Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சகலவித நற்கிரியையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்’

‘சகலவித நற்கிரியையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்’

‘சகலவித நற்கிரியையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்’

“துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், . . . அவர்களுக்கு நினைப்பூட்டு.” (தீத்து 3:1, 2) சக விசுவாசிகளுக்கு இந்த வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதியபோது எந்த நற்கிரியையை தனது மனதில் கொண்டிருந்தார்? பைபிள் அறிஞர் ஈ. எஃப். ஸ்காட் நற்கிரியைகளில் ஒன்றை சுட்டிக் காட்டி இவ்வாறு கூறினார்: “கிறிஸ்தவர்கள் அதிகாரங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமல்லாமல், எந்த நற்கிரியையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். . . . அவசியம் ஏற்படும்போது, சமுதாயத்தின் நலனில் அக்கறை காட்டுவதில் கிறிஸ்தவர்கள் முதன்மையானவர்களாய் திகழ வேண்டும். தீ விபத்துகளும், கொள்ளை நோய்களும், பல்வகை ஆபத்துக்களும் சதா ஏற்பட்டு வரலாம்; இப்படிப்பட்ட சமயத்தில் நல்ல குடிமக்கள் யாவரும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய விரும்ப வேண்டும்.”

கடவுளுடைய சட்டங்களுடன் முரண்படாமலிருக்கும் பட்சத்தில், சமூக நலப் பணிகள் சிலவற்றில் கிறிஸ்தவர்கள் பங்குகொள்கிறார்கள். (அப்போஸ்தலர் 5:29) உதாரணமாக, உள்ளூரிலுள்ள தீயணைப்புத் துறையின் அறிவுரையைப் பின்பற்றி, ஜப்பானில் எபினாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் வருடத்திற்கு ஒருமுறை தீயணைப்பு பயிற்சி நடத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், உள்ளூர் தீயணைப்புத் துறை பிரதிநிதியால் வழங்கப்படும் அறிவுரைகளை செவிகொடுத்துக் கேட்பதற்கு பெத்தேல் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றுகூடி வருகிறார்கள்.

அதோடு, தீ விபத்துகளைத் தடுப்பது சம்பந்தமாக விழிப்புணர்வூட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் கண்காட்சியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் கிளை அலுவலகம் உள்ளூர் அதிகாரிகளோடு ஒத்துழைத்து வருகிறது. அந்தக் கண்காட்சியில், அந்நகரத்திலுள்ள கம்பெனிகளும் நிறுவனங்களும் தீயணைக்கவும் தீயை கட்டுப்படுத்தவும் தயாராயிருப்பதை வெளிக்காட்டுகிறார்கள். கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்களுடைய திறமைக்கும் ஒத்துழைப்புக்கும் அடிக்கடி பாராட்டு கிடைத்துள்ளது. 2001-⁠ல், அவர்களுக்கு கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது. ஆம், தீ விபத்துகளின்போது உயிர் காக்கக்கூடிய நற்கிரியையைச் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மதிப்புமிக்க சேவை

ஆனால் யெகோவாவின் சாட்சிகள் மிக முக்கியமான ஒருவகை நற்கிரியையில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்கள், அதுவும் உயிர் காக்கும் வேலை. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக அக்கம்பக்கத்தாரை தவறாமல் சந்திக்கும் வேலை அது. (மத்தேயு 24:14) வாழ்க்கையின் தரத்தை இப்பொழுதே முன்னேற்றுவிப்பதற்கும், சமாதானம் பாதுகாப்பு நிலவுகிற ஓர் உலகில் நித்திய ஜீவனை பெறும் நம்பிக்கையை கொண்டிருப்பதற்கும் ஜனங்கள் பைபிள் நியமங்களை கற்றுக்கொண்டு அவற்றை கடைப்பிடிக்க சாட்சிகள் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய இந்தச் சேவையின் மதிப்பு சிலருக்கு புரியாமல் இருக்கலாம்; அவர்கள் சாட்சிகளை தொல்லையாக கருதலாம். ஆனால் கனடாவிலுள்ள கியுபெக் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷான் கிரேப்போ வித்தியாசமான அபிப்பிராயத்தை உடையவராயிருந்தார். கியுபெக்கிலுள்ள ப்லேன்வில்லின் நகர துணை விதி ஒன்றைக் குறித்து யெகோவாவின் சாட்சிகள் ஆட்சேபணை தெரிவித்திருந்தார்கள். அந்தத் துணை விதியின்படி, அவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களை சந்திப்பதற்கு அனுமதி தேவைப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பில், நீதிபதி கிரேப்போ இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய சந்திப்பு ஒரு கிறிஸ்தவ சமுதாய சேவை; . . . படிக்க விருப்பமுள்ள பிரஜைகளுக்கு சாட்சிகளால் கொடுக்கப்படும் பிரசுரங்கள் முக்கியமான புத்தகங்கள்; மதம், பைபிள், போதைப் பொருட்கள், குடிவெறி, இளைஞர் கல்வி, மண வாழ்க்கை பிரச்சினைகள், விவாகரத்து போன்ற விஷயங்களை அவை அலசுகின்றன.” அந்தத் தீர்ப்பில் அவர் தொடர்ந்து இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளை வியாபாரிகளோடு ஒப்பிடுவது அவர்களை நிந்திப்பதாகவும் இழிவுபடுத்துவதாகவும் புண்படுத்துவதாகவும் அவமதிப்பதாகவும் கருதப்படும் என்றே இந்த நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியுள்ளது.”

அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவி செய்வதன் மூலமும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை அளிப்பதன் மூலமும் யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் வாழும் சமுதாயத்தின் நலனை முன்னேற்றுவிக்க உதவுகிறார்கள். இந்த வேலையை செய்ய பைபிள் அவர்களுக்கு கைகொடுக்கிறது. “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—2 தீமோத்தேயு 3:16, 17.

யெகோவாவின் சாட்சிகள் ‘சகலவித நற்கிரியையும் செய்ய’ எப்படி ‘ஆயத்தமாயிருக்கிறார்கள்’ என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு அவர்கள் தரும் உதவியை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை அழைக்கிறோம்; இவ்வாறு, நீங்கள் வசிக்கும் இடத்திலும் உலகெங்கிலும் அவர்கள் செய்துவருகிற இந்த இன்றியமையாத சமூக சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

[பக்கம் 30, 31-ன் படங்கள்]

அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் முயலுகிறார்கள்

[பக்கம் 31-ன் படம்]

அக்கம்பக்கத்தாருக்கு உதவி செய்வதில் யெகோவாவின் சாட்சிகள் பெயர் பெற்றவர்கள்