சீயாபஸில் சமாதான நற்செய்தி
சீயாபஸில் சமாதான நற்செய்தி
“சீயாபஸ் மாநிலத்தில் இதுவரை நடந்த படுகொலைகளிலேயே மிகக் கொடூரமானது அது. அந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. நிராயுதபாணிகளாய் நின்ற 45 ஏழை தொழிலாளர்கள் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களில் 13 பச்சிளங்குழந்தைகளும் அடங்குவர். . . . ஆயுதமேந்திய ஒரு குழுவினரே இந்த கொடூரத்தை செய்தனர்.” இவ்வாறு அறிவித்தது “எல் யூனிவர்சல்” என்ற செய்தித்தாள். இந்த சம்பவம், 1997, டிசம்பர் 22-ம் தேதி சீயாபஸ் மாநிலத்திலுள்ள அக்டீயல் என்ற இடத்தில் நடந்தது.
மெக்ஸிகோவின் தென்முனையில் குவாதமாலாவை ஒட்டியுள்ள மாநிலம்தான் சீயாபஸ். காலங்காலமாக வறுமையும் அடிமைத்தனமும் இவ்விடத்தை கசக்கிப் பிழிந்துள்ளன. ஜனவரி 1994-ம் ஆண்டு, பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் மாயா இந்தியர்கள், எஜெர்சிடோ சாபாடெஸ்டா டி லிபரேசியன் நேசியோனல் (EZLN, தேசிய விடுதலை சாபாடெஸ்டா படை) என்ற அமைப்பை ஏற்படுத்தி போராட்டம் நடத்த துவங்கினர். அந்த சண்டைகள், போராட்டங்களுக்கெல்லாம் தீர்வு காண எடுக்கப்பட்ட எல்லா சமாதான பேச்சுவார்த்தை நடவடிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டதால் சண்டை நீடித்தது. அரசு இராணுவத்தினரும் கலகக்கார கும்பலை சேர்ந்தவர்களும் நடத்திய ரெய்டுகளும் தாக்குதல்களும் தொடர்ந்தன. அதன் விளைவு, இரத்தவெள்ளமும், அதில் புரண்ட சடலங்களுமே. இந்த கொந்தளிப்பான நிலை, பாதுகாப்பான இடங்களைத் தேடி அநேக அப்பாவி மக்களை ஓடச் செய்துள்ளது.
எப்போது என்ன நடக்கும் என அறியாத இந்த சமயத்தில், ஒரு தொகுதியினர் மட்டும் வித்தியாசமாக வாழ்ந்து வருகின்றனர். சமாதானத்தை விரும்பும் இவர்கள் அரசியல் பிரச்சினைகளில் நடுநிலையை காத்துக்கொள்கின்றனர். இன்று மனிதர்கள் எதிர்ப்படும் எல்லா பிரச்சினைகளுக்கும், அது உள்நாட்டு பிரச்சினையாக இருந்தாலும்சரி சர்வதேச பிரச்சினையாக இருந்தாலும்சரி, கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே தீர்வு என இவர்கள் உறுதியாய் நம்புகின்றனர். (தானியேல் 2:44) யார் அவர்கள்? யெகோவாவின் சாட்சிகளே. இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிபவர்களாய், சீயாபஸ் மலைப்பகுதிகளின் மூலைமுடுக்கு எங்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்க கடுமையாக முயலுகின்றனர். (மத்தேயு 24:14) இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைமையில் பிரசங்க வேலை எவ்வாறு நடைபெற்றது? அதனால் கிடைத்த பலன்கள் என்ன?
“நான் ஒரு யெகோவாவின் சாட்சி”
அடால்ஃபோ என்ற இளைஞர் சமீபத்தில் ராஜ்ய பிரஸ்தாபி ஆகியிருந்தார். அவர் ஒக்கோசிங்கோவிலுள்ள வானொலி நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். திடீரென ஒரு நாள் யாரோ வேகமாக கதவைத் தட்டுவது கேட்டது. தடதடவென உள்ளே நுழைந்த சில முகமூடிக்காரர்கள் துப்பாக்கியால் அவர் தலைக்கு குறி வைத்தனர், ஒலிபரப்பு அறைக்கு விரைந்தனர், வானொலி இயந்திரத்தை இயக்கினர், அரசாங்கத்திற்கு எதிராக போர் அறிவிப்பு செய்துவிட்டதாக அறிவித்தனர்.
ஆயுதம் தாங்கியவர்கள் அடால்ஃபோவை தங்கள் இயக்கத்தில் சேர்ந்துகொள்ள ஆணையிட்டனர். அதுவரை முழுக்காட்டுதல் எடுக்காதிருந்த போதிலும், “நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என அடால்ஃபோ பதிலளித்தார். என்றாலும், சமாதானத்திற்கான ஒரே வழி கடவுளுடைய ராஜ்யமே என அவர்களிடம் விளக்கிவிட்டு, அவர்கள் கொடுத்த சீருடையையும் துப்பாக்கியையும் ஏற்க மறுத்துவிட்டார். அவருடைய உறுதியைக் கண்டு அவர்கள் அவரை அனுப்பிவிட்டனர். இந்த சம்பவத்தை மனக்கண் முன் நிறுத்தி, “அது என் விசுவாசத்தை உறுதிப்படுத்தியது” என்கிறார் அடால்ஃபோ.
கொஞ்ச காலத்தில் நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது; இருப்பினும் அந்தப் பகுதி இராணுவ கண்காணிப்பிலேயே இருந்தது. இந்த சமயத்தில் சபையின் மூப்பர்கள் அருகிலுள்ள கிறிஸ்தவ தொகுதியுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்படி அடால்ஃபோவுக்கு அழைப்புவிடுத்தனர். இந்தக் கெடுபிடியான சூழ்நிலையிலும் அவர் அதை சந்தோஷமாக
ஏற்றுக்கொண்டார். அந்த இடத்திற்குப் போகும் வழியில் செக் போஸ்ட்டுகள் இருந்தன; அங்குள்ள காவலர்களிடம் தன்னை யெகோவாவின் சாட்சி என அறிமுகப்படுத்திக் கொண்டதும் அவர்கள் அவரை மதிப்புடன் நடத்தினர். அவர் பின்னர் முழுக்காட்டுதல் பெற்றதோடு, யெகோவாவின் சாட்சிகளின் அந்த சிறிய தொகுதி, பெரிய சபையாக வளர உதவியதில் திருப்தி அடைந்தார். “நான் இப்போது முழுக்காட்டுதல் எடுத்துவிட்டேன், அதனால் ‘நான் ஒரு யெகோவாவின் சாட்சி’ என்று இப்போது என்னால் தைரியமாக சொல்ல முடியும்!” என்கிறார் அடால்ஃபோ.“யெகோவா எங்களை பலப்படுத்தினார்”
அந்த EZLN அமைப்பு, ரேடியோவில் அரசாங்கத்திற்கு எதிராக போர் அறிவிப்பு செய்த உடனே நகரவாசிகள் அனைவரும் உஷாராகி, அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் தானும் தன் மனைவியும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டனர் என்றும், தங்கள் கஷ்டங்களில் எப்படியெல்லாம் யெகோவா கைகொடுத்து உதவினார் என்றும் ஃப்ரான்ஸிஸ்கோ என்ற பயனியர் அல்லது முழுநேர ஊழியர் விளக்கினார்.
“நாங்கள் வசித்து வந்த இடத்திலிருந்து மூன்று மணிநேர நடைபயண தூரத்திலுள்ள ஒரு இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம். அந்த இடத்தில் ஒரு சபை இருந்ததால், சகோதரர்களுடன் இருக்க தீர்மானித்து அங்கு சென்றோம். கொஞ்ச நாட்களுக்குள் பாலென்க்யு என்ற கிராமத்தில் எங்கள் வட்டார மாநாடு நடக்கவிருந்தது. அந்த மாநாட்டிற்கு முன்பு, பயனியர்களுக்கான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விசேஷ கூட்டத்தை தவறவிட நானும் என் மனைவியும் விரும்பவில்லை. ஆனால்
மாநாட்டிற்கு செல்லும் பாதையை EZLN அமைப்பினர் ஆக்கிரமித்திருந்ததைக் கேள்விப்பட்டோம். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகையில், காட்டு வழியாக மாநாட்டிற்கு செல்ல தீர்மானித்தோம். அந்த வழியாக செல்ல ஒன்பது மணிநேரம் எடுத்தது. இருந்தாலும் நாங்கள் சரியான சமயத்திற்கு போய் சேர்ந்துவிட்டோம். அந்த பயனியர் கூட்டத்தையும் மாநாட்டு நிகழ்ச்சிநிரல் முழுவதையும் அனுபவித்து மகிழ்ந்தோம். அதில் கிடைத்த பேரானந்தத்தை வர்ணிக்க எங்களுக்கு வார்த்தைகள் இல்லை.“நாங்கள் திரும்பிவந்தபோது கண்ட காட்சி எங்களை அதிர்ச்சியடைய செய்தது; எங்கள் வீடு எரிந்து சாம்பலாகியிருந்தது, எங்கள் வீட்டிலிருந்த பிராணிகள் எல்லாம் கொள்ளையடித்து செல்லப்பட்டிருந்தன. எஞ்சியதெல்லாம் ஒரு பையும் ஒருசில துணிமணிகளும்தான். இந்த இழப்பு எங்களுக்கு சோர்வை ஏற்படுத்தியது. என்றபோதிலும் ஒக்கோசிங்கோவிலிருந்த சகோதரர்கள் அடைக்கலம் அளித்து, அன்புடன் அரவணைத்தது ஆறுதலாய் இருந்தது. விவசாயத்தை மட்டுமே தெரிந்து வைத்திருந்த எங்களுக்கு புதிய வேலைகளை கற்றுக்கொடுத்தனர். ஒரு சகோதரர் எனக்கு ஃபோட்டோ எடுக்க கற்றுக்கொடுத்தார். மற்றொருவர் ஷூ தைக்க கற்றுக்கொடுத்தார். இவையெல்லாம்தான், நானும் என் மனைவியும் இன்றுவரை எங்கள் பயனியர் சேவையை நிறுத்திவிடாமல் தொடர கைகொடுத்து உதவியிருக்கின்றன. அப்போது நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்கும்போது, கஷ்டமான சமயங்களில் நாங்கள் சகித்திருக்க எந்தளவுக்கு யெகோவா எங்களை பலப்படுத்தினார் என்பதை உணர முடிகிறது.”
பிரசங்க வேலையில் கிடைத்த பலன்
இன்றும் அந்தப் போர் மேகங்கள் கலைந்தபாடில்லை என்பது உண்மைதான். ஆனால் சீயாபஸிலுள்ள நம் சகோதரர்கள் நற்செய்தியை பிரசங்கிப்பதை அவை தடுத்து நிறுத்தவில்லை. உதாரணமாக, 1995-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்? என்று தலைப்பிடப்பட்ட ராஜ்ய செய்தி எண்-ஐ உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவ சகோதரர்களைப் போலவே இவர்களும் விநியோகித்தனர்.
ப்வீப்லோ ந்வேபோ என்ற இடத்தில், சீரோ என்ற ஒழுங்கான பயனியர் இந்த விசேஷ அளிப்பின்போது நற்செய்தியில் ஆர்வம் காட்டிய ஒரு குடும்பத்தினரை சந்தித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களை மீண்டும் சந்தித்தபோது பைபிள் படிப்பை துவங்கினார். ஆனால் அடுத்தமுறை சீரோ படிப்பு நடத்த மற்றொருவருடன் சென்றிருந்தபோது, அந்த வீட்டுக்காரர் வீட்டில் இல்லை. அங்கு அந்த வீட்டுக்காரரை தாக்குவதற்காக முகமூடிக்கார கும்பல் ஒன்று பதுங்கியிருந்தது. நம் சகோதரர்கள் யாரைத் தேடுகின்றனர் என அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் கேட்டனர். அத்துடன் அவர்களைக் கொன்றுவிடுவதாகவும் பயமுறுத்தினர். சகோதரர்கள் இருவரும் மௌனமாக யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு, தாங்கள் அந்த குடும்பத்தினருக்கு பைபிளை சொல்லிக்கொடுக்க வந்ததாக விளக்கினர். பிறகு, கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்களை அங்கிருந்து போகவிட்டனர். என்ன காரணத்தாலோ, அந்த வீட்டுக்காரரும் அன்று வீட்டிற்கு வரவில்லை.
சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள், அந்த வீட்டுக்காரர் தன் வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்டு சீரோவுக்கு ஒரே ஆச்சரியம். அந்த முழு குடும்பமும் இப்போது முழுக்காட்டுதல் பெற்றுவிட்டதாகவும், அவர்கள் குவாதமாலாவிலுள்ள ஒரு சபைக்குச் செல்வதாகவும், அவருடைய ஒரு மகள் ஒழுங்கான பயனியராக சேவை செய்வதாகவும் அவர் சொன்னபோது சீரோவுக்கு இன்ப அதிர்ச்சி!
ஆன்மீக உணவிற்கு போற்றுதல்
சீயாபஸில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. இருந்தாலும், அங்குள்ள சாட்சிகள் கூட்டங்களுக்கு வருவதன் முக்கியத்துவத்தை நன்கு போற்றுகிறார்கள் என அறிக்கை செய்கிறார் ஒரு மாவட்ட கண்காணி. (எபிரெயர் 10:24, 25) சமீப விசேஷ மாநாட்டு தினத்தின்போது என்ன நடந்தது என்பதை அவர் விளக்குகிறார். மாநாட்டிற்கு வருபவர்கள் நேரங்காலத்தோடு பத்திரமாக வீடு திரும்புவதற்கு வசதியாக நிகழ்ச்சிநிரலை காலையில் வெகு சீக்கிரமே துவங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் மாநாட்டு வளாகத்திற்கு வருவதற்கு காட்டு வழியாக மூன்று மணிநேரம் நடக்க வேண்டியிருந்தது. என்றாலும், எல்லோரும் சரியாக காலை 7 மணிக்கு தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்திருந்தவர்களில் EZLN அமைப்பைச் சேர்ந்த ஆறுபேரும் இருந்தனர். கவனமாக கேட்டு, கைதட்டி, சந்தோஷமாக நிகழ்ச்சிநிரலை அனுபவித்தனர். இவர்களும் மாநாட்டிற்கு வருவதற்கு மூன்று மணிநேரம் நடந்திருக்கின்றனர்! அங்குள்ள ராஜ்ய மன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த இருபது பேர் கலந்துகொண்டனர்.
ஒரு காட்டுப் பகுதியை கண்காணிக்கும் பொறுப்பை, கொரில்லா படையை சேர்ந்த ஓர் இளைஞனுக்கு அதிகாரிகள் நியமித்திருந்தனர். பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் குடியிருந்த அந்த இடத்திற்கு அவர் வந்தபோது, அது வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டார். அதனால் அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் சென்றார். வேலை ஏதுமின்றி பொழுதைக் கழிக்கையில் அவ்வீட்டிலிருந்த சில புத்தகங்களை எடுத்துப் புரட்டினார். அவை சாட்சிகள் விட்டுச் சென்றிருந்த உவாட்ச் டவர் பிரசுரங்கள். தனிமையில் இருந்த அவருக்கு வாசித்த விஷயங்களை மனதில் அசைபோட அதிக நேரம் இருந்தது. பிறகு, தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, போர் ஆயுதங்களை கையிலெடுக்காதிருக்க தீர்மானித்தார். விரைவிலேயே சாட்சிகளை கண்டுபிடித்து, அவர்களுடன் படிக்க ஆரம்பித்தார். ஆறே மாதத்தில், மற்றவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்க ஆரம்பித்தார். அவரும், கொரில்லா படைக்கு ஆதரவளித்த அவருடைய மூன்று குடும்ப அங்கத்தினர்களும் இப்போது முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள்.
போராட்டத்தின் மறுபக்கம்
இங்குள்ள சண்டைகளும், போராட்டங்களும் அதிக கஷ்டமான நிலைமையை உருவாக்கியிருந்தபோதிலும், பிரசங்க வேலையைக் குறித்து மக்களுக்கிருந்த அபிப்பிராயத்தை மாற்றியுள்ளன. அவர்கள் நற்செய்திக்கு நன்கு பிரதிபலிக்கின்றனர். முதன்முதல் சண்டைகள் துவங்கிய நகரத்தைச் சேர்ந்த ஒரு மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “சண்டைகள் துவங்கிய ஐந்தே நாட்களில், நகரத்திலும் வெளி இடங்களிலும் பிரசங்கிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தோம். எங்கள் செய்தியை கேட்க மக்கள் அனைவரும் ஆவலாயிருந்தனர். அந்த சமயம், நாங்கள் எக்கச்சக்கமான பைபிள் பிரசுரங்களை அளித்ததோடு, அநேக பைபிள் படிப்புகளையும் துவங்கினோம். ஒரு பகுதியில், முன்பு அனைவருமே சத்தியத்தை எதிர்த்துவந்தனர். ஆனால் இந்தச் சண்டைக்குப் பிறகு எங்கள் செய்திக்கு ஆர்வத்துடன் செவிசாய்க்கின்றனர், பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொள்கின்றனர், கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் வருகின்றனர்.”
இவ்வாறு நிலையற்ற, குழப்பமிக்க சூழ்நிலைமையிலும் தேவராஜ்ய காரியங்களைத் தொடர முடிந்திருப்பதில் சகோதரர்களுக்கு சந்தோஷம். அத்துடன் தங்களை தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தும் கூட்டங்களையும் மாநாடுகளையும் அரசாங்க படைகளும் EZLN படைகளும் அறியவே நடத்துகின்றனர். வட்டார கண்காணிகளின் சந்திப்புகளும் பிரசங்க வேலையில் தொடர்ந்திருக்க சகோதரர்களுக்கு பெருமளவில் உதவியுள்ளன. சண்டையில் ஈடுபடுகிறவர்களே சாட்சிகளை பெருமளவில் உற்சாகப்படுத்துவது ஆர்வத்திற்குரிய விஷயம்; பிரசங்க வேலையை தொடர அவர்கள் சாட்சிகளை உந்துவிக்கின்றனர்.
சீயாபஸிலுள்ள மக்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளும் கஷ்டங்களும் இப்போது சற்று குறைந்திருக்கிறபோதிலும் அவை முடிந்துவிடவில்லை. ஆனால் என்ன நடந்தாலும்சரி, அங்குள்ள சாட்சிகள், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள சமாதான நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதை நிறுத்தப் போவதில்லை என தீர்மானமாயிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 10:34-36; எபேசியர் 6:15) ஏனென்றால், எரேமியா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்: “மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.” (எரேமியா 10:23, பொ.மொ.) கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்து ஆளும் கடவுளுடைய ராஜ்யமே இவ்வுலகிலுள்ள அநியாயத்திலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் நித்திய விடுதலையைத் தரும்.—மத்தேயு 6:10.
[பக்கம் 9-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மெக்ஸிகோ வளைகுடா
சீயாபஸ்
குவாதமாலா
பசிபிக் பெருங்கடல்
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 9-ன் படங்கள்]
சீயாபஸ் மலைப்பகுதிகளில் சாட்சிகள் ஊழியத்திற்கு செல்கின்றனர்