Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன்னிப்பு கேட்பது ஏன் மகா கஷ்டமாக இருக்கிறது?

மன்னிப்பு கேட்பது ஏன் மகா கஷ்டமாக இருக்கிறது?

மன்னிப்பு கேட்பது ஏன் மகா கஷ்டமாக இருக்கிறது?

ஜூலை 2000-⁠ல் ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியா சட்டமன்றம் ஒரு மசோதாவை கொண்டு வந்தது. அதன்படி, ஒரு விபத்தில் உட்பட்டவர்கள் காயமடைந்தவரிடம் வருத்தம் தெரிவிக்கிறார்கள் என்பதற்காக குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள். ஏன் இந்த சட்டம்? ஒரு விபத்தினால் காயமோ சேதமோ ஏற்படும்போது பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்தில் அர்த்தம் கற்பிக்கப்படும் என்ற பயத்தில் அநேகர் மன்னிப்பு கேட்க தயங்குவது கண்டறியப்பட்டது. மறுபட்சத்தில், தங்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என உணருகிறவர்கள் ஆத்திரமடையலாம், அதனால் சிறு விபத்தும்கூட பெரும் வாக்குவாதமாக வெடிக்கலாம்.

ஆனால் ஒரு விபத்து நேரிடுகையில், உங்கள் மீது தப்பு இல்லையென்றால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அதோடு, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைக் குறித்து கவனமாக இருப்பதும் சில சந்தர்ப்பங்களில் ஞானமானதாக இருக்கலாம். பழங்கால பழமொழி ஒன்று இவ்வாறு சொல்கிறது: “மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.” (நீதிமொழிகள் 10:19, பொது மொழிபெயர்ப்பு; 27:12) என்றபோதிலும், நீங்கள் பண்புள்ளவராகவும் உதவுகிறவராகவும் நடந்துகொள்ள முடியும்.

ஆனால் அநேகர் மன்னிப்பு கேட்பதையே நிறுத்திவிட்டார்கள், நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்படாதவற்றிலும்கூட அதுதான் உண்மை அல்லவா? ‘என்னுடைய வீட்டுக்காரர் ஒருநாளும் எதற்கும் என்னிடம் மன்னிப்பு கேட்பதே கிடையாது’ என ஒரு மனைவி புலம்பலாம். ‘எனக்கு கீழே வேலை பார்க்கிறவர்கள் அவர்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை, மன்னிப்பு கேட்பது ரொம்ப அபூர்வம்தான்’ என மேற்பார்வையாளர் ஒருவர் குறைகூறலாம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் இப்படி சொல்லலாம், ‘எக்ஸ்கியூஸ் மீ சொல்லும்படி பிள்ளைகளுக்கு யாருமே சொல்லித் தருவதில்லை.’

ஒதுக்கப்படுவோமோ என்ற பயம் மன்னிப்பு கேட்க தயங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அலட்சியம் பண்ணப்படுவோம் என நினைத்து மனம் கலங்குவதால், மனதில் உள்ளதை அவர் சொல்லாமலே இருந்துவிடலாம். ஏன், பாதிக்கப்பட்டவர் அதற்குக் காரணமானவரை அடியோடு புறக்கணிக்கவும் செய்யலாம், அதனால் சமரசம் பண்ணுவதே மிகவும் கஷ்டமாகிவிடலாம்.

பிறருடைய உணர்ச்சிகளை மதித்து நடக்காதது சிலர் மன்னிப்பு கேட்க தயங்குவதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். ‘மன்னிப்பு கேட்டுவிட்டால் மட்டும் என்ன, நான் செய்த தப்பு சரியாகிவிடுமா?’ என அவர்கள் நியாயம் கற்பிக்கலாம். இன்னும் சிலரோ ஏதாவது பின்விளைவுகள் வரலாம் என்பதால் மன்னிப்பு கேட்க தயங்கலாம். ‘என் மேல் பழிபோட்டு நஷ்ட ஈட்டை என் தலையில் கட்டிவிடுவார்களோ?’ என அவர்கள் நினைக்கலாம். இருந்தாலும், தவறை ஒப்புக்கொள்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது கர்வமே. ‘மன்னிச்சுக்கங்க’ என சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே தலைகனம் பிடித்தவராக இருப்பவர், ‘என்னுடைய தப்பை ஒத்துக்கொண்டு நான் தலைகுனிய விரும்பவில்லை. என்னுடைய அந்தஸ்து என்னாவது?’ என நினைக்கலாம்.

என்ன காரணமாக இருந்தாலும்சரி, அநேகருக்கு மன்னிப்பு கேட்க வாயில் வார்த்தைகள் வருவதென்றால் மகா கஷ்டமாக இருக்கிறது. ஆனால் மன்னிப்பு கேட்பது உண்மையிலேயே அவசியமா? மன்னிப்பு கேட்பதால் வரும் பயன்கள் யாவை?

[பக்கம் 3-ன் படம்]

“எக்ஸ்கியூஸ் மீ சொல்லும்படி பிள்ளைகளுக்கு யாருமே சொல்லித் தருவதில்லை”

[பக்கம் 3-ன் படம்]

‘என்னுடைய வீட்டுக்காரர் என்னிடம் மன்னிப்பு கேட்பதே கிடையாது’

[பக்கம் 3-ன் படம்]

“எனக்கு கீழே வேலை பார்க்கிறவர்கள் அவர்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை”