Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தி

விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தி

விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தி

வயது முதிர்ந்த அப்போஸ்தலன் யோவான் தனது வாழ்க்கை அஸ்தமனமாக இருந்த சமயத்தில் இவ்வாறு எழுதினார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.”​—3 யோவான் 4.

உண்மையுள்ள அந்த அப்போஸ்தலன் பிள்ளைகள் என குறிப்பிட்டது, தன் ஆன்மீக பிள்ளைகளையே. என்றாலும், இன்று அநேக பெற்றோர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளைப் பற்றி அந்த அப்போஸ்தலனைப் போலவே கூறுவார்கள். தங்கள் பிள்ளைகளை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்க்க அவர்கள் அரும்பாடு பட்டிருக்கிறார்கள், அதனால் தங்களுடைய பிள்ளைகள் இப்போது வளர்ந்து ‘சத்தியத்திலே நடப்பதைப்’ பார்க்கையில் அதிக பூரிப்படைகிறார்கள். (எபேசியர் 6:4) ஆம், நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதையை பிள்ளைகளுக்கு கற்றுத் தருவது விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தியை கொடுப்பதற்கு சமமாகும். ஏனென்றால், தேவ பக்தி ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குறுதி அளிக்கிறது,’ அத்தகைய தேவ பக்தி யெகோவா விரும்புகிற விதத்தில் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது.​—1 தீமோத்தேயு 4:8.

தங்கள் பிள்ளைகளுக்கு ஆன்மீக போதனை வழங்க அரும் பாடுபடும் தேவ பயமுள்ள பெற்றோர்களை, பரிபூரண பிதாவான யெகோவா பெரிதும் மதிக்கிறார். கற்றுக்கொடுக்கப்படும் போதனைகளுக்கு பிள்ளைகள் நல்ல விதத்தில் பிரதிபலிக்கையில், தங்கள் பெற்றோரோடு சேர்ந்து தொடர்ந்து மெய் வணக்கத்தில் ஈடுபடுகிறார்கள், அதனால் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகள் வளர வளர, தங்கள் பால்ய வயதின் இனிய நினைவுகளை தங்கள் மனதில் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் தாங்கள் முதன்முதல் பேச்சுக் கொடுத்ததை சிலர் ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார்கள். * அல்லது ஒருவேளை தங்கள் பெற்றோரோடு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது முதன்முதலாக வீட்டுக்காரரிடம் ஒரு பைபிள் வசனத்தை வாசித்துக் காட்டியதை நினைத்துப் பார்க்கிறார்கள். என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்தோ பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் * புத்தகத்திலிருந்தோ தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு வாசித்துக் காட்டியதை அவர்களால் எப்படி மறக்க முடியும்? காபிரியேல் என்பவர் தன் மனதில் இடம்பிடித்த ஒன்றைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “அப்போது எனக்கு நாலு வயசுதான் இருக்கும், தினமும் என் அம்மா எனக்காக பாட்டுப் பாடுவார்கள், சமைத்துக் கொண்டே பாடுவார்கள். முக்கியமாக அவர்கள் பாடிய ஒரு ராஜ்ய பாடலை இப்போது நினைத்தாலும் மனதில் இனிமை நிறைகிறது. பிற்பாடு, அந்த ராஜ்ய பாடல்தான் யெகோவாவுடைய சேவையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது.” காபிரியேல் குறிப்பிடும் அந்த அருமையான பாடல் ஒருவேளை உங்களுக்கும் ஞாபகம் இருக்கும். அது யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் என்ற பாட்டுப் புத்தகத்தில், “இளமையில் யெகோவாவை தொழுதுகொள்” என்ற தலைப்பிலுள்ள 157-வது பாட்டு ஆகும்.

அந்தப் பாடல் இப்படியாக ஆரம்பிக்கிறது: “பாலகர் தேவனைத் துதித்தார்கள், இயேசுவை வாழ்த்த ஆர்ப்பரித்தார்கள்.” உண்மைதான், அன்று சில பிள்ளைகள் இயேசுவுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள்; அவர்கள் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக கள்ளங்கபடம் இல்லாமல் நடந்துகொண்டது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்திருக்கும். கற்றுக்கொள்ள விரும்பும் பிள்ளைகளின் மனப்பாங்கையும்கூட இயேசு உதாரணமாக பயன்படுத்தி, தமது சீஷர்களும் அத்தகைய மனப்பாங்கை காண்பிக்க வேண்டுமென கற்பித்தார். (மத்தேயு 18:3, 4) எனவே, யெகோவாவின் வணக்கத்தில் பிள்ளைகளுக்கும் தனி இடம் உண்டு. அந்தப் பாடல் வரிகள் சொல்வது போல, “ஆம், பாலகரும் [தேவனை] உயர்த்தலாமே.”

நிறைய பிள்ளைகள் தங்களுடைய சிறந்த நடத்தையின் மூலம், வீட்டிலும், பள்ளியிலும், வேறு இடங்களிலும், கடவுளுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறார்கள். “உண்மையை நேசிக்கும் பெற்றோருக்கு” பிள்ளைகளாக இருப்பது அவர்களுக்குக் கிடைத்த பாக்கியம்! (உபாகமம் 6:7) தமது சிருஷ்டிகள் நடக்க வேண்டிய வழியிலே நடப்பதற்கு, தேவன்தாமே ஓர் அன்புள்ள அப்பாவாக இருந்து அவர்களுக்கு கற்பிக்கிறார். ஆகையால் தெய்வ பயமுள்ள பெற்றோர்கள் கடவுள் கற்றுத் தருகிறபடியே நடக்கிறார்கள். அதன் பலனாக, எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள்! கற்றுக்கொண்ட காரியங்களை தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்கிறார்கள்; இதனால் பிள்ளைகளும் ‘பெற்றோர் மகிழ கீழ்ப்படிந்து,’ அவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காடச் செய்கிறார்கள். (ஏசாயா 48:17, 18) மெக்சிகோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் தற்போது சேவை செய்து வரும் ஆன்ஹெலீக்கா என்பவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னுடைய பெற்றோர் பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு எப்போதுமே முயன்றார்கள். இதனால் என்னுடைய குழந்தைப் பருவம் ரொம்ப இனிமையாக கழிந்தது. சந்தோஷமாகவும் இருந்தது.”

பெற்றோர்கள் தங்களுக்கு தந்துள்ள ஆன்மீக ஆஸ்தியை இழந்துவிடாமல், பத்திரமாக காத்துக்கொள்வது உண்மையிலேயே பிரயோஜனமானது என்பதை அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஒருவேளை நீங்கள் உண்மையான கிறிஸ்தவ நியமங்களை கடைப்பிடிக்கும் குடும்பத்தில் வளர்க்கப்படும் ஓர் இளைஞராக இருக்கலாம். அப்படியானால், அதே பாடல், “இளைஞரே தூய்மையாயிருங்கள்” என்று உங்களுக்கு புத்தி சொல்கிறது. சொந்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய நேரம் உங்களுக்கு வரும், ஆகையால் இப்போதே “யெகோவா தேவன் மேல் சார்ந்திருங்கள்/பிறர் புகழ்ச்சி நாடாதிருங்கள்.”

பிறர் மத்தியில் பேரும் புகழும் பெற வேண்டுமென்ற ஆசைக்கு தவறுதலாக உங்கள் வாழ்க்கையில் முதலிடம் தந்தீர்களென்றால், இதுவரை நீங்கள் பெற்றுள்ள எல்லா பயிற்சியும் வீணாகி விடக்கூடும், அதுமட்டுமல்ல உங்கள் வளமான எதிர்காலத்தையே நாசமாக்கி விடுவீர்கள். பிரபலமடைய வேண்டுமென்ற ஆசை உங்கள் விழிப்புணர்வை மந்தமாக்கி விடக்கூடும். இப்படி பாதிக்கப்பட்ட சிலர், கிறிஸ்தவ தராதரங்களில் துளியும் ஆர்வமில்லாதவர்களோடு கடைசியில் பழக ஆரம்பித்து விடுகிறார்கள்; அவர்களைப் பொறுத்தவரை அத்தகைய நண்பர்கள் பரம சாதுவானவர்கள், ஏன் மிக இனிமையானவர்கள்கூட. இளைஞர் கேட்கின்றனர்​—⁠நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி? என்ற ஆங்கில வீடியோவில் வரும் தாரா என்ற முக்கிய கதாபாத்திரம் வாயிலாக அது நன்றாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. மெய் வணக்கத்தை துளியும் மதிக்காத நண்பர்களோடு கூட்டுறவு வைத்துக்கொள்ளும் எந்த இளம் கிறிஸ்தவரும், “தீயோர் நல்லொழுக்கம் கெடுப்பார்கள்” என்ற அந்தப் பாடல் வரிகள் எவ்வளவு உண்மை என்பதை இன்றோ நாளையோ புரிந்துகொள்வார்கள், தாராவைப் போல. ஆம், நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அவற்றை கெடுத்துப் போடவோ நிமிஷம்போதும்.

உண்மைதான், தேவ பயமுள்ள வாழ்க்கை வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும், “இளமையில் தேவனை நினைத்தால்,/உண்மையாய் ஆவியோடு சேவித்தால்,” மாபெரும் வெற்றிக்கு உறுதியான அடித்தளம் அமைப்பீர்கள். அப்போது உங்கள் “பிற்காலம் இன்பமாயிருக்குமே” என அந்தப் பாடல் வரிகள் தொடர்ந்து சொல்கின்றன. யெகோவாவின் அன்பான செட்டைகளின் கீழ் இருக்கையில் அவருடைய பார்வையில் சரியானவற்றை செய்வதிலிருந்து உங்களை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது என்பதை அப்போது இன்னும் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். இந்த விதத்தில்தான் நீங்கள் பக்குவமடைந்த தேவ பயமுள்ள ஆட்களாக முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ பயிற்றுவிப்பை ஞானமாக பிரயோஜனப்படுத்திக் கொள்வது ‘யெகோவாவின் உள்ளம் மகிழும்படி’ செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும். ஒரு மனிதனுக்கு இதைவிட வேறென்ன பாக்கியம் இருக்க முடியும், சொல்லுங்கள்?​—நீதிமொழிகள் 27:11.

எனவே, இளைஞர்களே, யெகோவாவிடமிருந்தும் உங்கள் கிறிஸ்தவ பெற்றோரிடமிருந்தும் நீங்கள் பெற்றுக்கொள்கிற பயிற்சி எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். அவர்கள் உங்கள் மீது உயிரையே வைத்திருப்பது, யெகோவாவுக்கு பிரியமானதை செய்யும்படி உங்களை தூண்டட்டும். அப்போது இயேசு கிறிஸ்துவைப் போலவும், விசுவாசமிக்க இளம் தீமோத்தேயுவைப் போலவும், உங்கள் பரலோக பிதாவையும், உங்கள் பெற்றோர்களையும் மனம் குளிரச் செய்வீர்கள். பிற்காலத்தில், நீங்களே ஒரு பெற்றோராக ஆவீர்கள் என்றால், முன்னர் குறிப்பிடப்பட்ட ஆன்ஹெலீக்கா என்பவள் சொன்னதைப் போல் ஒருவேளை நீங்களும் சொல்வீர்கள்; அவள் சொன்னதாவது: “எனக்கு ஒரு குழந்தை பிறந்தால், சிசுப் பிராயத்திலிருந்தே அந்தக் குழந்தையின் மனதில் யெகோவாவுக்கான அன்பை வளர்க்க கடினமாக பாடுபடுவேன், அந்த அன்பே அவனுடைய வாழ்க்கையின் ஒளி விளக்காய் திகழும்படி பார்த்துக் கொள்வேன்.” நிச்சயமாகவே, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் மிகச் சரியான அந்தப் பாதைதான் வேறு எதைக் காட்டிலும், மிக மிக விலைமதிக்க முடியாத ஓர் ஆஸ்தியாகும்!

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 4 இந்த அம்சம் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் நடைபெறும் பைபிள் கல்வி புகட்டும் திட்டத்தின் ஒரு பாகமாகும்; இதில் இளைஞரும் பெரியவர்களும் கலந்துகொள்ளலாம்.

^ பாரா. 4 குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரங்கள் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.