Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தண்ணீர் நிற்காத தொட்டிகள்

தண்ணீர் நிற்காத தொட்டிகள்

தண்ணீர் நிற்காத தொட்டிகள்

பைபிள் காலங்களில், தண்ணீர் தொட்டிகள் என்பது நிலத்தடியில் நீரை சேகரித்து வைப்பதற்காக மனிதரால் வெட்டப்பட்ட குழிகள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில், குறிப்பிட்ட சில காலப்பகுதிகளின்போது ஜீவாதாரத் தண்ணீரை பாதுகாத்து வைப்பதற்கு இவையே ஒரே வழியாக இருந்தன.

கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியை தீர்க்கதரிசியாகிய எரேமியா பதிவு செய்தபோது, இந்தத் தொட்டிகளை அடையாள அர்த்தத்தில் குறிப்பிட்டார். “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக் கொண்டார்கள்” என கூறினார்.​—எரேமியா 2:13.

இஸ்ரவேலர் தங்கள் தேவனாகிய யெகோவாவை​—⁠‘ஜீவத் தண்ணீர் ஊற்றை’​—⁠விட்டுவிட்டு, புறமத தேசத்தாரோடு உறுதியற்ற இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டனர்; அது மட்டுமா? கையாலாகாத பொய் தெய்வங்களிடமும் திரும்பினர். ஆனால் எதிர்பார்த்தபடி அவை புகலிடங்களாக இருக்கவில்லை; எரேமியாவின் உவமையின்படி சொன்னால், அவை ஒழுகுகிற தண்ணீர் தொட்டிகளைப் போலத்தான் இருந்தன; அவற்றால் பாதுகாக்கவும் முடியவில்லை, காப்பாற்றவும் முடியவில்லை.​—உபாகமம் 28:⁠20.

இந்த வரலாற்றுப்பூர்வ உதாரணத்திலிருந்து, இன்று நாம் கற்றுக்கொள்வதற்கு பாடம் ஏதாவது இருக்கிறதா? எரேமியாவின் காலத்தில் நித்தியத்தின் தேவனாகிய யெகோவா ஜீவத் தண்ணீரின் ஊற்றாக விளங்கினார், இன்றும்கூட தொடர்ந்து அவ்வாறே விளங்குகிறார். (சங்கீதம் 36:9; வெளிப்படுத்துதல் 4:11) அவரிடமிருந்துதான்​—⁠அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம்​—⁠மனிதர்கள் நித்திய ஜீவனைப் பெற முடியும். (யோவான் 4:14; 17:3) என்றாலும், எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போல, இன்று பெரும்பாலானோர் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை புறக்கணிக்கிறார்கள், அதன் மதிப்பை குலைத்தும் போடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அப்போதைக்கு நன்மைகளை தரும் அரசியல் தீர்வுகள் மீதும், மனிதரின் வெற்றுப் பேச்சுகள் மீதும், கடவுளை அவமதிக்கிற பிரயோஜனமற்ற சித்தாந்தங்கள் மற்றும் தத்துவங்கள் மீதுமே நம்பிக்கை வைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 3:18-20; கொலோசெயர் 2:8) ஆகவே, என்ன தெரிவை செய்ய வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. நீங்கள் எதன் மீது நம்பிக்கை வைப்பீர்கள்? “ஜீவத் தண்ணீர் ஊற்றாகிய” யெகோவாவின் மீதா, அல்லது ‘தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளின்’ மீதா?

[பக்கம் 32-ன் படம்]

இஸ்ரவேல் கல்லறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தாய் தெய்வத்தின் சிறிய, களிமண் உருவச்சிலை

[படத்திற்கான நன்றி]

Photograph taken by courtesy of the British Museum