Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சைப்ரசுக்குக் கப்பலேறினார்கள்”

“சைப்ரசுக்குக் கப்பலேறினார்கள்”

சைப்ரசுக்குக் கப்பலேறினார்கள்”

பவுல், பர்னபா, யோவான் மாற்கு ஆகிய கிறிஸ்தவ மிஷனரிகளின் அனுபவத்தை விவரிக்கும்போது அப்போஸ்தலர் புத்தகத்தின் பதிவு இப்படித்தான் ஆரம்பிக்கிறது. சுமார் பொ.ச. 47-ல் இவர்கள் சீப்புரு தீவுக்கு, அதாவது சைப்ரசுக்குச் சென்றனர். (அப்போஸ்தலர் 13:4, பொது மொழிபெயர்ப்பு) இது மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு. இன்று போலவே அன்றும் சைப்ரஸ் முக்கிய மையமாக விளங்கியது.

இத்தீவை தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர ரோமர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசை பொ.ச.மு. 58-ல் நிறைவேறியது. ரோம ஆட்சியின்கீழ் வருவதற்கு முன் இது பலரிடம் கைமாறியதாக வரலாறு கூறுகிறது. ஃபொனீசியர், கிரேக்கர், அசீரியர், பெர்சியர், எகிப்தியர் என இந்தப் பட்டியல் நீளுகிறது. மேலும், இடைக்காலத்தில் கிறிஸ்தவர், ஜெர்மானியர், வெனிஸ் நாட்டினர் இத்தீவை ஆண்டு வந்தனர். பின்னர் இது துருக்கியரின் செல்வாக்கின்கீழ் வந்தது. 1914-ல், இத்தீவு பிரிட்டனின் ஆளுகையின்கீழ் வந்தது. கடைசியாக, 1960-ல் இது சுதந்திரம் பெற்றது.

இப்பொழுது இந்தத் தீவின் பொருளாதாரம் சுற்றுலாத் துறையை சார்ந்தே உள்ளது. ஆனால் பவுலின் நாளில் இயற்கை வளங்கள் நிறைந்து செல்வச் செழிப்பாக விளங்கியது. இந்த வளங்களை எல்லாம் ரோமர்கள் வாரிக்கொண்டு போய் தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டனர். ஆரம்பத்திலேயே, இத்தீவில் தாமிர தாதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் ரோமர்களின் ஆட்சிக் காலத்திற்குள் 2,50,000 டன் தாமிர தாதுக்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக கணக்கிடப்படுகிறது. என்றாலும், அவற்றை சுத்திகரிக்க அடர்ந்த காடுகளில் பெரும்பகுதியை தாமிர தொழிற்சாலை வெட்டி வீழ்த்தியது. பவுல் அங்கு போகும்போது இந்த தீவிலிருந்த காடுகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன.

ரோம ஆட்சியின்கீழ் சைப்ரஸ்

என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறபடி, சைப்ரஸ் தீவை முதலில் ஜூலியஸ் சீசர் எகிப்திற்கு கொடுத்தார், பின்னர் மார்க் ஆன்டனி கொடுத்தார். பிற்பாடு அகஸ்டஸ் ஆட்சியில் இத்தீவு ரோமர்களின் கைவசம் வந்தது; அதை செர்கியு பவுல் என்னும் அதிபதி ஆண்டுவந்தார். பவுல் அங்கு பிரசங்கிக்க சென்றபோது இவரே அதிபதியாக இருந்தார் என அப்போஸ்தலர் புத்தகத்தின் எழுத்தாளர் லூக்கா தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.​—அப்போஸ்தலர் 13:⁠7.

பாக்ஸ் ரொமானா, அதாவது ரோமரால் அமல்படுத்தப்பட்ட சர்வதேச சமாதானம் சைப்ரஸிலுள்ள சுரங்கங்களையும் தொழில்துறைகளையும் விரிவுபடுத்த ஊக்குவித்தது. இதனால் வாணிபத்திலும் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. ரோம ராணுவம் அங்கு இருந்ததும் கூடுதல் வருமானத்திற்கு வழிவகுத்தது. அதோடு, அத்தீவின் காவல் தெய்வமாகிய அஃப்ரோதையை வழிபட பக்தர் கூட்டம் திரண்டு வந்தது, இதுவும் சைப்ரஸ் செழித்தோங்க அடிகோலியது. இதனால் புதிய சாலைகள், துறைமுகங்கள் அமைக்கப்பட்டன; பிரமாண்டமான அரசு கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கிரேக்கு ஆட்சி மொழியாக நீடித்தது; ரோம பேரரசன் உட்பட, அஃப்ரோதை, அப்பொல்லோ மற்றும் ஜியஸ் போன்ற தெய்வங்களை மக்கள் வழிபட்டு வந்தனர். மக்கள் செல்வச்செழிப்பில் மிதந்தனர்; கதம்பமாக விளங்கிய சமூக, கலாச்சார வாழ்க்கையில் திளைத்து மகிழ்ந்தனர்.

சைப்ரசுக்கு பவுல் சென்றபோது இத்தகைய சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் சைப்ரஸ் தீவு முழுவதும் சென்று கிறிஸ்துவைப் பற்றி மக்களுக்கு போதித்தார். என்றாலும், பவுல் சைப்ரசுக்கு செல்வதற்கு முன்னரே கிறிஸ்தவம் அங்கு அறியப்பட்டிருந்தது. எப்படியெனில், முதல் கிறிஸ்தவ இரத்தசாட்சியாக மரித்த ஸ்தேவானுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களில் சிலர் சைப்ரஸ் தீவுக்கு ஓடிப் போனார்கள் என அப்போஸ்தலர் நடபடிகளின் பதிவு விவரிக்கிறது. (அப்போஸ்தலர் 11:19) பவுலின் நண்பர் பர்னபாவும் சைப்ரஸ் தீவைச் சேர்ந்தவர். இதனால் அந்தத் தீவு பற்றிய எல்லா விவரங்களும் அவருக்கு அத்துப்படியாக இருந்தது. எனவே, பவுலின் மிஷனரி பிரயாணத்தின்போது அவருக்கு சிறந்த வழிகாட்டியாக பர்னபா இருந்திருப்பார்.​—அப்போஸ்தலர் 4:36; 13:⁠2.

சைப்ரசில் பவுலின் பிரயாணம்​—⁠ஓர் அலசல்

சைப்ரசுக்குள் பவுல் செய்த பிரயாணம் பற்றிய நுட்ப விவரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்வது இயலாத காரியம். இருந்தாலும், ரோம ஆட்சியின்போது புழக்கத்தில் இருந்த மிக நேர்த்தியான சாலைகளைப் பற்றி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓரளவு தெளிவான குறிப்புகளை நமக்கு அளித்துள்ளனர். அந்தச் சமயத்தில் மிஷனரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் பாதைகள்தான் பெரும்பாலும் இன்றும் நெடுஞ்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இத்தீவின் புவியியல் அமைப்பு அவ்வாறு உள்ளது.

சைப்ரசின் தலைநகராகிய பாப்போ பட்டணம் முக்கியத் துறைமுகமாகவும் விளங்கியது. ஆனால் பவுல், பர்னபா, யோவான் மாற்கு ஆகிய மூவரும் செலூக்கியாவில் இருந்து பாப்போவிற்கு செல்லாமல் மற்றொரு துறைமுகப் பட்டணமாகிய சாலமிக்கு சென்றனர். ஏன்? ஒரு காரணம், சாலமி பட்டணம் கிழக்கு கடற்கரையின் முக்கியப் பகுதியில் அமைந்திருந்தது. மேலும், செலூக்கியாவிற்கும் சாலமிக்கும் இடையே உள்ள தூரம் 200 கிலோமீட்டர் மட்டுமே. ரோமரின் ஆட்சியில் சாலமிக்கு பதிலாக பாப்போ தலைநகரமாக மாற்றப்பட்டது; என்றபோதிலும், சாலமியே அத்தீவின் கலாச்சார, கல்வி மற்றும் வாணிப மையமாக விளங்கியது. அதோடு, சாலமியில் அதிகமான யூதர்கள் வசித்தனர். எனவே, மிஷனரிகள் ‘யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவ வசனத்தைப் பிரசங்கிக்க’ ஆரம்பித்தனர்.​—அப்போஸ்தலர் 13:⁠5.

ஆனால், இன்று மீந்திருப்பதோ சாலமி பட்டணத்தின் இடிபாடுகளே. இருப்பினும், அப்பட்டணத்தின் முன்னாள் பெருமைக்கும் செல்வச் செழிப்பிற்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் சான்றளிக்கின்றன. அரசியல் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு மையமாக திகழ்ந்தது அப்பட்டணத்தின் சந்தைவெளி. மத்தியதரைக் கடல்பகுதியில் இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட ரோம சந்தைவெளிகளிலேயே இதுதான் மிகப் பெரியதென்று சொல்லலாம். இதன் இடிபாடுகள் நம்மை அகஸ்டஸ் சீசரின் காலத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன. கலைநயமிக்க மொசைக் தரைகள், உடற்பயிற்சி நிலையங்கள், ஆடம்பர குளியலறைகள், ஒரு விளையாட்டு அரங்கம், அழகிய கல்லறைகள், 15,000 இருக்கைகள் கொண்ட பெரிய அரங்கம் என அக்காலத்தின் பெருமைகளை பறைசாற்றுகின்றன. ஜியஸ் தெய்வத்தின் கம்பீரமான கோயிலின் இடிபாடுகளையும் அதன் அருகில் காணலாம்.

ஆனால் அப்போது ஏற்பட்ட பல நிலநடுக்கங்களால் அப்பட்டணம் சிதைந்துபோவதை ஜியஸ் தெய்வத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பொ.ச.மு. 15-ல் ஒரு பெரிய நிலநடுக்கம் சாலமி பட்டணத்தின் பெரும்பகுதியை அழித்தது. பின்னர் அகஸ்டஸ் அதை புதுப்பித்தார். பொ.ச. 77-ல் மறுபடியும் ஒரு பூமியதிர்ச்சி சாலமியை தாக்கியது. மீண்டும் ஒருமுறை அப்பட்டணம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் நான்காம் நூற்றாண்டில் அடுத்தடுத்து வந்த பூமியதிர்ச்சிகளால் சாலமி தரைமட்டமானது. அதோடு அதன் முந்தைய பேரும் புகழும் மண்ணோடு மண்ணாகியது. இடைக்காலத்திற்குள் அதன் துறைமுகமும் வண்டல் படிந்து பயனில்லாமல் போனது.

பவுலின் பிரசங்கத்திற்கு சாலமி மக்கள் எப்படி பிரதிபலித்தார்கள் என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால் பவுல் மற்ற இடத்திலும் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியிருந்தது. சாலமியிலிருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல அந்த மிஷனரிகளுக்கு மூன்று முக்கிய வழிகள் இருந்தன: ஒன்று கிரின்யா மலைத்தொடரை கடந்து வடக்கு கரையோரத்திற்கு செல்லும் மார்க்கம்; மற்றொன்று மேற்கு திசையில் மெசோரியா சமவெளியைக் கடந்து தீவின் முக்கிய பகுதி வழியாக செல்லும் மார்க்கம்; மூன்றாவது தெற்கு கடற்கரையோரமாக செல்லும் மார்க்கம்.

பாரம்பரியத்தின்படி, பவுல் மூன்றாவது மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார். வளமிக்க செம்மண் பூமியும் செழிப்பான வயல்களும் நிறைந்த பாதை அது. தென்மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் லார்னகா பட்டணம் இருந்தது. இந்தப் பட்டணம் வழியாக வடக்கே தீவின் உட்பகுதி வரை அப்பாதை சென்றது.

‘அந்தத் தீவு முழுவதும்’

அந்த நெடுஞ்சாலை பூர்வ பட்டணமாகிய லீட்ராவிற்கு இட்டுச் சென்றது. அந்த இடத்தில்தான் இன்றைய தலைநகரமாகிய நிகோசியா உள்ளது. அந்தப் பழைய பட்டணத்தின் தடம் எதுவுமே இப்போது இல்லை. ஆனால், நிகோசியாவின் மையப் பகுதியைச் சுற்றி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெனிஸ் நகர சுவர் காணப்படுகிறது; அதற்குள் அமைந்த குறுகலான, சந்தடிமிக்க ஒரு தெருவின் பெயர் லீட்ரா. பவுல் லீட்ராவுக்கு சென்றாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் ‘அந்தத் தீவு முழுவதும்’ சென்றனர் என்றே பைபிள் குறிப்பிடுகிறது. (அப்போஸ்தலர் 13:6, பொ.மொ.) “சைப்ரஸில் இருந்த யூதர்கள் அனைவரையுமே அவர்கள் முழுமையாக சந்தித்திருக்க வேண்டும் என்றே இந்த சொற்றொடர் அர்த்தப்படுத்துகிறது” என த வைக்ளிஃப் ஹிஸ்டாரிகல் ஜியோகிரஃபி ஆஃப் பைபிள் லேண்ட்ஸ் என்ற நூல் குறிப்பிடுகிறது.

சைப்ரசில் எவ்வளவு பேரை சந்திக்க முடியுமோ அவ்வளவு பேரையும் சந்திக்கவே பவுல் நிச்சயம் முயன்றிருப்பார். எனவே, லீட்ராவிலிருந்து தெற்கு மார்க்கமாக செல்லும் பாதையில்தான் சென்றிருப்பார். அந்தப் பாதை, மக்கள் தொகை அதிகம் இருந்த ஆமாதஸ் மற்றும் கூரியன் என்ற இரண்டு மாபெரும் நகரங்கள் வழியாக சென்றது.

கூரியன் மாநகரம் செங்குத்தான மலைகள் மீது அமர்ந்திருந்தது; அங்கிருந்து கடலோரப் பகுதிக்கு செல்லும் செங்குத்தான பாறைகளே இருந்தன. பொ.ச. 77-ல் சாலமி பட்டணத்தை தவிடுபொடியாக்கிய அதே நிலநடுக்கம் சிறப்பு வாய்ந்த கிரேக்க-ரோம பட்டணமாகிய கூரியன் மாநகரத்தையும் நிர்மூலமாக்கியது. பொ.ச. 100-ம் ஆண்டில் அப்பொல்லோ தெய்வத்திற்கு கட்டப்பட்ட கோவிலின் இடிபாடுகளும் காணப்படுகின்றன. அங்கிருந்த அரங்கம் 6,000 பேர் அமரும் வசதிகொண்டது. அந்நகர மக்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களுடைய மாளிகைகளை அலங்கரிக்கும் எழில்மிகு மொசைக் தரைகளே அதற்கு அத்தாட்சி.

பாப்போவிற்கு

இந்தப் பாதை கண்கவர் இயற்கைக் காட்சிகள் மலிந்து கிடக்கும் திராட்சை தோட்டங்கள் நிறைந்த நிலப்பரப்பு வழியாக செல்கிறது. கூரியனிலிருந்து மேற்கு நோக்கி செல்லச் செல்ல கடல் மட்டத்திற்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து செல்கிறது. ஆனால், திடீரென இந்தப் பாதை செங்குத்தான பாறைகளினூடே கீழ்நோக்கி சென்று கடற்கரையை தொடுகிறது. பெரிய வழவழப்பான கூழாங்கற்கள் நிறைந்த இந்தக் கடற்கரை புராணச் சிறப்புமிக்கது. இந்தக் கடற்கரையில்தான் அஃப்ரோதை தேவதை கடலிலிருந்து பிறந்தாள் என கிரேக்க புராணம் கூறுகிறது.

சைப்ரஸ் மக்கள் வழிபட்டு வந்த தேவதைகளில் மிகப் பிரபலமான தேவதை அஃப்ரோதை. பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு வரை மக்கள் இத்தேவதையின் தீவிர பக்தர்களாக இருந்தனர். பாப்போ பட்டணம் அஃப்ரோதை வழிபாட்டின் மையமாக விளங்கியது. ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும், இத்தேவதையை வழிபட ஒரு பெரிய விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஆசியா மைனர், எகிப்து, கிரீஸ் மற்றும் வெகு தொலைவில் இருந்த பெர்சியா போன்ற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் பாப்போவிற்கு திரண்டு வந்தனர். சைப்ரஸ் தீவு எகிப்தியரின் ஆதிக்கத்தின்கீழ் வந்தபோதோ, இத்தீவு மக்கள் பார்வோனை வணங்க ஆரம்பித்தனர்.

ரோமர்கள் பாப்போவை சைப்ரஸின் தலைநகரமாக ஆக்கினர், ஆளுநர் மாளிகையும் அங்கு இருந்தது, செப்பு நாணயங்களும் அங்குதான் அடிக்கப்பட்டன. பொ.ச.மு. 15-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த நகரத்தையும் தரைமட்டமாக்கியது. சாலமி பட்டணத்தை புதுப்பித்தது போலவே, இந்நகரத்தையும் புதுப்பிக்க அகஸ்டஸ் நிதியுதவி அளித்தார். முதல் நூற்றாண்டு பாப்போ மக்கள் செல்வச் செழிப்புடன் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தனர். விசாலமான நகர தெருக்கள், விலை உயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட தோட்டம் சூழ்ந்த பெரிய பெரிய தனியார் மாளிகைகள், இசைப் பள்ளிகள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டு அரங்கம் ஆகியவை இருந்தன. இவை அனைத்திற்கும் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளே சான்றுகள்.

பவுலும் பர்னபாவும் யோவான் மாற்குவும் சென்ற பாப்போ இதுதான். எலிமா என்னும் மாயவித்தைக்காரன் மிகக் கடுமையாக எதிர்த்தபோதிலும், “விவேகமுள்ள மனுஷனாகிய” அதிபதி செர்கியு பவுல் இங்குதான் ‘தேவவசனத்தை ஆசையாக கேட்டார்.’ அந்த அதிபதி ‘கர்த்தருடைய உபதேசத்தைக் குறித்து அதிசயப்பட்டார்.’​—அப்போஸ்தலர் 13:6-12.

சைப்ரசில் பிரசங்க வேலையை வெற்றிகரமாக முடித்ததும், மிஷனரிகள் ஆசியா மைனரில் தங்கள் சேவையை தொடர்ந்தனர். மெய்க் கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் பவுலின் அந்த முதல் மிஷனரி பிரயாணம் மிகவும் முக்கிய மைல் கல்லாகும். அது, “பவுலின் மிஷனரி சேவை மற்றும் கிறிஸ்தவ சேவையின் மெய்யான ஓர் ஆரம்பம்” என செயின்ட் பால்ஸ் ஜர்னிஸ் இன் த கிரீக் ஓரியன்ட் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. “சிரியா, ஆசியா மைனர், கிரீஸ் போன்ற இடங்களுக்குச் செல்லும் கடல் மார்க்கங்களின் மையமாக விளங்கிய சைப்ரஸ், மிஷனரி பிரயாணத்தின் தவிர்க்க முடியாத முதல் பாகமாக அமைந்தது” என அதே புத்தகம் மேலும் விவரிக்கிறது. ஆனால் அது ஆரம்பப் படிதான். இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இன்றும் கிறிஸ்தவ மிஷனரி சேவை அங்கு தொடருகிறது. எனவே, யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி உண்மையிலேயே “பூமியின் கடைசிபரியந்தமும்” சென்றெட்டியிருக்கிறது என்று சொல்லலாம்.​—அப்போஸ்தலர் 1:⁠8.

[பக்கம் 20-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சைப்ரஸ்

நிகோசியா (லீட்ரா)

சாலமி

பாப்போ

கூரியன்

ஆமாதஸ்

லார்னகா

கிரின்யா மலைத்தொடர்

மெஸோரியா சமவெளி

ட்ரூடோஸ் மலைத்தொடர்

[பக்கம் 21-ன் படம்]

பாப்போவில் இருக்கையில், பவுல் பரிசுத்த ஆவி நிறைந்தவராய், மாயவித்தைக்காரன் எலிமாவை குருடாக்கினார்