Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

எருசலேம் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்ட காலப்பகுதியில், எந்த அர்த்தத்தில் எசேக்கியேல் ‘மௌனமானார்’ அல்லது ‘ஊமையானார்’?

அவர் ஏற்கெனவே அறிவித்திருந்த யெகோவாவின் தீர்க்கதரிசன செய்தியுடன் கூடுதலாக சேர்த்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதையே இது அர்த்தப்படுத்தியது.

பாபிலோனில் சிறைக்கைதிகளாய் இருந்த இஸ்ரவேலருக்கு பொ.ச.மு. 613-⁠ல், அதாவது “யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷ”த்தில், எசேக்கியேல் தீர்க்கதரிசி உண்மையுள்ள காவற்காரனாக பணியாற்ற ஆரம்பித்தார். (எசேக்கியேல் 1:2, 3) பாபிலோனியர் எருசலேமை முற்றுகையிட தொடங்குவது பற்றி பொ.ச.மு. 609-⁠ம் ஆண்டில், சந்திர மாதம் பத்தாம் மாதத்தில் பத்தாம் தேதியன்று கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. (எசேக்கியேல் 24:1, 2) அந்த முற்றுகையின் முடிவு என்ன? எருசலேமும் அதிலிருந்த உண்மையற்ற ஜனங்களும் தப்பிப்பிழைப்பார்களா? அழிவைப் பற்றி யெகோவா உரைத்த திட்டவட்டமான செய்தியை ஒரு காவற்காரனாக எசேக்கியேல் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதனால் அந்தச் செய்தியை இன்னும் உறுதிப்படுத்துவதற்கு எசேக்கியேல் எதையும் கூடுதலாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. ஆகவே, எருசலேமின் முற்றுகையைக் குறித்து இன்னும் கூடுதலாக சொல்வது சம்பந்தமாக எசேக்கியேல் ‘மௌனமானார்.’​—எசேக்கியேல் 24:25-27.

பொ.ச.மு. 607-⁠ல் பரிசுத்த நகரமாகிய எருசலேம் அழிக்கப்பட்டு சுமார் ஆறு மாதத்திற்குப் பின்பு, அழிவைப் பற்றிய செய்தியை அதிலிருந்து தப்பினவன் ஒருவன் பாபிலோனில் இருந்த எசேக்கியேலுக்கு கொண்டு வந்தான். அவன் வந்து சேருவதற்கு முந்தைய நாள் மாலையில், ‘[எசேக்கியேலின்] வாயை யெகோவா திறந்திருக்கப் பண்ணினார். . . . பின்பு [அவர்] மெளனமாயிருக்கவில்லை.’ (எசேக்கியேல் 33:22) அதோடு எசேக்கியேலின் மௌனம் கலைந்தது.

அந்தக் காலப்பகுதியில் எசேக்கியேல் சொல்லர்த்தமாகவே மௌனமாய் இருந்தாரா? இல்லை, ஏனென்றால் அவர் ‘மௌனமாக’ ஆனதற்குப் பின்பும்கூட, எருசலேமின் வீழ்ச்சியைக் குறித்து குதூகலமாயிருந்த அண்டை நாடுகளைக் குறித்து முக்கியமாக அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். (எசேக்கியேல் 25-32 அதிகாரங்கள்) ஒரு தீர்க்கதரிசியாகவும் காவற்காரனாகவும் எசேக்கியேல் தனது பணியை ஆரம்பித்த சமயத்தில், யெகோவா அவரிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப் பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார். நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்.” (எசேக்கியேல் 3:26, 27) இஸ்ரவேலரிடம் சொல்வதற்கு யெகோவாவிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லாதபோது, அந்தத் தேசத்தைப் பொறுத்தவரை எசேக்கியேல் மெளனமாயிருக்க வேண்டியிருந்தது. எசேக்கியேல் எந்தச் சமயத்தில் எதைப் பேச வேண்டும் என யெகோவா விரும்பினாரோ அவ்வாறே அவர் பேச வேண்டியிருந்தது. ஆகவே, எசேக்கியேல் ஊமையாக இருந்தது என்பது இஸ்ரவேலருக்கு தீர்க்கதரிசன முக்கியத்துவமுடைய வார்த்தைகளை சொல்வது சம்பந்தமாக மெளனமாய் இருந்ததையே அர்த்தப்படுத்தியது.

நவீன நாளைய காவற்கார வகுப்பாராகிய அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் எருசலேமுக்கு படமாக இருக்கும் கிறிஸ்தவமண்டலத்தின் அழிவைப் பற்றி எச்சரிக்கை கொடுத்து வந்திருக்கின்றனர். “மிகுந்த உபத்திரவம்” பொய் மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனை’ பாழாக்கும்போது, அபிஷேகம் பண்ணப்பட்ட எசேக்கியேல் வகுப்பார், அந்தப் பேரரசில் பெரும் பாகம் வகிக்கும் கிறிஸ்தவமண்டலத்தின் அழிவைப் பற்றி வேறெதுவும் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது.​—மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 17:1, 2, 5.

ஆம், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரும் அவர்களுடைய உடன் தோழர்களும் ஊமையாக இருக்கும் காலம் வரும், அதாவது கிறிஸ்தவமண்டலத்திற்கு இனிமேலும் எதுவும் சொல்ல வேண்டியிராத ஒரு காலம் வரும். ‘பத்துக் கொம்புகளும்’ ‘அந்த மூர்க்க மிருகமும்’ மகா பாபிலோனை பாழும் நிர்வாணமுமாக்கும் காலமே அது. (வெளிப்படுத்துதல் 17:16, NW) ஆனால், கிறிஸ்தவர்கள் சொல்லர்த்தமாக மௌனமாயிருப்பார்கள் என இது அர்த்தப்படுத்தாது. இப்பொழுது அவர்கள் செய்வது போல, அப்போதும் அவர்கள் யெகோவாவை துதிப்பார்கள், அனுதினமும் “எல்லாத் தலைமுறைகளிலும்” அவரைப் பற்றி சொல்வார்கள்.​—சங்கீதம் 45:17; 145:⁠2.