Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நன்றியுள்ளவர்களாயிருங்கள்”

“நன்றியுள்ளவர்களாயிருங்கள்”

“நன்றியுள்ளவர்களாயிருங்கள்”

“கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் இருதயங்களை ஆளட்டும், . . . நன்றியுள்ளவர்களாயிருங்கள்.”​—கொலோசெயர் 3:15, NW.

1. கிறிஸ்தவ சபைக்கும் சாத்தானின் பிடியிலுள்ள உலகிற்கும் இடையே என்ன வித்தியாசத்தை நாம் கவனிக்கிறோம்?

 உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் 94,600 சபைகளில் நன்றியுணர்வு வெளிக்காட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு கூட்டத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்யப்படுகிறது, அந்த ஜெபங்களில் யெகோவாவுக்கு நன்றியும் தெரிவிக்கப்படுகிறது. வணக்கத்திற்காகவும் மகிழ்ச்சியான கூட்டுறவுக்காகவும் அங்கு வரும் இளைஞர்கள், வயதானவர்கள், புதிய சாட்சிகள், நீண்ட கால சாட்சிகள் என எல்லார் வாயிலிருந்தும் அடிக்கொருதரம் “ரொம்ப நன்றி,” “அதுக்கென்ன பரவாயில்லை” போன்ற வார்த்தைகள் வருவதை கேட்கிறோம். (சங்கீதம் 133:1) ‘தேவனை அறியாதவர்களுக்கும், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்’ மத்தியில் மேலோங்கிக் காணப்படும் சுயநல மனப்பான்மையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது எவ்வளவு வித்தியாசமானது! (2 தெசலோனிக்கேயர் 1:7) ஆம், நன்றிகெட்ட ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை, ஏனெனில் பிசாசாகிய சாத்தானே இவ்வுலத்தின் கடவுளாக இருக்கிறான்; அவன் சுயநலத்தை முன்னேற்றுவிப்பதில் மன்னன்; ஆணவப்போக்கும் கலகத்தனமுமிக்க அவனுடைய மனப்பான்மை மனித சமுதாயம் முழுக்க ஊடுருவியிருக்கிறது.​—யோவான் 8:44; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19.

2. என்ன எச்சரிப்புக்கு நாம் செவிசாய்க்க வேண்டும், என்ன கேள்விகளை நாம் சிந்திக்க இருக்கிறோம்?

2 சாத்தானின் உலகத்தால் நாம் சூழப்பட்டிருக்கிறோம், ஆகவே அதன் மனப்பான்மை நம்மை கறைப்படுத்திவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். முதல் நூற்றாண்டில், எபேசிய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு நினைப்பூட்டினார்: “நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்து கொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” (எபேசியர் 2:2, 3) இன்றுள்ள அநேகரின் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கிறது. அப்படியானால், நாம் எவ்வாறு நன்றியுணர்வை காத்துக்கொள்வது? யெகோவா நமக்கு என்ன உதவியை அளிக்கிறார்? நாம் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை என்னென்ன நடைமுறை வழிகளில் காண்பிக்கலாம்?

நன்றியோடு இருப்பதற்கான காரணங்கள்

3. நாம் எவற்றிற்கெல்லாம் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்?

3 நமக்கு உயிர்கொடுத்த படைப்பாளராகிய யெகோவா தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க கடமைப்பட்டிருக்கிறோம்; குறிப்பாக அவர் நமக்கு அருளியிருக்கும் ஏராளமான பரிசுகளில் சிலவற்றை சிந்திக்கும்போது அவருக்கு எந்தளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணருகிறோம். (யாக்கோபு 1:17) உயிரோடு இருப்பதற்காக அனுதினமும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம். (சங்கீதம் 36:9) திரும்புகிற பக்கமெல்லாம், யெகோவாவின் கைவண்ணத்தின் ஏராளமான அத்தாட்சிகளை, அதாவது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் போன்றவற்றை கவனிக்கிறோம். நம் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான தாதுப்பொருட்களின் பெருவளம், வளிமண்டலத்தில் நேர்த்தியான சமநிலையோடு கலந்திருக்கும் ஜீவாதாரமான வாயுக்கள், இயற்கையில் காணப்படும் சிக்கலான பல சுழற்சிகள் என இவை யாவுமே நம் அன்பான பரலோக தகப்பனுக்கு நாம் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்பதற்கு சான்றளிக்கின்றன. “என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்க வேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்” என தாவீது ராஜா பாடினார்.​—சங்கீதம் 40:⁠5.

4. நம் சபைகளில் நாம் அனுபவிக்கும் சந்தோஷமான கூட்டுறவுக்காக ஏன் யெகோவாவுக்கு நன்றி செலுத்த வேண்டும்?

4 யெகோவாவின் ஊழியர்கள் சொல்லர்த்தமான ஒரு பரதீஸில் தற்போது வாழ்க்கையை அனுபவிக்காவிட்டாலும், ஆவிக்குரிய பரதீஸை அனுபவித்து மகிழ்கிறார்கள். ராஜ்ய மன்றங்களிலும், மாநாடுகளிலும், அசெம்பிளிகளிலும் கடவுளுடைய ஆவியின் கனி சக வணக்கத்தாரில் செயல்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சொல்லப்போனால், மதப்பற்றே இல்லாதவர்களிடம் அல்லது மதத்தைப் பற்றி அதிகம் தெரிந்திராதவர்களிடம் பிரசங்கிக்கும்போது சாட்சிகள் சிலர், கலாத்தியருக்கு அனுப்பிய நிருபத்தில் பவுல் விளக்கிய ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்கள். அதாவது, முதலாவது “மாம்சத்தின் கிரியைகள்” பற்றி வீட்டுக்காரரிடம் சொல்கிறார்கள், பிறகு அதைப் பற்றி அவர்களுடைய கருத்தைக் கேட்கிறார்கள். (கலாத்தியர் 5:19-23) இவையெல்லாம் இன்று மனித சமுதாயத்தை அப்படியே வர்ணிப்பது போல இருப்பதாக பெரும்பாலோர் சட்டென்று ஒத்துக்கொள்கிறார்கள். அதன்பின், கடவுளுடைய ஆவியின் கனியைப் பற்றிய விளக்கத்தை காண்பிக்கும்போதும், அதை அவர்கள் நேரிலேயே பார்ப்பதற்காக உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்கு அழைக்கப்படும்போதும், ‘தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறார்’ என்று அநேகர் உடனடியாக ஒப்புக்கொள்கிறார்கள். (1 கொரிந்தியர் 14:25) இது உள்ளூர் ராஜ்ய மன்றங்களில் மட்டுமே காணப்படுவதில்லை. நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், 60 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளில் யாரை சந்தித்தாலும் அதே மனநிறைவான, மகிழ்ச்சியான மனப்பான்மையைத்தான் பார்ப்பீர்கள். உண்மையிலேயே, இப்படிப்பட்ட கட்டியெழுப்பும் கூட்டுறவுக்காக நாம் யெகோவாவுக்கு நன்றி செலுத்தலாம், ஏனெனில் அவர்தான் தம் ஆவியை அளித்து அதை சாத்தியமாக்குகிறார்.​—செப்பனியா 3:9; எபேசியர் 3:20, 21.

5, 6. கடவுளின் மிகச் சிறந்த பரிசான மீட்கும் பலிக்கு எவ்வாறு நம் நன்றியை காண்பிக்கலாம்?

5 யெகோவா அளித்திருக்கும் மிகச் சிறந்த, பரிபூரணமான பரிசு தம்முடைய மகனான இயேசுவை அளித்ததுதான்; இவர் மூலமாகவே மீட்கும் பலி கொடுக்கப்பட்டது. “தேவன் இவ்வாறு நம்மீது அன்பு செலுத்தினார் என்றால், நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 4:11, NW) ஆம், மீட்கும் பலிக்காக யெகோவாவுக்கு நம் அன்பையும் நன்றியையும் வார்த்தைகளில் சொல்வதன் மூலம் நம்முடைய நன்றியுணர்வை காண்பிப்பதோடு, மற்றவர்கள் மீது அன்பு செலுத்தும் விதத்தில் வாழ்வதன் மூலமும் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்.​—மத்தேயு 22:37-39.

6 பூர்வ இஸ்ரவேல் ஜனங்களுடன் யெகோவா செயல்பட்ட விதத்தை சிந்திப்பதன் மூலம் நன்றி காண்பிப்பதைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். மோசேயின் மூலம் யெகோவா அந்தத் தேசத்திற்கு நியாயப்பிரமாணச் சட்டங்களை கொடுத்திருந்தார்; அதன் வாயிலாக அநேக பாடங்களை மக்களுக்கு கற்பித்தார். “நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்ட”த்திலிருந்து நாம் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம்; அது, “நன்றியுள்ளவர்களாயிருங்கள்” என்ற பவுலின் அறிவுரையைப் பின்பற்ற நமக்கு உதவும்.​—ரோமர் 2:20; கொலோசெயர் 3:15, NW.

மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்திலிருந்து மூன்று பாடங்கள்

7. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு தங்கள் நன்றியை காண்பிப்பதற்கு தசமபாக ஏற்பாடு எப்படி வாய்ப்பளித்தது?

7 நியாயப்பிரமாணச் சட்டத்தில், தம் நற்குணத்திற்கு இஸ்ரவேலர்கள் ஆத்மார்த்தமான போற்றுதலை காண்பிப்பதற்காக மூன்று வழிகளை யெகோவா ஏற்பாடு செய்தார். முதலாவது வழி, தசமபாக ஏற்பாடாக இருந்தது. “ஆடு மாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமா”க்கப்பட வேண்டியதாய் இருந்தது. (லேவியராகமம் 27:30-32) இதற்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்தபோது யெகோவா அவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்தார். “என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”​—மல்கியா 3:10.

8. மனமுவந்து நன்கொடைகள் அளிக்கும் ஏற்பாட்டிற்கும் தசமபாக ஏற்பாட்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் இருந்தது?

8 இரண்டாவதாக, தசமபாக ஏற்பாடு தவிர, இஸ்ரவேலர்கள் மனமுவந்து நன்கொடைகளை அளிப்பதற்கான ஏற்பாட்டையும் யெகோவா செய்தார். இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லுமாறு மோசேக்கு அவர் கட்டளையிட்டார்: “நான் உங்களை அழைத்துக் கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து, தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.” அவர்களுடைய ‘பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தில்’ சிலவற்றை ‘கர்த்தருக்கு காணிக்கையாக’ செலுத்த வேண்டியிருந்தது. எவ்வளவு முதற்கனிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட அளவு இங்கு சொல்லப்படாததை கவனியுங்கள். (எண்ணாகமம் 15:18-21) ஆனால், இஸ்ரவேலர்கள் நன்றியறிதலோடு காணிக்கை செலுத்தியபோது யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டார்கள். இதே போன்ற ஏற்பாடு எசேக்கியேல் கண்ட ஆலயம் சம்பந்தப்பட்ட தரிசனத்திலும் உள்ளது. இவ்வாறு நாம் வாசிக்கிறோம்: “சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்த மாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள்.”​—எசேக்கியேல் 44:30.

9. சிந்திக்கிடப்பதை பொறுக்கிக் கொள்ளும் ஏற்பாட்டின் மூலம் யெகோவா என்ன கற்றுக்கொடுத்தார்?

9 மூன்றாவதாக, சிந்திக்கிடக்கும் கதிர்களை ஏழை எளியவர்களுக்கு விட்டுவிடும் ஏற்பாட்டை யெகோவா செய்தார். “நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.” (லேவியராகமம் 19:9, 10) இங்கேயும்கூட, குறிப்பிட்ட அளவு எதுவும் கொடுக்கப்படவில்லை. தேவையிலிருந்தவர்களுக்கு எவ்வளவு விட்டுவிட வேண்டுமென்பது ஒவ்வொரு இஸ்ரவேலனுடைய சொந்த விருப்பமாக இருந்தது. மிகப் பொருத்தமாகவே சாலொமோன் ஞானி இவ்வாறு விளக்கினார்: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” (நீதிமொழிகள் 19:17) இப்படியாக, வசதியற்றவர்கள் மீது கருணையையும் கரிசனையையும் காண்பிக்க யெகோவா கற்றுக்கொடுத்தார்.

10. இஸ்ரவேலர்கள் தங்கள் நன்றியை காண்பிக்கத் தவறினபோது என்ன விளைவுகளை சந்தித்தார்கள்?

10 இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிதலோடு தசமபாகத்தை கொண்டு வந்தபோதும், மனமுவந்து நன்கொடைகளை அளித்தபோதும், ஏழை எளியோருக்கு ஏதாவது கொடுத்தபோதும் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். ஆனால் தங்கள் நன்றியை காண்பிக்கத் தவறினபோது, அவர்கள் யெகோவாவின் ஆசியை இழந்தார்கள். இதன் விளைவாக, அவர்கள் பேரழிவை சந்தித்தார்கள், கடைசியில் நாடுகடத்தப்பட்டார்கள். (2 நாளாகமம் 36:17-21) அப்படியானால், இதில் நமக்கென்ன பாடங்கள் இருக்கின்றன?

நம் நன்றியை தெரிவிக்கும் வழிகள்

11. யெகோவாவுக்கு நம் நன்றியை தெரிவிப்பதற்கான முக்கிய வழி என்ன?

11 இன்றும்கூட, யெகோவாவுக்கு துதி செலுத்துவதற்கும் நம் நன்றியை தெரிவிப்பதற்கும் முக்கிய வழி, “பலி” செலுத்துவதை உட்படுத்துகிறது. உண்மைதான், கிறிஸ்தவர்களான நாம் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தின் கீழ் இல்லை, ஆகவே பயிர்களையோ மிருகங்களையோ பலியாக செலுத்த வேண்டிய கட்டாயம் நமக்கில்லை. (கொலோசெயர் 2:14) இருந்தபோதிலும், அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை இவ்வாறு துரிதப்படுத்தினார்: “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” (எபிரெயர் 13:15) நம்முடைய திறமைகளையும் பொருளாதார வளங்களையும் பயன்படுத்தி, வெளி ஊழியத்திலோ, ‘சபைகளிலோ,’ அன்பான பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு ஸ்தோத்திர பலியை செலுத்துவதன் மூலம் நம் இருதயப்பூர்வ நன்றியை தெரிவிக்கலாம். (சங்கீதம் 26:12) அப்படி செய்யும்போது, இஸ்ரவேலர் தங்கள் நன்றியை தெரிவிக்கும்படி யெகோவா எதிர்பார்த்த வழிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12. நம் கிறிஸ்தவ பொறுப்புகளைப் பற்றி தசமபாக ஏற்பாட்டிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 முதலாவதாக, நாம் ஏற்கெனவே பார்த்தபடி, தசமபாக ஏற்பாடு அவரவர் விருப்பத்திற்கு விடப்படவில்லை; இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு இஸ்ரவேலனுக்கும் தசமபாகம் செலுத்த வேண்டிய கடமை இருந்தது. அவ்வாறே, கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஊழியத்தில் ஈடுபடுவதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தக் காரியங்கள் அவரவர் விருப்பத்திற்கு விடப்பட்டதாக இல்லை. முடிவு காலத்தை குறித்த முக்கிய தீர்க்கதரிசனத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14; 28:19, 20) கிறிஸ்தவ கூட்டங்களைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதும்படி தேவ ஆவியால் ஏவப்பட்டார்: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) பிரசங்கித்து, போதிக்கும் வேலையில் நம் பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்கும்போதும், சபை கூட்டங்களில் நம் சகோதரர்களோடு தொடர்ந்து கூட்டுறவு கொள்ளும்போதும் யெகோவாவுக்கு நம் நன்றியை காண்பிக்கிறோம்; அவற்றை ஒரு பாக்கியமாகவும் மதிப்பாகவும் கருதுகிறோம்.

13. மனமுவந்து அளிக்கும் நன்கொடை ஏற்பாட்டிலிருந்தும் சிந்திக்கிடக்கும் கதிர்களை பொறுக்காமல் விட்டுவிடும் ஏற்பாட்டிலிருந்தும் என்ன பாடங்களை கற்றுக்கொள்ளலாம்?

13 கூடுதலாக, இஸ்ரவேலர்கள் தங்கள் போற்றுதலை காண்பிக்க முடிந்த மற்ற இரண்டு வழிகளை​—⁠மனமுவந்து நன்கொடைகள் அளிப்பது, சிந்திக்கிடக்கும் கதிர்களை பொறுக்காமல் விட்டுவிடுவது ஆகிய இரண்டு வழிகளை​—⁠சிந்திப்பதன் மூலமும் நாம் நன்மையடையலாம். இந்த இரு வழிகள் தசமபாக ஏற்பாட்டிலிருந்து வித்தியாசப்படுகின்றன; எவ்வாறு? கடவுளுக்கு எவ்வளவு செலுத்த வேண்டுமென்று தசமபாக ஏற்பாடு தெளிவாக குறிப்பிட்டது, ஆனால் மனமுவந்து அளிக்கும் ஏற்பாட்டிலும், சிந்திக்கிடக்கும் கதிர்களை பொறுக்காமல் விட்டுவிடும் ஏற்பாட்டிலும் இவ்வளவுதான் செலுத்த வேண்டுமென திட்டவட்டமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, யெகோவாவுடைய ஒரு ஊழியக்காரனின் மனதில் எந்தளவு போற்றுதல் இருந்ததோ அந்தளவு அதைக் காண்பிக்கும்படியே இவ்விரண்டு ஏற்பாடுகளும் தூண்டின. அவ்வாறே, ஊழியத்தில் பங்குகொள்வதும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதும் யெகோவாவின் ஒவ்வொரு ஊழியனுக்கும் மிக முக்கியமான பொறுப்பு என்பதை நாம் அறிந்திருந்தாலும், அவற்றில் முழு மனதோடும் மனமுவந்தும் பங்குகொள்கிறோமா? யெகோவா நமக்காக செய்துள்ள எல்லாவற்றிற்கும் இருதயப்பூர்வ போற்றுதலை காண்பிப்பதற்கான வாய்ப்புகளாக அவற்றை கருதுகிறோமா? நம் சூழ்நிலை அனுமதிப்பதற்கு ஏற்ப அவற்றில் தாராளமாக ஈடுபடுகிறோமா? அல்லது இவையெல்லாம் நாம் செய்ய வேண்டிய கடமை என்று மட்டுமே நினைக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்கு நமக்கு நாமேதான் பதில்களை சொல்லிக்கொள்ள வேண்டும். அப்போஸ்தலன் பவுல் இதைக் குறித்து இப்படியாக எழுதினார்: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப் பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”​—கலாத்தியர் 6:4.

14. யெகோவாவுக்கான சேவையில், நாம் என்ன செய்யும்படி அவர் எதிர்பார்க்கிறார்?

14 நம்முடைய சூழ்நிலையை யெகோவா தேவன் நன்கு அறிந்திருக்கிறார். நம் வரையறைகளையும் அவர் அறிந்திருக்கிறார். தமது ஊழியர்கள் எவ்வளவு கொடுத்தாலும்சரி​—⁠அவை பெரியளவாக இருந்தாலும்சரி சிறியளவாக இருந்தாலும்சரி​—⁠அவர்கள் மனமுவந்து அளிப்பவற்றை அவர் உயர்வாக மதிக்கிறார். நாம் எல்லாருமே ஒரே அளவு கொடுப்போம் என அவர் எதிர்பார்ப்பதில்லை, நம்மால் அப்படி கொடுக்கவும் முடியாது. பொருளாதார நன்கொடைகளைப் பற்றி குறிப்பிடும்போது, கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” (2 கொரிந்தியர் 8:12) கடவுளுக்கு நாம் செய்யும் சேவையிலும் இந்த நியமம் நன்றாகவே பொருந்துகிறது. நாம் எந்தளவு சேவை செய்கிறோம் என்பதைப் பொறுத்தல்ல, ஆனால் அதை மகிழ்ச்சியோடும் முழு மனதோடும் செய்கிறோமா என்பதைப் பொறுத்தே நம் சேவை யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்படும்.​—சங்கீதம் 100:1-5; கொலோசெயர் 3:24.

பயனியர் மனப்பான்மையை வளர்த்து, காத்துக்கொள்ளுங்கள்

15, 16. (அ) பயனியர் ஊழியத்திற்கும் நன்றி காண்பிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது? (ஆ) பயனியர் செய்ய முடியாதவர்கள் பயனியர் மனப்பான்மையை எப்படி வெளிக்காட்டலாம்?

15 யெகோவாவுக்கு நம் நன்றியை காண்பிப்பதற்கான திருப்தியளிக்கும் ஒரு வழி முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதாகும். யெகோவா மீதுள்ள அன்பினாலும் அவர் காட்டும் தகுதியற்ற தயவினாலும் உந்துவிக்கப்பட்டு, அவருடைய ஊழியர்கள் அநேகர் அவருக்கு அதிக மணிநேரம் சேவை செய்ய வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை செய்திருக்கிறார்கள். சிலரால் ஒழுங்கான பயனியர்களாக சேவிக்க முடிகிறது; இவர்கள் ஒவ்வொரு மாதமும் நற்செய்தியை பிரசங்கிப்பதிலும் ஜனங்களுக்கு சத்தியத்தை போதிப்பதிலும் சராசரியாக 70 மணிநேரத்தை செலவிடுகிறார்கள். பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அதிகம் செய்ய முடியாத மற்றவர்கள், அவ்வப்போது துணைப் பயனியர்களாக பிரசங்க வேலையில் ஒரு மாதத்திற்கு 50 மணிநேரம் செலவிடுகிறார்கள்.

16 ஆனால், ஒழுங்கான பயனியர்களாகவோ துணைப் பயனியர்களாகவோ சேவை செய்ய முடியாத மற்ற அநேக யெகோவாவின் ஊழியர்களைப் பற்றி என்ன? இவர்கள் பயனியர் மனப்பான்மையை வளர்த்து, அதைக் காத்துக்கொள்வதன் மூலம் தங்கள் நன்றியை காண்பிக்கலாம். எப்படி? பயனியர் செய்ய முடிந்தவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும், முழுநேர ஊழியத்தை வாழ்க்கைப் பணியாக்கிக் கொள்வதற்கான ஆர்வத்தை தங்கள் பிள்ளைகளின் மனதில் விதைப்பதன் மூலமும், தங்கள் சூழ்நிலைக்கேற்றபடி பிரசங்க வேலையில் ஊக்கத்தோடு கலந்துகொள்வதன் மூலமும் அவ்வாறு செய்யலாம். யெகோவா நமக்காக செய்திருப்பவற்றிற்கும், செய்து வருகிறவற்றிற்கும், செய்யப் போகிறவற்றிற்கும் நமக்கு எந்தளவு போற்றுதல் இருக்கிறதோ அந்தளவு அதிகமாக நாம் ஊழியத்தில் ஈடுபடுபவர்களாக இருப்போம்.

நம் ‘விலைமதிப்புள்ள பொருட்களால்’ நன்றி காண்பித்தல்

17, 18. (அ) நம் ‘விலைமதிப்புள்ள பொருட்களால்’ நம் நன்றியை எவ்வாறு வெளிக்காட்டலாம்? (ஆ) அந்த ஏழை விதவையின் காணிக்கையை இயேசு எப்படி கருதினார், ஏன்?

17 “உன் [“விலைமதிப்புள்ள,” NW] பொருளாலும் உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு” என்று நீதிமொழிகள் 3:9 குறிப்பிடுகிறது. யெகோவாவின் ஊழியர்கள் இன்று தசமபாகம் செலுத்த வேண்டியதில்லை. மாறாக, கொரிந்து சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு மனமுவந்து நன்கொடைகள் அளிப்பதன் மூலமும் நம் நன்றியை வெளிக்காட்டலாம். இதை தவறாமல் செய்வதற்கு மனப்பூர்வமான போற்றுதல் நம்மை உந்துவிக்கிறது; ஒருவேளை ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் செய்ததைப் போல நாமும் வாரந்தோறும் கொஞ்சம் பணத்தை இதற்காக ஒதுக்கி வைக்கலாம்.​—1 கொரிந்தியர் 16:1, 2.

18 நாம் கொடுக்கும் நன்கொடைகளின் அளவை வைத்து நமக்கு யெகோவா மீது எவ்வளவு நன்றி இருக்கிறது என சொல்லிவிட முடியாது. மாறாக, நாம் எப்படிப்பட்ட மனப்பான்மையோடு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஆலய காணிக்கைப் பெட்டியில் மக்கள் தங்கள் காணிக்கைகளை போடுவதை பார்த்துக் கொண்டிருந்தபோது இயேசு அதைத்தான் கவனித்தார். ஒரு ஏழை விதவை மிகக் குறைந்த மதிப்புள்ள “இரண்டு காசை” மட்டுமே போட்டதை அவர் கவனித்தபோது, “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்று சொன்னார்.​—லூக்கா 21:1-4.

19. நம்முடைய நன்றியுணர்வை வெளிக்காட்டும் விதங்களை ஏன் மறுபடியும் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது?

19 நாம் எந்தெந்த வழிகளில் நன்றியுணர்வை காட்டலாம் என்பதை பரிசோதித்துப் பார்க்கும்படி இந்தக் கட்டுரை நம்மை தூண்டுவதாக. யெகோவாவுக்கு நாம் செலுத்தும் ஸ்தோத்திர பலியை ஒருவேளை நம்மால் அதிகரிக்க முடியுமா? அதோடு உலகளாவிய இந்த வேலைக்காக பொருளாதார விதத்தில் இன்னும் அதிக ஆதரவை அளிக்க முடியுமா? நம்மால் முடிந்தவரை அப்படி செய்யும்போது, நாம் நன்றியுள்ளவர்களாக இருப்பதை பார்த்து, தாராள குணமுடைய நம் அன்புத் தந்தையான யெகோவா மிகவும் பிரியப்படுவார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• என்ன காரணங்களுக்காக நாம் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்?

• தசமபாக ஏற்பாடு, மனமுவந்து அளிக்கும் ஏற்பாடு, சிந்தின கதிர்களை பொறுக்காமல் விட்டுவிடும் ஏற்பாடு ஆகியவற்றிலிருந்து நாம் என்ன பாடங்களை கற்றுக்கொள்கிறோம்?

• பயனியர் மனப்பான்மையை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?

• நம் ‘விலைமதிப்புள்ள பொருட்களால்’ யெகோவாவுக்கு எவ்வாறு நன்றி செலுத்தலாம்?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படங்கள்]

‘நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகிறது’

[பக்கம் 16-ன் படங்கள்]

நியாயப்பிரமாணச் சட்டம் கற்பிக்கும் என்ன மூன்று பாடங்கள் இங்கு காண்பிக்கப்பட்டுள்ளன?

[பக்கம் 18-ன் படங்கள்]

நாம் என்ன பலிகளை செலுத்தலாம்?