நோவாவுக்கு ஒரு கடிதம்
நோவாவுக்கு ஒரு கடிதம்
“அன்புள்ள நோவா, உங்களைப் பற்றியும் நீங்களும் உங்களுடைய குடும்பமும் ஜலப்பிரளயத்திலிருந்து தப்பிப்பிழைக்க பேழையைக் கட்டிய விதத்தைப் பற்றியும் பைபிளில் நிறைய தடவை வாசித்திருக்கிறேன்.”
மீனாமாரியா என்ற 15 வயது மாணவி எழுதிய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. 14-க்கும் 21-க்கும் இடைப்பட்ட வயதினருக்காக நடத்தப்பட்ட எழுத்துப் போட்டியில் இந்த மாணவி சேர்ந்திருந்தாள். பின்லாந்து தபால்துறையும், பின்லாந்து ஆசிரியர் தாய்மொழி கழகமும் பின்லாந்து இலக்கிய சங்கமும் இணைந்து இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தன. போட்டியில் பங்கேற்பவர்கள் ஒரு புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு கடிதம் எழுத வேண்டும். அப்புத்தகத்தின் ஆசிரியருக்கோ அதிலுள்ள ஒரு கதாபாத்திரத்திற்கோ முகவரியிட்டு அந்தக் கடிதத்தை எழுதலாம். இதில் கலந்துகொண்ட மாணவர்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களில் 1,400-க்கும் அதிகமானவற்றை தேர்ந்தெடுத்து அவற்றை போட்டி நிகழ்த்தும் குழுவிற்கு ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். அந்தக் குழு தலைசிறந்த கட்டுரை ஒன்றையும், இரண்டாவது சிறந்த கட்டுரைகளாக பத்தையும், மூன்றாவது சிறந்த கட்டுரைகளாக பத்தையும் தேர்ந்தெடுத்தது. மீனாமாரியா எழுதிய கடிதம் மூன்றாவது சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இடம் பிடித்ததில் அவளுக்கு அளவிலா மகிழ்ச்சி.
டீனேஜ் மாணவியாகிய மீனாமாரியா சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நோவாவுக்கு ஏன் கடிதம் எழுதினாள்? அவள் சொல்கிறாள்: “உடனே பைபிள்தான் என் நினைவுக்கு வந்தது. பைபிள் கதாபாத்திரங்கள் எனக்கு நன்றாக தெரியும். அவர்களைப் பற்றி நிறைய வாசித்திருப்பதால், அவர்களெல்லாம் கிட்டத்தட்ட உயிருள்ளவர்கள் போலவே எனக்கு தோன்றுகிறார்கள். நோவாவின் வாழ்க்கை ரொம்ப சிலிர்ப்பூட்டுவதாகவும் என்னுடைய வாழ்க்கையிலிருந்து வித்தியாசமாகவும் இருந்ததால் நோவாவுக்கு கடிதம் எழுத தீர்மானித்தேன்.”
நோவாவுக்கு மீனாமாரியா எழுதிய கடிதம் இவ்வாறு முடிவடைகிறது: “விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் நீங்கள் இன்றும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள். விசுவாசத்தின்படி நடப்பதற்கு பைபிள் வாசிக்கும் அனைவருக்கும் உங்களுடைய வாழ்க்கை உற்சாகமளிக்கிறது.”
பைபிள் உண்மையிலேயே ‘ஜீவனுள்ளது,’ இளைஞரும் முதியோருமான மக்கள் மீது ‘வல்லமை’ செலுத்துகிறது என்பதை இளம் பைபிள் வாசகி எழுதியுள்ள இந்தக் கடிதம் நன்கு சித்தரித்துக் காட்டுகிறது.—எபிரெயர் 4:12.