நம் அழகிய பூமியில் இன்பம் காணுங்கள்
நம் அழகிய பூமியில் இன்பம் காணுங்கள்
எ ல்லையில்லா பரந்த பிரபஞ்சத்தில் சின்னஞ்சிறு புள்ளி வைத்தாற்போல் இப்பூவுலகம் கண்ணுக்குத் தெரிகிறதென வான் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இப்பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிரினங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வையகத்தில் மட்டுமே உயிர் வாழ்வதற்கு ஏற்ற சரியான சூழ்நிலைகள் உள்ளன.
அதுமட்டுமா, அழகிய இக்கோளத்தில் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ முடிகிறது. குளிர்காலத்தில் கதிரவனின் கதகதப்பான ஒளி எவ்வளவு இதமாக இருக்கிறது! சூரிய உதயத்தின் அல்லது அஸ்தமனத்தின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழாதோர் யாருண்டு? ஆம், ஆதவன் நமக்கு இன்பத்தை அள்ளித்தருவதோடு, இன்னும் பலவற்றையும் செய்கிறான். அவன் இல்லையென்றால் நமக்கு வாழ்வில்லை.
பலகோடி ஆண்டுகளாகவே, சூரியனின் ஈர்ப்பு விசையால் பூமியும் பிற கிரகங்களும் அவற்றின் சுற்றுப் பாதையிலிருந்து விலகாமல் சுற்றி வருகின்றன. அதோடு மாணவர்கள் பள்ளியில் படிக்கிற விதமாக, முழு சூரிய குடும்பமுமே அதற்குரிய பாதையில் நம் பால்வீதி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வருகிறது. சூரியனைப்போல் 10,000 கோடிக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களும் நம்முடைய பால்வீதி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வலம்வருகின்றன.
நம்முடைய பால்வீதி மண்டலம், சுமார் 35 நட்சத்திர மண்டலங்களைக் கொண்ட கொத்து ஒன்றில் அமைந்துள்ளது. சில பெரிய கொத்துகளிலோ ஆயிரக்கணக்கான நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. நம் சூரிய குடும்பம் இப்படிப்பட்ட மிகப் பெரிய, அடர்த்தியான கொத்தில் அமைந்திருந்தால், அது நிலையானதாய் இருந்திருக்காது. அதனால்தான், பிரபஞ்சத்தில் எந்தவொரு பகுதியும் “பலதரப்பட்ட ஜீவராசிகள் வாழ்வதற்கேற்ற நம்முடைய பகுதியைப் போல் இல்லை” என ஒப்பற்ற கிரகம் (ஆங்கிலம்) என்ற தங்களது புத்தகத்தில் ஜில்யெர்மோ கான்ஸால்யேஸ் மற்றும் ஜேய் டபிள்யூ. ரிச்சர்ட்ஸ் குறிப்பிடுகிறார்கள்.
இந்தக் கிரகத்தில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் ஏதோ குருட்டாம்போக்கில் வந்தனவா? ‘பெரும் வெடிப்பின்’ ஒரு பாகமாக தற்செயலாய் வந்தனவா? அல்லது அழகிய இப்பூவுலகில் உயிர்கள் இருப்பதற்கு உயர்ந்ததோர் நோக்கம் உள்ளதா?
உயிர் வாழ்வதற்கு ஏற்ற வசதிகளுடனேயே இந்த வையகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அநேகர் உறுதியாக நம்புகிறார்கள். * பல்லாண்டுகளுக்கு முன், பூமியையும் வானத்தையும் உற்று கவனித்த ஓர் எபிரெய கவிஞர் இவ்வாறு எழுதினார்: ‘உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷன் . . . எம்மாத்திரம்?’ (சங்கீதம் 8:3, 4) படைப்பாளர் ஒருவர் இருக்க வேண்டுமென அந்தக் கவிஞர் நம்பினார். நாம் வாழும் இந்த அறிவியல் யுகத்தில் அத்தகைய முடிவுக்கு வருவது நியாயம்தானா?
[அடிக்குறிப்பு]
[பக்கம் 3-ன் பெட்டி/படம்]
“தொலைவிலிருந்து பார்க்கையில், இருள் படர்ந்த விண்வெளியில் மிளிரும் நீல இரத்தினக்கல்போல இந்தப் பூமி காட்சியளிக்கிறது” என குறிப்பிடுகிறது தி இல்லஸ்ட்ரேட்டட் சயன்ஸ் என்ஸைக்ளோப்பீடியா—அமேஸிங் பிளானட் எர்த்.
[படத்திற்கான நன்றி]
கோளம்: U.S. Fish & Wildlife Service, Washington, D.C./NASA