Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அனபாப்டிஸ்டுகள் அவர்கள் யார்?

அனபாப்டிஸ்டுகள் அவர்கள் யார்?

அனபாப்டிஸ்டுகள் அவர்கள் யார்?

ஜெர்மனியில், வெஸ்ட்ஃபேல்யாவிலுள்ள மன்ஸ்டர் நகரின் மையப்பகுதிக்கு முதன்முதலாக விஜயம் செய்வோர், கட்டாயம் சற்று நின்று ஒரு சர்ச் கோபுரத்தில் தொங்கும் மூன்று இரும்புக் கூண்டுகளை உன்னிப்பாக பார்ப்பார்கள். இந்தக் கூண்டுகள் இடையிடையே சில காலத்திற்கு அகற்றப்பட்டிருந்தாலும் ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அவை அங்கு தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், எல்லார் முன்னிலையிலும் சித்திரவதை செய்து, கொலை செய்யப்பட்ட மூன்று நபர்களின் சடலங்கள் இந்தக் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த மூவரும் அனபாப்டிஸ்டுகள்; இந்தக் கூண்டுகள் இவர்களுடைய ராஜ்யத்தின் நினைவுச் சின்னங்களாகும்.

அனபாப்டிஸ்டுகள் யார்? இவர்களுடைய இயக்கம் எப்படி ஆரம்பமானது? இவர்களுடைய முக்கிய போதனைகள் யாவை? இந்த மூவரும் ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? இந்தக் கூண்டுகளுக்கும் அவர்களுடைய ராஜ்யத்திற்கும் என்ன சம்பந்தம்?

சர்ச் சீர்திருத்தம்​—⁠ஆனால் எப்படி?

15-⁠ம் நூற்றாண்டின் இறுதியிலும் 16-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ரோமன் கத்தோலிக்க சர்ச் மற்றும் குருவர்க்கத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. ஊழலும் ஒழுக்கக்கேடும் சர்ச்சில் தலைவிரித்தாடின; ஆகவே பெரும் மாற்றங்கள் தேவை என்பதை பலரும் உணர்ந்தனர். 1517-⁠ல் மார்ட்டின் லூத்தர் சமய சீர்திருத்தத்திற்கு அறைகூவல் விடுத்தார்; இதற்கு மற்றவர்களுடைய ஆதரவும் கிடைத்தபோது சீக்கிரத்தில் புராட்டஸ்டன்ட் சமய சீர்திருத்தம் தலைதூக்க ஆரம்பித்தது.

ஆனால் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், எந்தளவுக்கு செய்ய வேண்டும் என்பதில் இந்த சீர்திருத்தவாதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவின. வணக்க விஷயங்களில் பைபிளை உறுதியாக பின்பற்றுவதன் அவசியத்தை பலரும் அறிந்திருந்தார்கள். இருந்தாலும், பைபிள் போதனைகளின் பொதுவான விளக்கத்தைக்கூட இந்த சீர்திருத்தவாதிகளால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலரோ இந்தச் சமய சீர்திருத்தம் மந்தகதியில் போய்க்கொண்டிருப்பதாக நினைத்தார்கள். இந்த சீர்திருத்தவாதிகள் மத்தியில்தான் அனபாப்டிஸ்ட் இயக்கம் தோன்றியது.

“உண்மையைச் சொன்னால், ஒரேவொரு பாப்டிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, ஆனால் பல இருந்தன” என டி டாய்ஃபா ஜெஷிக்ட் உண்டு டாய்டுங் என்ற தனது புத்தகத்தில் ஹான்ஸ்-யூயர்ஜன் ஜோர்ட்ஸ் எழுதுகிறார். உதாரணமாக, 1521-⁠ல் ஸ்விக்காவ் தீர்க்கதரிசிகள் என அழைக்கப்பட்ட நான்கு பேர் அனபாப்டிஸ்ட் போதனைகளை விட்டன்பர்க்கில் பிரசங்கித்தபோது பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. மேலும் 1525-⁠ல் அனபாப்டிஸ்டுகளின் மற்றொரு தொகுதி சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச்சில் ஸ்தாபிக்கப்பட்டது. மரேவியாவிலும் (தற்போது செக் குடியரசு) நெதர்லாந்திலும் அனபாப்டிஸ்ட் சமுதாயங்கள் உருவாயின.

ஞானஸ்நானம்​—⁠பிள்ளைகளுக்கா பெரியவர்களுக்கா?

அனபாப்டிஸ்ட் சமுதாயங்கள் பெரும்பாலும் சின்னஞ்சிறியவையாகவே இருந்தன, அதன் அங்கத்தினர்கள் அமைதியை நாடுவோராக இருந்தனர். அதன் ஆதரவாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை இரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை, சொல்லப்போனால், மற்றவர்களுக்குப் பிரசங்கித்தனர். 1527-⁠ல் ஷிலைட்ஹைம் அறிக்கையில் அனபாப்டிஸ்ட் மதத்தினரின் அடிப்படை போதனைகள் வரையறுக்கப்பட்டன. அத்துடன், அவர்கள் இராணுவ சேவையில் ஈடுபட மறுத்தனர், உலகிலிருந்து தங்களை தனியாக பிரித்து வைத்துக்கொண்டனர், தவறு செய்தவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தனர். ஆனால், குழந்தைகளுக்கல்ல பெரியவர்களுக்கே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்ற உறுதியான நம்பிக்கைதான் அனபாப்டிஸ்டுகளை மற்ற மதத்தாரிடமிருந்து பிரித்துக் காட்டிய முக்கிய அம்சம் ஆகும். *

பெரியவர்களுக்கான ஞானஸ்நானம் என்பது மதக்கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டுமல்ல, அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் இருந்தது. ஒருவர் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதற்காக பெரியவர் ஆகும் வரை ஞானஸ்நானத்தை தள்ளிப்போடுவதற்கு அனுமதித்தால், சிலர் ஞானஸ்நானம் எடுக்காமலேயே இருந்துவிடலாம். இவ்வாறு ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், ஓரளவுக்கு சர்ச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாக இருப்பார்கள். இதனால் பெரியவர்கள் ஞானஸ்நானம் சில சர்ச்சுகளுக்கு பேரிழப்பாக இருந்தது.

ஆகவே, கத்தோலிக்கரும் லூத்தரன் சபையினரும் பெரியவர்கள் ஞானஸ்நானத்தை விரும்பவில்லை. 1529-⁠க்கு பிறகு, சில பகுதிகளிலாவது இத்தகைய ஞானஸ்நானத்தை கொடுத்தவர்கள் அல்லது பெற்றவர்கள் மரண தண்டனைக்கு ஆளாகும் நிலையில் இருந்தனர். “ஜெர்மன் நாட்டின் புனித ரோம சாம்ராஜ்யம் முழுவதிலுமிருந்த [அனபாப்டிஸ்டுகள்] கடுமையாக துன்புறுத்தப்பட்டனர்” என இதழாசிரியர் தாமஸ் ஸீஃபர்ட் விளக்குகிறார். மன்ஸ்டரில் துன்புறுத்தல் உச்சக்கட்டத்தை எட்டியது.

இடைக்கால மன்ஸ்டர் மாற்றத்தை நாடுகிறது

இடைக்காலத்தின்போது மன்ஸ்டரில் சுமார் 10,000 குடிமக்கள் இருந்தனர். சுமார் 90 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 5 கிலோமீட்டர் சுற்றளவுமுடைய பாதுகாப்புமிக்க வலுவான கோட்டைக்குள் அவர்கள் இருந்தனர். கோட்டை அசைக்க முடியாததாக இருந்தாலும் உள்ளே நிலவிய நிலைமை ஆட்டங்காண்பதாக இருந்தது. மன்ஸ்டர் நகர மியூசியம் வெளியிட்ட த கிங்டம் ஆஃப் தி அனபாப்டிஸ்ட்ஸ் என்ற புத்தகம் “நகரின் சட்டப் பேரவைக்கும் மக்கள் கழகங்களுக்கும் இடையில் நிகழ்ந்த அரசியல் பூசல்கள்” பற்றி குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, குருவர்க்கத்தினரின் நடத்தையைக் கண்டு குடிமக்கள் கோபத்தில் கொதித்தனர். இதன் விளைவாக சமய சீர்திருத்தத்தை மன்ஸ்டர் தழுவியது, அதோடு 1533-⁠ல் அது இனிமேலும் கத்தோலிக்க நகரமாக இல்லாமல் ஒரு லூத்தரன் நகரமாக மாறியது.

மன்ஸ்டரில் பிரசங்கிகளாக இருந்த சீர்திருத்தவாதிகளில் பிரதானமானவர்தான் பெர்ன்ஹார்ட் ராத்மான், அவர் கொஞ்சம் துடுக்கானவர். எனவே “ராத்மானின் கருத்துக்கள் அனபாப்டிஸ்ட் மத கருத்துக்களாக ஆகிவிட்டதில் ஆச்சரியமேதுமில்லை; அவரும் அவருடைய மற்ற கூட்டாளிகளும் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க மறுத்தனர்” என நூலாசிரியர் ஃப்ரிட்ரிக் ஓயினிங்கா குறிப்பிடுகிறார். அவர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றார், இருந்தாலும் சிலருக்கு அவருடைய தீவிர கருத்துக்கள் சகிக்க முடியாதவையாய் இருந்தன. “முன்பிருந்த மத சூழலை விரும்பிய மக்களில் அநேகர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்ற பயத்தில் நகரை விட்டே வெளியேறினர். தங்களுடைய இலட்சியங்களை அடைய முடியும் என்ற எண்ணத்தில் எல்லா இடங்களிலிருந்தும் அனபாப்டிஸ்ட்டுகள் மன்ஸ்டர் நகருக்கு திரண்டு வந்தனர்.” மன்ஸ்டரில் அனபாப்டிஸ்ட்டுகள் இப்படி பெருமளவில் வந்து குவிந்தது அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவத்திற்கு அடிகோலியது.

புதிய எருசலேமின் முற்றுகை

டச்சுக்காரர்கள் இருவர் மன்ஸ்டரில் குடியேறினார்கள்; அவர்கள்தான் ஹார்லெமைச் சேர்ந்த ரொட்டி தயாரிப்பாளரான யான் மாத்திஸ் மற்றும் யான் பாயிகல்ஸன், இவர் லைடனை சேர்ந்த ஜான் என அறியப்பட்டார். அங்கு மாற்றங்கள் ஏற்படுத்துவதில் இவர்களே முக்கிய பங்கு வகித்தனர். மாத்திஸ் தன்னை ஒரு தீர்க்கதரிசி என சொல்லிக்கொண்டதோடு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஏப்ரல் 1534-⁠ல் நடக்கும் எனவும் அறிவித்தார். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய எருசலேம்தான் இந்நகரம் என அறிவிக்கப்பட்டது, இதனால் உலக முடிவைக் குறித்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவின. சொத்துக்கள் அனைத்தையும் அனைவரும் சமமாக அனுபவிக்க வேண்டுமென ராத்மான் தீர்மானித்தார். ஞானஸ்நானம் எடுப்பதா அல்லது நகரை விட்டு வெளியேறுவதா என்ற ஒரு தீர்மானத்தை பெரியவர்கள் எடுக்க வேண்டியிருந்தது. இதனால் எண்ணற்றோர் ஞானஸ்நானம் பெற்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு போக மனமில்லாததால் ஞானஸ்நானம் எடுத்தனர்.

மத ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அனபாப்டிஸ்டுகளின் கோட்டையாக திகழ்ந்த முதல் நகரமாக மன்ஸ்டர் மாறியபோது பிற சமுதாயத்தினர் கதிகலங்கி நின்றனர். டி டாய்ஃபா ட்ஸூ மன்ஸ்ட என்ற புத்தகம் குறிப்பிடுகிறபடி, இந்த சூழ்நிலையால் “ஜெர்மன் நாட்டின் புனித ரோம சாம்ராஜ்யம் முழுவதும் மன்ஸ்டரை எதிர்த்தது.” உள்ளூரில் உயர் பதவி வகித்த இளவரசரும் பிஷப்புமான கௌன்ட் ஃபிரான்ட்ஸ் ஃபான் வால்டெக், மன்ஸ்டரை முற்றுகையிட ஒரு படையைத் திரட்டினார். அந்தப் படையில் லூத்தரன் சபையினரும் கத்தோலிக்கரும் இருந்தார்கள். சமய சீர்திருத்தத்தின் போது முன்னாள் எதிரிகளாகவும் சீக்கிரத்தில் நடக்கவிருந்த முப்பது வருட போரில் களம் இறங்கவும் இருந்த அந்த இரு மதத்தாரும் அனபாப்டிஸ்டுகளை எதிர்ப்பதில் ஒன்றுபட்டனர்.

அனபாப்டிஸ்ட் ராஜ்யத்தின் அழிவு

நகரத்திற்குள் பாதுகாப்பாய் இருந்தவர்கள் முற்றுகையிட்ட படையின் வலிமையைக் கண்டு அஞ்சவில்லை. ஏப்ரல் 1534-⁠ல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நிகழும் என எதிர்பார்த்த சமயத்தில் தனக்கு கடவுளுடைய பாதுகாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாத்திஸ் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறி நகருக்கு வெளியே வந்தார். அவருடைய ஆதரவாளர்கள் கோட்டைக்கு வெளியே எட்டிப் பார்த்தபோது முற்றுகையிட்டிருந்த துருப்புக்கள் மாத்திஸை கண்டந்துண்டமாக வெட்டி அவருடைய தலையை ஒரு கழுமரத்தில் தொங்கவிட்டிருந்ததைக் கண்டு எப்படி கதிகலங்கி போயிருப்பார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

மாத்திஸுக்கு அடுத்ததாக லைடனை சேர்ந்த ஜான் பதவியேற்றார், மன்ஸ்டரில் அனபாப்டிஸ்டுகளின் அரசன் யான் என்ற பெயரையும் அவர் சூட்டிக் கொண்டார். நகரிலிருந்த ஆண், பெண் என இருபாலாரின் எண்ணிக்கையை அவர் சமநிலைப்படுத்த முயன்றார். ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், தங்கள் மனங்கவர்ந்த எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் செய்துகொள்ளும்படி ஆண்களை உற்சாகப்படுத்தினார். மன்ஸ்டரில் விபச்சாரம், வேசித்தனம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதே சமயத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டது, உற்சாகப்படுத்தவும் பட்டது; இது அங்கு அனபாப்டிஸ்ட்டுகளின் ராஜ்யத்தில் நிலவிய மிதமிஞ்சிய நிலைமைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அரசனாகிய யானும்கூட 16 மனைவிகளை மணந்தார். அவருடைய மனைவிகளில் ஒருவரான எலிசபெத் வான்ட்ஷேயர் என்பவர் நகரை விட்டு வெளியேறுவதற்கு அவரிடம் அனுமதி கேட்டபோது எல்லார் முன்பாகவும் அவருடைய தலை துண்டிக்கப்பட்டது.

அந்த நகரின் முற்றுகை 14 மாதங்களுக்கு நீடித்தது, கடைசியாக ஜூன் 1535-⁠ல் நகரம் கைப்பற்றப்பட்டது. மன்ஸ்டர் நகரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது, இதே போன்ற அழிவை இரண்டாம் உலகப் போரின் போதுதான் அது மீண்டும் சந்தித்தது. ராத்மான் தப்பித்துக்கொண்டார், ஆனால் அரசனாகிய யானும் அனபாப்டிஸ்டுகளின் முக்கிய தலைவர்கள் இருவரும் பிடிபட்டனர், அவர்கள் சித்திரவதைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டனர். அவர்களுடைய உடல்கள் கூண்டுகளுக்குள் போடப்பட்டு செ. லாம்பெர்ட் சர்ச்சின் கோபுரத்தில் தொங்கவிடப்பட்டன. அது, “கிளர்ச்சி செய்யும் எவருக்குமே கிலியை ஏற்படுத்தும் ஒரு எச்சரிக்கையாக இருந்தது” என ஸீஃபர்ட் விளக்குகிறார். ஆம், அவர்கள் அரசியலில் தலையிட்டதால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேர்ந்தது.

மற்ற அனபாப்டிஸ்ட் சமுதாயங்களுக்கு என்ன நேர்ந்தது? ஐரோப்பா முழுவதும் துன்புறுத்தல் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. அனபாப்டிஸ்ட்டுகளில் சிறுபான்மையோர் போரை ஆதரித்தாலும் பெரும்பான்மையோர் போரிலோ வன்முறையிலோ ஈடுபடுவது தவறு என்ற கொள்கையை உறுதியாக பின்பற்றினர். பிற்பாடு, முன்னாள் பாதிரியாயிருந்த மெனோ சிமோன்ஸ் அனபாப்டிஸ்ட்டுகளின் தலைவரானார்; கடைசியில் இந்த மதப் பிரிவினர் மெனோனைட்டுகள் என்றும் இன்னும் பல பெயர்களிலும் அறியப்படலாயினர்.

மூன்று கூண்டுகள்

மொத்தத்தில் அனபாப்டிஸ்டுகள் மதப்பற்றுடையவர்கள்; அவர்கள் பைபிள் நியமங்களை உறுதியாய் பின்பற்ற முயன்றவர்கள். ஆனால் மன்ஸ்டரில் இருந்த முற்போக்குவாதிகளினால் அனபாப்டிஸ்டுகள் தங்கள் கொள்கைகளை கைவிட்டு அரசியலில் ஈடுபட வேண்டியதாயிற்று. அவர்கள் பைபிள் நியமங்களை கைவிட்டவுடன் அவர்களுடைய இயக்கம் புரட்சிகரமான ஒன்றாகிவிட்டது. இது அனபாப்டிஸ்டுகளுக்கும் இடைக்கால நகரமான மன்ஸ்டருக்கும் அழிவைத் தேடித் தந்தது.

இந்த நகருக்கு விஜயம் செய்வோருக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதிகலங்க வைக்கும் சரித்திரம் இன்றும் நினைப்பூட்டப்படுகிறது. எப்படி? சர்ச் கோபுரத்தில் தொங்கும் இந்த மூன்று இரும்புக் கூண்டுகளே அதை நினைப்பூட்டுகின்றன.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 9 இக்கட்டுரை குழந்தை ஞானஸ்நானத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ உள்ள விவாதங்களை அலசுவதில்லை. இந்த விஷயத்தின் பேரில் கூடுதலான தகவல்களுக்கு, காவற்கோபுரம், மார்ச் 15, 1986 (ஆங்கிலம்) இதழில் “குழந்தைகள் ஞானஸ்நானம் பெற வேண்டுமா?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 13-ன் படங்கள்]

அரசனான யான் சித்திரவதைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டு செ. லாம்பெர்ட் சர்ச்சின் கோபுரத்தில் தொங்கவிடப்பட்டார்