Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களுடையதா?

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கிறிஸ்தவர்களுடையதா?

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்—கிறிஸ்தவர்களுடையதா?

கிறிஸ்மஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீங்களும் அவ்வாறுதான் கொண்டாடுகிறீர்களா? உங்கள் குடும்பத்தாரும் நண்பர்களும் அதன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறார்களா? இது உங்கள் பக்தியை காட்டும் பண்டிகையா அல்லது சந்தோஷமாய் பொழுதை கழிப்பதற்கான பண்டிகையா? இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி நினைப்பதற்கான பண்டிகையா அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவசியமில்லாத பண்டிகையா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்கையில், இடத்திற்கு இடம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் வேறுபடுவதை நினைவில் வையுங்கள். உதாரணத்திற்கு, மெக்ஸிகோ, லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் இந்தப் பண்டிகையின் பெயரே வேறு. கிறிஸ்மஸ் என்ற ஆங்கில வார்த்தை, “இடைக்காலத்தின் போது புழக்கத்திலிருந்த கிறிஸ்டஸ் மஸா என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து பிறந்தது; கிறிஸ்துவின் பூசை என்பது அதன் அர்த்தம்” என ஒரு என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. இந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில், இது லே நேவீடேட் என்று அழைக்கப்படுகிறது; இந்த வார்த்தைக்கு பிறப்பு என்பது அர்த்தம். இது கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கிறது. இதைப் பற்றி சில விஷயங்களை மெக்ஸிகோவிலிருந்து தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். இந்தப் பண்டிகையைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை சரிசெய்துகொள்ள இது உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

போசாடாஸ், “மூன்று ஞானசாஸ்திரிகள்,” நேஸீமியென்டோ

மெக்ஸிகோவில் பண்டிகை டிசம்பர் 16-⁠ம் தேதி துவங்குகிறது. அதற்கு போசாடாஸ் என்று பெயர். “கிறிஸ்மஸுக்கு முன் மகிழ்ச்சியான ஒன்பது நாட்களைக் கொண்ட போசாடாஸ் பண்டிகை காலம் இது. பெத்லகேம் நகரில் யோசேப்பும் மரியாளும் ஆதரவின்றி அலைந்து திரிந்ததையும், கடைசியில் கருணை காட்டப்பட்டு தங்க இடம் கொடுக்கப்பட்டதையும் நினைவுபடுத்தும் சமயம் இது. ஒவ்வொரு இரவும் குடும்பத்தினரும் நண்பர்களும், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னான நாட்களில் நடந்த சம்பவங்களை நடித்துக்காட்ட ஒன்றுகூடும் சமயம் இது” என்கிறது மெக்ஸிகோ வாழ்வில் விழாக்கள் என்ற ஆங்கில புத்தகம்.

இந்த சமயத்தில் ஒரு தொகுதியினர், யோசேப்பு, மரியாளின் சிலைகளை ஒரு வீட்டிற்கு தூக்கிச் சென்று பாடல் வாயிலாகவே தங்குவதற்கு இடம் அல்லது போசாடா கேட்பர். அந்த வீட்டிலிருப்பவர்கள் பாடல் மூலமே பதில் சொல்வர். அந்த வீட்டில் தங்குவதற்கு இடம் கிடைக்கும்வரை அவர்கள் பாட்டு பாடிக்கொண்டே இருப்பர். இப்போது பார்ட்டி துவங்குகிறது; அங்கிருப்பவர்களுள் சிலர், ஒவ்வொருவராக தங்கள் கண்களை கட்டிக்கொண்டு தடியால் மேலே கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பினாடாவை அல்லது பெரிய அலங்கரிக்கப்பட்ட பானையை உடைக்க முயற்சிப்பர். அதை உடைத்தவுடன், அதிலிருந்த (இனிப்பு, பழம் போன்றவை) பொருட்களையெல்லாம் அங்கிருப்பவர்கள் சேகரிக்கின்றனர். அதன்பிறகு, உணவு, பானம், இசை, நடனம் என பார்ட்டி தொடர்கிறது. டிசம்பர் 16 முதல் 23 வரை எட்டு போசாடா பார்ட்டிகள் நடைபெறுகின்றன. 24-⁠ம் தேதி (கிறிஸ்மஸுக்கு முந்தின நாள் மாலை) நோகெப்வீனா கொண்டாடப்படுகிறது. இது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடிவரும் நேரம்; தடபுடலாக விசேஷ உணவுடன் கொண்டாடப்படுகிறது.

அதற்குப் பிறகு ஒருசில நாட்களிலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இது படுகோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி 5-⁠ம் தேதியன்று மாலை, டிரெஸ் ரேயெஸ் மேகோஸ் (“மூன்று ஞானசாஸ்திரிகள்”) வந்து குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்க வேண்டும். இப்போது ‘கிளைமேக்ஸ்’ நெருங்குகிறது; ஜனவரி 6-⁠ம் தேதி ஸ்பெஷல் பார்ட்டி நடக்கிறது. அதில் ரோஸ்கா டி ரேயெஸ்-⁠ல் (வட்ட வடிவ கேக்) குழந்தை இயேசு போன்ற ஒரு சிறிய பொம்மை மறைத்து வைக்கப்படுகிறது. அதை பகிர்ந்தளிக்கும்போது, யாருக்கு அந்த பொம்மை கிடைக்கிறதோ அவரே பிப்ரவரி 2-⁠ம் தேதி அன்று கடைசி பார்ட்டியை தர வேண்டும். (சில இடங்களில், குழந்தை இயேசுவின் பொம்மைக்கு பதிலாக, “மூன்று ஞானசாஸ்திரிகளை” அடையாளப்படுத்தும் மூன்று சிறிய பொம்மைகள் வைக்கப்படுகின்றன.) எனவே கிறிஸ்மஸ் வந்தாலே பார்ட்டி, பார்ட்டி, பார்ட்டிதான்.

இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்திற்கும் கிரீடமாய் அமைவது, நேஸீமியென்டோ (பிறப்பின் சமயத்துக் காட்சி) என்ற நிகழ்ச்சி. இது என்ன நிகழ்ச்சி? செராமிக், மரம், களிமண் போன்றவற்றால் செய்யப்பட்ட (சிறிய அல்லது பெரிய) சிலைகள் பொது இடங்களிலும், சர்ச்சுகளிலும், வீடுகளிலும் அலங்காரமாக வைக்கப்படுகின்றன. அங்கு பார்க்கும் காட்சி, ஒரு சிறிய தொட்டிலில் பச்சிளங்குழந்தையான இயேசு கிடத்தப்பட்டிருப்பார். அவர் அருகே யோசேப்பும் மரியாளும் முழங்கால் படியிட்டு பவ்யமாக குழந்தையைப் பார்ப்பது போன்று இருக்கும். பெரும்பாலும் அதில் மேய்ப்பர்களும் லோஸ் ரேயெஸ் மேகோஸும் (“ஞானசாஸ்திரிகள்”) இருப்பர். அது ஒரு தொழுவமாக இருப்பதால், சில மிருகங்களும் இருக்கும். அந்த காட்சியில் முக்கிய நபர் அந்த குழந்தைதான். இந்தக் குழந்தை, ஸ்பானிய மொழியில் எல் நீன்யோ டி டையோஸ் (குழந்தை தெய்வம்) என அழைக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் சமயத்தில் அலங்காரமாய் வைக்கப்படும் காட்சி பொருட்களில் இந்த குழந்தைக்குத்தான் முக்கிய இடம்.

கொண்டாட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி

“இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் பெரும்பாலானவை கிறிஸ்மஸுக்கான கொண்டாட்டங்களாக துவக்கத்தில் இருக்கவில்லை. மாறாக, கிறிஸ்தவ சர்ச்சுகளால் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டவை; கிறிஸ்தவத்திற்கு முன்னிருந்த அல்லது கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்படாத பழக்கவழக்கங்களாகும். மத்திப டிசம்பரில் கொண்டாடப்பட்ட சாட்டர்னேலியா என்ற ரோம பண்டிகையிலிருந்தே, கிறிஸ்மஸோடு சம்பந்தப்பட்ட குதூகல நிகழ்ச்சிகளில் அநேகம் பிறந்தன. உதாரணமாக, பெரிய விருந்துகளை அளிப்பது, பரிசு பொருட்களை அளிப்பது, மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது போன்ற பழக்கங்கள் எல்லாம் அந்த ரோம பண்டிகையிலிருந்து பிறந்த பழக்கங்களே” என கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களைப் (உலகம் முழுவதிலும் பெரும்பாலும் இவ்வாறே அழைக்கப்படுகிறது) பற்றி தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொல்கிறது.

லத்தீன் அமெரிக்காவில், இப்படிப்பட்ட முக்கிய கொண்டாட்டங்களோடு இன்னும் பல நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ‘அப்படியென்றால் இவையெல்லாம் எங்கிருந்து தோன்றின’ என ஒருவேளை நீங்கள் கேட்கலாம். நேரடியாக சொல்ல வேண்டுமானால், சில பழக்கவழக்கங்கள் அஸ்தெக் என்ற புறமதத்திலிருந்தே தோன்றியவை. இதை பைபிளைப் பின்பற்ற விரும்பும் அநேகர் ஒப்புக்கொள்கின்றனர். “வித்தியாசப்பட்ட கிறிஸ்தவ மதப் பிரிவுகளை சேர்ந்த பாதிரியார்கள், கத்தோலிக்க பண்டிகை நாட்கள் அஸ்தெக் மத பண்டிகை நாட்களுடன் ஓரளவு ஒத்திருந்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். இதை தங்கள் சுவிசேஷ வேலைக்கும் மிஷனரி வேலைக்கும் அனுகூலப்படுத்திக் கொண்டனர். கிறிஸ்தவ பண்டிகை கொண்டாட்டங்களின் இடத்தில், மேற்கு அரைக்கோளத்தை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்கு முன்னான காலத்திய (ப்ரீ-ஹிஸ்பானிக்) மத கொண்டாட்டங்களை புகுத்தினர். அதில், ஐரோப்பிய பண்டிகை கொண்டாட்டங்களையும் இந்திய பண்டிகை கொண்டாட்டங்களையும் சேர்த்துக்கொண்டனர். இது கலப்பு மதங்களின் கதம்ப கலாச்சாரத்திற்கு வழிவகுத்தது. அநேக வார்த்தைகளில் ஸ்பானிய வாடை வீசுவதற்கு இதுவே காரணமானதில் சந்தேகமே இல்லை” என மெக்ஸிகோ நகர செய்தித்தாள் எல் யூனிவர்சல் கூறியது.

“இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளை பார்வைக்கு வைக்கும் இந்தப் பழக்கம், வெகு காலத்திற்கு முன்பே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் பாகமாக ஆகிவிட்டது. . . . சர்ச்சுகளை அலங்கரிக்கும் கிரீகே [மாட்டுக் கொட்டில் காட்சி], புனித ஃபிரான்ஸிஸால் துவக்கி வைக்கப்பட்டது என சொல்லப்படுகிறது” என்று விளக்குகிறது தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா. மெக்ஸிகோவில் ஸ்பானிய குடியேற்றம் துவங்கிய போது, சர்ச்சுகளில் கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளை அலங்கரிப்பதும் துவங்கியது. இது கிறிஸ்துவின் பிறப்பை அஸ்தெக் இந்தியர்களுக்கு கற்பிக்க ஃபிரான்ஸிஸ் மடத் துறவிகள் செய்த ஏற்பாடு. நாளடைவில் போசாடாஸ் கொண்டாட்டங்கள் புகழ்பெற்றன. போசாடாஸ் கொண்டாட்டங்கள் எந்த உள்நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கொண்டாடப்படும் விதம் அவற்றின் புறமதத் துவக்கத்தை பறைசாற்றி விடுகின்றன. இந்தப் பண்டிகையைக் கண்டுகளிக்க நீங்கள் மெக்ஸிகோவில் இருந்தால், எல் யூனிவர்சல் பத்திரிகை எழுத்தாளரின் விளக்கக் குறிப்பிலுள்ளதற்கு கண்கண்ட சாட்சிகளாய் இருக்க முடியும். “குழந்தை தெய்வத்தைப் பெற்றெடுக்க இயேசுவின் பெற்றோர் இடந்தேடி அலைந்ததை நினைவுபடுத்தி பார்ப்பதற்கு உரியதாய் போசாடாஸ் கொண்டாட்டம் இருந்த காலம் மறைந்துவிட்டது. இன்று அது குடிப்பதற்கும், அறுசுவை உணவை ருசிப்பதற்கும், சந்தோஷமாய் கும்மாளமடிப்பதற்கும், வெட்டியாக பொழுதைக் கழிப்பதற்கும், அநேக குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் உரியதாய் ஆகியிருக்கிறது” என அவர் எழுதினார்.

முற்காலங்களில் சர்ச்சுகளில் இந்தக் காட்சிகள் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டன. ஆனால், குடியேற்றத்தின்போது நேஸீமியென்டோ பற்றிய ஐடியா உதித்தது. இது அநேகரின் கவனத்தை கவரக்கூடியதாய் இருக்கிறபோதிலும் பைபிள் உண்மையில் இதை ஆதரிக்கிறதா? இது ஒரு நியாயமான கேள்வி. உண்மையில் வானசாஸ்திரிகளான அந்த மூன்று ஞானிகள் என அழைக்கப்படுவோர் இயேசுவும் அவருடைய குடும்பத்தினரும் மாட்டுக் கொட்டகையில் இருக்கையில் அவர்களை சந்திக்கவில்லை. குழந்தை பிறந்து கொஞ்ச காலத்திற்குப் பின்பு குடும்பமாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருகையிலேயே அவர்கள் போய் சந்தித்தனர். இந்த சம்பவம் மத்தேயு 2:1, 11-⁠ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், எத்தனை வானசாஸ்திரிகள் வந்தார்கள் என்றும் பைபிள் குறிப்பிடாததை முக்கியமாய் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். a

லத்தீன் அமெரிக்காவில், அந்த மூன்று ஞானிகள் சாண்டாகிளாஸ் எனப்படும் கிறிஸ்மஸ் தாத்தாவை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். மற்ற நாடுகளைப் போலவே, இங்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் பொம்மைகளை மறைத்து வைக்கின்றனர். பிறகு ஜனவரி 6-⁠ம் தேதி காலை பிள்ளைகள் மூன்று ஞானிகள் கொண்டுவந்த பொம்மைகளுக்காக தேடுகின்றனர். பொம்மை விற்பனையாளர்கள் எக்கச்சக்கமாக சம்பாதிக்க இது ஓர் அருமையான சந்தர்ப்பம். இந்தப் பண்டிகை காலத்தை வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அநேக நேர்மை இருதயமுள்ளவர்களோ இது வெறும் கற்பனை கதையே என்பதை மனதார ஏற்றுக்கொள்கின்றனர். இன்று, மூன்று ஞானசாஸ்திரிகள் பற்றிய கதையை நம்புபவர்களின் எண்ணிக்கை சிறுபிள்ளைகள் உட்பட பெருமளவில் குறைந்துகொண்டே இருக்கிறது. ஒருகாலத்தில் இதை நம்பினவர்கள் இப்போது பாரா முகம் காட்டுவதைக் கண்டு சிலர் வருத்தப்படுகின்றனர். ஆனால் வெறும் பாரம்பரியத்துக்காகவும் பணத்துக்காகவும் நடத்தப்படும் இந்தக் கொண்டாட்டத்திற்கான கற்பனை கதையை எல்லோரும் நம்ப வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

கிறிஸ்மஸை அல்லது கிறிஸ்துவின் பிறந்த நாளை பூர்வ கிறிஸ்தவர்கள் கொண்டாடவில்லை. “இதை முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ சர்ச்சுகள் கொண்டாடவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் முக்கியமானவர்களின் இறந்த நாளை அனுசரித்தனர், பிறந்த நாளை அல்ல” என விவரிக்கிறது ஒரு என்ஸைக்ளோப்பீடியா. பைபிளின்படி, பிறந்தநாளை புறமத வணக்கத்தாரே கொண்டாடினர்; உண்மை வணக்கத்தார் கொண்டாடவில்லை.​—மத்தேயு 14:6-10.

ஆனாலும், இது கடவுளுடைய குமாரன் பிறந்த போது நிகழ்ந்த உண்மை சம்பவங்களைக் கற்று நினைவில் வைத்துக்கொள்வதால் எந்தப் பயனுமில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. உண்மை சம்பவங்களை சரிவர விளக்கும் பைபிள் பதிவுகள், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய விரும்பும் அனைவருக்கும், முக்கியமான உண்மையையும், படிப்பினையையும் அளிக்கின்றன.

பைபிள்படி இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பைப் பற்றிய அநேக நம்பகமான தகவல்களை நீங்கள் மத்தேயு, லூக்கா சுவிசேஷங்களில் காணலாம். கலிலேயாவைச் சேர்ந்த நாசரேத்தில் மரியாள் என்ற திருமணமாகாத இளம் கன்னிகையை காபிரியேல் தூதன் சந்தித்ததைப் பற்றி அந்த பதிவுகள் சொல்கின்றன. தூதன் சொன்ன செய்தி என்ன? “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”​—லூக்கா 1:31-33.

இந்த செய்தியைக் கேட்டு மரியாள் திகைத்துப்போனாள். அவள் மணமாகாதிருந்ததால், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்று கேட்டாள். அதற்கு அந்த தேவதூதன், “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்” என பதிலளித்தார். இது கடவுளுடைய சித்தம் என்பதை புரிந்துகொண்டவுடன், “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என மரியாள் சொன்னாள்.​—லூக்கா 1:34-38.

மரியாள் கர்ப்பமாயிருப்பதை அறிந்ததும் யோசேப்பு அவளை நிராகரித்துவிட அல்லது விவாகரத்து செய்துவிட நினைத்தார். இதை தடுப்பதற்காக ஒரு தூதன், இந்த அற்புதமான பிறப்பைப் பற்றி யோசேப்புக்கு தெரியப்படுத்தினார். அதன்பிறகு, கடவுளுடைய குமாரனை வளர்க்கும் பொறுப்பை அவர் முழுமனதுடன் ஏற்க தயாரானார்.​—மத்தேயு 1:18-25.

பிறகு, நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் தங்கள் சொந்த நாட்டில் குடியுரிமையைப் பதிவுசெய்து வரும்படி அகுஸ்துராயன் கட்டளை பிறப்பித்தார். இதனால் யோசேப்பும் மரியாளும் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து தங்கள் சொந்த ஊராகிய யூதேயாவிலுள்ள பெத்லகேமிற்கு செல்ல நேர்ந்தது. “அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.”​—லூக்கா 2:1-7.

அதற்குப் பிறகு நடந்ததை லூக்கா 2:8-14 விளக்குகிறது: “அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.”

வானசாஸ்திரிகள்

அந்த வானசாஸ்திரிகள், யூதர்களின் ராஜா பிறந்திருக்கும் இடத்தைத் தேடி கிழக்கிலிருந்து எருசலேமிற்கு பயணப்பட்டார்கள் என மத்தேயு பதிவு காண்பிக்கிறது. ஏரோது ராஜாவும் இதில் பெரும் ஆர்வம் காட்டினார்​—⁠ஆனால் நல்ல நோக்கத்துடன் அல்ல. “நீங்கள் போய், பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.” வானசாஸ்திரிகள் குழந்தையை கண்டுபிடித்தபின், “தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.” பிறகு, “ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்”டார்கள். எனவே, ஏரோது சொன்னபடி அவரிடம் திரும்பி செல்லவில்லை. ஏரோதின் தந்திரமான திட்டத்தைக் குறித்து யோசேப்பிற்கு தேவதூதன்மூலம் கடவுள் எச்சரித்தார். அதன்படி, யோசேப்பும் மரியாளும் தங்கள் மகனுடன் எகிப்திற்கு ஓடிப்போனார்கள். அடுத்தபடியாக, ஏரோது ராஜா புதிதாய் பிறந்த ராஜாவை கொன்றுவிடும் முயற்சியில் ஈடுபட்டார். பெத்லகேமிலுள்ள இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லும்படி கட்டளையிட்டார்.​—மத்தேயு 2:1-16.

பதிவிலிருந்து பாடம்

இருப்பினும், அங்கு வந்த ‘அநேக’ வானசாஸ்திரிகள் உண்மை கடவுளை வணங்காதவர்கள். “அந்த மேஜைகள் ராஜாக்கள் அல்ல, ஆனால் குறி சொல்பவர்கள், புறமத குருக்கள்” என்கிறது லா நியூயிவா பிப்லியா லாடினோஅமெரிக்கா என்ற பைபிளுடைய 1989-⁠ம் வருட பதிப்பின் அடிக்குறிப்பு ஒன்று. நட்சத்திரங்களை வணங்கி வந்த அவர்கள் அவற்றைப் பற்றி தங்களுக்கிருந்த அறிவினால் வந்தார்கள். ஒருவேளை கடவுளே அவர்களை அனுப்பியிருந்தால் நேரடியாக குழந்தையிருந்த இடத்திற்கே வழிநடத்தியிருப்பார் அல்லவா? அப்படியிருந்தால், அவர்கள் எருசலேமுக்கு போகவும், பின்பு ஏரோதை சந்திக்கவும் அவசியமில்லையே. ஆனாலும் கடவுள் தலையிட்டார்; குழந்தையை காப்பதற்காக அவர்களுடைய பாதையை மாற்றினார்.

இந்தப் பதிவிற்கு இன்று அநேகர் கண், காது, மூக்கு வைத்துவிடுகின்றனர். தங்கள் கற்பனை வளத்தால் இந்த கதையை அதிக சுவாரசியமுள்ளதாக ஆக்கியிருக்கின்றனர். இதனால் ஒரு முக்கிய விஷயம் அடிபட்டு போகிறது. அந்த குழந்தை வல்லமை வாய்ந்த ராஜாவாக ஆவார் என மரியாளுக்கும் மேய்ப்பர்களுக்கும் அறிவிக்கப்பட்ட முக்கிய விஷயமே அது. இயேசு கிறிஸ்து இன்று குழந்தையாகவோ, இளம் பிள்ளையாகவோ இல்லை. இப்போது அவர் கடவுளுடைய ராஜ்யத்தை ஆட்சி செய்யும் அரசர். பரமண்டல ஜெபத்தில் நாம் எப்போதும் ஜெபிக்கும் அந்த ராஜ்யம் விரைவில், கடவுளுடைய சித்தத்தை எதிர்க்கும் எல்லா அரசாங்கங்களையும் அழித்துவிடும். அதன் மூலமாகவே இயேசு மனிதகுலத்தின் எல்லா பிரச்சினைகளையும் நீக்கிவிடுவார்.​—தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.

ராஜ்யத்தின் நற்செய்திக்கு செவிசாய்க்கும் எல்லோருக்குமே இரட்சிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை மேய்ப்பர்களுக்கு தேவதூதர்கள் அளித்த செய்தியிலிருந்து தெரிந்துகொள்கிறோம். கடவுளுடைய தயவை பெற்றுக்கொள்ளும் அனைவரும் அவருக்கு ‘பிரியமானவர்களாக’ இருப்பர். இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய அரசாட்சியில், இவ்வுலகில் சமாதானம் நிலவும் என்ற அருமையான எதிர்கால நம்பிக்கை நிறைவேறும். ஆனால் அதை அனுபவிக்க விரும்பும் அனைவரும் கடவுளுடைய சித்தத்தை செய்ய தயாராயிருக்க வேண்டும். அதற்கு கிறிஸ்மஸ் நமக்குத் தூண்டுதல் அளிக்கிறதா அல்லது இந்த விருப்பத்தையாகிலும் அது பிரதிபலிக்கிறதா? பைபிளின்படி நடக்க விரும்பும் உண்மை மனதுள்ள அநேகர் இதற்கான பதிலை உடனே சொல்லிவிடுவர்.​—லூக்கா 2:10, 11, 14.

[அடிக்குறிப்பு]

a நாம் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்: மெக்ஸிகோவின் நேஸீமியென்டோவில், “குழந்தை தெய்வம்” என அந்த குழந்தை குறிப்பிடப்படுகிறது. அதாவது கடவுளே குழந்தையாக பூமிக்கு வந்தார் என்ற கருத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால் பைபிளோ, பூமியில் பிறந்த இயேசுவை கடவுளுடைய குமாரன் என்றே சொல்கிறது. அவர் சர்வ வல்லமையுள்ள யெகோவா தேவனுக்கு நிகரான சக்தி படைத்தவர் என்றோ, அவருக்கு நிகரானவர் என்றோ பைபிள் சொல்வதில்லை. லூக்கா 1:35; யோவான் 3:16; 5:37; 14:1, 6, 9, 28; 17:1, 3; 20:17 போன்ற வசனங்களில் காணப்படும் உண்மைகளை ஆராயவும்.

[பக்கம் 4-ன் பெட்டி]

சிலர் ஆச்சரியப்படுவர்

வருடக்கணக்காக கிறிஸ்மஸைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கிய டாம் ஃபிலின் என்பவர் தன் முடிவுகளை கிறிஸ்மஸிலுள்ள குறைபாடு என்ற தன் ஆங்கில புத்தகத்தில் வெளியிட்டார். அவர் எழுதியது:

“கிறிஸ்மஸின்போது நாம் கொண்டாடும் அநேக பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உண்மையில் கிறிஸ்தவத்திற்கு முன்னிருந்த புறமதத்தை சேர்ந்தவை. இவற்றுள் சில, சமுதாயம், பாலின ஒழுக்கம், விண்ணியல் சார்ந்த தவறான கொள்கைகளை வெளிப்படுத்துகின்றன. இன்றைய கல்விமான்களும் கலாச்சார பாதுகாவலர்களும் இவற்றின் உண்மையான ஆரம்பத்தைத் தெளிவாக விளங்கிக்கொண்டால் இவற்றை நிச்சயம் வெறுத்துவிடுவர்.”​—⁠பக்கம் 19.

இதை ஆதரிக்கும் அநேக தகவல்களை அளித்த பிறகு, ஃபிலின் தன்னுடைய முக்கிய குறிப்பை மீண்டும் வலியுறுத்துகிறார்: “கிறிஸ்மஸ் பழக்கங்களில் வெகு சொற்பமானவையே உண்மையில் கிறிஸ்தவம் சார்ந்தவை என்பது மிகவும் வேடிக்கையான விஷயங்களுள் ஒன்று. கிறிஸ்மஸ் பழக்கங்களில் கிறிஸ்தவத்திற்கு முன் தோன்றிய பழக்கங்களை நீக்கிவிட்டால், கிறிஸ்தவம் துவங்கிய பிறகு தோன்றிய பழக்கங்களே மீந்திருக்கும். அவையும் உண்மையில் கிறிஸ்தவத்திலிருந்து தோன்றியவை என உறுதியாக சொல்ல முடியாது.”​—⁠பக்கம் 155.

[பக்கம் 7-ன் படம்]

இயேசுவின் பிறப்பைப் பற்றிய அறிவிப்பே, அவர் எதிர்காலத்தில் கடவுள் தெரிந்தெடுத்த ராஜாவாக செயல்படுவார் என்பதற்கு அடிப்படையாக அமைந்தது