Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” மீட்பு

“விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” மீட்பு

“மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது”

“விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” மீட்பு

யெகோவா தம்முடைய ஒரேபேறான குமாரனின் பரிபூரண மனித உயிரை மீட்கும்பொருளாகக் கொடுக்க அவரைப் பூமிக்கு அனுப்பி வைத்ததே, அவரது அன்பின் மாபெரும் வெளிக்காட்டாகும். பாவமுள்ள மனிதர்களான நாம் பாவத்திலிருந்து விடுபட அத்தகைய மீட்கும்பொருள் நமக்கு ரொம்பவே தேவைப்பட்டது, ஏனெனில் எந்தவொரு அபூரண மனிதனாலும் ‘என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது தன்னை மீட்டுக்கொள்ளவும், தன்னிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும் முடியாதிருந்தது.’ (சங்கீதம் 49:6-9) எனவே, தேவன் ‘தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளியதற்காக’ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!​—யோவான் 3:16.

யெகோவா தேவனின் மாபெரும் அன்புச் செயலான இந்த மீட்கும்பொருள் எவ்வழிகளில் நம்மை விடுவிக்கிறது? நான்கு வழிகளில் நம்மை விடுவிக்கிறது. அவை என்னென்ன என்பதை இப்போது நாம் சிந்திக்கலாம்.

மீட்கும்பொருளின் மூலம் விடுதலை

முதலாவது, நாம் வழிவழியாய்ப் பெற்றிருக்கும் பாவத்திலிருந்து இயேசுவின் பலி நம்மை விடுவிக்கிறது. நாம் எல்லாருமே பாவத்தில் பிறந்திருக்கிறோம். ஆம், யெகோவாவின் சட்டங்களை மீறத் தெரியாத குழந்தைப் பருவத்தில்கூட நாம் பாவிகளாகவே இருக்கிறோம். எப்படி? “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது” என ரோமர் 5:12 சொல்கிறது. பாவத்தில் வீழ்ந்த ஆதாமின் அபூரணத்தை அவனுடைய பிள்ளைகளான நாம் சுதந்தரித்திருக்கிறோம். என்றாலும், மீட்கும்பொருள் கிரயமாகச் செலுத்தப்பட்டதால்தான் அத்தகைய பாவத்தின் பிடியிலிருந்து நம்மால் விடுபட முடிந்திருக்கிறது. (ரோமர் 5:16) ஆதாமின் சந்ததியருக்காக பாவத்தின் தோஷங்களை இயேசு ஏற்றுக்கொண்டு ‘ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார்.’​—எபிரெயர் 2:9; 2 கொரிந்தியர் 5:21; 1 பேதுரு 2:24.

இரண்டாவது, பாவத்தின் படுபயங்கர பாதிப்புகளிலிருந்து இயேசுவின் பலி நம்மை விடுவிக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) அதாவது, பாவத்தின் தண்டனை மரணம். கடவுளுடைய குமாரன் தமது தியாக பலியின் மூலம் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைத் திறந்து வைத்தார். ஆம், “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை.”​—யோவான் 3:36.

சற்று கவனியுங்கள், கடவுளுடைய குமாரனில் நாம் விசுவாசம் வைக்கும்போதுதான் பாவத்தின் பாதிப்புகளிலிருந்து நம்மால் விடுபட முடியும். அப்படி விசுவாசம் வைப்பதில், நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைய நடப்பதும் உட்படுகிறது. ஒருவேளை நாம் ஏதாவதொரு தவறான காரியத்தைச் செய்து வந்திருக்கலாம். அப்படியென்றால் அதை விட்டுவிட்டு, கடவுளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்வதற்குரிய படிகளை எடுக்க வேண்டும். ‘நம்முடைய பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு மனந்திரும்பிக் குணப்பட’ வேண்டுமென அப்போஸ்தலன் பேதுரு கூறினார்.​—அப்போஸ்தலர் 3:20.

மூன்றாவது, இயேசுவின் பலி குற்றமுள்ள மனசாட்சியிலிருந்து நம்மை விடுவிக்கிறது. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய குமாரனின் முழுக்காட்டப்பட்ட சீஷர்களாகிற அனைவருமே இதிலிருந்து ஆறுதல் பெறுகிறார்கள். (மத்தேயு 11:28-30) எனவே, அபூரணத்தின் மத்தியிலும் சுத்தமான மனசாட்சியுடன் கடவுளுக்குச் சேவை செய்வதில் நம்மால் அளவிலா மகிழ்ச்சி காண முடிகிறது. (1 தீமோத்தேயு 3:9; 1 பேதுரு 3:21) ஆக, நம்முடைய பாவங்களை ஒத்துக்கொண்டு, அவற்றை விட்டுவிடுவதன் மூலம் கடவுளுடைய இரக்கத்தைப் பெறுவோம், அதோடு குறுகுறுக்கும் மனசாட்சியிலிருந்தும் விடுதலை பெறுவோம்.​—நீதிமொழிகள் 28:13.

உதவியும் நம்பிக்கையும் அளிக்கிறது

கடைசியாக, மீட்கும்பொருள்மீது நமக்குள்ள விசுவாசம் கடவுளுக்கு முன்பாக நல்ல நிலைநிற்கையை இழந்துவிடுவோமோ என்ற பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் பாவஞ்செய்வானானால் . . . இயேசு கிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1 யோவான் 2:1) நமக்காகப் பரிந்து பேசுகிற இயேசுவின் பங்கைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.” (எபிரெயர் 7:25) பாவத்தின் எந்தவொரு சுவடும் இல்லாமல் போகும்வரை பிரதான ஆசாரியராக இயேசு கிறிஸ்து அளிக்கும் சேவைகள் கண்டிப்பாகவே நமக்குத் தேவை; அப்போதுதான் கடவுளுக்கு முன்பாக நல்ல நிலைநிற்கையோடு நம்மால் இருக்க முடியும். அப்படியானால், நம் சார்பில் இயேசு எப்படிப் பிரதான ஆசாரியராகச் செயல்பட்டார்?

பொ.ச. 33-⁠ல், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு நாற்பது நாட்கள் கழித்து பரலோகத்திற்குச் சென்றார், அப்போது தமது ‘விலையேறப்பெற்ற இரத்தத்தின்’ மதிப்பைக் கடவுளிடம் சமர்ப்பித்தார். அதன் பலனாக, கூடிய விரைவில் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்போகிறார். * (1 பேதுரு 1:18, 19) ஆகவே, இயேசு கிறிஸ்து நம்முடைய அன்புக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுந்தவர் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?

அதுமட்டுமல்ல, யெகோவா தேவனும் நம்முடைய அன்புக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுந்தவரே. ஏனெனில், ‘மீட்கும்பொருளின் மூலம் விடுதலை’ பெறுவதற்கான அன்பான ஏற்பாட்டைச் செய்தவர் அவரே. (1 கொரிந்தியர் 1:30, NW) அதனால், இப்போதுள்ள நம் ஜீவனுக்காக மட்டுமல்ல, நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்புக்காகவும் நாம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறோம். ஆக, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிவதே’ மிகமிக அவசியம் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.​—அப்போஸ்தலர் 5:29.

[அடிக்குறிப்பு]

^ பாரா. 12 2006 யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டரில், மார்ச்/ஏப்ரல் பக்கத்தைக் காண்க.

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

உங்களுக்குத் தெரியுமா?

• ஒலிவ மலையிலிருந்து இயேசு பரலோகத்திற்குச் சென்றார்.​—⁠அப்போஸ்தலர் 1:9, 12.

• இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் மட்டுமே அவர் பரலோகத்திற்குச் செல்வதைப் பார்த்தார்கள்.​—⁠அப்போஸ்தலர் 1:2, 11-13.