Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘புறஜாதியார் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’

‘புறஜாதியார் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’

‘புறஜாதியார் மத்தியில் நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்’

“எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்.”​—⁠1 பேதுரு 2:17.

1, 2. (அ) யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு செய்தித்தாள் நிருபர் என்ன சொன்னார்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் நன்னடத்தை சம்பந்தமாக உயர்ந்த தராதரத்தைக் காத்துக்கொள்ள ஏன் கடினமாக முயலுகிறார்கள்?

 பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாநிலத்தில் அமரிலோ என்ற இடத்தை சேர்ந்த செய்தித்தாள் நிருபர் ஒருவர் அந்தப் பகுதியிலிருந்த பல்வேறு சர்ச்சுகளைப் பார்வையிட்டு தன்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகளை அறிக்கை செய்தார். ஒரு தொகுதியினர் விசேஷமாக அவருடைய மனதை கவர்ந்தனர். அவர் சொன்னார்: “அமரிலோ சிவிக் சென்டரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர மாநாடுகளில் கலந்துகொண்டேன். நான் அவர்களோடு இருந்தபோது, ஒருவர்கூட சிகரெட் பற்ற வைத்ததையோ பியர் பாட்டிலை திறந்ததையோ அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதையோ ஒருபோதும் பார்க்கவில்லை. நான் சந்தித்த ஆட்களிலேயே அவர்கள்தான் மிகவும் சுத்தமானவர்கள், நன்னடத்தையுடையவர்கள், அடக்கமாக உடை உடுத்துபவர்கள், நல்ல குணம் படைத்தவர்கள்.” யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இதுபோன்ற அறிக்கைகள் அடிக்கடி வெளியாகின்றன. சாட்சிகளுடைய மதத்தைச் சாராதவர்கள் அவர்களை அடிக்கடி புகழ்வதற்கு காரணம் என்ன?

2 கடவுளுடைய ஜனங்கள் நன்னடத்தைக்காக பெரும்பாலும் புகழப்படுகிறார்கள். தராதரங்கள் பொதுவாக சீரழிந்து வருகிறபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் நடத்தை விஷயத்தில் உயர்ந்த தராதரங்களை கடைப்பிடிப்பதை ஒரு கடமையாக, தங்களுடைய வணக்கத்தின் பாகமாக கருதுகிறார்கள். தங்களுடைய செயல்கள் யெகோவாவின் பெயரையும் தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களின் பெயரையும் பாதிக்கிறது என்பதையும் தங்களுடைய நன்னடத்தை தாங்கள் பிரசங்கிக்கும் சத்தியத்தை சிபாரிசு செய்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (யோவான் 15:8; தீத்து 2:7, 8) அப்படியானால், நாம் எவ்வாறு நன்னடத்தையை காத்துக்கொண்டு, அதன் வாயிலாக யெகோவா மற்றும் அவருடைய சாட்சிகளின் சிறந்த நற்பெயரை தொடர்ந்து பறைசாற்றலாம், அப்படி செய்வதன் மூலம் நாம்தாமே எவ்வாறு பயனடைகிறோம் என்பதைப் பற்றி இப்பொழுது சிந்திக்கலாம்.

கிறிஸ்தவ குடும்பம்

3. கிறிஸ்தவ குடும்பங்களை எதிலிருந்து பாதுகாக்க வேண்டும்?

3 குடும்பத்தில் நம்முடைய நடத்தையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கேர்ஹார்ட் பிஸீர் மற்றும் எர்வின் கே. ஷாயிக் என்பவர்களால் எழுதப்பட்ட டி நாய்யன் இன்குவிஸிடோரன்: ரெலிஜியோன்ஸ்ஃப்ரைஹைட் அண்டு கிளாபென்ஸ்நைட் (புதிய ஒடுக்குமுறை விசாரணையாளர்கள்: மத சுதந்திரம் மற்றும் மத வைராக்கியம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[யெகோவாவின் சாட்சிகளுக்கு] குடும்பம் என்பது விசேஷமாக கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒன்று.” இந்தக் கூற்று உண்மையே, இன்றைக்கு அநேக ஆபத்துக்கள் இருப்பதால் அவற்றிலிருந்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அவசியம். “தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாத” பிள்ளைகள் இருக்கிறார்கள், “சுபாவ அன்பில்லாத” அல்லது “இச்சையடக்கமில்லாத” பெரியவர்கள் இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:2, 3) குடும்பங்களில் மணத் துணைக்கு எதிராக வன்முறைகள் தலைதூக்குகின்றன, பெற்றோர்கள் பிள்ளைகளை மோசமாக நடத்துகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள், பிள்ளைகள் அடங்குவதில்லை, போதைப்பொருள் துஷ்பிரயோகத்திலும் ஒழுக்கயீனத்திலும் ஈடுபடுகிறார்கள், அல்லது வீட்டைவிட்டு ஓடிவிடுகிறார்கள். இவையனைத்தும் ‘இவ்வுலக ஆவியின்’ அழிவுக்குரிய செல்வாக்கினால் விளைந்தவை. (எபேசியர் 2:1, 2) இத்தகைய ஆவிக்கு எதிராக நம்முடைய குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். எப்படி? குடும்ப அங்கத்தினர்களுக்கு யெகோவா கொடுக்கும் அறிவுரைகளுக்கும் வழிநடத்துதலுக்கும் செவிசாய்ப்பதன் மூலமே.

4. குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் யாவை?

4 உணர்ச்சி ரீதியில், ஆவிக்குரிய ரீதியில், சரீர ரீதியில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் இருப்பதை கிறிஸ்தவ தம்பதியினர் உணர்ந்திருக்கின்றனர். (1 கொரிந்தியர் 7:3-5; எபேசியர் 5:21-23; 1 பேதுரு 3:7) கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு, தங்களுடைய பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய பெரும் பாரமான பொறுப்புகள் இருக்கின்றன. (நீதிமொழிகள் 22:6; 2 கொரிந்தியர் 12:14; எபேசியர் 6:4) கிறிஸ்தவ பிள்ளைகள் பெரியவர்களாகும்போது, தங்களுக்கும் கடமைகள் இருப்பதை அறிகிறார்கள். (நீதிமொழிகள் 1:8, 9; 23:22; எபேசியர் 6:1; 1 தீமோத்தேயு 5:3, 4, 8) குடும்ப கடமைகளை நிறைவேற்ற முயற்சியும் உறுதியும் அன்பும் சுயதியாக மனப்பான்மையும் தேவை. ஆனால் எந்தளவுக்கு குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் கடவுளால் கொடுக்கப்பட்ட கடமைகளை பூர்த்தி செய்கிறார்களோ அந்தளவுக்கு ஒருவருக்கொருவரும் சபைக்கும் அவர்கள் ஆஸ்தியாக இருக்கிறார்கள். மிக முக்கியமாக, குடும்பத்தை ஸ்தாபித்து வைத்தவராகிய யெகோவா தேவனை அவர்கள் கனப்படுத்துகிறார்கள்.​—ஆதியாகமம் 1:27, 28; எபேசியர் 3:14.

கிறிஸ்தவ சகோதரத்துவம்

5. சக கிறிஸ்தவர்களுடன் தோழமை கொள்வதால் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம்?

5 கிறிஸ்தவர்களாக சபையிலுள்ள சக விசுவாசிகளுக்கும், மொத்தத்தில், ‘உலகத்திலுள்ள சகோதரர்களுக்கும்’ செய்ய வேண்டிய பொறுப்புகளும் நமக்கு இருக்கின்றன. (1 பேதுரு 5:9) நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கு சபையுடன் நம்முடைய உறவு இன்றியமையாதது. சக கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்ளும்போது, உற்சாகமூட்டும் தோழமையையும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து’ போஷாக்கூட்டும் ஆவிக்குரிய உணவையும் நாம் அனுபவிக்கிறோம். (மத்தேயு 24:45-47, NW) நமக்கு பிரச்சினைகள் இருந்தால், வேதப்பூர்வ நியமங்களின் அடிப்படையில் பயனுள்ள அறிவுரையைப் பெற நம்முடைய சகோதரர்களிடம் செல்லலாம். (நீதிமொழிகள் 17:17; பிரசங்கி 4:9; யாக்கோபு 5:13-18) நாம் கஷ்டப்படுகையில் நமது சகோதரர்கள் நம்மை கைவிட மாட்டார்கள். கடவுளுடைய அமைப்பின் பாகமாக இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

6. மற்ற கிறிஸ்தவர்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புகள் நமக்கு இருப்பதை பவுல் எவ்வாறு காண்பித்தார்?

6 என்றபோதிலும், பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே நாம் சபையின் அங்கத்தினர்களாக இல்லை; கொடுப்பதற்காகவும் இருக்கிறோம். சொல்லப்போனால், “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே மகிழ்ச்சி” என்று இயேசு கூறினார். (அப்போஸ்தலர் 20:35, NW) “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது அள்ளிக் கொடுக்கும் மனப்பான்மையை சிறப்பித்துக் காண்பித்தார்.​—எபிரெயர் 10:23-25.

7, 8. நம் கொடுக்கும் மனப்பான்மையை சபையில் உள்ளவர்களுக்கும் பிற நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் எவ்வாறு காட்டுகிறோம்?

7 சபை கூட்டங்களில் பதில்கள் சொல்லும்போது அல்லது மற்ற விதங்களில் பங்குகொள்ளும்போது “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடு”கிறோம். இவை நிச்சயமாகவே நமது சகோதரர்களை உற்சாகமூட்டுகின்றன. கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் உரையாடுவதன் மூலமும் நாம் அவர்களை உற்சாகமூட்டுகிறோம். பலவீனரை பலப்படுத்துவதற்கும், மனச்சோர்வடைந்தோரை தேற்றுவதற்கும் நோய்வாய்ப்பட்டோரை ஆறுதல்படுத்துவதற்கும் அதுவே நேரம். (1 தெசலோனிக்கேயர் 5:14) உண்மையான கிறிஸ்தவர்கள் இந்த வகையான கொடுத்தலில் தாராள குணமுடையவர்களாக இருப்பதால், நம் மத்தியில் நிலவும் அன்பைக் கண்டு முதன்முறையாக நம்முடைய கூட்டங்களுக்கு வருபவர்கள் மனம் கவரப்படுகிறார்கள்.​—சங்கீதம் 37:21; யோவான் 15:12; 1 கொரிந்தியர் 14:25.

8 என்றாலும், நம்முடைய அன்பு நம் சபையாருக்கு மட்டுமே அல்ல. அது உலகம் முழுவதிலுமுள்ள நம்முடைய முழு சகோதர கூட்டத்தாரையும் உள்ளடக்குகிறது. அதனால்தான் ஒவ்வொரு ராஜ்ய மன்றத்திலும் ராஜ்ய மன்ற நிதிக்காக நன்கொடை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நம்முடைய சொந்த ராஜ்ய மன்றம் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் பிற நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான சக கிறிஸ்தவர்கள் கூடிவருவதற்கு தகுந்த இடவசதி இல்லை. ராஜ்ய மன்ற நிதிக்காக நாம் நன்கொடை வழங்கும்போது, அச்சகோதரர்களை நாம் தனிப்பட்ட விதமாக அறியாதபோதிலும் அவர்களுக்கு நம்முடைய அன்பை காட்டுகிறோம்.

9. என்ன அடிப்படை காரணத்திற்காக யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகின்றனர்?

9 யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகின்றனர்? அப்படி செய்யும்படி இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார். (யோவான் 15:17) அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பு, தனி நபர்களாகவும் ஒரு தொகுதியாகவும் அவர்கள்மீது கடவுளுடைய ஆவி செயல்படுவதற்கு அத்தாட்சி அளிக்கிறது. அன்பு ‘ஆவியின் கனிகளில்’ ஒன்று. (கலாத்தியர் 5:22, 23) ‘அநேகருடைய அன்பு தணிந்துபோயிருக்கிற’ ஓர் உலகில் யெகோவாவின் சாட்சிகள் வாழ்கிறபோதிலும், பைபிளை படித்து, கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொண்டு, கடவுளிடம் இடைவிடாமல் ஜெபிக்கையில் அவர்களால் இயல்பாக அன்பு காட்ட முடிகிறது.​—மத்தேயு 24:12.

உலகத்தாரோடு பழகுதல்

10. உலகத்தாரிடமாக நம்முடைய பொறுப்பு என்ன?

10 “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடு”வதைப் பற்றி பவுல் குறிப்பிட்டது மற்றொரு பொறுப்பை நமக்கு நினைப்பூட்டுகிறது. நம்பிக்கையை அறிக்கையிடுவது என்பது இன்னும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களாக ஆகாதவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதைக் குறிக்கிறது. (மத்தேயு 24:14; 28:19, 20; ரோமர் 10:9, 10, 13-15) இத்தகைய பிரசங்க வேலை, கொடுப்பதன் இன்னொரு அம்சமாக இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்கு நேரம், சக்தி, தயாரிப்பு, பயிற்சி, தனிப்பட்ட வள ஆதாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அவசியம். இருந்தாலும், பவுல் இவ்வாறும் எழுதினார்: “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.” (ரோமர் 1:14, 15) பவுலைப் போலவே, இந்தக் ‘கடனை’ செலுத்துவதில் கஞ்சத்தனமாக இல்லாதிருப்போமாக.

11. உலகத்தோடுள்ள நம் உறவை கட்டுப்படுத்தும் இரண்டு வேதப்பூர்வ நியமங்கள் யாவை, ஆனால் எதை நாம் அறிந்திருக்கிறோம்?

11 சக விசுவாசிகளாக இல்லாதவர்களிடம் நமக்கு வேறு பொறுப்புகளும் இருக்கின்றனவா? ஆம் இருக்கின்றன. இந்த “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” நாம் அறிந்திருக்கிறோம். (1 யோவான் 5:19) “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல” என இயேசு தமது சீஷர்களைப் பற்றி சொன்னதை நாம் அறிவோம். இருந்தாலும், நாம் இந்த உலகில்தான் வாழ்கிறோம், அதிலிருந்துதான் பிழைப்புக்கு தேவையானதை சம்பாதிக்கிறோம், அதிலிருந்துதான் பல சேவைகளைப் பெறுகிறோம். (யோவான் 17:11, 15, 16) ஆகவே இந்த உலகத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் நமக்கு இருக்கின்றன. அவை யாவை? இந்தக் கேள்விக்கு அப்போஸ்தலன் பேதுரு பதிலளித்தார். எருசலேம் அழிவதற்கு சற்று முன்பு, ஆசியா மைனரிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்; இந்த உலகத்தோடு சமநிலையான உறவை வைத்திருப்பதற்கு அந்தக் கடிதத்திலுள்ள ஒரு பகுதி நமக்கு உதவுகிறது.

12. எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் “அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கி”றார்கள், அதனால் எதிலிருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டும்?

12 முதலாவதாக, பேதுரு இவ்வாறு கூறினார்: “பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி[யிருங்கள்] . . . என்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” (1 பேதுரு 2:11, 12) ஆவிக்குரிய கருத்தில், மெய் கிறிஸ்தவர்கள் “அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கி”றார்கள்; ஏனென்றால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கவனத்தை ஒருமுகப்படுத்துவது நித்திய ஜீவ நம்பிக்கையில்; அதாவது ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் பரலோக நம்பிக்கையிலும், ‘வேறே ஆடுகள்’ வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் வாழும் நம்பிக்கையிலும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். (யோவான் 10:16; பிலிப்பியர் 3:20, 21; எபிரெயர் 11:13; வெளிப்படுத்துதல் 7:9, 14-17) ஆனால் மாம்ச இச்சைகள் யாவை? பணம் காசு சேர்க்க வேண்டுமென்ற ஆசை, பிரபலமாக வேண்டுமென்ற ஆசை, ஒழுக்கயீனமான பாலியல் ஆசைகள், “பொறாமை” “பேராசை” என விவரிக்கப்படும் ஆசைகள் ஆகியவை இவற்றில் உட்பட்டுள்ளன.​—கொலோசெயர் 3:5, NW; 1 தீமோத்தேயு 6:4, 9; 1 யோவான் 2:15, 16.

13. மாம்ச இச்சைகள் எவ்வாறு நம்முடைய “ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்”கின்றன?

13 இத்தகைய ஆசைகள் உண்மையிலேயே நம் “ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்”கின்றன. கடவுளோடுள்ள நம்முடைய உறவை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கையை (நம்முடைய ‘ஆத்துமாவை’ அல்லது ஜீவனை) ஆபத்திற்குள்ளாக்குகின்றன. உதாரணமாக, ஒழுக்கயீனமான காரியங்களில் நம் நாட்டம் அதிகரித்தால், நம்மை எவ்வாறு “பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்க முடியும்? பொருளாசை எனும் கண்ணியில் நாம் சிக்கிக்கொண்டால், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை” எப்படித் தேடுவோம்? (ரோமர் 12:1, 2; மத்தேயு 6:33; 1 தீமோத்தேயு 6:17-19) மோசேயின் முன்மாதிரியைப் பின்பற்றி, இவ்வுலகத்தின் கவர்ச்சிகளை விட்டொழித்து யெகோவாவின் சேவையை வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதே மேம்பட்ட வழி. (மத்தேயு 6:19, 20; எபிரெயர் 11:24-26) இந்த உலகத்துடன் சமநிலையான உறவை வைத்திருப்பதற்கு இது இன்றியமையாத காரணியும் ஆகும்.

“நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்”

14. கிறிஸ்தவர்களாக நாம் ஏன் நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ள வேண்டும்?

14 மற்றொரு முக்கியமான வழிகாட்டி பேதுருவின் அடுத்துவரும் வார்த்தைகளில் காணப்படுகிறது: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.” (1 பேதுரு 2:12) கிறிஸ்தவர்களாக, நாம் முன்மாதிரியாய் திகழ கடினமாய் முயலுகிறோம். பள்ளியில் நாம் ஊக்கமாய் படிக்கிறோம். வேலை செய்யுமிடத்தில் நம்முடைய மேலாளர் நியாயமற்றவராய் தோன்றினாலும் நாம் சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்கிறோம். பிளவுபட்ட குடும்பத்தில், விசுவாசத்திலுள்ள கணவனோ மனைவியோ கிறிஸ்தவ நியமங்களைப் பின்பற்ற விசேஷ முயற்சி எடுக்கிறார். இது எப்பொழுதும் சுலபமல்ல, ஆனால் நம்முடைய சிறந்த முன்மாதிரி யெகோவாவை பிரியப்படுத்துகிறது, சாட்சிகளாக இல்லாதவர்கள் மத்தியில் அடிக்கடி நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.​—1 பேதுரு 2:18-20; 3:1.

15. நடத்தை சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளுடைய உயர்ந்த தராதரம் பரவலாக அறியப்பட்டிருப்பது நமக்கு எப்படி தெரியும்?

15 சிறந்த தராதரங்களை பின்பற்றுவதில் யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது கடந்த வருடங்களில் அவர்களைக் குறித்து பிரசுரிக்கப்பட்ட அறிக்கைகளிலிருந்து தெரிகிறது. உதாரணமாக, இல் டெம்போ என்ற இத்தாலிய செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பணி செய்வோர் அவர்களை நேர்மையான வேலையாட்கள் என வர்ணிக்கிறார்கள், தங்களுடைய விசுவாசத்தில் மிகவும் உறுதியாக இருப்பதால் அதில் மூழ்கியிருப்பது போல தோன்றலாம்; என்றாலும், அவர்களுடைய ஒழுக்கமுள்ள நடத்தைக்கு மதிப்பையும் மரியாதையையும் பெற தகுதியானவர்கள்.” அர்ஜென்டினாவிலுள்ள ப்யூனஸ் அயர்ஸிலிருந்து வெளிவரும் ஹெரால்டு என்ற செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் கடின உழைப்பாளிகள், பொறுப்புணர்ச்சிமிக்கவர்கள், சிக்கனமானவர்கள், கடவுளுக்கு பயந்து நடக்கும் குடிமக்கள் என்பதை பல வருடங்களாக நிரூபித்திருக்கிறார்கள்.” ஸிர்க்யே இவ்வான்யென்கா என்ற ரஷ்ய அறிஞர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகள், அரசாங்க சட்டதிட்டங்களை இம்மியும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்களும், குறிப்பாக வரிப் பணத்தைக் கட்டுவதில் நேர்மையானவர்களுமென உலகெங்கும் அறியப்பட்டிருக்கின்றனர்.” ஜிம்பாப்வேயில் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மாநாட்டிற்கு பயன்படுத்திய ஒரு கட்டிடத்தின் மேனேஜர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “சாட்சிகளில் சிலர் அங்குமிங்குமிருந்த காகிதங்களை பொறுக்கிக் கொண்டிருந்ததையும் கழிப்பிடங்களை கழுவிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன். அந்த மைதானம் முன்பிருந்ததைவிட மிகவும் சுத்தமாக இருக்கிறது. உங்கள் இளைஞர்கள் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள். இந்த முழு உலகமும் யெகோவாவின் சாட்சிகளால் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.”

கிறிஸ்தவ கீழ்ப்படிதல்

16. அரசாங்க அதிகாரிகளுடன் நம்முடைய உறவு எப்படியிருக்க வேண்டும், ஏன்?

16 அரசாங்க அதிகாரிகளுடன் நம்முடைய உறவைப் பற்றியும் பேதுரு பேசுகிறார். “நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமை செய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மை செய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். நீங்கள் நன்மை செய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை [“அறியாமை பேச்சை,” NW] அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது” என்று அவர் சொன்னார். (1 பேதுரு 2:13-15) ஒழுங்கோடு செயல்படும் அரசாங்கத்திடமிருந்து நன்மைகள் பெறுவதை நாம் போற்றுகிறோம். பேதுருவின் வார்த்தைகளை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம், வரிகளையும் செலுத்துகிறோம். சட்டத்தை மீறுகிறவர்களை தண்டிக்க அரசாங்கத்திற்கு கடவுளால் கொடுக்கப்பட்ட உரிமையை ஏற்றுக்கொள்கிறபோதிலும், அரசாங்க அதிகாரிகளுக்கு நாம் கீழ்ப்படிவதற்குரிய முக்கிய காரணம் ‘கர்த்தரின் நிமித்தமாகும்.’ இது கடவுளுடைய சித்தம். மேலும், தவறு செய்து தண்டிக்கப்படுவதன் மூலம் யெகோவாவின் பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்த நாம் விரும்புவதில்லை.​—ரோமர் 13:1, 4-7; தீத்து 3:1; 1 பேதுரு 3:17.

17. ‘புத்தியீன மனுஷர்’ நம்மை எதிர்க்கும்போது நாம் எதைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்கலாம்?

17 அதிகாரத்திலுள்ள ‘புத்தியீன மனுஷர்’ சிலர் நம்மை துன்புறுத்தலாம் அல்லது வேறு வழிகளில் நம்மை எதிர்க்கலாம்​—⁠பொய் வதந்திகளைப் பரப்பி நம்முடைய நற்பெயரை கெடுக்கலாம். இருந்தாலும், யெகோவாவின் உரிய காலத்தில், அவர்களுடைய பொய்கள் எப்பொழுதும் அம்பலப்படுத்தப்படுகின்றன, அவர்களுடைய ‘அறியாமை பேச்சுக்கு’ ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. நம்முடைய கிறிஸ்தவ நடத்தைப் பற்றிய நல்ல பதிவே சாட்சியாக விளங்குகிறது. அதனால்தான் நன்மை செய்கிறவர்கள் என நேர்மையான அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி நம்மை பாராட்டுகிறார்கள்.​—ரோமர் 13:3; தீத்து 2:7, 8.

கடவுளின் அடிமைகள்

18. கிறிஸ்தவர்களாக, நம்முடைய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதை நாம் என்ன விதங்களில் தவிர்க்கலாம்?

18 பேதுரு இப்பொழுது எச்சரிக்கிறார்: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.” (1 பேதுரு 2:16; கலாத்தியர் 5:13) இன்று, பைபிள் சத்தியத்தைப் பற்றிய நம்முடைய அறிவு பொய் மத போதனைகளிலிருந்து நம்மை விடுதலை செய்கிறது. (யோவான் 8:32) மேலும், நமக்கு சுதந்திரம் இருக்கிறது, நாம் தெரிவுகளை செய்யலாம். என்றபோதிலும், நம்முடைய சுதந்திரத்தை நாம் துஷ்பிரயோகம் செய்வதில்லை. கூட்டுறவுகள், ஆடை அலங்காரம், பொழுதுபோக்கு போன்ற விஷயங்களில்​—⁠புசிப்பது, குடிப்பது போன்றவற்றிலும்கூட​—⁠தெரிவுகள் செய்யும்போது, மெய் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய அடிமைகள் என்பதையும் தங்களை தாங்களே பிரியப்படுத்திக் கொள்வதில்லை என்பதையும் நினைவில் கொள்கிறோம். நம்முடைய மாம்ச இச்சைகளுக்கு அல்லது இந்த உலகத்தின் நவீன பாணிகளுக்கு அடிமைகளாய் இருப்பதற்குப் பதிலாக, யெகோவாவை சேவிக்கவே நாம் தெரிவு செய்கிறோம்.​—கலாத்தியர் 5:24; 2 தீமோத்தேயு 2:22; தீத்து 2:11, 12.

19-21. (அ) அரசாங்க அதிகாரிகளை நாம் எவ்வாறு கருதுகிறோம்? (ஆ) எவ்வாறு சிலர் “சகோதரரிடத்தில் அன்பு” காண்பித்திருக்கிறார்கள்? (இ) நம்முடைய மிக முக்கியமான கடமை என்ன?

19 பேதுரு தொடர்ந்து சொல்கிறார்: “எல்லாரையும் கனம் பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்.” (1 பேதுரு 2:17) மனிதர்கள் பல்வேறு ஸ்தானங்களை வகிப்பதற்கு யெகோவா தேவன் அனுமதிப்பதால் அவர்களுக்குரிய மரியாதையை நாம் கொடுக்கிறோம். நம்முடைய ஊழியத்தை சமாதானத்துடனும் தேவ பக்தியுடனும் செய்வதற்கு நம்மை அனுமதிக்கும்படி அவர்களுக்காக ஜெபமும் செய்கிறோம். (1 தீமோத்தேயு 2:1-4) ஆனால் அதேசமயத்தில், ‘சகோதரரிடத்தில் அன்புகூருகிறோம்.’ நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களுடைய தீமைக்காக அல்ல, நன்மைக்காகவே நாம் எப்பொழுதும் பாடுபடுகிறோம்.

20 உதாரணமாக, ஆப்பிரிக்க தேசம் ஒன்று இனக் கலவரத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ நடத்தை முனைப்பாக தெரிந்தது. ரேஃபார்மிர்டே பிரெஸி என்ற சுவிட்சர்லாந்து செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்தது. “1995-⁠ல், . . . யெகோவாவின் சாட்சிகளைத் தவிர மற்றெல்லா சர்ச்சுகளும் [இந்தச் சண்டையில்] ஈடுபட்டதை ஆப்பிரிக்க உரிமைகள் அமைப்பு நிரூபிக்க முடிந்தது.” நெஞ்சை பிளக்கும் சம்பவங்களைப் பற்றிய செய்திகள் வெளி உலகை எட்டியபோது, ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சகோதரர்களுக்கும் பாதிக்கப்பட்ட அந்த நாட்டிலுள்ள மற்றவர்களுக்கும் உணவையும் மருந்துப் பொருட்களையும் விரைவில் அனுப்பி வைத்தனர். (கலாத்தியர் 6:10) “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என நீதிமொழிகள் 3:27-⁠ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு அவர்கள் செவிசாய்த்தனர்.

21 ஆனால் நாம் எந்தவொரு அரசாங்க அதிகாரத்திற்கு காட்ட வேண்டிய மரியாதையைவிடவும் நமது சகோதரர்களுக்கு காட்ட வேண்டிய அன்பைவிடவும் மிக முக்கியமான கடமை இருக்கிறது. அது என்ன? “தேவனுக்குப் பயந்திருங்கள்” என்று பேதுரு கூறினார். நாம் எந்தவொரு மனிதனுக்கும் கடமைப்பட்டிருப்பதைவிட யெகோவாவுக்கு அதிக கடமைப்பட்டுள்ளோம். எப்படி? மேலும், கடவுளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை எவ்வாறு அரசாங்க அதிகாரிகளுக்கு செய்ய வேண்டிய கடமையோடு சமநிலைப்படுத்தலாம்? பின்வரும் கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• குடும்பத்தில் கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் யாவை?

• கொடுக்கும் மனப்பான்மையை எவ்வாறு சபையில் நாம் காண்பிக்கலாம்?

• உலகத்தாருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை?

• நடத்தை சம்பந்தமாக உயர்ந்த தராதரத்தைக் காத்துக்கொள்வதால் வரும் நன்மைகள் சில யாவை?

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

எவ்வாறு கிறிஸ்தவ குடும்பம் மிகுந்த சந்தோஷத்தின் பிறப்பிடமாக திகழ முடியும்?

[பக்கம் 10-ன் படங்கள்]

ஏன் யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டுகின்றனர்?

[பக்கம் 10-ன் படங்கள்]

நமது சகோதரர்களை தனிப்பட்ட விதத்தில் அறிந்திராதபோதிலும் அவர்களுக்கு நமது அன்பை காண்பிக்க முடியுமா?