Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெய் வணக்க ஆதரவாளர்கள்—அன்றும் இன்றும்

மெய் வணக்க ஆதரவாளர்கள்—அன்றும் இன்றும்

மெய் வணக்க ஆதரவாளர்கள்அன்றும் இன்றும்

பூர்வ நகரமான எருசலேமிற்காக கண்ணீர் வடித்த ஒரு நபரின் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘இயேசு’ என நீங்கள் பதிலளிக்கலாம்; இயேசு அதற்காக கண்ணீர் வடித்தது உண்மைதான். (லூக்கா 19:28, 41) என்றாலும், இயேசு பூமிக்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கடவுளின் உண்மை ஊழியரில் இன்னொருவர் அதைப் போலவே எருசலேமிற்காக கண்ணீர் வடித்தார். அவருடைய பெயர் நெகேமியா.​—நெகேமியா 1:3, 4.

எருசலேமிற்காக கண்ணீர் வடிக்கும் அளவிற்கு எது நெகேமியாவை வருத்தப்படுத்தியது? அந்த நகரத்திற்காகவும் அதன் குடிமக்களின் நன்மைக்காகவும் அவர் என்ன செய்தார்? அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பதில்களை அறிய அவருடைய நாளில் நடந்த சில சம்பவங்களை சிந்தித்துப் பார்க்கலாம்.

உணர்ச்சிகளும், செயல்திறனும் மிக்கவர்

எருசலேமின் ஆளுனராக நெகேமியா நியமிக்கப்பட்டிருந்தார்; ஆனால் அதற்கு முன் அவர் சூசான் நகரிலுள்ள பெர்சிய அரசவையில் உயர் அதிகாரியாக சேவித்தார். செல்வச்செழிப்போடு வாழ்ந்தபோதிலும் தொலைதூர எருசலேமிலுள்ள தனது யூத சகோதரர்களின் நலனில் அவருக்கிருந்த அக்கறை கொஞ்சமும் குறையவில்லை. சொல்லப்போனால், எருசலேமிலிருந்து சில யூதர்கள் சூசானுக்கு வந்தபோது முதல் வேலையாக அவர்களிடம், “சிறையிருப்பில்

மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்”தார். (நெகேமியா 1:2) எருசலேம் மக்கள் ‘மகா தீங்கை அனுபவிக்கிறார்கள்’ என்றும் நகரத்தின் மதில் ‘இடிந்து கிடக்கிறது’ என்றும் வந்திருந்தோர் கூறியபோது நெகேமியா “உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்”தார். அதற்கு பிறகு, இருதயப்பூர்வமான ஜெபத்தில் தன் மன வருத்தத்தை யெகோவாவிடம் தெரிவித்தார். (நெகேமியா 1:3-11) நெகேமியா அந்தளவு வருத்தப்பட்டதற்குக் காரணம் என்ன? பூமியில் யெகோவாவுடைய வணக்கத்தின் மையமாக திகழ்ந்த எருசலேம் புறக்கணிக்கப்பட்டிருந்ததே அதற்குக் காரணம். (1 இராஜாக்கள் 11:36) அதுமட்டுமா, சிதிலங்களாக காட்சியளித்த அந்நகரம் அதன் குடிமக்களின் மோசமான ஆவிக்குரிய நிலைமையை சுட்டிக்காட்டியது.​—நெகேமியா 1:6, 7.

எருசலேம் மீதிருந்த அக்கறையாலும் அங்கு வாழ்ந்த யூதர்களிடமிருந்த பரிவாலும் அப்பணிக்காக நெகேமியா தன்னையே அர்ப்பணிக்க முன்வந்தார். தன் வேலைகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்ள பெர்சிய அரசன் அனுமதியளித்த உடனே எருசலேமிற்கு செல்லும் நீண்ட பயணத்திற்காக நெகேமியா திட்டமிட ஆரம்பித்தார். (நெகேமியா 2:5, 6) அவசியமாயிருந்த பழுதுபார்க்கும் வேலையை செய்ய அவர் தனது பலம், நேரம், திறமைகள் ஆகியவற்றை அளிக்க விரும்பினார். அவர் போய் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே எருசலேமின் மதில் முழுவதையும் பழுது பார்க்க உதவும் ஒரு திட்டத்தை தயாராக வைத்திருந்தார்.​—நெகேமியா 2:11-18.

மதிலை பழுது பார்க்கும் மாபெரும் வேலையை நெகேமியா பல குடும்பங்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்; அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தார்கள். * 40-⁠க்கும் அதிகமான தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும், மதிலில் ‘குறிப்பிட்ட அளவுள்ள ஒரு பகுதியை’ பழுது பார்க்கும் வேலை நியமிக்கப்பட்டது. அதன் பலன்? பெற்றோரோடு சேர்ந்து பிள்ளைகளும் உதவிக்கரம் நீட்டினர்; இத்தனை அநேகர் தங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவழித்ததால் பிரமாண்டமானதாக தோன்றிய வேலை செவ்வனே நடந்து முடிந்தது. (நெகேமியா 3:11, 12, 19, 20, NW) வேலை மும்முரமாய் நடந்ததால் இரண்டே மாதங்களுக்குள் முழு மதிலும் பழுது பார்த்து முடிக்கப்பட்டது! பழுது பார்க்கும் வேலையை எதிர்த்தவர்கள்கூட, “இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று” ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக நெகேமியா எழுதினார்.​—நெகேமியா 6:15, 16.

நினைவில் வைக்க வேண்டிய உதாரணம்

மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்காக நெகேமியா தனது நேரத்தையும் நிர்வாக திறமைகளையும் மட்டுமல்ல தனது பொருள் செல்வத்தையும்கூட கொடுத்தார். அடிமைத்தனத்தில் சிக்கிய தனது யூத சகோதரர்களை விடுவிக்க தனது சொந்த பணத்தை செலவழித்தார். அவர் வட்டியில்லாமல் கடன் கொடுத்தார். ஆளுனருக்குரிய படியை பெற உரிமை இருந்தும் அதை வற்புறுத்திக் கேட்காமல் இருந்ததால் அவர் யூதர்கள் மீது ‘பாரம்’ சுமத்தவில்லை. மாறாக, ‘நூற்றைம்பது பேருக்கும், அவர்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து அவர்களிடத்திற்கு வந்தவர்களுக்கும்’ உணவளிக்க அவர் வீட்டு கதவு எப்போதும் திறந்திருந்தது. அவருடைய விருந்தினர்களுக்காக ஒவ்வொரு நாளும் ‘ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் பட்சிகளும்’ தயாரித்தளித்தார். அதோடு, பத்து நாளைக்கு ஒரு தரம் “நானாவிதத் திராட்சரசமும்” கொடுத்தார்; இவை அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தார்.​—நெகேமியா 5:8, 10, 14-18.

அன்றும் இன்றும் இருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் தாராள குணத்தில் நெகேமியா எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரி! கடவுளின் தைரியமுள்ள ஊழியராகிய இவர், மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காக வேலை செய்தவர்களை ஆதரிக்க தனது பொருள் செல்வத்தை தாராளமாகவும் மனமுவந்தும் அளித்தார். அதனால் அவர் யெகோவாவிடம் பின்வருமாறு கேட்டது பொருத்தமானதே: “என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் . . . நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.” (நெகேமியா 5:19) யெகோவா நிச்சயம் நினைத்தருளுவார்.​—⁠எபிரெயர் 6:10.

இன்று பின்பற்றப்படுகிற நெகேமியாவின் உதாரணம்

மெய் வணக்கத்தின் சார்பாக யெகோவாவின் மக்கள் இன்றும் அதே போன்ற கனிவான உணர்வுகளையும், மனப்பூர்வமான செயல்களையும், சுயதியாக மனப்பான்மையையும் வெளிக்காட்டுவதைப் பார்ப்பது இதயத்திற்கு இதமளிக்கிறது. உடன் வணக்கத்தார் கஷ்டப்படுவதைக் கேள்விப்படுகையில் அவர்களுடைய நலனில் நாம் அதிக கரிசனை காட்டுகிறோம். (ரோமர் 12:15) நெகேமியாவைப் போல, விசுவாசத்திலிருக்கும் சகோதரர்கள் துன்பப்படுகையில் அவர்கள் சார்பாக நாம் யெகோவாவிடம் பின்வருமாறு ஜெபிக்கிறோம்: “ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்பட வேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக.”​—⁠நெகேமியா 1:11; கொலோசெயர் 4:2.

என்றாலும், நம் கிறிஸ்தவ சகோதரர்களின் ஆவிக்குரிய, சரீர நலன் மீதான அக்கறையும் மெய் வணக்கம் முன்னேறுவதற்கு உதவுவதில் நமக்கிருக்கும் அக்கறையும் உணர்ச்சிகளை மட்டுமே பாதிப்பதில்லை. அது நம்மை செயல்படவும் தூண்டுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை அனுமதிப்பவர்கள், வீட்டில் தாங்கள் அனுபவிக்கும் ஓரளவு சுகத்தை துறந்து தேவையில் இருப்போருக்கு உதவுவதற்காக நெகேமியாவைப் போலவே வேறு இடங்களுக்கு மாறிச் செல்ல அன்பின் நிமித்தம் தூண்டப்படுகிறார்கள். அப்படிப்பட்ட வாலண்டியர்கள் உலகின் சில பாகங்களில் அசௌகரியமான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சோர்ந்துவிடுவதில்லை. தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களுடன் தோளோடு தோள் சேவை செய்து அந்த பிராந்தியத்தில் மெய் வணக்கம் செழித்தோங்க வழிசெய்கிறார்கள். அவர்கள் காண்பிக்கும் சுயதியாக மனப்பான்மை உண்மையில் பாராட்டுக்குரியது.

நாம் வசிக்கும் பகுதியிலேயே நம் பங்கை செய்தல்

நம்மில் பெரும்பாலானோர் வேறொரு இடத்திற்கு மாறிச் செல்ல முடியாதிருப்பது புரிந்துகொள்ளத்தக்கதே. நாம் வசிக்கும் பகுதியிலேயே மெய் வணக்கத்தை ஆதரிக்கிறோம். இதுவும்கூட நெகேமியா புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கும் வேலையில் பங்கேற்ற உண்மையுள்ள குடும்பங்கள் சிலவற்றைப் பற்றி நெகேமியா கொடுத்த மேலுமான விவரிப்பை கவனியுங்கள். ‘அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; . . . பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுது பார்த்துக் கட்டினான்’ என்று அவர் எழுதினார். (நெகேமியா 3:10, 23, 28-30) பழுது பார்க்கும் வேலையில் வீட்டிற்கு அருகிலேயே தங்களால் முடிந்ததை செய்ததன் மூலம் அந்த ஆண்களும் அவர்களுடைய குடும்பங்களும் மெய் வணக்கம் முன்னேற பெரிதும் உதவினார்கள்.

இன்று நம்மில் அநேகர் நாம் வாழும் இடங்களிலேயே பல்வேறு விதங்களில் மெய் வணக்கத்தை ஆதரிக்கிறோம். ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்களிலும் இடருதவி பணிகளிலும் மிக முக்கியமாக ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் நாம் பங்கு கொள்கிறோம். மேலுமாக, கட்டுமானத்திலோ இடருதவி பணிகளிலோ நம்மால் நேரடியாக பங்குகொள்ள முடிகிறதோ இல்லையோ, பொருளுதவி செய்வதன் மூலம் மெய் வணக்கத்தை ஆதரிக்க நாம் அனைவருமே மனப்பூர்வமாக விரும்புகிறோம். தான் வாழ்ந்த காலத்தில் நெகேமியாவும் அதைத்தான் தாராளமாக செய்தார்.​—⁠“மனப்பூர்வமாக கொடுப்பதில் உட்பட்டுள்ள அம்சங்கள்” என்ற பெட்டியைக் காண்க.

அதிகரிக்கும் நமது அச்சக வேலைகள், இடருதவிகள், பூமி முழுவதிலும் செய்யப்படும் மற்ற அநேக சேவைகள் ஆகியவற்றிற்கு தேவைப்படும் பண உதவியை பெறுவது சில சமயங்களில் கடினமானதாக தோன்றலாம். என்றாலும், எருசலேமின் மாபெரும் மதிலை பழுது பார்த்துக் கட்டும் வேலையும்கூட செய்ய முடியாததாக தோன்றியதை நினைவில் வையுங்கள். (நெகேமியா 4:10) ஆனாலும், அந்த வேலையை பல குடும்பங்கள் மனமுவந்து பகிர்ந்து கொண்டதால்தான் அது செவ்வனே முடிக்கப்பட்டது. அதைப் போலவே இன்றும், நாம் ஒவ்வொருவரும் அந்த வேலையில் நம் பங்கை தொடர்ந்து செய்து வந்தால் நமது உலகளாவிய வேலைக்குத் தேவையான வளங்களைப் பெறுவதும் சாத்தியமாகும்.

“நன்கொடைகள் வழங்க சிலர் விரும்பும் வழிகள்” என்ற பெட்டி, ராஜ்ய வேலையை பொருளாதார விதத்தில் ஆதரிக்கும் பல்வேறு வழிகளை விவரிக்கிறது. கடந்த வருடத்தில், கடவுளுடைய மக்களில் அநேகர் இப்படிப்பட்ட ஆதரவை அளித்திருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர், இருதய தூண்டுதலினால் மனமுவந்து கொடுப்பதில் பங்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மெய் வணக்கத்தை உலகம் முழுவதிலும் விஸ்தரிப்பதில் தமது மக்களின் இருதயப்பூர்வமான முயற்சிகளை பன்மடங்கு ஆசீர்வதிப்பதற்காக நாம் யெகோவாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆம், பல வருடங்களாக யெகோவாவின் கரம் நம்மை வழிநடத்தியிருப்பதை நினைத்துப் பார்க்கையில் நெகேமியா நன்றியோடு கூறிய பின்வரும் வார்த்தைகளை எதிரொலிக்க நாமும் தூண்டப்படுகிறோம்: “என் தேவனுடைய கரம் என் மேல் நன்மையாக இருக்கிற[து].”​—⁠நெகேமியா 2:18.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 8 ‘உயர்குடி மக்கள்’ (பொது மொழிபெயர்ப்பு) என அழைக்கப்பட்ட சில யூத பிரமுகர்கள் வேலையில் பங்குகொள்ள மறுத்தனர் என நெகேமியா 3:5 கூறுகிறது; ஆனால் அவர்கள் விதிவிலக்கு மட்டுமே. ஆசாரியர்கள், தட்டான்கள், தைலக்காரர்கள், பிரபுக்கள், மளிகைக்காரர்கள் ஆகிய பல்வேறு பிரிவை சேர்ந்தவர்களும் அந்த வேலைக்கு ஆதரவு அளித்தனர்.​—⁠வசனங்கள் 1, 8, 9, 32.

[பக்கம் 28, 29-ன் பெட்டி/படங்கள்]

சிலர் வழங்க விரும்பும் வழிகள்

உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்

அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, அதை “உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்​—⁠மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுகின்றனர்.

உலகமுழுவதிலும் உள்ள சபைகள் இத்தொகையை ஒவ்வொரு மாதமும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திற்கு அல்லது உள்ளூர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடை பணத்தை நேரடியாக The Watch Tower Bible and Tract Society of India, G-37, South Avenue, Santacruz, Mumbai 400054 என்ற விலாசத்திற்கு அல்லது உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம். நகைகளை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படும் அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.

திட்டமிட்ட நன்கொடை

நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனைக்கு உட்பட்ட பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:

இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.

வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகளும் நிரந்தர வைப்புகளும் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது மரணத்திற்குப் பிறகு ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டிற்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.

பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டிற்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.

நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டிற்கு உரியதாகும்படி செய்யலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.

உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டிற்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா-வை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.

டிரஸ்டை அனுபவ பாத்தியதையாக குறிப்பிட்டு ஒரு உயில் எழுதும்போது, இந்திய வாரிசுரிமை சட்டம், 1925-⁠ன் பிரிவு 118 சொல்வதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். அது சொல்வதாவது: “ஒருவருக்கு அவரது உடன்பிறந்தாரின் மகனோ மகளோ அல்லது நெருங்கின உறவினர் யாராவது இருந்தால், அவர் தன்னுடைய எந்த சொத்தையும் மத அல்லது அறநிலைய உபயோகத்துக்காக கொடுக்கவோ உயில் எழுதி வைக்கவோ உரிமை கிடையாது; தன்னுடைய மரணத்துக்கு பன்னிரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த உயிலை எழுதியிருந்தால், உயிரோடிருப்பவர்களின் உயில்களை காப்பில் வைக்க அதிகாரம் பெற்ற இடங்களின் பாதுகாப்பில் ஆறு மாதங்களுக்குள் அதை வைத்துவிட்டால் மட்டுமே அந்த உயில் செல்லுபடியாகும்.”

உங்களுடைய உயிலில் ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இந்தியா டிரஸ்டை அனுபவ பாத்தியதையாக நீங்கள் குறிப்பிட விரும்பினால் உயிலில் குறிப்பிட வேண்டிய சொஸைட்டியின் முழுப் பெயரையும் விலாசத்தையும் கீழே காண்க:

Jehovah’s Witnesses of India

927/1, Addevishwanathapura,

Rajanukunte, Bangalore 561 203,

Karnataka.

[பக்கம் 30-ன் பெட்டி]

மனப்பூர்வமாக கொடுப்பதில் உட்பட்டுள்ள அம்சங்கள்

அப்போஸ்தலன் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய தனது கடிதங்களில் மனப்பூர்வமாக கொடுப்பதில் உட்பட்டுள்ள மூன்று முக்கிய அம்சங்களை குறிப்பிட்டார். (1) பண சேகரிப்பைப் பற்றி எழுதுகையில் பவுல் பின்வரும் அறிவுரை கூறினார்: “உங்களில் அவனவன் வாரத்தின் முதல் நாள் தோறும், . . . எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 16:2) ஆகவே, கொடுப்பதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதை கிரமமாக செய்ய வேண்டும். (2) ஒவ்வொருவரும் “தன்தன் வரவுக்குத் தக்கதாக” கொடுக்க வேண்டும் என்றும் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 16:2ஆ) அதாவது, மனப்பூர்வமாக கொடுக்க விரும்புகிறவர் தனது வருமானத்திற்கு ஏற்ப கொடுக்கலாம். மிகக் குறைவாக சம்பாதிக்கும் கிறிஸ்தவர் ஒரு துளி கொடுத்தாலும் யெகோவா அதை மதிக்கிறார். (லூக்கா 21:1-4) (3) “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்றும் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 9:7) உண்மை கிறிஸ்தவர்கள் மனப்பூர்வமாய், சந்தோஷமாக கொடுக்கிறார்கள்.

[பக்கம் 26-ன் படங்கள்]

நெகேமியா உணர்ச்சிகளும் செயல்திறனும் மிக்கவர்

[பக்கம் 30-ன் படங்கள்]

அச்சக வேலைகள், இடருதவிகள், ராஜ்ய மன்ற கட்டுமானம், பயனுள்ள மற்ற சேவைகள் ஆகியவற்றை உலகம் முழுவதிலும் செய்ய மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகள் உதவுகின்றன