Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”

“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”

“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”

“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அவர் அருளுவார்.”​—சங்கீதம் 37:4, NW.

1, 2. மெய்யான சந்தோஷத்தின் ஊற்றுமூலர் யார், இந்த உண்மைக்கு தாவீது ராஜா எப்படி கவனத்தை ஈர்த்தார்?

 “ஆவிக்குரிய தேவையை உணர்ந்திருப்போர் சந்தோஷமுள்ளவர்கள், . . . இரக்கமுடையோர் சந்தோஷமுள்ளவர்கள், . . . சமாதானம் பண்ணுவோர் சந்தோஷமுள்ளவர்கள்.” இயேசுவின் பிரபலமான மலைப் பிரசங்கத்தின் நிகரற்ற ஆரம்ப வார்த்தைகளே இவை; சந்தோஷமுள்ளவர்களைப் பற்றிய விவரிப்பில் இவற்றைத் தவிர இன்னும் ஆறு கூற்றுகளும் அடங்கியுள்ளன; இதை சுவிசேஷ எழுத்தாளரான மத்தேயு பதிவு செய்திருக்கிறார். (மத்தேயு 5:3-11, NW) சந்தோஷத்தை நம்மால் அடைய முடியுமென்று இயேசுவின் அவ்வார்த்தைகள் உறுதியளிக்கின்றன.

2 பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது எழுதிய ஒரு சங்கீதம் சந்தோஷத்தின் ஊற்றுமூலரான யெகோவாவிடம் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. “யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அவர் அருளுவார்” என அவர் எழுதியிருந்தார். (சங்கீதம் 37:4, NW) ஆனால், யெகோவாவையும் அவருடைய அநேக குணாம்சங்களையும் பற்றி அறிந்துகொள்வதை எது ‘மிகுந்த மகிழ்ச்சி’யாக்கும்? தம் நோக்கங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பற்றி சிந்திப்பது, “உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை” பெற்றுக்கொள்ள உங்களுக்கு எப்படி வாய்ப்பளிக்கும்? 37-⁠ம் சங்கீதத்தில், 1 முதல் 11 வரையுள்ள வசனங்களை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்போது அதற்கான விடைகளை தெரிந்துகொள்ளலாம்.

“பொறாமை கொள்ளாதே”

3, 4. சங்கீதம் 37:1-⁠ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி, தாவீது என்ன அறிவுரை வழங்கினார், அதற்கு கவனம் செலுத்துவது ஏன் இன்று பொருத்தமானது?

3 ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்’ (NW) நாம் வாழ்ந்து வருகிறோம்; பொல்லாப்பும் பெருகிக் கிடக்கிறது. “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம் போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறிய வார்த்தைகளின் நிறைவேற்றத்தை நாம் பார்த்திருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, 13) அப்படியானால், பொல்லாதவர்கள் வெற்றியடைவது போலவும் செழிப்பாக இருப்பது போலவும் தோன்றுவதைப் பார்த்து மனம் வெதும்புவது எவ்வளவு எளிது! அவை நம் கவனத்தை சிதறடித்து நம்முடைய ஆன்மீகப் பார்வையை மங்கலாக்கிவிடும். இந்த ஆபத்தைக் குறித்து 37-⁠ம் சங்கீதத்தின் ஆரம்ப வரிகள் எவ்வாறு நம்மை எச்சரிக்கின்றன என்பதை கவனியுங்கள்: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.”

4 இன்றைக்கு மீடியாக்கள் தினந்தோறும் இவ்வுலகில் நடக்கும் எக்கச்சக்கமான அநீதிகளை அறிவித்து நம்மை திணறடிக்கின்றன. பொய்ப் பித்தலாட்டங்களில் ஈடுபடும் நேர்மையற்ற தொழிலதிபர்கள் எப்படியோ தப்பித்துக்கொள்கிறார்கள். அக்கிரமக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்காக அப்பாவிகளை சுரண்டிப் பிழைக்கிறார்கள். கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை அல்லது தண்டிக்கப்படாமலேயே விடப்படுகிறார்கள். நீதியை புரட்டிப்போடும் அப்படிப்பட்ட காரியங்கள் நம் கோபத்தை கிளப்பி, மன அமைதியை குலைத்துப்போடலாம். துன்மார்க்கர் தழைத்திருப்பது போல தோன்றுவதை பார்க்கப் பார்க்க நமக்கு பொறாமை பொங்கி எழலாம். ஆனால் நாம் அவற்றைப் பற்றி நினைத்து வருந்துவது நிலைமையை சரியாக்கிவிடுமா? அல்லது துன்மார்க்கர் நன்மைகள் அனுபவிப்பது போலிருப்பதைப் பார்த்து பொறாமைப்படுவது அவர்களுடைய முடிவைத்தான் மாற்றிவிடுமா? இல்லை! நிச்சயமாக இல்லை! பார்க்கப்போனால், நாம் ‘எரிச்சலடைய’ வேண்டிய அவசியமே இல்லை. ஏன்?

5. பொல்லாதவர்கள் ஏன் புல்லுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்?

5 ஏனென்றால், “அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்” என சங்கீதக்காரன் பதிலளிக்கிறார். (சங்கீதம் 37:2) பச்சைப் பசேலென்றிருக்கும் புல் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கலாம், ஆனால் சீக்கிரத்தில் அது வாடிவதங்கி, பிறகு காய்ந்துவிடும். பொல்லாதவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மை. அவர்களுடைய செழிப்பு நிரந்தரமானதல்ல. அநியாயமாக சம்பாதித்த பணம் அவர்கள் சாகும்போது எதற்குமே உதவாமல் போய்விடும். நீதியின் பிடியிலிருந்து கடைசியில் ஒருவரும் தப்ப முடியாது. “பாவத்தின் சம்பளம் மரணம்” என பவுல் எழுதினார். (ரோமர் 6:23) பொல்லாதவர்களுக்கும் அநியாயக்காரர்களுக்கும் கடைசியில் இந்த ‘சம்பளமே’ கிடைக்கும். என்னவொரு பிரயோஜனமற்ற வாழ்க்கை!​—⁠சங்கீதம் 37:35, 36; 49:16, 17.

6. சங்கீதம் 37:1, 2-லிருந்து நாம் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்?

6 அப்படியானால், பொல்லாதவர்களின் தற்காலிக செழிப்பைப் பார்த்து நாம் எரிச்சலடையவோ பொறாமைப்படவோ வேண்டுமா? சங்கீதம் 37-⁠ன் முதல் இரண்டு வசனங்களிலுள்ள பாடம் இதுதான்: பொல்லாதவர்களுடைய வெற்றியைப் பார்த்து, யெகோவாவை சேவிக்கும் உங்கள் வழியிலிருந்து விலகிப் போய்விடாதீர்கள். மாறாக, ஆன்மீக ஆசீர்வாதங்கள் மீதும் இலக்குகள் மீதுமே உங்கள் முழு கவனத்தையும் ஊன்ற வையுங்கள்.​—⁠நீதிமொழிகள் 23:17.

“யெகோவாவை நம்பி நன்மை செய்”

7. யெகோவாவை நாம் ஏன் நம்ப வேண்டும்?

7 “யெகோவாவை நம்பி நன்மை செய்” என சங்கீதக்காரன் நம்மை உந்துவிக்கிறார். (சங்கீதம் 37:3அ, NW) கவலைகள் சூழ்ந்திருக்கையில் அல்லது சந்தேகங்கள் நம்மை குழப்புகையில் யெகோவா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது அவசியம். அவரே நமக்கு முழுமையான ஆன்மீக பாதுகாப்பை அளிப்பவர். “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்” என மோசே எழுதினார். (சங்கீதம் 91:1) இவ்வுலகில் பெருகி வரும் அநியாயங்களைக் கண்டு மனநிம்மதி குலைந்து போகும் சமயங்களில் நாம் இன்னுமதிகமாக யெகோவா மீது சார்ந்திருக்க வேண்டும். ஒருவேளை நம்முடைய கணுக்கால் சுளுக்கியிருக்கும்போது, நண்பர் ஒருவர் நம்மை கைத்தாங்கலாக அழைத்து சென்றால், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம் அல்லவா? அதே போல, உண்மையோடு நடப்பதற்கு நாம் பிரயாசப்படும்போது, யெகோவாவின் உதவி நமக்கு தேவைப்படுகிறது.​—ஏசாயா 50:10.

8. துன்மார்க்கரின் செழிப்பைப் பார்த்து ஒரேயடியாக மனம் வெதும்புவதை தடுக்க கிறிஸ்தவ ஊழியம் நமக்கு எவ்வாறு உதவலாம்?

8 துன்மார்க்கரின் செழிப்பைப் பார்த்து மனம் வெதும்புவதை தடுக்கும் ஒரு மருந்து, செம்மறியாடு போன்றவர்களை மும்முரமாக தேடிக் கண்டுபிடித்து, யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய அவர்களுக்கு உதவுவதாகும். பொல்லாப்பு அதிகமாகிக்கொண்டே வருவதால், மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும். ‘நன்மை செய்யவும், பகிர்ந்து வாழவும் மறவாதிருங்கள்’ ஏனெனில் “இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய மகத்தான நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதுதான் நாம் செய்யும் மிகச் சிறந்த “நன்மை”யாக இருக்கும். இப்படி வெளியரங்கமாக பிரசங்கிப்பது உண்மையிலேயே நாம் செலுத்தும் “ஸ்தோத்திர பலி”யாக இருக்கிறது.​—எபிரெயர் 13:15, 16; NW; கலாத்தியர் 6:10.

9. “பூமியில் குடியிரு”க்கும்படியான தாவீதின் அறிவுரையை விளக்கவும்.

9 தாவீது தொடர்கிறார்: “பூமியில் குடியிருந்து, உண்மையைக் கடைப்பிடி.” (சங்கீதம் 37:3ஆ, NW) தாவீதின் நாட்களில் “பூமி” என்பது இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் குறித்தது. சாலொமோனின் ஆட்சியில் அதன் எல்லை வடக்கே தாண் துவக்கி, தெற்கே பெயெர்செபா வரைக்கும் எட்டியிருந்தது. அதுவே இஸ்ரவேலின் குடியிருப்பு பகுதியாக இருந்தது. (1 இராஜாக்கள் 4:25) இன்று, நாம் பூமியின் எந்தவொரு பாகத்தில் குடியிருந்தாலும் சரி, நீதியான புதிய உலகில் இந்த முழு பூமியும் பரதீஸாக மாறப்போகும் அந்த வேளைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதுவரைக்கும், நாம் ஆன்மீக பாதுகாப்பில் குடியிருக்கிறோம்.​—ஏசாயா 65:13, 14.

10. நாம் “உண்மையைக் கடைப்பிடி”க்கும்போது என்ன பலன் விளையும்?

10 நாம் “உண்மையைக் கடைப்பிடி”க்கும்போது என்ன பலன் விளையும்? தேவ ஆவியால் ஏவப்பட்ட நீதிமொழி ஒன்று இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறது: “உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்.” (நீதிமொழிகள் 28:20) நாம் எங்கு வாழ்ந்து வந்தாலும் சரி, நம்மால் யாருக்கெல்லாம் முடியுமோ அவர்களுக்கெல்லாம் தொடர்ந்து நற்செய்தியை உண்மையோடு பிரசங்கித்து வரும்போது யெகோவாவிடமிருந்து நிச்சயம் ஆசீர்வாதங்களைப் பெறுவோம். உதாரணத்திற்கு, ஃப்ரான்க்கும் அவரது மனைவி ரோஸும், வட ஸ்காட்லாந்திலுள்ள ஓர் ஊரில் 40 வருடங்களுக்கு முன்னர் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். இத்தம்பதியினர் அங்கு செல்வதற்கு முன்பு, சத்தியத்திடம் ஆர்வம் காண்பித்திருந்த சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அதைவிட்டு விலகியிருந்தார்கள். இருந்தபோதிலும், இந்தப் பயனியர் தம்பதியினர் பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் முழு வீச்சில் ஈடுபட ஆரம்பித்தார்கள். இப்போது அந்த ஊரில் செழிப்பான ஒரு சபை இருக்கிறது. இத்தம்பதியினர் உண்மையோடு செயல்பட்டதால், நிஜமாகவே யெகோவாவின் ஆசீர்வாதங்களை பெற்றார்கள். “நாங்கள் இன்னமும் சத்தியத்தில் இருப்பதும், யெகோவாவுக்கு உபயோகமாக இருப்பதுமே எங்களுக்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த ஆசீர்வாதம்” என ஃப்ரான்க் தாழ்மையோடு சொல்கிறார். ஆம், “உண்மையைக் கடைப்பிடி”க்கும்போது, நாம் அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், அவற்றை உயர்வாக மதிக்கவும் செய்வோம்.

“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”

11, 12. (அ) ‘யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருப்பது’ எப்படி? (ஆ) தனிப்பட்ட படிப்பு சம்பந்தமாக என்ன இலக்கை நீங்கள் வைக்கலாம், அதனால் என்ன பயன் கிடைக்கலாம்?

11 யெகோவாவிடமுள்ள நம் உறவை பலப்படுத்துவதற்கும், அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காத்துக்கொள்வதற்கும் நாம் “யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிரு”க்க வேண்டும். (சங்கீதம் 37:4அ, NW) நாம் எவ்வாறு அப்படி இருக்க முடியும்? நம்முடைய சூழ்நிலை​—⁠அது கஷ்டமான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும்கூட​—⁠அதைப் பற்றியே சதா யோசித்துக் கொண்டிருக்காமல் யெகோவாவின் மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு வழி, அவருடைய வார்த்தையை படிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதாகும். (சங்கீதம் 1:1, 2) பைபிள் வாசிப்பு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா? ஆம், யெகோவாவைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இலக்கை வைத்து வாசித்தீர்களென்றால் கட்டாயம் அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஒரு பகுதியை வாசித்ததும், சற்று நிறுத்தி, ‘இந்தப் பகுதியிலிருந்து யெகோவாவை பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். பைபிள் வாசிக்கும்போது ஒரு நோட்டுப் புத்தகத்தையோ சில பேப்பர்களையோ வைத்துக்கொள்வது பிரயோஜனமாக இருக்கும். நீங்கள் வாசித்த பகுதியைப் பற்றி சிந்தித்துப் பார்க்க நிறுத்தும் ஒவ்வொரு சமயமும், கடவுளுடைய விரும்பத்தக்க குணங்களில் ஏதோவொன்றை உங்களுக்கு நினைப்பூட்டிய சொற்றொடரை அதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். வேறொரு சங்கீதத்தில் தாவீது இவ்வாறு பாடினார்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” (சங்கீதம் 19:14) இவ்வாறு நம் முழு கவனத்தையும் ஒருமுகப்படுத்தி கடவுளுடைய வார்த்தையை வாசிப்பது யெகோவாவுக்கு “பிரீதியாயிரு”க்கிறது, நமக்கும் மகிழ்ச்சியாயிருக்கிறது.

12 படிப்பிலிருந்தும் தியானத்திலிருந்தும் நாம் எவ்வாறு சந்தோஷத்தைக் கண்டடையலாம்? யெகோவாவையும் அவரது வழிகளையும் பற்றி நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கற்றுக்கொள்வதை நம் இலக்காக வைத்துக்கொள்ளலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் * போன்ற பிரசுரங்களில் நாம் நன்றியுணர்வோடு சிந்தித்துப் பார்க்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவ்வாறு சிந்தித்துப் பார்க்கும் நீதிமான்களுடைய “இருதயத்தின் வேண்டுதல்களை” யெகோவா “அருளுவார்” என தாவீது உறுதியளிக்கிறார். (சங்கீதம் 37:4ஆ, NW) இப்படிப்பட்ட நம்பிக்கையே அப்போஸ்தலன் யோவானை பின்வருமாறு எழுத தூண்டியிருக்க வேண்டும்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”​—1 யோவான் 5:14, 15.

13. சமீப ஆண்டுகளில், அநேக நாடுகளில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் என்ன விஸ்தரிப்பை பார்க்கிறோம்?

13 யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதை காண்பதே உத்தம ஜனங்களான நமக்கு மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். (நீதிமொழிகள் 27:11) ஒரு காலத்தில் சர்வாதிகார ஆட்சியும் தனிக் கூட்டரசாட்சியும் நடைபெற்ற நாடுகளிலுள்ள சகோதரர்கள் மாபெரும் விதத்தில் பிரசங்க வேலையில் ஈடுபட்டு வருவதை அறியும்போது நம் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழியவில்லையா? இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு முன், இன்னும் எந்தளவு சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள நாம் ஆவலோடு காத்திருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் தற்காலிகமாக குடியிருந்து, மத சுதந்திரத்தை அனுபவிக்கின்ற மாணவர்களிடமும், அகதிகளிடமும், மற்றவர்களிடமும் அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் அநேகர் விறுவிறுப்பாக பிரசங்கித்து வருகிறார்கள். இந்த நபர்கள் தங்கள் தாயகம் திரும்பும்போது, ஆன்மீக வெளிச்சம் ஊடுருவ முடியாதது போலத் தோன்றும் இருள் சூழ்ந்த இடங்களில்கூட சத்தியத்தின் வெளிச்சத்தை தொடர்ந்து பிரகாசிக்க செய்ய வேண்டுமென நாம் மனதார விரும்புகிறோம்.​—மத்தேயு 5:14-16.

‘உங்கள் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடுங்கள்’

14. யெகோவா மீது நாம் நம்பிக்கையோடு சார்ந்திருக்கலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

14 நம்முடைய கவலைகளும், பயங்கர பாரங்களாக தோன்றுகிற பிரச்சினைகளும் நீக்கப்படும் என அறிவது ஆ, எவ்வளவு நிம்மதியளிக்கிறது! ஆனால் அவை எவ்வாறு நீக்கப்படும்? “உங்கள் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்து, அவர் மீது நம்பிக்கையோடு சார்ந்திருங்கள்” என்று தாவீது சொல்கிறார்; அப்படி செய்யும்போது, “அவரே உங்களுக்காக செயல்படுவார்” என்றும் மேலுமாக அவர் சொல்கிறார். (சங்கீதம் 37:5, NW) யெகோவா மீது நாம் நம்பிக்கையோடு சார்ந்திருக்கலாம் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகளை நம்முடைய சபைகளில் காணலாம். (சங்கீதம் 55:22) பயனியர்கள், பயணக் கண்காணிகள், மிஷனரிகள் அல்லது பெத்தேலில் சேவை செய்யும் வாலண்டியர்கள் என முழுநேர ஊழியர்கள் அனைவரும் யெகோவாவின் அரவணைப்பு எந்தளவு நம்பத்தக்கது என்பதற்கு சான்றளிக்க முடியும். உங்களுக்கு தெரிந்த முழுநேர ஊழியர்களிடம் யெகோவா அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறார் என நீங்கள் ஏன் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடாது? அவ்வாறு கேட்கும்போது, கடினமான காலங்களில்கூட யெகோவாவின் உதவிக்கரம் குறுகிப்போவதில்லை என்பதைக் காட்டும் நிறைய அனுபவங்களை கண்டிப்பாக தெரிந்துகொள்வீர்கள். ஆம், வாழ்க்கைக்கு தேவையானவை எப்போதுமே நமக்கு கிடைக்கும்படி அவர் பார்த்துக்கொள்கிறார்.​—சங்கீதம் 37:25; மத்தேயு 6:25-34.

15. கடவுளுடைய மக்களின் நீதி எப்படி பிரகாசிக்கிறது?

15 யெகோவா மீது முழு நம்பிக்கை வைத்து, அவரிடம் தஞ்சம் புகுந்தால் சங்கீதக்காரன் சொன்னது போலவே நமக்கு நடக்கும்: “உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப் போலவும் விளங்கப் பண்ணுவார்.” (சங்கீதம் 37:6) யெகோவாவின் சாட்சிகளான நாம், இல்லாததும் பொல்லாததுமான பேச்சுக்கு அடிக்கடி ஆளாகிறோம். ஆனால் யெகோவா மீதும் அயலான் மீதுமுள்ள அன்பினால் தூண்டப்பட்டுதான் நாம் வெளி ஊழியத்தில் ஈடுபடுகிறோம் என்பதை நல்மனமுள்ளவர்கள் புரிந்துகொள்வதற்காக அவர்களுடைய மனக்கண்களை யெகோவா திறக்கிறார். அதே சமயம், நம்முடைய நல்நடத்தையைப் பற்றி அநேகர் தவறாக பேசினாலும், அதை யாராலும் மூடிமறைக்க முடியாது. எல்லா விதமான எதிர்ப்புகள் மத்தியிலும், துன்புறுத்துதல்கள் மத்தியிலும் யெகோவா நம்மை ஆதரிக்கிறார். அதன் விளைவாக, அவரது மக்களுடைய நீதியின் வெளிச்சம் பட்டப்பகலிலுள்ள சூரியனைப் போல பிரகாசிக்கிறது.​—1 பேதுரு 2:12.

“அமைதியாக . . . பேராவலுடன் காத்திருங்கள்”

16, 17. சங்கீதம் 37:7-⁠க்கு இசைய, எவற்றை செய்வதற்கான காலம் இது, ஏன்?

16 சங்கீதக்காரரின் அடுத்த வார்த்தைகளை கவனியுங்கள்: “அமைதியாக யெகோவாவை நோக்கியிருங்கள், அவருக்காக பேராவலுடன் காத்திருங்கள்; தன் வழியில் வெற்றி காண்கிறவன் மீதும், தீவினைகளை செய்து முடிக்கிறவன் மீதும் எரிச்சலடையாதீர்கள்.” (சங்கீதம் 37:7, NW) யெகோவா தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டிய அவசியத்தை தாவீது இங்கு வலியுறுத்துகிறார். இந்த ஒழுங்குமுறையின் முடிவு இன்னும் வரவில்லையென்றாலும், அதைப் பற்றி குறைபட்டுக் கொள்ளக்கூடாது. நாம் ஆரம்பத்தில் நினைத்திருந்ததைவிட, யெகோவாவின் இரக்கமும் பொறுமையும் எவ்வளவோ பெரிதானவை என நாம் காணவில்லையா? முடிவு வருவதற்கு முன் நற்செய்தியை மும்முரமாக பிரசங்கிப்பதன் மூலம் நாமும் பொறுமையோடு காத்திருக்கிறோம் என்பதை இப்போது காட்ட முடியுமா? (மாற்கு 13:10) நம் மகிழ்ச்சியையும் ஆவிக்குரிய பாதுகாப்பையும் அபகரித்துவிடக்கூடிய செயல்களை​—⁠முன்பின் யோசிக்காமல் செய்யும் செயல்களை​—⁠தவிர்க்க வேண்டிய காலம் இதுவே. சாத்தானிய உலகத்தின் கறைப்படுத்தும் செல்வாக்கை இன்னுமதிக பலத்தோடு எதிர்க்க வேண்டிய காலமும் இதுவே. அதுமட்டுமல்ல, யெகோவாவோடுள்ள நம் நீதியான நிலைநிற்கைக்கு குந்தகம் விளைவிக்காமல், ஒழுக்க சுத்தத்தை காத்துக்கொள்ள வேண்டிய காலமும் இதுவே. ஆகையால், ஒழுக்கங்கெட்ட யோசனைகளை நம் மனதிலிருந்து தொடர்ந்து அகற்றிவிடுவோமாக; அத்துடன் எதிர்பாலாரோடு அல்லது, ஏன், ஒரே பாலாரோடுகூட தகாத விதத்தில் நடந்துகொள்வதையும் அறவே தவிர்ப்போமாக.​—கொலோசெயர் 3:5.

17 “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு” என தாவீது அறிவுறுத்துகிறார். “பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” (சங்கீதம் 37:8, 9) ஆம், எல்லா மோசடிகளையும் அதற்கு காரணமானவர்களையும் யெகோவா பூமியிலிருந்து அழித்துப்போடும் காலத்திற்காக​—⁠வெகு அருகாமையிலுள்ள அந்தக் காலத்திற்காக​—⁠நாம் நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

“இன்னுங் கொஞ்ச நேரந்தான்”

18, 19. சங்கீதம் 37:10-லிருந்து என்ன உற்சாகத்தை நீங்கள் பெறுகிறீர்கள்?

18 “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.” (சங்கீதம் 37:10) இந்த ஒழுங்குமுறையின் முடிவை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், யெகோவாவைவிட்டு பிரிந்ததால் மனிதனுக்கு ஏற்பட்ட அவலநிலை முடிவடையும் இவ்வேளையில், அவ்வார்த்தைகள் எவ்வளவாய் நம்மை உற்சாகமூட்டுகின்றன! மனிதன் எத்தனையோ விதமான அரசாங்கங்களையும் அதிகாரத்தையும் முயன்று பார்த்திருக்கிறபோதிலும், அவை அனைத்துமே படுதோல்வியைத்தான் அடைந்திருக்கின்றன. இப்போதோ கடவுளுடைய அரசாங்கம்​—⁠இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட யெகோவாவின் அரசாங்கம்​—⁠திரும்பவும் ஆட்சி செய்யப்போகும் காலத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த அரசாங்கம் உலக விவகாரங்கள் அனைத்தையுமே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும், அதோடு அதன் எல்லா எதிரிகளையும் அழித்துப்போடும்.​—தானியேல் 2:44.

19 கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யப்போகும் அந்தப் புதிய உலகில், நீங்கள் தேடினால்கூட ஒரு ‘துன்மார்க்கனும்’ இருக்க மாட்டான். ஆம், அந்த சமயத்தில் யெகோவாவுக்கு விரோதமாக கலகம் செய்யும் எவனும் உடனுக்குடன் நீக்கப்படுவான். அவருடைய பேரரசுரிமையை தாக்குகிறவனோ அவருடைய அதிகாரத்திற்கு கீழ்ப்படிய மறுக்கிறவனோ அங்கு இருக்க மாட்டான். உங்களை சுற்றியுள்ள எல்லாரும் உங்களைப் போலவே யெகோவாவை பிரியப்படுத்துவதில் ஆர்வமுடையவர்களாக இருப்பார்கள். அது எப்பேர்ப்பட்ட பாதுகாப்பாக இருக்கும்​—⁠இனி பூட்டுகளும் இருக்கப் போவதில்லை, தாழ்ப்பாள்களும் இருக்கப் போவதில்லை, ஏன், முழு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் கெடுத்துப்போடும் எதுவுமே இருக்கப் போவதில்லை!​—ஏசாயா 65:20; மீகா 4:4; 2 பேதுரு 3:13.

20, 21. (அ) சங்கீதம் 37:11-⁠ல் சொல்லப்பட்டுள்ள “சாந்தகுணமுள்ளவர்கள்” யார், ‘மிகுந்த சமாதானத்தை’ அவர்கள் எங்கு கண்டடைவார்கள்? (ஆ) பெரிய தாவீதை நாம் பின்பற்றினால் என்ன ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வோம்?

20 அதன் பின், ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ (சங்கீதம் 37:11அ) ஆனால், இந்த சாந்தகுணமுள்ளவர்கள் யார்? ‘சாந்தம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல வார்த்தை, “துன்புறுத்துதல், சிறுமைப்படுத்துதல், அவமானப்படுத்துதல்” என்ற வார்த்தைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆம், தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் எல்லா அநீதிகளையும் யெகோவா சரிசெய்வார் என்று மனத்தாழ்மையோடு காத்திருப்பவர்களே அந்த “சாந்தகுணமுள்ளவர்கள்.” அவர்கள் நிச்சயம் “மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11ஆ) உண்மையான கிறிஸ்தவ சபையோடு சம்பந்தப்பட்டுள்ள ஆவிக்குரிய பரதீஸில் இன்றும்கூட மிகுந்த சமாதானம் நிலவுவதை நாம் காண்கிறோம்.

21 பெரும் வேதனைகளிலிருந்து நாம் இன்னும் மீளவில்லையென்றாலும், ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதோடு, மனச்சோர்வுற்றவர்களுக்கு ஆறுதலும் அளித்து வருகிறோம். இதன் விளைவாக, யெகோவாவின் மக்களிடையே மெய்யான திருப்தி அதிகரிக்கிறது. மேய்ப்பர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள் நம் ஆவிக்குரிய தேவைகளை​—⁠சில நேரங்களில் சரீர தேவைகளையும்கூட​—⁠அன்போடு கவனித்துக் கொள்கிறார்கள்; இதனால் நீதியின் நிமித்தம் ஏற்படும் துன்பங்களை நம்மால் சகித்துக்கொள்ள முடிகிறது. (1 தெசலோனிக்கேயர் 2:7, 12; 1 பேதுரு 5:2, 3) எப்பேர்ப்பட்ட பொக்கிஷம் இந்த சமாதானம்! அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் வரவிருக்கும் சமாதானமான பரதீஸில் என்றென்றும் வாழும் நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அப்படியென்றால், யெகோவாவுக்கான பக்தி வைராக்கியத்தினால் தூண்டப்பட்டு, கடைசி வரைக்கும் உண்மையோடிருந்த பெரிய தாவீதான கிறிஸ்து இயேசுவை நாம் பின்பற்றுவோமாக. (1 பேதுரு 2:21) அவ்வாறு செய்வதன் மூலம், நாம் தொடர்ந்து சந்தோஷமுள்ளவர்களாக இருப்போம்; அதோடு, நம் தேவனாகிய யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருந்து அவரை துதித்துக்கொண்டே இருப்போம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 12 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

உங்கள் பதிலென்ன?

சங்கீதம் 37:1, 2-லிருந்து என்ன பாடங்களை கற்றுக்கொண்டீர்கள்?

• “யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிரு”ப்பது எப்படி?

• நாம் யெகோவா மீது நம்பிக்கையோடு சார்ந்திருக்​கலாம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 9-ன் படம்]

‘நியாயக்கேடு செய்கிறவர்கள் மீது கிறிஸ்தவர்கள் பொறாமை கொள்வதில்லை’

[பக்கம் 10-ன் படம்]

“யெகோவாவை நம்பி நன்மை செய்”

[பக்கம் 11-ன் படம்]

யெகோவாவையும் அவர் வழிகளையும் பற்றி எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கற்றுக்​கொண்டு, அவரில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்

[பக்கம் 12-ன் படம்]

‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்’