Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எங்கள் நியமிப்பில் நிலைத்திருந்தோம்

எங்கள் நியமிப்பில் நிலைத்திருந்தோம்

வாழ்க்கை சரிதை

எங்கள் நியமிப்பில் நிலைத்திருந்தோம்

ஹெர்மன் புரூடெ சொன்னபடி

நான் எடுக்க வேண்டிய தீர்மானம் எளியதாக தோன்றியது: ஃபிரென்ச் ஃபாரின் லீஜனில் ஐந்து வருடங்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது மொராக்கோ சிறைச்சாலையில் கைதியாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிய விதத்தை முதலில் விளக்குகிறேன்.

ஜெர்மனியிலுள்ள அபனாயு நகரில், முதல் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு மூன்றே வருடங்களுக்கு முன்பு 1911-⁠ல் பிறந்தேன். என் பெற்றோரான யோஸெஃப், ஃபிரீடா புரூடெ தம்பதியினருக்கு 17 பிள்ளைகள். அவர்களுள் நான் 13-வது குழந்தை.

எங்கள் நகரின் முக்கிய வீதி வழியாக இராணுவ இசைக்குழு வலம் வந்ததைப் பார்த்ததே எனக்கிருக்கும் ஆரம்ப கால நினைவாகும். துள்ளல் நடைபோட தூண்டும் அந்த அணிவகுப்பு இசை என்னை கவர்ந்திழுத்ததால் அந்த இசைக்குழுவின் பின்னாலேயே இரயில் நிலையம் வரை சென்றேன். அங்கே அப்பாவும் இராணுவ உடையணிந்த மற்ற ஆண்களும் இரயிலில் ஏறுவதை கண்டேன். இரயில் கிளம்ப ஆரம்பித்ததும் ஃபிளாட்பாரத்தில் இருந்த சில பெண்கள் அழ ஆரம்பித்தார்கள். சில நாள் கழித்து, எங்கள் பாதிரியார் சர்ச்சில் ஒரு பெரிய பிரசங்கம் செய்தார். பிறகு, தந்தைநாட்டை காப்பதற்காக போரிட்டு இறந்த நான்கு ஆண்களின் பெயர்களை வாசித்தார். “இப்போது அவர்கள் பரலோகத்தில் இருக்கிறார்கள்” என்று விளக்கினார். அப்போது என் அருகே நின்றிருந்த ஒரு பெண் மயங்கி விழுந்தார்.

ரஷ்ய போர்முனையில் பணியாற்றுகையில் அப்பாவிற்கு டைஃபாய்டு காய்ச்சல் வந்தது. வீட்டிற்கு வந்தபோது அவர் மிகவும் பலவீனமாக இருந்ததால் உடனே அவரை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தோம். “கல்லறைக்கு அருகிலிருக்கும் சர்ச்சுக்கு போய் பரமண்டல ஜெபத்தை 50 முறையும் ஹெயில் மேரி ஜெபத்தை 50 முறையும் சொன்னால் உன் அப்பா பிழைப்பார்” என்று பாதிரியார் பரிந்துரைத்தார். அவர் சொன்னபடியே செய்தேன், ஆனாலும் மறுநாள் அப்பா இறந்துவிட்டார். ஒரு சிறுவனுக்குக்கூட அந்த யுத்தம் மிக கொடூரமான அனுபவமாய் இருந்தது.

சத்தியத்தை கண்டுபிடித்த விதம்

யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாய் இருந்தது. என்றாலும், 1928-⁠ல் பள்ளி படிப்பை முடித்த பிறகு சுவிட்சர்லாந்திலுள்ள பாஸ்லேயில் தோட்ட வேலை கிடைத்தது.

அப்பாவைப் போலவே நானும் கத்தோலிக்க மதத்தை தீவிரமாக பின்பற்றி வந்தேன். இந்தியாவில் கப்பூஷன் துறவியாக ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. இதைக் கேள்விப்பட்டதும், யெகோவாவின் சாட்சியாக மாறியிருந்த தம்பி ரிக்கார்ட் என் மனதை மாற்ற முயலுவதற்காகவே சுவிட்சர்லாந்திற்கு விசேஷ பயணம் வந்தான். மனிதரில் அதிலும் முக்கியமாக பாதிரிமார்களில் நம்பிக்கை வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரித்துவிட்டு, பைபிளை வாசித்து அதை மட்டுமே நம்பும்படி கூறினான். எனக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தபோதிலும், புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலான என் நம்பிக்கைகள் பைபிள் போதனைகளோடு ஒத்துப்போகவில்லை என்பது கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு வெட்டவெளிச்சமானது.

1933-⁠ல் ஒரு ஞாயிறன்று, ஜெர்மனியில் ரிக்கார்டின் வீட்டில் இருக்கையில் யெகோவாவின் சாட்சிகளாயிருந்த ஒரு தம்பதியினரை அவன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். நான் பைபிள் வாசிப்பதை அறிந்ததும் அவர்கள் எனக்கு த கிரைசிஸ் * என்ற சிறு புத்தகத்தை கொடுத்தனர். ஏறக்குறைய நடுராத்திரி வரை அதை வாசித்தேன். சத்தியத்தை கண்டுபிடித்துவிட்ட நிச்சயம் எனக்குள் ஏற்பட்டது!

பாஸ்லேயிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், பிற பத்திரிகைகள் பிரசுரங்களோடுகூட ஸ்டடீஸ் இன் த ஸ்கிரிப்சர்ஸ் *-⁠ன் இரண்டு தொகுதிகளையும் எனக்கு கொடுத்தனர். அவற்றில் வாசித்தவை என்னை வெகுவாக கவர்ந்ததால் உள்ளூர் பாதிரியாரை சந்தித்து சர்ச் பதிவேட்டிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்படி கேட்டுக்கொண்டேன். அவர் ரொம்பவும் கோபப்பட்டு, நான் விசுவாசத்தையே இழந்துவிடலாம் என்று என்னை எச்சரித்தார். அதற்கு நேர்மாறானது நிகழ்ந்ததே நிஜம். என் வாழ்க்கையில் முதன்முறையாக உண்மையான விசுவாசத்தை வளர்க்க ஆரம்பித்திருந்தேன்.

அந்த வாரயிறுதியில், எல்லையைக் கடந்து பிரான்சிற்கு சென்று ஊழியம் செய்ய பாஸ்லேயிலுள்ள சகோதரர்கள் திட்டமிட்டிருந்தார்கள். சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்து சில காலமே ஆகியிருப்பதால்தான் என்னை அதற்கு அழைக்கவில்லை என்பதை ஒரு சகோதரர் என்னிடம் தயவாக விளக்கினார். நானோ சோர்ந்துவிடாமல், ஊழியத்தை ஆரம்பிக்க உறுதியாய் இருப்பதாக கூறினேன். அவர் மற்றொரு மூப்பரோடு கலந்து பேசிய பிறகு சுவிட்சர்லாந்தில் எனக்காக ஒரு பிராந்தியத்தை கொடுத்தார். எனது ஊழிய பையில் 4 புத்தகங்களையும், 28 பத்திரிகைகளையும், 20 சிற்றேடுகளையும் எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பாஸ்லேவுக்கு அருகிலிருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு எனது சைக்கிளில் கிளம்பினேன். அங்கு போய் சேர்ந்தபோது கிராமவாசிகளில் பெரும்பாலானோர் சர்ச்சுக்கு போயிருந்தனர். இருந்தாலும், 11 மணிக்குள் எனது ஊழிய பை காலியாகிவிட்டது.

முழுக்காட்டுதல் எடுக்க விரும்புவதாக சகோதரர்களிடம் கூறியவுடன் என்னோடு கருத்தாழமிக்க விதத்தில் கலந்து பேசி, சத்தியத்தின் பேரில் ஆழமான கேள்விகள் கேட்டனர். யெகோவாவிற்கும் அவருடைய அமைப்பிற்கும் அவர்கள் காண்பித்த வைராக்கியமும் உண்மைத்தன்மையும் என்னை கவர்ந்தன. குளிர்காலமாக இருந்ததால், ஒரு மூப்பரின் வீட்டிலிருந்த குளியல் தொட்டியில் ஒரு சகோதரர் எனக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார். விவரிக்க முடியாத சந்தோஷத்தையும் எனக்குள் புது பலம் பிறந்ததையும் உணர்ந்தது நினைவிருக்கிறது. அது 1934-⁠ம் வருடத்தில் நிகழ்ந்தது.

ராஜ்ய பண்ணையில் வேலை

யெகோவாவின் சாட்சிகள் சுவிட்சர்லாந்தில் கொஞ்சம் நிலம் வாங்கியிருப்பதை 1936-⁠ல் கேள்விப்பட்டேன். அங்கு தோட்ட வேலை செய்ய விருப்பம் தெரிவித்தேன். பெர்னிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் ஷ்டெஃபிஸ்பர்க்கிலுள்ள ராஜ்ய பண்ணையில் வேலை செய்ய அழைப்பு வந்தபோது அளவிளா மகிழ்ச்சி அடைந்தேன். முடிந்த போதெல்லாம் பண்ணையிலிருந்த மற்றவர்களுக்கு அவர்கள் வேலையில் உதவினேன். பெத்தேலில் இருக்கையில் ஒத்துழைக்கும் மனப்பான்மையின் அவசியத்தை கற்றுக்கொண்டேன்.

பெத்தேலில் சேவை செய்த காலத்தின் ஒரு சிறப்பு அம்சம், சகோதரர் ரதர்ஃபோர்டு 1936-⁠ல் பண்ணைக்கு விஜயம் செய்ததே ஆகும். அங்கு பயிரான தக்காளிகளின் அளவையும், செடிகளின் செழிப்பையும் கண்ட அவர் புன்னகையோடு திருப்தியைத் தெரிவித்தார். எவ்வளவு அருமையான சகோதரர் அவர்!

பண்ணையில் மூன்று வருடம் வேலை செய்து முடித்த சில காலத்திலேயே ஐக்கிய மாகாணங்களில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை காரியாலயத்திலிருந்து வந்த ஒரு கடிதம் காலை உணவு வேளையில் வாசிக்கப்பட்டது. அக்கடிதம் பிரசங்க வேலையின் அவசரத் தன்மையை வலியுறுத்தி வெளி நாடுகளில் பயனியர்களாக சேவிக்க மனமுள்ளோருக்கு அழைப்பு விடுத்தது. எந்தத் தயக்கமுமின்றி அதை ஏற்றேன். மே 1939-⁠ல் எனது நியமனத்தைப் பெற்றேன்; நான் பிரேசிலுக்கு செல்ல வேண்டியிருந்தது!

அப்போது, ராஜ்ய பண்ணைக்கு அருகிலிருந்த டூன் சபையில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டேன். அந்த சபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஆல்ப்ஸ் மலையில் பிரசங்கிக்க ஒரு தொகுதியாக செல்வோம்; சைக்கிளில் டூனிலிருந்து அங்கு செல்ல இரண்டு மணிநேரம் ஆகும். அத்தொகுதியில் மார்கரீடா ஷ்டைனரும் இருந்தாள். இயேசு தமது சீஷர்களை இரண்டிரண்டு பேராக அல்லவா அனுப்பினார் என்பது திடீரென என் மனதில் தோன்றியது. நான் பிரேசில் செல்ல நியமனம் பெற்றிருப்பதை பேச்சுவாக்கில் மார்கரீடாவிடம் சொன்னபோது, அவளும் தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை செய்ய விரும்புவதாக கூறினாள். நாங்கள் 1939, ஜூலை 31-⁠ம் தேதி திருமணம் செய்துகொண்டோம்.

எதிர்பாராத நிறுத்தம்

1939, ஆகஸ்ட் கடைசியில், பிரான்சிலுள்ள லே ஹாவ்ரேயிலிருந்து பிரேசிலிலுள்ள சான்டோஸுக்கு செல்ல கப்பலேறினோம். இரட்டை படுக்கைகள் அனைத்தும் புக் ஆகிவிட்டதால் தனித்தனி கேபின்களில் பயணித்தோம். செல்லும் வழியில், கிரேட் பிரிட்டனும் பிரான்சும் ஜெர்மனி மீது போர் தொடுக்கப் போவதாக அறிவித்திருந்ததை கேள்விப்பட்டோம். உடனடியாக, 30 ஜெர்மானிய பயணிகள் அடங்கிய ஒரு தொகுதி ஜெர்மனியின் தேசிய கீதத்தை பாட ஆரம்பித்தது. இதனால் மிகவும் எரிச்சலடைந்த கேப்டன் பயணப் பாதையிலிருந்து விலகி மொராக்கோவிலுள்ள சஃபி துறைமுகத்தில் கப்பலை நிறுத்தினார். ஜெர்மானிய பயண பத்திரங்கள் வைத்திருந்த பயணிகள் இறங்க ஐந்து நிமிடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்களுள் நாங்களும் இருந்தோம்.

ஒரு நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷனில் அடைபட்டு கிடந்தோம். பிறகு, லொடலொடவென ஆடும் ஒரு பழைய பஸ்ஸில் திணிக்கப்பட்டு சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலிருந்த மர்ராகேஷ் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். அதற்குப் பின் வந்த நாட்கள் கடினமாயிருந்தன. சிறை அறைகள் கும்மிருட்டாகவும் நெரிசல் மிக்கதாகவும் இருந்தன. பொது கழிப்பறை​—⁠தரையில் இருந்த ஒரு துளை​—⁠எப்போதும் அடைபட்டு கிடந்தது. தூங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் அழுக்கான சாக்கு ஒன்று கொடுக்கப்பட்டது; இரவில் எலிகள் எங்கள் கெண்டைக்கால்களை கடித்துத் தள்ளின. துருப்பிடித்த டப்பாவில் தினமும் இரண்டு முறை உணவு வழங்கப்பட்டது.

ஃபிரென்ச் ஃபாரின் லீஜனில் ஐந்து வருடங்கள் வேலை செய்ய ஒப்புக்கொண்டால் விடுவிக்கப்படுவேன் என்று ஒரு இராணுவ அதிகாரி என்னிடம் விளக்கினார். அதற்கு மறுத்ததால் கருந்துளை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் ஓரிடத்தில் 24 மணிநேரம் அடைக்கப்பட்டேன். அங்கிருந்த பெரும்பாலான நேரம் ஜெபித்துக்கொண்டிருந்தேன்.

எட்டு நாட்களுக்குப் பின்பு மறுபடியும் மார்கரீடாவை பார்க்க சிறை அதிகாரிகள் அனுமதித்தனர். அவள் ரொம்பவும் மெலிந்து போயிருந்தாள், அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. என்னால் முடிந்தளவு அவளை உற்சாகப்படுத்தினேன். விசாரணைக்கு பிறகு இரயிலில் காஸபிளாங்காவிற்கு அனுப்பப்பட்டோம். அங்கு மார்கரீடா விடுதலை செய்யப்பட்டாள். நானோ, சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் பார்லியோடேவிலிருந்த (தற்போது கனீட்ரா) சிறை முகாமிற்கு அனுப்பப்பட்டேன். சுவிட்சர்லாந்திற்கு திரும்பி சென்றுவிடும்படி மார்கரீடாவுக்கு சுவிஸ் தூதுவர் ஆலோசனை வழங்கினார். ஆனால், நானில்லாமல் தனியே திரும்பி செல்ல அவள் மறுத்துவிட்டாள்; உண்மையோடு எனக்கு பக்க துணையாய் இருந்தாள்! பார்லியோடேவிலிருந்த இரண்டு மாத காலமும் என்னை சந்திக்கவும் எனக்கு உணவு கொண்டுவரவும் தினமும் காஸபிளாங்காவிலிருந்து வந்து சென்றாள்.

ஒரு வருடத்திற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள், க்ராய்ட்ஸ்ட்ஸூக் கேகன் டாஸ் கிரிஸ்டன்டூம் (கிறிஸ்தவத்திற்கு எதிரான போர்) என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள். நாசி அரசாங்கத்தோடு சாட்சிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை பொது மக்களுக்கு புரிய வைப்பதே அப்புத்தகத்தின் நோக்கமாகும். நான் சிறை முகாமில் இருக்கையில், நாங்கள் நாசிகள் அல்ல என்பதை நிரூபிக்கும் முயற்சியில் பெர்னிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் பிரென்சு அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது; அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியையும் அனுப்பி வைத்தது. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க மார்கரீடாவும் அருமையான காரியத்தை செய்தாள்; அரசாங்க அதிகாரிகளை சந்தித்து அதை நிரூபிக்க முயன்றாள். ஒருவழியாக, 1939-⁠ம் வருட கடைசியில் மொராக்கோவைவிட்டு புறப்பட எங்களுக்கு அனுமதி கிடைத்தது.

பிரேசிலுக்கு செல்ல மீண்டும் கப்பலேறியபோது, ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள கப்பல் போக்குவரத்து பாதைகளை தாக்குவதையும் அவற்றிற்கு நாங்களே முக்கிய குறியிலக்கு என்பதையும் அறிய வந்தோம். நாங்கள் ஷமைக் என்ற வியாபார கப்பலில் பயணித்தபோதிலும் அதன் முன்னும் பின்னும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. கப்பல் கேப்டன், பகல் நேரத்தில் கப்பலை வளைந்து நெழிந்து செல்லும் பாதையில் ஓடவிட்டு தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வந்தார். ஜெர்மானியர்கள் கண்டுபிடிக்காதிருப்பதற்காக இரவில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு பயணித்தோம். கடைசியாக, 1940, பிப்ரவரி 6-⁠ம் தேதி பிரேசிலிலுள்ள சான்டோஸ் துறைமுகத்தை அடைந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஐரோப்பாவைவிட்டு கிளம்பி ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது!

மீண்டும் சிறைக்கு

தெற்கு பிரேசிலிலுள்ள ரியோ கிராண்டி டோ சுல் மாநிலத்தைச் சேர்ந்த மோன்டினிக்ரூ என்ற நகரத்தில் பிரசங்கிப்பதற்குத்தான் நாங்கள் முதன்முதலில் நியமிப்பைப் பெற்றோம். நாங்கள் வரப் போவதைப் பற்றி சர்ச் அதிகாரிகள் ஏற்கெனவே அறிந்திருந்ததாக தோன்றியது. பிரசங்கிக்க ஆரம்பித்து இரண்டே மணிநேரத்தில் போலீஸார் எங்களை கைது செய்தனர்; எங்களிடமிருந்த பைபிள் பேச்சுகள் அடங்கிய ஃபோனோகிராப் ரெக்கார்டுகள், அனைத்து பிரசுரங்கள் உட்பட மொராக்கோவிலிருந்து நாங்கள் வாங்கி வந்த ஒட்டக தோல் பைகளையும்கூட பறிமுதல் செய்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றபோது அங்கே ஒரு பாதிரியும் ஜெர்மன் மொழி அறிந்த ஒரு பிரசங்கியாரும் காத்திருந்தனர். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், எங்களிடமிருந்து பறிமுதல் செய்திருந்த கிராமஃபோனில் சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சுகளில் ஒன்றை போட்டபோது அவர்களும் கேட்டனர். சகோதரர் ரதர்ஃபோர்ட் வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசினார்! வாடிகனைப் பற்றி குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கேட்டபோது அந்தப் பாதிரியின் முகம் வெகுவாய் சிவந்துவிட்டது; விருட்டென அவ்விடத்தைவிட்டு வெளியேறினார்.

சாண்டா மரியாவின் பிஷப் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மாநிலத்தின் தலைநகரான போர்டோ அலெக்ரேவிற்கு போலீஸார் எங்களை இடம் மாற்றினர். சீக்கிரத்தில் மார்கரீடா விடுதலை செய்யப்பட்டாள், உடனே சுவிஸ் தூதரகத்தின் உதவியை நாடினாள். சுவிட்சர்லாந்திற்கு திரும்பிவிடும்படி தூதுவர் அவளுக்கு ஆலோசனை கூறினார். அவளோ என்னை தனியே விட்டு செல்ல மறுபடியும் மறுத்துவிட்டாள். மார்கரீடா எப்போதுமே மிகவும் விசுவாசமுள்ள தோழியாக இருந்திருக்கிறாள். முப்பது நாட்களுக்கு பிறகு என்னை விசாரித்து விடுதலை செய்தனர். இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும்படி போலீஸார் எங்களிடம் சொன்னார்கள்: பத்து நாட்களுக்குள் மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது “அதன் விளைவுகளை சந்திக்க வேண்டும்.” தலைமை காரியாலயத்தின் ஆலோசனைக்கு இணங்க ரியோ டி ஜெனிரோவிற்கு கிளம்பினோம்.

“தயவுசெய்து இந்த அட்டையை வாசியுங்கள்”

எங்கள் பிராந்தியமாகிய பிரேஸிலில் இப்படிப்பட்ட மோசமான வரவேற்பைப் பெற்ற போதிலும் நாங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்! நாங்கள் உயிரோடிருந்தோம், எங்கள் பைகளில் மீண்டும் பிரசுரங்கள் நிரம்பி வழிந்தன, ரியோ டி ஜெனிரோ முழுவதற்கும் பிரசங்கிக்க வேண்டியிருந்தது. எங்களுக்கு போர்ச்சுகீஸிய மொழி அந்தளவுக்கு தெரியாததால் எவ்வாறு பிரசங்கிப்பது? பிரசங்க அட்டையை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. போர் ஃபாவோர் லே எஸ்டா கார்டௌன் (“தயவுசெய்து இந்த அட்டையை வாசியுங்கள்”) என்பதே நாங்கள் ஊழியத்தில் உபயோகிக்க ஆரம்பித்த முதல் போர்ச்சுகீஸிய வாக்கியமாகும். அந்த அட்டை எந்தளவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது தெரியுமா! ஒரே மாதத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களை விநியோகித்தோம். எங்களிடமிருந்து பைபிள் பிரசுரங்களை பெற்றுக்கொண்ட அநேகர் பின்னர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். உண்மையை சொன்னால், பிரசுரங்களே அதிக திறம்பட்ட சாட்சி கொடுத்தன; எங்களால் ஒருபோதும் அந்தளவு செய்திருக்க முடியாது. நமது பிரசுரங்களை அக்கறை காட்டுவோர் பெறும்படி செய்வது முக்கியம் என்பதை இது எனக்கு உணர்த்தியது.

அப்போது ரியோ டி ஜெனிரோதான் பிரேஸிலின் தலைநகரமாக இருந்தது. அரசாங்க அலுவலகங்களிலும் எங்கள் செய்திக்கு நல்ல வரவேற்பு. நிதி அமைச்சரிடமும் இராணுவ அமைச்சரிடமும் நேரடியாகவே பிரசங்கிக்கும் விசேஷித்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பங்களில் யெகோவாவின் ஆவி செயல்பட்டதை என்னால் தெளிவாக காண முடிந்தது.

ஒருமுறை, ரியோவின் மையப் பகுதியிலுள்ள சதுக்கத்தில் பிரசங்கிக்கையில் பேலஸ் ஆஃப் ஜஸ்டிஸுக்குள் நுழைந்துவிட்டேன். கருப்பு உடையணிந்திருந்த ஆண்கள் நிறைந்த ஓர் அறைக்குள் எப்படியோ வந்துவிட்டேன்; அது ஈமச்சடங்கு நிகழ்ச்சிபோல தோன்றியது. கொஞ்சம் விசேஷித்தவராக தோன்றிய ஒருவரை அணுகி பிரசங்க அட்டையை அவரிடம் கொடுத்தேன். அது ஈமச்சடங்கு நிகழ்ச்சியல்ல. உண்மையில், நீதிமன்ற வழக்கின் நடுவே குறுக்கிட்டு நான் நீதிபதியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே, என்னை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று காவலாளிகளிடம் கூறினார். சில்ரன் * என்ற புத்தகத்தை அவர் தயவாக பெற்றுக்கொண்டு நன்கொடையும் கொடுத்தார். வெளியே வருகையில், புரோபீடா ஆ என்டிராட் டா பெஸோஅஸ் எஸ்டிரான்யாஸ் (அன்னியர்கள் உள்ளே பிரவேசிக்கக்கூடாது) என்று கதவில் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்த அறிவிப்பை காவலாளிகளில் ஒருவர் என்னிடம் சுட்டிக்காட்டினார்.

பலன் மிக்க மற்றொரு பிராந்தியம் துறைமுகமாகும். ஒரு சமயம், மாலுமி ஒருவரை சந்தித்தேன். அவர் திரும்ப கடல் பயணத்தைத் தொடங்கும் முன்பு சில பிரசுரங்களை பெற்று சென்றார். பின்னர், அவரை ஓர் அசெம்பிளியில் சந்தித்தோம். அவருடைய முழு குடும்பமும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டது, அவரும் நல்ல முன்னேற்றம் செய்து வந்தார். அதைப் பார்த்த எங்களுக்கு ஒரே சந்தோஷம்.

என்றாலும், பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்தன. எங்களுடைய ஆறு மாத விசா முடிந்துவிட்டதால் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் வாய்ப்பு இருந்தது. எங்களுடைய சூழ்நிலை பற்றி தலைமை காரியாலயத்திற்கு எழுதினோம். இங்கேயே இருக்கும்படி எங்களை உற்சாகப்படுத்தி சகோதரர் ரதர்ஃபோர்ட் அன்போடு கடிதம் எழுதினார், அதில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கியிருந்தார். பிரேசிலில் இருக்கவே நாங்கள் விரும்பினோம்; கடைசியாக ஒரு வழக்கறிஞரின் உதவியோடு 1945-⁠ல் நிரந்தர விசாவை பெற்றோம்.

நீண்ட கால நியமிப்பு

அதற்குள்ளாக, 1941-⁠ல் யோனதன் என்ற மகனும் 1943-⁠ல் ரூத், 1945-⁠ல் எஸ்தர் என்ற மகள்களும் பிறந்தார்கள். பெருகிய எங்கள் குடும்பத்தின் தேவைகளை கவனிக்க நான் உலகப்பிரகாரமான வேலை செய்ய வேண்டியிருந்தது. மூன்றாவது குழந்தை பிறக்கும் வரை மார்கரீடா முழுநேர ஊழியம் செய்து வந்தாள்.

ஆரம்பத்திலிருந்தே நகர சதுக்கங்களிலும், இரயில் நிலையங்களிலும், வீதிகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் நாங்கள் குடும்பமாக பிரசங்கித்து வந்தோம். சனிக்கிழமை மாலைகளில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை குடும்பமாக விநியோகித்தோம், இவை எங்களுக்கு அதிக மகிழ்ச்சியளித்த சமயங்களாகும்.

வீட்டில் ஒவ்வொரு பிள்ளைக்கும் தினந்தோறும் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தன. ஸ்டவ்வையும் கிச்சனையும் சுத்தம் செய்ய வேண்டியது யோனதனின் பொறுப்பு. பெண்கள் இருவரும் ஃபிரிஜ்ஜை சுத்தம் செய்து, முற்றத்தை பெருக்கி, ஷூக்களுக்கு பாலிஷ் போட்டனர். ஒழுங்கான விதத்திலும் தாங்களாகவே முன்வந்தும் செயல்பட இது அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது. இன்று எங்கள் பிள்ளைகள் கடின உழைப்பாளிகளாகவும் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் நன்றாக பராமரிப்பவர்களாகவும் இருப்பதை காண்பது மார்கரீடாவிற்கும் எனக்கும் அதிக மகிழ்ச்சி தருகிறது.

கூட்டங்களின்போதும் பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தோம். கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு அவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பாத்ரூமுக்கு சென்று வந்தனர். கூட்டத்தில் அமருகையிலும் யோனதன் எனது இடது பக்கத்திலும், ரூத் வலது பக்கத்திலும், பிறகு மார்கரீடாவும் அவளுக்கு வலது பக்கத்தில் எஸ்தரும் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். இது, கவனத்தை ஒருமுகப்படுத்தவும் சிறு வயது முதல் ஆவிக்குரிய உணவை உட்கொள்ளவும் அவர்களுக்கு உதவியது.

யெகோவா எங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்திருக்கிறார். எங்கள் பிள்ளைகள் அனைவரும் யெகோவாவை உண்மையோடு சேவிக்கிறார்கள், பிரசங்க வேலையில் சந்தோஷத்தோடு பங்கேற்கிறார்கள். யோனதன் இப்போது ரியோ டி ஜெனிரோவிலுள்ள நோவூ மேயர் சபையின் மூப்பர்.

1970-⁠க்குள்ளாக எங்கள் பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வீட்டைவிட்டு சென்றுவிட்டனர். ஆகவே, தேவை அதிகம் இருக்கும் இடத்தில் சேவை செய்ய மார்கரீடாவும் நானும் தீர்மானித்தோம். மினஸ் ஜெரைஸ் மாநிலத்திலுள்ள போசூஸ் டீ கால்டாஸ் என்ற இடத்திற்குத்தான் முதலில் சென்றோம். அப்போது அங்கு 19 ராஜ்ய பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு சிறிய தொகுதியே இருந்தது. அவர்கள் சபை கூடிவரும் இடத்தை முதலில் பார்த்தபோது திடுக்கிட்டேன்; அது, ஜன்னல்களே இல்லாத ஓர் அடித்தள அறை; அந்த இடத்திலும் அதிகமான மராமத்து வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்தன. உடனடியாக, நல்ல ராஜ்ய மன்றத்தைத் தேடும் பணியில் இறங்கினோம். சீக்கிரத்திலேயே, ஓர் அருமையான இடத்தில் மனம் கவரும் கட்டடம் ஒன்றை கண்டுபிடித்தோம். அது எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது! நாலரை வருடங்கள் கழித்து பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்தது. 1989-⁠ல் ரியோ டி ஜெனிரோவிலுள்ள ஆராரூயாமாவிற்கு சென்று அங்கு ஒன்பது வருடங்கள் சேவித்தோம். அந்தச் சமயத்தில் இரண்டு புதிய சபைகள் உருவாவதை பார்த்தோம்.

எங்கள் நியமிப்பில் நிலைத்திருந்ததால் ஆசீர்வாதங்கள்

உடல்நல கோளாறுகளாலும் பிள்ளைகளின் அருகில் இருக்க விரும்பியதாலும் 1998-⁠ல் ரியோ டி ஜெனிரோவிலுள்ள சாவோ கோன்சாலுவிற்கு குடிமாறிச் சென்றோம். இப்பொழுதும் அங்கு சபை மூப்பராக சேவிக்கிறேன். பிரசங்கிப்பதில் தவறாமல் பங்குகொள்ள எங்களாலானதை செய்கிறோம். அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு வருவோரிடம் பிரசங்கிப்பதில் மார்கரீடாவுக்கு மகிழ்ச்சி. நாங்கள் ஊழியம் செய்வதற்காக வீட்டிற்கு அருகிலேயே ஒரு பிராந்தியத்தை சபை அன்போடு ஒதுக்கி கொடுத்திருக்கிறது. இதனால், எங்கள் உடல்நிலை அனுமதிக்கும் அளவிற்கு பிரசங்கிப்பது எங்களுக்கு அதிக சுலபமாகிறது.

மார்கரீடாவும் நானும் 60 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்த ஊழியர்களாக சேவித்திருக்கிறோம். ‘அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு எங்களை பிரிக்க முடியாது’ என்பதை எங்கள் அனுபவத்தில் ருசித்திருக்கிறோம். (ரோமர் 8:38, 39) ‘வேறே ஆடுகள்’ கூட்டிச்சேர்க்கப்படுவதை காண்பதும் எவ்வளவு மகிழ்ச்சி அளித்திருக்கிறது! (யோவான் 10:16) இவர்கள், கடவுளுடைய அழகான சிருஷ்டிப்புகளால் சூழப்பட்ட பரிபூரண பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் மகத்தான நம்பிக்கையைப் பெற்றவர்கள். 1940-⁠ல் நாங்கள் ரியோ டி ஜெனிரோவிற்கு வந்தபோது, 28 பிரஸ்தாபிகளுள்ள ஒரேவொரு சபை அங்கிருந்தது. இன்றோ சுமார் 250 சபைகள் உள்ளன, 20,000-⁠த்திற்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகளும் உள்ளனர்.

ஐரோப்பாவிலுள்ள எங்கள் குடும்பத்தாரிடம் திரும்பி செல்வதற்கான சந்தர்ப்பங்கள் வந்தன. ஆனால் யெகோவாவிடமிருந்து எங்களுக்கு கிடைத்த நியமிப்பு பிரேசில்தான். எங்கள் நியமிப்பில் நிலைத்திருந்ததற்காக எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்!

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 11 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சிடப்படுவதில்லை.

^ பாரா. 12 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சிடப்படுவதில்லை.

^ பாரா. 33 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சிடப்படுவதில்லை.

[பக்கம் 21-ன் படம்]

சுவிட்சர்லாந்து, ஷ்டெஃபிஸ்பர்க்கிலுள்ள ராஜ்ய பண்ணையில் 1930-களின் கடைசியில் (இடது கோடியில் நான்)

[பக்கம் 23-ன் படம்]

எங்கள் திருமணத்திற்கு சற்று முன்பு, 1939

[பக்கம் 23-ன் படம்]

1940-களில் காஸபிளாங்கா

[பக்கம் 23-ன் படம்]

குடும்பமாக பிரசங்கித்தல்

[பக்கம் 24-ன் படம்]

இன்றும் தவறாமல் ஊழியத்தில் பங்குகொள்கிறோம்