Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

“நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் . . . சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”​—மத்தேயு 28:19, 20.

1. சீஷனாகிய பிலிப்புவுக்கும் எத்தியோப்பிய மனிதனுக்கும் இடையே என்ன உரையாடல் நிகழ்ந்தது?

 அந்த எத்தியோப்பிய மனிதன் எருசலேம் வரை நீண்ட யாத்திரை செய்திருந்தார். தான் நேசித்த கடவுளாகிய யெகோவாவை அங்கு வணங்கினார். கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தையையும் அவர் நேசித்தார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இரதத்தில் வீடு திரும்புகையில் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான பிலிப்பு அவரை சந்தித்து, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” என கேட்டார். “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” என அவர் பதிலளித்தார். வேதத்தை ஊக்கமாய் வாசித்த அந்த நபர் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு பிலிப்பு உதவினார்.​—⁠அப்போஸ்தலர் 8:26-39.

2. (அ) எத்தியோப்பியனின் பதில் எந்த விதத்தில் அர்த்தம் வாய்ந்தது? (ஆ) இயேசுவின் கட்டளையுடன் சம்பந்தப்பட்டுள்ள என்ன கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?

2 அந்த எத்தியோப்பியனின் பதிலில் முக்கிய கருத்து இருந்தது. அவர் வாசித்துக் கொண்டிருந்த விஷயத்தை புரிந்துகொள்ள ஒருவருடைய உதவி அவருக்குத் தேவைப்பட்டது. சீஷராக்கும்படி இயேசு கட்டளையிட்டபோது சொன்ன ஒரு குறிப்பிட்ட அறிவுரையின் முக்கியத்துவத்தை இது தெளிவுபடுத்துகிறது. அது என்ன அறிவுரை? பதிலைக் கண்டுபிடிக்க மத்தேயு 28-⁠ம் அதிகாரத்திலுள்ள இயேசுவின் வார்த்தைகளை நாம் தொடர்ந்து ஆராயலாம். ஏன், எங்கு என்ற கேள்விகளை முந்தின கட்டுரையில் சிந்தித்தோம். சீஷராக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையுடன் சம்பந்தப்பட்டுள்ள இன்னும் இரண்டு கேள்விகளை​—⁠எதை, எப்பொழுது என்ற கேள்விகளை​—⁠இக்கட்டுரையில் நாம் சிந்திக்கப் போகிறோம்.

“யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

3. (அ) ஒருவர் எப்படி இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆகிறார்? (ஆ) சீஷராவதற்கு எதையும் கற்பிக்க வேண்டும்?

3 மற்றவர்கள் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு நாம் எதை கற்பிக்க வேண்டும்? இயேசு தம் சீஷர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) எனவே கிறிஸ்து கட்டளையிட்ட காரியங்களை நாம் கற்பிக்க வேண்டும். * இயேசுவின் கட்டளைகளைக் கற்றுக்கொண்ட நபர், சீஷராக ஆவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சீஷராகவே இருப்பதற்கு என்ன செய்யலாம்? கவனமாக தேர்ந்தெடுத்து இயேசு பயன்படுத்திய வார்த்தைகளில் ஒரு முக்கிய குறிப்பைக் காணலாம். ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்’ என்று வெறுமனே சொல்லவில்லை; மாறாக, ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்’ என்று சொன்னதைக் கவனியுங்கள். (மத்தேயு 19:17) அது எதை அர்த்தப்படுத்துகிறது?

4. (அ) கட்டளையைக் கைக்கொள்வது என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) கிறிஸ்துவின் கட்டளையைக் கைக்கொள்ள ஒருவருக்கு நாம் எப்படி கற்பிக்கலாம் என்பதை விளக்கவும்.

4 கட்டளையைக் கைக்கொள்வது என்பது அக்கட்டளைக்கு “இசைவாக ஒருவர் செயல்படுவதை” அதாவது அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்கிறது. அப்படியென்றால், கிறிஸ்து கட்டளையிட்டவற்றை கைக்கொள்ளும்படி, அதாவது அவற்றிற்குக் கீழ்ப்படியும்படி நாம் ஒருவருக்கு எப்படி கற்பிக்கலாம்? வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர் சாலை விதிகளைப் பின்பற்ற தன் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வகுப்பறையில் தன் மாணவர்களுக்கு அவர் கற்றுக்கொடுக்கலாம். என்றாலும், போக்குவரத்து நெரிசலில் அந்த மாணவர்களே வாகனம் ஓட்டும்போது, தாங்கள் கற்றுக்கொண்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க பிரயாசப்படுகையில் பயிற்சியாளர் வழிகாட்டுகிறார். அதேபோல் நாம் ஜனங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது அவர்களுக்கு கிறிஸ்துவின் கட்டளைகளைக் கற்பிக்கிறோம். இருந்தாலும், கிறிஸ்துவின் போதனைகளை தினசரி வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கடைப்பிடிக்க மாணாக்கர் கடும் முயற்சி எடுக்கையில் நாம் அவர்களுக்கு வழிகாட்டவும் வேண்டும். (யோவான் 14:15; 1 யோவான் 2:3) இவ்வாறு, சீஷராக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையை முழுமையாக பின்பற்றுவதற்கு, நாம் அவற்றை கற்பிக்கவும் வேண்டும், கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டவும் வேண்டும். இவ்விதமாக, இயேசுவும் யெகோவாவும் வைத்த முன்மாதிரியை நாம் பின்பற்றுகிறோம்.​—⁠சங்கீதம் 48:14; வெளிப்படுத்துதல் 7:17.

5. நம்முடன் பைபிள் படிக்கும் ஒருவர் சீஷராக்கும்படியான கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஏன் தயங்கலாம்?

5 கிறிஸ்துவின் கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி மற்றவர்களுக்குக் கற்பிப்பதில், சீஷராக்குவதற்கான கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய உதவுவதும் உட்படுகிறது. நம்முடன் பைபிள் படிக்கும் சிலருக்கு அதை செய்வது கடினமாக இருக்கலாம். அவர்கள் இதற்கு முன்பு ஏதாவதொரு சர்ச்சில் அங்கத்தினர்களாக இருந்திருந்தாலும், சீஷராக்க வேண்டுமென்ற கட்டளையை அவர்களுக்கு மத குருமார்கள் கற்றுக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி சர்ச்சுகள் தங்கள் அங்கத்தினர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் முழுமையாக தோல்வி அடைந்திருப்பதை சில சர்ச் தலைவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். எல்லா வகையான ஆட்களையும் சீஷராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையைப் பற்றி சொல்லுகையில் பைபிள் கல்விமான் ஜான் ஆர். டபிள்யூ. ஸ்டாட் இவ்வாறு குறிப்பிட்டார்: “முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய தவறியிருப்பதே, இன்றைய சுவிசேஷ ஊழியத்தில் கிறிஸ்தவர்களிடம் காணப்படும் மிகப் பெரிய பலவீனம்.” “நாம் சுவிசேஷத்தை எட்டி நின்று அறிவிக்கவே விரும்புகிறோம். இது எப்படி இருக்கிறதென்றால், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கும் ஆட்களுக்கு கரையில் நின்றுகொண்டு சத்தமாக அறிவுரை கொடுப்பதைப் போல் இருக்கிறது. அவர்களைக் காப்பாற்ற நாம் தண்ணீரில் குதிப்பதில்லை. நாம் நனைந்துவிடுவோமோ என்றுதான் பயப்படுகிறோம்” என்றும் அவர் சொன்னார்.

6. (அ) பைபிள் மாணாக்கருக்கு உதவுகையில் பிலிப்புவின் முன்மாதிரியை நாம் எப்படி பின்பற்றலாம்? (ஆ) பைபிள் மாணாக்கர் பிரசங்க வேலையில் பங்குபெற ஆரம்பிக்கையில் நம் அக்கறையை எப்படி வெளிக்காட்டலாம்?

6 நம்முடன் பைபிள் படிக்கும் நபர் ‘நனைந்துவிடுவோமோ என பயப்படுகிற’ ஒரு மதத்தின் அங்கத்தினராக முன்னர் இருந்திருந்தால், தண்ணீர் பயத்தை சமாளிப்பது, அதாவது சீஷராக்கும்படியான கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது அவருக்கு சவாலாக இருக்கலாம். அப்படிப்பட்டவருக்கு உதவி தேவை. பிலிப்புவின் போதனைகள் அந்த எத்தியோப்பியனுக்கு அறிவூட்டி, முழுக்காட்டுதல் பெறும்படி தூண்டுவித்தது. அதைப் போலவே, நம்முடன் படிக்கும் நபருக்குத் தேவையான அறிவுரையையும் வழிநடத்துதலையும் கொடுத்து, அவருடைய புரிந்துகொள்ளுதலை ஆழமாக்கி செயல்பட தூண்டுகையில் நாம் பொறுமையாக இருக்க வேண்டும். (யோவான் 16:13; அப்போஸ்தலர் 8:35-38) அதோடு, சீஷராக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படியும்படி பைபிள் மாணாக்கருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நம் ஆசை, அவர்களுக்கு உதவும்படி நம்மைத் தூண்டுகிறது. அதாவது, ராஜ்ய பிரசங்க வேலையில் அவர்கள் முதல் படி எடுத்து வைக்கையில் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கும் அவர்களை வழிநடத்துவதற்கும் நம்மை தூண்டுகிறது.​—⁠பிரசங்கி 4:9, 10; லூக்கா 6:40.

“யாவையும்”

7. ‘யாவையும் கைக்கொள்ளும்படி’ மற்றவர்களுக்குக் கற்பிப்பதில் எந்தக் கட்டளைகளும் அடங்கியுள்ளன?

7 சீஷராக்கும்படி புதியவர்களுக்கு கற்றுக்கொடுப்பதோடு நாம் நிறுத்திக் கொள்வதில்லை. தாம் கட்டளையிட்ட ‘யாவையும் கைக்கொள்ளும்படி’ மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென இயேசு நமக்கு அறிவுரை கொடுத்தார். இதில் இரண்டு மிகப் பெரிய கட்டளைகள் அடங்கியுள்ளன, அதாவது கடவுளை சேவிக்க வேண்டும், அயலாரையும் நேசிக்க வேண்டும் என்ற கட்டளைகள் அடங்கியுள்ளன. (மத்தேயு 22:37-39) இவற்றை கடைப்பிடிக்க புதிய சீஷர்களுக்கு நாம் எப்படி உதவலாம்?

8. அன்புகாட்ட வேண்டுமென்ற கட்டளையை ஒரு புதிய சீஷருக்கு எப்படி கற்றுக்கொடுக்கலாம் என்பதை விளக்குங்கள்.

8 ஓட்டுநர் பயிற்சி பெறும் மாணவரைப் பற்றிய எடுத்துக்காட்டை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். பயிற்சியாளர் அருகில் அமர்ந்திருக்க போக்குவரத்து நெரிசலில் வாகனத்தை ஓட்டி செல்லும் அந்த மாணவர், அவரது அறிவுரைக்கு செவிசாய்க்கிறார், அதோடு, மற்ற டிரைவர்கள் ஓட்டுவதையும் கவனிக்கிறார். இவ்வாறு ஓட்டும் விதத்தைக் கற்றுக்கொள்கிறார். உதாரணமாக, முன்னே செல்ல விரும்பும் வாகனத்துக்காக ஒரு டிரைவர் சற்றே ஒதுங்கி வழிவிடுகிறார்; அல்லது பணிவான ஒரு டிரைவர், முன்னே வரும் வாகனத்தின் டிரைவருடைய கண்ணை கூச வைக்காதபடி ஹெட் லைட்டுகளின் வெளிச்சத்தை குறைக்கிறார்; அல்லது தனக்குத் தெரிந்தவர் ஒருவருடைய வாகனம் பழுதடைந்தபோது அவருக்கு உதவ ஒரு டிரைவர் முன்வருகிறார்; இத்தகைய சம்பவங்களுக்கு மாணவரின் கவனத்தைப் பயிற்சியாளர் திருப்புகிறார். வாகனம் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய பயனுள்ள விஷயங்களை இத்தகைய உதாரணங்கள் மாணவருக்குக் கற்பிக்கின்றன. அதைப் போலவே, ஜீவ பாதையில் பயணிக்கும் புதிய சீஷர் தனக்குக் கற்பிப்பவரிடமிருந்து மட்டுமல்ல ஆனால் சபையில் தான் காணும் நல்ல முன்மாதிரிகளிலிருந்தும் கற்றுக்கொள்கிறார்.​—⁠மத்தேயு 7:13, 14.

9. நேசிக்கும்படியான கட்டளைக்குக் கீழ்ப்படிவதன் அர்த்தத்தை புதிய சீஷர் எப்படி கற்றுக்கொள்கிறார்?

9 உதாரணமாக, அதிக முயற்சியெடுத்து சின்னஞ்சிறு குழந்தைகளை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்து வரும் ஒற்றைப் பெற்றோரை ஒரு பைபிள் மாணாக்கர் கவனிக்கலாம். மனச்சோர்வுடன் போராடிக் கொண்டிருந்தாலும் தவறாமல் கூட்டங்களுக்கு வரும் ஒரு பெண்மணியை அல்லது ஒவ்வொரு சபைக் கூட்டங்களுக்கும் முதியவர்களை தன் வாகனத்தில் அழைத்து வரும் வயதான விதவையை அல்லது ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வதில் உதவும் ஒரு டீனேஜரை அவர் பார்க்கலாம். சபையில் அநேக பொறுப்புகள் இருந்தபோதிலும் வெளி ஊழியத்தில் தவறாமல் முன்நின்று வழிநடத்தும் ஒரு சபை மூப்பரை அவர் கவனிக்கலாம். உடல் ஊனமுற்று, வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாலும் தன்னை சந்திக்க வரும் அனைவருக்கும் ஆவிக்குரிய உற்சாகத்தை அள்ளித் தரும் ஒரு சாட்சியை அவர் சந்திக்கலாம். வயதான பெற்றோர்களைக் கவனித்துக் கொள்வதற்காக தங்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை செய்துவரும் ஒரு தம்பதியினரை அவர் காணலாம். இத்தகைய கனிவான, நம்பகமான, உதவும் மனம் படைத்த கிறிஸ்தவர்களை அந்த புதிய சீஷர் கவனிக்கையில், கடவுளையும் அயலாரையும் நேசிக்கும்படி, முக்கியமாக சக விசுவாசிகளை நேசிக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்கிறார். (நீதிமொழிகள் 24:32; யோவான் 13:35; கலாத்தியர் 6:10; 1 தீமோத்தேயு 5:4, 8; 1 பேதுரு 5:2, 3) இவ்வாறு கிறிஸ்தவ சபையிலுள்ள ஒவ்வொருவருமே கற்பிக்கவும் வழிநடத்தவும் செய்யலாம், அவ்வாறு செய்யவும் வேண்டும்.​—⁠மத்தேயு 5:16.

“உலகத்தின் முடிவுபரியந்தம்”

10. (அ) சீஷராக்கும் வேலையை நாம் எப்பொழுது வரை தொடர வேண்டும்? (ஆ) நியமிப்புகளை நிறைவேற்றுவதில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

10 எப்பொழுது வரை சீஷராக்கும் வேலையை நாம் தொடர வேண்டும்? இந்த உலகின் முடிவு வரை தொடர வேண்டும். (மத்தேயு 28:20) இயேசு கொடுத்த கட்டளையின் இந்த அம்சத்தை நிறைவேற்ற நம்மால் முடியுமா? உலகளாவிய சபையாக நாம் அவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென உறுதியாய் தீர்மானித்திருக்கிறோம். கடந்து சென்ற வருடங்களில், ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட’ ஆட்களைக் கண்டுபிடிப்பதற்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் சந்தோஷமாக பயன்படுத்தி வந்திருக்கிறோம். (அப்போஸ்தலர் 13:48) தற்போது, உலகெங்கும் பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 லட்சத்திற்கும் அதிக மணிநேரத்தை செலவிடுகிறோம். இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றுவதால் நாம் இதை செய்கிறோம். ‘நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது’ என அவர் சொன்னார். (யோவான் 4:34) இது நம்முடைய உள்ளார்ந்த ஆவலாகவும் இருக்கிறது. (யோவான் 20:21) நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை ஆரம்பித்துவிட்டு அதை அப்படியே நிறுத்திக்கொள்ள நாம் விரும்புவதில்லை; அதை செய்து முடிப்பதற்கே விரும்புகிறோம்.​—⁠மத்தேயு 24:13; யோவான் 17:4.

11. நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சிலருக்கு என்ன நேர்ந்திருக்கிறது, நம்மை நாமே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?

11 ஆனால், நம்முடைய சக விசுவாசிகளில் சிலர் ஆவிக்குரிய விதமாக பலவீனமடைந்திருக்கிறார்கள்; இதனால், சீஷராக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையை நிறைவேற்றுவதில் சிலர் மந்தமாகிவிட்டார்கள் அல்லது ஊழியத்திற்குப் போவதையே அடியோடு நிறுத்திவிட்டார்கள், அது நமக்குக் கவலை அளிக்கிறது. அவர்கள் சபையுடன் மீண்டும் கூட்டுறவு கொள்ளவும் சீஷராக்கும் வேலையில் மீண்டும் பங்கெடுக்கவும் நம்மால் எந்த விதத்திலாவது உதவ முடியுமா? (ரோமர் 15:1; எபிரெயர் 12:12) அப்போஸ்தலர்கள் தற்காலிகமாக பலவீனமடைந்திருந்த சமயத்தில் இயேசு உதவிய விதம் அப்படிப்பட்டவர்களுக்கு இன்று நாம் எப்படி உதவலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

கரிசனை காட்டுங்கள்

12. (அ) இயேசுவின் மரணத்திற்கு சற்று முன்பு அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்? (ஆ) அப்போஸ்தலர்களிடம் பெரும் பலவீனங்கள் இருந்தபோதிலும் இயேசு அவர்களை எப்படி நடத்தினார்?

12 இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தை முடிக்கும் தறுவாயில், அதாவது மரண வாசலில் இருந்தபோது, அப்போஸ்தலர்கள் “அவரை விட்டு ஓடிப்போனார்கள்.” இயேசு முன்னறிவித்திருந்த விதமாகவே அவர்கள் ‘ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவர் வீட்டுக்கு ஓடிப்போனார்கள்.’ (மாற்கு 14:50; யோவான் 16:32, பொது மொழிபெயர்ப்பு) ஆவிக்குரிய விதமாக பலவீனப்பட்டிருந்த தம் தோழர்கள் மீது இயேசு எப்படி கவனம் செலுத்தினார்? இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தம் சீஷர்கள் சிலரிடம் இவ்வாறு கூறினார்: “பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.” (மத்தேயு 28:10) அப்போஸ்தலர்களிடம் பெரும் பலவீனங்கள் இருந்தபோதிலும், இயேசு அவர்களை ‘என் சகோதரர்கள்’ என்றே அழைத்தார். (மத்தேயு 12:49) அவர்கள் மீதிருந்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. இவ்வாறு, யெகோவாவைப் போலவே இயேசுவும் இரக்கமுள்ளவராகவும் மன்னிக்கிறவராகவும் இருந்தார். (2 இராஜாக்கள் 13:23) நாம் எப்படி இயேசுவை பின்பற்ற முடியும்?

13. ஆவிக்குரிய விதமாக பலவீனமடைந்தவர்களை நாம் எப்படி கருத வேண்டும்?

13 ஊழியத்தில் கலந்துகொள்வதில் மந்தமாகிவிட்டவர்கள் அல்லது அதை நிறுத்திவிட்டவர்கள் மீது நமக்கு அதிக கரிசனை இருக்க வேண்டும். அவர்கள் கடந்த காலத்தில், ஒருவேளை சிலர் பல பத்தாண்டுகளுக்குக்கூட அன்போடு செய்து வந்த ஊழியத்தை நாம் இன்னும் நினைத்துப் பார்க்கிறோம். (எபிரெயர் 6:10) அவர்களுடைய தோழமைக்காக உண்மையில் ஏங்குகிறோம். (லூக்கா 15:4-7; 1 தெசலோனிக்கேயர் 2:17) ஆகவே, அவர்கள் மீது நமக்கு கரிசனை இருப்பதை எப்படி காட்டலாம்?

14. இயேசுவைப் பின்பற்றி நாம் எப்படி பலவீனமான நபருக்கு உதவ முடியும்?

14 மனமுடைந்து போன அப்போஸ்தலர்கள் கலிலேயாவுக்குப் போக வேண்டுமென்றும் அவர்கள் தம்மை அங்கே காண்பார்கள் என்றும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், ஒரு விசேஷ கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி இயேசு அவர்களுக்கு அழைப்புவிடுத்தார். (மத்தேயு 28:10) அதைப் போலவே இன்று, ஆவிக்குரிய விதமாக பலவீனமடைந்தவர்களை கிறிஸ்தவ சபையில் நடைபெறும் கூட்டங்களுக்கு வரும்படி நாம் உற்சாகப்படுத்துகிறோம், அதற்காக அவர்களை பல முறை அழைக்க வேண்டியிருக்கலாம். அப்போஸ்தலர்களைப் பொறுத்ததில் அந்த அழைப்பு பலனளித்தது, ஏனெனில் “பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.” (மத்தேயு 28:16) அதைப் போன்றே பலவீனமானவர்கள் நமது அன்பான அழைப்பை ஏற்று மீண்டும் கூட்டங்களுக்கு வரும்போது நாம் எவ்வளவாய் பூரித்துப் போகிறோம்!​—⁠லூக்கா 15:6.

15. ராஜ்ய மன்றத்திற்கு வரும் பலவீனமானவர்களை வரவேற்பதில் நாம் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற முடியும்?

15 பலவீனமான ஒரு கிறிஸ்தவர் ராஜ்ய மன்றத்துக்கு வருகையில் நாம் எப்படி நடந்துகொள்வோம்? தாம் வரும்படி அழைத்திருந்த இடத்திற்கு, தற்காலிகமாக விசுவாசத்தில் பலவீனப்பட்டிருந்த தம் அப்போஸ்தலர்கள் வந்ததைப் பார்த்த இயேசு என்ன செய்தார்? ‘இயேசு சமீபத்தில் வந்து, அவர்களிடம் பேசினார்.’ (மத்தேயு 28:18, NW) தூரத்திலிருந்து அவர்களை உற்றுப் பார்க்கவில்லை, மாறாக அவர்கள் அருகில் சென்றார். அந்த அப்போஸ்தலர்களிடம் இயேசுவே வலிய சென்றபோது அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! முயற்சி எடுத்து மீண்டும் கிறிஸ்தவ சபைக்கு வரும் பலவீனமானவர்களிடம் நாமும் வலிய சென்று பேசுவோமாக, அவர்களை அன்புடன் வரவேற்போமாக.

16. (அ) இயேசு தம் சீஷர்களிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) பலவீனமானவர்களைப் பற்றிய இயேசுவின் கண்ணோட்டத்தை நாம் எப்படி பிரதிபலிக்கலாம்? (அடிக்குறிப்பைக் காண்க.)

16 இயேசு வேறு எதையும் செய்தார்? முதலாவதாக, “சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என அறிவித்தார். இரண்டாவதாக, ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் . . . சீஷராக்குங்கள்’ என பொறுப்பளித்தார். மூன்றாவதாக, “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என வாக்குறுதி அளித்தார். ஆனால் இயேசு எதை செய்யவில்லை என்பதை கவனித்தீர்களா? அவர்களுடைய குறைகளையும் சந்தேகங்களையும் சுட்டிக்காட்டி அவர்களை அவர் கடிந்துகொள்ளவில்லை. (மத்தேயு 28:17) அவருடைய அணுகுமுறை பலனளித்ததா? ஆம், பலனளித்தது. சீக்கிரத்திலேயே அப்போஸ்தலர்கள் மீண்டும் ‘உபதேசம் பண்ணவும், பிரசங்கிக்கவும்’ ஆரம்பித்தார்கள். (அப்போஸ்தலர் 5:42) பலவீனமானவர்களை எப்படி கருத வேண்டும், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற விஷயத்தில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் அதே போன்ற அருமையான பலன்களை நாமும் நம் சபைகளில் காண முடியும். *​—⁠அப்போஸ்தலர் 20:35.

“சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்”

17, 18. ‘சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்ற இயேசுவின் வார்த்தைகள் நம்மை எப்படி பலப்படுத்துகின்றன?

17 இயேசு பொறுப்பளித்தபோது, ‘சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்ற வார்த்தைகளுடன் முடித்தார்; அந்த வார்த்தைகள் சீஷராக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையை நிறைவேற்ற முயலும் அனைவரையும் பலப்படுத்தும் திறனுள்ளவை. நம் ராஜ்ய பிரசங்க வேலைக்கு எப்பேர்ப்பட்ட எதிர்ப்பை விரோதிகள் கொண்டு வந்தாலும்சரி, நமக்கு எதிராக எவ்வித அவதூறுகளை ஏற்படுத்தினாலும் சரி, நாம் பயப்பட தேவையில்லை. ஏன்? “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” பெற்ற நம் தலைவராகிய இயேசு நம் பக்கம் இருக்கிறார்!

18 ‘சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என இயேசு கொடுத்த வாக்குறுதியும் அதிக ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. சீஷராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிய அதிக முயற்சி எடுக்கையில் சந்தோஷமான நாட்களையும் சோகமான நாட்களையும் கடந்து வருகிறோம். (2 நாளாகமம் 6:29) அன்புக்கும் பாசத்துக்கும் உரியவர்களை பறிகொடுத்ததால் துக்க காலங்களை நம்மில் சிலர் அனுபவிக்கிறார்கள். (ஆதியாகமம் 23:2; யோவான் 11:33-36) உடல் நலம் குன்றி, பலவீனமாகும்போது முதுமையின் பிரச்சினைகளை சிலர் சமாளிக்கிறார்கள். (பிரசங்கி 12:1-6) இன்னும் சிலர் மன அழுத்தத்தில் சிக்கி, நாட்கணக்கில் தத்தளிக்கிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14) நம்மில் பலர் பொருளாதாரத்தில் பயங்கர கஷ்டங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. இருந்தாலும், இத்தகைய சவால்களின் மத்தியிலும், ஊழியத்தில் நாம் வெற்றி காண முடிகிறது; ஏனென்றால் ‘சகல நாட்களிலும்,’ வாழ்க்கையில் கடும் சோதனைகளை சந்திக்கும் நாட்களிலும்கூட இயேசு நம்முடன் இருக்கிறார்.​—⁠மத்தேயு 11:28-30.

19. (அ) சீஷராக்கும்படி இயேசு கொடுத்த பொறுப்பில் என்னென்ன அறிவுரைகள் அடங்கியுள்ளன? (ஆ) அவர் கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற எது நமக்கு உதவுகிறது?

19 இந்தக் கட்டுரையிலும் முந்தின கட்டுரையிலும் நாம் கவனித்த விதமாக சீஷராக்கும்படி இயேசு கொடுத்த பொறுப்பு எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகிறது. இந்தக் கட்டளையை நாம் ஏன், எங்கு நிறைவேற்ற வேண்டும் என இயேசு சொன்னார். எதை கற்பிக்க வேண்டும், எப்பொழுது வரை கற்பிக்க வேண்டும் என்பதையும் அவர் சொன்னார். இந்தப் பெரும் பொறுப்பை நிறைவேற்றுவது உண்மையில் சவால்மிக்கதுதான். ஆனால் கிறிஸ்துவின் அதிகாரம் நம்மை ஆதரிப்பதாலும், அவர் நம்மோடு இருப்பதாலும் இதை கண்டிப்பாக செய்து முடிக்க முடியும்! இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா?

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 3 அவர்களுக்கு ‘ஞானஸ்நானம் கொடுங்கள் மற்றும் உபதேசம் பண்ணுங்கள்’ என சொல்லாமல் “ஞானஸ்நானங் கொடுத்து, . . . அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என இயேசு சொன்னதை ஒரு புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. எனவே, முழுக்காட்டுதல் கொடுக்கும்படியும் கற்பிக்கும்படியும் சொல்லப்பட்ட கட்டளை, “கண்டிப்பாக . . . அடுத்தடுத்து நடைபெறும் செயல்கள் அல்ல.” மாறாக, “கற்பிப்பது என்பது தொடர்ந்து நடைபெறும் செயல், இது ஓரளவு ஞானஸ்நானத்திற்கு முன்பும் . . . ஓரளவு ஞானஸ்நானத்திற்கு பின்பும் தொடருகிறது.”

^ பாரா. 16 பலவீனமானவர்களை எப்படி கருத வேண்டும், அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற விஷயத்தின் பேரில் கூடுதல் தகவலை காவற்கோபுரம், பிப்ரவரி 1, 2003, பக்கங்கள் 15-18-⁠ல் காணலாம்.

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

• இயேசுவின் கட்டளையை கைக்கொள்ளும்படி மற்றவர்களுக்கு நாம் எப்படி கற்பிக்கிறோம்?

• சபையிலுள்ள மற்றவர்களிடமிருந்து புதிய சீஷர் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

• ஆவிக்குரிய விதமாக பலவீனமடைந்தவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்?

• “சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குறுதியிலிருந்து நாம் என்ன பலத்தையும் ஆறுதலையும் பெறுகிறோம்?

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் படங்கள்]

நாம் கற்பிப்பவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும்

[பக்கம் 17-ன் படங்கள்]

மற்றவர்களது முன்மாதிரியிலிருந்து புதிய சீஷர் பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்