Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்கள் ஏன் சர்ச்சுக்குப் போகிறார்கள்

அவர்கள் ஏன் சர்ச்சுக்குப் போகிறார்கள்

அவர்கள் ஏன் சர்ச்சுக்குப் போகிறார்கள்

“அமெரிக்காவிலுள்ள பிரஸ்பிட்டேரியன் மதத்தவருடைய எண்ணிக்கையைவிட கொரிய குடியரசிலுள்ள பிரஸ்பிட்டேரியன் மதத்தவருடைய எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்.” நியூஸ்வீக் பத்திரிகையில் வெளிவந்த இந்த அறிக்கை வாசகர் பலரை வியக்க வைத்திருக்கலாம்; ஏனெனில் பெரும்பாலும் கன்ஃபூசியர் அல்லது புத்த மதத்தவர் வாழும் நாடுதான் கொரியா என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அங்கு சுற்றுலா சென்றால் ஏகப்பட்ட “கிறிஸ்தவ” சர்ச்சுகள் இருப்பதை இன்று ஒருவர் பார்க்கலாம், சிவப்பொளியில் பளிச்சிடும் சிலுவைகளை வைத்தே அவற்றை கண்டுபிடித்து விடலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் பைபிளை கையில் வைத்துக்கொண்டு இரண்டிரண்டு பேராக அல்லது மும்மூன்று பேராக ஆண்களும் பெண்களும் சர்ச்சுக்கு போகும் காட்சியை சகஜமாக பார்க்கலாம். கொரிய மக்களில் ஏறக்குறைய 30 சதவீதத்தினர் கத்தோலிக்க சர்ச்சுக்கோ புராட்டஸ்டன்ட் சர்ச்சுக்கோ செல்கிறார்கள்; இது அங்குள்ள புத்த மதத்தினரின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை 1998-⁠ல் எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது.

இப்போதெல்லாம் இவ்வளவு அதிகமான மக்கள் ஒழுங்காக சர்ச்சுக்குப் போவதை பார்ப்பது எங்குமே அபூர்வம்தான். இருந்தாலும் கொரியாவில் மட்டுமல்ல, பிற ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா, லத்தீன்-அமெரிக்கா போன்ற நாடுகளிலும்கூட இதுதான் நடக்கிறது. இன்று பெரும்பாலானவர்கள் மதத்தின் மீது ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருக்கும் அதேசமயத்தில், ஏன் அநேகர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள்? அவர்கள் ஏன் சர்ச்சுக்கு போகிறார்கள்?

ஒரு சுற்றாய்வு காட்டுவது இதுதான்: சர்ச்சுக்கு போகும் கொரிய மக்களில் பாதிக்கும் அதிகமானோர் மன நிம்மதிக்காக போகிறார்கள்; சுமார் மூன்றில் ஒரு பகுதியினரோ இறந்த பின்பு நித்திய வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்கிறார்கள்; பத்தில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமும், செல்வமும், வெற்றியும் கிடைக்குமென நினைத்து செல்கிறார்கள்.

சீனாவில் அநேகர் ஏன் சர்ச்சுக்குத் திரண்டு செல்கிறார்கள்? முதலாளித்துவ கொள்கைகள் கம்யூனிஸ கொள்கையின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவருவதால் ஏற்பட்ட ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பும் எதையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஆசையிலேயே சர்ச்சுக்குச் செல்கிறார்கள். சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பைபிள்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன; மா சே-துங் எழுதிய சிறிய சிவப்புநிற புத்தகத்தை மக்கள் எந்தளவுக்கு ஆர்வமாக படித்தார்களோ அந்தளவுக்கு பைபிளையும் ஆர்வமாக படிப்பதாகத் தோன்றுகிறது.

பிரேசிலை சேர்ந்த கத்தோலிக்கர் சிலர், முக்கியமாக இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றிய வாக்குறுதியில் திருப்திப்படுவதில்லை, ஆனால் அப்படிப்பட்ட வாழ்க்கையை இப்போதே அடையத் துடிக்கிறார்கள். டூடூ என்ற செய்தி பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “அன்று 70-களில், விடுதலை இறையியல் மக்களை தூண்டிவிட்டதென்றால், இன்று சுகபோக இறையியல் மக்களை தூண்டிவிடுகிறது.” ‘சர்ச்சில் உங்களுக்கு பிடித்த விஷயம் எது?’ என பிரிட்டனில் சர்ச்சுக்கு செல்வோரிடம் ஒரு சுற்றாய்வின்போது கேட்கப்பட்டது; கூட்டுறவுக்காகத்தான் செல்கிறோம் என பெரும்பாலோர் சொன்னார்கள்.

நிறைய பேருக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை இருந்தாலும், அநேகர் தற்கால வாழ்க்கையைப் பற்றித்தான் அதிகமாக யோசிக்கிறார்கள், எதிர்காலத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ அவ்வளவாக யோசிப்பதில்லை என்பதையே இவையாவும் காட்டுகின்றன. கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு சரியான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? பதில் அடுத்த கட்டுரையில்.