Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடைசி நாட்களில் நடுநிலைமை வகிக்கும் கிறிஸ்தவர்கள்

கடைசி நாட்களில் நடுநிலைமை வகிக்கும் கிறிஸ்தவர்கள்

கடைசி நாட்களில் நடுநிலைமை வகிக்கும் கிறிஸ்தவர்கள்

“நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.”​—⁠யோவான் 17:16.

1, 2. தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு இந்த உலகத்தோடுள்ள உறவைக் குறித்து இயேசு என்ன சொன்னார், அவருடைய வார்த்தைகள் என்ன கேள்விகளை எழுப்புகின்றன?

 பரிபூரண மனிதராக வாழ்ந்த இயேசு தமது பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில் ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுத்தார்; அதை அவரது சீஷர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். மெய் கிறிஸ்தவர்கள் அனைவருடைய வாழ்க்கையையும் விவரிக்கும் ஒன்றை அந்த ஜெபத்தில் குறிப்பிட்டார். தம்மை பின்பற்றுகிறவர்களைப் பற்றி அவர் இவ்வாறு சொன்னார்: “நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று [“தீயோனிடமிருந்து,” NW] காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.”​—யோவான் 17:14-16.

2 தம்மை பின்பற்றுகிறவர்கள் இவ்வுலகத்தின் பாகமாக இருக்க மாட்டார்கள் என அதில் இருமுறை கூறினார். அதோடு, அப்படி பிரிந்திருப்பது அவர்கள் மீது அழுத்தங்களைக் கொண்டுவரும், அதாவது இந்த உலகம் அவர்களைப் பகைக்கும். என்றாலும், கிறிஸ்தவர்கள் சோர்ந்துபோக வேண்டியதில்லை; யெகோவா அவர்களை கவனித்துக்கொள்வார். (நீதிமொழிகள் 18:10; மத்தேயு 24:9, 13) இயேசுவின் வார்த்தைகளைக் கருத்தில் கொள்ளும்போது, நாம் இவ்வாறு கேட்பது நல்லது: ‘கிறிஸ்தவர்கள் ஏன் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல? இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தால் பகைக்கப்படுகிறார்கள் என்றால், இந்த உலகை அவர்கள் எவ்வாறு கருதுகிறார்கள்? முக்கியமாக, உலக அரசாங்கங்களை எவ்வாறு கருதுகிறார்கள்?’ இந்தக் கேள்விகளுக்கு வேதப்பூர்வ பதில்கள் முக்கியமானவை, ஏனென்றால் அவை நம் அனைவரையும் பாதிக்கின்றன.

‘நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம்’

3. (அ) இந்த உலகத்திலிருந்து நம்மை பிரித்து வைப்பது எது? (ஆ) இந்த உலகம் ‘பொல்லாங்கனுக்குள் கிடப்பதற்கு’ என்ன அத்தாட்சி உள்ளது?

3 நாம் யெகோவாவுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவே இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதற்கு ஒரு காரணமாகும். “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) இந்த உலகைப் பற்றி யோவான் கூறிய வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மை. போர்கள், குற்றச்செயல்கள், கொடுமை, ஒடுக்குதல், அநியாயம், ஒழுக்கயீனம் ஆகியவை இன்று கோர தாண்டவமாடுகின்றன, இவையெல்லாம், கடவுளுடைய செல்வாக்கிற்கு அல்ல, சாத்தானுடைய செல்வாக்கிற்கு அத்தாட்சி அளிக்கின்றன. (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 6:12) ஒருவர் யெகோவாவின் சாட்சியாக மாறும்போது, இப்படிப்பட்ட தவறான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ மாட்டார், இது அவரை உலகத்தின் பாகமல்லாதவராக்குகிறது.​—ரோமர் 12:2; 13:12-14; 1 கொரிந்தியர் 6:9-11; 1 யோவான் 3:10-12.

4. நாம் யெகோவாவுக்கு சொந்தமானவர்கள் என்பதை எந்தெந்த வழிகளில் காட்டுகிறோம்?

4 மாறாக, கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தாரை போல் அல்லாமல் “தேவனால் உண்டாயிரு”க்கிறார்கள் என யோவான் கூறினார். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிற அனைவரும் அவருக்கு சொந்தமானவர்கள். “நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம்” என அப்போஸ்தலன் பவுல் கூறினார். (ரோமர் 14:8; சங்கீதம் 116:15) நாம் யெகோவாவுக்கு சொந்தமானவர்களாய் இருப்பதால், அவருக்கு தனிப்பட்ட வணக்கத்தைக் கொடுக்கிறோம். (யாத்திராகமம் 20:4-6) ஆகவே, மெய் கிறிஸ்தவர் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை இந்த உலகத்தின் இலட்சியங்களுக்கு அர்ப்பணிப்பதில்லை. தேசிய சின்னங்களுக்கு மரியாதை காட்டுகிறபோதிலும், செயலிலோ அல்லது மனதிலோ அவற்றை வணங்குவதில்லை. விளையாட்டு நட்சத்திரங்களையோ மற்ற நவீன விக்கிரகங்களையோ அவர் நிச்சயமாகவே வணங்குவதில்லை. ஆனால் மற்றவர்கள் அப்படி செய்கையில் அவர்களுடைய உரிமையை அவர் மதிக்கிறார்; ஆனால் அவரோ படைப்பாளரை மட்டுமே வணங்குகிறார். (மத்தேயு 4:10; வெளிப்படுத்துதல் 19:10) இதுவும் அவரை இந்த உலகத்திலிருந்து பிரித்துக் காட்டுகிறது.

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல”

5, 6. கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக இருப்பது எவ்வாறு நம்மை இந்த உலகிலிருந்து பிரிக்கிறது?

5 கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவை பின்பற்றுகிறவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்கள், அதன் காரணமாகவும் அவர்கள் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல. பொந்தியு பிலாத்துவுக்கு முன்பு இயேசு விசாரணை செய்யப்பட்டபோது இவ்வாறு கூறினார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) இந்த ராஜ்யத்தின் மூலமே யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படும், அவருடைய அரசுரிமை நியாய நிரூபணம் செய்யப்படும், அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படும். (மத்தேயு 6:9, 10) இயேசு தமது பூமிக்குரிய ஊழியக்காலம் முழுவதும் அந்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார், அவரைப் பின்பற்றுகிறவர்கள் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரும்வரை அதைப் பற்றி அறிவிப்பார்கள் என்றும் சொன்னார். (மத்தேயு 4:23; 24:14) 1914-⁠ல் வெளிப்படுத்துதல் 11:15-⁠ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற்றமடைந்தன: “அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” வெகு சீக்கிரத்தில், அந்தப் பரலோக ராஜ்யமே மனிதகுலத்தின் மீது ஆளுகை செய்யும் ஒரே அரசாங்கமாக இருக்கும். (தானியேல் 2:44) குறிப்பிட்ட ஒரு சமயத்தில், உலக ஆட்சியாளர்களும் அதன் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.​—சங்கீதம் 2:6-12.

6 இவையனைத்தையும் மனதிற்கொண்டு, இன்று மெய் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக இருக்கிறார்கள், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு சொன்ன அறிவுரையை பின்பற்றுகிறார்கள். (மத்தேயு 6:33) இது, தாங்கள் குடியிருக்கும் நாட்டிற்கு அவர்கள் விசுவாசமாக இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது, ஆனால் அது அவர்களை ஆவிக்குரிய ரீதியில் இந்த உலகிலிருந்து பிரிந்திருக்க செய்கிறது. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டதைப் போலவே, இன்று கிறிஸ்தவர்களுடைய முக்கிய வேலை ‘தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பதே.’ (அப்போஸ்தலர் 28:23) கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த வேலையை தடைசெய்ய எந்த மனித அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை.

7. ஏன் மெய் கிறிஸ்தவர்கள் நடுநிலைமை வகிக்கிறார்கள், இதை அவர்கள் எவ்வாறு காண்பித்திருக்கிறார்கள்?

7 யெகோவாவுக்கு சொந்தமானவர்களாகவும் இயேசுவை பின்பற்றுகிறவர்களாகவும் கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாகவும் இருப்பதற்கு இசைவாக, 20-⁠ம், 21-⁠ம் நூற்றாண்டுகளின் தேசிய, சர்வதேச சண்டைகளில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமை வகித்திருக்கிறார்கள். அவர்கள் எத்தரப்பினரையும் ஆதரிக்கவில்லை, எவருக்கு விரோதமாகவும் போராயுதங்களைக் கையில் தொடவில்லை, எந்தவொரு உலகியல் நோக்கத்தை பரப்பவும் பிரச்சாரம் செய்யவில்லை. திணறடிப்பது போல தோன்றுகிற எதிர்ப்புகளின் மத்தியிலும் வியக்கத்தக்க விதத்தில் விசுவாசத்தை காட்டும் விஷயத்தில், 1934-⁠ல் ஜெர்மனியின் நாசி ஆட்சியாளர்களிடம் தெரிவிக்கப்பட்ட கொள்கைகளை அவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்: “அரசியல் விவகாரங்களில் எங்களுக்கு எந்த ஈடுபாடுமில்லை, ஆனால் கிறிஸ்துவை ராஜாவாக கொண்டு ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்திற்கு எங்களை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறோம். நாங்கள் எந்தவொரு காயத்தையோ தீங்கையோ யாருக்கும் ஏற்படுத்த மாட்டோம். சமாதானமாக வாழ்ந்து, சந்தர்ப்பம் கிடைக்கையில் அனைவருக்கும் நன்மை செய்வதிலேயே நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

கிறிஸ்துவுக்கு தூதுவர்களாகவும் பிரதிநிதிகளாகவும்

8, 9. எந்த விதத்தில் இன்று யெகோவாவின் சாட்சிகள் தூதுவர்களாகவும் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள், தேசங்களுடன் அவர்களுடைய உறவை இது எவ்வாறு பாதிக்கிறது?

8 பவுல் தன்னையும் அபிஷேகம் செய்யப்பட்ட சக கிறிஸ்தவர்களையும் “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து [“தூதுவர்களாயிருந்து,” NW], தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” என விவரித்தார். (2 கொரிந்தியர் 5:20; எபேசியர் 6:19) 1914 முதற்கொண்டு ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை கடவுளுடைய ராஜ்யத்தின் தூதுவர்கள் என அழைப்பது பொருத்தமானதே; கடவுளுடைய ராஜ்யத்தின் “புத்திரர்”களாக அவர்கள் இருக்கிறார்கள். (மத்தேயு 13:38; பிலிப்பியர் 3:20; வெளிப்படுத்துதல் 5:9, 10) மேலும், சகல தேசங்களிலுமிருந்து “திரளான கூட்டமாகிய” ‘வேறே ஆடுகளையும்’ யெகோவா கூட்டிச் சேர்த்திருக்கிறார்; இவர்கள் பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள், இவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரர்கள் செய்யும் தூதுவர் பணியில் அவர்களை ஆதரிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) இந்த ‘வேறே ஆடுகளை’ கடவுளுடைய ராஜ்யத்தின் ‘பிரதிநிதிகள்’ என அழைக்கலாம்.

9 ஒரு தூதுவரும் அவருடைய பணியாளர்களும் எந்த நாட்டில் சேவை செய்கிறார்களோ அந்த நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதில்லை. அதைப் போலவே, கிறிஸ்தவர்களும் இந்த உலக தேசங்களின் அரசியல் விவகாரங்களில் நடுநிலைமை வகிக்கிறார்கள். எந்தவொரு தேசிய, இன, சமுக அல்லது பொருளாதார தொகுதியையும் ஆதரிப்பதுமில்லை, எதிர்ப்பதுமில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35) மாறாக, அவர்கள் ‘யாவருக்கும் . . . நன்மை செய்கிறார்கள்.’ (கலாத்தியர் 6:10) யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமை வகிப்பதால், யாருமே தாங்கள் எதிர்த்தரப்பு இனத்தை, தேசத்தை, அல்லது குலத்தை ஆதரிப்பவர்கள் என உரிமைபாராட்டுவதன் மூலம் அவர்களுடைய செய்தியை நேர்மையுடன் ஒதுக்கித்தள்ள முடியாது.

அன்பெனும் அடையாள சின்னம்

10. ஒரு கிறிஸ்தவருக்கு அன்பு எந்தளவுக்கு முக்கியம்?

10 மேற்சொல்லப்பட்ட விஷயங்களோடு, மற்ற கிறிஸ்தவர்களுடன் உள்ள உறவின் நிமித்தம் உலக விவகாரங்களில் கிறிஸ்தவர்கள் நடுநிலைமை வகிக்கிறார்கள். தம்மை பின்பற்றுகிறவர்களிடம் இயேசு இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) சகோதர அன்பு ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு அடிப்படை அம்சமாக இருக்கிறது. (1 யோவான் 3:14) ஒரு கிறிஸ்தவருக்கு மற்ற கிறிஸ்தவர்களோடு இருக்கும் உறவு, யெகோவாவுடனும் இயேசுவுடனும் கொண்டிருக்கும் உறவோடு சம்பந்தப்பட்டது, மிக நெருக்கமானது. அவருடைய அன்பு உள்ளூர் சபையிலுள்ளவர்களுக்கு மட்டுமே உரியதல்ல. அது ‘உலகத்திலுள்ள முழு சகோதர கூட்டத்தாரையும்’ தழுவிய அன்பாகும்.​—1 பேதுரு 5:9, NW.

11. ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு எவ்வாறு யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தையின்மீது செல்வாக்கு செலுத்தியிருக்கிறது?

11 “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என ஏசாயா 2:4-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்று யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சகோதர அன்பை காண்பிக்கிறார்கள். மெய் கிறிஸ்தவர்கள் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பதால் கடவுளுடனும் சக மனிதருடனும் சமாதானமாய் இருக்கிறார்கள். (ஏசாயா 54:13) கடவுளையும் தங்களுடைய சகோதரர்களையும் அவர்கள் நேசிப்பதால், பிற நாடுகளில் வசிக்கும் சக கிறிஸ்தவர்களுக்கு​—⁠அல்லது வேறு எவருக்கும்​—⁠விரோதமாக ஆயுதங்களை எடுப்பது என்பது அவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சமாதானமும் ஐக்கியமும் அவர்களுடைய வணக்கத்தின் இன்றியமையாத அம்சம்; இது உண்மையிலேயே கடவுளுடைய ஆவி அவர்களிடம் இருப்பதற்கு ஒரு சான்று. (சங்கீதம் 133:1; மீகா 2:12; மத்தேயு 22:37-39; கொலோசெயர் 3:14) “[யெகோவாவின்] கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது” என்பதை அறிந்து, ‘சமாதானத்தைத் தேடி, அதைத் தொடருகிறார்கள்.’​—சங்கீதம் 34:14, 15.

கிறிஸ்தவர்கள் இவ்வுலகை நோக்கும் விதம்

12. இவ்வுலக மக்களிடம் யெகோவா காட்டும் என்ன மனநிலையை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள், எப்படி?

12 யெகோவா இந்த உலகத்திற்கு பாதகமான நியாயத்தீர்ப்பை அறிவித்திருக்கிறார், ஆனால் அதிலுள்ள ஒவ்வொருவரையும் அவர் இன்னும் நியாயந்தீர்க்கவில்லை. அவர் தமது உரிய காலத்தில் இயேசுவின் மூலம் அதைச் செய்வார். (சங்கீதம் 67:3, 4; மத்தேயு 25:31-46; 2 பேதுரு 3:10) இதற்கிடையே அவர் மனிதரிடம் மிகுந்த அன்பையும் காட்டுகிறார். ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை பெற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தம்முடைய ஒரேபேறான குமாரனையும் அளித்தார். (யோவான் 3:16) கிறிஸ்தவர்களாக நாம் இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாடுகளைப் பற்றி பிறருக்கு சொல்வதன் மூலம் அவரைப் போல் அன்பு காட்டுகிறோம்; நம் முயற்சிகள் பெரும்பாலும் ஏற்கப்படாவிட்டாலும் நாம் தொடர்ந்து சொல்கிறோம்.

13. உலக ஆட்சியாளர்களை நாம் எப்படி கருத வேண்டும்?

13 இந்த உலகத்தின் ஆட்சியாளர்களை நாம் எப்படி கருத வேண்டும்? இதற்கு பதிலளிப்பவராக பவுல் இவ்வாறு எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.” (ரோமர் 13:1, 2, NW) சர்வவல்லவர் அனுமதிப்பதால், சம்பந்தப்பட்ட ஸ்தானங்களை (அது உயர்ந்ததோ தாழ்ந்ததோ ஆனால் எப்போதுமே யெகோவாவின் ஸ்தானத்தைவிட குறைவுபட்டது) மனிதர் வகிக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் இந்த உலகத்தின் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான்; காரணம், அது யெகோவாவுக்கு கீழ்ப்படிவதன் ஓர் அம்சம். கடவுளும் மனித அரசாங்கமும் எதிர்பார்க்கும் காரியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகையில் என்ன செய்வது?

கடவுளின் சட்டமும் இராயனின் சட்டமும்

14, 15. (அ) கீழ்ப்படியும் விஷயத்தில் ஒத்துவராத காரியத்தை தானியேல் எப்படி தவிர்க்க முடிந்தது? (ஆ) கீழ்ப்படியும் விஷயத்தில் முரண்பாட்டை தவிர்க்க முடியாமல் போனபோது மூன்று எபிரெயர்கள் என்ன நிலைநிற்கையை எடுத்தார்கள்?

14 கடவுளுடைய அதிகாரத்திற்கும் மனித அரசாங்கங்களுக்கும் கீழ்ப்படிவதில் எப்படி சமநிலையோடு இருக்கலாம் என்பதில் தானியேலும் அவருடைய மூன்று கூட்டாளிகளும் சிறந்த மாதிரி வைக்கிறார்கள். இந்த நான்கு எபிரெய இளைஞர்களும் பாபிலோனிய சிறையிருப்பில் இருந்தபோது, அந்தத் தேசத்தின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தார்கள், விரைவில் ஒரு விசேஷித்த பயிற்சிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தப் பயிற்சிக்கும் யெகோவாவின் சட்டத்திற்கும் ஒத்துவராது என்பதை அறிந்த தானியேல் அந்த விஷயத்தைக் குறித்து பிரதானிகளின் தலைவரிடத்தில் பேசினார். அதன் விளைவாக, அந்த நான்கு எபிரெயர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு வேறு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (தானியேல் 1:8-17) தங்கள் கருத்துக்களை அதிகாரிகளிடம் சாதுரியமாக தெரிவிக்கையில் யெகோவாவின் சாட்சிகள் தானியேலின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்; இவ்வாறு தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறார்கள்.

15 என்றாலும், வேறொரு சந்தர்ப்பத்தில், கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்ட கருத்து வேறுபாட்டை அவர்களால் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. தூரா சமவெளியில் பாபிலோன் ராஜா ஒரு பெரிய சிலையை நிறுத்தி மாகாணத்திலுள்ள உத்தியோகஸ்தர்கள் உட்பட உயர் அதிகாரிகள் யாவரும் அதன் பிரதிஷ்டைக்கு கூடிவரும்படி கட்டளையிட்டார். இப்போது, தானியேலின் மூன்று நண்பர்களும் ஏற்கெனவே மாகாண உத்தியோகஸ்தர்களாக நியமிக்கப்பட்டிருந்ததால் அந்த ஆணையை அவர்களும் ஏற்க வேண்டியதாயிற்று. அந்த பிரதிஷ்டையின்போது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் கூடிவந்திருந்த அனைவரும் அந்தச் சிலைக்கு முன்பாக தாழ விழுந்து பணிந்துகொள்ள வேண்டியிருந்தது. அது கடவுளுடைய சட்டத்திற்கு முரணானது என்பதை அந்த எபிரெயர்கள் அறிந்திருந்தார்கள். (உபாகமம் 5:8-10) ஆகவே, அனைவரும் தாழ விழுந்து பணிகையில், அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாவின் ஆணைக்கு கீழ்ப்படியாமல் போனதால் அவர்கள் ஒரு பயங்கரமான மரண தண்டனையை எதிர்ப்பட நேர்ந்தது; ஓர் அற்புதத்தினால் மட்டுமே அவர்களுடைய உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போவதற்கு பதிலாக அவர்கள் சாவை எதிர்ப்பட துணிந்தார்கள்.​—தானியேல் 2:49–3:29.

16, 17. பிரசங்கிப்பதை நிறுத்தும்படி அப்போஸ்தலர்களுக்கு கட்டளையிட்டபோது அவர்கள் என்ன செய்தார்கள், ஏன்?

16 முதல் நூற்றாண்டில், எருசலேமிலிருந்த யூத தலைவர்கள் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களை அழைத்து இயேசுவின் பெயரில் பிரசங்கிக்கக் கூடாது என கட்டளையிட்டனர். அந்தக் கட்டளைக்கு அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? சகல தேசங்களிலும் சீஷராக்கும் வேலையைத் தொடரும்படி இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டிருந்தார்; அதில் யூதேயாவும் உட்படும். எருசலேமிலும் உலகின் மற்ற எல்லா இடங்களிலும் அவருக்கு சாட்சிகளாய் இருக்க வேண்டுமென்றும் சொல்லியிருந்தார். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) இயேசுவின் கட்டளைகள் பிதாவின் சித்தத்தை செய்வதைக் குறிக்கின்றன என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். (யோவான் 5:30; 8:28) ஆகவே, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள்.​—அப்போஸ்தலர் 4:19, 20; 5:29.

17 அந்த அப்போஸ்தலர்கள் கலகம் செய்யவில்லை. (நீதிமொழிகள் 24:21) என்றாலும், கடவுளுடைய சித்தத்தை செய்வதை மனித ஆட்சியாளர்கள் தடை செய்தபோது, ‘மனுஷனுக்கு கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு கீழ்ப்படிவதே அவசியம்’ என்றே அவர்களால் கூற முடிந்தது. ஏனெனில், நாம் ‘இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்த’ வேண்டும் என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:17) ஒரு மனிதன் பேச்சைக் கேட்டு கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமல் போனால் அது கடவுளுக்குரியதை மனிதருக்கு கொடுப்பதை அர்த்தப்படுத்தும். அதேசமயத்தில் இராயனுக்குரிய அனைத்தையும் நாம் செலுத்துகிறோம்; ஆனால், யெகோவாவின் உன்னத அதிகாரத்தை நாம் மதித்துணருகிறோம். அவர் சர்வலோக பேரரசர், படைப்பாளர், அதிகாரத்தின் ஊற்றுமூலமே அவர்தான்.​—வெளிப்படுத்துதல் 4:11.

நாம் உறுதியாக நிலைநிற்போம்

18, 19. நம் சகோதரர்களில் அநேகர் எத்தகைய சிறந்த நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள், அவர்களுடைய முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்?

18 யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதை இன்று பெரும்பாலான அரசாங்கங்கள் அறிந்திருக்கின்றன; அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இருந்தாலும், சில தேசங்களில் யெகோவாவின் சாட்சிகள் கடும் துன்புறுத்துதலை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். 20-⁠ம் நூற்றாண்டு முழுவதிலும் இன்று வரையாகவும்கூட நம் சகோதர சகோதரிகளில் சிலர் கடுமையாக போராடியிருக்கிறார்கள்; ஆவிக்குரிய கருத்தில், அவர்கள் ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுகிறார்கள்.’​—1 தீமோத்தேயு 6:12.

19 அவர்களைப் போல நாம் எவ்வாறு உறுதியாக நிலைநிற்கலாம்? முதலாவதாக, நாம் துன்புறுத்துதலை எதிர்ப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே, அதை எதிர்ப்படும்போது நிலைகுலைந்து விடவோ கலக்கமடைந்து விடவோ கூடாது. “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என தீமோத்தேயுவுக்கு பவுல் எச்சரித்தார். (2 தீமோத்தேயு 3:12; 1 பேதுரு 4:12) சாத்தானின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கும் இந்த உலகில் துன்புறுத்துதலை எதிர்ப்படாமல் எப்படி தப்ப முடியும்? (வெளிப்படுத்துதல் 12:17) நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கும் வரையில், நம்மைக் குறித்து ‘ஆச்சரியப்பட்டு தூஷிக்கிற’ சிலர் எப்போதும் இருக்கத்தான் செய்வார்கள்.​—1 பேதுரு 4:4.

20. நம்மை பலப்படுத்தும் என்ன சத்தியங்கள் நமக்கு நினைப்பூட்டப்படுகின்றன?

20 இரண்டாவதாக, யெகோவாவும் அவருடைய தூதர்களும் நம்மை ஆதரிப்பார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது. பூர்வ காலத்தில் வாழ்ந்த எலிசா சொன்ன விதமாக, “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்.” (2 இராஜாக்கள் 6:16; சங்கீதம் 34:7) தம்முடைய நல்ல நோக்கத்தின் நிமித்தமே நமக்கு எதிரிகளிடமிருந்து வரும் அழுத்தங்களை யெகோவா கொஞ்ச காலத்திற்கு அனுமதிக்கிறார். இருந்தாலும் அதை சகிப்பதற்கு தேவையான பலத்தை அவர் எப்போதும் நமக்கு தருவார். (ஏசாயா 41:9, 10) சிலரோ கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அது நம்மை கலக்கமடைய செய்வதில்லை. “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே [“கெஹென்னாவில்,” NW] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 10:16-23, 28) இந்த ஒழுங்குமுறையைப் பொறுத்ததில் நாம் வெறும் ‘பரதேசிகள்’ மட்டுமே. ‘உண்மையான வாழ்வை,’ அதாவது கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை ‘உறுதியாக பற்றிக்கொள்ள’ இப்போது நாம் காலத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். (1 பேதுரு 2:11; 1 தீமோத்தேயு 6:19, NW) நாம் கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருக்கும் பட்சத்தில் யாருமே இந்த வெகுமதியை நம்மிடமிருந்து தட்டிப் பறிக்க முடியாது.

21. எதை நாம் எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்?

21 ஆகவே, யெகோவா தேவனோடுள்ள நம் மதிப்புமிக்க உறவை நினைவில் வைப்போமாக. கிறிஸ்துவைப் பின்பற்றுவோராகவும் ராஜ்யத்தின் குடிமக்களாகவும் இருக்கும்படி நம்மை ஆசீர்வதித்திருப்பதற்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போமாக. நம் சகோதரர்களை முழு இருதயத்தோடு நேசிப்போமாக; அவர்கள் காண்பிக்கும் அன்பில் நாம் எப்போதும் களிகூருவோமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, சங்கீதக்காரனின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்துவோமாக: “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.” (சங்கீதம் 27:14; ஏசாயா 54:17) அப்போது, நமக்கு முன்னிருந்த எண்ணிறந்த கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் இந்த உலகத்தின் பாகமாக இல்லாத நடுநிலை வகிக்கும் கிறிஸ்தவர்களாக நம் நம்பிக்கையில் உறுதியாக நிலைநிற்போம்.

உங்களால் விளக்க முடியுமா?

• நாம் யெகோவாவுடன் வைத்திருக்கும் உறவு எவ்வாறு நம்மை இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்கச் செய்கிறது?

• கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக, இந்த உலகில் நாம் எப்படி நடுநிலை வகிக்கிறோம்?

• சகோதரர்கள் பேரிலான அன்பு எவ்வழிகளில் நம்மை இவ்வுலகிலிருந்து பிரித்து நடுநிலையை காத்துக்கொள்ளச் செய்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யத்திற்கு நாம் காட்டும் கீழ்ப்படிதல் இந்த உலகத்தோடுள்ள உறவை எப்படி பாதிக்கிறது?

[பக்கம் 16-ன் படம்]

ஹூட்டு, டூட்ஸி இனத்தவர் இருவர் மகிழ்ச்சியோடு ஒருமித்து வேலை செய்கிறார்கள்

[பக்கம் 17-ன் படம்]

யூத மற்றும் அரேபிய கிறிஸ்தவ சகோதரர்கள்

[பக்கம் 17-ன் படம்]

செர்பிய, போஸ்னிய, குரோஷிய கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கூட்டுறவை அனுபவித்து மகிழ்கிறார்கள்

[பக்கம் 18-ன் படம்]

கடவுளுடைய சட்டத்தை மீறும்படி ஆட்சியாளர்கள் கட்டளையிடும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?