Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முழுநிச்சயத்துடன் தேறினவர்களாக நிலைநிற்பீர்களாக

முழுநிச்சயத்துடன் தேறினவர்களாக நிலைநிற்பீர்களாக

முழுநிச்சயத்துடன் தேறினவர்களாக நிலைநிற்பீர்களாக

“நீங்கள் கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று தன் ஜெபங்களில் இவன் எப்பொழுதும் உங்களுக்காகப் போராடுகிறான்.”​—⁠கொலோசேயர் 4:​12, தி.மொ.

1, 2. (அ) பூர்வ கிறிஸ்தவர்களைப் பற்றி உலகத்தார் என்ன உரைத்தார்கள்? (ஆ) அன்பையும் அக்கறையையும் கொலோசெயர் புத்தகம் எவ்வாறு எடுத்துரைக்கிறது?

 இயேசுவை பின்பற்றியவர்கள் சக விசுவாசிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினார்கள். தாய்தகப்பன் இல்லாதவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் வயோதிபத்தில் வாடுபவர்களுக்கும் தயவு காட்டியதைப் பற்றி டெர்ட்டுல்லியன் (பொ.ச. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளர்) கூறினார். செயலில் காட்டிய இவர்களுடைய அன்பு அவிசுவாசிகளின் மனதை தொட்டது; ‘பார், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி நேசிக்கிறார்கள்’ என கிறிஸ்தவர்களைப் பற்றி இவர்களில் சிலர் சொன்னார்கள்.

2 கொலோசெயில் வாழ்ந்த சகோதர சகோதரிகளிடம் அப்போஸ்தலன் பவுலும் அவருடைய தோழர் எப்பாப்பிராவும் இப்படிப்பட்ட அன்பையும் அக்கறையையும் காண்பித்தார்கள். இதைத்தான் கொலோசெயர் புத்தகம் நமக்கு எழுத்துருவில் எடுத்துரைக்கிறது. ‘நீங்கள் கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று [எப்பாப்பிரா] தன் ஜெபங்களில் எப்பொழுதும் உங்களுக்காகப் போராடுகிறான்’ என பவுல் அவர்களுக்கு எழுதினார். கொலோசேயர் 4:​12-⁠ல் (தி.மொ.) உள்ள பின்வரும் வார்த்தைகளே 2001-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுக்கு வருடாந்தர வசனமாக இருக்கும்: ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டும்.’

3. எந்த இரண்டு அம்சங்களுக்காக எப்பாப்பிரா ஜெபம் செய்தார்?

3 பாசத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்களுக்காக எப்பாப்பிரா ஏறெடுத்த ஜெபங்களில் இரண்டு அம்சங்கள் அடங்கியிருந்ததை கவனித்திருப்பீர்கள்: (1‘அவர்கள் தேறினவர்களாக நிலைநிற்க’ வேண்டும் என்றும், (2‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் முழுநிச்சயத்துடன்’ நிலைநிற்க வேண்டும் என்றும் ஜெபித்தார். இந்த அருமையான தகவல் நம்முடைய நன்மைக்காக வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அப்படி செய்தால் என்ன பலன்?’ நாம் இப்பொழுது இவற்றை ஆராயலாம்.

‘தேறினவர்களாக நிலைநிற்க’ முயலுங்கள்

4. என்ன கருத்தில் கொலோசெயர் ‘தேறினவர்களாக’ வேண்டியிருந்தது?

4 கொலோசெயிலிருந்த ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் ‘தேறினவர்களாக நிலைநிற்க’ வேண்டும் என எப்பாப்பிரா மிகவும் ஆசைப்பட்டார். ‘தேறினவர்களாக’ என இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையின் அர்த்தம் பரிபூரணம், முழு வளர்ச்சி, அல்லது முதிர்ச்சி என்பதாகும். (மத்தேயு 19:21; எபிரெயர் 5:​14; யாக்கோபு 1:​4, 25) ஒருவர் முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருப்பதால் மட்டுமே முழு வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர் என சொல்லிவிட முடியாது என்பதை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். கொலோசெயின் மேற்குப்புறத்தில் வாழ்ந்துகொண்டிருந்த எபேசியருக்கு பவுல் கடிதம் எழுதினார். அதில், ‘அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் [“திருத்தமான,” NW] அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராவதற்கு’ உதவிசெய்ய மேய்ப்பர்களும் போதகர்களும் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டார். வேறொரு இடத்தில், “புரிந்துகொள்ளும் திறமையில் முழு வளர்ச்சி” அடையும்படி கிறிஸ்தவர்களை பவுல் உந்துவித்தார்.​—⁠எபேசியர் 4:8-13; 1 கொரிந்தியர் 14:⁠20, NW.

5. தேறினவர்களாக விளங்குவதை நாம் எவ்வாறு முக்கிய இலக்காக வைத்துக்கொள்ளலாம்?

5 கொலோசெயில் வசித்துவந்த சிலர் ஆவிக்குரிய விதத்தில் இன்னும் முழு வளர்ச்சியடையாமல் அல்லது முதிர்ச்சியடையாமல் இருந்தால், அதை இலக்காக வைக்க வேண்டியிருந்தது. இன்று நாமும் அதைத்தான் செய்ய வேண்டும் அல்லவா? நாம் பல ஆண்டுகளுக்கு முன்பு முழுக்காட்டப்பட்டிருந்தாலும் சரி சில மாதங்களுக்கு முன்பு முழுக்காட்டப்பட்டிருந்தாலும் சரி, பகுத்தறியும் திறமையிலும் நம்முடைய நோக்குநிலைகளிலும் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்ல முடியுமா? தீர்மானம் எடுப்பதற்கு முன் பைபிள் நியமங்களை சற்று புரட்டிப் பார்க்கிறோமா? கடவுளையும் சபை சம்பந்தப்பட்ட விஷயங்களையும் வாழ்க்கையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிடாமல் எப்பொழுதும் முதலிடத்தில் வைக்கிறோமா? தேறினவர்களாக வளருவதற்கான எல்லா வழிகளையும் இங்கே நாம் அலசி ஆராய முடியாது, ஆனால் இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.

6. யெகோவாவைப் போல் பரிபூரணராக இருக்க முயலும்போது எந்தவொரு அம்சத்தில் முன்னேறலாம்?

6 உதாரணம் ஒன்று: வேறு இனத்தவரிடமோ தேசத்தவரிடமோ அல்லது மதத்தவரிடமோ தப்பெண்ணத்தை அல்லது பகைமையை ஊட்டி வளர்க்கும் ஒரு சூழலில் நாம் வளர்ந்து வந்ததாக வைத்துக்கொள்வோம். கடவுள் பட்சபாதமுள்ளவர் அல்ல, நாம் அப்படி இருக்கக்கூடாது என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம். (அப்போஸ்தலர் 10:14, 15, 34, 35) நம்முடைய சபையிலோ வட்டாரத்திலோ பல பின்னணியைச் சேர்ந்தவர்கள் இருப்பதால், நாம் அவர்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் மீது ஏதாவது வெறுப்பு அல்லது சந்தேக மனப்பான்மையை இன்னும் எந்தளவுக்கு உள்ளத்தில் வைத்திருக்கிறோம்? அத்தகைய பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஏதாவது சிறு தவறு செய்துவிட்டால் அல்லது லேசாக புண்படுத்திவிட்டால், சட்டென்று வெகுண்டு எழுகிறோமா? ‘கடவுளுடைய பாரபட்சமற்ற குணத்தை நான் இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டுமா?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

7. கிறிஸ்தவராக தேறியிருப்பதில், மற்றவர்களைப் பற்றி எப்படிப்பட்ட நோக்குநிலையை வைத்திருப்பதும் அடங்கியுள்ளது?

7 உதாரணம் இரண்டு: நாம் “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ண” வேண்டும் என்று பிலிப்பியர் 2:3 சொல்கிறது. இந்த விஷயத்தில் நாம் எப்படி முன்னேறி வருகிறோம்? ஒவ்வொருவருக்கும் பலவீனங்களும் பலங்களும் இருக்கிறது. முன்பு மற்றவர்களுடைய பலவீனங்களை சட்டென்று கவனிப்பவராக இருந்திருந்தால், இனிமேல் அவர்களிடம் ‘பரிபூரணத்தை’ எதிர்பார்க்காமல் இருப்பதில் முன்னேறியிருக்கிறோமா? (யாக்கோபு 3:2) அவர்களிடம் நம்மைவிட நல்ல குணங்கள் இருப்பதை பார்ப்பதில்​—⁠அவற்றை துருவி பார்ப்பதில்​—⁠இப்போது நன்கு முன்னேறியிருக்கிறோமா? ‘என்னதான் இருந்தாலும், இந்த சகோதரி என்னைவிட அதிக பொறுமைசாலி.’ ‘என்னைவிட அவருக்கு உறுதியான விசுவாசம் இருக்கிறது.’ ‘போதிப்பதில் அவர் என்னைவிட அதிக திறமையானவர்.’ ‘அவர்களைப் போல என்னால் கோபத்தை அடக்க முடியாது.’ இந்த விஷயத்தில் கொலோசெயரில் சிலர் முன்னேற வேண்டியதாக இருந்திருக்கலாம். நாமும் முன்னேற வேண்டுமா?

8, 9. (அ) என்ன கருத்தில் கொலோசெயர் தேறினவர்களாக ‘நிலைநிற்பதற்கு’ எப்பாப்பிரா ஜெபித்தார்? (ஆ) ‘தேறினவர்களாக நிலைநிற்பது’ எதிர்காலத்தில் எதை குறித்தது?

8 கொலோசெயர் ‘தேறினவர்களாக நிலைநிற்பதற்கு’ எப்பாப்பிரா ஜெபம் செய்தார். கொலோசெயர் எந்தளவுக்கு தேறினவர்களாக, முதிர்ச்சியடைந்த, முழு வளர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களாக இருந்தார்களோ அந்தளவுக்கு அவர்கள் ‘நிலைநிற்க’ கடவுளிடம் எப்பாப்பிரா ஜெபித்தார் என்பது தெளிவாயிருக்கிறது.

9 கிறிஸ்தவராகும் ஒவ்வொருவரும், முதிர்ச்சியடைந்தவரும்கூட, அப்படியே தொடர்ந்திருப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. கடவுளுடைய தூத குமாரன் ஒருவன் “சத்தியத்தில் நிலைநிற்கவில்லை” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44) கொஞ்ச காலம் யெகோவாவுக்கு சேவை செய்துவிட்டு பின்பு தவறிப்போன சிலரைப் பற்றி கொரிந்தியருக்கு பவுல் நினைப்பூட்டினார். ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரருக்கு பின்வரும் எச்சரிக்கையை விடுத்தார்: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12) கொலோசெயர் ‘தேறினவர்களாக நிலைநிற்பதற்கு’ செய்யப்பட்ட ஜெபத்திற்கு இது மேலும் வலிமை சேர்க்கிறது. அவர்கள் பூரணராக, முழு வளர்ச்சியடைந்தப் பின், அதை விட்டு பின்வாங்காமல், விலகாமல் அல்லது சோர்வுறாமல் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். (எபிரெயர் 2:1; 3:​12; 6:6; 10:39; 12:25) அப்போதுதான், அவர்கள் சோதிக்கப்பட்டு கடைசியாக அங்கீகரிக்கப்படும் நாளில் ‘தேறினவர்களாக’ இருப்பார்கள்.​—2 கொரிந்தியர் 5:​10; 1 பேதுரு 2:​12.

10, 11. (அ) ஜெபத்தைக் குறித்ததில் எப்பாப்பிரா நமக்கு வைத்த மாதிரி என்ன? (ஆ) எப்பாப்பிராவைப் போல நீங்களும் என்ன தீர்மானமெடுக்க விரும்புவீர்கள்?

10 பெயர் குறிப்பிட்டு மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் முக்கியத்துவத்தையும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் யெகோவா அவர்களுக்கு உதவியளிக்கவும் ஆறுதலளிக்கவும் ஆசீர்வதிக்கவும் பரிசுத்த ஆவியை அருளவும் வேண்டுமென்று கேட்பதன் முக்கியத்துவத்தையும் நாம் ஏற்கெனவே ஆராய்ந்தோம். கொலோசெயருக்காக எப்பாப்பிரா செய்த ஜெபங்களும் அப்படித்தான் இருந்தன. ஜெபத்தில் நம்மைப் பற்றி யெகோவாவிடம் எதை தெரிவிக்கலாம் என்பதற்கு நல்ல ஆலோசனையை அதில் நாம் கவனிக்கலாம், சொல்லப்போனால் கவனிக்கவும் வேண்டும். ஆகவே, தனிப்பட்டவராக நாம் ‘தேறினவர்களாக நிலைநிற்பதற்கு’ யெகோவாவின் உதவியை கேட்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் கேட்கிறீர்களா?

11 உங்களுடைய நிலைமையை ஜெபத்தில் தெரிவிக்கலாமே. முழு வளர்ச்சியை, அல்லது முதிர்ச்சியை நோக்கி எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதைப் பற்றி கடவுளிடம் பேசுங்கள். ஆவிக்குரிய விதத்தில் எந்த அம்சங்களில் நீங்கள் இன்னும் வளர வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள உதவிக்காக அவரிடம் கெஞ்சி கேளுங்கள். (சங்கீதம் 17:3; 139:23, 24) அப்படிப்பட்ட சில அம்சங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பின்பு, அதைக் குறித்து சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, முன்னேற உதவி செய்யும்படி கடவுளிடம் தெளிவாகவும் குறிப்பாகவும் விண்ணப்பம் பண்ணுங்கள். இப்படி பலமுறை செய்யுங்கள். வருகிற இந்த வாரத்தில், நீங்கள் ‘தேறினவர்களாக நிலைநிற்பதற்கு’ நன்கு ஜெபிக்க ஏன் தீர்மானிக்கக் கூடாது? வருடாந்தர வசனத்தை சிந்திக்கையில் இன்னும் அதிகமாக இதை செய்ய திட்டமிடுங்கள். உங்களுடைய ஜெபங்களில், பின்வாங்கும், சோர்வுறும், அல்லது கடவுளுடைய சேவையிலிருந்து விலகிச் செல்லும் எண்ணங்களுக்கும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கும் கவனம் செலுத்துங்கள்.​—எபேசியர் 6:​11, 13, 14, 18.

முழுநிச்சயத்திற்காக ஜெபியுங்கள்

12. முக்கியமாக கொலோசெயருக்கு ஏன் ‘முழுநிச்சயம்’ தேவைப்பட்டது?

12 கொலோசெயர், கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவர்களாய் நிலைநிற்பதற்குத் தேவைப்படும் இன்றியமையாத மற்றொரு விஷயத்திற்காகவும் எப்பாப்பிரா ஜெபித்தார். அது நமக்கும் அவசியமாக இருக்கிறது. அது என்ன? ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் முழுநிச்சயத்துடன்’ நிலைநிற்க வேண்டுமென்று அவர் ஜெபித்தார். முரணான கருத்துக்களும் தீங்கிழைக்கும் தத்துவங்களும் அவர்களை சூழ்ந்திருந்தன. அவற்றில் சில உண்மை வணக்கத்துக்குரியதைப் போலவே தோன்றின. உதாரணமாக, ஒரு காலத்தில் யூத வணக்க முறையில் செய்யப்பட்டபடி, விசேஷித்த நாட்களை உபவாசத்துடன் அல்லது விருந்துடன் கைக்கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். மோசேக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுக்க பயன்படுத்தப்பட்ட வல்லமை வாய்ந்த தூதர்களின் மீது கள்ளப் போதகர்கள் கவனத்தை ஊன்ற வைத்தார்கள். அப்படிப்பட்ட அழுத்தங்கள் நமக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! முரண்பட்ட ஏராளமான அபிப்பிராயங்கள் குழப்பத்தை ஏற்படுத்தின.​—கலாத்தியர் 3:​19; கொலோசெயர் 2:​8, 16, 17, 19.

13. எந்த அம்சத்தை உணர்ந்துகொள்வது கொலோசெயருக்கு உதவும், அது எவ்வாறு நமக்கும் உதவும்?

13 இயேசு கிறிஸ்து வகிக்கும் பாகத்தை வலியுறுத்துவதன் மூலம் பவுல் நியாயங்காட்டி பேசினார். ‘நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்படுவீர்களாக.’ ஆம், கடவுளுடைய நோக்கத்திலும் நம்முடைய வாழ்க்கையிலும் கிறிஸ்து வகிக்கும் பாகத்தைப் பற்றிய முழு நம்பிக்கை (கொலோசெயருக்கும் நமக்கும்) தேவை. பவுல் இவ்வாறு விளக்கினார்: “தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”​—⁠கொலோசெயர் 2:6-10.

14. கொலோசெயில் இருந்தவர்களுக்கு நம்பிக்கை ஏன் நிஜமான ஒன்றாக இருந்தது?

14 கொலோசெயர் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள். பரலோக வாழ்க்கை என்ற தெளிவான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை பிரகாசமாக வைத்திருப்பதற்கு அவர்களுக்கு ஏராளமான காரணம் இருந்தது. (கொலோசெயர் 1:4, NW) அவர்கள் தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து முழுநிச்சயத்துடன் இருப்பது ‘கடவுளுடைய சித்தமாயிருந்தது.’ அந்த நம்பிக்கையை அவர்களில் எவராவது சந்தேகித்திருப்பார்களா? இல்லவே இல்லை! பூமிக்குரிய பரதீஸில் வாழும் வாய்ப்பை பெற்றிருக்கும் நாம் இன்று அதைக் குறித்து சந்தேகப்பட வேண்டுமா? துளிகூட சந்தேகப்பட வேண்டியதில்லை! அந்த நியாயமான நம்பிக்கை தெளிவாகவே ‘கடவுளுடைய சித்தத்தின்’ பாகமாக இருக்கிறது. இப்போது இந்தக் கேள்விகளைக் கவனியுங்கள்: ‘மிகுந்த உபத்திரவத்தைத்’ தப்பிப் பிழைக்கும் ‘திரள் கூட்டத்தாரில்’ ஒருவராக இருக்க முயற்சி எடுக்கிறீர்களென்றால், உங்கள் நம்பிக்கை எந்தளவு நிஜமாக உள்ளது? (வெளிப்படுத்துதல் 7:9, 14) அது ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் உங்களுடைய முழுநிச்சயத்தின்’ பாகமாக இருக்கிறதா?

15. நம்பிக்கையை உட்படுத்தி பவுல் குறிப்பிட்ட தொடர் வரிசை என்ன?

15 “நம்பிக்கை” என்று சொல்வதால் வெறும் ஆசையையோ பகற்கனவையோ நாம் அர்த்தப்படுத்துவதில்லை. ரோமருக்கு பவுல் முன்பு குறிப்பிட்ட சங்கிலித் தொடர் போன்ற குறிப்புகளிலிருந்து இதை நாம் காணலாம். அவற்றில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு குறிப்பும் அதற்கடுத்த குறிப்போடு தொடர்புடையது. பவுல் தன்னுடைய நியாயவிவாதத்தில் ‘நம்பிக்கையை’ எங்கே வைக்கிறார் என்பதை கவனியுங்கள்: “உபத்திரவம் சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்பட்ட நிலையையும், அங்கீகரிக்கப்பட்ட நிலை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்பதை நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மகிழ்ச்சியடைகிறோம். பரிசுத்த ஆவியினாலே கடவுளுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பதால் அந்த நம்பிக்கை ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது.”​—⁠ரோமர் 5:3-5, NW.

16. நீங்கள் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது என்ன நம்பிக்கையைப் பெற்றீர்கள்?

16 பைபிளின் செய்தியை யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு முதன்முதல் சொன்னபோது, மரித்தோரின் நிலைமை அல்லது உயிர்த்தெழுதல் போன்ற ஏதோவொரு சத்தியம் உங்களுடைய கவனத்தைக் கவர்ந்திருக்கலாம். முக்கியமாக, பூமிக்குரிய பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பைபிள் அடிப்படையிலான நம்பிக்கை பலருக்குப் புதிதாக இருந்தது. இந்தப் போதகத்தை நீங்கள் முதன்முதல் கேட்டதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். எப்பேர்ப்பட்ட அதிசயமான நம்பிக்கை​—⁠நோய் நொடியோ முதுமையோ இனி ஒருபோதும் இராது. உங்கள் உழைப்பின் பலன்களை அனுபவித்து மகிழ நீங்கள் என்றும் வாழலாம், மிருகங்களுடனும் சமாதானம்! (பிரசங்கி 9:​5, 10; ஏசாயா 65:17-​25; யோவான் 5:​28, 29; வெளிப்படுத்துதல் 21:​3, 4) நீங்கள் மகத்தான நம்பிக்கையை பெற்றீர்கள்!

17, 18. (அ) ரோமருக்கு பவுல் கொடுத்த வரிசையான குறிப்புகள் எவ்வாறு நம்பிக்கைக்கு வழிநடத்தின? (ஆ) ரோமர் 5:​4, 5 (NW) என்ன வகையான நம்பிக்கையைப் பற்றி பேசுகிறது, உங்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கிறதா?

17 காலப்போக்கில், நீங்கள் எதிர்ப்பை அல்லது துன்புறுத்துதலை எதிர்ப்பட்டிருக்கலாம். (மத்தேயு 10:34-​39; 24:9) சமீப ஆண்டுகளிலும்கூட, பல்வேறு நாடுகளிலுள்ள சாட்சிகளின் வீடுகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன, அல்லது அவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய பைபிள் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன, அல்லது மீடியாக்களில் வெளிவரும் பொய் அறிக்கைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட துன்புறுத்துதலை எதிர்ப்பட்டிருந்தாலும், ரோமர் 5:3, 4 (NW) சொல்லுகிறபடி, உபத்திரவத்திலும் உங்களால் மேன்மை பாராட்ட முடிந்தது. அது உங்களுக்குச் சிறந்த பலனையும் கொண்டுவந்தது. பவுல் எழுதினபடியே, உபத்திரவம் உங்களில் சகிப்புத்தன்மையை உண்டுபண்ணியது. பின்பு சகிப்புத்தன்மை ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு வழிநடத்தியது. நீங்கள் சரியானதை செய்துகொண்டிருந்தீர்கள், கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருந்தீர்கள் என்பதை அறிந்திருந்தீர்கள். ஆகையால் அவருடைய அங்கீகாரம் உங்களுக்கு இருக்கிறது என்று உறுதியாக உணர்ந்தீர்கள். பவுலின் வார்த்தைகளில் சொன்னால், ‘அங்கீகரிக்கப்பட்ட நிலையில்’ இருந்ததாக உணர்ந்தீர்கள். ‘அங்கீகரிக்கப்பட்ட நிலை நம்பிக்கையை’ உண்டாக்குகிறது என பவுல் தொடர்ந்து எழுதினார். அது சற்று வினோதமாக தோன்றலாம். ‘நம்பிக்கையை’ பவுல் ஏன் இந்தத் தொடர் வரிசையில் அவ்வளவு கடைசியில் குறிப்பிட்டார்? வெகு முன்பே, அதாவது நற்செய்தியை நீங்கள் முதன்முதல் கேட்டபோதே உங்களுக்கு நம்பிக்கை இருந்தது அல்லவா?

18 ஆகவே, பரிபூரண ஜீவனைப் பற்றிய நம்பிக்கையை கேட்டபோது ஆரம்பத்தில் நமக்கு ஏற்பட்ட உணர்ச்சியை பவுல் இங்கு குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. அவர் அதற்கும் மேம்பட்ட, ஆழமான ஒன்றைக் குறிப்பிடுகிறார்; அது அதிகம் ஊக்குவிப்பதாக உள்ளது. நாம் உண்மையோடு சகித்திருந்து கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு இருக்கிறதென்று உணருகையில், முதலில் நமக்கு இருந்த நம்பிக்கையின் மீது அது ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது; அது இன்னும் உறுதியடைந்து மேலும் பலப்படுகிறது. இப்போது அது அதிக நிஜமானதாகவும் அதிக உறுதியானதாகவும் அதிக உள்ளப்பூர்வமானதாகவும் ஆகிறது. ஆழமாக வேரூன்றிய இந்த நம்பிக்கை அதிக பிரகாசமாக ஒளிவீசுகிறது. நம்முடைய ஒவ்வொரு நரம்பிலும் ஊடுருவி பரவுகிறது. “பரிசுத்த ஆவியினாலே கடவுளுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பதால் அந்த நம்பிக்கை ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது.”

19. உங்களது நம்பிக்கை எவ்வாறு உங்களுடைய அன்றாட ஜெபங்களின் பாகமாக இருக்க வேண்டும்?

19 கொலோசெயிலிருந்த தன்னுடைய சகோதர சகோதரிகள் ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் முழுநிச்சயத்தோடிருந்து,’ வரவிருந்த காரியங்களைப் பற்றி உணர்வுள்ளவர்களாயும் உறுதியுள்ளவர்களாயும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எப்பாப்பிராவின் ஊக்கமான ஜெபம். அவ்வாறே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நம்பிக்கையைக் குறித்து தவறாமல் கடவுளை அணுகுவோமாக. புதிய உலகைப் பற்றிய உங்கள் நம்பிக்கையை உங்களுடைய தனிப்பட்ட ஜெபங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள். அது வருமென்ற முழு நம்பிக்கையுடன், அதற்காக நீங்கள் எந்தளவு ஏங்குகிறீர்கள் என்பதை யெகோவாவிடம் வெளிப்படுத்துங்கள். உங்களுடைய நம்பிக்கையை ஆழமாக்குவதற்கும் அகலமாக்குவதற்கும் உதவிக்காக அவரை வேண்டிக்கொள்ளுங்கள். கொலோசெயர், ‘கடவுளுக்குச் சித்தமான எதிலும் முழுநிச்சயத்தோடு’ இருக்க வேண்டுமென்று எப்பாப்பிரா ஜெபித்ததுபோல், நீங்களும் செய்யுங்கள். அதை அடிக்கடி செய்யுங்கள்.

20. கிறிஸ்தவ போக்கிலிருந்து சிலர் வழிவிலகிச் சென்றால், ஏன் சோர்வுற வேண்டியதில்லை?

20 எல்லாரும் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்பதில்லை என்பதால் நீங்கள் மனக்குழப்பமோ சோர்வோ அடைய வேண்டியதில்லை. சிலர் தவறலாம், வழிமாறலாம், அல்லது விலகலாம். இயேசுவுக்கு மிக நெருக்கமானவர்களாகிய அவருடைய அப்போஸ்தலர்கள் மத்தியிலும் இது நடந்ததே. ஆனால் யூதாஸ் துரோகியாக மாறியபோது, மற்ற அப்போஸ்தலர்கள் சோர்வுற்றார்களா அல்லது விலகி விட்டார்களா? நிச்சயமாகவே இல்லை! யூதாஸின் இடத்தை மற்றொருவர் ஏற்பாரென்று காட்டுவதற்கு பேதுரு சங்கீதம் 109:8-ஐ பொருத்திப் பயன்படுத்தினார். பதிலாள் தேர்ந்தெடுக்கப்பட்டார், கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருந்தவர்கள் பிரசங்க ஊழியத்தில் ஊக்கமாக தொடர்ந்து ஈடுபட்டார்கள். (அப்போஸ்தலர் 1:​15-​26) முழுநிச்சயத்துடன் தேறினவர்களாய் நிலைநிற்பதற்கு அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

21, 22. முழுநிச்சயத்துடன் நீங்கள் தேறினவர்களாக நிலைநிற்பது என்ன கருத்தில் கவனிக்கப்படும்?

21 கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்பது கவனிக்கப்படாமல் போவதில்லை என்பதில் நீங்கள் உறுதியோடிருக்கலாம். அது கவனிக்கப்படும், பாராட்டவும்படும். யாரால்?

22 உங்களை அறிந்திருக்கிற, உங்களை நேசிக்கிற சகோதர சகோதரிகள் அதை கவனிப்பார்கள். பெரும்பான்மையர் அதை வார்த்தைகளில் வெளிப்படுத்தாவிட்டாலும் அதன் பாதிப்பு 1 தெசலோனிக்கேயர் 1:​2-6-⁠ல் நாம் வாசிப்பதற்கு ஒப்பாக இருக்கும்: ‘உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும் [“சகிப்புத்தன்மையையும்,” NW], நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, . . . எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக் குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடே மாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; . . . எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களானீர்கள்.’ ‘நீங்கள் தேறினவர்களாயும், கடவுளுக்குச் சித்தமான எதிலும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்பதை’ உங்களைச் சுற்றியிருக்கும் உத்தமமுள்ள கிறிஸ்தவர்கள் கவனிக்கையில் அதைப் போலவே உணருவார்கள்.​—கொலோசெயர் 1:​23.

23. வரவிருக்கும் ஆண்டில் உங்களுடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

23 அதைப் போலவே உங்கள் பரலோக தகப்பனும் நிச்சயமாய் கவனித்து மகிழ்ச்சியடைவார். அதைக் குறித்து உறுதியாயிருங்கள். ஏன்? ஏனெனில், “கடவுளுக்குச் சித்தமான எதிலும்” நீங்கள் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கிறீர்கள். ‘கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்வதைப்’ பற்றி ஊக்குவிக்கும் முறையில் கொலோசெயருக்கு பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:​10) ஆம், யெகோவாவை முழுமையாக பிரியப்படுத்துவது அபூரண மனிதருக்குச் சாத்தியமே. கொலோசெயைச் சேர்ந்த உங்களுடைய சகோதர சகோதரிகள் அவ்வாறே செய்தார்கள். இப்போதும் உங்களைச் சுற்றியுள்ள கிறிஸ்தவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நீங்களும் அவ்வாறு செய்ய முடியும்! ஆகையால், ‘நீங்கள் கடவுளுக்குச் சித்தமான எதிலும் தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்பதற்கு’ தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதை வருகிற ஆண்டில் உங்களுடைய அன்றாட ஜெபங்களும் நீங்கள் செய்துவரும் செயல்களும் நிரூபிப்பதாக.

நினைவிருக்கிறதா?

• நீங்கள் ‘தேறினவர்களாக நிலைநிற்பதில்’ என்ன உட்பட்டிருக்கிறது?

• உங்களைப் பற்றி என்ன காரியங்களை ஜெபத்தில் நீங்கள் சேர்க்க வேண்டும்?

ரோமர் 5:​3, 5-⁠ல் (NW) குறிக்கப்பட்டுள்ளபடி, என்ன வகையான நம்பிக்கை வைத்திருக்க விரும்புகிறீர்கள்?

• வருகிற ஆண்டில் என்ன இலக்கை வைக்க நம்முடைய படிப்பு உங்களை ஊக்குவித்திருக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 20-ன் படம்]

தன் சகோதரர்கள் கிறிஸ்துவையும் தங்கள் நம்பிக்கையையும் பற்றிய முழுநிச்சயத்துடன் தேறினவர்களாக நிலைத்திருக்க எப்பாப்பிரா ஜெபித்தார்

[பக்கம் 23-ன் படங்கள்]

உங்களைப் போலவே உறுதியான நம்பிக்கையும் முழுநிச்சயமும் லட்சக்கணக்கான மற்றவர்களுக்கும் இருக்கிறது