Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

லேவியராகமம் 25-⁠ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள யூபிலி வருட ஏற்பாடு எதற்கு முன்நிழலாக இருக்கிறது?

‘ஏழாம் வருஷத்தில் . . . தேசத்திற்கு ஓய்வு இருக்க வேண்டும்’ என மோசேயின் நியாயப்பிரமாணம் நிர்ணயித்தது. அந்த வருடத்தைக் குறித்து இஸ்ரவேலருக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது: “உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத் தோட்டத்தைக் கிளை கழிக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளை கழிக்காதே விட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது.” (லேவியராகமம் 25:4, 5) இப்படியாக, ஒவ்வொரு ஏழாவது வருடமும் தேசத்துக்கு ஓய்வு வருடமாக இருந்தது. ஒவ்வொரு 50-வது வருடமும், அதாவது ஏழாவது ஓய்வு வருடத்திற்குப் பிறகு வரும் வருடமும் யூபிலியாக இருந்தது. அந்த வருடத்தில் என்ன செய்ய வேண்டியிருந்தது?

மோசே மூலம் இஸ்ரவேலருக்கு யெகோவா இவ்வாறு சொன்னார்: “ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளை கழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.” (லேவியராகமம் 25:10, 11) யூபிலிக்கு முந்தைய வருடமும் ஓய்வு வருடமாக இருந்தது; ஆகவே யூபிலி என்பது தொடர்ச்சியாக வந்த இரண்டாவது ஓய்வு வருடமாக தேசத்திற்கு இருந்தது; ஆனால் தேசத்து குடிகளுக்கோ அது விடுதலையை அளித்தது. அடிமையாக விற்கப்பட்டிருந்த யூதர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். பூர்வீக சொத்தை விற்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால், அது அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பூர்வ இஸ்ரவேலருக்கு யூபிலி வருடம், திரும்ப நிலைநாட்டப்படுவதற்கும் விடுதலைக்குமுரிய வருடமாக இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு இது எதற்கு முன்நிழலாக இருக்கிறது?

முதல் மனிதனாகிய ஆதாம் கலகம் செய்ததால், பாவம் எனும் அடிமைத்தனத்திற்குள் மனிதகுலம் வீழ்ந்தது. பாவத்தின் பிடியிலிருந்து மனிதகுலத்தை மீட்பதற்கு கடவுள் செய்த ஏற்பாடுதான் இயேசு கிறிஸ்துவின் கிரய பலி. * (மத்தேயு 20:28; யோவான் 3:16; 1 யோவான் 2:1, 2) பாவப் பிரமாணத்திலிருந்து கிறிஸ்தவர்கள் எப்போது விடுதலை ஆகிறார்கள்? அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.” (ரோமர் 8:2) பரலோகத்தில் வாழும் நம்பிக்கை உடையவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படுகையில் இந்த விடுதலையைப் பெறுகிறார்கள். அவர்கள் மாம்சத்தில் இருந்தாலும் அபூரணர்களாக இருந்தாலும் கடவுள் அவர்களை நீதிமான்களாக அறிவித்து, தமது ஆவிக்குரிய குமாரர்களாக தத்தெடுத்துக் கொள்கிறார். (ரோமர் 3:24; 8:16, 17) அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு​—⁠ஒரு தொகுதியாக​—⁠கிறிஸ்தவ யூபிலி பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று ஆரம்பமானது.

பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்கும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் ‘வேறே ஆடுகளைப்’ பற்றி என்ன? (யோவான் 10:16) வேறே ஆடுகளுக்கு, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியே திரும்ப நிலைநாட்டப்படுவதற்கும் விடுதலை பெறுவதற்குமுரிய சமயமாகும். இந்த ஆயிர வருட யூபிலியில் விசுவாசமுள்ள மனித குலத்திற்கு தமது கிரய பலியின் நன்மைகளை இயேசு பயன்படுத்தி, பாவத்தின் பாதிப்புகளை நீக்குவார். (வெளிப்படுத்துதல் 21:3, 4) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவில் மனிதகுலத்தார் பரிபூரணத்தை அடைவார்கள், சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் முழுமையாக விடுதலை பெறுவார்கள். (ரோமர் 8:20) அது நடந்தேறுகையில் கிறிஸ்தவ யூபிலி முடிவுக்கு வரும்.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 5 உண்மையில் ‘சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையை கூற’ இயேசு அனுப்பப்பட்டார். (ஏசாயா 61:1-7; லூக்கா 4:16-21) அவர் ஆவிக்குரிய விடுதலையை அறிவித்தார்.

[பக்கம் 26-ன் படம்]

ஆயிர வருட யூபிலி​—⁠‘வேறே ஆடுகள்’ திரும்ப நிலைநாட்டப்படுவதற்கும் விடுதலை பெறுவதற்குமுரிய ஒரு சமயம்