வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கொஞ்சம் பணம்தான் என்றால் பந்தயம் கட்டுவது தவறா?
சூதாட்டத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தை விலாவாரியாக விவரிப்பதில்லை, ஆனால் எல்லா விதமான சூதாட்டமும் பைபிள் நியமங்களுக்கு முரணானது என்பதை அது தெளிவாக காட்டுகிறது. * உதாரணமாக, சூதாட்டம் பேராசையை தூண்டுகிறது என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படும் உண்மை. இது ஒன்றே கிறிஸ்தவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது, ஏனென்றால் “பேராசையுடையோர்” கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று பைபிள் குறிப்பிடுகிறது; மேலும் இது விக்கிரகாராதனையோடு சம்பந்தப்படுத்தப்படுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10, பொது மொழிபெயர்ப்பு; கொலோசெயர் 3:5.
தற்பெருமையையும் ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மையையும், அதாவது எப்படியேனும் வெற்றி பெற வேண்டுமென்ற வெறியையும் சூதாட்டம் தூண்டுகிறது. “தற்பெருமை கொள்ளாமலும், ஒருவருக்கொருவர் போட்டியை தூண்டாமலும் ஒருவருக்கொருவர் பொறாமைப்படாமலும் இருப்போமாக” என்று எழுதியபோது அப்போஸ்தலன் பவுல் இப்படிப்பட்ட காரியங்களுக்கு எதிராக எச்சரித்தார். (கலாத்தியர் 5:26, NW) மேலும், மூடநம்பிக்கையாகிய அதிர்ஷ்டத்தை சார்ந்திருக்கும்படி சூதாட்டம் சிலரை உற்சாகப்படுத்துகிறது. தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டும் என்ற ஆசையில், சூதாடிகள் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் முன்னேற்றுவிக்கிறார்கள். ‘அதிர்ஷ்டம் என்னும் தேவதைக்குப் படைப்புப் போட்டு, விதி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை வார்த்த’ உண்மையற்ற இஸ்ரவேலரை இவர்கள் நமக்கு நினைப்பூட்டுகிறார்கள்.—ஏசாயா 65:11, திருத்திய மொழிபெயர்ப்பு.
வெறித்தனமான போட்டியாக இல்லாமல் உறவினர்கள் அல்லது நண்பர்கள் மத்தியில் சீட்டாட்டத்தில் அல்லது ‘போர்டு கேம்’களில் சிறுதொகையை பந்தயம் கட்டி விளையாடுவதில் எந்தத் தீங்குமில்லை என சிலர் நியாயம் கற்பிக்கலாம். சிறுதொகையை பந்தயம் கட்டி விளையாடுபவர் தன்னை ஒரு பேராசைக்காரராகவோ தற்பெருமைக்காரராகவோ போட்டிபோடுகிறவராகவோ மூடநம்பிக்கை உடையவராகவோ கருதுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் யாரோடு சூதாடுகிறாரோ அவருக்கு இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? சூதாட்ட வெறியர்கள் பெரும்பாலோர் ‘விளையாட்டுக்காக’ சிறுசிறு தொகையைத்தான் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்தார்கள். (லூக்கா 16:10) எந்தவித தீங்குமற்ற ஒன்று என தோன்றியதே அவர்களுடைய விஷயத்தில் பெரும் தீங்கை விளைவிப்பதாக மாறியது.
முக்கியமாக பிள்ளைகளுடைய விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது. சிறு காரியத்தில் பந்தயம் கட்டி வெற்றி பெறுகையில் கிடைக்கும் குதூகலம் பெரிய தொகையை பந்தயம் கட்ட தங்களைத் தூண்டியிருப்பதாக பிள்ளைகள் பலர் உணர்ந்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:10) சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் பலர் சிறுவயதில் “நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து விளையாட்டுகளில் அல்லது சீட்டாட்டத்தில் சிறுதொகையை பந்தயம் கட்டுவதன் மூலம்” இந்தப் பழக்கத்தில் ஈடுபட ஆரம்பித்ததாக ஐக்கிய மாகாணங்களில் கட்டாய சூதாட்டம் பற்றிய அரிஜோனா கவுன்ஸில் வெளியிட்ட நீண்ட கால ஆராய்ச்சி ஒன்று உறுதிப்படுத்துகிறது. “குடும்பத்தாருடன் அல்லது நண்பர்களுடன் பழக்கமாக சீட்டாடுவதன் மூலம் வீட்டிலேயே சிறுபிள்ளைகள் சூதாட ஆரம்பிக்கிறார்கள்” என மற்றொரு அறிக்கை சொல்கிறது. “சூதாடும் சிறுபிள்ளைகளில் முப்பது சதவீதத்தினர் பதினோரு வயதாவதற்கு முன்பே சூதாட ஆரம்பித்தார்கள்” என அந்த அறிக்கை மேலும் சொல்கிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையான டீனேஜ் சூதாடிகள் அநேகர் அதற்குத் தேவையான பணத்தை குற்றச்செயலில் அல்லது ஒழுக்கயீனமான காரியத்தில் ஈடுபடுவதன் மூலம் சம்பாதிக்கிறார்கள் என ஏன் மிக அதிகமாக மக்கள் சூதாடுகிறார்கள்—சூதாட்ட வெறியும் அடிமைத்தனமும் என்ற ஆங்கில நூல் சொல்கிறது. எந்த தீங்குமற்றது என முதலில் தோன்றிய ஒன்று எவ்வளவு பரிதாபகரமான விளைவை ஏற்படுத்துகிறது!
ஏற்கெனவே பல கண்ணிகளும் சோதனைகளும் நிறைந்த ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருவதால், ஏன் தேவையில்லாமல் மற்றொன்றை இழுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும்? (நீதிமொழிகள் 27:12) சூதாடுவது—சிறுபிள்ளைகள் பக்கத்தில் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, சிறுதொகையாக இருந்தாலும்சரி பெருந்தொகையாக இருந்தாலும்சரி—ஆவிக்குரிய தன்மையை ஆபத்திற்குள்ளாக்குகிறது, ஆகவே அதை தவிர்க்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக சீட்டாடுகிற அல்லது போர்டு கேம்கள் விளையாடுகிற கிறிஸ்தவர்கள் ஸ்கோர்களை பென்சிலில் குறித்துக்கொள்வது அல்லது எந்த ஸ்கோரும் இல்லாமல் ஜாலிக்காக விளையாடுவது நல்லது. தங்களுடைய ஆவிக்குரிய தன்மையையும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடைய ஆவிக்குரிய தன்மையையும் பற்றி அக்கறைகொள்கிற ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் சூதாடும் பழக்கத்தை—அது சிறுதொகையாக இருந்தாலும்சரி—தவிர்க்கிறார்கள்.
[அடிக்குறிப்பு]
^ பாரா. 3 சூதாட்டம் என்பது “ஒரு விளையாட்டில், நிகழ்ச்சியில், எதிர்பாராமல் கிடைக்கும் பலனின்மீது பந்தயம் கட்டுதல்” என உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா வரையறுக்கிறது. அது மேலும் சொல்கிறது: “சூதாடுபவர்கள் அல்லது விளையாடுபவர்கள் பொதுவாக . . . லாட்டரிகள், சீட்டாட்டம், பகடை காய்களை உருட்டுதல் போன்ற குருட்டுத்தனமான பந்தயங்களில் பணம் கட்டுகிறார்கள்.”