Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துயரங்கள் மத்தியிலும் திருப்தியான வாழ்க்கை

துயரங்கள் மத்தியிலும் திருப்தியான வாழ்க்கை

வாழ்க்கை சரிதை

துயரங்கள் மத்தியிலும் திருப்தியான வாழ்க்கை

ஆட்ரீ ஹைட் சொன்னபடி

முழுநேர ஊழியத்தில் 63 வருடங்களுக்கும் அதிகமாக செலவிட்டிருக்கிறேன்; அதில் 59 வருடங்களை யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமையகத்தில் கழித்திருக்கிறேன்; என் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில் திருப்தியான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். என் முதல் கணவர் புற்றுநோய் வந்து அணு அணுவாய் இறப்பதையும் இரண்டாவது கணவர் அல்ஸைமர் நோயின் பயங்கர பாதிப்புகளில் அவதிப்படுவதையும் கண்டபோது என் மனம் சுக்குநூறாகிப் போனது என்னவோ உண்மைதான். ஆனால் இத்தகைய துயரங்கள் மத்தியிலும் என்னால் தொடர்ந்து சந்தோஷமாய் இருக்க முடிந்தது; எப்படி என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒரு பண்ணையில் நான் வளர்ந்தேன்; இது வடகிழக்கு கொலரடோவின் சமபூமியில், நெப்ராஸ்கா எல்லைக்கு அருகில் ஹாக்ஸ்டன் என்ற சிறிய நகரத்துக்குப் பக்கத்திலிருந்தது. ஆரல் மாக், நீனா மாக் தம்பதியினரின் ஆறு பிள்ளைகளில் நான் ஐந்தாவது பிள்ளை. ரஸல், வேன், க்ளாரா, அர்டஸ் ஆகியோர் 1913-⁠க்கும் 1920-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தார்கள்; அதற்கு அடுத்த வருடம் நான் பிறந்தேன். கர்ட்டஸ் 1925-⁠ல் பிறந்தான்.

1913-⁠ல் அம்மா பைபிள் மாணாக்கர் ஆனார், அப்போது யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். பின்னர் குடும்பத்திலிருந்த நாங்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளானோம்.

சமவெளியில் சுகமான வாழ்க்கை

அப்பா முற்போக்குவாதி. எங்கள் பண்ணையிலிருந்த எல்லா கட்டடங்களிலும் மின்சார விளக்குகள் இருந்தன; அந்தக் காலத்தில் அவற்றைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம். எங்கள் பண்ணைக் கோழிகள் இடும் முட்டைகளையும், நாங்கள் வளர்த்த மாடுகளிலிருந்து பெற்ற பால், பாலாடை, வெண்ணை போன்ற பண்ணைப் பொருட்களையும் சாப்பிட்டோம். குதிரைகளைப் பயன்படுத்தி நிலத்தை உழுதோம், ஸ்ட்ராபெர்ரி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை விளைவித்ததோடு, கோதுமையையும் சோளத்தையும் பயிரிட்டோம்.

பிள்ளைகள் எல்லாரும் கடின உழைப்பை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் அப்பா உறுதியாக இருந்தார். பள்ளியில் காலடி வைக்கும் முன்பே வயலில் வேலை செய்ய பயிற்சி பெற்றேன். கொளுத்தும் கோடை வெயிலில் எங்கள் தோட்டத்தில் களைகளைப் பிடுங்கியது எனக்கு நினைவிருக்கிறது. ‘இது எல்லாத்தையும் எப்போ பிடுங்கி முடிப்பேன்?’ என மலைத்திருக்கிறேன். முத்து முத்தாக வேர்வை என் உடம்பில் உருண்டோடியது, தேனீ வேறு கொட்டியது. எங்களைப் போல இந்தளவுக்கு மற்ற பிள்ளைகள் கஷ்டப்பட்டு வேலை செய்யாததால், சில சமயங்களில் என்னைப் பார்த்தே நான் பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் என் பிள்ளைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் எங்களுக்கு உழைக்க கற்றுக்கொடுத்ததற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்கப்பட்டது. பால் கறப்பதில் என்னைவிட அர்டஸ் கெட்டிக்காரி, எனவே குதிரை லாயத்திலுள்ள அறைகளை சுத்தப்படுத்துவதும் சாணத்தை அள்ளிப் போடுவதும்தான் என் வேலை. ஆனாலும் நாங்கள் ஜாலியாக பொழுதைக் கழித்தோம், நன்றாக விளையாடினோம்.

சமவெளிப் பகுதிகளில் மேகம் மறைக்காத இரவு வானம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. வான வீதியில் ஆயிரக்கணக்கில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்கள் நம் படைப்பாளரான யெகோவா தேவனை எனக்கு நினைப்பூட்டின. சிறுமியாக இருந்தபோதே சங்கீதம் 147:4-⁠ல் உள்ள விஷயத்தை சிந்தித்திருக்கிறேன்; “அவர் [யெகோவா] நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்” என அது சொல்கிறது. இப்படி எத்தனையோ இரவு வேளைகளை, நாங்கள் வளர்த்து வந்த ஜட்ஜ் என்ற நாயின் துணையோடு கழித்திருக்கிறேன்; அது என் மடி மீது தலையை வைத்துக்கொண்டு சொகுசாக படுத்துக்கொள்ளும். பிற்பகல் வேளைகளில் வீசும் இதமான காற்றில் பச்சைப் பசேலென இருக்கும் கோதுமைக் கதிர்கள் சூரிய ஒளியில் வெள்ளியைப் போல் பளபளப்பதை அடிக்கடி எங்கள் வீட்டு வராண்டாவில் உட்கார்ந்துகொண்டு ரசித்ததுண்டு.

அம்மாவின் அருமையான முன்மாதிரி

மனைவியாக தன் கடமைகளை அம்மா அன்போடு நிறைவேற்றினார். அப்பாதான் எப்போதும் வீட்டின் தலைவர்; அவருக்கு மரியாதை கொடுக்க அம்மா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 1939-⁠ல் அப்பாவும் யெகோவாவின் சாட்சியானார். அப்பா எங்களைக் கடினமாக வேலை செய்ய வைத்தாலும் அவருக்கு எங்களின் மீது அன்பு இருந்ததை அறிந்திருந்தோம்; ஆனால் அவர் எங்களுக்கு செல்லம் கொடுக்கவில்லை. குளிர்காலத்தில் இரட்டைக் குதிரைகள் பூட்டிய பனிசறுக்கு வண்டியில் எங்களை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்றார். பளபளக்கும் அந்தப் பனியைக் கண்டு நாங்கள் எவ்வளவாய் அனுபவித்து மகிழ்ந்தோம்!

ஆனால் அம்மாதான் கடவுளை நேசிக்கவும் பைபிளை மதிக்கவும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். கடவுளுடைய பெயர் யெகோவா, அவரே உயிரின் ஊற்றுமூலர் என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். (சங்கீதம் 36:9; 83:17) அவர் நமக்கு வழிகாட்டுதலைக் கொடுத்திருக்கிறார், அது நம் சந்தோஷத்தைப் பறிப்பதற்கு அல்ல ஆனால் நம்முடைய நன்மைக்கே என்பதையும் கற்றுக்கொண்டோம். (ஏசாயா 48:17) நாங்கள் செய்வதற்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறதென அம்மா எப்போதும் சொல்லி வந்தார். ஆம், இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என சொன்னதை அறிந்துகொண்டோம்.​—⁠மத்தேயு 24:14.

அந்த சின்ன வயதில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் வீட்டில் அம்மா இல்லாவிட்டால் அவர்களைத் தேடிக்கொண்டு போவேன். எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம், அப்போது ஒருமுறை சென்றபோது அவர்களை களஞ்சியத்தில் பார்த்தேன். திடீரென்று சோவென மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. களஞ்சியத்தில் நாங்கள் வைக்கோல் போர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்தோம்; கடவுள் திரும்பவும் ஜலப்பிரளயத்தைக் கொண்டு வருகிறாராவென அப்போது அம்மாவிடம் கேட்டேன். மீண்டும் பெருவெள்ளத்தால் இந்தப் பூமியை அழிக்கப்போவதில்லை என கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார் என அவர் எனக்கு உறுதியளித்தார். சூறாவளிக் காற்று வீசுவது இங்கு சர்வசாதாரணமாதலால் நிலவறைக்குள் பதுங்க ஓடிய சமயங்களை அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன்.

நான் பிறப்பதற்கு முன்பாகவே அம்மா பிரசங்க வேலை செய்து வந்தார். எங்கள் வீட்டில் ஒரு தொகுதியினர் கூடிவந்தார்கள், அவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தது. வீட்டுக்கு வீடு போய் பிரசங்கிப்பது அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது, ஆனாலும் கடவுள் மீதிருந்த அன்பு அந்தப் பயத்தைப் போக்கியது. 1969, நவம்பர் 24-⁠ம் தேதி, தன் 84-⁠ம் வயதில் இறக்கும்வரை அம்மா உண்மையுள்ளவராய் இருந்தார். “அம்மா நீங்க பரலோகத்துக்குப் போகப் போறீங்க, உங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இருக்கப் போறீங்க” என அவரது காதுகளில் நான் கிசுகிசுத்தேன். அப்போது அம்மா என்னிடம் “நீ எங்கிட்ட ரொம்ப பாசமா இருக்கே” என மெல்ல சொன்னார். அந்த சமயத்தில் நான் அம்மாகூட இருக்க முடிந்ததற்காகவும், அவரது நம்பிக்கையில் எனக்கு விசுவாசம் இருந்ததை அவரிடம் சொல்ல முடிந்ததற்காகவும் எவ்வளவாய் சந்தோஷப்பட்டேன்!

நாங்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தோம்

1939-⁠ல் ரஸல் பயனியர் ஆனார், யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர பிரசங்கிகள் அப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள். 1944 வரை அவர் ஓக்லஹாமா, நெப்ராஸ்கா ஆகிய இடங்களில் பயனியர் ஊழியம் செய்த பிறகு நியு யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமையகத்தில் (பெத்தேலில்) சேவை செய்ய அழைக்கப்பட்டார். நான் 1941, செப்டம்பர் 20-⁠ம் தேதி பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன், கொலரடோ, கான்ஸாஸ், நெப்ராஸ்கா ஆகிய பல்வேறு இடங்களில் சேவை செய்தேன். பயனியர் செய்த அந்தக் காலம் சந்தோஷமான காலம்; யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவியதால் மட்டுமல்ல, அவரையே சார்ந்திருக்க நான் கற்றுக்கொண்டதாலும் அது சந்தோஷமான காலம் என்பேன்.

ரஸல் பயனியர் செய்ய ஆரம்பித்த சமயத்தில், வேன் கொஞ்ச காலம் வேலை பார்த்து விட்டு பின்னர் கிழக்குக் கரையோரமுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தார். பின்னர் அவரும் பெத்தேலில் சேவை செய்ய அழைக்கப்பட்டார். சில வருடங்கள் அவர் நியு யார்க்கில், இத்திகாவுக்கு அருகிலுள்ள கிங்டம் ஃபார்மில் சேவை செய்தார். அங்கு, அந்த பண்ணையிலிருந்த கொஞ்சம் பேருக்கும் புரூக்ளின் பெத்தேலில் இருந்த சுமார் 200 பேருக்கும் உணவுப் பொருட்கள் விளைவிக்கப்பட்டன. வேன் 1988-⁠ல் இறக்கும்வரை தன் திறமைகளையும் அனுபவத்தையும் யெகோவாவின் சேவையில் செலவிட்டார்.

ஜேம்ஸ் கர்ன் என்பவரை என் அக்கா அர்டஸ் மணந்தார், அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். அக்கா 1997-⁠ல் இறந்துவிட்டார். என்னுடைய இன்னொரு அக்கா க்ளாரா இன்றுவரை யெகோவாவை உண்மையாய் சேவித்து வருகிறார்; இப்போதும் விடுமுறை சமயத்தில் கொலரடோவிலுள்ள அவரைப் போய் சந்திக்கிறேன். எங்களில் கடைக்குட்டியான கர்ட்டஸ் 1940-களின் மத்திபத்தில் புரூக்ளின் பெத்தேலுக்கு வந்தான். பல்வேறு பொருட்களையும் பயிர்களையும் ஏற்றிக்கொண்டு கிங்டம் ஃபார்மிற்கு போய் வரும் டிரக்கில் டிரைவராக வேலை செய்தான். அவன் திருமணமே செய்துகொள்ளவில்லை, 1971-⁠ல் இறந்துவிட்டான்.

என் ஆசை​—⁠பெத்தேல் சேவை

என் அண்ணன்மார்கள் ஏற்கெனவே பெத்தேலுக்குப் போய்விட்டார்கள், எனக்கும் அங்கு சேவை செய்ய ஆசையாக இருந்தது. அவர்களுடைய நல்ல முன்மாதிரியால்தான் என்னையும் பெத்தேலில் சேவை செய்ய அழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். கடவுளுடைய அமைப்பின் சரித்திரத்தைப் பற்றி அம்மா பேசியதைக் கேட்டதும், கடைசி நாட்களைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதை கண்ணாரக் கண்டதுமே பெத்தேலில் சேவை செய்யும் ஆசையை என்னுள் வளர்த்தது. பெத்தேலில் சேவை செய்ய யெகோவா என்னை அனுமதித்தால், என் கிறிஸ்தவ கடமைகளை நிறைவேற்றும் அவசியம் ஏற்பட்டால் தவிர ஒருபோதும் அதைவிட்டு வரமாட்டேன் என யெகோவாவுக்கு நான் வாக்குக் கொடுத்தேன்.

1945, ஜூன் 20-⁠ம் தேதி பெத்தேலுக்கு வந்தேன், எனக்கு ஹௌஸ்கீப்பர் வேலை கொடுக்கப்பட்டது. 13 ரூம்களை சுத்தம் செய்து 26 படுக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது, அதோடு நடைபாதைகள், படிக்கட்டுகள், ஜன்னல்கள் ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அது கடினமான வேலை. ஒவ்வொரு நாளும் வேலை செய்கையில், ‘நீ வேலை செய்து களைத்துவிட்டாய்தான், ஆனாலும் பெத்தேலில் கடவுளுடைய வீட்டில் வேலை செய்கிறாயே!’ என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

பெத்தேலில் வேலை செய்ய ஆரம்பித்த சமயத்தில் என்னை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய காரியம் ஒன்று நடந்தது. நான் நாட்டுப் புறத்தில் வளர்ந்ததால், “டம்வெயிட்டர்” என்பது மாடியின் ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு பொருட்களை சுமந்து செல்லும் சிறிய லிப்ட் என்பது எனக்குத் தெரியாதிருந்தது. ஒருநாள் வேலை செய்கையில் ஒரு போன் வந்தது, “அந்த டம்வெயிட்டரை கொஞ்சம் கீழே அனுப்புகிறீர்களா?” என மறுமுனையில் குரல் கேட்டது. போன் செய்தவர் உடனடியாக போனை வைத்துவிட்டதால் எனக்கு என்ன செய்வது ஏது செய்வதென்றே தெரியவில்லை. ஆனால், நான் ஹௌஸ்கீப்பிங் செய்யும் தளத்தில் வெயிட்டராக பணிபுரியும் சகோதரர் ஒருவர் தங்கியிருப்பது டக்கென்று நினைவுக்கு வந்தது. எனவே அவருடைய ரூம் கதவைத் தட்டி அவரிடம் “கீழே சமையலறையில் உங்களை அழைக்கிறார்கள்” என சொன்னேன்.

நேதன் நாரை மணத்தல்

மணமுடிக்க விரும்பிய பெத்தேல் அங்கத்தினர்கள் பெத்தேலிலிருந்து வெளியேறி வேறெங்காவது போய் ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யும்படி 1920-கள் முதற்கொண்டு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். ஆனால் 1950-⁠ன் ஆரம்பத்தில் பெத்தேலில் கணிசமான காலத்திற்கு சேவை செய்திருந்த சிலர், திருமணம் செய்துகொண்டு அங்கேயே தொடர்ந்து சேவிக்க அனுமதிக்கப்பட்டார்கள். அந்த சமயத்தில் உலகளாவிய ராஜ்ய வேலையை முன்நின்று கவனித்து வந்த நேதன் ஹெச். நார் என்னை மணப்பதில் ஆர்வம் காட்டினார்; ‘இவர் நிச்சயம் பெத்தேலைவிட்டு போகமாட்டார்!’ என நினைத்துக் கொண்டேன்.

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை மேற்பார்வை செய்வதில் அநேக பொறுப்புகள் நேதனுக்கு இருந்தன. எனவே அவர் என்னிடம் ஒளிவுமறைவின்றி பேசினார்; மணமுடிக்க அவர் விருப்பம் தெரிவித்தாலும் அதற்கு நான் ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்பு ஏன் கவனமாக சிந்திக்க வேண்டுமென்பதற்கு அவர் அநேக காரணங்களை எடுத்துச் சொன்னார். அந்த சமயத்தில் உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களைப் போய் சந்திப்பதற்காக அவர் அடிக்கடி பயணம் செய்து வந்தார்; பெரும்பாலான சமயங்களில் வாரக்கணக்கில் பயணித்தார். எனவே அநேக நாட்கள் பிரிந்திருக்க நேரிடும் என்பதையும் அவர் விளக்கினார்.

ஓர் இளம் பெண்ணாக, வசந்த காலத்தில் திருமணம் செய்துகொண்டு, பசிபிக் தீவுகளில் ஒன்றான ஹவாயில் தேனிலவைக் கழிக்க வேண்டுமென்ற ஆசைக் கனவுகள் எனக்கு இருந்தன. ஆனால் எங்கள் திருமணம் குளிர் காலத்தில் 1953, ஜனவரி 31-⁠ல் நடந்தது; எங்கள் தேனிலவை அந்த சனிக்கிழமை மதியமும் ஞாயிற்றுக்கிழமையும் நியூ ஜெர்ஸியில் கழித்தோம். திங்கட்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்பினோம். ஆனாலும் ஒரு வாரம் கழித்து, தேனிலவுக்காக ஒரு வாரம் சென்று வந்தோம்.

கடினமாக உழைக்கும் துணைவர்

1923-⁠ல் பெத்தேலுக்கு வந்தபோது நேதனுக்கு 18 வயது. சாட்சிகளின் வேலையை முன்நின்று நடத்திய ஜோசஃப் எஃப். ரதர்ஃபோர்ட், பிரிண்டரியை கவனித்து வந்த ராபர்ட் ஜே. மார்ட்டின் போன்ற பெரும் அனுபவசாலிகளிடமிருந்து அவர் பயனளிக்கும் பயிற்சியைப் பெற்றார். செப்டம்பர் 1932-⁠ல் சகோதரர் மார்ட்டின் இறந்தபோது நேதன் பிரிண்டரியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த வருடம் சகோதரர் ரதர்ஃபோர்ட் ஐரோப்பாவிலுள்ள கிளை அலுவலகங்களை சந்திக்க செல்கையில் நேதனையும் கூட்டிச் சென்றார். ஜனவரி 1942-⁠ல் சகோதரர் ரதர்ஃபோர்ட் இறந்துவிட்டார், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலையை மேற்பார்வையிடும் பொறுப்பு நேதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேதன் எப்போதும் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட்டார், எதிர்கால வளர்ச்சிக்காக எப்போதும் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தார். இந்த ஒழுங்குமுறையின் முடிவு வெகு சமீபத்தில் இருப்பதாக கருதியதால் இப்படி திட்டமிடுவது சரியல்லவென சிலர் நினைத்தார்கள். சொல்லப்போனால், நேதனின் திட்டங்களைப் பார்த்த ஒருவர் அவரிடம், “இதெல்லாம் என்ன பிரதர் நார்? உங்களுக்கு விசுவாசமே இல்லையா?” என கேட்டார். “எனக்கு விசுவாசமிருக்கிறது, நாம் எதிர்பார்க்கிறபடி அந்த முடிவு ஒருவேளை உடனடியாக வராவிட்டால் அப்போதும் நாம் தயாராக இருப்போம்” என பதிலளித்தார்.

மிஷனரிகளுக்கான ஒரு பள்ளியை நிறுவ வேண்டுமென்பதில் நேதன் உறுதியாய் இருந்தார். இவ்வாறு 1943, பிப்ரவரி 1-⁠ல் என் அண்ணன் வேன் சேவை செய்துவந்த பெரிய ஃபார்மில் மிஷனரிகளுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் சுமார் ஐந்து மாதங்களுக்கு பைபிள் படிப்பு வகுப்புகள் மும்முரமாக நடைபெற்றன; இருந்தாலும் மாணாக்கர்கள் சில பொழுதுபோக்குகளை அனுபவித்து மகிழும்படி நேதன் பார்த்துக்கொண்டார். ஆரம்ப காலத்தில் நடைபெற்ற வகுப்புகளின்போது அவர் பந்து விளையாட்டுகளில் கலந்துகொண்டார், ஏதேனும் காயம் ஏற்பட்டு கோடையில் நடைபெறும் மாவட்ட மாநாடுகளுக்குச் செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் பின்னர் அவர் விளையாடுவதை நிறுத்திவிட்டார். ஆனால் அந்த விளையாட்டுகளில் நடுவராக இருக்க முன்வந்தார். விளையாட்டில் கலந்துகொண்ட அயல்நாட்டு மாணாக்கர்களுக்காக அவர் வெளிப்படையாகவே விதிமுறைகளில் சலுகை காட்டியதைக் கண்டபோது அவர்கள் குதூகலித்தார்கள்.

நேதனுடன் பயணங்கள்

கடைசியில், நேதனுடன் சேர்ந்து நானும் அயல்நாடுகளுக்குப் பயணம் செய்ய ஆரம்பித்தேன். கிளை அலுவலக அங்கத்தினர்களும் மிஷனரிகளும் சொன்ன அனுபவங்களைக் கேட்பதிலும் என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் சந்தோஷப்பட்டேன். அவர்களுடைய அன்பையும் பக்தியையும் கண்ணாரக் காண முடிந்தது, அவர்களுக்கு நியமிக்கப்பட்ட நாடுகளில் அவர்கள் பின்பற்றிய ஒழுங்கையும், வாழ்க்கை தரங்களையும் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இன்னமும் அத்தகைய சந்திப்புகளுக்கு போற்றுதல் தெரிவித்து கடிதங்கள் எனக்கு வந்த வண்ணம் இருக்கின்றன.

நாங்கள் பயணம் செய்த இடங்களைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் அநேக அனுபவங்கள் என் நினைவுக்கு வருகிறது. உதாரணமாக, போலந்துக்கு சென்றிருந்தபோது என் முன்னால் இரண்டு சகோதரிகள் கிசுகிசு குரலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஏன் இப்படி கிசுகிசுன்னு பேசிக்கிறீங்க?” என அவர்களிடம் கேட்டேன். அவர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, அதற்கான காரணத்தை விளக்கினார்கள்; அதாவது, போலந்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர்களுடைய வீடுகளில் அதிகாரிகள் இரகசியமாக மைக்ரோபோன்களை ஒளித்து வைத்திருந்ததால் அவர்கள் எப்போதும் அப்படியே பேசிப்பேசி பழகிவிட்டதாக சொன்னார்கள்.

போலந்தில் தடையுத்தரவின் கீழ் சேவை செய்த அநேகரில் சகோதரி ஆதா என்பவரும் ஒருவர். அவருடைய சுருட்டை முடி முன்நெற்றியை மறைத்தது. ஒருமுறை அந்த முடியைத் தூக்கிவிட்டு முன்நெற்றியிலிருந்த ஆழமான வடுவை அவர் எனக்குக் காட்டினார், அது அவரைத் துன்புறுத்திய ஒருவன் அடித்ததால் ஏற்பட்ட வடு. நம் சகோதர சகோதரிகள் சகித்த கொடுமையை நேரில் பார்த்து உறைந்துபோனேன்.

பெத்தேலுக்கு அடுத்ததாக எனக்குப் பிடித்த இடம் ஹவாய். ஹிலோ என்ற நகரத்தில் 1957-⁠ல் நடந்த மாநாடு என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அது மறக்க முடியாத சந்தர்ப்பம், உள்ளூரிலிருந்த சாட்சிகளைவிட அதிகமானோர் மாநாட்டிற்கு வந்து குவிந்திருந்தார்கள். அந்த ஊரின் மேயர் நேதனை அதிகாரப்பூர்வமாக வரவேற்றார். அநேகர் எங்களை வரவேற்க வந்தார்கள், எங்களுக்கு மலர் மாலை அணிவித்தார்கள்.

1955-⁠ல் ஜெர்மனி, நூரெம்பர்க்கில் நடைபெற்ற மாநாடு மறக்க முடியாத மற்றொரு மாநாடாகும்; அது நடைபெற்ற இடம், ஒரு காலத்தில் ஹிட்லரின் படை அணிவகுப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இடம். யெகோவாவின் சாட்சிகளை ஜெர்மனியிருந்து பூண்டோடு அழிப்பதாக ஹிட்லர் சூளுரைத்திருந்தது எல்லாருக்கும் தெரிந்ததே, ஆனால் இப்போதோ அந்த ஸ்டேடியம் யெகோவாவின் சாட்சிகளால் நிரம்பி வழிந்தது! கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. அங்கிருந்த மேடை மிகப் பெரியதாக இருந்தது, அதன் பின்னணியில் மனதைக் கொள்ளை கொள்ளும் 144 பெரிய தூண்கள் இருந்தன. நான் மேடையிலிருந்தேன், பெரும் கூட்டமாக திரண்டு வந்திருந்த 1,07,000-⁠க்கும் அதிகமானோரைப் பார்த்தேன். அந்த ஸ்டேடியம் அவ்வளவு நீளமாக இருந்ததால் கடைசி வரிசையில் இருந்தவர்களை கஷ்டப்பட்டுதான் பார்க்க வேண்டியிருந்தது.

ஜெர்மனியிலிருந்த சகோதரர்களின் பற்றுறுதியையும் நாசி ஆட்சியில் அவர்கள் துன்புறுத்தலை சகித்தபோது யெகோவாவிடமிருந்து பெற்ற பலத்தையும் எங்களால் உணர முடிந்தது. யெகோவாவுக்கு பற்றுறுதியுடன் இருந்து உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற எங்கள் தீர்மானத்தை அது பலப்படுத்தியது. நேதன் முடிவான பேச்சைக் கொடுத்தார்; அது முடிந்ததும், அவர் கையை ஆட்டி பார்வையாளர்களுக்கு “குட்பை” சொன்னார். பதிலுக்கு அவர்களும் உடனடியாக தங்கள் கைக்குட்டைகளை ஆட்டி பிரியாவிடை கொடுத்தார்கள். அது பார்ப்பதற்கு அழகிய பூக்கள் பூத்துக்குலுங்குவதைப் போல் காட்சியளித்தது.

டிசம்பர் 1974-⁠ல் நாங்கள் போர்ச்சுகலுக்குச் சென்றதும் மறக்க முடியாத மற்றொரு அனுபவம். நம்முடைய பிரசங்க வேலை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பிறகு லிஸ்பனில் நடைபெற்ற சாட்சிகளின் முதல் கூட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டோம். அங்கு 50 வருடங்கள் தடையுத்தரவு நீடித்திருந்தது! அந்த சமயத்தில் நாடு முழுவதும் 14,000 ராஜ்ய பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்தாலும் 46,000-⁠க்கும் அதிகமானோர் அங்கு நடந்த இரண்டு கூட்டங்களுக்கும் வந்திருந்தார்கள். “இனிமேலும் நாங்கள் இரகசியமாக கூட்டம் நடத்த வேண்டியதில்லை. சுதந்திரம் கிடைத்துவிட்டது” என சகோதரர்கள் சொன்னபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

நேதனுடன் பயணம் செய்த காலத்திலிருந்து இன்று வரை, விமானங்களில், ரெஸ்ட்டாரன்ட்டுகளில், தெருவில் என சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதென்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். சாட்சி கொடுப்பதற்குத் தயாராக எப்போதும் பிரசுரங்களை எடுத்துச் செல்கிறேன். ஒருசமயம் தாமதமாக வந்த விமானத்திற்காக நாங்கள் காத்திருக்கையில் நான் எங்கே வேலை செய்கிறேனென ஒரு பெண் என்னிடம் கேட்டாள். அது அவளுடனும் நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுடனும் உரையாடுவதற்கு வாய்ப்பளித்தது. பெத்தேல் சேவையும் என் பிரசங்க ஊழியமும் என்னை சுறுசுறுப்பாக மட்டுமல்ல, அதிக சந்தோஷமாகவும் வைத்திருக்கின்றன.

வியாதியும், பிரிவுக்கு முன் உற்சாகமூட்டும் அறிவுரையும்

1976-⁠ல் நேதனுக்கு புற்றுநோய் வந்தது, அவர் அதை சமாளிப்பதற்கு நானும் பெத்தேல் குடும்பத்தாரும் அவருக்கு உதவினோம். அவரது உடல்நிலை மோசமாகி வந்தபோதிலும்கூட புரூக்ளினில் பயிற்சி பெறுவதற்காக உலகெங்குமிருந்து வந்திருந்த வெவ்வேறு கிளை அலுவலக அங்கத்தினர்களை எங்கள் அறைக்கு அழைத்தோம். டான் மற்றும் அர்லீன் ஸ்டீலி; லாய்ட் மற்றும் மெல்பா பாரி; டக்லஸ் மற்றும் மேரி கெஸ்ட்; மார்ட்டின் மற்றும் கெர்ட்ரூட் பொயட்சிங்கர்; பிரைஸ் ஹியூஸ் ஆகியோரும் இன்னும் அநேகரும் எங்களை சந்திக்க வந்தது எனக்கு நினைவிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் தங்கள் நாட்டு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். தடையுத்தரவின் கீழ் நம் சகோதரர்கள் காட்டிய உறுதியைப் பற்றிய அனுபவங்கள் முக்கியமாய் என் நெஞ்சைத் தொட்டன.

சீக்கிரத்தில் இறக்கப் போவதை நேதன் உணர்ந்தபோது, விதவையாக என் சூழ்நிலையை தனிமரமாய் சமாளிக்க உதவும் அருமையான சில அறிவுரைகளை எனக்குக் கொடுத்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நம் மணவாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை அநேகருக்கு அமைவதில்லை.” எங்கள் மணவாழ்க்கை சந்தோஷமாக இருந்ததற்கு ஒரு காரணம் நேதன் சிந்தித்து செயல்பட்டதே. உதாரணமாக, பயணம் செய்கையில் நாங்கள் பலரையும் சந்தித்தபோது அவர் என்னிடம், “ஆட்ரீ, எப்போதாவது அவர்களை உனக்கு நான் அறிமுகம் செய்து வைக்காதிருந்தால் அவர்களுடைய பெயர் என் நினைவுக்கு வராததே காரணமாக இருக்கும்” என சொன்னதுண்டு. அதை அவர் முன்னதாகவே என்னிடம் சொன்னதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நேதன் எனக்கு இதையும் நினைப்பூட்டினார்: “மரணத்திற்குப் பிறகு நம் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும், அதன் பின் நாம் வேதனையை அனுபவிக்க வேண்டியதே இல்லை.” பின்னர் இவ்வாறு ஊக்குவித்தார்: “முன்னோக்கிப் பார், உனக்குப் பரிசு எதிர்காலத்தில் காத்திருக்கிறது. திரும்பத் திரும்ப பழைய நினைவுகள் வந்தாலும், பழையதையே எண்ணிக் கொண்டிருக்காதே. மனக் காயங்களை காலம் ஆற்றும். கோபப்படாதே, உன்னைப் பார்த்து நீயே பரிதாபப்பட்டுக் கொள்ளாதே. இத்தனை மகிழ்ச்சியும் ஆசீர்வாதங்களும் உனக்குக் கிடைத்ததற்காக சந்தோஷப்படு. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இந்த நினைவுகள் எல்லாம் உனக்கு ஆனந்தத்தைத் தருவதை நீயே காண்பாய். நினைவுகள் கடவுள் நமக்குத் தந்த பரிசு. எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிரு, மற்றவர்களுக்கு ஏதாவது செய்வதற்காக உன் வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிரு. இது வாழ்க்கையில் மகிழ்ச்சி காண உனக்கு உதவும்.” இறுதியில் 1977, ஜூன் 8-⁠ம் தேதி நேதனின் பூமிக்குரிய வாழ்க்கை முடிவுற்றது.

க்ளென் ஹைட்டை மணத்தல்

பழைய நினைவுகளுடன் என்னால் வாழ முடியும் அல்லது நான் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமென நேதன் என்னிடம் சொல்லியிருந்தார். எனவே 1978-⁠ல் நியு யார்க், வால்கிலிலுள்ள உவாட்ச்டவர் ஃபார்ம்ஸுக்கு நான் மாற்றலானதும் க்ளென் ஹைட் என்ற அழகான, அமைதியான, கனிவானவரை மணந்தேன். அவர் யெகோவாவின் சாட்சியாவதற்கு முன்பு, ஜப்பானுடன் அமெரிக்கா தொடுத்த போரில் கப்பற்படையில் பணியாற்றியிருந்தார்.

க்ளென், PT (patrol torpedo) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் எஞ்சின் ரூமில் வேலை செய்து வந்தார். அந்த எஞ்சின் சத்தத்தால் அவருக்கு காது சரியாக கேட்காமல் போனது. போருக்குப் பிறகு அவர் தீயணைப்பு படையில் பணியாற்றினார். போர்க்கால அனுபவங்களால் பல வருடங்களுக்கு கொடுங்கனவுகள் அவரை ஆட்டிப்படைத்தன. சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அவருடைய செயலரிடமிருந்து அவர் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்.

பின்னர் க்ளென், 1968-⁠ல் புரூக்ளினில் தீயணைப்பு பிரிவில் வேலை செய்வதற்காக பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார். பின்னர் உவாட்ச்டவர் ஃபார்ம்ஸில் தீயணைப்பு வண்டி வாங்கப்பட்டபோது 1975-⁠ல் அவர் அங்கு மாற்றப்பட்டார். காலப்போக்கில் அல்ஸைமர் நோயினால் அவதிப்பட்டார். எங்கள் பத்து வருட கால மணவாழ்க்கைக்குப் பிறகு க்ளென் இறந்துபோனார்.

நான் எப்படி சமாளிப்பேன்? தான் சாகப்போவதை அறிந்து நேதன் எனக்கு கொடுத்த புத்திமதி மீண்டும் என்னை ஆறுதல்படுத்தியது. தனிமரமாய் சமாளிக்க எனக்கு உதவும் விதத்தில் அவர் எழுதிய விஷயங்களை அடிக்கடி எடுத்து வாசித்துப் பார்த்தேன். தங்கள் துணையை மரணத்தில் பறிகொடுத்தவர்களிடமும் இந்த விஷயங்களை நான் இன்னமும் பகிர்ந்துகொள்கிறேன்; அவர்களும் நேதனின் அறிவுரையிலிருந்து ஆறுதலைப் பெற்றிருக்கிறார்கள். ஆம் அவர் என்னை உற்சாகப்படுத்தியபடி முன்னோக்கிப் பார்ப்பதே நல்லது.

அருமையான சகோதர கூட்டுறவு

சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த என் வாழ்க்கைக்கு, முக்கியமாய் பெத்தேல் குடும்பத்திலுள்ள அருமையான நண்பர்கள் பெரிதும் உதவியிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர் எஸ்டர் லோபெஸ் என்பவர்; இவர் 1944-⁠ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் மூன்றாவது வகுப்பில் பட்டம் பெற்றவர். இவர் ஸ்பானிஷ் மொழியில் நம் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதற்காக பிப்ரவரி 1950-⁠ல் திரும்பவும் புரூக்ளினுக்கு வந்தார். நேதன் அடிக்கடி பல இடங்களுக்குப் பயணம் செய்தபோது எஸ்டர் என் உற்ற தோழியாக இருந்தார். இவரும் உவாட்ச்டவர் ஃபார்ம்ஸில் இருக்கிறார். இவருக்கு இப்போது கிட்டத்தட்ட 95 வயது; இவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் இன்ஃபர்மரி இவரைக் கவனித்துக் கொள்கிறது.

என் உடன் பிறந்தவர்களில் ரஸலும் க்ளாராவும் மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். ரஸலுக்கு 90 வயதுக்கு மேலாகிறது, புரூக்ளின் பெத்தேலில் உண்மையுடன் சேவித்து வருகிறார். மணமுடித்த பின்பும் பெத்தேலில் தொடர்ந்து வேலை செய்ய முதலாவது அனுமதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 1952-⁠ல் இவர் பெத்தேலில் வேலை செய்து வந்த ஜீன் லார்சன் என்பவரை மணந்தார். ஜீனுடைய சகோதரர் மேக்ஸ் 1939-⁠ல் பெத்தேலுக்கு வந்தார், 1942-⁠ல் நேதனுக்குப் பிறகு இவர் பிரிண்டரியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பேற்றார். பெத்தேலில் மேக்ஸ் தொடர்ந்து அநேக பொறுப்புகளை கவனித்துக் கொண்டு வருகிறார்; அதோடு, மல்ட்டிபிள் ஸ்க்லரோஸிஸ் என்ற நோயினால் அவதிப்படும் அவரது அருமை மனைவி ஹெலனையும் கவனித்துக் கொள்கிறார்.

63 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவுக்கு முழுநேர ஊழியம் செய்ததை எண்ணிப் பார்க்கும்போது என் வாழ்க்கை உண்மையிலேயே திருப்தியான வாழ்க்கையாக இருந்திருக்கிறதென என்னால் சொல்ல முடியும். பெத்தேல் எனது வீடானது, சந்தோஷத்துடன் இங்கு இன்னும் சேவை செய்கிறேன். உழைக்க எங்களுக்கு கற்றுக்கொடுத்ததற்காகவும் யெகோவாவை சேவிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதற்காகவும் என் பெற்றோரைப் பாராட்ட வேண்டும். ஆனால் நம் அருமையான சகோதரத்துவமும், பரதீஸிய பூமியில் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து நமது மகத்தான படைப்பாளரும் ஒரே மெய் தேவனுமாகிய யெகோவாவை நித்தியத்திற்கும் சேவிக்கிற நம்பிக்கையுமே உண்மையில் வாழ்க்கையை திருப்தியுள்ளதாக ஆக்குகின்றன.

[பக்கம் 24-ன் படம்]

மண நாளன்று என் பெற்றோர்; ஜூன் 1912

[பக்கம் 24-ன் படம்]

இடமிருந்து வலம்: 1927-⁠ல் ரஸல், வேன், க்ளாரா, அர்டஸ், நான், கர்ட்டஸ்

[பக்கம் 25-ன் படம்]

1944-⁠ல் பயனியர் ஊழியம் செய்கையில் பிரான்சிஸுக்கும், பார்பரா மக்நாட்டுக்கும் இடையே நிற்கிறேன்

[பக்கம் 25-ன் படம்]

1951-⁠ல் பெத்தேலில். இடமிருந்து வலம்: நான், எஸ்டர் லோபெஸ், என் அண்ணி ஜீன்

[பக்கம்] -ன் படம்26

நேதனுடனும் அவருடைய பெற்றோருடனும்

[பக்கம் 26-ன் படம்]

1955-⁠ல் நேதனுடன்

[பக்கம் 27-ன் படம்]

ஹவாயில் நேதனுடன்

[பக்கம் 29-ன் படம்]

என் இரண்டாவது கணவர் க்ளென்னுடன்