Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இன்று பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் சவால்

இன்று பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் சவால்

இன்று பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் சவால்

ஓர் இரவு வேளையில் ஹோட்டல் முதலாளி ஒருவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப தயாராகிறார். அந்த நேரம் பார்த்து இரண்டு பெண்களும் அவர்களோடு ஒரு சிறுவனும் உள்ளே நுழைந்து சாப்பாடு ஆர்டர் பண்ணுகிறார்கள். மிகவும் களைப்படைந்து விட்டதால், ஹோட்டல் அடைத்தாகிவிட்டது என சொல்ல வாயெடுக்கிறார், இருந்தாலும் அவர்களுக்கு சாப்பாடு போட தீர்மானிக்கிறார். அந்த இரண்டு பெண்களும் பேசிக்கொண்டே சாப்பிடுகையில், அந்தச் சிறுவன் ஹோட்டலுக்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறான், பிஸ்கட்டுகளையெல்லாம் கீழேபோட்டு காலில் மிதித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பிள்ளையின் தாய் அவனை அதட்டுவதற்குப் பதிலாக புன்முறுவல் செய்கிறாள். அவர்கள் சாப்பிட்டு கிளம்பிய பிறகு, சக்தியெல்லாம் இழந்து சோர்ந்திருக்கும் அந்த முதலாளி இப்பொழுது குப்பைகளையெல்லாம் பெருக்கியெடுக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் அறிந்திருக்கிறபடி, அநேக குடும்பங்கள் பிள்ளைகளை நன்றாக பயிற்றுவிப்பதில்லை என்பதை இந்த உண்மை சம்பவம் படம்பிடித்துக் காட்டுகிறது. இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பெற்றோர்கள் சிலர், பிள்ளைகள் சுதந்திரமாக வளர வேண்டுமென நினைத்துக்கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களுடைய மனம்போன போக்கிலேயே விட்டுவிடுகிறார்கள். அல்லது அவர்களுடைய வாழ்க்கை ரொம்ப பிஸியாக இருப்பதால், பிள்ளைகளுக்குத் தேவையான நல்ல கவனிப்பையும் பயிற்றுவிப்பையும் தருவதற்கு நேரம் செலவழிக்காமல் இருக்கலாம். பிள்ளையின் பள்ளிப் படிப்புதான் ரொம்ப முக்கியம் என சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்; அதனால் நல்ல மார்க் வாங்கி கௌரவமான காலேஜில் சேர்ந்துவிட்டால் போதும், அந்தப் பிள்ளைக்குக் கிட்டத்தட்ட எல்லா சுதந்திரமும் கொடுத்து விடுகிறார்கள்.

என்றாலும், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தின் மதிப்பீடுகள் சரிசெய்யப்பட வேண்டுமென சிலர் சொல்கிறார்கள். பிள்ளைகள் இப்பொழுது எல்லா வகையான குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றும், பள்ளியில் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். ஆகவே, பிள்ளைகளுடைய குணாதிசயத்தை வடிவமைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென கொரிய குடியரசில் சியோலிலுள்ள நடுநிலைப் பள்ளி முதல்வர் ஒருவர் வலியுறுத்தினார். “ஒரு பிள்ளைக்கு அறிவு புகட்டுவதற்கு முன்பு நல்ல நல்ல பண்புகளை புகட்ட வேண்டும்” என அவர் கூறினார்.

தங்களுடைய பிள்ளை பட்டதாரியாகி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென கனவு காண்கிற பெற்றோர்கள் அநேகர் எச்சரிப்புகளை காதில் போட்டுக் கொள்வதில்லை. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்களுடைய பிள்ளை எப்படிப்பட்டவனாக வளர விரும்புகிறீர்கள்? ஒழுக்கவுணர்வும் பொறுப்புணர்வுமிக்க ஓர் ஆளாகவா? மற்றவர்கள் மீது கரிசனை காட்டுகிற, எப்படிப்பட்ட சூழ்நிலைமைக்கும் தன்னை மாற்றியமைத்துக் கொள்கிற, நம்பிக்கையான மனநிலையுடைய ஒரு நபராகவா? அப்படியானால், தயவுசெய்து பின்வரும் கட்டுரையை சிந்தித்துப் பாருங்கள்.