Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜிம்பாப்வேயில் ஆன்மீகப் பணி

ஜிம்பாப்வேயில் ஆன்மீகப் பணி

ஜிம்பாப்வேயில் ஆன்மீகப் பணி

“கல் கட்டடம்”​—⁠இதுவே இந்த ஆப்பிரிக்க நாட்டின் பெயருக்கான அர்த்தம். இங்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி பிரசித்தம். இது வித்தியாசமான வனவிலங்குகளின் வசிப்பிடம். அதுமட்டுமின்றி, சஹாராவுக்குத் தெற்கே, பண்டைய கட்டடங்களிலேயே பிரமாண்டமானவற்றை இங்கே காண முடிகிறது. கருங்கல் பீடபூமி இதன் குறுக்கே செல்கிறது. இதன் மிதவெப்ப சீதோஷ்ணத்தால் நிலம் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்த வர்ணனைக்கு உரியது​—⁠ஜிம்பாப்வே. இந்நாடு 1,20,00,000 மக்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது.

கல் கட்டடம் என்று பெயர் வரக் காரணம் என்ன? 1867-⁠ல், வேட்டைக்காரரும் ஆய்வாளருமான ஆடம் ரென்டர்ஸ் 1,800 ஏக்கர் பரப்பளவில் பெரிய பெரிய கல் அமைப்புகளைக் கண்டார். ஆப்பிரிக்க சமவெளிகளில் உள்ள வீடுகள் பொதுவாக மண், கம்புகள், புல் கூரை போன்றவற்றைக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கும். அங்குப் பயணித்தபோதுதான் தற்போது மகா ஜிம்பாப்வே என்றழைக்கப்படும் பரந்த நகரத்தின் கட்டட இடிபாடுகளை அவர் கண்டார்.

தற்போது மாஸ்விங்கோ என்றழைக்கப்படும் பகுதிக்குத் தெற்கே இந்த இடிபாடுகள் காணப்படுகின்றன. கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றின் இடையே எந்த சிமெண்ட் கலவையும் பூசப்படவில்லை. இங்குள்ள சில சுவர்களின் உயரம் 9 மீட்டருக்கும் மேலாக இருக்கிறது. இடிபாடுகளுக்கு இடையே அசாதாரணமான கூம்பு வடிவக் கோபுரம் ஒன்றைக் காணமுடிகிறது. இதன் உயரம் சுமார் 11 மீட்டர், அடிப்பகுதியின் விட்டம் 6 மீட்டர். பிரமாண்டமான இந்தக் கோபுரம் எதற்காக அமைக்கப்பட்டிருக்கும் என்பது புரியாப் புதிராகவே இருக்கிறது. இந்த இடிபாடுகள் பொ.ச. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அங்குக் குடியிருந்ததற்கு அத்தாட்சி உள்ளது.

1980-⁠ல் பிரிட்டனிடம் இருந்து ரோடீஷியா சுதந்தரம் பெற்றது. பிறகு, அதன் பெயர் ஜிம்பாப்வே என்று மாற்றப்பட்டது. இங்கு ஷோனா இன மக்களே அதிகளவில் வசிக்கின்றனர். அதற்கடுத்து ந்டபேலே இனத்தார் அதிகப்படியாக உள்ளனர். இந்நாட்டு மக்கள் உபசரிப்புக்குப் பெயர்பெற்றவர்கள். இதை யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கையில் அடிக்கடி கவனித்திருக்கின்றனர். சில சமயங்களில், கதவைத் தட்டியதும், வீட்டுக்கு வந்திருப்பது யாரென்று தெரிந்துகொள்வதற்கு முன்பே, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்று, “தயவுசெய்து உட்காருங்கள்” என்று சொல்வார்கள். ஜிம்பாப்வே மக்களில் பெரும்பாலோர் பைபிளைப் பெரிதும் மதிக்கிறார்கள். பைபிளிலிருந்து கலந்துபேசும்போது பெரும்பாலும் பிள்ளைகளையும் உட்கார்ந்து கவனிக்கச் செய்வார்கள்.

ஆறுதலான செய்தியை அறிவிக்கிறார்கள்

ஜிம்பாப்வேயைப் பற்றிய செய்திகளில் அடிக்கடி “எய்ட்ஸ்,” “வறட்சி” ஆகிய வார்த்தைகளே அடிபடுகின்றன. எய்ட்ஸ் நோய் காரணமாக சஹாராவுக்குத் தெற்கே உள்ள பகுதிகளின் மக்கள்தொகையும் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே, எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகத்தான் பெரும்பாலும் மக்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார்கள். அதோடு, பலருடைய குடும்ப வாழ்க்கையும் இந்நோயால் சீரழிந்திருக்கிறது.

இவ்விஷயத்தில் ஜிம்பாப்வே மக்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவுகிறார்கள். ஆம், பைபிளில் கடவுள் கொடுத்துள்ள வழிமுறைகளின்படி வாழ்வதே மிகச்சிறந்தது என்பதை மக்களுக்குப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, கடவுள் அளித்துள்ள பரிசாகிய பாலுறவு என்பது மணமான தம்பதியருக்கிடையில் மட்டும்தான் இருக்கவேண்டும்; ஓரினப்புணர்ச்சியை கடவுள் அருவருக்கிறார்; இரத்தமேற்றுவது, இன்பத்திற்காக போதைப்பொருள்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை யெகோவாவின் சட்டம் தடை செய்கிறது; இதையெல்லாம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருந்து அவர்கள் போதிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:28, 29; ரோமர் 1:24-27; 1 கொரிந்தியர் 7:2-5; 2 கொரிந்தியர் 7:1) அதோடு, கடவுளுடைய ராஜ்யம் எல்லா நோய்களையும் வெகு விரைவில் நீக்கப்போகிறது என்ற நம்பிக்கையின் செய்தியையும் எல்லாருக்கும் அறிவிக்கிறார்கள்.​—ஏசாயா 33:24.

நிவாரண உதவி

கடந்த பத்தாண்டில் ஜிம்பாப்வேயை வறட்சி வாட்டியெடுத்தது. உணவும் தண்ணீரும் இல்லாமல் வன விலங்குகள் செத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான வீட்டு விலங்குகளுக்கும் இதே கதிதான். மரங்கள் நிறைந்த காடுகள் ஏக்கர் கணக்கில் தீயில் கருகி சாம்பலாயிருக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவால் அநேக பிள்ளைகளும் முதியவர்களும் உயிரிழந்திருக்கின்றனர். மாபெரும் ஜாம்பஸி நதியின் நீர்மட்டமே அந்தளவு குறைந்ததால், நீர் மின்சார நிலையங்களின் நிலை கேள்விக்குறியானது.

கஷ்டத்தில் உள்ளோருக்கு உதவுவதற்காக, யெகோவாவின் சாட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எட்டு நிவாரணக் குழுக்களை அமைத்தார்கள். சபையாருடைய தேவைகளைத் திட்டவட்டமாகக் கண்டறிவதற்காகப் பயணக் கண்காணிகள் சபைகளைச் சந்தித்தார்கள். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட நிவாரண குழுக்களிடம் தகவலை அளித்தார்கள். பயணக் கண்காணி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆயிரம் டன்களுக்கும் அதிகமான மக்காச்சோளத்தையும், பத்து டன் கருவாட்டையும் அதே அளவு காசிக் கொள்ளு எனப்படும் பயற்றையும் விநியோகித்திருக்கிறோம். நம்முடைய சகோதரர்கள் மூஃபூஷ்வா என்றழைக்கப்படும் வற்றலாக்கப்பட்ட காய்களை இரண்டு டன் அளவுக்குத் தயாரித்தார்கள். தானமாக அளிக்கப்பட்ட எக்கச்சக்கமான துணிமணிகளையும், தேவையான பணத்தையும்கூட நாங்கள் விநியோகித்தோம்.” மற்றொரு பயணக் கண்காணி பின்வருமாறு கூறினார்: “இந்த நிவாரணப் பொருள்களை நாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு ஜிம்பாப்வே அரசும் தென் ஆப்பிரிக்க அரசும் எதிர்பார்த்த உரிமங்களைப் பெற கஷ்டப்பட்டோம்; மிக அவசரமாகத் தேவைப்பட்ட நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்கையில் எரிபொருள் தட்டுப்பாடும் தொடர்ந்து நிலவியது. இதன் மத்தியிலும் எங்களால் வெற்றிகரமாக நிவாரணப் பொருள்களை விநியோகிக்க முடிந்தது. இவையெல்லாம் நமக்குத் தேவையென நம் பரலோகத் தகப்பன் அறிந்திருக்கிறார் என்று இயேசு அளித்த வாக்குறுதிக்கு இதுவும் ஓர் அத்தாட்சி என்றே நான் கருதுகிறேன்.”​—மத்தேயு 6:32.

வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஊழியம் செய்கையில் பயணக் கண்காணிகள் எப்படித் தாக்குப்பிடிக்கிறார்கள்? சிலர் தங்களுக்கும் தாங்கள் தங்கியிருக்கும் குடும்பத்தாருக்கும் சேர்த்து உணவை எடுத்துச் செல்கிறார்கள். அவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினார்: அரசாங்கம் அளிக்கும் நிவாரண உதவியைப் பெற மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். அன்றைக்கு பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டு, தாங்களும் அந்த வரிசையில் போய் நிற்கலாமா என்பதாக சில கிறிஸ்தவ சகோதரிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் யெகோவாவை நம்பி, பிரசங்க வேலையில் கவனம் செலுத்தவும், பிரச்சினைகள் எப்படித் தீர்கின்றன என்பதைப் பார்க்கவும் அந்தச் சகோதரிகள் தீர்மானித்தார்கள். அன்று அரசாங்க நிவாரணப் பொருள்கள் எதுவுமே வரவில்லை.

அடுத்த நாள் கிறிஸ்தவக் கூட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சகோதரிகள் மறுபடியும் தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் கலந்துகொள்வதா, அல்லது நிவாரண உதவியை எதிர்பார்த்து வரிசையில் நிற்பதா? சகோதரிகள் சரியான தெரிவைச் செய்தார்கள். ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். (மத்தேயு 6:33) கூட்டத்தின் முடிவுப் பாடலைப் பாடுகையில், ட்ரக் வரும் சத்தம் கேட்டது. ஆன்மீக சகோதரர்கள் அளித்திருந்த பொருள்கள் நிவாரணக் குழுவின் மூலமாக ராஜ்ய மன்றத்திற்கே வந்துசேர்ந்தன. கூட்டத்தில் கலந்துகொண்ட உண்மையுள்ள சாட்சிகளின் மனங்கள் சந்தோஷத்தாலும் நன்றியுணர்வாலும் நிரம்பி வழிந்தன.

அன்பு ஊக்கப்படுத்துகிறது

சாட்சிகளாக இல்லாத ஆட்களிடம் கரிசனை காட்டியதால் அவர்களிடம் நல்ல விதமாகச் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மாஸ்விங்கோ பகுதியில் இருந்த பயணக் கண்காணி சில உள்ளூர் சகோதரர்களுடன் பிரசங்க வேலையில் ஈடுபட்டிருந்தார். வீதியோரத்தில் ஒரு சின்னப் பெண் சுருண்டு கிடப்பதைக் கண்டார். அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை ரொம்ப மோசமாயிருந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஏனெனில், அவளால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை, அவளுடைய வாய் குளறியது. அவளுடைய பெயர் ஹாமூன்யாரி. ஷோனா மொழியில் அதற்கான அர்த்தம் “உனக்கு வெட்கமாக இல்லையா?” என்பதே. மலைமீது நடந்த மத ஆராதனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த அவளுடைய சர்ச் அங்கத்தினர்கள் அவளை விட்டுவிட்டுச் சென்றிருந்ததை சகோதரர்கள் அறிந்துகொண்டார்கள். சாட்சிகள் அவளை அருகிலிருந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அன்புடன் உதவினார்கள்.

அந்தக் கிராமத்தில் இருந்த சிலருக்கு ஹாமூன்யாரியைத் தெரிந்திருந்ததால், அவளுடைய உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தார்கள். சாட்சிகளைக் குறித்து அந்தக் கிராமத்தார் பின்வருமாறு சொன்னார்கள்: “இது தான் உண்மையான மதம். கிறிஸ்தவர்கள் என்றால் இப்படித்தான் அன்பு காட்ட வேண்டும்.” (யோவான் 13:35) புறப்படுவதற்கு முன், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை சகோதரர்கள் ஹாமூன்யாரிக்குக் கொடுத்தார்கள். *

அதற்கடுத்த வாரத்தில், ஹாமூன்யாரி வசித்த பகுதியில் இருந்த சபையை பயணக் கண்காணி சந்தித்தார். அவள் பத்திரமாக வீடு திரும்பிவிட்டாளா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவளுடைய வீட்டுக்குச் சென்றார். அவரையும் உள்ளூர் சகோதரர்களையும் கண்டபோது அந்தக் குடும்பத்தார் மகிழ்ந்தார்கள். “நீங்கள் தான் உண்மையான மதத்தார். ரோட்டில் சாகக்கிடந்த எங்கள் மகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்” என்று அவளுடைய பெற்றோர் பாராட்டினார்கள். தங்கள் சர்ச் அங்கத்தினர்களிடம் அவர்கள் இவ்வாறு கேட்டிருக்கிறார்கள்: “சாகும் நிலையில் அவளை விட்டுவிட்டுப் போயிருக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” சாட்சிகள், ஹாமூன்யாரியின் குடும்பத்தாரோடு பைபிள் விஷயங்களைப் பேசி, பைபிள் பிரசுரங்களையும் கொடுத்துவிட்டு வந்தார்கள். பிறகு, மறுபடியும் வந்து தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி சகோதரர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இந்தக் குடும்பத்தில் சாட்சிகளைப் பிடிக்காத சிலர் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஹாமூன்யாரியின் அக்காவுடைய கணவரும் ஒருவர். அவர் அந்தப் பகுதியிலுள்ள சர்ச்சின் தலைவராக இருந்தார். அவர் பைபிள் படிப்பிற்கு ஒப்புக்கொண்டார்.

வழிபாட்டுக்கான கட்டடங்களைக் கட்டுகிறார்கள்

கடவுளுடைய ஆவியின் தூண்டுதலால் பூர்வகால கவிஞர் ஒருவர் பின்வருமாறு பாடினார்: “தேவனே, . . . வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.” (சங்கீதம் 63:1) ஜிம்பாப்வேயில் உள்ள அநேகரின் விஷயத்தில் இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக இருக்கின்றன! சரீர ரீதியில் வறட்சியை அவர்கள் தாங்கிக்கொள்கிறார்கள், ஆனால் ஆன்மீக ரீதியில் கடவுளுக்காகவும் அவருடைய நற்குணத்திற்காகவும் தாகமாக இருக்கிறார்கள். இங்குள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையின் பலன்கள் இதைக் காட்டுகின்றன. 1980-⁠ல் ஜிம்பாப்வே சுதந்தரம் பெற்றபோது, சுமார் 10,000 சாட்சிகள் 476 சபைகளில் சேவை செய்தார்கள். தற்போது, ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு, சுறுசுறுப்பாகச் செயல்படும் சாட்சிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. சபைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக ஆகியிருக்கிறது.

இவற்றில் வெகு சில சபைகளுக்கே சொந்தமான வழிபாட்டு மன்றங்கள் இருந்தன. ஜனவரி 2001-⁠ல் ஜிம்பாப்வேயில் இருந்த 800-⁠க்கும் மேற்பட்ட சபைகளில் 98 சபைகளால் மட்டுமே சொந்த ராஜ்ய மன்றங்களில் கூட்டங்களை நடத்த முடிந்தது. அநேக சபைகள் கூட்டங்களை மரத்தடியில் நடத்தின, அல்லது கம்புகளையும், மண் பூசப்பட்ட சுவர்களையும், புல் கூரையையும் கொண்ட எளிய குடிசைகளில் கூட்டங்களை நடத்தின.

உலகெங்கும் உள்ள சகோதரர்கள் அளிக்கும் தாராளமான நன்கொடைகளும், வாலண்டியர்களாகப் பணிபுரியும் சகோதரர்களின் கடின உழைப்பும் ஜிம்பாப்வேயில் அதிகமான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு வழிவகுத்திருக்கிறது. இந்தக் கட்டுமானத் திட்டத்தின் மூலமாக அவர்களால் எளிமையான அதேசமயத்தில் கண்ணியமான ராஜ்ய மன்றங்களைக் கட்ட முடிந்திருக்கிறது. கட்டட வேலையில் திறமையுள்ள வெளிநாட்டு சாட்சிகள் அநேகர் ஜிம்பாப்வேக்குச் சென்று அங்குள்ள உள்ளூர் வாலண்டியர்களோடு சேர்ந்து வேலை செய்கிறார்கள். உள்ளூர் சகோதரர் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “அழகிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு உதவியாக பல்வேறு நாடுகளிலிருந்து ஜிம்பாப்வேக்கு வந்த சகோதர சகோதரிகளுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறோம். ராஜ்ய மன்ற நிதிக்கு நன்கொடைகளைக் கொடுத்து உதவிய மற்ற எல்லாருக்கும்கூட நாங்கள் நன்றி கூறுகிறோம்.”

இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரு பெரிய ஆணை புளியமரத்தின் கீழ் 50 வருடங்களாக கூட்டங்கள் நடந்தன. வழிபாட்டுக்காக ஒரு கட்டடத்தைக் கட்டப்போவதாக மூப்பர்களிடம் சொல்லப்பட்டபோது, அவர்களில் ஒருவர் கண்கலங்கிவிட்டார். அருகிலிருந்த சபையைச் சேர்ந்த 91 வயது மூப்பர் இவ்வாறு கூறினார்: “இப்படியொன்று நடக்க வேண்டுமென இத்தனை காலமாக நான் யெகோவாவிடம் மன்றாடிக்கொண்டிருந்தேன்.”

இந்த அழகான கட்டடங்கள் கட்டப்பட்ட வேகத்தைக் குறித்து அநேகர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கட்டட வேலையைக் கவனித்த ஒருவர் பின்வருமாறு கூறினார்: “பகலில் நீங்கள் கட்டுகிறீர்கள், இரவில் கடவுள் கட்டுகிறார் போலிருக்கிறதே!” வேலை செய்வோரின் ஒற்றுமையும், சந்தோஷமும்கூட அநேகரைக் கவர்ந்திருக்கிறது. இப்போது வரையாக, நாடு முழுவதும் 350-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இதனால், உறுதியான செங்கல் கட்டடங்களாக உள்ள ராஜ்ய மன்றங்களில் 534 சபைகள் கூடிவருகின்றன.

ஜிம்பாப்வேயில் தொடர்ந்து முக்கியமான ஆன்மீகக் கட்டட வேலை நடந்துவருகிறது. இதுவரை செய்யப்பட்ட காரியங்களைப் பார்க்கையில், இந்த ஆசீர்வாதங்களைப் பொழிந்த யெகோவாவைத் துதிக்க நாம் தூண்டப்படுகிறோம். ஆம், “கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.”​—சங்கீதம் 127:1.

[அடிக்குறிப்பு]

^ யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 9-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஜிம்பாப்வே

ஹராரே

மாஸ்விங்கோ

மகா ஜிம்பாப்வே

[பக்கம் 9-ன் படம்]

கூம்புக் கோபுரம்

[பக்கம் 12-ன் படம்]

புது ராஜ்ய மன்றம், கன்செஷன் சபை

[பக்கம் 12-ன் படம்]

தங்கள் புது ராஜ்ய மன்றத்திற்கு வெளியே லின்டேல் சபையார்

[பக்கம் 9-ன் படங்களுக்கான நன்றி]

படிகளுடன் இடிபாடுகள்: ©Chris van der Merwe/AAI Fotostock/age fotostock; உள்படத்தில் கோபுரம்: ©Ingrid van den Berg/AAI Fotostock/age fotostock