Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராஜ்ய மன்ற கதவுகள் யாவருக்காகவும் திறந்தே இருக்கின்றன

ராஜ்ய மன்ற கதவுகள் யாவருக்காகவும் திறந்தே இருக்கின்றன

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

ராஜ்ய மன்ற கதவுகள் யாவருக்காகவும் திறந்தே இருக்கின்றன

தம் சீஷர்களை வெளி ஊழியத்திற்கு பயிற்றுவிக்கையில் ‘வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவிக்கும்படி’ இயேசு கிறிஸ்து அவர்களை ஊக்குவித்தார். (மத்தேயு 10:27, பொது மொழிபெயர்ப்பு) ஆம், அனைவரும் காண வெளியரங்கமாக தங்கள் கிறிஸ்தவ ஊழியத்தை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்த அறிவுரையிலுள்ள நியமத்தின் அடிப்படையிலேயே யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையும் பகிரங்கமாக நடைபெறுகிறது. இவ்வாறு யாவரறிய நடைபெறுவது எதிர்ப்பை சமாளிக்கவும் சாதகமான விதத்தில் மற்றவர்களின் கவனத்தைக் கவரவும் யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவியது.

யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக் கூட்டங்கள் பொதுமக்கள் யாவரும் கலந்துகொள்வதற்காகவே என்றாலும், தப்பெண்ணங்களால் சிலர் ராஜ்ய மன்றங்களுக்கு வர தயங்குகிறார்கள். பின்லாந்தைப் பொறுத்தவரை இது முற்றிலும் உண்மை. மற்றவர்களோ புதிய இடங்களுக்கு செல்ல கூச்சப்படுகிறார்கள். பொதுவாக, ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்டப்படுகையில் அல்லது ஒரு மன்றம் புதுப்பிக்கப்படுகையில் பார்வையாளர்கள் தினம் (open house) ஏற்பாடு செய்யப்படுகிறது. ராஜ்ய மன்றத்திற்கு வந்து யெகோவாவின் சாட்சிகள் செயல்படும் விதத்தை அறிந்துகொள்ளும்படி அக்கம்பக்கத்தாரை அழைப்பதற்கு விசேஷித்த முயற்சி எடுக்கப்படலாம்.

ஓர் இடத்தில் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய புதிய ராஜ்ய மன்றத்திற்காக பார்வையாளர்கள் தினத்தை ஏற்பாடு செய்த அதே நாளில் விசேஷித்த பத்திரிகை அளிப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். வயதான ஒருவரை இரண்டு யெகோவாவின் சாட்சிகள் சந்தித்தபோது, அவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை விரும்பி படிப்பதாக சொன்னார். இந்த சகோதரர்கள், பார்வையாளர்கள் தினத்தைப் பற்றி சொல்லி அவரை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறினார்கள். அவர்களோடு வருவதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அவருடைய மனைவி, “என்னை விட்டுவிட்டு போயிடாதீங்க!” என குரல் கொடுத்தார்.

ராஜ்ய மன்றத்திற்குள் நுழைந்ததும் சுற்றும்முற்றும் பார்த்த அவர், “இருட்டாகவே இல்லையே. அழகாகவும் வெளிச்சமாகவும்தானே இருக்கிறது. ராஜ்ய மன்றம் என்றால் அது இருண்டுபோய் கிடக்கும் என்றுதானே நான் கேள்விப்பட்டிருக்கேன்!” என்றார். அந்தத் தம்பதியினர் கொஞ்ச நேரம் அங்கே இருந்து, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சில பிரசுரங்களையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

ராஜ்ய மன்ற பிரதிஷ்டையின் போது பார்வையாளர்கள் தினத்தை ஏற்பாடு செய்திருப்பதை உள்ளூர் செய்தித் தாளில் பிரசுரிக்க ஒரு சபை விரும்பியது. அந்நிகழ்ச்சியை பற்றிய தகவலை செய்தித் தாளின் தலைமை பதிப்பாளர் பெற்றதும், அது சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதி தரும்படி கேட்டார். அவ்வாறே சகோதரர்களும் எழுதிக் கொடுத்தனர், கொஞ்ச நாட்களுக்கு பின்பு, செய்தித் தாளில் அரைப் பக்கத்திற்கு அந்த நிகழ்ச்சியையும் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபை செயல்படும் விதத்தையும் பற்றி சாதகமான ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது.

அந்தக் கட்டுரை வெளிவந்த பின்பு, ஒரு வயதான சகோதரி பக்கத்து வீட்டில் வசித்த பெண்மணியை சந்தித்தார். “இன்றைய செய்தித்தாளில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒரு அருமையான கட்டுரை வெளிவந்திருக்கிறதே!” என்று அந்த பெண்மணி சொன்னார். அப்போது அந்த சகோதரி அவருக்கு சாட்சி கொடுத்தார், பிற்பாடு இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற சிற்றேட்டையும் அளித்தார்.

புதிய ராஜ்ய மன்றங்களில் பார்வையாளர்கள் தினம், பிரதிஷ்டை போன்றவற்றை ஏற்பாடு செய்வது, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தவறான கருத்துக்களை தெளிவாக்குகிறது; அதோடு கூட்டங்களில் கலந்துகொள்ள இன்னும் அநேகருக்கு அழைப்பு கொடுக்க பிரஸ்தாபிகளை ஊக்குவிப்பதால் அவர்களுக்கும் தூண்டுதலளித்துள்ளது. ஆம், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களின் கதவுகள் யாவருக்காகவும் திறந்தே இருப்பதை பின்லாந்து நாட்டினர் உட்பட பிற நாட்டவரும் அறிந்திருக்கிறார்கள்.