப்பியர் 2:3) தங்கள் சக மிஷனரிகளுடனும் சபையுடனும் கிளை அலுவலகத்துடனும் முழு ஒத்துழைப்பையும் தருமாறு மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். “உங்கள் இறுதி தேர்வில் தேறிவிட்டீர்கள், ஆனால் இன்னும் நீங்கள் மாணவர்களே. நீங்கள் கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறீர்கள் என்பதை எல்லாருக்கும் தெளிவுபடுத்திவிடுங்கள்” என ஊக்குவித்தார் சகோதரர் ஸ்பிலேன்.

இந்தப் பேச்சுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் சான்றிதழைப் பெற்றனர்; அவர்கள் நியமனங்கள் கூடியிருந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. பரிசுத்த சேவையில் அதிகத்தை செய்ய இந்தப் பள்ளியில் கற்ற விஷயங்களையெல்லாம் கடைப்பிடிப்பார்களென மாணவர்கள் செய்திருந்த தீர்மானத்தை அவர்களில் ஒருவர் வாசித்தார். இது அந்தப் பட்டதாரிகளை நெகிழச் செய்தது.

கடவுளுக்கும் அயலானுக்கும் அன்பு காட்ட வேண்டும் என்ற பட்டதாரிகளின் தீர்மானத்தை அவர்கள் பெற்ற புத்திமதிகள் பலப்படுத்தின. இதை அங்கு வந்திருந்த யாரும் மறுக்க முடியாது. இது, மக்களுக்கு ஆவிக்குரிய விஷயங்களை போதிப்பதில் முன்பிருந்ததைவிட அதிக தீர்மானத்துடன் மிஷனரி நியமிப்பில் செயல்பட அவர்களுக்கு உதவியது.

[பக்கம் 25-ன் பெட்டி]

வகுப்பின் புள்ளிவிவரங்கள்

பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 10

அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 20

மாணவர்களின் எண்ணிக்கை: 48

சராசரி வயது: 33.7

சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 16.2

முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 12.5

[பக்கம் 26-ன் படங்கள்]

உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 109-வது வகுப்பு

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.

(1) காலின்ஸ், ஈ.; மைல்ஸ், எல்.; அல்வராடோ, எ.; லேக், ஜே. (2) வான் டூசென், எல்.; பீஹாரீ, எ.; ஹேய்க்கினன், எச்.; கோஸ், எஸ்.; ஸ்மித், எச். (3) அஷ்ஃபோர்ட், ஜே.; அஷ்ஃபோர்ட், சி.; போர், சி.; ரிச்சர்ட், எல்.; வில்பெர்ன், டி.; லேக், ஜே. (4) சிச்சியை, கே.; சிச்சியை, எச்.; ரமைரஸ், எம்.; பௌமன், டி.; பெக்கர், ஜி.; பீஹாரீ, எஸ்.; ரமைரஸ், எ. (5) வான் டூசென், டபிள்யூ.; லெமாட்டர், எச்.; பிஸ்கோ, ஜே.; கட்ஸ், எல்.; ரஸல், எச்.; ஜான்ஸன், ஆர். (6) பெக்கர், எஃப்.; பௌமன், டி.; ஜான்ஸன், கே.; பைஃபர், எ.; மேட்சன், சி.; லெமாட்டர், ஜே.; ஹேய்க்கினன், பி. (7) ஸ்மித், ஆர்.; ரஸல், ஜே.; காலின்ஸ், ஏ.; பிஸ்கோ, டி.; வில்பெர்ன், ஆர்.; கோஸ், ஜி. (8) கட்ஸ், பி.; போர், ஜே.; மேட்சன், என்.; பைஃபர், எஸ்.; ரிச்சர்ட், ஈ.; மைல்ஸ், பி.; அல்வராடோ, ஆர்.