Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்’

‘புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்’

‘புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்’

‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், . . . சீஷராக்குங்கள்.’​—மத்தேயு 28:18, 19.

1, 2. (அ) இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்த பொறுப்பு என்ன? (ஆ) இயேசுவின் கட்டளைகள் சம்பந்தமாக என்ன கேள்விகள் சிந்திக்கப்படும்?

 அது பொ.ச. 33-⁠ம் ஆண்டு, இஸ்ரவேலில் இளவேனிற் காலமாக இருந்தது. அப்போது ஒருநாள் இயேசுவின் சீஷர்கள் கலிலேயாவில் ஒரு மலையில் கூடி வந்திருந்தார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சீக்கிரத்தில் பரலோகத்திற்கு செல்லவிருந்தார். ஆனால் அதற்கு முன்பு முக்கியமான ஒரு பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. அந்தப் பொறுப்பு என்ன? அதற்கு சீஷர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? இன்று அது எவ்வாறு நமக்குப் பொருந்துகிறது?

2 அந்தப் பொறுப்பை இயேசு ஒப்படைத்தபோது அவர்களிடம் என்ன சொன்னார் என்பது மத்தேயு 28:18-​20-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ளது: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.” இயேசு அவ்வாறு சொன்னபோது, “சகல அதிகாரமும்,” “சகல ஜாதிகளையும்,” “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்,” “சகல நாட்களிலும்” என்றெல்லாம் குறிப்பிட்டார். இந்த நான்கு விஷயங்களையும் உள்ளடக்கிய அவருடைய கட்டளை முக்கியமான சில கேள்விகளை எழுப்புகின்றன. சுருங்கச் சொன்னால், ஏன்? எங்கு? எதை? எப்பொழுது? என்பதே அந்தக் கேள்விகள். இந்தக் கேள்விகளை நாம் இப்பொழுது ஒவ்வொன்றாக சிந்திக்கலாம். *

“சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது”

3. சீஷராக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளைக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

3 முதலாவதாக, சீஷராக்கும்படி கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளைக்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? இயேசு கூறினார்: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் . . . சீஷராக்”குங்கள். எனவே இந்தக் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணத்தை “ஆகையால்” என்ற வார்த்தை சொல்கிறது. ஏனென்றால் இந்தக் கட்டளையைக் கொடுத்த இயேசுவுக்கு “சகல அதிகாரமும்” இருக்கிறது. அவருக்கு எந்தளவு அதிகாரம் இருக்கிறது?

4. (அ) இயேசுவுக்கு எந்தளவு அதிகாரம் இருக்கிறது? (ஆ) இயேசுவின் அதிகாரத்தை நாம் புரிந்துகொள்கையில் சீஷராக்கும் கட்டளையை நாம் எவ்வாறு கருத வேண்டும்?

4 இயேசுவுக்கு தமது சபையின் மீது அதிகாரம் இருக்கிறது. புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தின் மீது 1914 முதற்கொண்டு அவர் அதிகாரம் செலுத்தி வந்திருக்கிறார். (கொலோசெயர் 1:​13; வெளிப்படுத்துதல் 11:15) அவரே பிரதான தூதர், ஆகவே கோடிக்கணக்கான தூதர்கள் அடங்கிய பரலோக சேனை அவருடைய அதிகாரத்தில் இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:16; 1 பேதுரு 3:​22; வெளிப்படுத்துதல் 19:14-16) அதோடு, நீதியுள்ள நியமங்களை எதிர்க்கும் “சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும்” அழிக்கிற அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. (1 கொரிந்தியர் 15:24-26; எபேசியர் 1:20-23) இயேசு உயிருள்ளோர் மீது மாத்திரமே அதிகாரம் செலுத்துவதில்லை. “அவர் உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் . . . நியாயாதிபதி” என்பதால் மரணத்தில் உறங்குகிறவர்களை உயிர்த்தெழுப்பும் அதிகாரத்தையும் கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 10:42; யோவான் 5:26-28) நிச்சயமாகவே, அவ்வளவு அதிகாரத்தைப் பெற்ற ஒருவர் கொடுக்கும் கட்டளையை மிக முக்கியமாக கருத வேண்டும். ஆகவே, ‘புறப்பட்டுப் போய், சீஷராக்குங்கள்’ என்ற கிறிஸ்துவின் கட்டளைக்கு நாம் மதிப்பு கொடுத்து மனப்பூர்வமாக கீழ்ப்படிகிறோம்.

5. (அ) இயேசுவின் வார்த்தைகளுக்கு பேதுரு எவ்வாறு கீழ்ப்படிந்தார்? (ஆ) இயேசுவின் அறிவுரைக்கு பேதுரு கீழ்ப்படிந்ததால் என்ன ஆசீர்வாதத்தைப் பெற்றார்?

5 தமது பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்தில், சீஷர்களுக்கு இயேசு ஒரு முக்கியமான விஷயத்தை வியத்தகு முறையில் கற்பித்தார். ஆம், அவருடைய அதிகாரத்தை உணர்ந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது ஆசீர்வாதங்களை அள்ளி வழங்கும் என கற்பித்தார். மீனவரான பேதுருவிடம் ஒரு சமயம் அவர் இவ்வாறு சொன்னார்: “ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்.” அங்கு மீன்கள் இல்லை என்று பேதுருவுக்கு நன்றாக தெரியும். ஆகவே, “ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை” என இயேசுவிடம் அவர் கூறினார். இருந்தாலும், “உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என பேதுரு தாழ்மையுடன் சொன்னார். கிறிஸ்துவின் கட்டளைக்கு பேதுரு கீழ்ப்படிந்ததால், அவர் “மிகுதியான மீன்களைப்” பிடித்தார். பேதுரு உணர்ச்சிவசப்பட்டு, “இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போக வேண்டும்” என்றார். ஆனால் இயேசு, “பயப்படாதே, இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாய் இருப்பாய் என்றார்.” (லூக்கா 5:1-10; மத்தேயு 4:18) இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6. (அ) அற்புதமாக மீன்களைப் பிடித்ததைப் பற்றிய விவரம், இயேசுவுக்கு கீழ்ப்படிதல் சம்பந்தமாக எதை விளக்குகிறது? (ஆ) இயேசுவின் மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

6 ‘மனுஷரைப் பிடிக்கும்’ பொறுப்பை பேதுருவுக்கும் அந்திரேயாவுக்கும் மற்ற அப்போஸ்தலருக்கும் இயேசு கொடுத்தது அவர்கள் அற்புதமாக மீன்களைப் பிடித்ததற்கு முன்பு அல்ல, ஆனால் பின்பே. (மாற்கு 1:16, 17) ஆகவே, கண்மூடித்தனமாக கீழ்ப்படியும்படி இயேசு கேட்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் தமக்கு கீழ்ப்படிவதற்கு நம்ப வைக்கும் காரணத்தை அளித்தார். வலைகளைப் போடும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தபோது அற்புதமான பலன்கள் கிடைத்தது போலவே, ‘மனிதரைப் பிடிக்கும்படி’ இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியும்போதும் அநேக ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தார். அப்போஸ்தலர்கள் அதை முழுமையாக விசுவாசித்து உடனடியாக செயல்பட்டார்கள். “அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்” என அந்தப் பதிவு முடிக்கிறது. (லூக்கா 5:11) இன்று, சீஷராக்கும் ஊழியத்தில் பங்குகொள்ளும்படி மற்றவர்களை நாம் உந்துவிக்கும்போது, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். நாம் சொல்வதை மறுபேச்சின்றி உடனே செய்ய வேண்டுமென ஜனங்களிடம் வற்புறுத்துவதில்லை, ஆனால் கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய நம்பவைக்கும் காரணங்களை அவர்களிடம் சொல்கிறோம்.

நம்ப வைக்கும் காரணங்களும் சரியான உள்நோக்கங்களும்

7, 8. (அ) ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையை செய்ய வேதப்பூர்வமான காரணங்கள் சில யாவை? (ஆ) பிரசங்க வேலையை தொடர்ந்து செய்ய எந்த வேதவசனம் முக்கியமாக உங்களை உந்துவிக்கிறது? (அடிக்குறிப்பையும் காண்க.)

7 கிறிஸ்துவின் அதிகாரத்தை நாம் ஒப்புக்கொள்வதால் ராஜ்ய பிரசங்கிப்பு மற்றும் சீஷராக்கும் வேலையில் பங்கு பெறுகிறோம். இந்த நல்ல வேலையை செய்யும்படி ஆட்களை உந்துவிப்பதற்கு வேறென்ன வேதப்பூர்வ காரணங்கள் இருக்கின்றன? பல்வேறு நாட்டைச் சேர்ந்த உண்மையுள்ள சாட்சிகள் சொல்லும் பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வசனங்கள் எவ்வாறு அவர்களுடைய குறிப்புகளை ஆதரிக்கின்றன என்பதற்கும் கவனம் செலுத்துங்கள்.

8 ராய் என்பவர் 1951-⁠ல் முழுக்காட்டப்பட்டவர்: “யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தபோது, அவருக்கு எப்போதும் சேவை செய்வதாக வாக்கு கொடுத்தேன். அந்த வாக்கை காப்பாற்றுவதே என் விருப்பம்.” (சங்கீதம் 50:14, மத்தேயு 5:​37) 1962-⁠ல் முழுக்காட்டப்பட்ட ஹெதர் சொல்கிறார்: “யெகோவா எனக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது, அவருக்கு உண்மையுடன் சேவை செய்வதன் மூலம் என் நன்றியை காட்டவே நான் ஆசைப்படுகிறேன்.” (சங்கீதம் 9:1, 9-11; கொலோசெயர் 3:​15) 1954-⁠ல் முழுக்காட்டப்பட்ட ஹானலோர் கூறுகிறார்: “ஊழியத்தில் ஈடுபடும் எல்லா சமயத்திலும், தேவதூதர்களின் உதவி நமக்கு இருக்கிறது. இது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!” (அப்போஸ்தலர் 10:30-​33; வெளிப்படுத்துதல் 14:​6, 7) 1969-⁠ல் முழுக்காட்டப்பட்ட ஆனர் இவ்வாறு கூறுகிறார்: “யெகோவா நியாயத்தீர்ப்பு செய்யும் நேரம் வரும்போது, ‘எனக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது’ என்று யெகோவாவையும் அவருடைய சாட்சிகளையும் அக்கம்பக்கத்தார் யாரும் குற்றம் சாட்டுவதை நான் விரும்பவில்லை.” (எசேக்கியேல் 2:5; 3:17-19; ரோமர் 10:16, 18) 1974-⁠ல் முழுக்காட்டப்பட்ட க்ளாடியோ கூறுகிறார்: “நாம் பிரசங்கிக்கும்போது, ‘கடவுளுடைய பார்வை’ நம் மீது இருக்கிறது, ‘கிறிஸ்துவும் நம்மோடு இருக்கிறார்.’ அது மட்டுமா, நாம் ஊழியம் செய்யும்போது, நம் அருமையான நண்பர்களோடு சேர்ந்து அவர்களுடைய நட்பை அனுபவித்து மகிழ்கிறோம், அதில் எவ்வளவு ஆனந்தம்!”​—2 கொரிந்தியர் 2:​17, NW. *

9. (அ) பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் மீன் பிடித்ததைப் பற்றிய பதிவு, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்குரிய சரியான உள்நோக்கத்தைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது? (ஆ) இன்று கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்படிவதற்குரிய சரியான உள்நோக்கம் என்ன, ஏன்?

9 அற்புதமாக மீன் பிடித்ததைப் பற்றிய பதிவு, கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதன் சரியான உள்நோக்கத்தை, அதாவது அன்பு இருப்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. “நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போக வேண்டும்” என பேதுரு சொன்னபோது, இயேசு போய்விடவுமில்லை, பேதுரு செய்த எந்தவொரு பாவத்திற்காக கண்டனம் செய்யவுமில்லை. (லூக்கா 5:8) போய்விடும்படி பேதுரு கேட்டுக்கொண்டதற்கு இயேசு அவரை குறைகூறவுமில்லை. அதற்குப் பதிலாக, “பயப்படாதே” என இயேசு தயவுடன் பதிலளித்தார். அது ஆரோக்கியமற்ற பயமாக இருந்திருந்தால் தவறான உள்நோக்கத்துடன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதாக இருந்திருக்கும். மாறாக, பேதுருவும் அவருடைய தோழர்களும் மனிதரைப் பிடிப்பதில் பயனுள்ள ஆட்களாக ஆவார்கள் என இயேசு கூறினார். அது போலவே இன்றும் மற்றவர்களை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களில் பயத்தையோ, குற்றவுணர்வு, வெட்கம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளையோ நாம் ஏற்படுத்துகிறதில்லை. கடவுள் மீதும் கிறிஸ்து மீதும் உள்ள அன்பின் அடிப்படையில் முழு ஆத்துமாவோடு கீழ்ப்படிவதே யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிறது.​—மத்தேயு 22:⁠37.

‘சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்’

10. (அ) சீஷராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையில் எது அவருடைய சீஷர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது? (ஆ) இயேசுவின் கட்டளைக்கு சீஷர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?

10 கிறிஸ்துவின் கட்டளை சம்பந்தமாக நாம் கேட்கும் இரண்டாவது கேள்வி: சீஷராக்கும் வேலையை எங்கு செய்ய வேண்டும்? இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்.’ இயேசுவின் பூமிக்குரிய ஊழிய காலத்திற்கு முன்பு, யெகோவாவை சேவிக்க பிற தேசத்தார் இஸ்ரவேலுக்கு வந்த சமயத்தில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. (1 இராஜாக்கள் 8:​41-​43) இயேசு முக்கியமாக யூதர்களிடம் பிரசங்கித்தபோதிலும், சகல தேசத்து மக்களிடமும் போய் பிரசங்கிக்கும்படி தமது சீஷர்களுக்குச் சொன்னார். ஆரம்பத்தில் தமது சீஷர்களின் மீன் பிடி பகுதி, அதாவது பிரசங்கிக்கும் பிராந்தியம் ஒரு சிறு ‘குளமாக’ மட்டுமே இருந்தது; அதாவது யூதருக்கு மட்டுமே பிரசங்கிக்க வேண்டியிருந்தது. ஆனால் சீக்கிரத்தில் அது மனிதகுலம் எனும் “சமுத்திரம்” முழுவதையும் உட்படுத்துவதாக இருந்தது. இந்த மாற்றம் சீஷர்களுக்கு சவாலாக இருந்தபோதிலும், அவர்கள் இயேசுவின் கட்டளைக்கு உடனடியாகக் கீழ்ப்படிந்தார்கள். ஆம், இயேசுவின் மரணத்திற்குப்பின் வெறும் 30-⁠க்கும் குறைவான ஆண்டுகளுக்குள், யூதருக்கு மட்டுமல்லாமல், “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.​—கொலோசெயர் 1:​23.

11. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், மீன்பிடி பிராந்தியங்களில் என்ன விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது?

11 மிக சமீப காலங்களில், பிரசங்கிக்க வேண்டிய பிராந்தியத்தில் இதுபோன்ற விரிவாக்கத்தைக் கண்டிருக்கிறோம். 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ‘மீன் பிடி பிராந்தியங்கள்’ சில நாடுகளுக்கு மாத்திரமே மட்டுப்பட்டவையாக இருந்தன. என்றாலும், அன்றைய கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி, தாங்கள் பிரசங்கித்த பிராந்தியத்தை ஆர்வத்துடன் விரிவாக்கினார்கள். (ரோமர் 15:21) 1930-⁠களின் ஆரம்பத்தில், ஏறக்குறைய நூறு நாடுகளில் சீஷராக்கும் வேலையை செய்து வந்தார்கள். இன்று, நாம் 235 நாடுகளில் ‘மீன் பிடிப்பது’ விரிவடைந்திருக்கிறது.​—⁠மாற்கு 13:⁠10.

‘பலவித பாஷைக்காரரிலிருந்து’

12. சகரியா 8:23-⁠ல் உள்ள தீர்க்கதரிசனம் என்ன சவாலை எடுத்துக் காட்டுகிறது?

12 சகல தேசங்களிலும் சீஷராக்கும் வேலையைச் செய்வது ஒரு சவால், பிராந்தியத்தின் பரப்பளவை பொறுத்த வரை மட்டுமல்ல, மொழியைப் பொறுத்த வரையிலும் அது ஒரு சவால்தான். சகரியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இவ்வாறு முன்னறிவித்தார்: ‘அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக் கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.’ (சகரியா 8:23) இந்தத் தீர்க்கதரிசனத்தின் பெரிய நிறைவேற்றத்தில், ‘யூதன்’ என்பவன் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் மீதியானோரை பிரதிநிதித்துவம் செய்கிறான், அந்தப் பத்து மனிதர் ‘திரள் கூட்டத்தாரைப்’ பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். * (வெளிப்படுத்துதல் 7:9, 10; கலாத்தியர் 6:16) கிறிஸ்துவின் சீஷர்களான இந்தத் திரள் கூட்டத்தார் பல தேசங்களில் இருப்பார்கள், அதோடு சகரியா குறிப்பிட்டபடி, பல மொழிகளைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். இதை கடவுளுடைய ஜனங்களின் நவீன கால சரித்திரம் தெளிவாக்குகிறதா? ஆம், தெளிவாக்குகிறது.

13. (அ) மொழிகள் சம்பந்தமாக கடவுளுடைய நவீன கால ஜனங்கள் மத்தியில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? (ஆ) பல்வேறு மொழிகளில் ஆவிக்குரிய உணவை வழங்க வேண்டிய அவசியம் அதிகரித்து வந்திருப்பதால் உண்மையுள்ள அடிமை வகுப்பார் எவ்வாறு பிரதிபலித்திருக்கிறார்கள்? (“பார்வையற்றோருக்கான பிரசுரங்கள்” என்ற பெட்டியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

13 1950-⁠ல் உலகெங்கும் இருந்த யெகோவாவின் சாட்சிகளில் ஐந்து பேரில் சுமார் மூவருடைய தாய்மொழி ஆங்கிலமாக இருந்தது. 1980-⁠க்குள் ஐந்தில் ஏறக்குறைய இரண்டு பேர் என அந்த வீதம் மாறியிருந்தது. இன்று ஐந்து சாட்சிகளில் ஒருவருக்கு மட்டுமே ஆங்கிலம் தாய்மொழியாக இருக்கிறது. மொழிகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கண்டு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் எப்படி செயல்பட்டார்கள்? ஆவிக்குரிய உணவை இன்னும் அதிக மொழிகளில் கொடுக்க ஆரம்பித்தார்கள். (மத்தேயு 24:45) உதாரணமாக, 1950-⁠ல் நமது பிரசுரங்கள் 90 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டன, ஆனால் இன்றோ சுமார் 400 மொழிகளில் பிரசுரிக்கப்படும் அளவுக்கு அந்த எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இவ்வாறு பல்வேறு மொழியினருக்கு அதிக கவனம் செலுத்துவது பலன் தந்திருக்கிறதா? ஆம், தந்திருக்கிறது! ‘சகல பாஷைக்காரரிலிருந்தும்’ சராசரியாக 5,000 பேர் ஒவ்வொரு வாரமும் கிறிஸ்துவின் சீஷராகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாடுகள் ‘வலைகளில்’ மிகுதியான மீன்களைப் பிடிக்கின்றன!​—லூக்கா 5:6; யோவான் 21:⁠6.

மனநிறைவு தரும் ஊழியம்​—⁠நீங்கள் பங்குகொள்ள முடியுமா?

14. நமது பிராந்தியத்தில் வேறொரு பாஷையை பேசுவோருக்கு நாம் எவ்வாறு உதவலாம்? (“சைகை மொழியும் சீஷராக்குவதும்” என்ற பெட்டியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

14 பல மேற்கத்திய நாடுகளில் பிற நாட்டவர் குடியேறுவதால் ஒருவருடைய சொந்த நாட்டிலேயே ‘சகல பாஷைக்காரரை’ சீஷராக்கும் சவால் எழுந்துள்ளது. (வெளிப்படுத்துதல் 14:6) நம் பிராந்தியத்தில் நம்முடைய பாஷையைத் தவிர வேறொரு பாஷையை பேசுகிறவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? (1 தீமோத்தேயு 2:4) அடையாள அர்த்தத்தில், சரியான மீன்பிடி வலையை நாம் பயன்படுத்தலாம், அதாவது அவர்கள் மொழியில் பிரசுரங்களை அளிக்கலாம். கூடுமானால், அவர்களுடைய மொழி பேசும் ஒரு சாட்சி அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யலாம். (அப்போஸ்தலர் 22:2) இத்தகைய ஏற்பாடுகள் செய்வது இப்போது சுலபம், ஏனெனில் அயல் மொழி பேசுகிறவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு உதவுவதற்காகவே சாட்சிகள் பலர் வேறொரு மொழியை கற்றிருக்கிறார்கள். இந்த விதத்தில் உதவி அளிப்பது நல்ல பலன்களைத் தந்திருக்கிறது என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன.

15, 16. (அ) அயல் மொழி பேசுவோருக்கு உதவி செய்வது பலன் தரும் ஒன்று என்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன? (ஆ) அயல் மொழி பிராந்தியத்தில் ஊழியம் செய்வது சம்பந்தமாக என்ன கேள்விகளை சிந்தித்துப் பார்க்கலாம்?

15 நெதர்லாந்திலிருந்து வரும் இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள், அங்கு ராஜ்ய பிரசங்கிப்பு வேலை 34 மொழிகளில் ஒழுங்காக செய்யப்படுகிறது. சாட்சிகளாக இருக்கும் ஒரு தம்பதியர் போலிஷ் மொழி பேசும் மக்களை சீஷராக்குவதற்கு அங்கு மனமுவந்து சென்றார்கள். அவர்களுடைய முயற்சிக்கு மிகுந்த பலன் கிடைத்ததால், அக்கறை காட்டுவோருக்கு பைபிள் படிப்பு நடத்த அந்தக் கணவர் தான் செய்யும் உலகப்பிரகாரமான வேலையில் ஒரு நாளை குறைத்துக்கொள்ள வேண்டுமென உணர்ந்தார். இதனால் இந்தத் தம்பதியினர் ஒவ்வொரு வாரமும் 20-⁠க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது. அவர்கள் சொன்னார்கள்: “ஊழியத்தில் எங்களுக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது.” சொந்த மொழியில் பைபிள் சத்தியத்தைக் கேட்கிறவர்கள் தங்கள் நன்றியுணர்வை வெளிக்காட்டும்போது அவர்களை சீஷராக்குகிறவர்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். உதாரணமாக, வியட்னாமீஸ் மொழியில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டபோது வயதான ஒருவர் எழுந்து நின்று, பேச அனுமதி கொடுக்கும்படி கேட்டார். கண்களில் கண்ணீர் வழிய சாட்சிகளிடம் இவ்வாறு கூறினார்: “என்னுடைய கஷ்டமான மொழியைக் கற்றுக்கொள்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. இந்த வயதான காலத்தில் பைபிளிலிருந்து அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.”

16 ஆகவே, அயல் மொழி பேசும் சபைகளில் சேவை செய்கிறவர்கள் அதிகமான பலனைப் பெற்று வருவதில் ஆச்சரியமில்லை. பிரிட்டனைச் சேர்ந்த தம்பதியினர் இவ்வாறு கூறினார்கள்: “அயல் மொழி பிராந்தியத்தில் ஊழியம் செய்வதே எங்கள் 40 வருட ராஜ்ய சேவையில் அதிக சிலிர்ப்பூட்டும் ஓர் அனுபவமாக இருந்தது.” சிலிர்ப்பூட்டும் இந்த ஊழியத்தில் பங்குபெற உங்கள் சூழ்நிலைமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ள முடியுமா? நீங்கள் இன்னும் பள்ளியில் படிக்கிறவராக இருந்தால், இத்தகைய ஊழியத்திற்கு ஆயத்தமாக ஓர் அயல் மொழியை கற்றுக்கொள்ள முடியுமா? அப்படி செய்வது ஆசீர்வாதங்கள் நிறைந்த திருப்திகரமான வாழ்க்கையை உங்களுக்கு அளிக்கும். (நீதிமொழிகள் 10:22) இதைப் பற்றி உங்கள் பெற்றோருடன் நீங்கள் ஏன் கலந்து பேசக்கூடாது?

நம் முறைகளை மாற்றிக்கொள்ளுதல்

17. நம் சபை பிராந்தியத்தில் எவ்வாறு அதிகமான ஆட்களை சந்திக்கலாம்?

17 அயல் மொழி பிராந்தியங்களில் ‘வலைகளை’ வீச பெரும்பாலோருக்கு சூழ்நிலைமைகள் அனுமதிப்பதில்லை. என்றாலும், நம் சொந்த சபை பிராந்தியத்திலேயே, தற்போது நாம் சென்றெட்டும் ஆட்களைவிட அதிகமானோரை சென்றெட்ட முடியும். எப்படி? நம் செய்தியை அல்ல, நம் முறைகளை மாற்றிக்கொள்வதன் மூலம். பல பிராந்தியங்களில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள கட்டிடங்களில் அநேகர் வாழ்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது அநேகர் வீட்டில் இருப்பதில்லை. ஆகவே, வெவ்வேறு சமயங்களிலும் வெவ்வேறு இடங்களிலும் நம் ‘வலைகளை’ வீச வேண்டும். இவ்வாறு, நாம் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருப்போம். பல்வேறு சூழ்நிலைமைகளில் ஜனங்களிடம் பேசுவதற்கு அவர் வழிகளைக் கண்டுபிடித்தார்.​—மத்தேயு 9:9; லூக்கா 19:​1-10; யோவான் 4:​6-15.

18. பல்வேறு சூழ்நிலைகளில் சாட்சி கொடுப்பது எவ்வாறு பயனுள்ளதாக இருந்திருக்கிறது? (“பிஸினஸ் ஆட்களை சீஷராக்குதல்” என்ற பெட்டியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

18 சில நாடுகளில், எங்கெல்லாம் ஆட்களைக் காண்கிறோமோ அங்கெல்லாம் சாட்சி கொடுப்பது சீஷராக்குவதற்கு முக்கியமான வழியாக இருக்கிறது. சீஷராக்குவதில் அனுபவமிக்கவர்கள் பல்வேறு இடங்களில் சாட்சி கொடுக்க அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்வதோடு விமான நிலையங்கள், அலுவலகங்கள், கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பஸ் நிறுத்தங்கள், வீதிகள், பூங்காக்கள், கடற்கரைகள் என பல்வேறு இடங்களிலும் பிரஸ்தாபிகள் இப்போது சாட்சி கொடுக்கிறார்கள். ஹவாயில் புதிதாக முழுக்காட்டப்பட்ட சாட்சிகளில் பலர், இப்படிப்பட்ட இடங்களில்தான் முதலில் சந்திக்கப்பட்டனர். பல்வேறு முறைகளைக் கையாளுவது சீஷராக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையை முழுமையாக நிறைவேற்ற நமக்கு உதவுகிறது.​—1 கொரிந்தியர் 9:22, 23.

19. இயேசு நமக்கு கொடுத்த பொறுப்பின் என்னென்ன அம்சங்கள் பின்வரும் கட்டுரையில் ஆராயப்படும்?

19 சீஷராக்கும்படி இயேசு கொடுத்த பொறுப்பில் ஏன், எங்கு பிரசங்கிக்க வேண்டும் என்ற விவரங்கள் மட்டுமல்ல, எதை பிரசங்கிக்க வேண்டும், எப்பொழுது வரை பிரசங்கிக்க வேண்டும் என்ற விவரங்களும் இருந்தன. இயேசு நமக்கு கொடுத்த பொறுப்பின் இந்த இரு அம்சங்கள் பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும்.

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 2 இந்தக் கட்டுரையில் முதல் இரண்டு கேள்விகளை நாம் சிந்திப்போம். கடைசி இரண்டு கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.

^ பாரா. 8 பிரசங்கிப்பதற்கு கூடுதலான காரணங்கள் பின்வரும் வசனங்களில் உள்ளன: நீதிமொழிகள் 10:5; ஆமோஸ் 3:8; மத்தேயு 24:42; மாற்கு 12:17; ரோமர் 1:​14, 15.

^ பாரா. 12 இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் சம்பந்தமாக கூடுதலான தகவலைப் பெற காவற்கோபுரம், மே 15, 2001, பக்கம் 12, ஏசாயா தீர்க்கதரிசனம்​—⁠மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு, தொகுதி 2, பக்கம் 408-ஐ காண்க. இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• என்ன காரணங்களால் மற்றும் என்ன நோக்கத்துடன் ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்குவதிலும் நாம் பங்கு கொள்கிறோம்?

• சகல ஜனங்களையும் சீஷராக்கும்படி இயேசு கொடுத்த பொறுப்பை இன்று யெகோவாவின் ஊழியர்கள் எந்தளவு நிறைவேற்றியிருக்கிறார்கள்?

• ‘மீன்பிடி முறையை’ நாம் எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம், ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?

[கேள்விகள்]

[பக்கம் 10-ன் பெட்டி/படங்கள்]

பார்வையற்றோருக்கான பிரசுரங்கள்

அமெரிக்காவில் வசிக்கும் அல்பர்ட் என்பவர் கிறிஸ்தவ மூப்பராகவும் முழுநேர ஊழியராகவும் இருக்கிறார். அவர் பார்வையற்றவர். எனவே இன்னும் திறம்பட ஊழியம் செய்ய பைபிள் அடிப்படையிலான பிரெய்ல் புத்தகங்கள் அவருக்கு உதவுகின்றன. ஊழியக் கண்காணியாக வேலை செய்வதற்கும் அவை உதவுகின்றன. சபை நியமிப்பை அவர் எவ்வாறு கையாளுகிறார்?

“அல்பர்ட்டைவிட அதிக திறம்பட்ட ஊழியக் கண்காணி எங்களுக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை” என நடத்தும் கண்காணி ஜேம்ஸ் கூறுகிறார். ஐக்கிய மாகாணங்களில் பைபிள் பிரசுரங்களை ஆங்கில மற்றும் ஸ்பானிஷ் பிரெய்லில் பல வருடங்களாக பெற்றுவருகிற சுமார் 5,000 பார்வையிழந்த ஆட்களில் அல்பர்ட்டும் ஒருவர். சொல்லப்போனால், 1912 முதல் உண்மையுள்ள அடிமை வகுப்பு நூற்றுக்கும் அதிகமான பிரசுரங்களை பிரெய்லில் பிரசுரித்திருக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யெகோவாவின் சாட்சிகளின் அச்சகங்கள் தற்போது ஒவ்வொரு வருடமும் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லட்சக்கணக்கான பக்கங்களை பிரெய்லில் அச்சிட்டு, 70-⁠க்கும் அதிகமான நாடுகளுக்கு அனுப்புகின்றன. பார்வையற்றோருக்காக தயாரிக்கப்படும் பைபிள் பிரசுரங்களிலிருந்து பயனடையக்கூடிய யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?

[பக்கம் 11-ன் பெட்டி/படம்]

சைகை மொழியும் சீஷராக்குவதும்

கிறிஸ்துவின் சீஷராவதற்கு காதுகேளாதோருக்கு உதவ உலகெங்குமுள்ள வைராக்கியமான இளைஞர் பலர் உட்பட, ஆயிரக்கணக்கான சாட்சிகள் சைகை மொழியைக் கற்றிருக்கிறார்கள். இதனால் பிரேஸிலில் மட்டுமே சமீப வருடத்தில் காதுகேளாதவர்களில் 63 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்; காதுகேளாதவர்களில் 35 சாட்சிகள் இப்போது அங்கு முழுநேர ஊழியர்களாக சேவை செய்கிறார்கள். உலகெங்கும் 1,200-⁠க்கும் அதிகமான சைகை மொழி சபைகளும் தொகுதிகளும் இருக்கின்றன. வட்டாரத்தின் அளவின்படி பார்த்தால், ரஷ்யாவில் இருக்கும் ஒரேவொரு சைகை மொழி வட்டாரமே உலகிலுள்ள மிகப் பெரிய வட்டாரமாகும்; ஏனெனில் அது ரஷ்யா முழுவதையும் உள்ளடக்குகிறது!

[பக்கம் 12-ன் பெட்டி]

பிஸினஸ் ஆட்களை சீஷராக்குதல்

ஹவாயில் வசிக்கும் ஒரு சாட்சி பிஸினஸ் துறையில் இருப்பவர்களை அலுவலகங்களில் சந்திக்கையில், போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டாள். அவர் அதிக வேலையாக இருந்தபோதிலும், வாரத்தில் ஒருநாள் தன் அலுவலகத்தில் 30 நிமிடங்கள் பைபிள் படிக்க சம்மதித்தார். ஒவ்வொரு புதன்கிழமை காலையிலும், தனக்கு போன்-கால் எதுவும் வந்தால் அதை கனெக்ட் செய்ய வேண்டாம் என தன் பணியாளர்களிடம் சொல்லிவிடுகிறார்; பின்பு படிப்புக்கு தன் முழு கவனத்தைச் செலுத்துகிறார். ஹவாயில் உள்ள மற்றொரு சாட்சி ஷூ-ரிப்பேர் செய்யும் கடை முதலாளிக்கு வாரம் ஒருமுறை பைபிள் படிப்பு நடத்துகிறார். இந்தப் படிப்பு அந்தக் கடையிலேயே நடத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வரும்போது, சாட்சி ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொள்கிறார். வாடிக்கையாளர் சென்றபின் படிப்பை மீண்டும் அவர்கள் தொடருகிறார்கள்.

சாட்சிகள் தங்களுடைய ‘வலைகளை’ வெவ்வேறு இடங்களில் வீச முயற்சி எடுத்ததால்தான் இந்தத் தலைமை அதிகாரியையும் கடை முதலாளியையும் சந்திக்க முடிந்தது. உங்கள் சபை பிராந்தியத்தில், வீட்டில் காண முடியாத ஆட்களை பொதுவாக எந்தெந்த இடங்களில் சந்திக்க முடியும் என்பதை உங்களால் யோசித்துப் பார்க்க முடியுமா?

[பக்கம் 12-ன் படம்]

அயல் மொழி பிராந்தியம் ஒன்றில் நீங்கள் சேவை செய்ய முடியுமா?