Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பைபிள் கைகொடுக்குமா?

பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பைபிள் கைகொடுக்குமா?

பிள்ளைகளைப் பயிற்றுவிக்க பைபிள் கைகொடுக்குமா?

மிகவும் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் செடி அது. ஆனால் அதை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். அதை நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்றால், வெப்பம், வெளிச்சம், தொட்டியின் அளவு ஆகிய எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அயல் மண்ணுக்கும் உரத்திற்கும் அந்த ஆர்கிட் தாக்குப் பிடிக்காது, வியாதியோ பூச்சிகளோ தாக்கினால் சீக்கிரத்தில் பட்டுப்போய்விடும். அதனால்தான் முதல் தடவையாக ஆர்கிட்டை வளர்க்கும்போது பலர் தோல்வியடைந்து விடுகிறார்கள்.

பிள்ளைகளை வளர்ப்பதென்றால் இதைவிட கஷ்டம், சிக்கல், அதோடு அதற்கு அதிக கவனமும் தேவை. இதனால்தான் பிள்ளைகளை வளர்க்கும் விஷயத்தில் பெற்றோர்கள் பெரும்பாலோர் தங்களுக்கு திறமை போதாதென உணருகிறார்கள். ஆர்கிட்டுகளை வளர்ப்பவருக்கு நிபுணர்களுடைய அறிவுரை தேவைப்படுவது போல, தங்களுக்கும் உதவி தேவை என பலர் உணருகிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் மிகச் சிறந்த வழிநடத்துதலைப் பெறவே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட வழிநடத்துதலை எங்கே காணலாம்?

பைபிள் என்பது பிள்ளை வளர்ப்பைப் பற்றி சொல்லித்தரும் ஒரு பாடநூல் அல்ல என்றாலும், இந்த விஷயத்தில் நடைமுறையான அறிவுரைகள் பலவற்றை படைப்பாளர் அதில் பதிவு செய்திருக்கிறார். சிறந்த குணங்களை பிள்ளைகளுடைய இதயத்தில் பதிய வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமென பைபிள் வலியுறுத்துகிறது. இது பெரும்பாலும் அசட்டை செய்யப்படுவதாக பலர் உணருகிறார்கள். (எபேசியர் 4:22-24) இதன் சம்பந்தமாக, சமநிலையான கல்வியின் மிக முக்கியமான ஓர் அம்சத்தை பைபிள் குறிப்பிடுகிறது. காலங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும்சரி கலாச்சார பின்னணிகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும்சரி, அதைக் கடைப்பிடித்திருக்கிற ஆயிரக்கணக்கானோருக்கு இத்தகைய அறிவுரை ஏற்கெனவே பலன் தந்திருக்கிறது. எனவே, பைபிள் தரும் ஆலோசனையைப் பின்பற்றுவது உங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் விஷயத்தில் நீங்கள் வெற்றி பெற உதவும்.

பெற்றோரின் முன்மாதிரி​—⁠மிகச் சிறந்த கல்வி

“இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக் கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக் கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா?”​—⁠ரோமர் 2:21, 22.

சியோல் கல்வித்துறை தலைவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “சொல்லிலும் செயலிலும் முன்மாதிரி வைப்பதே பிள்ளைகளுக்கு மிகச் சிறந்த கல்வி.” பேச்சிலும் நடத்தையிலும் பெற்றோர்கள் சிறந்த முன்மாதிரியாக இல்லாமல் தங்கள் பிள்ளைக்கு ஏதாவது ஆலோசனை வழங்கினால் அவர்கள் மாய்மாலக்காரர்கள் என பிள்ளை உடனடியாக நினைத்துக்கொள்ளும். பெற்றோர்களுடைய வார்த்தைகள் வலுவிழந்துவிடும். உதாரணமாக, நேர்மையைப் பற்றி பிள்ளைக்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க விரும்பினால், முதலாவதாக அவர்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். சில சமயங்களில் ஏதாவது போன் வந்தால், “அப்பா (அல்லது அம்மா) வீட்டில் இல்லை” என சொல்லிவிடும்படி பிள்ளையிடம் பெற்றோர்கள் சிலர் கூறுவது சர்வசாதாரணம். இப்படிப்பட்ட வழிநடத்துதல் கொடுக்கப்படும் பிள்ளை தர்மசங்கடமாகவும் குழப்பமாகவும் உணரலாம். காலப்போக்கில், அந்தப் பிள்ளையே ஏதாவது சிக்கலான சூழ்நிலைமையில் இருந்தால், எந்தவித குற்றவுணர்வுமின்றி பொய் சொல்ல ஆரம்பித்துவிடலாம். ஆகவே, தங்களுடைய பிள்ளை நேர்மையான ஓர் ஆளாக வளர வேண்டுமென பெற்றோர்கள் உண்மையிலேயே விரும்பினால், அவர்கள்தாமே நேர்மையாக பேச வேண்டும், சொன்னபடி நடக்க வேண்டும்.

உங்களுடைய பிள்ளை மரியாதையுடன் பேசுவதற்கு நீங்கள் பயிற்றுவிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் சிறந்த முன்மாதிரி வைக்க வேண்டும். அப்பொழுது உங்களுடைய பிள்ளை அப்படியே உங்களைப் பின்பற்றி நடக்கும். நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனான சாங்-சிக் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “நானும் என் மனைவியும் காரசாரமாக பேசிக்கொள்ளக் கூடாது என முடிவு செய்தோம். ஒருவருக்கொருவர் மரியாதை காண்பித்தோம், கோபப்பட்ட போதும்கூட கத்திப் பேசவில்லை. சொல்லைவிட செயல்தான் அதிக பலன் தந்தது. மற்றவர்களுடன் பேசும்போது எங்களுடைய பிள்ளைகள் மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்வதை பார்க்கும்போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.” கலாத்தியர் 6:7-⁠ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” உயர்ந்த ஒழுக்க தராதரங்களைப் பிள்ளைகள் கடைப்பிடிக்க விரும்புகிற பெற்றோர்கள் தாமே முதலில் இத்தகைய தராதரங்களுக்கு ஏற்ப வாழ வேண்டும்.

நன்கு பேச்சுத்தொடர்பு கொள்ளுங்கள்

“நீ அவைகளை [கடவுளுடைய கட்டளைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே[சு].”​—⁠உபாகமம் 6:⁠7.

ஓவர்டைம் செய்யும் போக்கு இப்பொழுது அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி ஆகிய இருவருமே வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், இது பிள்ளைகள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் பெரும்பாலோர் தங்களுடைய பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. பெற்றோர்கள் வீட்டில் இருக்கும்போது, வீட்டு வேலையையும் மற்ற வேலைகளையும் கவனிக்க வேண்டும். அதனால் அவர்கள் அதிக களைப்படைந்துவிடலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில், பிள்ளைகளுடன் எவ்வாறு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்? நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் சேர்ந்து வீட்டு வேலைகளைச் செய்தால் உரையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத் தலைவர் ஒருவர் முக்கியமாக தனது பிள்ளைகளுடன் உரையாடுவதற்காக டிவி-யைக்கூட விற்றுவிட்டார். அவர் கூறினார்: “முதலில் பிள்ளைகளுக்கு ரொம்ப போராக இருந்தது, ஆனால் அவர்களுடன் சேர்ந்து புதிர் விளையாட்டு விளையாடினேன், ஆர்வமூட்டும் புத்தகங்களை அவர்களுக்குப் படித்துக் காட்டினேன். பிறகு கொஞ்ச நாளில் டிவி இல்லாமல் இருக்க பழகிக்கொண்டார்கள்.”

சிறுபிராயத்திலேயே தங்களுடைய பெற்றோர்களுடன் பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்ள பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பிள்ளைகள் பருவ வயதை அடையும்போது, ஒருவேளை பிரச்சினைகளை எதிர்ப்படும்போது, தங்கள் பெற்றோர்களை நண்பர்களாக கருதி மனம்விட்டு பேச மாட்டார்கள். மனதில் உள்ளதை அவர்கள் கொட்டுவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்? நீதிமொழிகள் 20:5 இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர் போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.” “நீ என்ன நினைக்கிறாய்?” போன்ற நோக்குநிலை கேள்விகளைப் பயன்படுத்துவதன் மூலம் பிள்ளைகள் தங்களுடைய கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த பெற்றோர்கள் உற்சாகப்படுத்தலாம்.

உங்களுடைய பிள்ளை ஒரு பெரிய தப்பு பண்ணிவிட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டிய சமயம் அதுதான். உங்கள் பிள்ளை சொல்வதை செவிகொடுத்துக் கேட்கும்போது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைமையை கையாண்ட விதத்தைப் பற்றி ஒரு தகப்பன் இவ்வாறு கூறுகிறார்: “பிள்ளைகள் தப்பு பண்ணும்போது, நான் ரொம்ப உணர்ச்சிவசப்படாமல் இருக்க பார்த்துக்கொள்கிறேன். அவர்கள் சொல்ல வருவதை பொறுமையாக உட்கார்ந்து கேட்கிறேன். சூழ்நிலைமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். என்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும்போது, சற்று நேரமெடுத்துக்கொண்டு என்னை அடக்கிக்கொள்கிறேன்.” உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி செவிகொடுத்துக் கேட்பீர்களென்றால், நீங்கள் கொடுக்கும் புத்திமதியை பிள்ளைகள் உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள்.

அன்பினால் கண்டிப்பது அவசியம்

“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”​—⁠எபேசியர் 6:⁠4.

நல்ல பலன்களைப் பெற, நீங்கள் அன்புடன் சிட்சை கொடுப்பது முக்கியம். பெற்றோர்கள் எவ்வாறு ‘பிள்ளைகளைக் கோபப்படுத்திவிடக்கூடும்’? செய்த தவறுக்கு ஏற்றவாறு சிட்சை கொடுக்காவிட்டால் அல்லது ரொம்ப குற்றப்படுத்தும் விதமாக கொடுத்துவிட்டால், பிள்ளைகள் எதிர்க்கக்கூடும். சிட்சையை எப்பொழுதும் அன்புடன் கொடுக்க வேண்டும். (நீதிமொழிகள் 13:24) உங்களுடைய பிள்ளைகளிடம் நியாயமாக எடுத்துக்காட்டி பேசினால், நீங்கள் அன்பாக கண்டிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.​—நீதிமொழிகள் 22:15; 29:⁠19.

மறுபட்சத்தில், தவறான நடத்தையால் வரும் மோசமான விளைவுகளை பிள்ளைகள் அனுபவிக்கும்படி செய்வது நல்லது. உதாரணமாக, ஒருவருக்கு எதிராக அந்தப் பிள்ளை ஏதாவது தவறிழைத்துவிட்டால், மன்னிப்பு கேட்கும்படி நீங்கள் அவனை வற்புறுத்தலாம். வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி நடந்தால், அவற்றிற்கு கீழ்ப்படிந்து நடப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக நீங்கள் சில சலுகைகளைக் கொடுக்காமல் நிறுத்தி வைக்கலாம்.

சரியான சமயத்தில் கண்டிப்பதும் முக்கியம். பிரசங்கி 8:11 இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது: “துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.” தப்பு செய்துவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என அநேக பிள்ளைகள் முயன்று பார்ப்பார்கள். ஆகவே, குறிப்பிட்ட ஒரு தவறுக்கு தண்டனை கிடைக்குமென நீங்கள் எச்சரித்துவிட்டால், அதை நிறைவேற்ற தவறாதீர்கள்.

ஆரோக்கியமான பொழுதுபோக்கு பயனளிக்கிறது

“நகைக்க ஒரு காலமுண்டு; . . . நடனம் பண்ண ஒரு காலமுண்டு.”​—⁠பிரசங்கி 3:4.

பிள்ளையின் உடல் வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் ஓய்வுநேரமும் ஆரோக்கியம் அளிக்கும் சமநிலையான பொழுதுபோக்கும் அவசியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் பொழுதுபோக்கில் ஈடுபடும்போது, குடும்ப பந்தங்கள் பலப்படுகின்றன, பாதுகாப்பு உணர்வையும் பிள்ளைகள் பெறுகிறார்கள். எப்படிப்பட்ட பொழுதுபோக்குகளை குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றுசேர்ந்து அனுபவிக்கலாம்? அதற்காக நேரமெடுத்து சிந்தித்துப் பார்த்தால் இன்பந்தரும் அநேக காரியங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம். சைக்கிள் ஓட்டுவதும், டென்னிஸ், பேட்மின்ட்டன், வாலிபால் போன்ற விளையாட்டுக்களும் இருக்கின்றன. குடும்பம் ஒன்றுசேர்ந்து இசைக் கருவிகளை இசைக்கும்போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இயற்கையை கண்டுகளிக்க அருகிலுள்ள இடங்களைப் போய் பார்ப்பதும் இனிய நினைவுகளை மனதில் விட்டுச்செல்லும்.

இத்தகைய சூழ்நிலைமைகளில், பொழுதுபோக்கு சம்பந்தமாக பிள்ளைகள் மனதில் சமநிலையான நோக்கை பதிய வைக்கலாம். மூன்று மகன்களுக்கு தகப்பனான ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு கூறினார்: “முடிந்தால் நானும் என் பிள்ளைகளுடன் சேர்ந்து பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறேன். உதாரணமாக, கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடும்போது, அதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்பேன். அதைப் பற்றி அவர்கள் உற்சாகத்துடன் விளக்கும்போது, மோசமான பொழுதுபோக்குகளால் வரும் ஆபத்துக்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வேன். இதனால் மோசமான பொழுதுபோக்குகளை அவர்கள் புறக்கணித்து விடுவதை நான் கவனித்திருக்கிறேன்.” குடும்பமாக சேர்ந்து பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில் சந்தோஷம் காணும் பிள்ளைகளுக்கு டெலிவிஷன் நிகழ்ச்சிகள், வீடியோக்கள், சினிமா படங்கள் போன்றவற்றைப் பார்க்கும் அல்லது வன்முறை, ஒழுக்கக்கேடு, போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவை நிறைந்த இன்டர்நெட் கேம்ஸில் ஈடுபடும் எண்ணம் அதிகம் வருவதில்லை.

நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.”​—⁠நீதிமொழிகள் 13:⁠20.

நான்கு பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்த கிறிஸ்தவ தகப்பன் ஒருவர் இவ்வாறு கூறினார்: “அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது மிக மிக முக்கியம். ஒரேவொரு கெட்ட நண்பர் போதும், நீங்கள் இதுவரை பாடுபட்டு வளர்த்து வந்த உங்கள் பிள்ளையை கெடுத்து குட்டிச்சுவராக்குவதற்கு.” ஆகவே, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தன் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய பின்வரும் ஞானமான கேள்விகளை அவர் கேட்டார்: “உன்னுடைய மிக நெருங்கிய நண்பன் யார்? நீ ஏன் அவனிடம் பழகுகிறாய்? அவனுடைய எந்த குணத்தை பின்பற்ற நீ விரும்புகிறாய்?” மற்றொரு தகப்பன் தனது பிள்ளைகள் நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரும்படி ஏற்பாடு செய்கிறார். இதனால் அவர்களை கண்காணித்து, பிள்ளைகளுக்குத் தேவையான வழிநடத்துதலை அவரால் கொடுக்க முடிகிறது.

தங்களுடைய வயதை ஒத்த ஆட்களுடன் மட்டுமல்ல, முதியோருடனும் நட்பு வைத்துக்கொள்ள முடியும் என்பதை பிள்ளைகளுக்கு கற்பிப்பது முக்கியம். மூன்று மகன்களுக்குத் தகப்பனான பம்-சன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “நண்பர்கள் ஒத்த வயதினராகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, பைபிளிலுள்ள தாவீதையும் யோனத்தானையும் போல இருக்கலாம் என்பதை என் பிள்ளைகள் புரிந்துகொள்ள உதவி செய்கிறேன். என் பிள்ளைகளுடன் சேர்ந்து பழகுவதற்காக பல்வேறு வயதுடைய கிறிஸ்தவர்களை நான் அழைக்கிறேன். அதனால் ஒத்த வயதில் இல்லாத அநேக ஆட்களுடன் பிள்ளைகள் பழகுகிறார்கள்.” முன்மாதிரியுள்ள பெரியவர்களுடன் பழகுவது அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு வாய்ப்பளிக்கிறது.

பிள்ளை வளர்ப்பில் நீங்கள் வெற்றிபெற முடியும்

ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, தன்னடக்கம், சுய-சிட்சை, நேர்மை போன்ற குணங்களை தங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைப்பதற்கு முயற்சி செய்த பெற்றோர்கள் அநேகர் ஓரளவு வெற்றியே பெற்றார்கள். அது ஏன் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? இந்தச் சுற்றாய்வுக்கு பதிலளித்த ஒரு தாய் இவ்வாறு கூறினார்: ‘நம் பிள்ளைகளை வெளியில் எங்கும் போகவிடாமல் அவர்களை அப்படியே வீட்டுக்குள் அடைத்துப்போட்டு வைப்பதே அவர்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி என்பது வருந்தத்தக்க விஷயம்.’ பிள்ளைகள் வளர்ந்துவரும் சூழல் முன்பைவிட இன்றைக்கு மிகவும் மோசமாக இருக்கிறது என்பதைத்தான் அவர் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். இத்தகைய சூழ்நிலையில், பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்ப்பது உண்மையிலேயே சாத்தியமா?

நீங்கள் ஒரு ஆர்கிட்டை வளர்க்க விரும்புகிறீர்கள், ஆனால் அது பட்டுப்போய்விடுமோ என கவலைப்படுகிறீர்கள். அதனால் அதை வளர்க்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம். ஆனால் ஆர்கிட்டை எப்படி வளர்க்கலாம் என்பதைப் பற்றி நன்கு விவரம் தெரிந்த நிபுணர் ஒருவர் வந்து உங்களுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் கொடுத்து, “இப்படி செய்தால் நீங்கள் நிச்சயம் நன்றாக வளர்க்க முடியும்” என நம்பிக்கை அளித்தால், உங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! மனித இயல்பைப் பற்றி நன்கு அறிந்த மாபெரும் நிபுணராகிய யெகோவா, பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தமாக மிகச் சிறந்த ஆலோசனைகளைக் கொடுக்கிறார். “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என அவர் கூறுகிறார். (நீதிமொழிகள் 22:6) பைபிள் தரும் அறிவுரையின்படி நீங்கள் பிள்ளைகளை பயிற்றுவிக்கும்போது, அவர்கள் தங்கமானவர்களாக வளருவதைக் கண்டு மகிழும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். ஆம், உங்கள் பிள்ளைகள் பொறுப்புமிக்கவர்களாகவும் மற்றவர்கள் மீது கரிசனை காட்டுகிறவர்களாகவும் நெறிமுறைகளை மதித்து நடப்பவர்களாகவும் வளருவார்கள். அப்போது அவர்களை எல்லாரும் நேசிப்பார்கள், மிக முக்கியமாக நம் பரம தகப்பனாகிய யெகோவா அவர்களை நேசிப்பார்.