Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாவின் பிரமாணத்தில்” இன்பம் காண்கிறீர்களா?

“யெகோவாவின் பிரமாணத்தில்” இன்பம் காண்கிறீர்களா?

“யெகோவாவின் பிரமாணத்தில்” இன்பம் காண்கிறீர்களா?

‘யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் காண்கிற . . . மனிதன் சந்தோஷமுள்ளவன்.’​—சங்கீதம் 1:⁠2, NW.

1. யெகோவாவின் ஊழியராக நாம் ஏன் சந்தோஷத்துடன் இருக்கிறோம்?

 உண்மைப் பற்றுறுதியுள்ள ஊழியர்களாகிய நம்மை யெகோவா ஆதரித்து ஆசீர்வதிக்கிறார். வாழ்க்கையில் பல சோதனைகளை நாம் எதிர்ப்படுகிறோம் என்பது உண்மைதான். ஆனால் அதேசமயத்தில் உண்மையான சந்தோஷத்தையும் நாம் அனுபவித்து மகிழ்கிறோம். இது ஆச்சரியமான ஒன்றல்ல, ஏனென்றால் ‘நித்தியானந்த தேவனை’ நாம் சேவிக்கிறோம்; அவருடைய பரிசுத்த ஆவி நம் இதயத்தில் மகிழ்ச்சி பொங்கிவழியச் செய்கிறது. (1 தீமோத்தேயு 1:11; கலாத்தியர் 5:22) சந்தோஷம் என்பது நன்மையான ஒன்றை எதிர்பார்த்திருப்பதால் அல்லது அடைவதால் வரும் மெய்யான மகிழ்ச்சியான நிலை. நம் பரம தகப்பன் நிச்சயமாகவே நமக்கு நல்ல நல்ல பரிசுகளை வழங்குகிறார். (யாக்கோபு 1:17) அப்படியானால், நாம் சந்தோஷமாக இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை!

2. எந்த சங்கீதங்களை நாம் ஆராயப் போகிறோம்?

2 சந்தோஷத்தைப் பற்றி சங்கீத புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. உதாரணமாக, ஒன்றாம் சங்கீதத்திலும் இரண்டாம் சங்கீதத்திலும் இதைப் பார்க்கலாம். இரண்டாம் சங்கீதத்தை இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது எழுதினார் என இயேசு கிறிஸ்துவின் ஆரம்பகால சீஷர்கள் குறிப்பிடுகின்றனர். (அப்போஸ்தலர் 4:25, 26) முதல் சங்கீதத்தை இயற்றியவர்​—⁠அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை​—⁠ஆவியின் ஏவுதலால் இவ்வாறு ஆரம்பிக்கிறார்: ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல் . . . இருக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன்.’ (சங்கீதம் 1:1, 2) களிகூருவதற்குரிய காரணத்தை ஒன்றாம் சங்கீதமும் இரண்டாம் சங்கீதமும் எப்படி விளக்குகிறது என்பதை இந்தக் கட்டுரையிலும் பின்வரும் கட்டுரையிலும் நாம் பார்க்கலாம்.

சந்தோஷத்தின் இரகசியம்

3. சங்கீதம் 1:1-⁠ன்படி தேவபக்தியுள்ள நபர் சந்தோஷத்துடன் இருப்பதற்கு சில காரணங்கள் யாவை?

3 தேவபக்தியுள்ள நபர் ஏன் சந்தோஷமுள்ளவராய் இருக்கிறார் என ஒன்றாம் சங்கீதம் காட்டுகிறது. இத்தகைய சந்தோஷத்திற்குரிய காரணங்கள் சிலவற்றைக் கொடுத்து, சங்கீதக்காரன் இவ்வாறு பாடுகிறார்: ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், . . . இருக்கிற மனுஷன் [சந்தோஷமுள்ளவன்].’​—⁠சங்கீதம் 1:⁠1, 2.

4. சகரியாவும் எலிசபெத்தும் வைத்த சிறந்த முன்மாதிரி என்ன?

4 சந்தோஷமாக இருப்பதற்கு நாம் யெகோவாவின் நீதியுள்ள சட்டங்களுக்கு இசைய வாழ வேண்டும். முழுக்காட்டுபவனாகிய யோவானின் பெற்றோராக இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற சகரியாவும் எலிசபெத்தும், யெகோவாவின் “சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின் படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.” (லூக்கா 1:5, 6) இவர்களைப் போலவே ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலிருக்க’ அல்லது அவர்களுடைய தேவபக்தியற்ற புத்திமதியைக் கேட்காமலிருக்க உறுதியுடனிருந்தால் நாமும் சந்தோஷமாய் இருக்க முடியும்.

5. ‘பாவிகளின் வழியைத்’ தவிர்க்க எது நமக்கு உதவும்?

5 பொல்லாதவர்களுடைய சிந்தையை நாம் புறக்கணித்தால், ‘பாவிகளுடைய வழியில் நிற்க’ மாட்டோம். சொல்லப்போனால், அவர்கள் அடிக்கடி கால்வைக்கும் இடங்களுக்கு, அதாவது ஒழுக்கக்கேடான பொழுதுபோக்கு இடங்களுக்கு அல்லது மோசமான இடங்களுக்கு நாம் கண்டிப்பாக செல்ல மாட்டோம். வேதப்பூர்வமற்ற நடத்தையில் பாவிகளோடு சேர்ந்துகொள்ளும் ஆசை நமக்கு ஏற்பட்டால் என்ன செய்யலாம்? அப்போது, “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” என்ற அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளுக்கு இசைய நடக்க உதவுமாறு கடவுளிடம் ஜெபிப்போமாக. (2 கொரிந்தியர் 6:14) கடவுள் மீது நம்பிக்கை வைத்து ‘சுத்த இருதயத்துடன்’ இருந்தால், பாவிகளுடைய மனப்பான்மையையும் வாழ்க்கை பாணியையும் நாம் வெறுத்து ஒதுக்கிவிடுவோம். அதோடு, ‘மாயமற்ற விசுவாசத்தோடுகூடிய’ சுத்தமான எண்ணங்களும் ஆசைகளும் நமக்கு இருக்கும்.​—மத்தேயு 5:8; 1 தீமோத்தேயு 1:⁠5.

6. பரியாசக்காரரைக் குறித்ததில் நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

6 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, “பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்” இருக்க வேண்டும். கடவுளுடைய கட்டளையைக் கைக்கொள்வதை சிலர் ஏளனம் செய்கிறார்கள்; இந்தக் “கடைசி நாட்களில்,” முக்கியமாக விசுவாச துரோகிகளாய் மாறிய கிறிஸ்தவர்கள் அதிகமாய் பரிகாசம் செய்கிறார்கள். அப்போஸ்தலன் பேதுரு சக விசுவாசிகளை இவ்வாறு எச்சரித்தார்: “பிரியமானவர்களே, . . . முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.” (2 பேதுரு 3:​1-4) ‘பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் ஒருபோதும் உட்காராமல்’ இருந்தால், அவர்களுக்கு நிச்சயம் வரப்போகும் அழிவை நாம் தவிர்ப்போம்.​—நீதிமொழிகள் 1:​22-​27.

7. சங்கீதம் 1:1-⁠ன் வார்த்தைகளுக்கு ஏன் நாம் செவிசாய்க்க வேண்டும்?

7 ஒன்றாம் சங்கீதத்தின் ஆரம்ப வரிகளுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும், இல்லையென்றால் பைபிள் படிப்பின் மூலம் நாம் பெற்ற ஆன்மீக சிந்தையை இழந்துவிடக்கூடும். ஏன், இன்னும் படுமோசமான நிலைமைக்கே சென்றுவிடக்கூடும். பொல்லாதவர்களின் ஆலோசனையை பின்பற்றும்போது ஆன்மீக ரீதியில் நாம் முதலாவதாக ஒருபடி சறுக்குகிறோம். பிறகு நாம் அவர்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்ளக்கூடும். காலப்போக்கில் ஏளனம் செய்யும் உண்மையற்ற விசுவாச துரோகிகளாகவும்கூட நாம் மாறிவிடக்கூடும். ஆகவே, பொல்லாதவர்களோடு நட்புகொள்வது தேவபக்தியற்ற மனப்பான்மையை நம்மில் வளர்த்து, யெகோவா தேவனுடன் நாம் கொண்டுள்ள உறவை அழித்துவிடக்கூடும். (1 கொரிந்தியர் 15:33; யாக்கோபு 4:4) அப்படி ஒருபோதும் நேரிடாமல் பார்த்துக்கொள்வோமாக!

8. நம் மனதை ஆன்மீக விஷயங்கள் மீது ஊன்றுவதற்கு எது நமக்கு உதவும்?

8 ஆன்மீக விஷயங்கள் மீது நமது மனதை ஊன்றுவதற்கும் பொல்லாதவர்களின் தோழமையைத் தவிர்ப்பதற்கும் ஜெபம் நமக்கு உதவும். பவுல் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” உண்மையுள்ளவைகள், ஒழுக்கமுள்ளவைகள், நீதியுள்ளவைகள், கற்புள்ளவைகள், அன்புள்ளவைகள், நற்கீர்த்தியுள்ளவைகள், புண்ணியம், புகழ் ஆகியவற்றையே சிந்தித்துக் கொண்டிருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (பிலிப்பியர் 4:6-8) அவருடைய அறிவுரைக்கு இசைய நாம் செயல்படுவோமாக, அதேசமயத்தில் பொல்லாதவர்களின் நிலைக்கு நம்மை ஒருபோதும் தாழ்த்தாதிருப்போமாக.

9. கெட்ட பழக்கங்களை நாம் தவிர்க்கிறபோதிலும், எல்லா தரப்பினருக்கும் உதவ எவ்வாறு முயற்சி செய்கிறோம்?

9 கெட்ட பழக்கங்களை நாம் விலக்கித் தள்ளினாலும், அப்படிப்பட்ட பழக்கங்களை கடைப்பிடிக்கிறவர்களிடம் சாதுரியமாக சாட்சி கொடுக்கிறோம்; ரோம அதிபதி பேலிக்ஸிடம் “நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்” பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசியது போலவே நாமும் மற்றவர்களிடம் பேசுகிறோம். (அப்போஸ்தலர் 24:24, 25; கொலோசெயர் 4:6) எல்லா தரப்பினருக்கும் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிக்கிறோம், அவர்களை தயவாக நடத்துகிறோம். ‘நித்திய ஜீவனுக்கு சரியான மனச்சாய்வுடையவர்கள்’ விசுவாசிகளாகி, கடவுளுடைய பிரமாணத்தில் இன்பம் காண்பார்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.​—அப்போஸ்தலர் 13:⁠48, NW.

யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் காண்கிறான்

10. தனிப்பட்ட படிப்பின்போது நம் மனதிலும் இதயத்திலும் நிரந்தர பதிவை ஏற்படுத்த எது உதவும்?

10 சந்தோஷமுள்ள மனிதனைப் பற்றி சங்கீதக்காரன் மேலும் இவ்வாறு கூறுகிறார்: ‘யெகோவாவின் பிரமாணத்தில் அவன் இன்பம் காண்கிறான், இரவும் பகலும் அவருடைய பிரமாணத்தை தாழ்ந்த குரலில் வாசிக்கிறான்.’ (சங்கீதம் 1:2, NW) கடவுளுடைய ஊழியர்களாக, நாம் ‘யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் காண்கிறோம்.’ தனிப்பட்ட விதமாக படித்து தியானிக்கும் சமயங்களில், முடிந்தபோதெல்லாம் நாம் “தாழ்ந்த குரலில்” வாசிக்கலாம், அதாவது வார்த்தைகளை வாய்விட்டு படிக்கலாம். வேதவசனங்களின் எந்தப் பகுதியை வாசித்தாலும் இப்படி செய்வது நம் மனதிலும் இதயத்திலும் நிரந்தரமாக பதியும்.

11. நாம் ஏன் பைபிளை “இரவும் பகலும்” வாசிக்க வேண்டும்?

11 பைபிளை தினந்தோறும் வாசிக்கும்படி “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் நம்மை உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். (மத்தேயு 24:45, NW) மனிதகுலத்திற்கு யெகோவா தந்திருக்கும் செய்தியை நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற மிகுந்த ஆர்வத்துடன் பைபிளை “இரவும் பகலும்” வாசிப்பது சிறந்தது. ஆம், ஏதோ காரணத்திற்காக இரவில் தூங்க முடியாமல் இருக்கும்போதுகூட உடனே எழுந்து நாம் அதை வாசிக்கலாம். “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” என பேதுரு நம்மை உந்துவித்தார். (1 பேதுரு 2:2, 3) பைபிளை தினந்தோறும் வாசித்து கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய நோக்கங்களையும் குறித்து இரவுநேரம் தியானிப்பதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா? சங்கீதக்காரன் அவ்வாறு இன்பம் கண்டார்.​—சங்கீதம் 63:⁠6.

12. யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் கண்டால் நாம் என்ன செய்வோம்?

12 கடவுளுடைய பிரமாணத்தில் இன்பம் காண்பதன் பேரிலேயே நமது நித்திய சந்தோஷம் சார்ந்திருக்கிறது. அது குறைவற்றது, நீதியுள்ளது, அதைக் கைக்கொள்வதில் மிகுந்த பலனுண்டு. (சங்கீதம் 19:7-11) ‘சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப் பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் [சந்தோஷமுள்ளவனாயிருப்பான்]’ என சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:25) நாம் உண்மையிலேயே யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் கண்டால், ஒருநாளும் ஆன்மீக காரியங்களுக்கு கவனம் செலுத்தாமல் இருந்துவிட மாட்டோம். ‘தேவனுடைய ஆழங்களை ஆராயவும்’ வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுக்கவும் உந்துவிக்கப்படுவோம்.​—1 கொரிந்தியர் 2:​10-​13; மத்தேயு 6:​33.

ஒரு மரத்தைப் போலாகிறான்

13-15. என்ன கருத்தில் தாராளமாக நீர் பாயும் இடத்தில் நடப்பட்ட ஒரு மரத்தைப் போல் நாம் இருக்கலாம்?

13 நேர்மையுள்ள ஒரு நபரை மேலும் விவரிக்கையில் சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” (சங்கீதம் 1:3) அபூரண மனிதராகிய மற்ற எல்லாரையும் போலவே யெகோவாவைச் சேவிக்கும் நாமும் வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். (யோபு 14:1) விசுவாசத்திற்கு சோதனையாக துன்புறுத்தலும் பல்வேறு கஷ்டங்களும் நமக்கு வரலாம். (மத்தேயு 5:10-12) என்றாலும், உறுதியான மரம் ஓரளவு பலத்தக் காற்றை தாங்கி நிற்பது போல், கடவுளுடைய உதவியால் நாமும் இந்தச் சோதனைகளை வெற்றிகரமாக சகித்து நிற்க முடியும்.

14 வற்றாத நீரூற்றின் அருகில் நடப்பட்ட மரம் கோடையிலும் அல்லது வறட்சி காலத்திலும் பட்டுப்போவதில்லை. நாம் கடவுள் பயமுள்ள ஆட்களாக இருந்தால், வற்றாத ஊற்றாகிய யெகோவா தேவனிடமிருந்து நமக்கு பலம் வருகிறது. உதவிக்காக கடவுளை நோக்கியிருந்ததால் பவுல் இவ்வாறு சொல்ல முடிந்தது: “எனக்கு வலுவூட்டுகிறவரின் [யெகோவாவின்] துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.” (பிலிப்பியர் 4:13, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவின் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு ஆன்மீக பாதுகாப்பு அளிக்கப்படுகையில், நாம் பட்டுப்போவதில்லை, அதாவது ஆன்மீக ரீதியில் கனியற்றவர்களாகவோ செயலற்றவர்களாகவோ ஆகிவிடுவதில்லை. மாறாக, கடவுளுடைய சேவையில் கனி தருகிறவர்களாயும் அவருடைய ஆவியின் கனியை வெளிக்காட்டுபவர்களாயும் இருக்கிறோம்.​—எரேமியா 17:7, 8; கலாத்தியர் 5:22, 23.

15 ‘போலிருப்பான்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய சொல்லை பயன்படுத்துவதன் மூலம் சங்கீதக்காரன் ஓர் ஒப்புமையை குறிப்பிடுகிறார். ஒரு குறிப்பிட்ட பண்பில் ஒத்திருக்கும் இரு வெவ்வேறு பொருட்களை ஒப்பிடுகிறார். மரங்களிலிருந்து மனிதர்கள் வேறுபட்டவர்கள். ஆனால் தாராளமாக தண்ணீர் பாயும் இடத்தில் நடப்பட்ட ஒரு மரத்தின் செழிப்பு, ‘யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் காண்கிறவர்களுடைய’ ஆன்மீக செழிப்பை சங்கீதக்காரனுக்கு நினைப்பூட்டியிருக்க வேண்டும். கடவுளுடைய பிரமாணத்தில் இன்பம் கண்டால், மரங்களைப் போல நாமும் நீண்ட காலம் வாழலாம். சொல்லப்போனால், நாம் என்றென்றும் வாழலாம்.​—யோவான் 17:⁠3.

16. ஏன் மற்றும் எவ்வாறு ‘நாம் செய்வதெல்லாம் வாய்க்கிறது’?

16 நேர்மையான பாதையில் நாம் செல்லும்போது, சோதனைகளையும் கஷ்டங்களையும் தாங்குவதற்கு யெகோவா நமக்கு உதவுகிறார். அதனால் அவருடைய சேவையில் நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் கனி தருகிறவர்களாகவும் இருக்கிறோம். (மத்தேயு 13:23; லூக்கா 8:15) யெகோவாவின் சித்தத்தைச் செய்வதே நமது முக்கிய நோக்கமாக இருப்பதால், ‘நாம் செய்வதெல்லாம் வாய்க்கிறது.’ அவருடைய நோக்கங்கள் எப்போதும் வெற்றிபெறுவதாலும் அவருடைய கட்டளைகளில் நாம் இன்பம் காண்பதாலும் ஆன்மீக ரீதியில் செழித்தோங்குகிறோம். (ஆதியாகமம் 39:23; யோசுவா 1:​7, 8; ஏசாயா 55:11) நாம் துன்பங்களை எதிர்ப்படுகையிலும் அவ்வாறே செழித்தோங்குகிறோம்.​—சங்கீதம் 112:​1-3; 3 யோவான் 2.

துன்மார்க்கர் செழிப்பது போல தோன்றுகிறார்கள்

17, 18. (அ) பொல்லாதவர்களை சங்கீதக்காரன் எதற்கு ஒப்பிடுகிறார்? (ஆ) துன்மார்க்கர் பொருளாதாரத்தில் செழித்தோங்கினாலும் அவர்களுக்கு ஏன் நிரந்தர பாதுகாப்பு இல்லை?

17 துன்மார்க்கரின் வாழ்க்கை நீதிமான்களுடைய வாழ்க்கையிலிருந்து எவ்வளவு வேறுபடுகிறது! பொருளாதார ரீதியில் துன்மார்க்கர் சில காலம் செழித்தோங்குவது போல தோன்றலாம், ஆனால் அவர்கள் ஆன்மீக ரீதியில் செழிப்பதில்லை. சங்கீதக்காரன் தொடர்ந்து சொல்லும் வார்த்தைகளில் இது தெளிவாகத் தெரிகிறது: “துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப் போல் இருக்கிறார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.” (சங்கீதம் 1:4, 5) ‘துன்மார்க்கரோ அப்படியில்லை’ என்று சங்கீதக்காரன் சொல்வதைக் கவனியுங்கள். கனிதந்து நீடித்திருக்கும் மரங்களுக்கு ஒப்பிடப்படும் தேவ பக்தியுள்ள ஜனங்களைப் போல் அவர்கள் இல்லை என்பதை அவர் அர்த்தப்படுத்துகிறார்.

18 துன்மார்க்கர் பொருளாதாரத்தில் செழித்தோங்கினாலும், அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு இல்லை. (சங்கீதம் 37:16; 73:3, 12) சொத்து விவகாரத்தைப் பற்றிய விஷயத்தில் தீர்மானம் எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டபோது இயேசு சொன்ன உவமையில் வரும் புத்தியில்லாத ஐசுவரியவானைப் போல் அவர்கள் இருக்கிறார்கள். இயேசு இவ்வாறு சொன்னார்: “பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல.” இந்தக் குறிப்பை ஓர் உவமையின் வாயிலாக இயேசு தெளிவாக்கினார். செல்வந்தன் ஒருவனுடைய நிலம் அமோகமாக விளைந்தபோது அவன் தன் களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி, எல்லாவற்றையும் சேகரித்து வைக்க திட்டமிட்டான். பின்பு புசித்துக் குடித்து ஆனந்தமாக இருப்பதற்குத் திட்டமிட்டான். ஆனால் கடவுள் இவ்வாறு சொன்னார்: “மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்?” தாம் சொல்லவந்த வலிமையான குறிப்பை அறிவுறுத்த இயேசு தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “தேவனிடத்தில் ஜசுவரியவனாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்.”​—லூக்கா 12:13-​21.

19, 20. (அ) தானியத்தைப் போரடித்து, பதரை நீக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட பூர்வகால முறையை விவரியுங்கள். (ஆ) பொல்லாதவர்கள் ஏன் பதருக்கு ஒப்பிடப்படுகிறார்கள்?

19 பொல்லாதவர்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இல்லை.’ ஆகையால் எவ்வித பாதுகாப்பும் ஸ்திரமும் இல்லாத பதரைப் போல் அவர்கள் இருக்கிறார்கள். பூர்வ காலங்களில் தானியம் அறுவடை செய்யப்பட்ட பின்பு, களத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது; அந்தக் களம் பொதுவாக சமதளமான மேட்டுநிலத்தில் இருந்தது. தானியத்தை உடைப்பதற்கும் கதிரிலிருந்து பதரைப் பிரித்தெடுப்பதற்கும், அடிபாகத்தில் கூரான கற்கள் அல்லது இரும்பு பற்கள் கொண்ட, மிருகங்கள் பூட்டப்பட்ட வண்டிகள் கதிரின் மீது ஓட்டிச் செல்லப்பட்டன. அடுத்தபடியாக, காற்றடிக்கும் திசையில் முறத்தினால் அல்லது மண்வாரியால் அவற்றை வீசிவிடுவார்கள். (ஏசாயா 30:24) போரடிக்கும் களத்தில் தானியங்கள் கீழே விழும், பதரோ காற்றில் அடித்துச் செல்லப்படும். (ரூத் 3:2) பின்பு கற்கள் போன்றவற்றை அவற்றிலிருந்து நீக்குவதற்கு அவை சல்லடையில் சலித்தெடுக்கப்பட்டன; கடைசியாக, தானியங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன அல்லது மாவாக அரைத்து வைக்கப்பட்டன. (லூக்கா 22:31) ஆனால் பதரோ நீக்கப்பட்டுவிட்டது.

20 கீழே விழுந்த தானியங்கள் மட்டும் சேகரிக்கப்பட்டு, பதர் காற்றில் அடித்துச் செல்லப்பட்டது போலவே நீதிமான்கள் மட்டும் நிலைத்திருப்பார்கள், பொல்லாதவர்களோ நீக்கப்படுவார்கள். ஆனால் இத்தகைய கெட்ட ஆட்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவதை எண்ணி நிச்சயமாகவே நாம் சந்தோஷப்படுகிறோம். அவர்கள் இல்லாதபோது, யெகோவாவின் பிரமாணத்தில் இன்பம் காண்கிற மக்கள் பேரளவாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மெய்யாகவே, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் கடவுள் தரும் பரிசாகிய நித்திய ஜீவனை முடிவில் பெறுவார்கள்.​—மத்தேயு 25:34-​46; ரோமர் 6:​23.

“நீதிமான்களின்” ஆசீர்வதிக்கப்பட்ட “வழி”

21. எவ்வாறு யெகோவா “நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்”?

21 முதல் சங்கீதம் பின்வரும் வார்த்தைகளுடன் முடிகிறது: “கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.” (சங்கீதம் 1:6) எவ்வாறு கடவுள் “நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்”? நாம் நேர்மையான பாதையில் நடந்தால், பரலோக தகப்பன் நமது தேவ பக்திக்குரிய வாழ்க்கையை கவனித்து, அங்கீகரிக்கப்பட்ட அவருடைய ஊழியர்களாக நம்மை ஏற்றுக்கொள்வார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம். அப்படியானால், அவர் நம் மீது உண்மையிலேயே அக்கறை கொள்கிறார் என்ற உறுதியுடன் நம் கவலைகளையெல்லாம் அவர் மீது போட்டுவிடலாம். ஆம், நாம் அவ்வாறே செய்ய வேண்டும்.​—எசேக்கியேல் 34:11; 1 பேதுரு 5:6, 7.

22, 23. பொல்லாதவர்களுக்கும் நீதிமான்களுக்கும் என்ன ஏற்படும்?

22 “நீதிமான்களின் வழி” என்றென்றும் நிலைத்திருக்கும், திருந்தாத பொல்லாதவர்களோ யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வேளையில் அழிவார்கள். அவர்களுடைய “வழி” அல்லது வாழ்க்கைப் பாதை அவர்களோடு முடிவடையும். தாவீது சொன்ன பின்வரும் வார்த்தைகள் நிறைவேறும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்: “இன்னுங் கொஞ்ச நேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”​—சங்கீதம் 37:10, 11, 29.

23 பொல்லாதவர்களே இல்லாத பரதீஸான பூமியில் வாழும் பாக்கியம் நமக்கு கிடைத்தால் எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! “யெகோவாவின் பிரமாணத்தில்” எப்பொழுதும் இன்பம் காண்பதால் சாந்தகுணமுள்ளவர்களும் நீதிமான்களும் மெய்யான சமாதானத்தை அனுபவித்து மகிழ்வார்கள். ஆனால் அதற்கு முன்பு ‘யெகோவாவின் ஆணை’ அமல்படுத்தப்பட வேண்டும். (சங்கீதம் 2:7அ, NW) அந்த ஆணை என்ன, நமக்கும் முழு மனித குடும்பத்திற்கும் அது எதைக் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அடுத்த கட்டுரை நமக்கு உதவும்.

உங்கள் பதில்?

• தேவ பக்தியுள்ள நபர் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்?

• யெகோவாவின் பிரமாணத்தில் நாம் இன்பம் காண்கிறோம் என்பதை எது காட்டுகிறது?

• ஒருவர் எவ்வாறு நன்றாக நீர் பாய்ச்சப்படும் மரத்தைப் போல் இருக்க முடியும்?

• பொல்லாதவர்களுடைய வழியிலிருந்து எவ்வாறு நீதிமான்களுடைய வழி வேறுபடுகிறது?

[கேள்விகள்]

[பக்கம் 11-ன் படம்]

பொல்லாதவர்களுடைய கூட்டுறவைத் தவிர்க்க ஜெபம் நமக்கு உதவும்

[பக்கம் 12-ன் படம்]

நீதிமான் ஏன் ஒரு மரத்தைப் போல் இருக்கிறான்?