Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுள்தான் காரணமா?

நம் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுள்தான் காரணமா?

நம் பிரச்சினைகளுக்கெல்லாம் கடவுள்தான் காரணமா?

மூளையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மெரியனுடைய மகள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், நாம் எல்லாரும் பொதுவாக என்ன செய்வோமோ அதைத்தான் மெரியனும் செய்தாள். * உதவி கேட்டு கடவுளிடம் மன்றாடினாள். “நான் இந்தளவுக்கு ஆதரவற்று தவிச்சதே இல்லை, தனிமையில் வாடியதும் இல்லை” என மெரியன் கூறுகிறாள். பிற்பாடு, அவளுடைய மகளின் நிலைமை கவலைக்கிடமானது, அதனால் மெரியன் கடவுளையே சந்தேகிக்க ஆரம்பித்தாள். “ஏன் எனக்கு இப்படியெல்லாம் நடக்குது?” என்று கேட்டாள். கடவுளுக்கு அன்பும் அக்கறையும் இருந்திருந்தால் தன்னை இப்படி கைவிட்டிருப்பாரா என்ற கேள்வி அவள் மனதில் அலையலையாய் வந்து மோதியது.

மெரியனுக்கு ஏற்பட்ட அனுபவம் அபூர்வமான ஒன்றல்ல. வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது, கடவுள் தங்களை கைவிட்டுவிட்டதாக உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்கள் புலம்பியிருக்கின்றனர். தனது பேரன் கொலை செய்யப்பட்டதால், “‘ஆண்டவன் ஏன் என்னை இப்படி சோதிக்கிறான்’ என்ற கேள்வி எப்போதும் என்னை வாட்டிக்கொண்டே இருக்கிறது” என லீசா கூறுகிறாள். “கடவுள் மீது வச்சிருந்த நம்பிக்கை அடியோடு போயிடல, ஆனா முன்ன இருந்தளவு இப்ப இல்லை” என்று கூறுகிறாள். பிஞ்சுக் குழந்தையாக இருக்கும் தன் மகனுக்கு ஏற்பட்ட அவலத்தை எண்ணி ஒரு பெண் இவ்வாறு சொன்னாள்: “இப்படி நடந்தும் கடவுள் எனக்கு துளிகூட ஆறுதல் தரவில்லை. அவர் என் மீது அக்கறை வைத்திருக்கிறார், என் மீது இரக்கம் காட்டுகிறார் என்பதற்கு எந்த அறிகுறியும் கிடையாது.” அவள் மேலும் இவ்வாறு கூறினாள்: “நான் கடவுளை மன்னிக்கவே மாட்டேன்.”

தங்களை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கையில் அநேகர் கடவுள் மீது கசந்துகொள்கின்றனர். பல நாடுகளில் மக்கள் பசி பட்டினியால் வாடுவதையும், போர் அகதிகள் நம்பிக்கையிழந்து தவிப்பதையும், கணக்குவழக்கில்லா பிள்ளைகள் எய்ட்ஸ் நோயினால் அனாதைகளாவதையும், இன்னும் கோடிக்கணக்கானோர் பல்வேறு வியாதிகளால் அவதியுறுவதையும் அவர்கள் கண்ணார காண்கின்றனர். இதுவும் இதுபோன்ற பல சோகங்களும் நிகழும்போது, கடவுளுக்கு கண்ணே இல்லை என்று அவர் மீது பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்றால், இன்று மனிதகுலத்தை பீடித்திருக்கும் பிரச்சினைகளுக்கு கடவுளை குற்றம்சாட்ட முடியாது. சொல்லப்போனால், மனித குடும்பத்தின் மீது குவிக்கப்பட்டுள்ள தீமைகளை ஒழிப்பது கடவுளுடைய சித்தமே என்பதை நம்புவதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. கடவுளுக்கு உண்மையிலேயே நம் மீது அக்கறை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 2 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.