Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் நம்பிக்கைக்கு சரியான காரணம்

கடவுள் நம்பிக்கைக்கு சரியான காரணம்

கடவுள் நம்பிக்கைக்கு சரியான காரணம்

தங்களுடைய கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்காததால்தான் அநேகர் சர்ச்சுக்கு போவதை நிறுத்திவிடுகிறார்கள் என சர்ச்சை விட்டு இளைஞர்கள் வெளியேறுவதற்கு 31 காரணங்கள் என்ற கொரிய புத்தகம் அடித்துக் கூறுகிறது. உதாரணமாக, ‘கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏன் கஷ்டம் வருகிறது? சர்ச் போதிக்கும் நிறைய விஷயங்கள் குழப்பமூட்டுவதாகவும் ஒன்றுக்கொன்று முரணாகவும் இருப்பதால், அதையெல்லாம் நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?’ என அவர்கள் கேட்கிறார்கள்.

பாதிரிமார் திருப்திகரமான பதில்களை அளிக்காததால், தங்கள் கேள்விகளுக்கு பைபிளில் பதில் இல்லை என்ற முடிவுக்கு அநேகர் வந்துவிடுகிறார்கள். ஒரு பாதிரி தன்னுடைய சொந்த கருத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கும்போது, கேட்பவர்கள் பெரும்பாலும் கடவுளையும் அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் தவறாக புரிந்துகொண்டு விடலாம், ஏன், புறக்கணித்தே விடலாம்.

தென் ஆப்பிரிக்காவில் லூத்தரன் சபையை சேர்ந்த ஏபல் என்பவரின் அனுபவம் அதுதான். அவர் சொல்வதாவது: “இறந்துபோகும் எல்லாருமே கடவுளால் ‘எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்’ என சர்ச் போதிக்கிறது. ஆனால் அன்புள்ள ஒரு கடவுள், பிள்ளைகளிடமிருந்து பெற்றோரை ஏன் ‘எடுத்துக்கொள்ள’ வேண்டும் என்பதுதான் எனக்கு புரியவில்லை. ஆப்பிரிக்காவில் நான் வளர்ந்த கிராமத்தில், கோழிக் குஞ்சுகள் வளரும் வரையில் தாய்க் கோழியை நாங்கள் கொல்வதில்லை. அது போலவே ஒரு பசு சினையாக இருந்தால், அது ஈன்று, அதன் குட்டி பால்மறக்கும் வரையில் அந்தப் பசுவை நாங்கள் கொல்வதில்லை. அன்புள்ள கடவுள் மட்டும் மனிதரிடம் ஏன் அதுபோன்று கருணை காட்டுவதில்லை என்பதை என்னால் சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லை.”

கனடா நாட்டைச் சேர்ந்த ஆராம் என்பவருக்கு இதே போன்ற சந்தேகங்கள் இருந்தன. அவர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு 13 வயது இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார். பரலோகத்தில் தம்மோடு நெருக்கமாக இருப்பதற்காகத்தான் கடவுள் அவரை சாகடித்தார் என சவ அடக்கத்தின்போது பிரபல பாதிரி ஒருவர் சொன்னார். ‘நீதிமான்களை கடவுள் நேசிக்கிறார், அதனால்தான் நல்லவர்களை அவர் எடுத்துக்கொள்கிறார்’ என்றும் அவர் சொன்னார். கடவுள் எப்படி இந்தளவுக்கு ஒரு தன்னலவாதியாக இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

பிற்பாடு, ஏபலுக்கும் ஆராமுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து, முடிவாக தங்களுடைய கேள்விகளுக்கு பதில்களையும் கண்டுபிடித்தார்கள். கடவுளை நேசிக்கவும், அவரில் பலமான விசுவாசம் வைக்கவும் ஆரம்பித்தார்கள். கடைசியில் யெகோவா தேவனுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய விசுவாசமுள்ள ஊழியரானார்கள்.

திருத்தமான அறிவு​—⁠கடவுள் நம்பிக்கைக்கு ஒரு திறவுகோல்

இவர்களுடைய அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு பைபிளைப் பற்றி திருத்தமாக அறிந்துகொள்வது மிக முக்கியம் என்பதையே இந்த அனுபவங்கள் காட்டுகின்றன. பூர்வ கால பிலிப்பி பட்டணத்து கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “திருத்தமான அறிவோடும் முழு பகுத்தறிவோடும், உங்கள் அன்பு இன்னும் அதிகமதிகமாக பெருகும்படி நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.” (பிலிப்பியர் 1:9, NW) கடவுள் மீதும் சக விசுவாசிகள் மீதும் வைத்திருக்கும் அன்பை, கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவோடும் அவருடைய சித்தத்தைப் பற்றிய பகுத்துணர்வோடும் சம்பந்தப்படுத்தி பவுல் இங்கு பேசுகிறார்.

இது நியாயமான ஒன்று, ஏனெனில் ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முதலில் அவரைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்; அவரைப் பற்றி எந்தளவுக்கு முழுமையாக அறிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவர் மீது நம் நம்பிக்கை அதிகமாகும். அவ்வாறே கடவுள் மீது நம்பிக்கை வைக்க நாம் தூண்டப்படுவதற்கு அவரைப் பற்றிய திருத்தமான அறிவு நமக்கு அவசியம். “விசுவாசம் என்பது நம்பப்படும் விஷயங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய மெய்ப்பிப்பு” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 11:1, NW) பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெறாமல் கடவுளில் நம்பிக்கை வைப்பது, சீட்டுகளை வைத்து கட்டப்பட்ட வீடு போலிருக்கும். ‘ஃபூ . . .’ என்று ஊதினால் போதும் அது விழுந்துவிடும்.

மனிதர் ஏன் மரிக்கின்றனர்? என்ற கேள்வி ஏபலையும் ஆராமையும் ரொம்ப காலமாகவே குழப்பிக்கொண்டிருந்தது. இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிளைப் படித்தால் நீங்கள் பதில்களை கண்டடையலாம். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, . . . எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” என பைபிள் விளக்குகிறது. (ரோமர் 5:12) ஆகவே தம்முடன் இருப்பதற்காக மனிதரை கடவுள் எடுத்துக்கொள்வதால் அல்ல, ஆனால் ஆதாம் பாவம் செய்ததாலேயே மனிதர் வயதாகி மரிக்கிறார்கள். (ஆதியாகமம் 2:16, 17; 3:6, 17-19) யெகோவா தேவன் அளிக்கும் மெய்யான நம்பிக்கையைப் பற்றியும் பைபிள் தெரிவிக்கிறது. தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்து மூலம் பாவமுள்ள மனிதகுலத்திற்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கையை அவர் அளிக்கிறார்.​—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.

உயிர்த்தெழுதலைப் பற்றி புரிந்துகொள்வதற்கு, இயேசு உயிர்த்தெழுப்பிய பலருடைய உதாரணங்கள் பைபிளில் உள்ளன. (லூக்கா 7:11-17; 8:40-56; யோவான் 11:17-45) இந்த பைபிள் பதிவுகளை நீங்கள் வாசிக்கையில், உயிர்த்தெழுப்பப்பட்டவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் அடைந்த மகிழ்ச்சியையும் பூரிப்பையும் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கடவுளைப் புகழ்வதற்கும் இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கும் தூண்டப்பட்டதையும் கவனியுங்கள்.

கடவுளையும் அவரது நோக்கங்களையும் பற்றிய திருத்தமான அறிவு இன்றும் அதேபோன்ற தாக்கத்தை மக்கள் மீது ஏற்படுத்தலாம். முக்கிய கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைக்காமல் ஒரு காலத்தில் பலர் குழம்பிப் போயிருந்தனர், மனம் பாரமடைந்திருந்தனர், தடுமாற்றமும் அடைந்திருந்தனர். ஆனால் பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும், தங்களுடைய கேள்விகளுக்கு பதில்களை கண்டடைந்தனர். அது அவர்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.

கடவுள் மீது அன்பு—⁠அவரை சேவிப்பதற்கு பிரதான காரணம்

கடவுள் மீது விசுவாசம் வைப்பதற்கு திருத்தமான அறிவு மிக முக்கியமாக இருந்தாலும், அவருக்கு கீழ்ப்படிந்து அவரை சேவிக்க தூண்டப்படுவதற்கு அது மட்டுமே போதாது. கடவுள் கொடுத்த கட்டளைகளிலே பிரதான கட்டளை எதுவென்று இயேசுவிடம் கேட்கப்பட்டபோது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக” என்று இயேசு சொன்னார். (மாற்கு 12:30) இயேசு சொன்ன விதமாக ஒருவர் கடவுளை நேசிப்பாரானால், அவர் கடவுளுக்கு கீழ்ப்படியவும் சேவை செய்யவும் அதிக மனமுள்ளவராக இருப்பார். உங்களுடைய விஷயத்தில் இது உண்மையா?

ரேச்சல் என்பவர் கொரியாவில் பல பத்தாண்டுகள் மிஷனரியாக சேவை செய்தவர்; தான் கடவுள் மீது விசுவாசம் வைத்திருப்பதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்: “யெகோவா தமது படைப்புகளிடம் காட்டும் தாராள குணத்தையும் தமது ஜனங்களிடம் காட்டும் மன்னிக்கும் குணத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்; அதுமட்டுமல்ல, நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை தெரிவிப்பதன் மூலம் நாம் பயனடைய அவர் விரும்புவதையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். இப்படி செய்வதால் கடவுள் மீதுள்ள அன்பு அதிகமாகிறது. இந்த அன்பு அவருக்கு சேவை செய்யும் ஆசையை என்னில் தூண்டிவிடுகிறது.”

ஜெர்மனியைச் சேர்ந்த மார்த்தா 48 ஆண்டுகள் யெகோவாவை சேவித்திருக்கிறார். விதவையாக இருக்கும் இவர் கூறுவதாவது: “நான் ஏன் யெகோவாவை சேவிக்கிறேன் தெரியுமா? ஏனென்றால் நான் அவரை நேசிக்கிறேன். சாயங்காலந்தோறும் யெகோவாவிடம் ஜெபத்தில் பேசுகிறேன், அவருடைய எல்லா ஆசீர்வாதங்களுக்கும், முக்கியமாக மீட்கும் பலிக்கும் நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று அவரிடம் சொல்கிறேன்.”

ஆம், கடவுள் மீதுள்ள அன்பினால் இருதயப்பூர்வமாக அவரை சேவிக்க நாம் விரும்புகிறோம். ஆனால் அத்தகைய அன்பை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? கடவுள் மீது அன்பை வளர்த்துக்கொள்வதற்கு மிகவும் வலிமையான தூண்டுகோலாக அமைவது, அவர் நம்மீது காண்பித்துள்ள அன்புக்கு ஆழ்ந்த போற்றுதல் காட்டுவதாகும். பைபிளில் காணப்படும் மனதைத் தொடும் இந்த நினைப்பூட்டுதலை கவனியுங்கள்: “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”​—1 யோவான் 4:8-10.

இந்த அன்பு எவ்வளவு பெரிது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? பாய்ந்தோடும் நீரோடையில் நீங்கள் மூழ்கிவிடும் நிலையில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். தன் உயிரையே பணயம் வைத்து ஒருவர் உங்களை காப்பாற்றி விடுகிறார். அப்படிப்பட்டவரை நீங்கள் மறந்து விடுவீர்களா அல்லது அவருக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருப்பீர்களா? அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்ய அல்லவா நீங்கள் தயாராயிருப்பீர்கள்? தம் குமாரன் இயேசு கிறிஸ்துவை மீட்கும் பலியாக அளிப்பதன் மூலம் கடவுள் காண்பித்த அன்பு அதையும்விட பன்மடங்கு ஈடிணையற்றது. (யோவான் 3:16; ரோமர் 8:38, 39) கடவுளுடைய அன்பு உங்கள் இருதயத்தை தொடும்போது, முழு இருதயத்தோடு அவரை நேசித்து அவருக்கு சேவை செய்ய நீங்கள் தூண்டப்படுவீர்கள்.

ஆசீர்வாதங்கள்​—⁠இன்றும் என்றும்

கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு அவர் மீதுள்ள அன்பே பிரதான காரணமாக இருக்க வேண்டுமென்றாலும், தம்மை சேவிப்போருக்கு அவர் பலனளிக்கிறார் என்பதை அறிவது நம் மனதை நெகிழ வைக்கிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார்.​—எபிரெயர் 11:6.

கடவுளை நேசித்து அவருக்கு கீழ்ப்படிகிறவர்கள் உண்மையிலேயே அவரால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். பைபிள் நியமங்களை பின்பற்றுவதன் மூலம் அநேகர் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 23:20, 21; 2 கொரிந்தியர் 7:1) நேர்மை, உழைப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட பைபிள் நியமங்களை பின்பற்றுபவர்களின் முதலாளிகள் அவர்களை நம்புகிறார்கள்; அதனால் அவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு அதிகமாக கிடைக்கிறது. (கொலோசெயர் 3:23) கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதால் கடும் சோதனைமிக்க சூழ்நிலைகளிலும்கூட மன சமாதானத்துடன் வாழ்கிறார்கள். (நீதிமொழிகள் 28:25; பிலிப்பியர் 4:6, 7) எல்லாவற்றையும்விட, பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் விரைவில் நித்திய வாழ்க்கை வாழ்வதை முழு நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள்.​—சங்கீதம் 37:11, 29.

யெகோவாவிடமிருந்து இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறவர்கள் அவரைப் பற்றி எப்படி உணருகிறார்கள்? கனடாவைச் சேர்ந்த ஜாக்கலன் என்ற பெண்மணி கடவுளுக்கு தன் போற்றுதலை இவ்வாறு தெரிவிக்கிறார்: “கடவுள் எப்போதுமே நமக்கு எவ்வளவோ நல்ல நல்ல ஆசிகளை தருகிறார், நித்திய வாழ்க்கை எனும் உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறார்.” முன்னால் குறிப்பிடப்பட்ட ஏபல் என்பவர் தன்னுடைய உணர்ச்சிகளை இப்படியாக விவரிக்கிறார்: “பரதீஸ் பூமியில் நித்திய காலத்திற்கு வாழ்வதைப் பற்றி இதற்கு முன் நான் கேள்விப்பட்டதே இல்லை, அதில் வாழ ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு பரதீஸ் வராவிட்டாலும்கூட கடவுளுக்கு சேவை செய்வதன் மூலம் அவரிடம் அன்பு காட்டுவதே என் விருப்பமாக இருக்கும்.”

நீங்களும் மெய்யான விசுவாசம் வைக்கலாம்

‘சேனைகளின் யெகோவாவே உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதி’ என பைபிள் கூறுகிறது. (எரேமியா 11:20) ஆம், நம் அடிமனதில் மறைந்திருப்பவற்றை யெகோவா ஆராய்ந்தறிகிறார். கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பதற்கான உள்நோக்கங்களை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். கடவுளைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் காரணமாக கடந்த காலத்தில் நாம் தவறான காரியங்களை செய்திருக்கலாம். ஆனால் பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு நம் படைப்பாளர் யெகோவா தேவனுடன் சரியான உறவை வைத்துக்கொள்ள உதவுகிறது.​—1 தீமோத்தேயு 2:3, 4, NW.

கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை மற்றவர்கள் பெற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்கள். அதற்காக அவரவர் வீடுகளிலேயே இலவசமாக பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். (மத்தேயு 28:20) இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் பலர், கடவுளை நேசித்து அவர் மீது உண்மையான விசுவாசத்தை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பைபிள் படிப்பின் உதவியால், “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்” அவர்கள் பெற்றிருக்கிறார்கள்; ஆபத்துமிக்க இந்தக் காலத்தில் ‘பயமின்றி நடக்க’ இது அவர்களுக்கு உதவுகிறது. (நீதிமொழிகள் 3:21-23, NW) மிக முக்கியமாக, எதிர்காலத்தைப் பற்றிய ‘நிலையான, உறுதியான’ நம்பிக்கையை மனதில் வைத்திருக்கிறார்கள். (எபிரெயர் 6:19) நீங்களும்கூட மெய்யான விசுவாசத்தை உடையவர்களாக இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவிக்கலாம்.

[பக்கம் 6-ன் பெட்டி]

மனதைக் குழப்பிய கேள்விகள்

“டாக்டருக்கு படிக்கும் ஒரு மாணவனாக ஆஸ்பத்திரியில் பயிற்சி பெற்றுவந்த காலத்தில், வியாதியாலும் பேரழிவுகளாலும் நல்லவர்கள் வேதனையில் துடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். கடவுள் ஒருவர் இருந்தால் ஏன் இதெல்லாம் நடக்கிறது? மதம் என்பது மன நிம்மதி பெறுவதற்கான ஒரு வழி மட்டும்தானா?”​—⁠கொரியாவைச் சேர்ந்த முன்னாள் பிரஸ்பிட்டேரியன் மதத்தவர்.

“குடிகாரராக இருந்த என் அப்பா இறந்துவிட்டார். அவர் நரகத்துக்கு போயிருப்பாரா அல்லது பரலோகத்துக்கு போயிருப்பாரா என்று அடிக்கடி நான் யோசித்ததுண்டு. செத்துப் போனவர்களையும் எரிநரகத்தையும் பற்றிய நினைப்பே என்னை கதிகலங்க வைத்தது. நித்தியமாக அவஸ்தைப்படும்படி ஒருவரை நரகத்தில் தள்ள அன்பான கடவுளுக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ என்று எனக்கு புரியவில்லை.”​—⁠பிரேசிலை சேர்ந்த முன்னாள் கத்தோலிக்கர்.

“பூமிக்கும் மனிதருக்கும் என்ன எதிர்காலம் இருக்கிறது? மனிதர் நித்திய காலமாக வாழ்வது எப்படி? மெய்யான சமாதானத்தை எப்படி பெறுவார்கள்?”​—⁠ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் கத்தோலிக்கர்.

“மறுபிறவியைப் பற்றிய போதனை அர்த்தமுள்ள ஒன்றாக எனக்குப் படவில்லை. மிருகங்கள் கடவுளை வழிபடுவதில்லை; அப்படியிருக்கும்போது ஏதோ ஒரு காரணத்தின் நிமித்தம் பாவங்களுக்கு தண்டனையாக நீங்கள் அடுத்த ஜென்மத்தில் ஒரு மிருகமாக பிறந்தால், அதிலிருந்து பாவ விமோசனம் பெற்று, மேம்பட்ட ஒரு நிலையை நீங்கள் எவ்வாறு அடைய முடியும்?”​—⁠தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இந்து.

“கன்ஃபூசிய மதத்தை சேர்ந்த குடும்பத்தில் நான் வளர்ந்தேன். முன்னோர்களை சாந்தப்படுத்துவதற்காக செய்யப்படும் சடங்குகளில் நான் ஈடுபட்டதுண்டு. அச்சமயத்தில் அவர்களுக்கு படையல் வைக்கும்போதும், தாழ குனிந்து கும்பிடும்போதும் செத்துப்போன முன்னோர்கள் அந்தப் படையலை சாப்பிடுவார்களா, நாம் கும்பிடுவதை பார்ப்பார்களா என்றெல்லாம் நான் நினைத்ததுண்டு.”​—⁠கொரியாவைச் சேர்ந்த முன்னாள் கன்ஃபூசிய மதத்தவர்.

இவர்கள் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படித்தபோது தங்களுடைய கேள்விகளுக்கான பதில்களை கண்டடைந்தார்கள்.